1 ராஜாக்கள்
19 எலியா செய்த எல்லா காரியங்களைப் பற்றியும், தீர்க்கதரிசிகள் எல்லாரையும் அவர் வாளால் வெட்டிக் கொன்றதைப் பற்றியும்+ யேசபேலிடம்+ ஆகாப்+ சொன்னார். 2 உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி, “அந்தத் தீர்க்கதரிசிகளை நீ தீர்த்துக்கட்டியதுபோல் நாளைக்கு இந்நேரத்துக்குள் நான் உன்னைத் தீர்த்துக்கட்டுகிறேன், பார்! அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொன்னாள். 3 அதைக் கேட்டதும் எலியா கதிகலங்கிப்போனார். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்து தப்பித்து யூதாவிலுள்ள பெயெர்-செபாவுக்கு+ ஓடிப்போனார்;+ அங்கே தன்னுடைய ஊழியனை விட்டுவிட்டு, 4 வனாந்தரத்தில் ஒருநாள் முழுவதும் நடந்துபோனார்; ஒரு புதர்ச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டினார். “போதும், யெகோவாவே! என் உயிரை எடுத்துவிடுங்கள்.+ செத்துப்போன என் முன்னோர்களைவிட நான் எந்த விதத்திலும் மேலானவன் அல்ல” என்று வேண்டினார்.
5 பின்பு, அந்தப் புதர்ச்செடியின்கீழ் படுத்துத் தூங்கிவிட்டார். திடீரென்று ஒரு தேவதூதர் அவரைத் தொட்டு,+ “எழுந்து சாப்பிடு”+ என்று சொன்னார். 6 அவர் எழுந்து பார்த்தபோது, சூடாக்கப்பட்ட கற்கள்மீது ரொட்டியும் ஒரு ஜாடியில் தண்ணீரும் அவருடைய தலைமாட்டில் இருந்தன. அதைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டார். 7 பிற்பாடு, யெகோவாவின் தூதர் இரண்டாவது தடவை வந்து அவரைத் தொட்டு, “எழுந்து சாப்பிடு, ரொம்பத் தூரம் பயணம் செய்ய உனக்குச் சக்தி வேண்டும்” என்று சொன்னார். 8 அதனால் அவர் எழுந்து சாப்பிட்டு, தண்ணீர் குடித்தார். அந்தத் தெம்பில் 40 நாட்கள் ராத்திரியும் பகலும் நடந்து உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்குப்+ போய்ச் சேர்ந்தார்.
9 அன்று ராத்திரி அங்கிருந்த ஒரு குகையில் தங்கினார்.+ அப்போது யெகோவா அவரிடம், “எலியா, இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். 10 அதற்கு அவர், “பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்து வந்திருக்கிறேன்.+ ஆனால், இஸ்ரவேல் மக்கள் உங்களுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள்,+ உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள், உங்களுடைய தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றுவிட்டார்கள்,+ நான் ஒருவன் மட்டும்தான் மீதியிருக்கிறேன். இப்போது என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்”+ என்று சொன்னார். 11 கடவுள் அவரிடம், “நீ வெளியே போய் இந்த மலையில் யெகோவா முன்னால் நில்” என்று சொன்னார். அப்போது, யெகோவா கடந்துபோனார்.+ பலத்த காற்று வீசியது. அதனால், யெகோவா முன்னால் மலைகள் பிளந்தன, பாறைகள் தகர்ந்தன.+ ஆனால், யெகோவா அந்தக் காற்றில் இருக்கவில்லை. காற்று ஓய்ந்த பிறகு நிலநடுக்கம் ஏற்பட்டது;+ ஆனால், யெகோவா அந்த நிலநடுக்கத்திலும் இருக்கவில்லை. 12 நிலநடுக்கத்துக்குப் பிறகு, நெருப்பு வந்தது.+ ஆனால், யெகோவா அந்த நெருப்பிலும் இருக்கவில்லை. நெருப்புக்குப் பிறகு அமைதியான, மென்மையான ஒரு குரல் கேட்டது.+ 13 எலியா அதைக் கேட்டதும், தன்னுடைய அங்கியால்* முகத்தை மூடிக்கொண்டு,+ வெளியே வந்து அந்தக் குகையின் வாசலில் நின்றுகொண்டார். அப்போது அந்தக் குரல், “எலியா, இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டது. 14 அதற்கு அவர், “பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்து வந்திருக்கிறேன். ஆனால், இஸ்ரவேல் மக்கள் உங்களுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள்,+ உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள், உங்களுடைய தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றுவிட்டார்கள், நான் ஒருவன் மட்டும்தான் மீதியிருக்கிறேன். இப்போது என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்”+ என்று சொன்னார்.
15 அப்போது யெகோவா அவரிடம், “நீ இங்கிருந்து தமஸ்குவிலுள்ள வனாந்தரத்துக்குப் போ. அங்கே போனதும், அசகேலை+ சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் செய். 16 நிம்சியின் பேரன் யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்.+ உனக்குப் பின்பு தீர்க்கதரிசியாகச் சேவை செய்ய ஆபேல்-மெகொல்லாவைச் சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை* அபிஷேகம் செய்.+ 17 அசகேலின் வாளுக்குத்+ தப்புகிறவர்களை யெகூ கொன்றுபோடுவான்,+ யெகூவின் வாளுக்குத் தப்புகிறவர்களை எலிசா கொன்றுபோடுவான்.+ 18 பாகால்முன் மண்டிபோடாத,+ அவனை முத்தமிடாத+ 7,000 பேர் இன்னும் இஸ்ரவேலில் இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
19 எலியா அங்கிருந்து போய் சாப்பாத்தின் மகனான எலிசாவைப் பார்த்தார். எலிசாவுக்கு முன்னால் 12 ஜோடி காளைகள் ஏர் உழுதுகொண்டிருந்தன. பன்னிரண்டாவது ஜோடி காளைகளை வைத்து எலிசா உழுதுகொண்டிருந்தார். அப்போது, எலியா அவரிடம் போய்த் தன்னுடைய அங்கியை*+ அவர்மேல் போட்டார். 20 உடனே எலிசா அந்தக் காளைகளை விட்டுவிட்டு எலியா பின்னால் ஓடிவந்து, “நான் போய் என் அப்பா அம்மாவிடமிருந்து விடைபெற்று வர* தயவுசெய்து அனுமதி கொடுங்கள். பிறகு, உங்களோடு வருகிறேன்” என்று சொன்னார். அதற்கு எலியா, “போய் வா, நான் ஒன்றும் உன்னைத் தடுக்கவில்லையே” என்று சொன்னார். 21 அதனால், எலிசா போய் ஒரு ஜோடி காளைகளை வெட்டினார்.* உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளை விறகாகப் பயன்படுத்தி இறைச்சியை வேக வைத்தார். அதை மக்களுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பின்பு, அங்கிருந்து புறப்பட்டு எலியாவுடன் போய், அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்.+