போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை மேற்கொள்வது
கெட்ட பழக்கத்திற்கு அடிமையாயிருப்பதிலிருந்து விடுபடுவது என்பது நீங்கள் வளர்ந்துவந்த வீட்டை விட்டு மாறிச்செல்வதுபோல் இருக்கிறது. அந்த வீடு பழைய வீடாகவும் பாழாகியிருந்தாலும், அதை விட்டு வெளியேறுவது கஷ்டமாக இருக்கும். அது உங்கள் வீடாக இருந்தது.
நீங்கள் கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்தால், அடிமையாகியிருப்பது உங்கள் உணர்ச்சிப்பூர்வ வீடாக இருந்திருக்கக்கூடும். அது உண்மையில் ஒரே கந்தரகோளமான வாழ்க்கையாக இருந்தாலும், அதில் பழக்கப்பட்டுப்போனீர்கள். குடிப்பழக்கத்திலிருந்து மீளும் சார்ல்ஸ் என்பவர், “போதையிலிருப்பது எனக்கு சகஜம்தான். நிதானத்துடன் இருப்பது அபூர்வம்” என்று சொல்கிறார். கெட்ட பழக்கத்திற்கு அடிமையாயிருப்பதிலிருந்து விடுபடுவது கடினம்தான், ஆனால் இது பயனளிப்பதாக இருக்கிறது.
முதல் படியானது கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கக்கூடிய பொருட்களிலிருந்து விலகியிருப்பதாகும்.a தாமதிக்காதீர்கள் அல்லது நிறுத்திவிடலாம் என்று நம்பி இழுத்தடிக்காதீர்கள். எல்லா சரக்குகளையும் அதன் சம்பந்தமான சாதனங்கள் எல்லாவற்றையும் உடனடியாக களைந்துவிடுங்கள். பின்னடைவு அறிகுறிகள் ஏற்படும் ஒரு குறுகிய காலம் தொடரும். சில சமயங்கள் இதை மருத்துவ மேற்பார்வையால், நன்றாக நிறைவுசெய்ய முடியும். வாழ்நாள் முழுவதும் விலகியிருப்பதற்கு இதுவே துவக்கமாகும். ஆனால் அது முடியவே முடியாது என்று நினைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவுக்கு, ஒரு மாதமோ ஒரு வாரமோ அல்லது ஒரு நாளோ விலகியிருப்பதை இலக்காக வைத்து தொடங்குங்கள். ஒவ்வொரு காலப்பகுதியின் முடிவிலும், மீண்டும் குடிக்கத் திரும்பாமல் உங்களுடைய தீர்மானத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கு இது ஒரு தொடக்கமாகவே இருக்கிறது. பைபிள், “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரி”க்குமாறு அறிவுறுத்துகிறது. (2 கொரிந்தியர் 7:1) கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது மாம்சத்தை அசுத்தப்படுத்துவதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. ஆவி, அல்லது மனச்சாய்வுங்கூட பாதிக்கப்படுகிறது. மாம்சத்திலிருந்தும் ஆவியிலிருந்தும் மீள எது உங்களுக்கு உதவக்கூடும்?
தொடர்ந்து முயற்சிசெய்வது அவசியம்
“கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது ஒருவர் தன்னைத்தானே முழுமையாக கெடுத்துக்கொள்வதாகும்” என்று டாக்டர் ராபர்ட் L. டியூபான்ட் சொல்கிறார். ஆகவே, கெட்ட பழக்கத்தை மேற்கொள்வது முழு நபரையும் உட்படுத்தவேண்டும். இது முழு மதிப்புத் தரத்தையும் மாற்றவேண்டும். இதற்கு காலமெடுக்கும். மீளுவதற்கு குறுக்கு வழியே கிடையாது. விரைவில் மீளுவது என்ற எந்த நம்பிக்கையும் விரைவில் அந்நிலைக்குத் திரும்புவதற்கே வழிநடத்தும்.
சரியானதைச் செய்வதற்கான போராட்டத்திற்கு முடிவேயில்லை. கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற [“தொடர்ந்து சண்டையிடுகிற,” பிலிப்ஸ்] வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்.” (ரோமர் 7:23) கிறிஸ்தவர்கள் ‘பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்த’ வேண்டும் என்றுங்கூட அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 7:1) புதிய ஏற்பாட்டில் சொல் உயிர்ச்சித்திரம் (Word Pictures in the New Testament) என்ற புத்தகம் ‘பூரணப்படுத்துவது’ என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையானது, “முழுமையான பரிசுத்தத் தன்மையை திடீரென அடைவதை அல்ல, ஆனால் ஒரு தொடர்ச்சியான முறையை” குறிக்கிறது என்று சொல்கிறது. ஆக, கெட்ட பழக்கத்தை மேற்கொள்வது என்பது படிப்படியாக செய்யப்படும் காரியமாக இருக்கிறது.
காரணத்தைக் கண்டுபிடிப்பது
அநேகர், முற்காலத்தில் நடந்த துக்கமான சம்பவங்களை புதைத்துப்போட கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக முயற்சி செய்கிறார்கள். “அடங்காப்பசிநோய் [சீரற்ற உணவுப்பழக்கம்] நடந்த காரியங்களை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாதபடி செய்தது. அது எனக்கு தப்புவதற்கான வழிமுறையாக ஆனது” என்று ஜேனஸ் சொல்கிறாள். ஜேனஸ் முற்காலத்தை பற்றி அசட்டையாக இருந்துவிட்டது, தன்னுடைய கெட்ட பழக்கத்திற்கு அடிமையாயிருப்பதிலேயே அவளைத் தரித்திருக்கச் செய்தது. தன்னுடைய நடத்தைக்கான காரணங்களைப் புரிந்துகொண்டது, ஜேனஸ் அடிமையாகியிருக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள உதவியது.
முற்காலத்தை ஆராய்ந்து பார்க்காமலேயே சிலர் முந்தைய பழக்கங்களை மாற்றி, வெற்றிகரமாக சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். வேறுசிலர், தங்களுடைய முந்தைய சூழலில் வேரூன்றிக்கிடந்த உணர்ச்சிகள், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவதற்கான ஏக்கத்தை தொடர்ந்து தூண்டுவிப்பதாக காண்கின்றனர். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று எழுதிய சங்கீதக்காரனாகிய தாவீதைப்போல அவர்கள் உணரக்கூடும்.—சங்கீதம் 139:23, 24.
உணர்ச்சிகளை சமாளிப்பது
இருள்நிறைந்த ஒரு கட்டடத்திலிருந்து எப்போதாவது நீங்கள் நேரடியாக சூரிய ஒளியினிடம் வெளியே வந்ததுண்டா? பளிச்சென்ற ஒளியினால் நீங்கள் சற்று பின்வாங்குகிறீர்கள். அதேபோல, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதோடு சமாளிக்க தொடங்குகையில், பொங்கியெழும் வெவ்வேறான உணர்ச்சிகளால் நீங்கள் திடீரென, வேதனைதரும் விதத்தில் பலமாகத் தாக்கப்படுவதாக காணலாம். நீண்ட காலமாக மறைந்துகிடந்த அன்பு, கோபம், பெருமை, பொறாமை, பயம், மனக்கசப்பு போன்ற மற்ற உணர்ச்சிகளும் இப்போது முழு அளவில் கொழுந்துவிட்டெரிகின்றன.
கவலையானது, நீங்கள் திரும்பவும் போதைப்பொருள் துர்ப்பிரயோகமாகிய அந்தப் பழக்கப்பட்ட இருளினிடம் செல்ல உங்களுக்குச் சொல்லக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட உணர்ச்சிகளிலிருந்து ஓடிவிடவேண்டாம். உங்களுக்கு அவை உதவக்கூடிய தகவல் மூலமாக இருக்கலாம். உணர்ச்சிகள் பெரும்பாலும், ஏதோவொரு காரியத்திற்கு நீங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கு ஒரு சமிக்கையாகவே இருக்கின்றன. ஆகவே தேவைப்பட்டால், உங்கள் உணர்ச்சிகளைக் குறித்து முற்றுமுழுக்க எண்ணிப்பாருங்கள். அவை என்ன சொல்கின்றன? வரக்கூடிய செய்தி தெளிவாக இல்லையென்றால் அல்லது உணர்ச்சிவசப்படுகிறவராய் நீங்கள் உணர்ந்தால், ஒரு முதிர்ச்சியான நண்பரிடத்தில் பேசிப்பாருங்கள். (யோபு 7:11) உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் தனிமையில் சமாளிக்கவேண்டிய அவசியமில்லை.—நீதிமொழிகள் 12:25-ஐ ஒத்துப்பாருங்கள்.
உணர்ச்சிகள் உங்களுக்கு எதிரிகளாக இருக்கவேண்டியதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள். யெகோவா தேவன்தாமே ஆழ்ந்த உணர்ச்சிகளை உடையவராயிருக்கிறார். கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதனும் அவ்வாறே உணருகிறான். (ஆதியாகமம் 1:26; சங்கீதம் 78:21, 22, 40, 41; 1 யோவான் 4:8) திடீரென்று படுகிற கண்கூசச்செய்யும் பளிச்சென்ற அந்தச் சூரிய ஒளியைப்போல, முதலில் உணர்ச்சிகள் வேதனைதருவதாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அவைகூட சூரிய ஒளியைப்போல, வழிகாட்டுவதற்கும் அனலாயிருப்பதற்கும் ஒரு மூலமாக மாறக்கூடும்.
பிரச்னையை தீர்ப்பது
உயரங்களைப் பற்றிய காபரா உள்ள நபருக்கு, கயிற்றின் மேல் நடப்பது மிகவும் பயமாக இருக்கலாம். கெட்ட பழக்கத்திலிருந்து மீளுகிற நபருக்கு, வாழ்க்கையானது நடுநடுங்கிக்கொண்டு கயிற்றில் நடப்பதுபோல தோன்றலாம். நிதானபுத்தியோடு சேர்ந்துவரும் மேம்பட்ட பொறுப்புகள், சொல்லப்போனால், உயரங்களைப் பற்றிய பயத்தை கொண்டுவரக்கூடும். தோல்வியை எதிர்நோக்கியிருப்பது, ‘நான் எப்படியிருந்தாலும் விழத்தான் போகிறேன். ஏன் இப்போதே விழுந்துவிடக்கூடாது?’ என்று உங்களை யோசிக்க வைக்கும்.
ஆனால் பிரச்னைகள் உங்களை தனிப்பட்ட வகையில் தாக்குவது கிடையாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அவை சமாளிக்கவேண்டிய சூழ்நிலைகளே. ஆகையால் பதற்றமடையாதேயுங்கள். உங்களுடைய பிரச்னைகளை ஒவ்வொன்றாக எதிர்ப்படுங்கள். இது அவற்றை நேர்ப்படுத்த உங்களுக்கு உதவும்.—1 கொரிந்தியர் 10:13.
தன்மானம்
குடிப்பழக்கத்திலிருந்து மீளுகிற மரீயன் என்பவளுக்கு தன்மானத்தைப் பற்றிய தாழ்வான உணர்ச்சியை சமாளிக்கவேண்டியதாக இருந்தது. “நான் உண்மையில் யாரென்று [மக்கள்] கண்டுணர்ந்தால், அவர்களுக்கு என்னைப் பிடிக்காது என்று எப்போதும் உள்ளுக்குள் நினைத்தேன்,” என அவள் சொல்கிறாள்.
கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகும் பிடியிலிருந்து விடுபடுவது என்பது, முதல் முறையாவது, ஒரு நபராக உங்களுடைய நன்மதிப்பைக் குறித்து அறிந்துகொள்வதைக் கேட்கிறது. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதன் காரணமாக உங்களுடைய வாழ்க்கையானது குட்டிச்சுவராக ஆகியிருந்ததானால் இது கஷ்டமாயிருக்கும். எது உதவக்கூடும்?
மனமுடைந்துபோன ஆட்களுக்கு பைபிள் ஆறுதலளிக்கும் புத்தகமாக இருக்கிறது. ஆரோக்கியமான சுயமரியாதையை நீங்கள் பெற்றுக்கொள்ள அது உங்களுக்கு உதவக்கூடும். (சங்கீதம் 94:19) உதாரணமாக, மனிதர்கள் “மகிமையினாலும் கனத்தினாலும்” முடிசூட்டப்பட்டிருக்கிறார்கள் என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்”டேன் என்றுங்கூட அவர் சொன்னார். (சங்கீதம் 8:5; 139:14) ஆரோக்கியமான தன்மதிப்புக்கு என்னே நயமான கூற்றுகள்!
உங்கள் சரீரத்தை பொக்கிஷமாக கருதுங்கள். அப்போது, ‘தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; ஆனால் அதை அவன் போஷித்துக் காப்பாற்றுகிறான்’ என்று கூறுகிற வேதவசனத்தின் நோக்குநிலையில் அதை நீங்கள் பேணிக்காத்துக்கொள்வீர்கள். (எபேசியர் 5:29) ஆம், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவதிலிருந்து மீளுவதன் சவாலை உங்களால் எதிர்ப்பட முடியும்.b
என்றபோதிலும், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவது அதிகத்தை உட்படுத்தும். போதைப்பொருட்கள், மதுபானப்பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை நாடுவதற்கான அதே பற்றோடும் நோக்கத்தோடும் நடவடிக்கைகளை நாடலாம். இவற்றில் ஒருசில நடவடிக்கைகள் இப்போது சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a சீரற்ற உணவுப்பழக்கங்கள் இருப்பவர்களால் உணவை உட்கொள்ளுவதிலிருந்து விலகியிருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் மனநிலையை மாற்றுவதற்கு அவர்கள் உணவை பயன்படுத்தாமல் இருக்கலாம். பெருந்திண்டி, பட்டினி, வற்புறுத்தி வாந்தியெடுப்பது அல்லது மலங்கழிப்பது, வயிறே தெய்வம் என்றிருப்பது ஆகிய பழக்கங்களை, மட்டாக சாப்பிட்டு பதிலீடு செய்யலாம்.
b விலகியிருப்பதைக் காத்துக்கொள்வதற்கும், மீளுவதில் முன்னேறுவதற்கும், சிலர் மறுசீரமைப்புத் திட்டத்தை நாடிச்சென்றிருக்கிறார்கள். அத்தகைய திட்டங்களை அநேக சிகிச்சை மையங்களும், ஆஸ்பத்திரிகளும் மற்ற இடங்களும் அளிக்கின்றன. விழித்தெழு! குறிப்பாக எந்தச் சிகிக்சைக்கும் ஆதரவு தருவது கிடையாது. பைபிள் நியமங்களின்படி வாழ விரும்புபவர்கள், வேதப்பூர்வ நியமங்களை விட்டுக்கொடுக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பதற்கு கவனமுள்ளவர்களாயிருக்கவேண்டும்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“மீளுவது என்பது [ஒருவனுடைய] முழு மதிப்புத் தரத்தை மாற்றுவதாகவே இருக்கிறது.”—டாக்டர் ராபர்ட் L. டியூபான்ட்.
[பக்கம் 7-ன் படம்]
முதல் படி கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கும் பொருட்களிலிருந்து விலகியிருப்பது
[பக்கம் 8-ன் படம்]
உணர்ச்சிவசப்பட்டால், மனந்திறந்து பேசுங்கள்