வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மே 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 4-6
“நாங்கள் சோர்ந்துபோவதில்லை”
சோர்வாக இருந்தாலும் சோர்ந்து விடுவதில்லை
16 நம் ஆன்மீக ஆரோக்கியத்தை கவனிப்பதும் மிக மிக முக்கியம். யெகோவா தேவனுடன் நமக்கு நெருங்கிய உறவு இருக்கும்போது, நம் உடல் சோர்வடைந்தாலும், அவரை வணங்குவதில் நாம் சோர்வடையவே மாட்டோம். யெகோவா ‘சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமை இழந்தவருக்கு ஊக்கம் பெருகச் செய்கின்றார்.’ (ஏசாயா 40:28, 29, பொ.மொ.) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் அனுபவத்தில் கண்டிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.”—2 கொரிந்தியர் 4:16.
17 இந்த வசனத்தில் “நாளுக்கு நாள்” என்ற வார்த்தையை கவனியுங்கள். யெகோவா அளிக்கும் காரியங்களை அனுதினமும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. ஒரு மிஷனரியாக 43 ஆண்டுகள் உண்மையோடு சேவித்த ஒரு சகோதரி, சரீர சோர்வையும் மனச்சோர்வையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை. அவர் இவ்வாறு கூறுகிறார்: “எந்த வேலையையும் ஆரம்பிக்கும் முன், யெகோவாவிடம் ஜெபிப்பதற்காகவும் அவருடைய வார்த்தையை படிப்பதற்காகவும் காலையில் சீக்கிரமாகவே எழும்புவதை பழக்கமாக்கிக் கொண்டேன். இதை அன்றாடம் செய்வது இன்று வரையில் சகித்திருக்க எனக்கு உதவியிருக்கிறது.” தவறாமல், ஆம், “நாளுக்கு நாள்” யெகோவாவிடம் ஜெபம் செய்து, அவரது உயர்ந்த பண்புகளையும், அவர் கொடுத்த வாக்குறுதிகளையும் தியானித்தால் நாமும்கூட அவரது ஆதரவளிக்கும் வல்லமையில் நம்பிக்கையோடு இருக்கலாம்.
it-1-E 724-725
சகிப்புத்தன்மை
பாவமே இல்லாமல் என்றென்றும் வாழப்போகும் நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்த நம்பிக்கையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். நம்மைத் துன்புறுத்துகிறவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால்கூட இந்த நம்பிக்கை நிறைவேறாமல் போகாது. (ரோ 5:4, 5; 1தெ 1:3; வெளி 2:10) நமக்கு இருக்கும் இந்த அருமையான நம்பிக்கையோடு ஒப்பிடும்போது, நாம் இப்போது படுகிற கஷ்டங்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். (ரோ 8:18-25) என்றென்றும் நாம் அனுபவிக்கப்போகிற வாழ்க்கைக்குப் பக்கத்தில் இப்போது நாம் அனுபவிக்கிற எப்படிப்பட்ட வேதனையும் ‘லேசானது, நொடிப்பொழுது மட்டுமே இருக்கும்’ என்பதை நாம் ஞாபகம் வைக்க வேண்டும். (2கொ 4:16-18) அதோடு, நம் நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது, நாம் சோர்ந்துபோகாமல், கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையோடு இருப்போம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w12-E 2/1 28-29
“யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துங்கள்”
ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் டேவிட் ஸ்ப்ளேன், 2 கொரிந்தியர் 4:7-ன் அடிப்படையில் பேச்சுக் கொடுத்தார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொக்கிஷம் எது? அறிவா அல்லது ஞானமா? இரண்டுமே இல்லை என்று அவர் சொன்னார். ‘சத்தியத்தைத் தெரியப்படுத்துகிற’ ‘ஊழியத்தைத்தான்’ பவுல் இங்கு பொக்கிஷம் என்று சொன்னதாக சகோதரர் ஸ்ப்ளேன் விளக்கினார். (2 கொரிந்தியர் 4:1, 2, 5) ஐந்து மாத கிலியட் படிப்பு, ஊழியத்தில் கிடைக்கப்போகும் விசேஷ நியமிப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தியிருப்பதாக சகோதரர் ஸ்ப்ளேன் ஞாபகப்படுத்தினார். அந்த நியமிப்பை அவர்கள் பொக்கிஷமாக மதிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
‘மண்பாத்திரங்கள்’ நம் உடலைக் குறிப்பதாகச் சகோதரர் விளக்கினார். மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தையும், தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தையும் அவர் வித்தியாசப்படுத்திக் காட்டினார். தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தை நாம் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டோம். ஆனால், மண்பாத்திரங்களைப் பல வேலைகளுக்காகப் பயன்படுத்துவோம்; அதற்காகத்தான் அவை உருவாக்கப்படுகின்றன. தங்கப் பாத்திரத்தில் பொக்கிஷத்தை வைத்தால், பாத்திரத்தின் மீதும் கவனம் போகும், பொக்கிஷத்தின் மீதும் கவனம் போகும். அதனால், “மாணவர்களே! மிஷனரி ஊழியம் செய்றப்போ, உங்க மேல கவனம் வராத மாதிரி பாத்துக்கோங்க. மக்கள யெகோவாகிட்ட வழிநடத்துங்க. நீங்க சாதாரண மண்பாத்திரங்கள்தான்னு ஞாபகம் வெச்சுக்கோங்க” என்று சகோதரர் ஸ்ப்ளேன் சொன்னார்.
w09 11/15 21 ¶7
சகோதர அன்பை அதிகமதிகமாய்க் காட்டுங்கள்
7 நம்மைப் பற்றி என்ன? சகோதர அன்பைக் காட்டுவதில் நாம் எப்படி நம் ‘இதயக் கதவை அகலத் திறக்கலாம்’? ஒத்த வயதினரிடமோ ஒரே பின்னணியைச் சேர்ந்தவர்களிடமோ சகோதர அன்பைக் காட்டுவது நமக்குச் சுலபமாக இருக்கலாம். அல்லது, நமக்குப் பிடித்த பொழுதுபோக்கை விரும்புகிறவர்களோடு அதிக நேரம் செலவழிக்க நாம் விரும்பலாம். ஆனால், நாம் இப்படிச் செய்வது மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கிறதென்றால், அன்பெனும் ‘இதயக் கதவை அகலத் திறக்க’ வேண்டும் என்றே அர்த்தம். ஆகையால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது ஞானமாக இருக்கும்: ‘எனக்கு நெருக்கமாக இல்லாத சகோதர சகோதரிகளோடு எப்போதாவது மட்டுமே ஊழியத்திலும் பொழுதுபோக்கிலும் கலந்துகொள்கிறேனா? சபைக்கு வருகிற புதிய ஆட்கள் என்னுடைய நண்பராக ஆவதற்கு முதலில் தகுதி பெறட்டும் என்று நினைத்துக்கொண்டு அவர்களுடன் ஒட்டாமலே இருக்கிறேனா? சிறியவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லாரிடமும் ராஜ்ய மன்றத்தில் வாழ்த்துச் சொல்கிறேனா?’
மே 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 7-10
“நம் நிவாரண ஊழியம்”
“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்”
முதலாவது, மக்கெதோனியரைப் பற்றி கொரிந்தியருக்கு பவுல் எழுதினார். அவர்களுடைய நிவாரண நடவடிக்கையை மெச்சினார். “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்” என்று பவுல் எழுதினார். கொடுக்கும் விஷயத்தில் மக்கெதோனியரை எவரும் தூண்ட வேண்டிய அவசியமில்லை. அதற்குமாறாக, ‘தங்கள் உபகாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்’ என்று பவுல் சொன்னார். மக்கெதோனியர் ‘கொடிய வறுமையில்’ (NW) தவித்தபோதிலும், உற்சாகமாய்க் கொடுத்தது மிகவும் மெச்சத்தகுந்தது.—2 கொரிந்தியர் 8:2-4.
நிவாரண ஊழியம்
அது கி.பி. 46-ஆம் வருஷம். யூதேயாவில் இருப்பவர்கள் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். உணவுப் பொருள்கள் குறைவாக இருப்பதால் அவை அதிக பணத்துக்கு விற்கப்படுகின்றன. அதனால், யூதக் கிறிஸ்தவர்களால் அவற்றை வாங்க முடிவதில்லை. அவர்களுடைய முகங்கள் பசியில் வாடிப்போய் இருக்கின்றன. ஆனால், கிறிஸ்துவின் வேறெந்த சீஷர்களுக்கும் அதுவரை கிடைக்காத ஒரு உதவியை அவர்கள் சீக்கிரத்தில் யெகோவாவிடமிருந்து பெறவிருந்தார்கள். அது என்ன?
நிவாரண ஊழியம்
4 கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய இரண்டு விதமான ஊழியத்தை பவுல் விளக்கினார். அவர் அந்தக் கடிதத்தைப் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருந்தாலும் அதில் அவர் சொன்ன வார்த்தைகள் கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளுக்கும்’ பொருந்தும். (யோவா. 10:16) பவுல் குறிப்பிட்ட இரண்டு ஊழியங்களில் ஒன்று ‘சமரசமாக்கும் ஊழியம்,’ அதாவது பிரசங்கிப்பதும் கற்பிப்பதும். (2 கொ. 5:18-20; 1 தீ. 2:3-6) மற்றொன்று, சக கிறிஸ்தவர்களுக்காக நாம் செய்யும் ஊழியம். அதைத்தான், ‘நிவாரண ஊழியம்’ என்று பவுல் குறிப்பிட்டார். (2 கொ. 8:4) ‘சமரசமாக்கும் ஊழியம்,’ ‘நிவாரண ஊழியம்’ ஆகிய சொற்றொடர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஊழியம்” என்ற வார்த்தை டியாக்கொனியா (di·a·ko·niʹa) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது ஏன் அந்தளவு முக்கியமானதாக இருக்கிறது?
5 இந்த இரண்டு ஊழியங்களையும் குறிக்க ஒரே கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், கிறிஸ்தவச் சபை செய்ய வேண்டிய ஊழிய வேலைகளில் நிவாரணப் பணியும் ஒன்று என பவுல் குறிப்பிட்டார். “வித்தியாசமான ஊழியங்கள் இருக்கின்றன, ஆனால் எஜமான் ஒருவர்தான். வித்தியாசமான செயல்கள் இருக்கின்றன, . . . ஆனால், ஒரே சக்திதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது” என்று பவுல் முன்பு குறிப்பிட்டிருந்தார். (1 கொ. 12:4-6, 11) சபையில் செய்யப்படுகிற பலவிதமான வேலைகளை ‘பரிசுத்த சேவையோடு’ சம்பந்தப்படுத்தியும் பவுல் சொன்னார். (ரோ. 12:1, 6-8) அதனால்தான், ‘பரிசுத்தவான்களுக்கு உதவி செய்வதற்காக’ நேரத்தை ஒதுக்குவது முக்கியம் என்று அவர் நினைத்தார்.—ரோ. 15:25, 26.
6 நிவாரணப் பணி தங்களுடைய வணக்கத்தோடும் ஊழியத்தோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் புரிய வைத்தார். ‘கிறிஸ்துவின் நல்ல செய்திக்கு அடிபணிந்து நடப்பதால்தான்’ கிறிஸ்தவர்கள் நிவாரணப் பணிகளைச் செய்வதாக அவர் சொன்னார். (2 கொ. 9:13) இன்று நாமும் கிறிஸ்துவின் போதனைகளின்படி நடக்க விரும்புவதால்தான் சக கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிறோம். பவுல் குறிப்பிட்டதுபோல், சகோதரர்களுக்காக அன்போடு செய்யப்படும் உதவிகள் உண்மையிலேயே கடவுள் காட்டும் ‘ஈடிணையில்லாத மகா கருணைதான்.’ (2 கொ. 9:14; 1 பே. 4:10) தேவையில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்வதில் நிவாரணப் பணியும் உட்பட்டிருப்பதைப் பற்றி டிசம்பர் 1, 1975, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “இப்படிப்பட்ட சேவையை யெகோவாவும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் ரொம்பவே முக்கியமானதாக நினைக்கிறார்கள் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது.” ஆம், நிவாரணப் பணியும் பரிசுத்த சேவையின் ஒரு முக்கியமான பாகம்தான்.—ரோ. 12:1, 7; 2 கொ. 8:7; எபி. 13:16.
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பணம் கிடைக்கும் விதம்
10 முதல் காரணம், யெகோவாமேல் நமக்கு இருக்கும் அன்பும், “அவருக்குப் பிரியமான காரியங்களை” செய்ய வேண்டும் என்ற ஆசையும்தான், மனப்பூர்வமாக நன்கொடைகளைக் கொடுக்க நம்மைத் தூண்டுகின்றன. (1 யோ. 3:22) இப்படி உள்ளப்பூர்வமாக நன்கொடை கொடுக்கிறவர்களை யெகோவா ரொம்ப நேசிக்கிறார். கொடுப்பது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் சொன்னதைக் கவனியுங்கள். (2 கொரிந்தியர் 9:7-ஐ வாசியுங்கள்.) உண்மைக் கிறிஸ்தவர் ஒருவர் வேண்டாவெறுப்பாகவோ கட்டாயத்தின் பேரிலோ கொடுப்பதில்லை. ஆனால், “தன் இதயத்தில் தீர்மானித்தபடியே” கொடுக்கிறார். அதாவது தேவையை உணர்ந்து, அதற்காகத் தன்னுடைய பங்கில் என்ன செய்யலாம் என்று யோசித்து நன்கொடையைக் கொடுக்கிறார். அப்படி “சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.” இந்த வசனத்தை மற்றொரு மொழிபெயர்ப்பு இப்படிச் சொல்கிறது: “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவா கொடுத்த பரிசுக்கு நன்றி காட்டுங்கள்
2 யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவதற்கு இயேசுவின் பலி அத்தாட்சி அளிக்கிறது. (2 கொரிந்தியர் 1:20-ஐ வாசியுங்கள்.) ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பு’ என்பது இயேசுவின் பலியையும் யெகோவா நமக்கு கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் குறிக்கிறது. அந்தப் பரிசை நம்மால் விவரிக்கவே முடியாது. அந்தப் பரிசைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? மார்ச் 23, 2016 புதன்கிழமை அன்று நடக்கும் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சிக்குத் தயாராக அந்தப் பரிசு நமக்கு எப்படி உதவும்?
g99 7/8 20-21
கர்வப்படுவது தவறா?
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், காஃப்காவோமே என்ற வினைச்சொல், “பெருமைப்படுதல், களிகூருதல், பெருமிதம் கொள்ளுதல்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது, சாதகமாகவும் பாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, நாம் “தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை” பாராட்டலாம் என பவுல் குறிப்பிடுகிறார். மேலும், “மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே [“யெகோவா,” NW] மேன்மைபாராட்டக்கடவன்” என பரிந்துரைக்கிறார். (ரோமர் 5:2; 2 கொரிந்தியர் 10:17) யெகோவா நம்முடைய கடவுள் என்பதில் பெருமைப்படுவதை இது அர்த்தப்படுத்துகிறது. அவருடைய மகிமையான நாமத்தைக் குறித்தும் அவருக்கிருக்கும் நற்பெயரைக் குறித்தும் நாம் களிகூருவதற்கு வழிநடத்தும் ஓர் உணர்ச்சியாகும்.
மே 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 11-13
“பவுலின் ‘உடலில் ஒரு முள்’”
பலவீனங்களின் மத்தியிலும் பலம் பெறுதல்
மற்றொரு உண்மையுள்ள ஊழியராகிய அப்போஸ்தலன் பவுல், தன் ‘மாம்சத்திலிருந்த முள்ளை’ நீக்கும்படி யெகோவாவிடம் கேட்டார். அதாவது, சதா தன்னை வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினையை நீக்கும்படி அவர் மூன்றுமுறை மன்றாடினார். அந்த பிரச்சினை எதுவாக இருந்தாலும் சதா உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முள்ளைப் போல், யெகோவாவின் சேவையில் பவுல் அனுபவித்த சந்தோஷத்தை அது பறித்திருக்கலாம். அது தன்னை எப்போதும் குட்டிக்கொண்டிருப்பது போல் பவுல் உணர்ந்தார். “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று யெகோவா அவருக்கு பதிலளித்தார். அந்த மாம்சத்தின் முள்ளை யெகோவா எடுத்துப்போடவில்லை. பவுல் அதனுடன் போராடவேண்டியிருந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொ. 12:7-10) இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
யெகோவா “தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக்” கொடுக்கிறார்
17 பவுலின் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடவுள் அவரிடம் பின்வருமாறு கூறினார்: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” பவுல் இவ்வாறு கூறினார்: “கிறிஸ்துவின் வல்லமை [“ஒரு கூடாரத்தைப்போல,” NW] என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.” (2 கொரிந்தியர் 12:9; சங்கீதம் 147:5) கிறிஸ்துவின் மூலமாக, கடவுளுடைய வல்லமையான பாதுகாப்பு தன்மீது கூடாரத்தைப்போல இருந்ததை பவுல் அனுபவத்தில் கண்டார். அவ்விதமாகவே இன்றும் யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். அவர் தம் பாதுகாப்பை ஒரு கூடாரத்தைப்போல தம் ஊழியர்கள்மீது விரிக்கிறார்.
18 ஒரு கூடாரம், மழையை நிறுத்தாது, புயலை தடுக்காது என்பது உண்மைதான். இருந்தாலும், அது புயல், மழையிலிருந்து ஓரளவு பாதுகாப்பை அளிக்கிறது. அதேபோல, ‘கிறிஸ்துவின் வல்லமையால்’ கிடைக்கும் பாதுகாப்பும் நமக்கு வரும் சோதனைகளையோ, கஷ்டங்களையோ தடுத்து நிறுத்துவதில்லை. ஆனாலும், அது இந்த உலகத்தின் மோசமான செல்வாக்கிலிருந்தும், அதை ஆளும் சாத்தானிடமிருந்து வரும் தாக்குதலிலிருந்தும் ஆன்மீக ரீதியில் நம்மைப் பாதுகாக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 15, 16) ஆகவே, ‘உங்களிடமிருந்து நீங்காத’ ஒரு சோதனையோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், யெகோவா உங்கள் போராட்டத்தை அறிந்திருக்கிறார், உங்கள் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு” அவர் பதிலளித்திருக்கிறார் என்பதில் நீங்கள் உறுதியாயிருக்கலாம். (ஏசாயா 30:19; 2 கொரிந்தியர் 1:3, 4) பவுல் பின்வருமாறு எழுதினார்: “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”—1 கொரிந்தியர் 10:13; பிலிப்பியர் 4:6, 7.
“சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்”
8 ஏசாயா 40:30-ஐ வாசியுங்கள். நமக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும், நம்முடைய சொந்த பலத்திலேயே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. நாம் எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது. அப்போஸ்தலன் பவுல் திறமையானவராக இருந்தபோதிலும், அவருக்கும் வரம்புகள் இருந்தன; நினைத்ததையெல்லாம் அவரால் செய்ய முடியவில்லை. தன்னுடைய கவலைகளைப் பற்றிக் கடவுளிடம் அவர் தெரியப்படுத்தியபோது, “நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்” என்று கடவுள் சொன்னார். கடவுள் சொன்ன குறிப்பை பவுல் புரிந்துகொண்டார். அதனால்தான், “நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்” என்று சொன்னார். (2 கொ. 12:7-10) அதன் அர்த்தம் என்ன?
9 தன்னைவிட பலம்படைத்த ஒருவரின் உதவி இல்லாமல் தன்னால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. அவருக்குத் தேவைப்பட்ட பலத்தைக் கடவுளுடைய சக்தியால் தர முடியும் என்பதும், சொந்த பலத்தால் தன்னால் ஒருபோதும் செய்ய முடியாத விஷயங்களைச் செய்ய கடவுளுடைய சக்தி தனக்கு உதவும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. நம் விஷயத்திலும் இதுதான் உண்மை! யெகோவா தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுக்கும்போது உண்மையிலேயே நாமும் பலமடைய முடியும்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
2 கொரிந்தியர் 12:2-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘மூன்றாம் பரலோகம்,’ ‘புதிய வானத்தை,’ அதாவது இயேசு கிறிஸ்துவாலும் 1,44,000 பேராலும் ஆளப்படுகிற மேசியானிய அரசாங்கத்தை, குறிப்பதாகத் தெரிகிறது.—2 பே. 3:13.
அந்த அரசாங்கம் எல்லாவற்றையும்விட உயர்ந்ததாக இருப்பதால், அது ‘மூன்றாம் பரலோகம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பவுல் “எடுத்துக்கொள்ளப்பட்ட” அந்த ‘பூஞ்சோலை,’ வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கலாம்: (1) இந்தப் பூமியில் வரப்போகும் பூஞ்சோலையைக் குறிக்கலாம். (2) இப்போது அனுபவிக்கிற ஆன்மீகப் பூஞ்சோலையைவிட மிக உயர்ந்ததை, அதாவது புதிய உலகத்தில் அனுபவிக்கப்போகிற ஆன்மீகப் பூஞ்சோலையை, குறிக்கலாம். (3) இந்தப் பூமியில் வரப்போகிற பூஞ்சோலையோடு ஒன்றிணையப்போகிற பரலோகத்திலிருக்கும் ‘கடவுளுடைய பூஞ்சோலையை’ குறிக்கலாம்.
it-2-E 177
முத்தம்
‘சுத்தமான இதயத்தோடு கொடுக்கப்பட்ட முத்தம்.’ முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ‘சுத்தமான இதயத்தோடு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்தார்கள்.’ (ரோ 16:16; 1கொ 16:20; 2கொ 13:12; 1தெ 5:26) இதை ‘அன்பு முத்தம்’ என்றும் பைபிள் சொல்கிறது. (1பே 5:14) ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்வதற்காக ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும்தான் அநேகமாக இப்படி முத்தம் கொடுத்திருப்பார்கள். பழங்கால எபிரெயர்களின் மத்தியில் இந்த வழக்கம் இருந்தது. அதே வழக்கத்தைத்தான் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கத்தைப் பற்றி பைபிளில் எந்த விவரமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவ சபையில் எந்தளவுக்குப் பாசமும் ஒற்றுமையும் இருந்தது என்பதை இந்த வழக்கம் காட்டுகிறது.—யோவா 13:34, 35.
மே 27–ஜூன் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | கலாத்தியர் 1-3
“நேருக்கு நேர் சுட்டிக்காட்டினேன்”
நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கிறதா?
16 கலாத்தியர் 2:11-14-ஐ வாசியுங்கள். பேதுரு, மனிதர்களைப் பார்த்து பயந்துவிட்டார். (நீதி. 29:25) மற்ற தேசத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடத்தில் தான் பழகுவதைப் பார்த்தால், எருசலேமிலிருந்து வந்த விருத்தசேதனம் செய்திருந்த யூத கிறிஸ்தவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவர் பயந்தார். கி.பி. 49-ல் எருசலேமில் நடந்த கூட்டத்தில், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகப் பேதுரு பேசியதைப் பற்றி பவுல் கேள்விப்பட்டிருந்தார். அதனால், பேதுரு வெளிவேஷம் போடுவதாக அப்போஸ்தலன் பவுல் அவரிடம் சொன்னார். (அப். 15:12; கலா. 2:13, அடிக்குறிப்பு) இப்போது, பேதுருவால் புண்படுத்தப்பட்ட மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? அவர்கள் இடறல் அடைந்துவிடுவார்களா? தான் செய்த தவறால் பேதுரு தன்னுடைய பொறுப்புகளை இழந்துவிடுவாரா?
யெகோவாவை நேசிக்கிறவர்களுக்கு “இடறலில்லை”
12 மனித பயத்தின் காரணமாக சில நேரங்களில் பேதுருவுக்கு இடறல் ஏற்பட்டது; என்றாலும், இயேசுவுக்கும் யெகோவாவுக்கும் உண்மையோடு இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், எல்லோருக்கும் முன்பாக தன் எஜமானரை மறுதலித்தார், ஒருமுறை அல்ல, மூன்று முறை. (லூக். 22:54-62) மற்றொரு சமயம், கிறிஸ்தவ குணத்தைக் காட்டத் தவறினார்; யூத கிறிஸ்தவர்களை உயர்வாக நினைத்துக்கொண்டு புறதேசத்து கிறிஸ்தவர்களைத் தாழ்வாக நடத்தினார். பேதுருவின் இந்த மனப்பான்மை தவறாக இருந்தது. ஆனால் சபையில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பதை அப்போஸ்தலன் பவுல் நன்கு அறிந்திருந்தார். பேதுருவின் இந்த நடத்தையை மற்றவர்கள் பின்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, அவர் பேதுருவுக்கு உடனடியாக ஆலோசனை கொடுத்தார். (கலா. 2:11-14) அதைக் கௌரவக் குறைச்சலாக நினைத்து வாழ்வுக்கான ஓட்டத்தை பேதுரு நிறுத்திவிட்டாரா? இல்லை. பவுலின் ஆலோசனையை மனமார ஏற்றுக்கொண்டு, தன்னைச் சரிசெய்துகொண்டு, ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
it-2-E 587 ¶4
பவுல்
சீரியாவின் அந்தியோகியாவுக்கு பேதுரு வந்தபோது அங்கிருந்த மற்ற தேசத்துக் கிறிஸ்தவர்களோடு நன்றாகப் பழகினார். ஆனால், எருசலேமிலிருந்து சில யூதர்கள் அங்கு வந்தபோது, அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, அந்தக் கிறிஸ்தவர்களைவிட்டு ஒதுங்கிவிட்டார். இப்படி, கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு நேர்மாறாக நடந்துகொண்டார். இனம், தேசம் என்று யெகோவா எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை என்பதைத்தான் அவருடைய சக்தி காட்டியிருந்தது. பர்னபாவும் பேதுருவைப் போலவே நடந்துகொண்டார். இதை பவுல் கவனித்ததால், எல்லார் முன்பாகவும் தைரியமாக பேதுருவைக் கண்டித்தார். ஏனென்றால், பேதுரு அப்படி நடந்துகொண்டது, கிறிஸ்தவ சபையின் வளர்ச்சியைப் பாதித்தது.—கலா 2:11-14.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராயிருங்கள்
20 சோர்ந்துபோகச் செய்வதன் மூலம் சாத்தான் நம்மை மறைமுகமாகத் தாக்கலாம். அதை நாம் எப்படிச் சமாளிப்பது? இயேசு நமக்காக தம் உயிரையே கொடுத்திருப்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்பது உதவும். அப்போஸ்தலன் பவுல் இதைத்தான் செய்தார். பவுல் சில நேரங்களில் தான் செய்த தவறுகளை நினைத்து வேதனைப்பட்டார். ஆனால், தன்னைப்போன்ற பாவிகளுக்காகத்தான் கிறிஸ்து உயிரைக் கொடுத்தார் என்பதை யோசித்துப் பார்த்தது பவுலுக்கு உதவியது. “நான் வாழும் வாழ்க்கை கடவுளுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தினால்தான்; அவரே என்மீது அன்பு வைத்து எனக்காகத் தம்மையே தியாகம் செய்தார்” என்று அவர் சொன்னார். (கலா. 2:20) பவுல் இயேசுவின் மீட்பு பலியை உயர்வாக மதித்தார். அவருக்காகவே இயேசு உயிரைக் கொடுத்ததைப் போல் உணர்ந்தார்.
21 ‘எனக்காகவே யெகோவா இந்த மீட்பு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்’ என்று பவுலைப் போலவே நாமும் யோசித்துப் பார்த்தால் சோர்ந்துபோக மாட்டோம். ஆனால், இப்படிச் செய்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்காதீர்கள். பூஞ்சோலை பூமி வரும்வரை பிரச்சினையை நாம் சகித்துக்கொள்ள வேண்டும். கடைசிவரை சகித்திருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் இந்த முழு பூமியையும் பூஞ்சோலையாக மாற்றப்போகிறது. அந்த நாள் நெருங்கிவிட்டது. அதனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சகித்திருப்போமாக! கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போகத் தயாராய் இருப்போமாக!!
it-1-E 880
கலாத்தியர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்
“கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு” இந்தக் கடிதத்தை எழுதுவதாக பவுல் குறிப்பிட்டிருக்கிறார். “புத்தியில்லாத கலாத்தியர்களே” என்று பவுல் சொன்னதால், கலாத்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த கெல்டிக் இன மக்களை மனதில் வைத்துதான் அவர் இந்தக் கடிதத்தை எழுதியதாகச் சிலர் வாதாடுகிறார்கள். ஆனால், அது உண்மையாக இருக்க முடியாது. (கலா 3:1) இதைப் புரிந்துகொள்வதற்கு, கலாத்திய சபைகளில் இருந்த ஒரு பிரச்சினையைப் பற்றிப் பார்க்கலாம். சில யூத கிறிஸ்தவர்கள், யூத பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மற்றவர்களை வற்புறுத்தினார்கள்; கிறிஸ்துமீது ‘விசுவாசம் வைக்கிறவர்கள்தான் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்’ என்பதை அந்த யூத கிறிஸ்தவர்கள் நம்பவில்லை. அதற்குப் பதிலாக, மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால்தான் நீதிமான்களாக ஆக முடியுமென்று வாதாடினார்கள். அவர்களைப் பின்பற்றிய மற்ற கலாத்திய கிறிஸ்தவர்களைத்தான் “புத்தியில்லாத கலாத்தியர்களே” என்று பவுல் சொன்னார். (2:15–3:14; 4:9, 10) ‘கலாத்தியாவிலுள்ள சபைகளில்’ (1:2) யூதக் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள், மற்ற தேசத்துக் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். அந்த மற்ற தேசத்துக் கிறிஸ்தவர்களில் சிலர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள், சிலர் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள். அவர்களில் கெல்டிக் இனத்தைச் சேர்ந்தவர்களும் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. (அப் 13:14, 43; 16:1; கலா 5:2) அவர்கள் எல்லாரும் கலாத்தியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்ததால், அவர்களை ஒட்டுமொத்தமாக கலாத்திய கிறிஸ்தவர்கள் என்று பவுல் குறிப்பிட்டார். பவுலுக்கு நன்கு பழக்கப்பட்ட அவர்கள் எல்லாரும் அந்த ரோம மாகாணத்தின் தெற்குப் பகுதியில்தான் வாழ்ந்துவந்தார்கள். அதன் வடக்குப் பகுதிக்கு பவுல் போனதாகவே தெரியவில்லை. அதனால், வடக்குப் பகுதியில் இருந்த முன்பின் தெரியாத ஆட்களுக்கு அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருக்க வாய்ப்பில்லை.