‘மனித வடிவிலான வரங்களை’ பாராட்டுங்கள்
‘உங்களிடையே உழைப்போரை . . . மதித்து நடவுங்கள். அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.’—1 தெசலோனிக்கேயர் 5:12, 13, NW.
1. அப்போஸ்தலர் 20:35-ன்படி, கொடுப்பது என்ன வலிமையை பெற்றிருக்கிறது? விளக்குக.
“வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி.” (அப்போஸ்தலர் 20:35, NW) இயேசுவின் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையென உங்களுக்கு உணர்த்திய சம்பவத்தை ஒருகணம் மனக்கண்ணில் உங்களால் பார்க்க முடிகிறதா? நீங்கள் மிகவும் அருமையாக நேசிக்கும் அன்பர் ஒருவருக்கு கொடுத்த அன்பளிப்பாக அது இருந்திருக்கலாம். அந்த அன்பளிப்பை ஆற அமர யோசித்து தெரிந்தெடுத்தீர்கள், ஏனெனில் அது உங்கள் அன்பரின் உள்ளத்தை கவருவதாக இருக்க வேண்டுமென விரும்பினீர்கள். உங்களுடைய அன்பானவரின் முகத்தில் தோன்றிய புன்னகை மலரை பார்த்தது—ஆ, அது உங்களுடைய இதயத்திற்கு எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! நல்ல நோக்கத்தோடு செய்யும்போது கொடுப்பது ஓர் அன்பான செயலே. மேலும், மனதில் புதைந்து கிடக்கும் மகிழ்ச்சியை வெளியே கொண்டுவரும் வலிமை அன்புக்கு உள்ளது.
2, 3. (அ) யெகோவாவைவிட வேறு எவரும் அதிக மகிழ்ச்சியாக இல்லை என்று எப்படி சொல்லலாம், ‘மனித வடிவிலான வரங்கள்’ எனும் ஏற்பாடு அவருடைய இருதயத்தை எவ்வாறு சந்தோஷப்படுத்தலாம்? (ஆ) கடவுளிடமிருந்து வரும் அன்பளிப்பை நாம் என்ன செய்ய விரும்பமாட்டோம்?
2 அப்படியானால், “நன்மையான எந்த அன்பளிப்பையும்” வழங்குபவராகிய யெகோவாவைவிட யார் அதிக மகிழ்ச்சியடைய முடியும்? (யாக்கோபு 1:17, NW; 1 தீமோத்தேயு 1:11) அவர் தரும் எல்லா அன்பளிப்பும் அன்பால் தூண்டப்பட்டு அருளப்படுகிறது. (1 யோவான் 4:8) கிறிஸ்துவின் மூலம் சபைக்கு கடவுள் தந்த அன்பளிப்பின்—‘மனித வடிவிலான வரங்களின்’—விஷயத்திலும் இது நிச்சயமாகவே உண்மை. (எபேசியர் 4:8) மந்தையை கவனித்துக்கொள்ள மூப்பர்களை கடவுள் ஏற்பாடு செய்தது, தம்முடைய மக்களுக்காக அவர் காண்பித்த ஆழமான அன்பின் வெளிக்காட்டே. இந்த மனிதர்கள் கவனமாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்—அவர்கள் வேதப்பூர்வ தகுதிகளை பூர்த்திசெய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) ‘மந்தையை கனிவுடன் நடத்த’ வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அப்போதுதான் இப்படிப்பட்ட அன்பான மேய்ப்பர்களுக்காக ஆடுகள் நன்றியுடன் இருப்பதற்கு காரணம் இருக்கும். (அப்போஸ்தலர் 20:29, NW; சங்கீதம் 100:3) இத்தகைய நன்றியால் நிரம்பிய இதயம் தம்முடைய ஆடுகளுக்கு இருக்கிறது என்பதை யெகோவா காணும்போது, நிச்சயமாகவே அவருடைய இதயமும் பூரிக்கும்!—நீதிமொழிகள் 27:11.
3 கடவுளிடமிருந்து வரும் அன்பளிப்பின் மதிப்பை நாம் நிச்சயமாகவே குறைக்க விரும்பமாட்டோம்; அவருடைய அன்பளிப்புகளுக்கு போற்றுதல் இல்லாதவர்களாகவும் இருக்க விரும்பமாட்டோம். இதனால் இரண்டு கேள்விகள் எழுகின்றன: சபையில் தங்களுடைய பாகத்தை மூப்பர்கள் எவ்வாறு நோக்க வேண்டும்? ‘மனித வடிவிலான வரங்களை’ தாங்கள் போற்றுவதை மந்தையிலுள்ள மற்றவர்கள் எவ்வாறு காண்பிக்கலாம்?
‘நாங்கள் உம்முடைய உடன் வேலையாட்கள்’
4, 5. (அ) சபையை பவுல் எதற்கு ஒப்பிடுகிறார், இது ஏன் பொருத்தமான உதாரணம்? (ஆ) ஒருவரையொருவர் நோக்கும் மற்றும் நடத்தும் விதத்தைக் குறித்து பவுலின் உதாரணம் என்ன காட்டுகிறது?
4 ‘மனித வடிவிலான வரங்களுக்கு’ சபையில் ஓரளவு அதிகாரத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். நிச்சயமாகவே, மூப்பர்கள் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய விரும்புவதில்லை. ஆனால் அபூரண மானிடர்களாய் இருப்பதால் அவ்வாறு செய்துவிட நேரிடலாம் என்பதை அறிந்திருக்கிறார்கள். அப்படியானால், மந்தையில் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், மூப்பர்கள் தங்களை எவ்வாறு நோக்க வேண்டும்? அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்திய உதாரணத்தை கவனியுங்கள். ‘மனித வடிவில் வரங்கள்’ ஏன் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை பேசிக்கொண்டு வந்தப்பின், பவுல் இவ்வாறு எழுதினார்: “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.” (எபேசியர் 4:15, 16) ஆகவே, மூப்பர்களும் மற்ற அங்கத்தினர்களும் அடங்கிய சபையை மனித சரீரத்திற்கு பவுல் ஒப்பிட்டார். இது ஏன் பொருத்தமான உதாரணம்?
5 மனித சரீரம் பல்வேறு உறுப்புக்களால் ஆனது, ஆனால் ஒரே தலை. இருப்பினும், சரீரத்திலுள்ள எந்த உறுப்புமே—சதையோ நரம்போ இரத்த நாளமோ—பயனற்றதல்ல. ஒவ்வொரு உறுப்பும் மதிப்புமிக்கது, முழு சரீரத்தின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஒவ்வொன்றும் பங்களிக்கிறது. அதைப் போலவே, சபையும் பல்வேறு உறுப்புக்களால் ஆனது, ஆனால் ஒவ்வொரு அங்கத்தினரும்—இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும்—சபையின் மொத்த ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் பங்களிக்க முடியும். (1 கொரிந்தியர் 12:14-26) ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு தான் எந்த விதத்திலும் லாயக்கில்லை என ஒருவரும் நினைக்க வேண்டிய அவசியமில்லை. மறுபட்சத்தில், ஒருவரும் தானே எல்லாம் என்றும் நினைக்க வேண்டியதுமில்லை, ஏனெனில் நாம் அனைவருமே—மேய்ப்பர்களும் ஆடுகளும் ஒன்றுபோலவே—சரீரத்தின் அங்கமாக இருக்கிறோம், ஒரே தலையாகிய கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் காண்பிக்க வேண்டிய குணங்களாகிய அன்பு, அக்கறை, மரியாதை போன்ற கனிவான சூழலை பவுல் வர்ணிக்கிறார். மூப்பர்கள் இதைப் புரிந்துகொள்வது சபையில் தங்களுடைய பாகத்தை மனத்தாழ்மையோடும் சமநிலையோடும் நோக்குவதற்கு உதவுகிறது.
6. பவுலுக்கு அப்போஸ்தல அதிகாரம் இருந்தபோதிலும், அவர் எவ்வாறு தாழ்மையான குணத்தைக் காண்பித்தார்?
6 ‘மனித வடிவில் வரங்களாகிய’ இவர்கள் தங்களுடைய உடன் வணக்கத்தாரின் வாழ்க்கையை அல்லது விசுவாசத்தை ஆட்டிப்படைக்க முயற்சி செய்யக்கூடாது. பவுலுக்கு அப்போஸ்தல அதிகாரம் இருந்தபோதிலும், கொரிந்தியருக்கு தாழ்மையுடன் இவ்வாறு சொன்னார்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.” (2 கொரிந்தியர் 1:24) தன்னுடைய சகோதரர்களின் விசுவாசத்தையோ வாழ்க்கை முறையையோ ஆட்டிப்படைக்க பவுல் விரும்பவில்லை. சொல்லப்போனால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியத்தையும் அவர் காணவில்லை. ஏனெனில் அவர்கள் சரியானதைச் செய்ய விரும்பினதால் ஏற்கெனவே விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களுமாய் யெகோவாவின் அமைப்பில் இருந்தார்கள் என தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆகவே, தன்னைப் பற்றியும் தன்னுடைய பயணத் தோழனாகிய தீமோத்தேயுவை பற்றியும் பேசுகையில், பவுல் இவ்வாறு சொன்னார்: ‘கடவுளை சந்தோஷத்தோடு சேவிப்பதற்கு உங்களுடன் உழைப்பதே எங்களுடைய வேலை.’ (2 கொரிந்தியர் 1:1, NW) என்னே ஒரு தாழ்மையான குணம்!
7. சபையில் தங்களுடைய பாகத்தைக் குறித்ததில் தாழ்மையான மூப்பர்கள் எதை உணருகின்றனர், தங்களுடைய உடன் வேலையாட்களிடம் எப்படிப்பட்ட நம்பிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள்?
7 ‘மனித வடிவில் வரங்களுக்கு’ இன்றும் அதே வேலை இருக்கிறது. அவர்கள் ‘நம்முடைய சந்தோஷத்திற்கு உடன் வேலையாட்கள்.’ கடவுளுக்கு செய்யும் சேவையில் மற்றவர்கள் எவ்வளவு செய்ய முடியும் என்பதை தீர்மானிப்பது தங்களுடைய வேலை அல்ல என்பதை தாழ்மையான மூப்பர்கள் உணருகின்றனர். தங்களுடைய ஊழியத்தை விரிவாக்க அல்லது முன்னேற்றுவிக்க மற்றவர்களுக்கு உற்சாகமளிக்கிறபோதிலும், கடவுளுக்கு சேவை செய்வது மனப்பூர்வமான இருதயத்திலிருந்து வரவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். (2 கொரிந்தியர் 9:7-ஐ ஒப்பிடுக.) தங்களுடைய உடன் வேலையாட்கள் சந்தோஷமாக இருந்தால், தங்களால் இயன்றதை அவர்கள் செய்வார்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ‘மகிழ்ச்சியோடே யெகோவாவை சேவிக்க’ சகோதரர்களுக்கு உதவுவதே அவர்களுடைய இருதயப்பூர்வமான ஆசை.—சங்கீதம் 100:2, NW.
சந்தோஷத்துடன் சேவிக்க அனைவருக்கும் உதவுதல்
8. யெகோவாவை மகிழ்ச்சியோடு சேவிக்க தங்களுடைய சகோதரர்களுக்கு மூப்பர்கள் உதவக்கூடிய சில வழிகள் யாவை?
8 மூப்பர்களே, சந்தோஷத்துடன் சேவிக்க உங்களுடைய சகோதரர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்? முன்மாதிரியால் உற்சாகப்படுத்தலாம். (1 பேதுரு 5:3) ஊழியத்தில் உங்களுடைய வைராக்கியமும் சந்தோஷமும் தெரிவதாக. அதனால் மற்றவர்கள் உங்களுடைய முன்மாதிரியை பின்பற்றுவதற்கு தூண்டப்படுவார்களாக. முழு ஆத்துமாவோடு செய்யும் முயற்சிகளுக்கு மற்றவர்களைப் பாராட்டுங்கள். (எபேசியர் 4:29) கனிவான, உள்ளப்பூர்வமான பாராட்டு, பயனுள்ளவர்களாகவும் தேவைப்படுகிறவர்களாகவும் இருப்பதை உணர பிறருக்கு உதவுகிறது. இது, கடவுளை சேவிப்பதில் தங்களாலான அனைத்தையும் செய்ய விரும்புவதற்கு ஆடுகளை உற்சாகப்படுத்துகிறது. மற்றவர்களுடன் சாதகமற்ற விதத்தில் ஒப்பிடுவதை தவிருங்கள். (கலாத்தியர் 6:4) இப்படி ஒப்பிடுவது மற்றவர்கள் முன்னேற உந்துவிப்பதற்குப் பதிலாக உற்சாகமிழக்கவே செய்விக்கிறது. அதோடு, யெகோவாவின் ஆடுகள் பல்வகை சூழலையும் திறமையையும் கொண்ட தனிநபர்கள். பவுலைப் போல, உங்களுடைய சகோதரர்களில் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள். அன்பு ‘சகலத்தையும் நம்பும்,’ ஆகவே நம்முடைய சகோதரர்கள் கடவுளிடம் அன்புகூருகிறார்கள், அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறார்கள் என்பதை நம்ப வேண்டும். (1 கொரிந்தியர் 13:7) நீங்கள் ‘மற்றவர்களுக்கு மரியாதை காட்டும்போது’ அவர்களிடம் உள்ள மிகச் சிறந்த குணத்தை வெளிக்கொணர முடியும். (ரோமர் 12:10) சபையார் உற்சாகப்படுத்தப்படும்போது, அல்லது புத்துணர்ச்சியூட்டப்படும்போது, கடவுளை சேவிப்பதில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள், அந்த சேவையில் சந்தோஷத்தையும் கண்டடைவார்கள் என்பதில் மூப்பர்களாகிய நீங்கள் உறுதியாயிருங்கள்.—மத்தேயு 11:28-30.
9. ஒவ்வொரு மூப்பரும் மகிழ்ச்சியோடு சேவிப்பதற்கு உடன் மூப்பர்களின் எப்படிப்பட்ட நோக்குநிலை உதவும்?
9 உங்களை ‘உடன் ஊழியராக’ தாழ்மையுடன் நோக்குவது மகிழ்ச்சியோடு சேவிப்பதற்கும் உடன் மூப்பர்கள் என்ற ஒப்பற்ற பரிசை போற்றுவதற்கும் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு மூப்பருக்கும் சொந்த திறமைகளும் ஆற்றல்களும் இருக்கின்றன, அதை அவர் சபையின் நன்மைக்காக பயன்படுத்தலாம். (1 பேதுரு 4:10) ஒருவருக்கு போதிக்கும் வரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். மற்றொருவர் திறம்பட்ட ஒழுங்கமைப்பாளராக இருக்கலாம். இன்னும் ஒருவர் கனிவானவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருப்பதால் அவரிடம் எவருமே தாராளமாக நெருங்கி பேசத்தக்கவராக இருக்கலாம். உண்மை என்னவென்றால், எந்த மூப்பருக்கும் எல்லா வரமும் ஒரே அளவில் இல்லை. ஒரு மூப்பர் குறிப்பிட்ட வரத்தைப் பெற்றிருப்பது—உதாரணமாக, போதிக்கும் வரத்தைப் பெற்றிருப்பது—மற்றொரு மூப்பரைவிட உயர்ந்தவராக்குகிறதா? இல்லவே இல்லை! (1 கொரிந்தியர் 4:7) மறுபட்சத்தில், மற்றொருவரது வரத்தைக் குறித்து பொறாமைகொள்ளவோ அல்லது மற்றொரு மூப்பருடைய திறமைகளுக்கு பாராட்டு கிடைப்பதால் தகுதியற்றவராக உணரவோ வேண்டிய அவசியமில்லை. யெகோவாவுக்குப் பிடித்தமான வரங்கள் உங்களிடமும் இருக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். அந்த வரங்களை வளர்த்துக்கொள்ளவும் உங்களுடைய சகோதரர்களுக்காக அவற்றை பயன்படுத்தவும் அவர் உங்களுக்கு உதவ முடியும்.—பிலிப்பியர் 4:13.
‘கீழ்ப்படிந்து அடங்குங்கள்’
10. ‘மனித வடிவிலான வரங்களுக்கு’ மதிப்பு தெரிவிப்பது ஏன் பொருத்தமானது?
10 நாம் ஒரு பரிசைப் பெறும்போது, நன்றி தெரிவிப்பது பொருத்தமானதே. ‘நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள்’ என கொலோசெயர் 3:15 சொல்கிறது. அப்படியானால், யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் விலையேறப்பெற்ற வரமாகிய ‘மனித வடிவில் வரங்களைப்’ பற்றியென்ன? முதலாவதாக, தாராளமாய் கொடுப்பவராகிய யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ‘மனித வடிவில் வரங்களைப்’ பற்றியென்ன? அவர்களை நாம் மதிப்புடன் நோக்குகிறோம் என்பதை எவ்வாறு காண்பிக்கலாம்?
11. (அ) ‘மனித வடிவிலான வரங்களுக்கு’ நம்முடைய மதித்துணர்வை எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டலாம்? (ஆ) ‘கீழ்ப்படிந்திருங்கள்,’ ‘அடங்கி நடவுங்கள்’ என்ற சொற்றொடர்களின் முக்கியத்துவம் என்ன?
11 பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளுக்கும் தீர்மானங்களுக்கும் உடனடியாக செவிசாய்த்து நடப்பதன் மூலம் ‘மனித வடிவில் வரங்களுக்கு’ நம்முடைய மதித்துணர்வை காண்பிக்கலாம். பைபிள் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.” (எபிரெயர் 13:17) முன்னின்று வழிநடத்துகிறவர்களுக்கு வெறுமனே ‘கீழ்ப்படிகிறவர்களாக’ மட்டுமல்ல, ‘அடங்கி நடப்பவர்களாகவும்’ இருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். ‘அடங்கி நடப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக ‘வளைந்துகொடுங்கள்’ என்பதை அர்த்தப்படுத்துகிறது. ‘கீழ்ப்படியுங்கள்,’ ‘அடங்கி நடவுங்கள்’ என்ற சொற்களுக்கு விளக்கவுரை அளிக்கையில் பைபிள் அறிஞர் ஆர். சி. எச். லென்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்: “செய்யும்படி சொல்லப்பட்ட ஒரு காரியத்திற்கு ஒருவர் ஒத்துப்போகும்போது அவர் கீழ்ப்படிகிறார். அது சரியானது, பயனுள்ளது என்பதை நம்பும்படி செய்யப்படுகிறார். மாறுபட்ட கருத்து எழும்பும்போது . . . அவர் இணங்கிப் போகிறார்.” முன்னின்று நடத்துகிறவர்களுடைய கட்டளையைப் புரிந்துகொண்டு அதற்கு ஒத்துப்போகும்போது, கீழ்ப்படிதல் உடனடியாக வருகிறது. குறிப்பிட்ட ஒரு தீர்மானத்திற்கு பின்னாலுள்ள காரணத்தை நாம் புரிந்துகொள்ளாதபோது என்ன செய்வது?
12. குறிப்பிட்ட ஒரு தீர்மானத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தை முழுமையாக புரிந்துகொள்ளாதபோதிலும், நாம் ஏன் அடங்கி, அல்லது இணங்கி நடக்க வேண்டும்?
12 இங்கேதான் நாம் அடங்கி நடக்கவேண்டிய, அல்லது இணங்கிப்போக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏன்? ஒரு விஷயம் என்னவென்றால், ஆவிக்குரிய தகுதிபெற்ற இவர்கள் நம்முடைய மிகச் சிறந்த நன்மைகளை மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதை நம்ப வேண்டும். சொல்லப்போனால், தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகளுக்காக யெகோவாவுக்கு கணக்குக்கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். (யாக்கோபு 3:1) கூடுதலாக, நன்கு ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு வழிநடத்திய இரகசிய விஷயங்கள் அனைத்தும் நமக்கு தெரியாமல் இருக்கலாம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.—நீதிமொழிகள் 18:13.
13. மூப்பர்களுடைய நியாயவிசாரணை தீர்மானங்களைக் குறித்ததில் அடங்கி நடக்க நமக்கு எது உதவும்?
13 நியாயவிசாரணை தீர்மானங்களுக்கு வருகையில் அடங்கி நடப்பதைப் பற்றியென்ன? இது சுலபம் அல்ல, முக்கியமாக நாம் நேசிப்பவரை—உறவினரையோ நெருங்கிய நண்பரையோ—சபைநீக்கம் செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்படும்போது அடங்கி நடப்பது கடினம் என்பது உண்மைதான். இங்கேயும், ‘மனித வடிவில் வரங்களின்’ தீர்ப்புக்கு இணங்கிப்போவது மிகவும் நல்லது. அவர்கள் நம்மைப்போல் உணர்ச்சிவயப்படாமல் காரியங்களை நியாயமாக சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் இருக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு நம்மைவிட அநேக உண்மைகள் தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட தீர்மானங்களுக்காக பெரும்பாலும் அவர்கள் வருந்துகிறார்கள்; ‘யெகோவாவுக்காக நியாயந்தீர்ப்பது’ உண்மையிலேயே யோசனையோடு செய்யவேண்டிய முக்கியமான உத்தரவாதம். (2 நாளாகமம் 19:6) இரக்கமுள்ளவர்களாக இருப்பதற்கு அனைத்து முயற்சியையும் செய்கிறார்கள், கடவுள் ‘மன்னிக்க தயாராயிருக்கிறார்’ என்பதையும் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 86:5) ஆனால், சபையை அவர்கள் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும், மனந்திரும்பாத பாவிகளை சபைநீக்கம் செய்யவேண்டும் எனவும் பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 5:11-13) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறிழைத்தவரே அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறார். அவருடைய புத்தி தெளிய வேண்டும் என்பதற்கே சிட்சை கொடுக்கப்படுகிறது. தவறிழைத்தவருக்குப் பிரியமானவர்களாகிய நாம் நியாயத்தீர்ப்புக்கு அடங்கி நடந்தால், அந்தச் சிட்சையிலிருந்து நன்மையடைய நாம் அவருக்கு உதவிசெய்பவர்களாக இருப்போம்.—எபிரெயர் 12:11.
‘அவர்களுக்கு அளவுகடந்த மதிப்பு கொடுங்கள்’
14, 15. (அ) 1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ன்படி, மூப்பர்கள் நம்முடைய கரிசனையைப் பெற ஏன் தகுதியானவர்கள்? (ஆ) மூப்பர்கள் ‘கடினமாக உழைப்பவர்கள்’ என ஏன் சொல்லலாம்?
14 ‘மனித வடிவில் வரங்களுக்கு’ கரிசனை காட்டுவதன் மூலமும் நம்முடைய போற்றுதலை வெளிக்காட்டலாம். தெசலோனிக்கேய சபைக்கு எழுதும்போது, அங்குள்ள அங்கத்தினர்களுக்கு பவுல் இவ்வாறு புத்திமதி கூறினார்: “உங்களுக்குள்ளே கடினமாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்தி சொல்கிறவர்களை மதித்து, அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களுக்கு அளவுகடந்த மதிப்பு கொடுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:12, 13, NW) ‘கடினமாக உழைத்தல்’—நம் சார்பாக சுயநலமின்றி தங்களையே அர்ப்பணிக்கும் மூப்பர்களை இது வர்ணிக்கவில்லையா? இந்த அன்பான சகோதரர்கள் சுமக்கும் பாரமான சுமையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
15 பெரும்பாலான மூப்பர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டியதால் வேலை செய்கிற குடும்பஸ்தர்களாக இருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:8) மூப்பர்களுக்குப் பிள்ளைகள் இருந்தால், இந்தச் சிறுபிள்ளைகளுக்கு தங்களுடைய தகப்பனிடமிருந்து நேரமும் கவனிப்பும் தேவை. பள்ளி பாடங்களில் அவர்களுக்கு உதவியளிக்க வேண்டும், ஆரோக்கியமான பொழுதுபோக்கில் இளமை துடிப்புடன் ஈடுபடுவதற்கு அவர்களோடு நேரம் செலவிடுவதற்கு திட்டமிட வேண்டும். (பிரசங்கி 3:1, 4) மிக முக்கியமாக, அவர் தன்னுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும், தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்த வேண்டும், வெளி ஊழியத்தில் அவர்களோடு வேலைசெய்ய வேண்டும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். (உபாகமம் 6:4-7; எபேசியர் 6:4) பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பொறுப்புகளோடு மூப்பர்களுக்கு கூடுதலான வேலைகள் இருக்கின்றன: கூட்டங்களுக்காக தயாரித்தல், மேய்ப்பு சந்திப்பு செய்தல், சபையின் ஆவிக்குரிய நலத்தை கவனித்துக்கொள்ளுதல், தேவைப்படுகையில், நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாளுதல் போன்ற வேலைகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வட்டார மாநாடுகள், மாவட்ட மாநாடுகள், ராஜ்ய மன்ற கட்டுமானம், மருத்துவ ஆலோசனை குழுக்கள் போன்றவை சம்பந்தமாக சிலருக்கு கூடுதலான பொறுப்புகள் இருக்கின்றன. உண்மையிலேயே இந்தச் சகோதரர்கள் ‘கடினமாக உழைக்கிறார்கள்’!
16. மூப்பர்களுக்கு நம் கரிசனையை காண்பிக்கும் வழிகளை விவரியுங்கள்.
16 அவர்களுக்கு எவ்வாறு நாம் மதிப்புக் காட்டலாம்? பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு கூறுகிறது: “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” (நீதிமொழிகள் 15:23; 25:11) ஆகவே, உள்ளப்பூர்வமான போற்றுதலையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் நம் வார்த்தைகள் அவர்களுடைய கடினமான வேலையை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளவில்லை என்பதை காண்பிக்கலாம். அதோடு, அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் காரியங்களும் நியாயமானவையாக இருக்க வேண்டும். அதேசமயத்தில், உதவிக்காக அவர்களை அணுகுவதற்கு நாம் தயங்கக்கூடாது. ‘நம்முடைய இருதயம் கடும் வேதனையில்’ இருக்கும் சமயங்கள் வரலாம், நமக்கு வேதப்பூர்வமான உற்சாகம், வழிநடத்துதல், அல்லது கடவுளுடைய வார்த்தையை ‘போதிப்பதற்கு திறமை பெற்றவர்களிடமிருந்து’ அறிவுரை தேவைப்படலாம். (சங்கீதம் 55:4; 1 தீமோத்தேயு 3:2) அதேசமயத்தில், ஒரு மூப்பர் நமக்கு அதிக நேரத்தை செலவிடுவதால், தன்னுடைய சொந்த குடும்பத்தின் அல்லது சபையிலுள்ள மற்றவர்களின் தேவைகளை அசட்டை செய்ய முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்கும் இவர்களுக்கு ‘இரக்கம் காட்டுவதன்’ மூலம், அவர்களிடம் நியாயமற்ற விதத்தில் அதிகம் எதிர்பார்க்க மாட்டோம். (1 பேதுரு 3:8) மாறாக, நமக்கு நியாயமாக அவர்கள் கொடுக்கும் நேரத்திற்கும் கவனிப்பிற்கும் மதித்துணர்வைக் காட்டுவோமாக.—பிலிப்பியர் 4:5.
17, 18. மூப்பர்களுடைய மனைவிமார் அநேகர் என்ன தியாகத்தைச் செய்கிறார்கள், உண்மையுள்ள அந்தச் சகோதரிகளை நாம் அசட்டை செய்வதில்லை என்பதை எவ்வாறு காண்பிக்கலாம்?
17 மூப்பர்களுடைய மனைவிகளைப் பற்றியென்ன? அவர்களும் நம்முடைய மரியாதையைப் பெற தகுதியானவர்கள் அல்லவா? சொல்லப்போனால், அவர்கள் தங்களுடைய கணவர்கள் தங்களோடு செலவிடும் நேரத்தை சபையாருக்காக விட்டுக் கொடுக்கிறார்கள். இது, அவர்களுடைய பங்கில் தியாகத்தை கேட்கிறது. அவ்வப்பொழுது, குடும்பங்களுடன் அளவளாவி மகிழ்வதற்காக ஒதுக்கியிருக்கும் மாலை நேர இனிய பொழுதுகளை சபை காரியங்களை கவனிப்பதற்காக செலவிடும் கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலான சபைகளில், உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள் மனப்பூர்வமாக இப்படிப்பட்ட தியாகங்களை செய்கிறார்கள், இதன் காரணமாக கணவர்கள் யெகோவாவின் ஆடுகளை கவனித்துக்கொள்ள முடிகிறது.—ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 12:15.
18 உண்மையுள்ள இந்தக் கிறிஸ்தவ சகோதரிகளை நாம் அசட்டை செய்யவில்லை என்பதை எவ்வாறு காண்பிக்கலாம்? அவர்களுடைய கணவரிடம் அளவுக்கு மிஞ்சி உதவியை எதிர்பார்க்காமல் இருப்பதன் மூலமே. ஆனால் சிறுசிறு பாராட்டுகளுக்கு இருக்கும் வல்லமையை மறந்துவிடாதிருப்போமாக. நீதிமொழிகள் 16:24 இவ்வாறு சொல்கிறது: “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” இந்த அனுபவத்தைக் கவனியுங்கள். கூட்டம் முடிந்தப்பின், மூப்பர் ஒருவரை ஒரு தம்பதியினர் அணுகி தங்களுடைய டீனேஜ் மகனைப் பற்றி அவரிடம் பேச விரும்புவதாக சொன்னார்கள். அந்தத் தம்பதியினருடன் அந்த மூப்பர் பேசுகையில், அவருடைய மனைவி பொறுமையாக காத்திருந்தார். அதன்பிறகு, மூப்பருடைய மனைவியை அந்தத் தாய் அணுகி இவ்வாறு சொன்னார்: “என்னுடைய குடும்பத்திற்கு உதவிசெய்ய உங்களுடைய கணவர் நேரம் செலவழித்ததற்காக உங்களுக்கு நன்றி.” மதித்துணர்வைக் காட்டும் இந்த எளிய, இனிமையான வார்த்தைகள் அந்த மூப்பருடைய மனைவியின் இதயத்தை தொட்டன.
19. (அ) ஒரு தொகுதியாக மூப்பர்கள் என்ன நோக்கங்களை உண்மையுடன் நிறைவேற்றுகிறார்கள்? (ஆ) எதைச் செய்ய நாம் அனைவரும் திடதீர்மானத்துடன் இருக்க வேண்டும்?
19 ஆடுகளை கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் செய்யும் உதவி யெகோவாவின் ‘நன்மையான வரங்களில்’ ஒன்றாகும். (யாக்கோபு 1:17) இந்த மனிதர்கள் பரிபூரணர் இல்லைதான், நம்மைப் போலவே, அவர்களும் தவறுகள் செய்கின்றனர். (1 இராஜாக்கள் 8:46) ஆனால், ஒரு தொகுதியாக, உலகளாவிய சபையிலுள்ள மூப்பர்கள் தங்களுக்காக யெகோவா மனதில் கொண்டிருக்கும் நோக்கங்களை—அதாவது, சீர்பொருந்தப் பண்ணுவதற்கும், கட்டியெழுப்புவதற்கும், ஐக்கியப்படுத்துவதற்கும், மந்தையை பாதுகாப்பதற்குமான நோக்கங்களை—உண்மையோடு நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொரு மூப்பரும் யெகோவாவின் ஆடுகளை கனிவோடு தொடர்ந்து கவனித்துக்கொள்வதற்கு திடதீர்மானத்துடன் இருப்பார்களாக. இதன்மூலம் தன்னுடைய சகோதரர்களுக்கு தன்னை ஒரு வரமாக, அல்லது ஆசீர்வாதமாக ஆக்கலாம். அவர்களுக்கு கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதன் மூலமும், அவர்களுடைய கடின உழைப்புக்காக அவர்களுக்கு மதிப்பு காண்பிப்பதன் மூலமும் ‘மனித வடிவிலான வரங்களுக்கு’ நம்முடைய போற்றுதலை காண்பிப்பதற்கு நாம் அனைவரும் திடதீர்மானமாக இருப்போமாக. யெகோவா அன்புடன் அளித்த மனிதர்களுக்காக நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்! ‘மகிழ்ச்சியோடு கடவுளை சேவிப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்வதே எங்களுடைய வேலை’ என மேய்ப்பர்கள் அவருடைய ஆடுகளிடம் சொல்கின்றனர்!
எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ சபையை சரீரத்திற்கு ஒப்பிடுவது ஏன் பொருத்தமானது?
◻ யெகோவாவை மகிழ்ச்சியுடன் சேவிப்பதற்கு மூப்பர்கள் எவ்வாறு தங்களுடைய சகோதரர்களுக்கு உதவலாம்?
◻ முன்னின்று வழிநடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாக மட்டுமல்ல, ஏன் அடங்கி நடப்பவர்களாகவும் இருக்க வேண்டும்?
◻ மூப்பர்களுக்கு எவ்வாறு நம்முடைய மதித்துணர்வைக் காட்டலாம்?
[பக்கம் 16-ன் படம்]
மூப்பர்களே, முழு ஆத்துமாவோடு மற்றவர்கள் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுங்கள்
[பக்கம் 17-ன் படம்]
ஊழியத்தில் தங்களுடைய வைராக்கியமான முன்மாதிரியின் மூலம், குடும்ப அங்கத்தினர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சியோடு சேவிப்பதற்கு உதவலாம்
[பக்கம் 18-ன் படம்]
கடினமாக உழைக்கும் நம்முடைய மூப்பர்களை நாம் பாராட்டுகிறோம்!