யெகோவாவின் வல்லமையை மனித பலவீனம் தெளிவாக காட்டுகிறது
“நான் மகிழ்ச்சியும் சுறுசுறுப்புமுள்ள முழுநேர ஊழியக்காரி என்று என்னை எல்லாரும் கருதினார்கள்; மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவிசெய்யும் ஒருத்தியாக நான் எப்பொழுதும் இருந்தேன். எனினும், அதே சமயத்தில், நான் உள்ளுக்குள் சாவதைப்போல் உணர்ந்தேன். மன அமைதியைக் குலைக்கும் எண்ணங்களும் மனவேதனையும் என்னை தீங்கான முறையில் பாதித்துக்கொண்டிருந்தன. ஆட்களிலிருந்து விலகிச்செல்வபளாக உணரத் தொடங்கினேன். வீட்டில் படுக்கையில் இருக்கவே நான் விரும்பினேன். என்னைச் சாகவிடும்படி நான் யெகோவாவிடம், பல மாதங்களாக கெஞ்சிக்கொண்டிருந்தேன்.”—வனிஸா.
மேற்குறிப்பிடப்பட்ட அனுபவத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, “கையாளுவதற்குக் கடினமான [இந்தக்] கொடிய காலங்களில்” வாழும் பாதிப்புகளை, யெகோவாவின் ஊழியர் சில சமயங்களில் உணருவார்கள் என்பதை எதிர்பார்க்க வேண்டியதே. (2 தீமோத்தேயு 3:1, NW) சிலர் மனச்சோர்வுற்றவராகவும் ஆகிவிடலாம். (பிலிப்பியர் 2:25-27) இது நீடித்திருக்க விடுகையில், மனச்சோர்வு நம்முடைய பலத்தையும் கொள்ளையடித்துவிடலாம், ஏனெனில் பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.” (நீதிமொழிகள் 24:10) ஆம், நாம் மனச்சோர்வுறுகையில், நமக்குப் பலம் தேவை—“இயல்புக்கு மிஞ்சிய பலம்” என்று அப்போஸ்தலன் பவுல் அழைக்கும் பலமும் ஒருவேளை தேவைப்படலாம்.—2 கொரிந்தியர் 4:7, NW.
யெகோவா தேவனே மட்டற்ற பலத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறார். அவருடைய படைப்பை நாம் ஆராய்ந்து பார்க்கையில் இது தெளிவாய்த் தெரிகிறது. (ரோமர் 1:20) உதாரணமாக, சூரியனைக் கவனியுங்கள். பூமி, சூரியனிலிருந்து ஏறக்குறைய 2.4 கோடா கோடிகள் [2.4X 1014] குதிரைத்திறனை இடைவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. எனினும் இது, சூரியன் வெளிப்படுத்தும் ஆற்றலின், ஏறக்குறைய இருநூறு கோடிகளில் ஒரு பாகத்தை மாத்திரமே குறிப்பிடுகிறது. பிரமாண்டமான இராட்சதர்கள் என்றறியப்படுகிற நட்சத்திரங்களோடு ஒப்பிட சூரியன் சிறியதாக உள்ளது. இவற்றில், ஓரியன் விண் மீன் குழுவில் அடங்கிய ஒரு நட்சத்திரமாகிய ரீகெல் உள்ளது. இது சூரியனைப் பார்க்கிலும் 50 மடங்கு பெரியதாக இருந்து, அதன் ஆற்றலுக்கு மேல் 1,50,000 தடவை அதிகப்பட்ட ஆற்றலை வெளிவிடுகிறது!
இத்தகைய வான ஆற்றல் உற்பத்தி மூலங்களின் சிருஷ்டிகர்தாமே ‘மகா பெலத்தை’ உடையவராக இருக்க வேண்டும். (ஏசாயா 40:26; சங்கீதம் 8:3, 4) யெகோவா, “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா நிச்சயமாகவே கூறினார். மனித பலவீனத்தின் காரணமாக, தாங்கள் சோர்ந்துபோவதாக உணரும் எவருடனும் தம்முடைய பலத்தைப் பகிர்ந்துகொள்ள கடவுள் மனமுள்ளவராக இருக்கிறார். (ஏசாயா 40:28, 29) இதை அவர் எவ்வாறு செய்கிறார் என்பது கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலின் காரியத்தில் விளக்கிக் காட்டப்படுகிறது.
இக்கட்டுகளைச் சமாளிப்பது
தான் சகிக்க வேண்டியதாக இருந்த ஒரு இடையூறைப் பற்றி பவுல் கொரிந்தியர்களிடம் சொன்னார். “மாம்சத்தில் ஒரு முள்” என்று அதை அவர் அழைத்தார். (2 கொரிந்தியர் 12:7, தி.மொ.) இந்த முள், உடல்நலப் பிரச்சினையாக, ஒருவேளை ஆற்றல் குறைந்த கண்பார்வையாக இருந்திருக்கலாம். (கலாத்தியர் 4:15; 6:11) அல்லது, கள்ள அப்போஸ்தலரையும், தன்னுடைய அப்போஸ்தலத்துவத்தையும் ஊழியத்தையும் எதிர்த்து வாதாடின தொல்லை தரும் மற்றவர்களையும் பவுல் ஒருவேளை குறிப்பிட்டிருக்கலாம். (2 கொரிந்தியர் 11:5, 6, 12-15; கலாத்தியர் 1:6-9; 5:12) அது என்னவாக இருந்ததென்றாலும், ‘மாம்சத்தில் முள்’ளாக இருந்த இது, பவுலைக் கடுமையாக வேதனைப்படுத்தினது; அது நீக்கப்படும்படி அவர் பலமுறை ஜெபித்தார்.—2 கொரிந்தியர் 12:8.
எனினும், பவுலின் வேண்டுகோளை யெகோவா நிறைவேற்றவில்லை. அதற்குப் பதிலாக, அவர் பவுலிடம் இவ்வாறு சொன்னார்: “என் தகுதியற்ற தயவு உனக்குப் போதுமானது.” (2 கொரிந்தியர் 12:9, NW) இவ்வாறு சொன்னதில் யெகோவா அர்த்தங்கொண்டது என்ன? கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தின பவுலின் சென்றகால போக்கை நாம் கவனிக்கையில், யெகோவாவின் தகுதியற்ற தயவினால் மாத்திரமே கடவுளுடன் ஓர் உறவை அவர் எவ்வாறாயினும் கொண்டிருக்க—அதுவுமல்லாமல் ஓர் அப்போஸ்தலனாகச் சேவிக்க—முடிந்தது! a (ஒப்பிடுக: சகரியா 2:8; வெளிப்படுத்துதல் 16:5, 6.) சீஷனாயிருந்த அந்தச் சிலாக்கியமே “போதுமானது” என்று யெகோவா பவுலுக்குச் சொல்பவராக இருந்திருக்கலாம். வாழ்க்கையின் சொந்த பிரச்சினைகள் அற்புதமாய் நீக்கப்படுவது அதோடு சேர்ந்து வராது. உண்மையில், மேலும் கூட்டப்பட்ட சிலாக்கியங்களின் பலனாகவும் சில துன்பங்கள் வரலாம். (2 கொரிந்தியர் 11:24-27; 2 தீமோத்தேயு 3:12) எவ்வாறாயினும், தன் ‘மாம்சத்திலிருந்த முள்ளை’ பவுல் சகிக்க வேண்டியதே.
எனினும், யெகோவா பவுலை நிச்சயமாகவே கைவிடவில்லை. மாறாக, அவர் பவுலிடம் இவ்வாறு சொன்னார்: “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” (2 கொரிந்தியர் 12:9) ஆம், தன் சூழ்நிலைமையைச் சமாளிக்க, பவுலுக்குப் பலத்தை யெகோவா அன்புடன் அருளுவார். இவ்வாறு, பவுலின் “மாம்சத்தில் ஒரு முள்,” அறிவு புகட்டும் ஒரு பாடம் ஆயிற்று. தன் சொந்த பலத்தில் சார்ந்திருப்பதைப் பார்க்கிலும் யெகோவாவின் பலத்தில் நம்பி சார்ந்திருக்கும்படி இது அவருக்குக் கற்பித்தது. இந்தப் பாடத்தை பவுல் நன்றாகக் கற்றுக்கொண்டாரெனத் தெரிகிறது. எவ்வாறெனில், சில ஆண்டுகளுக்குப் பின்னர் பிலிப்பியருக்கு அவர் இவ்வாறு எழுதினார்: ‘எந்த நிலைமையிலும் நான் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு வல்லமையுண்டு.’—பிலிப்பியர் 4:11, 13, தி.மொ.
உங்களைப் பற்றியதென்ன? “மாம்சத்திலே ஒரு முள்”ளாக இருக்கும் ஏதோ ஒன்றை நீங்கள் சகித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அது ஒருவேளை உங்களுக்கு மிகுந்த கவலையை உண்டாக்குகிற ஒரு நோயாக அல்லது வாழ்க்கையில் ஒரு சூழ்நிலைமையாக இருக்கிறதா? அப்படியானால், ஆறுதலடையுங்கள். அந்த இடையூறை யெகோவா அற்புதமாய் நீக்காவிடினும், நீங்கள் தொடர்ந்து ராஜ்ய அக்கறைகளை உங்கள் வாழ்க்கையில் முதலாவதாக வைத்துவருகையில், அதைச் சமாளிப்பதற்கு ஞானத்தையும் மனவலிமையையும் அவர் உங்களுக்கு அளிக்க முடியும்.—மத்தேயு 6:33.
கிறிஸ்தவ சேவையில், நீங்கள் விரும்புமளவாகப் பங்குகொண்டு செய்வதை, நோய் அல்லது முதிர்வயது தடைசெய்தால் மனக்கசப்படையாதீர்கள். யெகோவாவுக்குச் செய்யும் உங்கள் சேவையை மட்டுப்படுத்துவதாக உங்கள் துன்பத்தைக் கருதுவதற்குப் பதிலாக, அவரில் வைத்திருக்கும் உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அதைக் கருதுங்கள். மேலும், ஒரு கிறிஸ்தவனின் மதிப்பானது, ராஜ்ய சேவையில் அவர் எவ்வளவு அதிகம் செய்கிறார் என்பதால் அல்ல, அவருடைய விசுவாசத்தையும் அன்பின் ஆழத்தையும் கொண்டே அளவிடப்படுகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (ஒப்பிடுக: மாற்கு 12:41-44.) யெகோவாவை உங்கள் முழு ஆத்துமாவோடு நேசிப்பதானது,—உங்களுடைய சொந்த திறமையின் மிக உச்ச அளவில் நீங்கள் அவரைச் சேவிப்பதையே குறிக்கிறது—வேறொருவருடைய அல்ல.—மத்தேயு 22:37; கலாத்தியர் 6:4, 5.
உங்கள் “மாம்சத்தில் ஒரு முள்” ஆனது, நேசிக்கப்பட்ட ஒருவரின் மரணம் போன்ற, வாழ்க்கையில் வருத்தம் தரும் சந்தர்ப்பம் உட்பட்டதாக இருந்தால், பைபிளின் இந்த அறிவுரையைப் பின்பற்றுங்கள்: “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22, தி.மொ.) சில்வியா என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவ பெண்மணி இவ்வாறே செய்தார்கள். ஒருசில ஆண்டுகளே அடங்கிய ஒரு காலப்பகுதிக்குள், தன்னோடு 50 ஆண்டுகால மணவாழ்க்கை நடத்தியிருந்த தன் கணவரையும்—இரண்டு இளம் பேரப்பிள்ளைகள் உட்பட—குடும்ப உறுப்பினரான ஒன்பது பேர்களை மரணத்தில் இழந்துவிட்டார்கள். சில்வியா சொல்கிறார்கள், “யெகோவா உதவி செய்திராவிட்டால், அடக்கமுடியாமல் நான் துக்கித்துக்கொண்டிருப்பேன். ஆனால், ஜெபத்தில் மிகுந்த ஆறுதலைக் கண்டடைகிறேன். யெகோவாவுடன் இடைவிடாமல் பேசிக்கொண்டேயிருக்கிறேன். சகிப்பதற்குப் பலத்தை அவர் எனக்குத் தருகிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்.”
துயரத்தில் இருப்போர் சகிப்பதற்கு வல்லமையை, ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’ அவர்களுக்குக் கொடுக்க முடியும் என்பதை அறிவது, மறுபடியுமாக எவ்வளவாய் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது! (2 கொரிந்தியர் 1:3; 1 தெசலோனிக்கேயர் 4:13) இதை நன்றியோடு மதிப்போராய், இந்தக் காரியத்தின்பேரில் பவுலின் முடிவை நாம் புரிந்துகொள்ளலாம். அவர் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் அவமானங்களிலும் வறுமைகளிலும் இம்சைகளிலும் இடுக்கண்களிலும் நான் பிரியங்கொள்ளுகிறேன். நான் பலவீனனாயிருக்கும்போது வல்லமையுள்ளவனாயிருக்கிறேனே.”—2 கொரிந்தியர் 12:10, தி.மொ.
அபூரணங்களைச் சமாளிப்பது
நம்முடைய முதல் மனித பெற்றோரிடமிருந்து அபூரணத்தை நாம் எல்லாரும் சுதந்தரித்திருக்கிறோம். (ரோமர் 5:12) இதன் விளைவாக, வீழ்ந்துபோன மாம்சத்தின் இச்சைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் நாம் இருக்கிறோம். நாம் நினைத்ததைப் பார்க்கிலும் அதிக வல்லமைவாய்ந்த பிடியை, ‘பழைய மனுஷத்’ தன்மைகள் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிவது எவ்வளவாய் மனச்சோர்வூட்டுவதாக இருக்கலாம்! (எபேசியர் 4:22-24) அப்படிப்பட்ட சமயங்களில் அப்போஸ்தலன் பவுலைப்போல் நாம் உணரக்கூடும், அவர் இவ்வாறு எழுதினார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.”—ரோமர் 7:22, 23.
இங்கேயும், யெகோவாவிடமிருந்து வரும் பலத்தை நாம் நமக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட ஒரு பலவீனத்தோடு போராடிக்கொண்டிருக்கையில், அவருடைய மன்னிப்பை ஊக்கமாய்த் தேடி, ஜெபத்தில் அவரிடம் மன்றாடுவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். அதே பிரச்சினையைக் குறித்து மீண்டும் மீண்டும் அவரிடம் நீங்கள் அணுகவேண்டியதாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ‘இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறவரும்,’ உங்கள் உள்ளப்பூர்வத்தின் ஆழத்தைக் காணக்கூடியவருமான யெகோவா, தம்முடைய தகுதியற்ற தயவின் காரணமாக, உங்களுக்கு, சுத்தமாக்கப்பட்ட ஒரு மனச்சாட்சியை அருளுவார். (நீதிமொழிகள் 21:2) மாம்ச பலவீனங்களுக்கு எதிரானப் போராட்டத்தை நீங்கள் மீண்டும் தொடருவதற்கு வேண்டிய பலத்தை, யெகோவா, தம்முடைய பரிசுத்த ஆவியைக்கொண்டு உங்களுக்கு அளிக்க முடியும்.—லூக்கா 11:13.
மற்றவர்களுடைய அபூரணங்களின் நிமித்தமாக வேதனையடைகையில், யெகோவாவிடமிருந்து வரும் பலன் நமக்குத் தேவை. உதாரணமாக, உடன் கிறிஸ்தவர் ஒருவர், யோசனையின்றி “பட்டயக்குத்துகள்போல்” நம்மிடம் பேசலாம். (நீதிமொழிகள் 12:18) இது நம் உள்ளாழத்தில் பாய்ந்து நமக்கு மனவேதனையை உண்டாக்கலாம். முக்கியமாய், தான் செய்வது சரியல்லவென்று அறிந்திருக்கவேண்டிய ஒருவர் அவ்வாறு செய்தால் தாங்கமுடியாததாக இருக்கலாம். நாம் மிக அதிகமாய் மனக்கலக்கம் அடையக்கூடும். யெகோவாவை விட்டு விலகிப்போவதற்கு, இத்தகைய புண்படுத்துதல்களை சாக்குப் போக்காகவும் சிலர் பயன்படுத்தியிருக்கின்றனர்—இது, எல்லாவற்றிலும் மிகப் பெரியதானத் தவறு!
எனினும், மற்றவர்களின் பலவீனங்களைச் சரியான நோக்குநிலையில் சிந்திப்பதற்கு, சமநிலைப்பட்ட மனப்பான்மை நமக்கு உதவிசெய்யும். அபூரண மனிதர்களிடமிருந்து பரிபூரணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே” என்று ஞானியாகிய சாலொமோன் நமக்கு நினைப்பூட்டுகிறார். (1 இராஜாக்கள் 8:46) ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக யெகோவாவை பற்றுறுதியுடன் சேவித்துவந்தவரான, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவராகிய ஆர்த்தர், இவ்வாறு குறிப்பிட்டார்: “உடன் ஊழியர்களில் காணப்படும் பலவீனங்கள், நம்முடைய கிறிஸ்தவ மனவுறுதியைச் சோதிப்பவையாக, கடவுளிடம் நம் உத்தமத்தை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பை நமக்கு உண்டாக்குகின்றன. நாம் யெகோவாவைச் சேவிப்பதில், மனிதர் சொல்பவை அல்லது செய்பவை தலையிடுவதற்கு அனுமதித்தால், மனிதரையே சேவிக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நம்முடைய சகோதரரும் யெகோவாவை நேசிக்கிறார்கள். அவர்களிலுள்ள நல்ல தன்மைகளை நாம் நோக்குகையில், அவர்கள் அவ்வளவு கெட்டவர்கள் அல்ல என்பதை நாம் சீக்கிரத்தில் கண்டுகொள்வோம்.”
பிரசங்கிப்பதற்கான பலம்
பரலோகத்துக்கு எழும்பிப்போவதற்கு முன், இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8.
இயேசுவின் வார்த்தைகளின்படி உண்மையாக, இப்போது பூகோளமெங்கும் 233 நாடுகளில் இந்த ஊழியம் யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது. யெகோவாவைப் பற்றிய அறிவை அடையும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்பவர்களாய், மொத்தமாக, ஒவ்வொரு ஆண்டிலும் 100 கோடிக்கு மேற்பட்ட மணிநேரங்களை அவர்கள் செலவிடுகிறார்கள். இந்த ஊழியத்தை நிறைவேற்றுவது எப்போதும் எளிதாக இருப்பதில்லை. சில நாடுகளில் இந்த ராஜ்ய பிரசங்க ஊழியத்திற்கு தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது. இந்த ஊழியத்தை யார் செய்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்—நலிந்த அபூரண மனிதரே செய்கின்றனர்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய பிரச்சினைகளும் கவலைகளும் உள்ளன. எனினும் இந்த ஊழியம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது; மேலும் அதன் பலனாக, சென்ற மூன்று ஆண்டுகளில், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள், தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதலினால் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். (மத்தேயு 28:18-20) மெய்யாகவே, கடவுளின் பலத்தில்தானே இந்த ஊழியம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தீர்க்கதரிசியாகிய சகரியாவின்மூலமாய் யெகோவா இவ்வாறு சொன்னார்: “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.”—சகரியா 4:6.
நற்செய்தியின் ஒரு பிரஸ்தாபியாக நீங்கள் இருந்தால், இந்த மகத்தான நிறைவேற்றத்தில் நீங்களும் ஒரு பங்குடையோராக இருக்கிறீர்கள்—அது எவ்வளவு சிறிதாகத் தோன்றினாலும் சரிதான். நீங்கள் சகிக்க வேண்டிய ‘முட்கள்’ இருப்பினும், “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும்” யெகோவா மறந்துவிடமாட்டார் என்று நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம். (எபிரெயர் 6:10) ஆகையால் ஆதரவுக்காக, இயற்கையாற்றல் எல்லாவற்றிற்கும் ஊற்றுமூலமாக இருப்பவரில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருங்கள். யெகோவாவின் பலத்தில் மாத்திரமே நாம் சகித்து நிலைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள்; நம்முடைய பலவீனத்தில் அவருடைய பலம் பூரணமாய் விளங்கச் செய்யப்படுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a நிச்சயமாகவே, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”யிருப்பதால், எந்த மனிதராவது கடவுளுடன் ஓர் உறவுக்குள் வர சாத்தியமாயிருப்பது கடவுளுடைய இரக்கத்தின் அத்தாட்சியாகவே உள்ளது.—ரோமர் 3:23.
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவின் பலத்தைக்கொண்டே பிரசங்க ஊழியம் நிறைவேற்றப்படுகிறது