யெகோவாவைப்போல் பலவீனரைத் தாங்குங்கள்
“உடல் உறுப்புகளில் பலவீனமுள்ளவையாகத் தோன்றுகிற உறுப்புகளே மிகவும் அவசியமாக இருக்கின்றன.”—1 கொ. 12:22.
1, 2. பலவீனர்களுடைய கஷ்டத்தை பவுலால் எப்படிப் புரிந்துகொள்ள முடிந்தது?
நாம் எல்லோருமே சில நேரங்களில் பலவீனமாகிவிடுகிறோம். அதுவும் உடல்நிலை சரியில்லாமல் போகும்போது அன்றாட வேலைகளைக்கூட செய்ய முடிவதில்லை. இப்படி வாரக்கணக்காக, மாதக்கணக்காக முடங்கிப்போய்விட்டால் மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவோம்? நம் நிலைமையைப் புரிந்து நடக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுவோம்?
2 சபையிலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிரச்சினைகள் வந்தபோது அப்போஸ்தலன் பவுலும் சோர்ந்துபோனார். இதற்குமேல் சமாளிக்க முடியாது என்றுகூட நினைத்தார். (2 கொ. 1:8; 7:5) தன் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டநஷ்டங்களைப் பற்றி விவரித்தபோது ‘நான் பலவீனமாக உணர்ந்தேன்’ என்று சொன்னார். (2 கொ. 11:29) சபையிலிருக்கும் நபர்களை உடல் உறுப்புகளுக்கு ஒப்பிட்டபோது, “பலவீனமுள்ளவையாகத் தோன்றுகிற உறுப்புகளே மிகவும் அவசியமாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார். (1 கொ. 12:22) இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? பலவீனரிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில் நாம் எப்படி யெகோவாவைப் பின்பற்றலாம்? பலவீனரைத் தாங்குவதால் நமக்கு என்ன நன்மை?
பலவீனரை யெகோவா ஒதுக்குவதில்லை
3. உலகத்தின் சிந்தை நம்மை எப்படிப் பாதிக்கலாம்?
3 பலசாலிகளையும் திறமைசாலிகளையும்தான் இந்த உலகம் போற்றிப் புகழ்கிறது. நினைத்ததைச் சாதிப்பதற்கு மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்; பலவீனர்களை மட்டம்தட்டி, ஒதுக்கி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மையை நாம் ஆதரிக்காவிட்டாலும் இந்த உலகத்தின் காற்று நம்மீதும் அடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சபையில் பலவீனமாக இருப்பவர்களையும் அடிக்கடி உதவி தேவைப்படும் சகோதர சகோதரிகளையும் நாம் தாழ்வாக நினைத்துவிடலாம். அப்படியென்றால், பலவீனரைத் தாங்குவதில் நாம் யெகோவாவை எப்படிப் பின்பற்றலாம்?
4, 5. (அ) 1 கொரிந்தியர் 12:21-23-ல் உள்ள உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) பலவீனரைத் தாங்குவதால் நமக்கு என்ன நன்மை?
4 பலவீனரை யெகோவா ஒதுக்குவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள பவுல் சொன்ன உதாரணம் உதவுகிறது. மிகவும் பலவீனமாக, மதிப்பற்றதாக தோன்றும் உறுப்புகளும் பயனுள்ளது என்று 1 கொரிந்தியர் 12-ஆம் அதிகாரத்தில் பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 12:12, 18, 21-23-ஐ வாசியுங்கள்.) பரிணாமத்தை நம்பும் சிலர் இந்த வசனத்திலுள்ள குறிப்பை மறுத்தார்கள்; உடலில் இருக்கும் சில உறுப்புகள் தேவையில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.a தேவையில்லை என்று நினைத்த உறுப்புகளும் முக்கியமான வேலைகளைச் செய்கிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, கால் சுண்டுவிரல் தேவையில்லை என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், முழு உடலின் எடையைத் தாங்குவதற்குச் சுண்டுவிரலும் உதவுகிறது என்று இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
5 சபையில் இருக்கும் ஒவ்வொரு நபரும் முக்கியமானவர் என்பதை பவுல் சொன்ன உதாரணம் காட்டுகிறது. நாம் எதற்குமே லாயக்கில்லாதவர்கள் போல் உணர வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். (யோபு 4:18, 19) ஆனால், தம்முடைய ஊழியர்கள் அனைவரையும், பலவீனரையும்கூட, ‘மிகவும் அவசியமானவர்கள்’ என்று யெகோவா நினைக்கிறார். சபையிலும் உலகளாவிய அமைப்பிலும் நாமும் ஒருவராக இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! வயதான யாருக்காவது நடக்க உதவி செய்திருக்கிறீர்களா? அவரோடு சேர்ந்து நீங்களும் மெல்லமாக செல்ல வேண்டியிருந்திருக்கும். அப்படி உதவிக்கரம் நீட்டியது அவருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது பொறுமை, அன்பு போன்ற முத்தான குணங்களை நாம் வளர்த்துக்கொள்வோம், பொறுப்புள்ளவர்களாகவும் ஆகிவிடுவோம். (எபே. 4:15, 16) பலவீனரை நாம் தாங்க வேண்டும் என்றுதான் நம்முடைய அன்பான தகப்பன் எதிர்பார்க்கிறார். அப்படிச் செய்யும்போது சகோதர சகோதரிகளிடம் நாம் அளவுக்கதிகமாக எதிர்பார்க்க மாட்டோம், சபையிலும் அன்பு தழைத்தோங்கும்.
6. ‘பலவீனமானவர்கள்,’ ‘பலமுள்ளவர்கள்’ என்று சொல்லும்போது பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?
6 கொரிந்தியர்களுக்குப் பவுல் எழுதிய கடிதத்தில் ‘பலவீனம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். “பலவீனத்தோடு உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்; கிறிஸ்தவர்களை ‘பலவீனமானவர்களாக’ மற்றவர்கள் நினைத்தார்கள் என்று எழுதினார். (1 கொ. 1:26, 27; 2:3) சிலரை ‘பலமுள்ளவர்கள்’ என்றும் சொன்னார். அதற்காக, அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று அர்த்தப்படுத்தவில்லை. (ரோ. 15:1) புதிதாகச் சத்தியத்திற்கு வந்தவர்களிடம் அனுபவமுள்ளவர்கள் பொறுமையோடு நடந்துகொள்ள வேண்டும் என அந்த வசனத்தில் வலியுறுத்தினார்.
பலவீனரை ஒதுக்காதீர்கள்
7. மற்றவர்களுக்கு உதவி செய்ய நாம் ஏன் தயங்கலாம்?
7 “சிறுமைப்பட்ட,” அதாவது பலவீனமான, ஒருவருக்கு உதவும்போது நாம் யெகோவாவைப் பின்பற்றுகிறோம். அவருடைய அங்கீகாரத்தையும் பெறுகிறோம். (சங். 41:1; எபே. 5:1) சில சமயங்களில், மற்றவர்களைப் பற்றித் தவறாக எடைபோடுவதால் நாம் உதவி செய்யத் தயங்கலாம். அல்லது கஷ்டத்தில் இருப்பவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் இருக்கலாம். கணவனால் கைவிடப்பட்ட கவிதாb சொல்கிறார்: “பிரச்சினைகள் வரும்போது யாராவது நம்மகூட இருந்தா ஆறுதலா இருக்கும். ஆனா சகோதர சகோதரிகளே நம்மல ஒதுக்குனா, ஆறுதலா பேசலனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.” இப்படி ஒதுக்கப்படுவது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை தாவீது ராஜா தன் சொந்த வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொண்டார்.—சங். 31:12.
8. மற்றவர்களைப் புரிந்து நடந்துகொள்ள எது நமக்கு உதவும்?
8 நம்முடைய அன்பான சகோதர சகோதரிகள் பிரச்சினைகளின் காரணமாகச் சோர்ந்துபோயிருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒருவேளை வியாதியால் அவதிப்படலாம், சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோடு போராடிக்கொண்டிருக்கலாம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகள் நமக்கு வந்தால் மற்றவர்கள் நம்மைப் புரிந்து நடக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்போம்? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வதற்குமுன், இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த ஆலோசனை நமக்கும் பொருந்தும். அடிமைகளாக அவர்கள் எகிப்தில் பல கஷ்டங்களை எதிர்ப்பட்டார்கள். அதனால், கஷ்டத்தில் தவிக்கும் சொந்த சகோதரர்களிடம் ‘இருதயத்தை கடினமாக்கக்கூடாது’ என்று யெகோவா தெளிவாகச் சொல்லியிருந்தார். பலவீனரை அவர்கள் தாங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.—உபா. 15:7, 11; லேவி. 25:35-38.
9. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் என்ன செய்ய வேண்டும்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
9 கஷ்டத்தில் இருப்பவர்களிடம் நாம் ஆறுதலாகப் பேச வேண்டும். அவர்களைக் குற்றப்படுத்தவோ சந்தேகப்படவோ கூடாது. (யோபு 33:6, 7; மத். 7:1) ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: சாலை விபத்தில் அடிபட்ட ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டுவந்தால், என்ன செய்வார்கள்? உடனடியாகச் சிகிச்சை கொடுப்பார்கள். அதை விட்டுவிட்டு, விபத்திற்கு யார் காரணம் என்று ஆராய மாட்டார்கள். அதுபோலவே, பிரச்சினைகளின் காரணமாக யாராவது சோர்ந்துபோயிருந்தால், முதலில் அவர்களுக்கு ஆன்மீக ரீதியில் ‘சிகிச்சை’ அளிப்பதுதான் முக்கியம்.—1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ வாசியுங்கள்.
10. பார்ப்பதற்கு பலவீனமாக இருப்பவர்கள் எப்படி “விசுவாசத்தில் செல்வந்தர்களாக” இருக்கிறார்கள்?
10 ஒருவர் என்ன கஷ்டங்களை எதிர்ப்படுகிறார் என்பதைப் புரிந்துகொண்டால் அவரைப் பலவீனராக நினைக்க மாட்டோம். அநேக சகோதரிகள் குடும்பத்தாருடைய எதிர்ப்பின் மத்தியிலும் பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறார்கள். பார்ப்பதற்கு ஆன்மீக விதத்தில் பலவீனமாக தெரிந்தாலும் அவர்கள் விசுவாசத்தில் பலமுள்ளவர்கள். பிள்ளைகளோடு தவறாமல் கூட்டங்களுக்கு வரும் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கும்போது அவர்களுடைய விசுவாசத்தையும் மன உறுதியையும் எவ்வளவாய் போற்றுகிறோம்! விசுவாசத்தில் உறுதியாக இருக்கும் நம் இளைஞர்களைப் பாருங்கள்! ஒவ்வொரு நாளும் சக மாணவர்களிடமிருந்து வரும் தொல்லைகள் மத்தியிலும் இவர்கள் சகித்திருக்கிறார்கள். இவர்களைப்போல் அநேகர் சாதகமற்ற சூழ்நிலையிலும் யெகோவாவைச் சேவித்து வருகிறார்கள். பார்க்க பலவீனமாக இருந்தாலும், இவர்கள் “விசுவாசத்தில் செல்வந்தர்களாக” இருக்கலாம்.—யாக் 2:5.
யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
11, 12. (அ) பலவீனரை எப்படி நடத்த வேண்டும்? (ஆ) யெகோவா ஆரோனை நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 பலவீனரை யெகோவா எப்படி நடத்தினார் என்பதைத் தெரிந்துகொண்டால் நாமும் அதையே பின்பற்றலாம். (சங்கீதம் 130:3-ஐ வாசியுங்கள்.) ஆரோனின் உதாரணத்தைக் கவனியுங்கள்: ஆரோன் பொன் கன்றுக்குட்டி செய்ததற்கு மோசேயிடம் சாக்குப்போக்குச் சொன்னார்; அந்நிய தேசத்துப் பெண்ணை மோசே திருமணம் செய்ததைக் குறித்து மிரியாமோடு சேர்ந்து மோசேக்கு விரோதமாகப் பேசினார்; பாறையிலிருந்து யெகோவா தண்ணீரை வர வைத்தபோது மோசேயும் ஆரோனும் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்குப் பதிலாக அவர்கள்தான் தண்ணீரை வர வைத்ததாகச் சொன்னார்கள். (யாத். 32:21-24; எண். 12:1, 2; 20:10-13) இந்தச் சம்பவங்கள் நடந்தபோது, நீங்கள் இருந்திருந்தால் ஆரோனைப் பற்றி என்ன நினைத்திருப்பீர்கள்?
12 தவறு செய்த அந்த நொடியே ஆரோனைத் தண்டிக்க யெகோவாவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், ஆரோன் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்யவில்லை, சந்தர்ப்ப சூழ்நிலையும் மற்றவர்களின் வற்புறுத்துதலும்தான் காரணம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, தவறைச் சுட்டிக்காட்டியபோது அதை உடனடியாக ஒப்புக்கொண்டார், யெகோவா கொடுத்த தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். (யாத். 32:26; எண். 12:11; 20:23-27) ஆரோன் காட்டிய விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் யெகோவா பார்த்தார். அதனால்தான், பல வருடங்களுக்குப் பிறகுகூட ஆரோனையும் அவருடைய குடும்பத்தாரையும் ‘கர்த்தருக்குப் பயந்தவர்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 115:10-12; 135:19, 20.
13. யெகோவாவைப் போல் பலவீனரை நடத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
13 யெகோவாவைப் போல் பலவீனரை நடத்த வேண்டுமென்றால் அவர்களை நாம் எப்படி எடைபோடுகிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் எண்ணத்தைச் சரிசெய்ய முடியும். (1 சா. 16:7) உதாரணத்திற்கு, ஒரு இளைஞன் பொழுதுபோக்கு விஷயத்தில் ஏனோதானோவென்று கண்டதையும் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வீர்கள்? உடனே, அவனை கெட்டவன் என்று முடிவுகட்டாதீர்கள். அவனுக்கு எப்படி உதவலாம் என்று யோசித்துப் பாருங்கள். நாமாகவே முன்வந்து உதவி செய்யும்போது பலவீனமான நபர்மீது நம் அன்பு வளரும், அவரை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.
14, 15. (அ) எலியா சோர்ந்துபோனதைப் பார்த்தபோது யெகோவா என்ன செய்தார்? (ஆ) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 சோர்வாக இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? யெகோவா எலியாவிடம் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். எலியா, 450 பாகால் தீர்க்கதரிசிகளைத் தைரியமாக எதிர்த்து நின்றார்; யெகோவாமேல் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், யேசபேல் ராணி அவரைக் கொல்லத் திட்டம் தீட்டியபோது, உயிருக்குப் பயந்து தப்பி ஓடினார். 150 கி.மீ. தூரம் இருந்த பெயர்செபாவரை போனார். நாள் முழுக்க பாலைவனத்தில் நடந்து களைத்துப்போனார். சுட்டெரிக்கும் வெயிலின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்து, ‘என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்று கடவுளிடம் கேட்டார்.—1 இரா. 18:19; 19:1-4.
15 தம் உண்மையுள்ள தீர்க்கதரிசி ஆன்மீக விதத்தில் சோர்ந்துபோனதைப் பார்த்தபோது யெகோவா என்ன செய்தார்? தைரியத்தையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கும் எலியாவை ஒதுக்கிவிட்டாரா? இல்லவே இல்லை. அவரின் நிலைமையைப் புரிந்துகொண்டு ஒரு தேவதூதனை அனுப்பினார். எலியாவுக்கு பலம் தேவை என்பதால் அந்தத் தேவதூதன் இரண்டுமுறை அவரை எழுப்பி, சாப்பிடச் சொன்னார். (1 இராஜாக்கள் 19:5-8-ஐ வாசியுங்கள்.) அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுப்பதற்குமுன் அவருடைய உடனடித் தேவையை யெகோவா பூர்த்தி செய்தார். பிறகு, அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார்.
16, 17. சகோதர சகோதரிகள் மீது நமக்கு இருக்கும் அக்கறையை எப்படி வெளிக்காட்டலாம்?
16 ஒரு முக்கிய விஷயத்தை யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். அவசரப்பட்டு ஒருவருக்கு ஆலோசனை கொடுக்கக் கூடாது. (நீதி. 18:13) சோர்வாகவோ லாயக்கற்றவராகவோ ஒருவர் உணர்ந்தால் அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். அவர்மீது அக்கறை காட்ட வேண்டும். (1 கொ. 12:23) அப்போதுதான், அவருடைய தேவையைப் புரிந்து உதவி செய்ய முடியும்.
17 முன்பு சொல்லப்பட்ட கவிதாவின் உதாரணத்தை மீண்டும் கவனியுங்கள். அவருடைய கணவன் அவரையும் இரண்டு மகள்களையும் அம்போவென தவிக்கவிட்டு போய்விட்டார். சகோதர சகோதரிகள் அவருக்கு எப்படி உதவினார்கள்? “ஃபோன்ல விஷயத்த சொன்ன முக்கால் மணிநேரத்துல எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. அவங்க கண்ணெல்லாம் கலங்கிடுச்சி. ரெண்டு மூனு நாளைக்கு எங்க கூடவே இருந்தாங்க. நாங்க ரொம்ப கவலையா இருந்தோம், சாப்பிடவே பிடிக்கல. அதனால, அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் எங்கள நல்லா கவனிச்சிக்கிட்டாங்க” என்று கவிதா சொல்கிறார். “ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, உங்களில் ஒருவன் அவரிடம், ‘சமாதானமாகப் போங்கள், உங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளுங்கள், வயிறாரச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவருடைய உடலுக்குத் தேவையானவற்றைக் கொடுக்காதிருந்தால் என்ன பயன்? அவ்வாறே, விசுவாசம் செயல்களில் காட்டப்படவில்லை என்றால், அது செத்ததாயிருக்கும்” என்று யாக்கோபு சொன்னது எவ்வளவு உண்மை! (யாக். 2:15-17) சரியான நேரத்தில், அன்பான சகோதர சகோதரிகள் கவிதாவுக்கு உதவினார்கள். இதனால், ஆறே மாதத்தில் கவிதாவும் அவருடைய இரண்டு மகள்களும் துணை பயனியர் செய்தார்கள்.—2 கொ. 12:10.
கொடுப்பதிலேயே சந்தோஷம்!
18, 19. (அ) பலவீனருக்கு எப்படி உதவலாம்? (ஆ) இதனால் வரும் நன்மைகள் என்ன?
18 நம் உடல்நிலை சரியில்லாமல் பலவீனமாகிவிட்டால் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குக் கொஞ்ச நாளாகும். அதேபோல், பிரச்சினையில் சிக்கிக்கொண்ட அல்லது தவறு செய்த ஒருவர் ஆன்மீக விதத்தில் பலமடைய கொஞ்சம் காலம் எடுக்கும். பலம் பெறுவதற்கு அவர்தான் முயற்சி எடுக்க வேண்டும். தினமும் பைபிள் படிக்க வேண்டும், தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும், ஆன்மீக விஷயங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும். ஆனால், நம் பங்கிலும் அவருக்கு உதவி செய்ய முடியும். அவர் மீண்டும் பலம் பெறும்வரை பொறுமையாக இருங்கள். நமக்கு அவர்மீது அன்பு இருக்கிறது என்றும் சபையில் அவர் ரொம்ப முக்கியம் என்றும் புரிய வையுங்கள்.—2 கொ. 8:8.
19 மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வரும் சந்தோஷமே தனிதான். “கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. அதோடு, பொறுமை காட்டவும் மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் நாம் கற்றுக்கொள்வோம். சபையிலும் அன்பு செழித்தோங்கும். எல்லாவற்றையும்விட நாம் யெகோவாவைப் பின்பற்றுவோம். அவர் ஒவ்வொரு நபரையும் தம் கண்மணியைப்போல் கருதுகிறார். எனவே, நாம் எல்லோரும் ‘பலவீனருக்கு உதவி செய்வோமாக!’—அப். 20:35.
a த டிஸென்ட் ஆஃப் மேன் என்ற புத்தகத்தில் சார்லஸ் டார்வின் அநேக உறுப்புகளை “தேவையில்லாதவை” என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய கருத்தை ஆதரித்த ஒருவர் அப்பன்டிக்ஸ் (Appendix), தைமஸ் (Thymus) போன்ற தேவையில்லாத நிறைய உறுப்புகள் இருப்பதாகச் சொன்னார்.
b பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.