அதிகாரம் 10
திருமணம்—கடவுளின் பரிசு
“மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைச் சீக்கிரத்தில் அறுக்க முடியாது.”—பிரசங்கி 4:12.
1, 2. (அ) புதுமணத் தம்பதி என்ன எதிர்பார்ப்போடு இருப்பார்கள்? (ஆ) இந்த அதிகாரத்தில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம்?
திருமண நாளில் சந்தோஷக் களையோடு இருக்கும் மணமகளையும் மணமகனையும் கற்பனை செய்து பாருங்கள். பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் தங்களுடைய மணவாழ்வை ஆரம்பிக்க இருக்கிறார்கள். காலமெல்லாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம்.
2 ஆனாலும், பலருடைய மணவாழ்வில் அந்தச் சந்தோஷம் நீடிப்பதில்லை. திருமணமானவர்கள், பல காலத்துக்குச் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றால், அவர்களுக்கு கடவுளுடைய வழிநடத்துதல் தேவை. அதனால், பின்வரும் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களை இப்போது பார்க்கலாம்: திருமணம் செய்துகொள்வதால் கிடைக்கும் சில நன்மைகள் என்ன? நல்ல துணையை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? நீங்கள் எப்படி ஒரு நல்ல கணவராக அல்லது மனைவியாக இருக்கலாம்? திருமண பந்தம் நீடிக்க எது உதவும்?—நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.
நான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா?
3. கல்யாணம் செய்துகொண்டால்தான் ஒருவரால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? விளக்குங்கள்.
3 கல்யாணம் செய்துகொண்டால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது ஒரு வரம் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:11, 12) திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதில் நன்மைகள் இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 7:32-38) அப்படியானால், கல்யாணம் செய்வதா வேண்டாமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்தாரோ நண்பர்களோ கட்டாயப்படுத்துவதால், அல்லது உங்கள் கலாச்சாரத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் திருமணம் செய்யாதீர்கள்.
4. கல்யாணம் செய்துகொள்வதால் வரும் சில நன்மைகள் என்ன?
4 திருமணம்கூட கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்று பைபிள் சொல்கிறது. திருமணம் செய்துகொள்வதால் சில நன்மைகள் இருக்கின்றன என்றும் சொல்கிறது. முதல் மனிதன் ஆதாமைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்.” (ஆதியாகமம் 2:18) ஆதாமுக்கு மனைவியாக இருப்பதற்கு யெகோவா ஏவாளைப் படைத்தார். இதன்மூலம் குடும்பம் என்ற ஏற்பாட்டை யெகோவா ஆரம்பித்து வைத்தார். ஒரு தம்பதிக்குப் பிள்ளைகள் இருந்தால், அந்தப் பிள்ளைகள் நன்றாக வளர்வதற்கு அவர்கள் ஒரு நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆனால், பிள்ளைகளைப் பெற்றெடுப்பது மட்டுமே திருமணத்தின் நோக்கம் அல்ல.—சங்கீதம் 127:3; எபேசியர் 6:1-4.
5, 6. திருமண பந்தம் “மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றை” போல இருக்க என்ன செய்ய வேண்டும்?
5 “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. அப்போது, அவர்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும். ஆனால், தனியாக இருப்பவன் கீழே விழுந்தால் அவனை யார் தூக்கிவிடுவது? . . . மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைச் சீக்கிரத்தில் அறுக்க முடியாது” என்று சாலொமோன் ராஜா எழுதினார்.—பிரசங்கி 4:9-12.
6 கல்யாணம் செய்துகொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் மிக நெருங்கிய நண்பர்களாக ஆக முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஆறுதலாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அவர்களுக்கிடையே அன்பு இருந்தால், அவர்களுடைய திருமண பந்தம் பலமாக இருக்கும். அவர்கள் யெகோவாவை வணங்கினால், அவர்களுடைய பந்தம் இன்னும் பலமாகும். அப்போது, அவர்களுடைய திருமண பந்தம் “மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றை” போல் இருக்கும். அதுவும் நெருக்கமாக பின்னப்பட்ட கயிற்றைப் போல் இருக்கும். மூன்று இழைகள் சேர்ந்த கயிறு, இரண்டு இழைகள் சேர்ந்த கயிற்றைவிட ரொம்ப உறுதியானது. திருமண பந்தத்தில் யெகோவாவும் ஒரு பாகமாக இருந்தால் அந்தப் பந்தம் பலமாக இருக்கும்.
7, 8. திருமணம் சம்பந்தமாக பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்?
7 திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் தங்களுடைய இயல்பான பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். (நீதிமொழிகள் 5:18) ஆனால், பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே ஒருவர் திருமணம் செய்ய நினைத்தால், அவரால் ஒரு துணையை ஞானமாகத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகலாம். அதனால், “இளமை மலரும் பருவத்தை,” அதாவது பாலியல் ஆசைகள் தீவிரமாக இருக்கும் பருவத்தை, தாண்டிய பிறகுதான் ஒருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:36) அப்படிப்பட்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளும்வரை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. அப்போதுதான் ஒரு நபரால் இன்னும் தெளிவாக யோசிக்கவும் நல்ல தீர்மானம் எடுக்கவும் முடியும்.—1 கொரிந்தியர் 7:9; யாக்கோபு 1:15.
8 நீங்கள் கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறீர்கள் என்றால் அதைப் பற்றி யதார்த்தமாக யோசியுங்கள். மணவாழ்வில் சவால்கள் வரலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். “திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 7:28) நல்ல கணவன்-மனைவிக்கு இடையில்கூட பிரச்சினைகள் வரலாம். அதனால், நீங்கள் திருமணம் செய்ய நினைத்தால் உங்கள் துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்.
நான் யாரைத் திருமணம் செய்வது?
9, 10. யெகோவாவை வணங்காத ஒருவரை கல்யாணம் செய்தால் என்ன ஆகும்?
9 ஒரு நல்ல துணையைத் தேர்ந்தெடுக்க இந்த முக்கியமான பைபிள் நியமம் உதவும்: “விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள்.” (2 கொரிந்தியர் 6:14) இந்த நியமம், விவசாயத்தின் ஒரு அம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. பலத்திலும் உருவத்திலும் வித்தியாசமாக இருக்கும் இரண்டு மிருகங்களை ஒன்றாக பிணைத்து ஒரு விவசாயி வயலை உழ மாட்டார். ஏனென்றால், இரண்டு மிருகங்களுக்குமே அது கஷ்டமாக இருக்கும். அதேபோல், யெகோவாவை வணங்குகிற ஒருவர் யெகோவாவை வணங்காதவரை திருமணம் செய்தால் பெரும்பாலும் அவர்களுக்கிடையே பிரச்சினைகள் வரும். அதனால்தான், “நம் எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே . . . திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்ற ஞானமான ஆலோசனையை பைபிள் தருகிறது.—1 கொரிந்தியர் 7:39.
10 சில சமயங்களில், தனிமையில் வாழ்வதைவிட யெகோவாவை வணங்காத ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று கிறிஸ்தவர்கள் சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆனால், பைபிள் ஆலோசனையின்படி நடக்கவில்லை என்றால் நமக்கு வலியும் வேதனையும்தான் மிஞ்சும். யெகோவாவை வணங்குகிற நாம் அவருக்குச் சேவை செய்வதைத்தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக நினைக்கிறோம். ஒருவேளை உங்கள் துணையோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியாமல் போனால் உங்களுக்கு எப்படி இருக்கும்? யெகோவாவை நேசிக்காத... அவரை வணங்காத... ஒருவரை கல்யாணம் செய்வதைவிட கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கவே நிறைய பேர் தீர்மானித்திருக்கிறார்கள்.—சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.
11. உங்கள் துணையை எப்படி ஞானமாகத் தேர்ந்தெடுக்கலாம்?
11 யெகோவாவை வணங்குகிற எல்லாருமே நல்ல கணவராக அல்லது மனைவியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் மனதுக்குப் பிடித்த ஒருவரை... உங்களோடு நன்றாக ஒத்துப்போகும் ஒருவரை... தேடுங்கள். உங்களுக்கு இருக்கும் அதே லட்சியங்களை வைத்திருக்கிற... கடவுளுடைய சேவைக்கு முதலிடம் கொடுக்கிற... ஒருவரைக் கண்டுபிடிக்கும்வரை காத்திருங்கள். உண்மையும் விவேகமும் உள்ள அடிமை மூலம் திருமணம் சம்பந்தமான நல்ல ஆலோசனைகள் நமக்குக் கிடைக்கின்றன. நம் பிரசுரங்களிலுள்ள அந்த ஆலோசனைகளை வாசிக்கவும் ஆழமாக யோசிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.—சங்கீதம் 119:105-ஐ வாசியுங்கள்.
12. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படுகிற கல்யாணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
12 சில கலாச்சாரங்களில் பெற்றோர்கள்தான் தங்களுடைய பிள்ளைகளுக்குத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைக்குப் பொருத்தமான துணையைத் தங்களால்தான் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். பைபிள் காலத்திலும் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. ஒருவேளை உங்கள் பெற்றோர் இதே பழக்கத்தைப் பின்பற்ற விரும்பலாம். அப்போது, எப்படிப்பட்ட குணங்களுள்ள ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் அவர்களுக்கு உதவும். உதாரணத்துக்கு, ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தபோது, அவர் பணத்துக்கோ, அந்தஸ்துக்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தப் பெண் யெகோவாவை நேசிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தார்.—ஆதியாகமம் 24:3, 67; பின்குறிப்பு 25.
திருமணத்துக்கு நான் எப்படித் தயாராவது?
13-15. (அ) ஒரு நல்ல கணவனாக இருப்பதற்கு ஒரு ஆண் எப்படித் தயாராகலாம்? (ஆ) ஒரு நல்ல மனைவியாக இருப்பதற்கு ஒரு பெண் எப்படித் தயாராகலாம்?
13 திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள், முதலில் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதாக நினைக்கலாம். ஆனால், உண்மையில் திருமணத்துக்குத் தயாராவதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம். அதைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
14 கணவனுக்கும் மனைவிக்கும் வித்தியாசமான பொறுப்புகள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. அப்படியானால், திருமணத்துக்குத் தயாராவதற்கு ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும், ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பதில் வித்தியாசம் இருக்கும். ‘குடும்பத் தலைவனாக இருக்க நான் தயாராக இருக்கிறேனா?’ என்று ஒரு ஆண் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு கணவன் தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். எல்லாவற்றையும்விட ஒரு கணவன் ஆன்மீக விஷயங்களில் தன்னுடைய குடும்பத்தை முன்னின்று வழிநடத்த வேண்டும். தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளாத ஒருவன், “விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாக” இருக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:8) நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிற ஒரு ஆணா? அப்படியானால், இந்த பைபிள் நியமத்தை எப்படிப் பின்பற்றலாம் என்று யோசித்துப் பாருங்கள்: “உன் வெளிவேலையைத் திட்டமிடு, வயலில் செய்ய வேண்டியதைச் செய்துவிடு, அதன் பிறகு உன் வீட்டை கட்டு.” வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு கணவனிடம் யெகோவா எதிர்பார்க்கிற விஷயங்கள் உங்களிடம் இருக்கிறதா என்பதை கல்யாணத்துக்கு முன்பே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 24:27.
15 திருமணம் செய்துகொள்ள விரும்புகிற ஒரு பெண் தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘ஒரு மனைவியாகவும் ஒரு அம்மாவாகவும் என் கடமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேனா?’ ஒரு நல்ல மனைவி தன் கணவனையும் பிள்ளைகளையும் என்னென்ன வழிகளில் கவனித்துக்கொள்கிறாள் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 31:10-31) இன்று நிறைய பேர், தங்களுடைய துணை தங்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால், நம்முடைய துணைக்கு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார்.
16, 17. நீங்கள் கல்யாணம் செய்ய நினைத்தால், எதைப் பற்றியெல்லாம் நன்றாக யோசிக்க வேண்டும்?
16 கல்யாணம் செய்துகொள்வதற்கு முன், கணவனையும் மனைவியையும் பற்றி யெகோவா என்ன சொல்கிறார் என்பதை ஆழமாக யோசித்துப் பாருங்கள். ஒரு ஆண் குடும்பத்தின் தலைவன் என்பதற்காக, அவர் உடலளவிலோ மனதளவிலோ கொடுமைப்படுத்துபவராக இருக்கக் கூடாது. ஒரு நல்ல குடும்பத் தலைவன் இயேசுவைப் போலவே நடந்துகொள்வார். இயேசு தன்னோடு இருந்தவர்களை எப்போதும் அன்பாகவும் கனிவாகவும் கவனித்துக்கொண்டார். (எபேசியர் 5:23) ஒரு பெண், தன்னுடைய கணவனின் தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுப்பதையும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதையும் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். (ரோமர் 7:2) பாவ இயல்புள்ள ஒரு ஆணுக்கு தன்னால் உள்ளப்பூர்வமாக அடிபணிந்து நடக்க முடியுமா என்று அவள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அடிபணிவது கஷ்டம் என்று நினைத்தால், அவள் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கத் தீர்மானிக்கலாம்.
17 கணவர்களும் மனைவிகளும் தங்கள் சந்தோஷத்தைவிட தங்களுடைய துணையின் சந்தோஷத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். (பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள்.) “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்” என்று பவுல் சொன்னார். (எபேசியர் 5:21-33) ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருமே தங்களுடைய துணை காட்டுகிற அன்பையும் மரியாதையையும் உணர வேண்டும். மனைவி தனக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறாள் என்பதைக் கணவன் உணர வேண்டும். அதேபோல், கணவன் தன்னை நேசிக்கிறார் என்பதை மனைவி உணர வேண்டும். அப்போதுதான் மணவாழ்வு சந்தோஷமாக இருக்கும்.
18. ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் சமயத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
18 திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்வதற்காக காதலிக்க ஆரம்பிக்கலாம். அது அவர்களுக்குச் சந்தோஷமான காலப்பகுதியாக இருந்தாலும் அந்தச் சமயத்தில் அவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களால் காலமெல்லாம் சேர்ந்து வாழ முடியுமா என்பதைத் தீர்மானிக்க முடியும். அந்தக் காலப்பகுதியில் அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்காக சகஜமாகப் பேசிப் பழகலாம். அப்போது, தங்களுடைய வருங்கால துணையின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் நெருக்கமாகப் பழக பழக, உடலளவில் நெருக்கமாக பழக வேண்டுமென்ற ஆசை வருவது இயல்புதான். ஆனால், திருமணத்துக்கு முன் ஒழுக்கக்கேடாக எதையும் செய்துவிடாதபடி தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். அவர்களுக்கிடையே உண்மையான அன்பு இருந்தால், அவர்களால் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்க முடியும். அதோடு, தங்களுக்கிடையே இருக்கும் பந்தமும் யெகோவாவோடு இருக்கும் பந்தமும் பாதிக்கப்படாமல் அவர்களால் பார்த்துக்கொள்ள முடியும்.—1 தெசலோனிக்கேயர் 4:6.
திருமண பந்தம் நீடிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
19, 20. கிறிஸ்தவர்களாகிய நாம் திருமணத்தை எப்படிக் கருதுகிறோம்?
19 நிறைய நாவல்களிலும் திரைப்படங்களிலும் வரும் கதைகள் சந்தோஷமான திருமணத்தோடு முடிவடைகின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில், திருமணம் என்பது வெறும் ஒரு ஆரம்பம்தான். திருமண பந்தம் என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கம்.—ஆதியாகமம் 2:24.
20 இன்று நிறைய பேர் திருமணத்தைத் தற்காலிக ஏற்பாடாக நினைக்கிறார்கள். திருமணம் செய்துகொள்வதும், பிறகு விவாகரத்து செய்துகொள்வதும் சர்வசாதாரணமாகிவிட்டது. பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பிக்கும்போது துணையை விட்டுப் போய்விடலாம் என்றும், திருமண பந்தத்தை முறித்துவிடலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், மூன்று இழைகளால் பின்னப்பட்ட உறுதியான கயிற்றைப் பற்றி பைபிள் சொல்வதை யோசித்துப் பாருங்கள். அதை எவ்வளவு பலமாக இழுத்தாலும் அது அறுந்துவிடாது. நாம் எப்போதுமே உதவிக்காக யெகோவாவை நம்பியிருந்தால் நம்முடைய திருமண பந்தம் நீடிக்கும். “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 19:6.
21. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசிக்க எது உதவும்?
21 நம் எல்லாருக்கும் குறைநிறைகள் இருக்கின்றன. பொதுவாக மற்றவர்களுடைய குறைகள்தான், முக்கியமாக நம்முடைய துணையின் குறைகள்தான், நமக்குப் பளிச்சென்று தெரியும். குறைகளையே பார்த்துக்கொண்டிருந்தால், நாம் சந்தோஷமாக இருக்க மாட்டோம். அதற்குப் பதிலாக துணையின் நல்ல குணங்களையே பார்த்தால், மணவாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். பாவ இயல்புள்ள நம் துணையிடம் இப்படி நடந்துகொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். உதாரணத்துக்கு, நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் அவர் நம்மிடமுள்ள நல்ல குணங்களையே பார்க்கிறார். ஒருவேளை யெகோவா அப்படிச் செய்யவில்லை என்றால் நம் கதி என்ன ஆகும்? “‘யா’வே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 130:3) யெகோவாவைப் போலவே கணவனும் மனைவியும் தங்கள் துணையிடமுள்ள நல்லதையே பார்க்க வேண்டும். அதோடு, ஒருவரை ஒருவர் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும்.—கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.
22, 23. திருமணமானவர்களுக்கு ஆபிரகாமும் சாராளும் எப்படி நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள்?
22 காலம் செல்ல செல்ல, திருமண பந்தம் இன்னும் பலமாகலாம். ஆபிரகாம்-சாராளின் திருமண பந்தம் ரொம்பக் காலத்துக்குச் சந்தோஷமாக நீடித்தது. ஊர் நகரத்திலுள்ள வீட்டைவிட்டு கிளம்பும்படி ஆபிரகாமிடம் யெகோவா சொன்னபோது, சாராளுக்கு 60 வயதுக்கும் மேல் இருந்திருக்கலாம். தன்னுடைய வசதியான வீட்டைவிட்டு கூடாரங்களில் வாழ்வது சாராளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். ஆனால், சாராள் தன்னுடைய கணவனுக்கு ஒரு நல்ல தோழியாகவும் துணையாகவும் இருந்தாள். அவரை உண்மையிலேயே மதித்து நடந்தாள். அதனால், ஆபிரகாம் எடுத்த தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுத்தாள். அந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற அவருக்கு உதவினாள்.—ஆதியாகமம் 18:12; 1 பேதுரு 3:6.
23 சந்தோஷமான மணவாழ்க்கையில்கூட, கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சமயம் சாராள் சொன்ன ஒரு விஷயத்தை ஆபிரகாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது யெகோவா அவரிடம், “அவளுடைய பேச்சைக் கேள்” என்று சொன்னார். ஆபிரகாம் அப்படியே செய்தார். அதனால் நல்ல பலன்கள் கிடைத்தன. (ஆதியாகமம் 21:9-13) உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சில விஷயங்களில் ஒத்துப்போகவில்லை என்றால் சோர்ந்துவிடாதீர்கள். அப்படிப்பட்ட சமயங்களிலும் நீங்கள் ஒருவரை ஒருவர் அன்போடும் மரியாதையோடும் நடத்துவது ரொம்பவே முக்கியம்.
24. நம் மணவாழ்க்கை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
24 சந்தோஷமாக வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான தம்பதிகள் நம் சபைகளில் இருக்கிறார்கள். நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால் ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். யாரை உங்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்பது நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று என்பதை மனதில் வையுங்கள். அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும் தீர்மானமாக இருப்பதால் வழிநடத்தலுக்காக யெகோவாவை நம்பியிருங்கள். அப்போது உங்கள் துணையை ஞானமாகத் தேர்ந்தெடுக்க முடியும். மணவாழ்க்கைக்காக நன்கு தயாராக முடியும். யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் அன்பான... பலமான... திருமண பந்தத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்ய முடியும்.