அன்பு பொன்னான ஒரு குணம்
கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒன்பது குணங்களைப் பற்றி எழுதும்படி அப்போஸ்தலன் பவுலை யெகோவா தூண்டினார். (கலா. 5:22, அடிக்குறிப்பு; 5:23) அந்த அருமையான குணங்கள் ஒட்டுமொத்தமாக, “கடவுளுடைய சக்தியின் கனி” என்று அழைக்கப்படுகின்றன.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்தக் குணங்கள், கிறிஸ்தவர்கள் அணிந்துகொள்ள வேண்டிய ‘புதிய சுபாவத்தின்’ பாகமாக இருக்கின்றன. (கொலோ. 3:10) ஒரு மரத்துக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும்போது அது எப்படி நன்றாகக் கனி தருமோ, அதேபோல் ஒருவருக்குக் கடவுளுடைய சக்தி தாராளமாகக் கிடைக்கும்போது அவர் அந்த அருமையான குணங்களைக் காட்டுவார்.—சங். 1:1-3.
பவுல் எழுதிய ஒன்பது குணங்களில் முதலாவது குணம் அன்பு. அது எந்தளவுக்கு அருமையானது? அன்பு இல்லையென்றால் தான் “ஒன்றுமே இல்லை” என்று பவுல் சொன்னார். (1 கொ. 13:2) ஆனால், அன்பு என்றால் என்ன? நாம் எப்படி அன்பை வளர்த்துக்கொள்ளலாம்? அதைத் தினமும் எப்படிக் காட்டலாம்?
அன்பு என்றால் என்ன?
அன்பு என்ற வார்த்தைக்குச் சரியான விளக்கம் கொடுப்பது ரொம்பக் கஷ்டம்தான். ஆனால், அன்பு உள்ளவர் எப்படி யோசிப்பார் என்றும், எப்படி நடந்துகொள்வார் என்றும் பைபிள் விளக்குகிறது. உதாரணத்துக்கு, அன்பு உள்ளவர் “பொறுமையும் கருணையும்” காட்டுவார். அவர் ‘உண்மையைக் குறித்து சந்தோஷப்படுவார்.’ அதோடு, ‘எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வார், எல்லாவற்றையும் நம்புவார், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பார், எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார்.’ அவர் மற்றவர்கள்மேல் ரொம்பப் பாசமாக இருப்பார், உண்மையான அக்கறை காட்டுவார், உண்மையுள்ள நண்பராக இருப்பார். ஆனால், அன்பு இல்லாதவர் பொறாமைப்படுவார், பெருமையடிப்பார், கேவலமாக நடந்துகொள்வார், தன்னலமாக நடந்துகொள்வார், மன்னிக்கவும் மாட்டார். இந்த மோசமான குணங்களைக் காட்ட நாம் விரும்புவதில்லை. மற்றவர்கள்மேல் உண்மையான அன்பை, அதாவது ‘சுயநலமாக நடந்துகொள்ளாத’ அன்பை, காட்டத்தான் நாம் விரும்புகிறோம்.—1 கொ. 13:4-8.
யெகோவாவும் இயேசுவும் அன்புக்கு இலக்கணமாக இருக்கிறார்கள்
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோ. 4:8) அவருடைய செயல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய அன்பு பளிச்சிடுகிறது. மனிதர்களுக்காகப் பாடுபட்டு இறப்பதற்கு அவர் இயேசுவை அனுப்பினார். இதுதான் அவருடைய அன்புக்குத் தலைசிறந்த உதாரணம். அப்போஸ்தலன் யோவான் இப்படிச் சொன்னார்: “தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது. நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாக தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு.” (1 யோ. 4:9, 10) கடவுள் அன்பு காட்டியதால்தான், மன்னிப்பும் நம்பிக்கையும் வாழ்வும் பெறுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
கடவுளுடைய விருப்பப்படி, மனிதர்களுக்காக இயேசு தன் உயிரையே தியாகம் செய்தார்; இப்படி, மனிதர்கள்மேல் அவர் அன்பு காட்டினார். “இயேசு கிறிஸ்து தன்னுடைய உடலை எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்து அந்த ‘விருப்பத்தை’ நிறைவேற்றியதால்தான் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 10:9, 10) இதைவிட சிறந்த விதத்தில் அன்பு காட்ட எந்த மனிதனாலும் முடியாது. “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை” என்று இயேசு சொன்னார். (யோவா. 15:13) பாவ இயல்புள்ள மனிதர்களால் யெகோவாவையும் இயேசுவையும் போல அன்பு காட்ட முடியுமா? கண்டிப்பாக முடியும்! எப்படி என்று பார்க்கலாம்.
“தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
“அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து நமக்காக . . . கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். (எபே. 5:1, 2) ‘தொடர்ந்து அன்பின் வழியில் நடக்க’ நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லா சமயங்களிலும் அன்பு காட்ட வேண்டும். மற்றவர்கள்மேல் அன்பு இருக்கிறது என்று சொன்னால் மட்டும் போதாது, அதைச் செயலிலும் காட்ட வேண்டும். “சின்னப் பிள்ளைகளே, உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்பு காட்ட வேண்டும், அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்” என்று யோவான் எழுதினார். (1 யோ. 3:18) உதாரணத்துக்கு, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ பிரசங்கிப்பதன் மூலம் யெகோவா மீதும் மற்றவர்கள் மீதும் அன்பு இருப்பதை நாம் காட்டுகிறோம். (மத். 24:14; லூக். 10:27) ‘தொடர்ந்து அன்பின் வழியில் நடக்க’ நாம் பொறுமையையும் கருணையையும் காட்டுவதுகூட அவசியம். அதோடு, “யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்” என்ற அறிவுரையின்படி நடப்பதும் அவசியம்.—கொலோ. 3:13.
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்போது அல்லது அவர்களைக் கண்டித்துத் திருத்தும்போது, நமக்கு அவர்கள்மேல் அன்பு இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், குழந்தையை உண்மையிலேயே நேசிக்கிற பெற்றோர்கள், தேவைப்படும்போது கண்டிப்பைக் காட்டுவார்கள். அதேபோல், கடவுள் அன்பானவராக இருந்தாலும், அவர் “யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.” (எபி. 12:6) அதனால், தேவையான சமயங்களில் சரியான விதத்தில் கண்டிப்பது அன்பான ஒரு செயல். (நீதி. 3:11, 12) நாம் எல்லாருமே பாவிகளாக இருப்பதால் அன்பு காட்ட அடிக்கடி தவறிவிடுகிறோம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அன்பு காட்டும் விஷயத்தில் நாம் எல்லாருமே முன்னேற வேண்டியிருக்கிறது. நாம் எப்படி முன்னேறலாம்? இதற்கான மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.
நாம் எப்படி அன்பை வளர்த்துக்கொள்ளலாம்?
முதலாவதாக, கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், கடவுளுடைய சக்தியினால் உண்டாகிற ஒரு குணம்தான் அன்பு. யெகோவா “தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை” கொடுக்கிறார் என்று இயேசு சொன்னார். (லூக். 11:13) கடவுளுடைய சக்திக்காக நாம் ஜெபம் செய்யும்போதும், நமக்கு உதவி செய்ய அதை அனுமதிக்கும்போதும், நம் அன்பு அதிகமதிகமாக வளரும். (கலா. 5:16) நீங்கள் ஒரு மூப்பரா? யாருக்காவது பைபிளிலிருந்து ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், அன்போடு ஆலோசனை கொடுப்பதற்காக கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் ஒரு பெற்றோரா? உங்கள் பிள்ளையைக் கண்டித்துத் திருத்த வேண்டுமா? அப்படியென்றால், அதைக் கோபத்தோடு செய்யாமல் அன்போடு செய்வதற்காகக் கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள்.
இரண்டாவதாக, மற்றவர்கள் தன்னை மோசமாக நடத்தியபோதும் இயேசு எப்படி அன்பு காட்டினார் என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். (1 பே. 2:21, 23) யாராவது உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டால் அல்லது உங்களுக்கு அநியாயம் செய்துவிட்டால், ‘இந்த மாதிரியான சூழ்நிலையில இயேசு என்ன செஞ்சிருப்பாரு?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். லி என்ற சகோதரி அப்படித்தான் தன்னைக் கேட்டுக்கொண்டார்; அதனால்தான் அவரால் யோசித்து செயல்பட முடிந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு தடவ, என்கூட வேலை செஞ்ச ஒருத்தங்க, ஒரு ஈமெயில்ல என்னை பத்தியும் என் வேலைய பத்தியும் தப்புத்தப்பா எழுதி எல்லாருக்கும் அனுப்புனாங்க. அத படிச்சப்போ நான் அப்படியே நொறுங்கிப்போயிட்டேன். ஆனா, ‘நான் எப்படி இயேசு மாதிரி நடந்துக்கறது?’ன்னு யோசிச்சு பார்த்தேன். அதுக்கு அப்புறம், விஷயத்த பெரிசுபடுத்தாம அப்படியே விட்டுடலாம்னு முடிவு செஞ்சேன். அந்த ஈமெயில அனுப்புனவங்களுக்கு ஏதோ பெரிய வியாதி இருந்ததாவும் அவங்க மன அழுத்தத்துல இருந்ததாவும் பின்னாலதான் எனக்கு தெரிய வந்துச்சு. அப்பதான், அவங்க தெரியாத்தனமா எழுதியிருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன். கோபம் வந்தப்ப நான் இயேசுவ பத்தி நினைச்சு பார்த்ததுனால அவர மாதிரியே அன்பு காட்ட முடிஞ்சுது.” நாம் இயேசுவைப் பின்பற்றினால், நாமும் மற்றவர்கள்மேல் எப்போதும் அன்பு காட்டுவோம்.
மூன்றாவதாக, சுயதியாக அன்பைக் காட்ட பழகிக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அன்புதான் இயேசுவின் உண்மையான சீஷர்களுடைய அடையாளம். (யோவா. 13:34, 35) இயேசுவும் அப்படிப்பட்ட அன்பைக் காட்டினார்; அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகவும் இருக்கிறார். எப்படி? அவர் நமக்காகப் பரலோகத்தில் “தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு” இந்தப் பூமிக்கு வந்து, ‘சாகும் அளவுக்கு தன்னையே தாழ்த்தினார்.’ (பிலி. 2:5-8) நாமும் சுயதியாக அன்பைக் காட்டும்போது, அவரைப் போலவே யோசிக்கவும் உணரவும் ஆரம்பிப்போம். நம்முடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
அன்பு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்
அன்பு காட்டுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
சர்வதேச சகோதரத்துவம்: நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதால், உலகத்தில் எந்தச் சபைக்குப் போனாலும் சகோதர சகோதரிகள் நம்மை அன்போடு வரவேற்பார்கள் என்று நமக்குத் தெரியும். ‘உலகத்தில் இருக்கிற நம் சகோதரர்கள் எல்லாரும்’ நம்மை நேசிப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! (1 பே. 5:9) கடவுளுடைய மக்கள் மத்தியில் மட்டும்தான் இப்படிப்பட்ட அன்பைப் பார்க்க முடியும்!
சமாதானம்: ‘அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளும்போது’ நம்மால் ‘சமாதானமாக வாழ’ முடிகிறது. (எபே. 4:2, 3) நம்முடைய கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இந்தச் சமாதானத்தை அனுபவிக்கிறோம். பகையால் பிளவுபட்டிருக்கிற இந்த உலகத்தில் இப்படிப்பட்ட சமாதானத்தை அனுபவிப்பது ஒரு அற்புதம் இல்லையா? (சங். 119:165; ஏசா. 54:13) நாம் மற்றவர்களோடு சமாதானமாக இருக்கும்போது, அவர்கள்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம். அதோடு, நம் பரலோகத் தகப்பனையும் சந்தோஷப்படுத்துகிறோம்.—சங். 133:1-3; மத். 5:9.
‘அன்பு பலப்படுத்துகிறது’
‘அன்பு பலப்படுத்துகிறது’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 8:1) இதன் அர்த்தம் என்ன? அன்பு எந்த விதத்தில் பலப்படுத்துகிறது என்று 1 கொரிந்தியர் 13-ஆம் அதிகாரம் விளக்குகிறது. இந்த அதிகாரத்தை “அன்பின் சங்கீதம்” என்று சிலர் சொல்கிறார்கள். அன்பு உள்ளவர்கள் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டுகிறார்கள், மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். (1 கொ. 10:24; 13:5) அன்பு உள்ளவர்கள் முன்யோசனையோடும் கரிசனையோடும் பொறுமையோடும் கருணையோடும் நடந்துகொள்வதால், குடும்பங்களில் பாசமும் சபைகளில் ஒற்றுமையும் அதிகமாகிறது.—கொலோ. 3:14.
அன்பிலேயே சிறந்த அன்பு, கடவுள்மேல் நாம் எல்லாரும் காட்டுகிற அன்புதான்! மிக அதிகமாகப் பலப்படுத்துகிற அன்பும் அதுதான்! ஏன் அப்படிச் சொல்லலாம்? ஏனென்றால், கடவுள்மேல் நாம் காட்டும் அன்பு நம்மைப் பின்னிப்பிணைக்கிறது! எல்லா பின்னணிகளையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள்; “தோளோடு தோள் சேர்ந்து” அவருக்குச் சேவை செய்கிறார்கள். (செப். 3:9) கடவுளுடைய சக்தியால் உண்டாகிற அன்பு என்ற பொன்னான குணத்தைத் தினமும் காட்ட நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.
a இது ஒரு தொடர்கட்டுரை. ஒவ்வொரு கட்டுரையும், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒவ்வொரு குணத்தைப் பற்றி விளக்கும்.