உங்கள் விசுவாசம் எவ்வளவு பலமுள்ளது?
‘விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்கள்.’—2 கொரிந்தியர் 1:24.
1, 2. நமக்கு ஏன் விசுவாசம் தேவை, அதை எவ்வாறு பலப்படுத்தலாம்?
தங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும் என்பதை யெகோவாவின் ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” (எபிரெயர் 11:6) ஆகையால், பரிசுத்த ஆவிக்காகவும், அதன் விரும்பத்தக்க கனிகளில் ஒன்றான விசுவாசத்திற்காகவும் நாம் ஞானமாய் ஜெபிக்கிறோம். (லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) சக வணக்கத்தாரின் விசுவாசத்தைப் பின்பற்றுவதுங்கூட நம் விசுவாசத்தை பலப்படுத்தலாம்.—2 தீமோத்தேயு 1:5; எபிரெயர் 13:7.
2 கிறிஸ்தவர்கள் எல்லாரும் பின்பற்ற வேண்டிய வழியை கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது; அவ்வழியைப் பின்தொடர விடாமுயற்சி செய்தால் நம்முடைய விசுவாசம் உறுதிப்படும். தினந்தோறும் பைபிளை வாசிக்கையிலும், ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மூலம் அளிக்கப்படும் பிரசுரங்களின் உதவியால் வேதவசனங்களை ஊக்கமாகப் படிக்கையிலும் விசுவாசம் அதிகரிக்கலாம். (லூக்கா 12:42-44; யோசுவா 1:7, 8) கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும், அசெம்பிளிகளுக்கும், மாநாடுகளுக்கும் நாம் தவறாமல் ஆஜராவதன் மூலம் ஒருவருக்கொருவர் விசுவாச பரிமாற்றத்தால் ஊக்குவிக்கப்படுகிறோம். (ரோமர் 1:10, 11; எபிரெயர் 10:24, 25) மேலும், ஊழியத்தில் பிறரிடம் பேசுகையில் நம்முடைய விசுவாசம் பலப்படுத்தப்படுகிறது.—சங்கீதம் 145:10-13; ரோமர் 10:11-15.
3. விசுவாசத்தைக் குறித்ததில், அன்புள்ள கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து என்ன உதவியை நாம் பெறுகிறோம்?
3 அன்புள்ள கிறிஸ்தவ மூப்பர்கள் வேதப்பூர்வ அறிவுரையையும் ஊக்கத்தையும் அளிப்பதன் மூலம் விசுவாசத்தை வளர்க்க நமக்கு உதவி செய்கிறார்கள். “உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே” என்று கொரிந்தியர்களுக்கு சொன்ன அப்போஸ்தலன் பவுலின் மனநிலையே அவர்களுக்கும் இருக்கிறது. (2 கொரிந்தியர் 1:23, 24) மற்றொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “உங்களைச் சந்தோஷப்படுத்தும்படி நாங்கள் உங்களோடு உழைக்கிறோம். ஏனெனில் உங்கள் விசுவாசம் பலமுள்ளது.” (கன்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) விசுவாசத்தினால் நீதிமான் பிழைக்கிறான். நிச்சயமாகவே, நமக்காக வேறொருவர் விசுவாசம் வைக்கவோ, அல்லது நம்மை உண்மை தவறாத உத்தம புத்திரராகவோ ஆக்க முடியாது. இவ்விஷயத்தில், ‘நம் பாரத்தை நாமே சுமக்க வேண்டும்.—கலாத்தியர் 3:11; 6:5.
4. கடவுளுடைய உண்மை ஊழியர்களைப் பற்றிய பைபிள் பதிவுகள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த எவ்வாறு உதவும்?
4 விசுவாசத்துடன் இருந்தவர்களைப் பற்றிய விவரங்கள் வேதவசனங்களில் குவிந்து கிடக்கின்றன. அவர்களுடைய மிகச் சிறந்த செயல்கள் பலவற்றை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் அவர்களது நீண்ட வாழ்நாளில் அனுதினமும் காட்டிய விசுவாசத்தைப் பற்றி அறிந்திருக்கிறோமா? நம்மைப் போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் இந்தப் பண்பை எப்படிக் காட்டினார்கள் என்பதை இப்போது சிந்திப்பது நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்த உதவும்.
விசுவாசம் தைரியத்தை அளிக்கிறது
5. கடவுளுடைய வார்த்தையை தைரியமாய் அறிவிப்பதற்கு விசுவாசம் நம்மைப் பலப்படுத்துகிறது என்பதற்கு என்ன வேதப்பூர்வ அத்தாட்சி இருக்கிறது?
5 கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாக அறிவிப்பதற்கு விசுவாசம் நம்மை பலப்படுத்துகிறது. கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படப் போவதை ஏனோக்கு தைரியமாய் முன்னறிவித்தார். “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்” என அவர் முன்னறிவித்தார். (யூதா 14, 15) இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏனோக்கின் தேவபக்தியற்ற சத்துருக்கள் உண்மையில் அவரை தொலைத்துக்கட்ட விரும்பினார்கள். ஆனாலும், அவர் விசுவாசத்துடன் தைரியமாகப் பேசினார்; அவரை மரணத்தில் நித்திரையடையச் செய்வதன் மூலம் அதாவது, அவர் மரண வேதனைப்படாமல் உயிர்விடும்படி செய்வதன் மூலம் கடவுள் அவரை “எடுத்துக்கொண்டார்.” (ஆதியாகமம் 5:24; எபிரெயர் 11:5) அப்படிப்பட்ட அற்புதங்கள் நமக்கு சம்பவிக்காவிட்டாலும் நாம் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறார்; அதனால் அவருடைய வார்த்தையை விசுவாசத்துடனும் தைரியத்துடனும் நம்மால் அறிவிக்க முடிகிறது.—அப்போஸ்தலர் 4:24-31.
6. கடவுள் அளித்த விசுவாசமும் தைரியமும் நோவாவுக்கு எவ்வாறு உதவின?
6 விசுவாசத்தினாலே நோவா “தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்.” (எபிரெயர் 11:7; ஆதியாகமம் 6:13-22) நோவா தன்னுடைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு கடவுளுடைய எச்சரிப்பின் செய்தியை தைரியமாய் அறிவித்தார்; ஆகவே அவர் ‘நீதியைப் பிரசங்கித்தவராகவும்’ இருந்தார். (2 பேதுரு 2:5) தற்போதைய ஒழுங்குமுறை சீக்கிரத்தில் அழிக்கப்படும் என்பதற்கு வேதப்பூர்வ அத்தாட்சியை நாம் அளிக்கையில் சிலர் கேலி செய்வது போலவே வரவிருந்த ஜலப்பிரளயத்தைப் பற்றிய அவருடைய செய்தியை அவர்கள் ஏளனமாக கேலி செய்திருப்பார்கள். (2 பேதுரு 3:3-12) என்றாலும், கடவுள் அளிக்கும் விசுவாசத்தாலும் தைரியத்தாலும் ஏனோக்கு மற்றும் நோவாவை போல அச்செய்தியை நம்மாலும் அறிவிக்க முடியும்.
விசுவாசம் பொறுமையுள்ளவராக்குகிறது
7. ஆபிரகாமும் மற்றவர்களும் எப்படி விசுவாசத்தையும் பொறுமையையும் காட்டினார்கள்?
7 முக்கியமாக, இந்தப் பொல்லாத உலகின் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிற நமக்கு விசுவாசமும் பொறுமையும் தேவை. ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரிக்கப் போகிறவர்களில்’ கடவுள் பயமுள்ள முற்பிதாவாகிய ஆபிரகாமும் ஒருவர். (எபிரெயர் 6:11, 12) விசுவாசத்தினாலே, எல்லா வசதிகளும் நிறைந்த ஊர் பட்டணத்தை விட்டு கடவுள் வாக்குறுதி அளித்த அந்நிய தேசத்தில் பரதேசியாக வாழ்ந்தார். ஈசாக்கும் யாக்கோபும் அதே வாக்குறுதிக்கு சுதந்தரவாளிகளாக இருந்தனர். எனினும், “இவர்களெல்லாரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமல் . . . விசுவாசத்தோடே மரித்தார்கள்.” விசுவாசத்தினாலே, “அதிலும் மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.” அதற்கேற்ப கடவுள் ‘அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணினார்.’ (எபிரெயர் 11:8-16) ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் கடவுள் பயமுள்ள அவர்கள் மனைவிகளும் நிஜமாகவே கடவுளுடைய பரலோக ராஜ்யத்திற்காக பொறுமையுடன் காத்திருந்தார்கள், அந்த ராஜ்யத்தில் பூமியில் உயிர்வாழ அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
8. என்ன நிலையிலும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் பொறுமையையும் விசுவாசத்தையும் காட்டினார்கள்?
8 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் விசுவாசத்தை கைவிடவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரிக்கவில்லை; ஆபிரகாமின் வித்தின் மூலம் சகல ஜாதிகளும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வதையும் அவர்கள் காணவில்லை. (ஆதியாகமம் 15:5-7; 22:15-18) அதோடு, நூற்றாண்டுகள் பல கடந்து செல்லும் வரை ‘கடவுளால் கட்டப்பட்ட நகரம்’ ஸ்தாபிக்கப்படப் போவதில்லை. என்றாலும், இவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் விசுவாசத்தையும் பொறுமையையும் தொடர்ந்து காட்டிவந்தார்கள். இப்போது மேசியானிய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதால், நிச்சயமாகவே, நாமும் அவர்களைப் போலவே இருக்க வேண்டும்.—சங்கீதம் 42:5, 11; 43:5.
விசுவாசம் உயர்ந்த இலக்குகளை முன்வைக்கிறது
9. இலக்குகளையும் இலட்சியங்களையும் குறித்ததில் விசுவாசம் என்ன பங்கை வகிக்கிறது?
9 கானானியருடைய தரங்கெட்ட வாழ்க்கைமுறையை உண்மையுள்ள முற்பிதாக்கள் ஒருபோதும் பின்பற்றவில்லை. ஏனென்றால் அதைவிட மிக உயர்ந்த இலக்குகளும் இலட்சியங்களும் அவர்களுக்கு இருந்தன. அவ்வாறே பொல்லாங்கனான பிசாசாகிய சாத்தானுக்குள் உழன்று கிடக்கும் இந்த உலகத்தோடு ஒன்றிவிடுவதைத் தடுக்க உதவும் ஆவிக்குரிய இலக்குகளை விசுவாசம் நமக்கு முன்வைக்கிறது.—1 யோவான் 2:15-17; 5:19.
10. உலக அந்தஸ்தைவிட மிக உயர்ந்த இலக்கை யோசேப்பு நாடினார் என நமக்கு எப்படித் தெரியும்?
10 கடவுளுடைய வழிநடத்துதலால், யாக்கோபின் குமாரன் யோசேப்பு எகிப்தில் உணவு நிர்வாகியாக சேவித்தார். ஆனால், இவ்வுலகில் புகழ்பெற்ற மாமனிதனாக திகழ வேண்டுமென்பது அவருடைய இலக்காக இருக்கவில்லை. 110 வயதான யோசேப்பு, யெகோவாவுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் விசுவாசம் வைத்து, தன் சகோதரர்களிடம் “நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார்” என்று சொன்னார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தான் புதைக்கப்படும்படி அவர் கேட்டுக்கொண்டார். மரணமடைந்த பின்னர், அவர் உடல் கெடாதபடி தைலமிடப்பட்டு, சவப்பெட்டியில் எகிப்தில் வைக்கப்பட்டது. ஆனால், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாக்கப்பட்டபோதோ, தீர்க்கதரிசியாகிய மோசே, யோசேப்பின் எலும்புகளை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் புதைப்பதற்கு எடுத்துச் சென்றார். (ஆதியாகமம் 50:22-26; யாத்திராகமம் 13:19) இவ்வுலகத்தின் அந்தஸ்தைவிட மிக உயர்ந்த இலக்குகளை நாட யோசேப்புக்கு இருந்ததைப் போன்ற விசுவாசம் நம்மைத் தூண்ட வேண்டும்.—1 கொரிந்தியர் 7:29-31.
11. ஆவிக்குரிய இலக்குகளை வைத்திருந்ததற்கு மோசே எவ்வகையில் அத்தாட்சி அளித்தார்?
11 ‘அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதையும்,’ கல்வியில் தேர்ந்த ஒருவராக எகிப்திய அரச குடும்பத்தில் இருப்பதையும்விட ‘கடவுளுடைய ஜனங்களுடன் துன்பத்தை அனுபவிப்பதையே’ மோசே தெரிந்துகொண்டார். (எபிரெயர் 11:23-26; அப்போஸ்தலர் 7:20-22) இதனால், உலகப்பிரகாரமான கௌரவத்தை புறக்கணித்தார்; எகிப்தில் பிரசித்திபெற்ற ஓர் இடத்தில், அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் விமரிசையாக அடக்கம் செய்யப்படும் பாக்கியத்தையும் அவர் உதறித் தள்ளினார். ஆனால், ‘[மெய்] தேவனுடைய மனிதனாகவும்’ நியாயப்பிரமாணத்தின் மத்தியஸ்தனாகவும், யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும், பைபிள் எழுத்தாளனாகவும் இருக்கும் சிலாக்கியங்களோடு ஒப்பிடுகையில் அவையெல்லாம் ஒன்றுமே இல்லை. (எஸ்றா 3:2) அந்தஸ்துள்ள பதவி ஏணியில் ஏறிக்கொண்டே இருக்க விரும்புகிறீர்களா அல்லது விசுவாசத்தோடு மிக உயர்வான ஆவிக்குரிய இலக்குகளை வைக்க விரும்புகிறீர்களா?
விசுவாசம் திருப்தியான வாழ்க்கையை தருகிறது
12. ராகாபின் வாழ்க்கையில் விசுவாசம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?
12 விசுவாசம் மிக உயர்ந்த இலக்குகளை வைப்பதற்கு உதவி செய்வதோடு வாழ்க்கையில் திருப்தியையும் தருகிறது. எரிகோவிலிருந்த ராகாப் ஒரு வேசியாக இருந்தபோது அவளுடைய வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்திருக்கலாம். ஆனாலும், அவள் விசுவாசம் காட்டியபோதோ அது எந்தளவுக்கு அர்த்தமுள்ளதாய் மாறியது! அவள் இஸ்ரவேலரான ‘தூதுவர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, [விசுவாசத்தின்] கிரியைகளினாலே நீதியுள்ளவளாக்கப்பட்டாள்.’ இவ்வாறு அவர்கள் தங்கள் கானானிய சத்துருக்களுக்குத் தப்பினார்கள். (யாக்கோபு 2:24-26) யெகோவாவை மெய்க் கடவுளாக ஏற்றுக்கொண்டு, வேசித்தன வாழ்க்கையை விட்டுவிடுவதன் மூலமும் ராகாப் விசுவாசத்தைக் காட்டினாள். (யோசுவா 2:9-11; எபிரெயர் 11:30, 31) அவிசுவாசியான கானானியனை அல்ல, யெகோவாவின் ஊழியர் ஒருவரையே அவள் மணம் செய்தாள். (உபாகமம் 7:3, 4; 1 கொரிந்தியர் 7:39) மேசியாவின் ஒரு மூதாதையாகும் மகத்தான பாக்கியம் ராகாபுக்கு கிடைத்தது. (1 நாளாகமம் 2:3-15; ரூத் 4:20-22; மத்தேயு 1:5, 6) மற்றவர்களைப் போல, அதாவது ஒழுக்கக்கேடான வாழ்க்கையை கைவிட்ட சிலரைப் போல மற்றொரு பலனையும்—பரதீஸ் பூமியில் உயிர்த்தெழும் வாய்ப்பையும்—அவள் பெறுவாள்.
13. பத்சேபாள் விஷயத்தில் தாவீது எவ்வாறு பாவம் செய்தார், ஆனால் அவர் என்ன மனப்பான்மையைக் காட்டினார்?
13 ராகாப் தன் பாவ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தப் பிறகு, நேர்மையாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. எனினும், வெகுகாலமாகவே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்த சிலர், பெரும் பாவம் செய்திருக்கிறார்கள். அரசராகிய தாவீது பத்சேபாளோடு விபசாரம் செய்தார், அவளுடைய கணவனைப் போர்க்களத்தில் மடியச் செய்து, பின் அவளை தன் மனைவியாக சேர்த்துக்கொண்டார். (2 சாமுவேல் 11:1-27) மிகவும் துக்கப்பட்டு மனந்திரும்பினவராய், ‘உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமல் இரும்’ என்று யெகோவாவிடம் தாவீது கெஞ்சி கேட்டார். கடவுளுடைய ஆவியை தாவீது இழக்கவில்லை. பாவத்தினிமித்தம் “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” யெகோவா இரக்கத்தோடு புறக்கணிக்க மாட்டார் என்ற விசுவாசம் அவருக்கு இருந்தது. (சங்கீதம் 51:11, 17; 103:10-14) இத்தகைய விசுவாசத்தால், தாவீதும் பத்சேபாளும் மேசியாவின் வம்சாவளியில் மூதாதைகளாக ஆகும் பாக்கியத்தைப் பெற்றனர்.—1 நாளாகமம் 3:5; மத்தேயு 1:6, 16; லூக்கா 3:23, 31.
கடவுள் அளிக்கும் உறுதி விசுவாசத்தை பலப்படுத்துகிறது
14. என்ன உறுதிப்பாட்டை கிதியோன் பெற்றார், இப்பதிவு நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பாதிக்கலாம்?
14 நாம் விசுவாசத்தில் நடந்தாலும், கடவுளுடைய உதவி இருப்பதற்கான உறுதி சில சமயங்களில் நமக்குத் தேவைப்படலாம். ‘விசுவாசத்தினாலே ராஜ்யங்களை ஜெயித்தவர்களில்’ ஒருவரான நியாயாதிபதி கிதியோனை குறித்ததில் இது உண்மையாக இருந்தது. (எபிரெயர் 11:32, 33) மீதியானியரும் அவர்களுடன் சேர்ந்தவர்களும் இஸ்ரவேல் தேசத்துக்குள் படையெடுத்தபோது, கடவுளுடைய ஆவி கிதியோன்மீது இறங்கினது. யெகோவா தன்னுடன் இருக்கிறாரா என்ற உறுதியை அறிய விரும்பியதால், மயிருள்ள ஒரு தோலை இரவு முழுக்க களத்தில் போட்டு சோதனைகளை நடத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். முதல் சோதனையில், அந்தத் தோலின்மீது மாத்திரமே பனி பெய்திருந்தது, தரை காய்ந்திருந்தது. இரண்டாவது சோதனை நேர்மாறாக இருந்தது. முன்ஜாக்கிரதையுடன் இருந்த கிதியோன் இந்த உறுதிப்படுத்தும் காரியங்களால் பலப்படுத்தப்பட்டவராய் விசுவாசத்துடன் செயல்பட்டு இஸ்ரவேலின் சத்துருக்களை முறியடித்தார். (நியாயாதிபதிகள் 6:33-40; 7:19-25) ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் கடவுளுடைய உறுதியை கேட்பது நாம் விசுவாசத்தில் குறைவுபடுகிறோமென அர்த்தமாகாது. தீர்மானங்களை எடுக்கையில், பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஆலோசிப்பதாலும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதாலும் நாம் உண்மையில் விசுவாசத்தைக் காட்டுகிறோம்.—ரோமர் 8:26, 27.
15. பாராக்கின் விசுவாசத்தைப் பற்றி சிந்திப்பது நமக்கு எப்படி உதவியாக இருக்கலாம்?
15 ஊக்குவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட உறுதியால் நியாயாதிபதி பாராக்கின் விசுவாசம் பலப்படுத்தப்பட்டது. இஸ்ரவேலை கானானிய அரசனாகிய யாபீனின் ஒடுக்குதலிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி தீர்க்கதரிசினியாகிய தெபொராள் அவரை ஊக்குவித்தாள். விசுவாசமும் கடவுளுடைய துணை இருப்பதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளும் நிறைந்த பாராக், ஆயுத பலம் குறைந்த 10,000 மனிதரை யுத்தத்திற்கு அழைத்துச் சென்று, சிசெராவின் தலைமையின் கீழிருந்த யாபீனின் பெரும் சேனைகளை வென்றார். தெபொராளும் பாராக்கும் புகழ்ந்து பாடின சிலிர்ப்பூட்டும் பாடலில் இந்த வெற்றி இடம்பெற்றுள்ளது. (நியாயாதிபதிகள் 4:1–5:31) கடவுளால் நியமிக்கப்பட்ட இஸ்ரவேலின் தலைவராக செயல்படும்படி பாராக்கை தெபொராள் ஊக்குவித்தாள். இவர் விசுவாசத்தினால் ‘அந்நியருடைய சேனைகளை முறியடித்த’ யெகோவாவின் ஊழியர்களில் ஒருவர். (எபிரெயர் 11:34) யெகோவாவின் சேவையில் சவாலான ஒரு நியமிப்பை எப்படி நிறைவேற்றப் போகிறோமென நாம் தயங்கும்போது, விசுவாசத்துடன் செயல்பட்ட பாராக்கை கடவுள் எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதை சிந்திப்பது, நம்மை செயல்பட தூண்டுவிக்கும்.
விசுவாசம் சமாதானத்தை முன்னேற்றுவிக்கிறது
16. லோத்துடன் சமாதானத்தை நாடுவதில் என்ன சிறந்த முன்மாதிரியை ஆபிரகாம் வைத்தார்?
16 விசுவாசம், கடவுளுடைய சேவையில் கடினமான நியமிப்புகளை நிறைவேற்றுவதற்கு எப்படி உதவுகிறதோ அப்படியே சமாதானத்தையும் மன அமைதியையும் ஏற்படுத்துகிறது. ஆபிரகாமின் மேய்ப்பர்களுக்கும் லோத்தின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாகி அவர்கள் பிரிந்துபோக நேர்ந்தபோது, செழிப்பான மேய்ச்சல் நிலங்களை இளைஞனாயிருந்த தன் சகோதரனின் மகன் லோத்து எடுத்துக்கொள்ளும்படி வயது முதிர்ந்த ஆபிரகாம் விட்டுக் கொடுத்தார். (ஆதியாகமம் 13:7-12) இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடவுளுடைய உதவிக்காக ஆபிரகாம் விசுவாசத்துடன் ஜெபித்திருப்பார். தன் சொந்த நலனை முதலில் வைப்பதற்குப் பதிலாக, அவர் சமாதானத்துடன் காரியங்களை சரிசெய்தார். நமக்கும் நம் கிறிஸ்தவ சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டால், அன்போடு விட்டுக்கொடுப்பதில் ஆபிரகாம் வைத்த முன்மாதிரியை மனதில் வைத்து விசுவாசத்துடன் ஜெபம் செய்து, ‘சமாதானத்தை நாடுவோமாக.’—1 பேதுரு 3:10-12.
17. பவுல், பர்னபா, மாற்கு ஆகியோருடைய உறவில் விரிசல் போல் தோன்றிய நிலை சமாதானமான முறையில் சரி செய்யப்பட்டதென்று நாம் ஏன் சொல்லலாம்?
17 விசுவாசத்தோடு கிறிஸ்தவ நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பது சமாதானத்தை முன்னேற்றுவிக்க நமக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை கவனியுங்கள். பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தைத் தொடங்கவிருந்த சமயத்தில், சீப்புருவிலும் ஆசியா மைனரிலும் இருந்த சபைகளைத் திரும்ப சந்திக்கும்படியான யோசனையை பர்னபா ஒப்புக்கொண்டார். எனினும், பர்னபா தன் உறவினனான மாற்குவை அழைத்துக்கொண்டு போக விரும்பினார். பவுல் அதற்கு சம்மதிக்கவில்லை. ஏனென்றால் பம்பிலியாவில் மாற்கு அவர்களோடு ஊழியத்துக்கு வராமல் அவர்களை விட்டுப் பிரிந்துபோய்விட்டார். ‘அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டது.’ இந்த விவாதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்துபோயினர். பர்னபா மாற்குவை அழைத்துக்கொண்டு சீப்புருவுக்குச் சென்றார்; பவுலோ சீலாவைத் துணையாக தெரிந்துகொண்டு, ‘சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து சபைகளைத் திடப்படுத்தினார்.’ (அப்போஸ்தலர் 15:36-41) காலப்போக்கில், அவர்களுடைய உறவில் விரிசல் போல தோன்றிய நிலை மறைந்தது. இதற்கு அத்தாட்சியாக, ரோமில் மாற்கு பவுலுடன் இருந்ததையும் அவரைப் பற்றி அப்போஸ்தலன் நல்ல விதத்தில் பேசியதையும் பற்றிய பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. (கொலோசெயர் 4:10; பிலேமோன் 23, 24) சுமார் பொ.ச. 65-ல் பவுல் ரோமில் கைதியாக இருந்தபோது, தீமோத்தேயுவிடம், “மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்” என்று கூறினார். (2 தீமோத்தேயு 4:11) பர்னபாவுடனும் மாற்குவுடனும் தனக்கு இருந்த உறவு சம்பந்தமாக பவுல் விசுவாசத்தோடு ஜெபித்திருப்பதாக தெரிகிறது. இதனால், ‘தேவ சமாதானத்தால்’ வரும் மன அமைதி அவருக்கு கிடைத்தது.—பிலிப்பியர் 4:6, 7.
18. எயோதியா, சிந்திகேயாவின் விஷயத்தில் என்ன நடந்திருக்கலாம்?
18 அபூரணராக இருப்பதால், “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) இரண்டு கிறிஸ்தவ பெண்களுக்கிடையில் சச்சரவுகள் எழும்பியபோது பவுல் அவர்களைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன். . . . அவர்களுக்கு உதவியாயிரு . . . அவர்கள் [அந்தப் பெண்கள்] . . . சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள்.” (பிலிப்பியர் 4:1-3) தேவபக்தியுள்ள இந்தப் பெண்கள், மத்தேயு 5:23, 24-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிற அறிவுரையைப் பின்பற்றி தங்கள் பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்த்திருக்க வேண்டும். விசுவாசத்தோடு வேதப்பூர்வ நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்தினால் இன்றும் சமாதானத்தை முன்னேற்றுவிக்க முடியும்.
சகித்திருப்பதற்கு விசுவாசம் துணைபுரிகிறது
19. இக்கட்டான என்ன நிலைமை, ஈசாக்கு, ரெபெக்காளின் விசுவாசத்தை ஒருபோதும் குலைக்கவில்லை?
19 விசுவாசமிருந்தால் துன்பத்தையுங்கூட நாம் சகிக்க முடியும். ஒருவேளை நம்முடைய குடும்பத்தினரில் முழுக்காட்டுதல் பெற்ற ஒருவர் அவிசுவாசியை மணந்து கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனால் நாம் துக்கத்தில் ஆழ்ந்துவிடலாம். (1 கொரிந்தியர் 7:39) தங்கள் குமாரனாகிய ஏசா தெய்வபக்தியற்ற பெண்களை மணம் செய்ததால் ஈசாக்கும் ரெபெக்காளும் மனவேதனைப்பட்டார்கள். ஏத்தியரான அவனுடைய மனைவிகள் அவர்களுக்கு அந்தளவுக்கு ‘மனநோவாயிருந்தபடியால்’ “ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன” என்று ரெபெக்காள் கூறினாள். (ஆதியாகமம் 26:34, 35; 27:46) என்றாலும், இந்த இக்கட்டான நிலைமை, ஈசாக்கு, ரெபெக்காளின் விசுவாசத்தை ஒருபோதும் குலைக்கவில்லை. இக்கட்டான சூழ்நிலைகள் நமக்கு ஒரு பெரிய சவாலாகையில், உறுதியான விசுவாசத்தை நாம் காத்து வருவோமாக.
20. நகோமியிடமும் ரூத்திடமும் விசுவாசத்தின் என்ன முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன?
20 வயதான நகோமி விதவையாக இருந்த ஒரு யூதப் பெண், யூதா வம்சத்து பெண்கள் சிலருடைய குமாரர்கள் மேசியாவின் முற்பிதாக்களாக ஆவார்கள் என்பதை அறிந்திருந்தாள். அவள் குமாரர்கள் வாரிசின்றி மரித்துவிட்டதாலும், அவளும் பிள்ளை பெறும் வயதை கடந்துவிட்டதாலும், மேசியானிய வம்சாவளியில் அவள் குடும்பத்தினர் இடம் பெறுவதற்கு நிச்சயமாகவே எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. இருந்தாலும், விதவையாகிய அவள் மருமகள் ரூத், வயதான போவாஸின் மனைவியாகி, அவருக்கு ஒரு குமாரனைப் பெற்று, மேசியாவாகிய இயேசுவின் மூதாதையானாள்! (ஆதியாகமம் 49:10, 33; ரூத் 1:3-5; 4:13-22; மத்தேயு 1:1, 5) நகோமிக்கும் ரூத்துவுக்கும் இருந்த விசுவாசம் துன்ப காலத்தில் மங்காதிருந்தது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தது. துன்பத்தின் மத்தியில் விசுவாசத்தைக் காத்துவருவோமானால், நாமும் மிகுந்த மகிழ்ச்சி காண்போம்.
21. விசுவாசம் நமக்கு என்ன செய்கிறது, நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
21 நம் ஒவ்வொருவருக்கும் நாளை என்ன சம்பவிக்கும் என்று சொல்ல முடியாதபோதிலும், விசுவாசத்தால் எந்த கஷ்டத்தையும் நாம் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். விசுவாசம் நமக்கு தைரியத்தை கொடுக்கிறது, பொறுமையையும் அளிக்கிறது. அது உயர்ந்த இலக்குகளை முன்வைக்கிறது, திருப்தியான வாழ்க்கையையும் நமக்கு தருகிறது. மற்றவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் துன்பத்தை மேற்கொள்வதற்கும் உதவுகிறது. ஆகையால், ‘ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய்’ இருப்போமாக. (எபிரெயர் 10:39) நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவா அருளும் பலத்தில் அவருக்கு மகிமையுண்டாக நாம் தொடர்ந்து உறுதியான விசுவாசத்தை காண்பிப்போமாக.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• விசுவாசம் நம்மை தைரியமுள்ளவராக்கும் என்பதற்கு என்ன வேதப்பூர்வ நிரூபணம் இருக்கிறது?
• விசுவாசம் திருப்தியான வாழ்க்கையை அளிக்கிறதென்று நாம் ஏன் சொல்லலாம்?
• விசுவாசம் எவ்வாறு சமாதானத்தை முன்னேற்றுவிக்கிறது?
• துன்பத்தைச் சகிக்க விசுவாசம் நமக்கு உதவுகிறது என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
[பக்கம் 16-ன் படங்கள்]
யெகோவாவின் செய்திகளை அறிவிக்க நோவாவுக்கும் ஏனோக்குக்கும் அவர்களின் விசுவாசமே தைரியத்தைக் கொடுத்தது
[பக்கம் 17-ன் படங்கள்]
மோசேயை போன்ற விசுவாசம் ஆவிக்குரிய இலக்குகளை நாட நம்மை ஊக்குவிக்கிறது
[பக்கம் 18-ன் படங்கள்]
கடவுளுடைய உதவி இருக்கிறது என்ற உறுதி பாராக், தெபொராள், கிதியோன், ஆகியோரின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது