யெகோவா உண்மைப்பற்றுறுதியுடன் செயல்படுகிறார்
பீட்டர் பலிசர் சொன்னபடி
அது டிசம்பர் 1985. கென்யா, நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் நாங்கள் இறங்கும்போது மனக்கிளர்ச்சி மேலோங்கியது. நகரத்துக்குள் வாகனத்தில் செல்கையில், பழக்கப்பட்ட காட்சிகளும் தொனிகளும் எங்கள் மனதில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடின.
“உத்தமத்தைக் காப்போர்” என்ற யெகோவாவின் சாட்சிகளினுடைய மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவதற்காக நாங்கள் கென்யாவுக்கு வந்தோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, எங்கள் பிரசங்க ஊழியத்தின்பேரில் தடையுத்தரவு போடப்பட்டதால், கென்யாவை விட்டு போகும்படி, என் மனைவியும் நானும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தோம். அங்கே நாங்கள் பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்தோம், இது யெகோவாவின் சாட்சிகளினுடைய கிளை அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர். திரும்பச் சென்று பார்க்கும்படி நாங்கள் வந்தபோது, எத்தகைய இன்ப அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருந்தது!
பெத்தேலில் பகல் சாப்பாட்டைத் தயாரிப்பதில் ஓர் இளம் சாட்சி உதவிசெய்துகொண்டு இருந்தாள். இவள் இரண்டு வயது சிறுமியாக இருந்த சமயத்திலிருந்து நாங்கள் இவளை அறிந்திருந்தோம். பெத்தேல் குடும்ப உறுப்பினரில், குறைந்தது ஆறு பேராவது அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோதே நாங்கள் அறிந்தவர்கள். அவர்களை இப்போது பெரியவர்களாகத் தங்கள் குடும்பத்துடனும், ஊழியத்தில் எல்லாரும் இன்னும் சுறுசுறுப்புடனும் இருப்பதைக் காண்பது எத்தகைய மகிழ்ச்சியாயிருந்தது! “உண்மைப்பற்றுறுதியுள்ள ஒருவரிடம் உண்மைப்பற்றுறுதியுள்ளவராக நீர் செயல்படுவீர்” என்ற பைபிளின் இந்த வாக்குக்குப் பொருந்த, நம்முடைய கடவுளாகிய யெகோவா அவர்களைக் காத்துவந்திருந்தார். (2 சாமுவேல் 22:26, NW) நான் இளைஞனாயிருந்த என்னுடைய வாழ்க்கைக்கும், இந்த இளைஞர் நடத்தும் பயனுள்ள வாழ்க்கைக்கும் இடையே எத்தகைய வித்தியாசத்தை நான் கண்டேன்!
நோக்கமில்லாத இளம் வயது வாழ்க்கை
இங்கிலாந்து, ஸ்கார்பரோவில், ஆகஸ்ட் 14, 1918-ல் நான் பிறந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் என் தாயும் மாற்றாந்தாய் மகளான என் சகோதரியும் கனடாவுக்குச் சென்றுவிட்டார்கள்; ஆகையால் அடுத்த மூன்று ஆண்டுகள் என் தகப்பனுடன், அவருடைய தாயுடனும் சகோதரியுடனும் வாழ்க்கையைக் கழித்தேன். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் தாய் என்னை யாருக்கும் தெரியாமல் கனடாவிலுள்ள மான்ட்ரீலுக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, என் தகப்பனிடம் இருந்துகொண்டு, பள்ளிக்குச் செல்லும்படி என்னை இங்கிலாந்துக்கு மறுபடியும் அனுப்பிவிட்டார்கள்.
ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என் தாயும் மாற்றாந்தாய் மகளான சகோதரியும் எனக்குக் கடிதம் எழுதிவந்தார்கள். நான் நல்ல பிரஜையாக, அரசருக்கும் நாட்டுக்கும் உண்மைப்பற்றுறுதியுள்ளவனாக இருக்கும்படியானத் தங்கள் விருப்பத்தை, கடிதங்களின் முடிவில் எழுதுவார்கள். தேசாபிமானமும் போரும் தவறென நம்பினதாக நான் எழுதினதால், என் பதில்கள் அவர்களுக்கு ஒருவேளை ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். எனினும், என் பருவவயது காலத்தின்போது, தெளிவான எந்த வழிநடத்துதலும் இல்லாததால், நான் எந்தக் குறிக்கோளுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.
பின்பு, இரண்டாவது உலகப் போர் தொடங்குவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பாக, ஜூலை 1939-ல், பிரிட்டிஷ் படையில் சேரும்படி நான் தெரிந்தெடுக்கப்பட்டேன். எனக்கு 20 வயதே ஆகியிருந்தது. என் படை வகுப்பணி, வட பிரான்ஸுக்கு விரைவில் அனுப்பப்பட்டது. ஜெர்மன் விமானங்கள் எங்களைத் தாக்கினபோது, இளைஞர்களான நாங்கள், எங்கள் துப்பாக்கிகளில் குறிபார்த்து அவற்றைச் சுட்டோம். அது கிலியூட்டும் ஒரு வாழ்க்கையாக இருந்தது. முன்னேறிக்கொண்டுவந்த ஜெர்மன் படைக்கு முன்னால் நாங்கள் பின்வாங்கினோம். ஜூன் 1940-ன் முதல் வாரத்தின்போது டன்கெர்க்கில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். முழு பட்டாளத்தின் செத்தப் பிணங்கள் கடற்கரையில் சிதறிக் கிடந்த காட்சியைப் பெரும் திகிலுடன் நான் இன்னும் நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் கோரமான காட்சியிலிருந்து விடுபட்டு, சரக்கேற்றிச் செல்லும் ஒரு சிறு கப்பலில் கிழக்கு இங்கிலாந்திலுள்ள ஹார்விச்சுக்கு வந்து சேர்ந்தேன்.
அடுத்த ஆண்டு, மார்ச் 1941-ல், நான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டேன். அங்கே, விமானத்தின் திசைகாட்டும் கருவி மெக்கானிக்காக பயிற்சியைப் பெற்றேன். தொற்றுநோயின் விளைவாக சிறிது காலம் மருத்துவமனையில் இருந்த பின்பு, இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில் இருந்த ஒரு படை தொகுதிக்கு நான் மாற்றப்பட்டேன். வீட்டிலிருந்து தொலைதூரத்திலும் இன்னும் நல்ல சுகமில்லாமலும் இருந்த நான், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். நாம் இறக்கும்போது நமக்கு என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றி முக்கியமாய்ச் சிந்திக்க ஆரம்பித்தேன்.
புதிய முறையில் உண்மைப்பற்றுறுதியைக் காட்டுதல்
டெல்லியில் இருந்தபோது பேர்ட் கேல் என்ற உடன்தோழரான ஒரு ஆங்கிலேயர் என் அறைத்தோழராக இருந்தார். “மதம் பிசாசினால் உண்டாயிற்று” என்று ஒருநாள் அவர் சொன்னார். இந்தக் குறிப்பு என் அக்கறையைத் தூண்டிற்று. அவருடைய மனைவி, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆகியிருந்தார்கள். அவ்வப்போது பைபிள் பிரசுரங்களை அவருக்கு அனுப்பிவந்தார்கள். இவற்றில் ஒன்றான, நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற சிறிய புத்தகம், என் அக்கறையைக் கவர்ந்தது. உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைப் பற்றிய அதன் விளக்கம் உண்மையான மன சமாதானத்துக்குரிய உணர்ச்சியை எனக்கு அளித்தது.
1943-ன் தொடக்கத்தில் ஒரு சமயம், படையிலிராத ஆங்கில-இந்தியரான டெடி க்ரூபெர்ட் என்பவரிடம் பேர்ட் பேசினார். இராணுவ மூலதளத்தில் இவர் எங்களுடன் வேலை செய்தார். டெடி க்ரூபெர்ட் ஒரு சாட்சியாக இருந்தார் என்பதை நாங்கள் அறிந்தபோது அது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. 1941-ல், யெகோவாவின் சாட்சிகளினுடைய பிரசுரங்களுக்குத் தடையுத்தரவு போடப்பட்டிருந்தபோதிலும், டெல்லியில் சாட்சிகளால் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்தச் சிறிய சபையிலேயே, உண்மையான அன்பார்வமுள்ள தோழமையை, என் வாழ்க்கையில் முதல் தடவையாகக் கண்டேன். கிரீஸிலிருந்து வந்தவரான ஒரு முதிர்ந்த கிறிஸ்தவ சகோதரர் பேஸில் ட்சாடாஸ், என்னில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்து, என் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நாம் ஏன் முதிர்வயதாகி இறக்கிறோம், உயிர்த்தெழுதல், கடவுள் வாக்குக்கொடுத்த நீதியுள்ள புதிய உலகம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுக்குத் தெளிவான பைபிள் விடைகளை அவர் அளித்தார்.—அப்போஸ்தலர் 24:15; ரோமர் 5:12; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.
சமாதானம்—அது நிலைத்திருக்குமா? (ஆங்கிலம்) என்ற, 1942-ல் பிரசுரிக்கப்பட்ட சிறு புத்தகம், முக்கியமாய் என் அக்கறையைக் கவர்ந்தது. “சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம்” இந்தச் சர்வதேச சங்கமே என அது அடையாளம் காட்டிற்று. (வெளிப்படுத்துதல் 17:3, NW) வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரம், 11-ம் வசனத்தை மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டு, இந்தச் சிறிய புத்தகம் இவ்வாறு சொன்னது: “இந்தச் சர்வதேச சங்கமே ‘இருந்ததும் இராததும்’ என்று இப்போது சொல்ல முடியும்.” மேலும் தொடர்ந்து அது சொன்னதாவது: “உலக தேசங்களின் இந்தக் கூட்டுறவு மறுபடியும் தோன்றும்.” 1945-ல், அதாவது மூன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிற்பாடு, சரியாய் இதுவே நடந்தது; ஐக்கிய நாட்டு சங்கம் அப்போது ஸ்தாபிக்கப்பட்டது!
சாட்சிகளின் பிரசுரங்களுக்குத் தடையுத்தரவு போடப்பட்டிருந்த காலத்தின்போது, நான் புதிதாகக் கண்டடைந்த என் நண்பர்களுக்கு உதவிசெய்ய முடிந்தது. சமாதானம்—அது நிலைத்திருக்குமா? என்ற சிறிய புத்தகங்கள் அடங்கிய ஒரு கார்ட்டன் வந்துசேரும்போது, அதைப் பத்திரமாய் வைப்பதற்கு சபை என்னிடம் அதைக் கொடுத்துவிடும். தடையுத்தரவு போடப்பட்ட பிரசுரங்கள் இருக்கின்றனவா என இராணுவ முகாமில் சோதனைபோடும்படி யார் நினைப்பார்கள்? கூட்டங்களுக்கு நான் ஆஜரான ஒவ்வொரு சமயத்திலும், சகோதரருக்குத் தொடர்ந்து அளித்துக்கொண்டிருப்பதற்காக சிறிய புத்தகங்கள் சிலவற்றை என்னோடு எடுத்துச் சென்றேன். தங்கள் வீடுகளைச் சோதனையிடுவார்கள் என்று சகோதரர்கள் பயந்தபோது, அவர்களுடைய சொந்த பைபிள் பிரசுரங்களையுங்கூட நான் ஒளித்துவைத்தேன். கடைசியாக, டிசம்பர் 11, 1944-ல் தடையுத்தரவு நீக்கப்பட்டது.
1943-ல் எங்கள் படைப் பகுதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின்போது, கிறிஸ்தவ போதகங்களுக்கான என் உண்மைப்பற்றுறுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டிசம்பரின் குளிர்காலத்தில் இயேசு பிறக்கவில்லை என்றும், பூர்வ கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை என்றும் நான் கற்றறிந்திருந்ததால், அதில் பங்குகொள்ள மறுத்துவிட்டேன்.—ஒப்பிடுக: லூக்கா 2:8-12.
“ஐக்கியப்பட்ட அறிவிப்பாளர்” மாநாடு, ஜபல்பூரில் 1944-ன் டிசம்பர் 27-லிருந்து 31 வரையாக நடத்தப்பட்டபோது, ஆஜராகியிருந்த ஏறக்குறைய 150 பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மாநாட்டுப் பிரதிநிதிகளில் பலர் டில்லியிலிருந்து ரயில் வண்டியில் பயணப்பட்டனர்; இது 600 கிலோமீட்டருக்கு மேற்பட்ட ஒரு பயணம். அந்தத் திறந்தவெளி பின்னணியில் யெகோவாவின் அமைப்பு செயல்படுவதை நான் கண்டு அனுபவித்த அதிசயமான சூழ்நிலையை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
பள்ளிக்கூடங்களின் நீண்ட படுக்கை அறைகளில் இந்த மாநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்கு இடமளிக்கப்பட்டனர். அங்கு நாங்கள் ராஜ்ய பாட்டுகளைப் பாடி, சந்தோஷமான கிறிஸ்தவ தோழமையை அனுபவித்து மகிழ்ந்தோம். அந்த மாநாட்டின்போது, வெளிப் பிரசங்க ஊழியத்தில் நான் பங்குகொள்ளத் தொடங்கினேன். அப்போதிருந்து இந்த ஊழியம், என் இருதயத்தில் மிக அருமையானதாக எப்போதும் நிலைத்துவந்திருக்கிறது.
இங்கிலாந்தில் முழுநேர ஊழியம்
1946-ல் நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று, உல்வெர்ட்டன் சபையுடன் கூட்டுறவுகொள்ளத் தொடங்கினேன். ஏறக்குறைய ராஜ்ய பிரஸ்தாபிகள் பத்து பேர் மாத்திரமே எங்கள் சபையில் இருந்தபோதிலும், சொந்தக் குடும்பத்தாருக்குள் இருப்பதைப்போல் இவர்கள் என்னை உணரச் செய்தனர். இந்தியாவிலிருந்த என் சகோதரருக்குள் நான் அனுபவித்திருந்த அதே மனத்திருப்தியை அனுபவித்தேன். சபையில் வீரா க்ளிஃப்டன், உண்மையான, அன்பார்ந்த இருதயத்தையுடைய நபராகத் தோன்றினாள். முழுநேர ஊழியர்கள் அழைக்கப்பட்டபடி, ஒரு பயனியராக இருக்கும்படியான என் ஆவல் அவளுக்கும் இருந்ததை நான் அறிந்தபோது, மே 24, 1947-ல் நாங்கள் மணம் செய்துகொண்டோம். ஒரு காரவானை, அதாவது, நகரும் வீட்டைப்போன்று அமைக்கப்பட்ட வண்டியை நான் ஒழுங்குசெய்து கொண்டேன். அடுத்த ஆண்டில் எங்கள் முதல் பயனியர் ஊழிய நியமிப்பை நாங்கள் பெற்றோம், அதுவே நாட்டுப்புற பட்டணமாகிய ஹன்டிங்டன்.
அக்காலங்களில், நாட்டுப்புற பிராந்தியங்களுக்கு எங்கள் சைக்கில்களில் விடியற்காலமே புறப்பட்டு சென்றோம். நடுப்பகலில் ரொட்டித்துண்டுகளை விரைவாகச் சாப்பிடுவதற்குச் செலவிட்ட நேரம் மட்டுமே எங்கள் முழுநாள் பிரசங்க ஊழியத்தைச் சற்று நிறுத்தியது. எவ்வளவு மும்முரமான எதிர்காற்று வீச்சிலும், கடும் மழையிலும் சைக்கிளை ஓட்டிக்கொண்டு நாங்கள் வீட்டுக்குத் திரும்பிவந்து சேர்ந்தாலும், கர்த்தருடைய ஊழியத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடனும் மனத்திருப்தியுடனும் இருந்தோம்.
காலப்போக்கில் எங்கள் ஊழியத்தை மேலும் பரவலாகச் செய்யவும், மற்ற நாடுகளிலுள்ள ஜனங்களோடு ‘நற்செய்தியைப்’ பகிர்ந்துகொள்ளவும் ஆவல்கொண்டோம். (மத்தேயு 24:14, NW) ஆகையால், அ.ஐ.மா. நியூ யார்க், தென் லான்ஸிங்கிலுள்ள கிலியட் மிஷனரி பள்ளியில் பயிற்சிபெறுவதற்காக விண்ணப்ப மனு அனுப்பினோம். கடைசியாக, கிலியட் பள்ளியின் 26-வது வகுப்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டோம்; அது பிப்ரவரி 1956-ல் நிறைவடைந்து பட்டமளித்தது.
ஆப்பிரிக்காவில் விரிவாக்கப்பட்ட ஊழியம்
ஆப்பிரிக்காவிலுள்ள வட ரொடீஷியா (இப்போது ஜாம்பியா) எங்கள் மிஷனரி ஊழிய நியமிப்பாக இருந்தது. நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தவுடன், அந்த நாட்டிலிருந்த பெத்தேலில் சேவிக்கும்படி அழைக்கப்பட்டோம். பெத்தேலில் என் வேலையின் பாகமாக, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்த சபைகள் சம்பந்தப்பட்ட கடிதத்தொடர்புகளை நான் கவனித்து வந்தேன். 1956-ல், கென்யா—கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று—நான்கு சாட்சிகளை மாத்திரமே உடையதாக இருந்தது. அதேசமயத்தில் வட ரொடீஷியாவில் 24,000-த்திற்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். தேவை அதிகப்பட்ட இடத்தில் சேவிப்பது எவ்வளவு சிறந்ததாயிருக்குமென்று வீராவும் நானும் சிந்திக்கத் தொடங்கினோம்.
பின்பு, எதிர்பாராத வகையில், கிலியட் பள்ளிக்கு மற்றொரு அழைப்பை நான் பெற்றேன். இந்தச் சமயத்தில் இது, கிளை அலுவலகங்களில் சேவிக்கும் கண்காணிகளுக்குரிய பத்து மாத நீடிப்பு பயிற்சிக்கானதாகும். வட ரொடீஷியாவில் வீராவை விட்டுவிட்டு, அப்போது கிலியட் பள்ளி இருந்த இடமாகிய நியூ யார்க்குக்குப் பயணப்பட்டேன். நவம்பர் 1962-ல் அந்தப் பயிற்சிபெற்று முடித்தப் பின்பு, கென்யாவில் கிளை அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும்படி நியமனம் பெற்றேன். இந்தச் சமயத்திற்குள் கென்யா நூறுக்கு மேற்பட்ட சாட்சிகளை உடையதாக இருந்தது.
வீராவைச் சந்திக்கும்படி வட ரொடீஷியாவுக்கு நான் திரும்புகையில், கென்யாவிலுள்ள நைரோபியில் பயணத்தை சிறிது நிறுத்தும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது, கிலியட் பள்ளியின் 25-வது வகுப்பில் தேறியவரான, பில் நிஸ்பெட் என்னைச் சந்தித்து, கென்யாவுக்குள் உடனடியாகப் பிரவேசிப்பதற்கு அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற ஒரு வாய்ப்பு இருந்ததென்று என்னிடம் சொன்னார். இதைப் பெறுவதற்கு, குடியேற்ற அதிகாரிகளிடம் நாங்கள் சென்றோம். கென்யாவில் நாங்கள் ஐந்து ஆண்டுகள் இருப்பதற்கான அனுமதியைச் சில நிமிடங்களுக்குள் நான் பெற்றுக்கொண்டேன். ஆகையால் வட ரொடீஷியாவுக்கு நான் திரும்பி செல்லவேயில்லை, மாறாக வீரா, நைரோபிக்கு வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.
எங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட ஸ்வாஹிலி மொழி பயிற்றுவிப்பு திட்டத்தை முடித்தப் பின்பு, அந்தச் சிறிய நைரோபி சபையுடன் சேர்ந்து ஊழியத்துக்குச் சென்றோம். சில சமயங்களில், எங்கள் ஸ்வாஹிலி பிரசங்கத்தை நாங்கள் வாசித்து முடித்தவுடன், அந்த வீட்டுக்காரர், “எனக்கு இங்லிஷ் தெரியாது!” என்று சொல்லுவார். இருந்தபோதிலும், நாங்கள் விடாமல் முயற்சி செய்து, மொழி சம்பந்தப்பட்ட இந்த இடையூறை படிப்படியாக மேற்கொண்டோம்.
எங்கள் பிராந்தியம், பல தொகுதி வீடுகள் அடங்கியதாக இருந்தது. இந்தத் தொகுதிகள் எருசலேம், எரிகோ போன்ற பைபிள் பெயர்களைக் கொண்டவையாக இருந்தன. ஆட்கள் அக்கறை காட்டி, விரைவில் முன்னேறினர். இந்தப் பகுதிகளில் பலர் ராஜ்ய பிரஸ்தாபிகளாக ஆனார்கள். இந்த ஆட்களின்மீது பைபிளின் சத்தியம் எப்பேர்ப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியது! ராஜ்யத்தினிடமாக உண்மைப்பற்றுறுதி, யெகோவாவின் ஜனங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டுவந்தபோது, உயர்குல மரபினர் என்பதைப்போன்ற உணர்ச்சிகள் ஒழிந்துபோயின. கலப்பு குலமரபு திருமணங்களுங்கூட சாட்சிகளுக்குள் நடந்தேறின. சாட்சிகளாக இல்லாதவர்களுக்குள் இது வெகு அரிதான ஒன்றாகும்.
புதியவர்களான ராஜ்ய அறிவிப்பாளர்கள் சத்தியத்தை ஆர்வத்துடன் பின்பற்றினர். உதாரணமாக சாம்ஸன் என்பவர் தானிருந்த வட்டாரத்திற்குள் பைபிள் சத்தியம் பரவவேண்டுமென்று அவ்வளவு ஆர்வம் மிகுந்தவராக இருந்ததனால், பயனியர்கள் அங்கு அனுப்பப்பட வேண்டுமென்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். உண்மையில், தங்குவதற்கான இடவசதிகளை அவர்களுக்கு அளிப்பதற்காக, யுக்காம்பேனி பகுதியில் இருந்த தன் வீட்டோடு ஒரு தொடர்பகுதியை அவர் கட்டினார். ராஜ்ய அறிவிப்பாளர்களின் ஒரு புதிய சபை அங்கு விரைவில் ஸ்தாபிக்கப்பட்டது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடாகிய எதியோபியாவில் இருந்த நம் சகோதரர்களை நான் பலதடவை சென்று சந்தித்தேன்; பலமுறை சிறைப்படுத்தப்பட்டும், அடிக்கப்பட்டும், குற்றம் சாட்டுவதற்கு இடைவிடாமல் கண்காணிக்கப்பட்டும் வந்ததன் மத்தியிலும், மாதந்தோறும் சராசரி 20 மணிநேரங்களுக்கு மேலாக ஊழியத்தில் அவர்கள் செலவிட்டு வந்தார்கள். ஒருமுறை, கென்யாவில் நடந்த மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகும்படி, இரண்டு பஸ்கள் நிறைய எதியோபிய சகோதரர்களும் சகோதரிகளும், அபாயகரமான மலைக் கணவாய்களைக் கடந்து, ஒரு வாரமளவாகப் பயணப்பட்டனர். ராஜ்ய பிரசுரங்கள் தங்கள் நாட்டில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதில் அவர்களுடைய வழிகாணும் திறமை தனிப்பட கவனிக்கத்தக்கதாக இருந்தது. அவற்றை அவர்களுக்குத் தொடர்ந்து அளித்துவரும்படி உதவி செய்வதில் கென்யாவிலிருந்த நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
1973-ல், கென்யாவில் நம்முடைய ஊழியத்தின்பேரில் அதிகாரப்பூர்வ தடையுத்தரவு ஒன்று போடப்பட்டது; நாட்டை விட்டு வெளியேறும்படி மிஷனரிகள் வற்புறுத்தப்பட்டனர். அதற்குள்ளாக, 1,200-க்கு மேற்பட்ட சாட்சிகள் கென்யாவில் இருந்தனர். மறக்கமுடியாத வழியனுப்புதலுக்காக இவர்களில் பலர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் அங்கு வந்திருந்தது, நாங்கள் நாடறிந்த ஏதோ பெரும் புகழ்பெற்றவர்களோ என்று உடன்பயணி ஒருவர் கேட்கும்படி தூண்டியது. வீராவும் நானும் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றோம்; அங்கே ஒரு ஊழிய நியமிப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது, ஆனால் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல நாங்கள் அதிக ஆவலுடன் இருந்தோம்.
ஆப்பிரிக்காவுக்குத் திரும்புதல்
இவ்வாறு, சில மாதங்களுக்குப் பின், மேற்கு ஆப்பிரிக்க நாடாகிய கானாவின் தலைநகர் அக்ராவிலுள்ள பெத்தேலுக்குச் செல்லும்படியான எங்கள் புதிய ஊழிய நியமிப்பைப் பெற்றோம். இங்கு என் வேலை நியமிப்புகளில் ஒன்று, நம் சகோதரர்கள் அங்கு எதிர்ப்பட்ட இக்கட்டுகளை நேருக்குநேர் காணும்படி என்னைச் செய்தது. பெத்தேல் குடும்பத்திற்கான உணவுப்பொருட்களையும் தேவையான மற்ற பொருட்களையும் வாங்குவதை நான் கவனித்துவந்தபோது, உணவுப்பொருட்களின் அளவுகடந்த விலையைக் குறித்து ஆச்சரியப்பட்டேன். அத்தியாவசியப் பொருட்களை ஒருவர் அடிக்கடி வாங்க முடியாமல் போனது. பெட்ரோல் கிடைக்காமலும், வாகனங்களை சரிசெய்வதற்கு மாற்றுப் பாகங்கள் கிடைக்காமலுமிருந்தது இன்னும் கூடுதலான பிரச்சினைகளைக் கொண்டுவந்தது.
பொறுமையாக இருப்பதன் முக்கியத்துவத்தை நான் கற்றுக்கொண்டேன். இது, கானாவிலிருந்த நம் சகோதரர் தங்களில் பெருகச் செய்திருந்த குணங்களில் ஒன்றாக இருந்தது. வாழ்க்கைக்கான அத்தியாவசியப் பொருட்களை இலஞ்சம் கொடுத்து வாங்குவதற்கான இந்தச் சோதனைக்கு அவர்கள் உடன்படாமல் இருந்து, மகிழ்ச்சியுள்ள மனநிலையைக் காத்துவந்ததைக் காண்பது அவ்வளவு மிக ஊக்கமூட்டுவதாக இருந்தது. இதன் பலனாக, கானாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் நேர்மையுள்ளவர்களாக யாவராலும் அறியப்பட்டு, அதிகாரிகள் பலரிடம் நற்பெயரைப் பெற்று மகிழ்ந்தனர்.
எனினும், பொருளாதார குறைபாடுகளின் மத்தியிலும், ஆவிக்குரிய செழுமை பெருகிக்கொண்டே வந்தது. அந்த நாடு முழுவதிலும், பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும், நம்முடைய பிரசுரங்கள் காணப்பட்டன. மேலும், 1973-ல் நாங்கள் வந்துசேர்ந்தபோது இருந்த ராஜ்ய அறிவிப்பாளரின் எண்ணிக்கை, 17,156-லிருந்து 1981-ல் 23,000-த்திற்கு மேலாகப் பெருகினதை நாங்கள் கண்டோம். அந்த ஆண்டில் என் தோலில் உண்டான புற்றுநோய், முறைப்படியான சிகிச்சைக்காக நாங்கள் கானாவை விட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லும்படி எங்களை வற்புறுத்தியது. இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதிக வெப்பத்தில் பல ஆண்டுகள் இருந்ததால் இது மேலும் மோசமாகியது என்பதில் சந்தேகமில்லை.
இங்கிலாந்தில் புதிய சூழ்நிலைமைகள்
நான் திரும்பிவந்ததானது, என் ஊழியத்தில் பொருத்தமான பல மாற்றங்கள் செய்வதைக் குறித்தது. கடவுளையும் பைபிளையும் மதித்த ஆட்களுடன் எளிதாய்ப் பேசுவதில் நான் அதிகமாகப் பழக்கப்பட்டிருந்தேன். ஆனால் லண்டனில், அத்தகைய மனப்பான்மையை நான் காண்பது அரிதாயுள்ளது. பிரிட்டனிலிருந்த சகோதரரின் விடாமுயற்சியைக் கண்டு வியப்படைகிறேன். ஆவிக்குரியப் பிரகாரமாய்த் “தோய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருக்கிற ஆட்களுக்காக மேலுமதிக ஒற்றுணர்வை நம்மில் பெருகச் செய்வதன் தேவையைக் காணும்படி இது என்னைச் செய்வித்தது.—மத்தேயு 9:36.
ஆப்பிரிக்காவிலிருந்து நாங்கள் திரும்பிவந்த பின்பு, வீராவும் நானும் ஒன்றாக லண்டன் பெத்தேலில் சேவித்தோம். செப்டம்பர் 1991-ல் தன்னுடைய 73-வது வயதில் வீராவின் மரணம் வரையாக அவ்வாறு சேவித்தோம். அத்தனை பல ஆண்டுகளாக, ஊழியத்தில் என்னோடு இணையாக நெருங்கியிருந்து உழைத்த அத்தகைய உண்மையுள்ள துணையின் இழப்பைச் சமாளிப்பது எளிதாக இருக்கவில்லை. அவள் இல்லாக்குறையை நான் மிக அதிகமாய் உணருகிறேன். ஆனால், ஏறக்குறைய 250 உறுப்பினரைக்கொண்ட எங்கள் பெத்தேல் குடும்பத்திலிருந்து நான் பெறும் சிறந்த ஊக்கமூட்டுதலுக்காக சந்தோஷப்படுகிறேன்.
யெகோவாவின் அமைப்பு முன்னேறுவதை அனுபவிப்பதையும், முழுநேர ஊழியத்தை, மிகப் பலர் தங்கள் வாழ்க்கைமுறையாக ஆக்கிக்கொள்வதைக் காண்பதையும் ஒரு சிலாக்கியமாக மெய்யாகவே கருதுகிறேன். இதைப் பார்க்கிலும் மேம்பட்ட வாழ்க்கைமுறை வேறு எதுவும் இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியாய்ச் சொல்ல முடியும்; ஏனெனில் “யெகோவா . . . தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ளோரைக் கைவிடமாட்டார்.”—சங்கீதம் 37:28, NW.
[பக்கம் 23-ன் படம்]
1947-லிருந்து 1955 வரையில் இங்கிலாந்தில் நாங்கள் பயனியர் ஊழியம் செய்தோம்
[பக்கம் 23-ன் படம்]
இந்தியாவில் ஒரு மாநாட்டின்போது ஊழியத்தில் முதல் தடவையாக
[பக்கம் 23-ன் படம்]
வட ரொடீஷியாவில் நாங்கள் மிஷனரிகளாக இருந்தபோது
[பக்கம் 23-ன் படம்]
12 ஆண்டுகளாக நாங்கள் பார்க்காதிருந்த நண்பர்களுடன், 1985-ல்