பைபிளின் கருத்து
மன்னித்து மறந்துவிடுங்கள்—அது எப்படி முடியும்?
“நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினைக்கமாட்டேன்.”—எரேமியா 31:34, NW.
எரேமியா தீர்க்கதரிசியால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் யெகோவாவுடைய இரக்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை வெளிப்படுத்துகின்றன: அவர் மன்னிக்கும்போது, மறக்கவும் செய்கிறார். (ஏசாயா 43:25) “யெகோவா உங்களுக்குத் தாராளமாக மன்னித்ததுபோல, நீங்களும் தாராளமாக மன்னியுங்கள்,” என்று பைபிள் மேற்கொண்டு சொல்கிறது. (கொலோசெயர் 3:13, NW) ஆகையால் கிறிஸ்தவர்களாக நாம் யெகோவாவின் மன்னிக்கும் குணத்தைப் பின்பற்ற வேண்டும்.
எனினும் முக்கியமான சில கேள்விகள் எழும்புகின்றன. யெகோவா மன்னிக்கையில், அதன்பிறகு நம்முடைய பாவங்கள் உண்மையில் அவருடைய ஞாபகத்தில் இருப்பதே இல்லையா? ஆகவே மன்னிக்கும்போதும், ஞாபகப்படுத்தியே பார்க்கமுடியாத விதத்தில் நாம் மறக்கவேண்டுமா? நாம் அவ்விதத்தில் மறக்கவில்லையென்றால், உண்மையிலேயே மன்னிக்கவில்லை என்று சொல்லலாமா?
யெகோவா மன்னிக்கும் விதம்
மன்னிப்பதில் கோபத்தை நீக்குவதும் உள்ளடங்கியிருக்கிறது. யெகோவா மன்னிக்கும்போது, அவர் அதைத்தான் முழுமையாக செய்கிறார்.a சங்கீதக்காரன் தாவீது எழுதினார்: “[யெகோவா] எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். மேற்கும் கிழக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.”—சங்கீதம் 103:9, 12, 13.
அப்போஸ்தலர் 3:19-ல் (NW) கடவுள் எவ்வளவு பூரணமாக மன்னிக்கிறார் என்பது மேலும் விவரிக்கப்பட்டிருக்கிறது: “ஆகவே, உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும்படி மனம்திரும்புங்கள்.” “அழிக்கப்படும்படி” என்ற சொற்றொடர் “துடைத்தகற்று, துடைத்தழி” என்று அர்த்தப்படும் (எக்ஸலீஃபோ) என்ற ஒரு கிரேக்க வினைச்சொல்லில் இருந்து வருகிறது. (வெளிப்படுத்துதல் 7:17; 21:4-ஐக் காண்க.) தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமன்ட் தியாலஜி இவ்வாறு விவரிக்கிறது: “இந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருவேளை மற்ற சந்தர்ப்பங்களிலும் இந்த வினைச்சொல்லால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்து அநேகமாக, மெழுகினால் ஆன எழுதுப்பலகையின் மேல்பரப்பை மீண்டும் பயன்படுத்துவதற்காக சமப்படுத்துதல் ([ஒப்பிடுக] ‘சிலேட்டை சுத்தமாக துடைத்தழித்தல்’) என்பதாகவே இருக்கிறது.” நாம் நம்முடைய பாவங்களுக்காக மனம்திரும்பும்போது, யெகோவா பதிவையெல்லாம் சுத்தமாகத் துடைத்தழிக்கிறார். இதுதானே நம்முடைய பாவங்கள் இனிமேலும் அவருடைய ஞாபகத்தில் இல்லை என்று அர்த்தப்படுத்துகிறதா? பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு உதாரணத்தை நாம் சிந்திக்கலாம்.
தாவீது ராஜா பத்சேபாளோடு விபசாரம் செய்துவிட்டு, அவளுடைய புருஷனைக் கொல்ல ஏற்பாடு செய்வதன்மூலம் அதை மூடிமறைக்க முயன்றார். அப்போது தாவீதைக் கண்டிக்க யெகோவா தமது தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்பினார். (2 சாமுவேல் 11:1-17; 12:1-12) அதன் பலன் என்னவாக இருந்தது? தாவீது உண்மையிலேயே மனம்திரும்பினார், ஆகவே யெகோவாவும் அவரை மன்னித்தார். (2 சாமுவேல் 12:13; சங்கீதம் 32:1-5) தாவீதின் பாவங்களை யெகோவா மறந்தாரா? இல்லவேயில்லை! பைபிள் எழுத்தாளர்களாகிய காத்தும் நாத்தானும் அதற்குப் பிறகு இந்த முழு சம்பவத்தையும் தாவீதின் மரணத்திற்கு சற்றுமுன் 2 சாமுவேல் புத்தகத்தில் (பொ.ச.மு. சுமார் 1040-ல் எழுதி முடிக்கப்பட்டது) எழுதிவைத்தனர்.
ஆகவே தாவீதுடைய பாவங்களைப்பற்றிய பதிவும் அல்லது ஞாபகமும்—அவர் மனம்திரும்பியது, அதைத் தொடர்ந்து யெகோவா அவரை மன்னித்தது ஆகியவற்றின் பதிவும்—பைபிளை வாசிப்பவர்களுடைய நன்மைக்காக இதுநாள் வரையாக தொடர்ந்திருக்கிறது. (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11) உண்மையில் “[பைபிளில் அடங்கியுள்ள] கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்,” ஆகையால் தாவீதின் பாவங்களின் பதிவு ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!—1 பேதுரு 1:25.
அப்படியானால், நம்முடைய பாவங்களுக்காக நாம் உள்ளூர மனம்திரும்புகையில் யெகோவா பதிவை சுத்தமாக துடைத்தழிக்கிறார் என்று எவ்வாறு சொல்லமுடியும்? “அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நான் நினைக்கமாட்டேன்,” என்ற யெகோவாவின் வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது?—எரேமியா 31:34, NW.
யெகோவா மறக்கும் விதம்
‘நான் நினைக்க’ (ஸாக்கார் என்ற வார்த்தையின் ஒரு வடிவம்) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வினைச்சொல் ஏதோ கடந்த காலத்தை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவருவதை மட்டும் அர்த்தப்படுத்தாது. தியலாஜிக்கல் உவர்ட்புக் ஆஃப் தி ஓல்ட் டெஸ்டமென்ட் சொல்லுகிறபடி இது, “குறிப்பிடு, அறிவி, திரும்பத்திரும்ப சொல், தெரிவி, அழை, ஞாபகப்படுத்து, குற்றம்சுமத்து, வெளிப்படையாக சொல்,” என்றெல்லாம் அர்த்தப்படுத்தலாம். “அடிக்கடி, [ஸாக்கார்] உண்மையில் ஒரு செயலைக் குறிக்கிறது அல்லது செயலின் வினைச்சொற்களோடு இணைந்து வருவதாகத் தோன்றுகிறது,” என்று தியலாஜிக்கல் டிக்ஷ்னரி ஆஃப் தி ஓல்ட் டெஸ்டமென்ட் மேலும் கூறுகிறது. ஆகையால், யெகோவா “அவர்கள் அக்கிரமத்தை நினை”ப்பார் என்று, தாறுமாறான போக்கில் போன தம்முடைய ஜனங்களைப்பற்றி சொல்கிறாரென்றால், மனம்திரும்பாததற்காக அவர்கள்மேல் நடவடிக்கை எடுப்பார் என்றே அர்த்தப்படுத்துகிறார். (எரேமியா 14:10) அதற்கு எதிரிடையாக, “அவர்கள் பாவங்களை இனி நான் நினைக்கமாட்டேன்,” என்று யெகோவா சொல்லும்போது, அவர் நம்முடைய பாவங்களை ஒருமுறை மன்னித்துவிட்டால், நம்மைக் குற்றப்படுத்தவோ, கண்டனம் செய்யவோ, அல்லது தண்டிக்கவோ அவற்றை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருவதில்லை என உறுதியளிக்கிறார்.
என்ன அர்த்தத்தில் அவர் மன்னித்து மறந்துவிடுகிறார் என்பதை தீர்க்கதரிசி எசேக்கியேல் மூலம் யெகோவா விவரித்தார்: “துன்மார்க்கன் தான் செய்த சகல பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் நியமங்களையெல்லாம் கைக்கொண்டு நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில் அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா பாதகங்களும் அவனுக்கு விரோதமாய் நினைக்கப்படுவதில்லை; தான் செய்த நீதியிலே அவன் பிழைப்பான்.” (எசேக்கியேல் 18:21, 22; 33:14-16, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆம், மனம்திரும்பிய ஒரு பாவியை யெகோவா மன்னிக்கும்போது, பதிவை சுத்தமாக துடைத்தழித்து மறக்கிறார். அதாவது எதிர்காலத்தில் எப்போதாவது அந்தப் பாவங்களுக்காக அவனுக்கு எதிராக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்.—ரோமர் 4:7, 8.
நாம் அபூரணர்களாக இருப்பதால், யெகோவா மன்னிப்பதைப் போன்று பரிபூரணமாக ஒருபோதும் மன்னிக்கமுடியாது; அவருடைய எண்ணங்களும் வழிகளும் நம்முடையவற்றைவிட அளவற்று உயர்ந்தவையாய் இருக்கின்றன. (ஏசாயா 55:8, 9) அப்படியானால் மற்றவர்கள் நமக்கெதிராக பாவம் செய்யும்போது, நாம் எந்தளவுக்கு மன்னித்து மறந்துவிடும்படி நியாயமாக எதிர்பார்க்கப்பட முடியும்?
நாம் எப்படி மன்னித்து மறந்துவிட முடியும்
“ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்,” என்று உந்துவிக்கிறது எபேசியர் 4:32, (NW). சொற்களஞ்சிய ஆசிரியர் டபிள்யு. இ. வைன் சொல்லுகிறபடி, “தாராளமாக மன்னியுங்கள்” (கரைஸோமை) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை “நிபந்தனையின்றி தயவுகாட்டுவதை” அர்த்தப்படுத்துகிறது. நமக்கு எதிராக செய்யப்படும் குற்றங்கள் சிறியனவாக இருந்தால், மன்னிப்பது நமக்கு அவ்வளவு கஷ்டமாக இல்லாமல் இருக்கலாம். நாமும் அபூரணர்கள்தான் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பது மற்றவர்களுடைய குற்றங்களை நாம் பொறுத்துக்கொள்ள உதவுகிறது. (கொலோசெயர் 3:13) நாம் மன்னிக்கும்போது, கோபத்தை நீக்கிக்கொள்கிறோம், ஆகையால் குற்றம் இழைத்தவரோடு வைத்திருக்கும் உறவுமுறைக்கு நீண்டநாள் தீங்கு எதுவும் ஏற்படாது. நாளடைவில், அப்படிப்பட்ட எந்தச் சிறு குற்றங்களைப் பற்றிய நினைவுகளும் மனதிலிருந்து மறைந்துபோய்விடலாம்.
இருந்தபோதிலும், மற்றவர்கள் நமக்கு எதிராக மோசமான குற்றத்தை செய்து நமக்கு ஆழமாக தீங்கிழைத்துவிட்டால் அப்போது என்ன? முறைதகாப் புணர்ச்சி, கற்பழிப்பு, கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றங்களை மன்னிப்பதில் அநேக விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக குற்றமிழைத்தவரின் பாகத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வதோ, மனம்திரும்புவதோ, மன்னிப்புக் கேட்பதோ இல்லாமல் இருக்குமானால் இது விசேஷமாய் மெய்யாக இருக்கிறது.b (நீதிமொழிகள் 28:13) மனம்திரும்பாத, கல் நெஞ்சமுடைய குற்றவாளிகளை யெகோவாகூட மன்னிப்பது கிடையாது. (எபிரெயர் 6:4-6; 10:26) நாம் ஆழமாகப் புண்படுத்தப்பட்டிருக்கும்போது, நடந்ததை முழுவதுமாக நினைவிலிருந்து நீக்க நமக்கு ஒருபோதும் முடியாமல் போகலாம். இருப்பினும், வரவிருக்கும் புதிய உலகில், “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை,” என்ற வாக்குறுதியில் இருந்து நாம் ஆறுதல் அடையலாம். (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:4) அப்போது என்னென்ன காரியங்களை நாம் மனதில் வைத்திருக்கிறோமோ அவை இப்போது ஏற்படுத்துவதுபோல ஆழமான கேட்டையோ வேதனையையோ ஏற்படுத்தாது.
மற்ற சந்தர்ப்பங்களில், நாம் மன்னிப்பதற்கு முன், ஒருவேளை குற்றமிழைத்தவரோடு பேசுவதன் மூலம், சமரசம் செய்துகொள்ள ஏதாவது முன்முயற்சிகள் எடுக்கவேண்டியிருக்கலாம். (எபேசியர் 4:26) இவ்வாறு ஏதாவது தப்பெண்ணங்கள் இருக்குமேயானால் அவற்றை தீர்த்துக்கொண்டு, பொருத்தமாக வருத்தத்தைத் தெரிவித்து மன்னித்துவிடலாம். ஆனால் மறப்பதைப்பற்றி என்ன? நமக்குச் செய்யப்பட்டதை ஒருபோதும் முழுவதுமாக நினைவிலிருந்து நீக்காமல் போகலாம். ஆனாலும், குற்றமிழைத்தவருக்கு எதிராக வன்மம் வைக்காமலோ அல்லது எதிர்காலத்தில் எப்போதாவது அந்த விஷயத்தை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவராமலோ இருக்கும் அர்த்தத்தில் நம்மால் அதை மறக்கமுடியும். நாம் அதைப்பற்றி வீண்பேச்சு பேசுவதில்லை, குற்றமிழைத்தவரை முழுவதுமாக ஒதுக்கித்தள்ளுவதுமில்லை. என்ன செய்தாலும், குற்றமிழைத்தவரோடு உள்ள நம் உறவு சுமுகமான நிலைக்கு வர சிறிது காலம் ஆகலாம். ஆகவே முன்பிருந்தது போன்ற அன்னியோன்னியம் இப்போது இல்லாமல் இருக்கலாம்.
ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: உங்களுடைய சொந்த ரகசியமான ஒரு விஷயத்தை நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நண்பனிடம் மனம்விட்டுச் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவர் அதை மற்றவர்களுக்குச் சொல்லிவிட்டார் என்று சிறிதுகாலத்திற்குப் பின் உங்களுக்குத் தெரியவருகிறது. இது உங்களை தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டுவருகிறது அல்லது வேதனையை ஏற்படுத்துகிறது. அவரிடம் அதைப்பற்றி நேரில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அவரை அணுகுகிறீர்கள். அவரும் அதற்காக மிகவும் மனவருத்தப்படுகிறார். வருத்தத்தை உங்களிடம் தெரிவித்து மன்னிப்புக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உள்ளப்பூர்வமான அவருடைய வருத்தத்தைக் கேட்டபின், உங்கள் நெஞ்சமும் நெகிழ்கிறது, அவரை மன்னிக்கிறீர்கள், நடந்ததை நீங்கள் சுலபமாக மறந்துவிடுகிறீர்களா? அநேகமாக இல்லை; சந்தேகமேயின்றி எதிர்காலத்தில் அவரோடு எதையும் மனம் திறந்து சொல்லிவிடாதபடிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருப்பீர்கள். ஆயினும் அவரை மன்னிக்கிறீர்கள்; எப்பொழுது பார்த்தாலும் இவ்விஷயத்தைப் பற்றியே அவரிடம் பேசிக்கொண்டிருப்பதில்லை. மனதில் கோபமாக இருக்கிறதில்லை, அல்லது இதைப்பற்றி மற்றவர்களிடத்தில் வீண்பேச்சு பேசுவதுமில்லை. அவரோடு முன்பு இருந்ததுபோல அவ்வளவு நெருக்கமாக உணராமல் இருக்கலாம். ஆனாலும் உங்களுடைய ஒரு கிறிஸ்தவ சகோதரர் என்ற முறையில் அவரை இன்னும் நேசிக்கிறீர்கள்.—நீதிமொழிகள் 20:19-ஐ ஒப்பிடுக.
ஆனால் சமாதானப்படுத்த நீங்கள் முயன்றபோதிலும், குற்றமிழைத்தவர் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்கிறதில்லை, வருத்தம்தெரிவிப்பதுமில்லை என்று வைத்துக்கொள்வோம், அப்பொழுது என்ன? கோபத்தை நீக்கிக்கொள்ளும் அர்த்தத்தில் நீங்கள் அவரை மன்னிக்க முடியுமா? மற்றவர்களை மன்னிப்பது என்பது அவர்கள் செய்ததைக் கண்டும்காணாமல் விட்டுவிடவோ அல்லது சிறிதுபடுத்தவோ வேண்டும் என்று அர்த்தப்படாது. கோபத்தைத் தாங்கியிருப்பது மிகமிக பாரமானதாகும். அது நம்முடைய எண்ணங்களை முழுவதும் ஆட்கொண்டு நம்முடைய மன நிம்மதியை சூறையாடிவிடும். ஒருபோதும் அவரிடமிருந்து வராத மனவருத்தத்திற்காக காத்திருந்து காத்திருந்து நமக்குப் பெருத்த ஏமாற்றம்தான் ஏற்படும். மொத்தத்தில் குற்றமிழைத்த நபர் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்படி அனுமதிக்கிறோம். ஆகவே, நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் அல்லது கோபத்தை நீக்கிவிட வேண்டும். இது அவர்களுடைய நலனுக்காக மட்டுமல்ல, ஆனால் வாழ்க்கையில் நிம்மதியுடன் இருக்கவேண்டி, நம்முடைய சொந்த நலனுக்காகவும் ஆகும்.
மற்றவர்களை மன்னிப்பதென்பது எப்பொழுதுமே சுலபமாக இராது. ஆனால் உள்ளப்பூர்வமான மனம்திரும்புதல் இருக்குமானால், யெகோவாவின் மன்னிக்கும் தன்மையை பின்பற்ற நாம் முயற்சிக்கலாம். மனம்திரும்புகிற குற்றவாளிகளை அவர் மன்னிக்கும்போது, அவர் கோபத்தை நீக்கிக்கொள்கிறார். எனவே எதிர்காலத்தில் அவர் அந்தப் பாவங்களுக்காக அவர்களுக்கு எதிராக வன்மம் வைப்பதில்லை என்ற அர்த்தத்தில் பதிவை சுத்தமாக துடைத்தழித்துவிட்டு மறந்துவிடுகிறார். குற்றமிழைத்தவர் மனம்திரும்புகையில் நாமும்கூட கோபத்தை நீக்க முயற்சிப்போமாக. எனினும், நாம் மன்னிக்க கடமையும்படாத சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். பயங்கரமான அநீதி அல்லது கொடூரமான நடத்தைகளுக்குப் பலியான எவரும் மனம்திரும்பாத ஒருவனை மன்னிக்கும்படி கட்டாயப்படுத்தப்படக்கூடாது. (சங்கீதம் 139:21, 22-ஐ ஒப்பிடுக.) ஆனால் மற்றவர்கள் நமக்கு எதிராக குற்றமிழைக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கோபத்தை நீக்கிக்கொள்ளும் அர்த்தத்தில் நாம் மன்னித்து, எதிர்காலத்தில் ஒருபோதும் அந்த விஷயத்தை நம் சகோதரர்களுக்கு எதிராக பயன்படுத்தாத அர்த்தத்தில் நாம் மறக்கமுடியும்.
[அடிக்குறிப்புகள்]
a மார்ச் 8, 1994, விழித்தெழு! இதழின் பக்கம் 14-15-ல் வெளிவந்த, “பைபிளின் கருத்து: கடவுளுடைய மன்னிப்பு எவ்வளவு பூரணமானது?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
b வேதாகமங்களின்பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கம் 862, சொல்கிறதாவது: “தீய நோக்கத்துடன் வேண்டுமென்றே பாவத்தைப் பழக்கமாகச் செய்கிற, மனம்திரும்பாத ஆட்களைக் கிறிஸ்தவர்கள் மன்னிக்கத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் கடவுளுடைய எதிரிகள் ஆகின்றனர்.”—உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 9-ன் படம்]
யோசேப்பும் அவருடைய சகோதரர்களும்