படிப்புக் கட்டுரை 12
பாட்டு 77 இருண்ட உலகில் பேரொளி!
இருள் பக்கம் போகாதீர்கள்—தொடர்ந்து ஒளியில் நடங்கள்
“ஒருகாலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள். இப்போதோ . . . ஒளியாக இருக்கிறீர்கள்”—எபே. 5:8.
என்ன கற்றுக்கொள்வோம்?
எபேசியர் 5-வது அதிகாரத்தில் இருக்கிற இருள், ஒளி போன்ற வார்த்தைகளிலிருந்து நமக்கு என்ன பாடம் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) பவுல் எந்த சூழ்நிலையில் இருந்தபோது எபேசியர்களுக்குக் கடிதம் எழுதினார், ஏன் எழுதினார்? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?
ரோமில் வீட்டு காவலில் இருந்தபோது, அப்போஸ்தலன் பவுல் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அவர்களை நேரில் போய் பார்க்க முடியாததால், அவர்களுக்குக் கடிதங்களை எழுதினார். அதில் ஒரு கடிதம்தான் எபேசியர்களுக்கு எழுதிய கடிதம். அதை கிட்டத்தட்ட கி.பி. 60 அல்லது 61-ல் எழுதினார்.—எபே. 1:1; 4:1.
2 கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கு முன்பு, எபேசுவில் பவுல் கொஞ்சக் காலம் ஊழியம் செய்தார் (அப். 19:1, 8-10; 20:20, 21) அங்கிருந்த சகோதரர்கள்மேல் அவருக்கு ரொம்ப அன்பு இருந்தது. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர்களுக்கு உதவ ஆசைப்பட்டார். ஆனால், அங்கிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு, இருளைப் பற்றியும் ஒளியைப் பற்றியும் ஏன் எழுதினார்? அதிலிருந்து நம் எல்லாருக்குமே என்ன பாடங்கள் இருக்கின்றன? இதற்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.
இருளிலிருந்து ஒளிக்கு
3. எபேசியர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினார்?
3 எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இப்படி எழுதினார்: “ஒருகாலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள். இப்போதோ . . . ஒளியாக இருக்கிறீர்கள்.” (எபே. 5:8) எபேசு சபையில் இருந்தவர்கள் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு எப்படியிருந்தார்கள், அதற்குப் பிறகு எப்படி மாறியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்குத்தான், இருள் ஒளி என்ற வார்த்தைகளை பவுல் பயன்படுத்தினார். எபேசியர்கள் “ஒருகாலத்தில் இருளாக” இருந்தார்கள் என்று பவுல் ஏன் சொன்னார்? இப்போது பார்க்கலாம்!
4. எபேசியர்கள் எந்த அர்த்தத்தில் பொய் மதம் என்ற இருளில் இருந்தார்கள்?
4 பொய் மதம் என்ற இருள். கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு, எபேசுவில் இருந்தவர்கள் பொய் மத பழக்கவழக்கங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போயிருந்தார்கள். அந்த நகரத்தில்தான் புகழ்பெற்ற அர்த்தமி தேவியின் கோயில் இருந்தது. அதை ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அன்றிருந்தவர்கள் பார்த்தார்கள். அங்கிருந்தவர்கள் சிலை வழிபாட்டிலும் ஊறிப்போயிருந்தார்கள். அர்த்தமி தேவியின் சிலையை செய்து விற்பது ஒரு லாபம் தரும் வியாபாரமாக இருந்தது. (அப். 19:23-27) அதுமட்டுமல்ல, அந்த ஊரில் இருந்தவர்கள் மாயமந்திரமும் செய்து வந்தார்கள்.—அப். 19:19.
5. எந்த அர்த்தத்தில் எபேசியர்கள் ஒழுக்கக்கேடு என்ற இருளில் இருந்தார்கள்?
5 ஒழுக்கக்கேடு என்ற இருள். எபேசு, ஒழுக்கக்கேட்டுக்குப் பேர்போன இடமாக இருந்தது. அங்கிருந்த அரங்குகளிலும் மத பண்டிகைகளிலும் ஆபாசமாக பேசுவது சர்வ சாதாரணமாக இருந்தது. (எபே. 5:3) அங்கிருந்த பெரும்பாலானவர்கள் “ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல்” இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இந்த வார்த்தைகளுக்கான நேரடி அர்த்தம், “மரத்துப்போயிருப்பதை” குறிக்கிறது. (எபே. 4:17-19) எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கும் ஒருசமயம் அப்படித்தான் இருந்தது. சரி எது தவறு எது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு அவர்களுடைய மனசாட்சி மரத்துப்போயிருந்தது. யெகோவாவுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும் என்ற உணர்வுகூட அவர்களுக்கு இல்லை. அதனால்தான் பவுல் அவர்களைப் பற்றி சொல்லும்போது, ‘அவர்களுடைய மனம் இருண்டு போயிருந்ததாகவும்’, ‘கடவுள் தருகிற வாழ்வு கிடைக்காதபடி அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும்’ சொன்னார்.
6. எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் ‘இப்போது ஒளியாக இருக்கிறார்கள்’ என்று பவுல் ஏன் சொன்னார்?
6 ஆனால், அந்தக் கிறிஸ்தவர்கள் இருளிலிருந்து வெளியே வந்து ‘இப்போது எஜமானோடு ஒன்றுபட்டிருப்பதால், ஒளியாக இருக்கிறார்கள்’ என்று பவுல் எழுதினார். (எபே. 5:8) அதாவது, கடவுளுடைய வார்த்தை காட்டிய ஒளியில் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். (சங். 119:105) பொய் மத பழக்கவழக்கங்களையும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையையும் விட்டுவந்தார்கள். ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றினார்கள்.’ (எபே. 5:1) யெகோவாவை வணங்கவும் அவரை சந்தோஷப்படுத்தவும் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள்.
7. நாம் எப்படி எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் மாதிரி இருக்கிறோம்?
7 அதேமாதிரி, நாமும் சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, பொய் மதம் என்ற இருளிலும், ஒழுக்கக்கேடு என்ற இருளிலும் இருந்தோம். நம்மில் சிலர், பொய் மத பண்டிகைகளைக் கொண்டாடியிருக்கிறோம். சிலர், ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம். ஆனால், யெகோவாவுடைய பார்வையில் எது சரி எது தவறு என்று தெரிந்துகொண்டதற்குப் பிறகு, மாற்றங்கள் செய்தோம், அவருக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்திருக்கிறோம். அதனால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன. (ஏசா. 48:17) இருந்தாலும், நாம் விட்டுவந்த இருள் பக்கமே போகாமல் இருப்பது சிலசமயத்தில் கஷ்டமாக இருக்கலாம். அதனால் நாம் உறுதியாக இருக்க வேண்டும், “தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக” நடந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம்?
இருள் பக்கம் போகாதீர்கள்
8. எபேசியர் 5:3-5 சொல்வதுபோல், எபேசு கிறிஸ்தவர்கள் எதைத் தவிர்க்க வேண்டியிருந்தது?
8 எபேசியர் 5:3-5-ஐ வாசியுங்கள். ஒழுக்கக்கேடு என்ற இருளிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றால், அந்தக் கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்குப் பிடிக்காத எல்லா விஷயங்களையும் தொடர்ந்து தவிர்க்க வேண்டியிருந்தது. பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்பது மட்டுமல்ல, ஆபாசமான பேச்சையும் அவர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. “கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட” வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பவுல் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.
9. ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்குத் தூண்டுகிற எந்தவொரு விஷயத்தையும் செய்யாமல் இருக்க நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
9 “இருளுக்குரிய பலனற்ற செயல்களை” செய்யாமல் இருப்பதற்கு நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (எபே. 5:11) ஒழுக்கக்கேடான, அசிங்கமான விஷயங்களை ஒரு நபர் பார்க்கிறார், கேட்கிறார், பேசுகிறார் என்றால், அவரே அந்தத் தவறை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை நிறைய அனுபவங்கள் காட்டுகின்றன. (ஆதி. 3:6; யாக். 1:14, 15) ஒரு நாட்டில், நிறைய சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து சோஷியல் மீடியாவில் (online chat groups) பேச ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் பைபிளிலிருக்கும் விஷயங்களைப் பற்றித்தான் பேசினார்கள். ஆனால், போகப் போக, யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள், செக்ஸ் பற்றியும் நிறைய பேசினார்கள். இப்படியெல்லாம் பேசியது, பாலியல் முறைகேடு என்ற பெரிய பாவத்தை செய்வதற்குக் காரணமாக இருந்தது என்று அவர்களில் நிறைய பேர் பிறகு ஒத்துக்கொண்டார்கள்.
10. சாத்தான் நம்மை ஏமாற்ற எப்படி முயற்சி செய்கிறான்? (எபேசியர் 5:6)
10 சாத்தானுடைய இந்த உலகம் நம்மை ஏமாற்றப் பார்க்கிறது. யெகோவா எதையெல்லாம் அசுத்தம், ஒழுக்கக்கேடு என்று சொல்கிறாரோ, அதெல்லாம் தப்பில்லை என்று இந்த உலகம் நம்மை நம்ப வைக்கிறது. (2 பே. 2:19) இதை நினைத்து நாம் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ரொம்ப காலமாகவே சாத்தான் இந்தத் தந்திரத்தைத்தான் பயன்படுத்துகிறான். அதாவது, எது சரி எது தவறு என்று மக்கள் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களைக் குழப்பிவிடுகிறான். (ஏசா. 5:20; 2 கொ. 4:4) அதனால்தான், இன்று திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், வெப்சைட்டுகள் என எல்லாமே யெகோவாவுக்குப் பிடிக்காததை செய்ய நம்மைத் தூண்டுகின்றன. இந்தமாதிரி விஷயங்களை செய்வதில் எந்தத் தப்பும் இல்லை, சொல்லப்போனால், அதெல்லாம் ஜாலியாக இருக்கும், அதில் எந்த ஆபத்தும் இல்லை என்று சாத்தான் நம்மை நம்ப வைக்க முயற்சி செய்கிறான்.—எபேசியர் 5:6-ஐ வாசியுங்கள்.
11. எபேசியர் 5:7-ல் இருக்கும் ஆலோசனையைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஏஞ்சலாவின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது? (படத்தையும் பாருங்கள்.)
11 யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களை செய்ய தூண்டுகிற ஆட்களுடன் நாம் பழக வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான். அதனால்தான், பவுல் எபேசியர்களுக்கு எழுதும்போது, “அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார். (எபே. 5:7) ஆனால், எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களைவிட நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இப்போது நேரில் மட்டுமல்ல, சோஷியல் மீடியாவிலும் மக்களோடு பழக முடிகிறது. ஆசியாவில் இருக்கிற ஏஞ்சலா,a சோஷியல் மீடியா எவ்வளவு ஆபத்தானது என்று புரிந்துகொண்டார். அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “அது ஒரு கண்ணி மாதிரி. யோசிக்கிற திறனை அது மழுங்கடித்துவிடும். எனக்கும் அதுதான் நடந்தது. ஒருகட்டத்தில், பைபிளை மதிக்காதவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைத்தேன். போகப் போக, யெகோவாவுக்குப் பிடிக்காத மாதிரி வாழ்வதில்கூட எந்தப் பிரச்சினையும் இல்லை என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.” நல்லவேளை, மூப்பர்கள் ஏஞ்சலாவுக்கு உதவி செய்தார்கள். இப்போது ஏஞ்சலா இப்படி சொல்கிறார்: “இப்போது நான் சோஷியல் மீடியாவில் இருக்கும் விஷயங்களைப் பற்றி அல்ல, பைபிள் விஷயங்களைப் பற்றித்தான் நிறைய யோசிக்கிறேன்.”
12. யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கு எது நமக்கு உதவி செய்யும்?
12 ஒழுக்கமில்லாமல் வாழ்வதில் எந்தத் தப்பும் இல்லை என்று இந்த உலகம் நம்மை நினைக்க வைக்கிறது; அந்த எண்ணத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும். ஏனென்றால் அது தவறு என்று நமக்கு நன்றாகவே தெரியும். (எபே. 4:19, 20) நம்மையே இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘வேலை செய்கிற இடத்திலோ, படிக்கிற இடத்திலோ வேறு இடத்திலோ யெகோவாவின் சட்டங்களை மதிக்காத ஆட்களுடன் நான் தேவையில்லாமல் நெருங்கி பழகுகிறேனா? எனக்குப் பரந்த மனப்பான்மை இல்லை என்று மற்றவர்கள் குறை சொன்னால்கூட யெகோவாவுடைய சட்டங்களுக்குத் தைரியமாக கீழ்ப்படிகிறேனா?’ அதுமட்டுமல்ல, 2 தீமோத்தேயு 2:20-22 சொல்வதுபோல் சபைக்குள் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்வதற்கு எல்லாருமே நமக்கு உதவி செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
“ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்”
13. ‘தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்வது’ என்றால் என்ன அர்த்தம்? (எபேசியர் 5:7-9)
13 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் வெறுமனே இருளிலிருந்து வெளியே வருவது மட்டுமல்ல, அவர்கள் ‘தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ள’ வேண்டும் என்று பவுல் சொன்னார். (எபேசியர் 5:7-9-ஐ வாசியுங்கள்.) இதன் அர்த்தம் என்ன? நாம் எல்லா சமயத்திலும் உண்மை கிறிஸ்தவர்களாக நடந்துகொள்ள வேண்டும். தவறாமல் பைபிளைப் படிப்பதும், பிரசுரங்களைப் படிப்பதும் இதை செய்வதற்கு உதவும். அதுமட்டுமல்ல, “இந்த உலகத்துக்கு ஒளியாக” இருக்கிற இயேசு கிறிஸ்துவின் உதாரணத்தையும் போதனைகளையும் கடைப்பிடிப்பதும் ரொம்ப முக்கியம்.—யோவா. 8:12; நீதி. 6:23.
14. கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவி செய்யும்?
14 தொடர்ந்து “ஒளியின் பிள்ளைகளாக” நடப்பதற்குக் கடவுளுடைய சக்தியின் உதவியும் நமக்குத் தேவை. ஏன்? ஏனென்றால், இந்த ஒழுக்கங்கெட்ட உலகத்தில் சுத்தமாக இருப்பது சுலபம் இல்லைதான். (1 தெ. 4:3-5, 7, 8) இந்த உலகத்தின் யோசனைகளையும் தத்துவங்களையும் எதிர்த்து போராட கடவுளுடைய சக்தி நமக்கு உதவி செய்யும். அதுமட்டுமல்ல, ‘எல்லா விதமான நல்ல குணத்தையும் நீதியையும்’ வளர்த்துக்கொள்ளவும் அது நமக்கு உதவி செய்யும்.—எபே. 5:9.
15. கடவுளுடைய சக்தி வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (எபேசியர் 5:19, 20)
15 கடவுளுடைய சக்தி வேண்டுமென்றால் நாம் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும். யெகோவா, “தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை . . . கொடுப்பார்” என்று இயேசுவும் சொன்னார். (லூக். 11:13) சபையில் யெகோவாவைப் புகழும்போதும் அந்த சக்தி நமக்குக் கிடைக்கும். (எபேசியர் 5:19, 20-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சக்தி நம்மேல் செயல்படும்போது, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும்.
16. நல்ல தீர்மானங்கள் எடுக்க எது நமக்கு உதவி செய்யும்? (எபேசியர் 5:10, 17)
16 முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில், “யெகோவாவின் விருப்பம் என்னவென்று” நாம் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கேற்ற மாதிரி செயல்பட வேண்டும். (எபேசியர் 5:10, 17-ஐ வாசியுங்கள்.) நம் சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் நியமங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, அந்த சூழ்நிலையைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்கிறோம். அந்த நியமங்களின்படி செய்யும்போது, நல்ல தீர்மானங்களை எடுப்போம்.
17. நாம் எப்படி நம்முடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்தலாம்? (எபேசியர் 5:15, 16) (படத்தையும் பாருங்கள்.)
17 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பவுல் சொன்னார். (எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தில் இருக்கும் விஷயங்களில் நாம் மூழ்கிவிட வேண்டும்... கடவுளுக்கு சேவை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்கக் கூடாது... என்று ‘பொல்லாதவனான’ சாத்தான் நினைக்கிறான். (1 யோ. 5:19) யெகோவாவுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக பணம் பொருள், கல்வி, வேலை என்று இவற்றுக்குப் பின்னால் ஒரு கிறிஸ்தவர் ஓட ஆரம்பித்துவிடலாம். ஆனால் அவர் அப்படிச் செய்தால், உலகத்தில் இருக்கிறவர்கள் மாதிரி அவர் யோசிக்கிறார் என்று அர்த்தம். இந்த விஷயங்கள் எல்லாம் தவறு இல்லைதான். ஆனால், அதெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வந்துவிடக் கூடாது. “ஒளியின் பிள்ளைகளாக” நடக்க வேண்டுமென்றால், நம்முடைய ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள’ வேண்டும், முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
18. நேரத்தை நன்றாகப் பயன்படுத்துவதற்கு டொனால்ட் என்ன செய்தார்?
18 யெகோவாவுக்கு இன்னும் நன்றாக சேவை செய்வதற்கு வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருங்கள். தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற சகோதரர் டொனால்ட் அதைத்தான் செய்தார். அவர் இப்படி சொல்கிறார்: “என்னுடைய சூழ்நிலையைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தேன். ஊழியத்தை நன்றாக செய்வதற்கும், அதற்கு ஏற்றமாதிரி ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதற்கும் யெகோவாவிடம் உதவி கேட்டேன். அவருடைய உதவியோடு ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகு, நானும் என் மனைவியும் முழுநேர சேவை என்ற பயணத்தை ஆரம்பித்தோம்.”
19. நாம் எப்படித் தொடர்ந்து “ஒளியின் பிள்ளைகளாக” நடக்கலாம்?
19 எபேசியர்களுக்கு பவுல் எழுதிய கடிதம், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்திருக்கும். கடவுளுடைய சக்தியால் பவுல் எழுதிய அந்தக் கடிதம் இன்று நமக்கும் பிரயோஜனமாக இருக்கும். பொழுதுபோக்கையும் நண்பர்களையும் ஞானமாக தேர்ந்தெடுப்பதற்கு அது உதவும். தினமும் பைபிளைப் படிப்பதன் மூலம் சத்திய ஒளியில் தொடர்ந்து நடக்க அது நம்மைத் தூண்டும். அதுமட்டுமல்ல, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்குக் கடவுளுடைய சக்தி எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைக்கும். பவுல் எழுதிய விஷயங்களைக் கடைப்பிடிக்கும்போது, யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்க முடியும், நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும். இந்த உலகத்தின் இருளிலிருந்து வெளியே வந்து தொடர்ந்து ஒளியில் நடக்க முடியும்!
உங்கள் பதில் என்ன?
எபேசியர் 5:8-ல் சொல்லியிருக்கிற “இருள்” “ஒளி” எதைக் குறிக்கிறது?
நாம் எப்படி “இருள்” பக்கம் போகாமல் இருக்கலாம்?
நாம் எப்படித் ‘தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடக்கலாம்’?
பாட்டு 95 வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b படவிளக்கம்: அப்போஸ்தலன் பவுல் எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தின் பழங்கால பிரதி காட்டப்பட்டுள்ளது.