படிப்புக் கட்டுரை 11
பாட்டு 129 சகித்தே ஓடுவோம்!
சோர்ந்துபோகாமல் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்யுங்கள்
‘என்னுடைய பெயருக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாய்.’—வெளி. 2:3.
என்ன கற்றுக்கொள்வோம்?
நம்மை சோர்ந்துபோக வைக்கும் சூழ்நிலைகள் வந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு நம்மால் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய முடியும்.
1. யெகோவாவுடைய அமைப்பின் பாகமாக இருப்பதால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?
கொந்தளிப்பான இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவுடைய அமைப்பின் ஒரு பாகமாக இருப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்! உலக நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனாலும் ஒற்றுமையான ஒரு பெரிய குடும்பத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். நம்முடைய சகோதர சகோதரிகள்தான் அந்த குடும்பம். (சங். 133:1) அதோடு, நம்முடைய சொந்த குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்க உதவுகிறார். (எபே. 5:33–6:1) அதுமட்டுமல்ல, மனசமாதானத்தை அனுபவிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் கொடுக்கிறார்.
2. நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
2 இருந்தாலும், யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஏன்? ஏனென்றால் மற்றவர்கள் சொல்கிற-செய்கிற விஷயங்கள் நம்மைக் காயப்படுத்தலாம். அல்லது, நாம் ஏதாவது தப்பு செய்யும்போது, அதுவும் திரும்பத் திரும்ப செய்யும்போது, நாம் நொந்துபோகலாம். இந்தக் கட்டுரையில் மூன்று சூழ்நிலைகளைப் பற்றி பார்ப்போம். (1) ஒரு சகோதரரோ சகோதரியோ நம்மைக் காயப்படுத்தும்போது, (2) நம்முடைய துணை நம்மைக் கஷ்டப்படுத்தும்போது, (3) நாம் செய்த ஏதோவொரு தவறால் சோர்ந்துபோகும்போது. இந்த ஒவ்வொரு சூழ்நிலையைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வோம்.
மற்றவர்கள் உங்களைக் காயப்படுத்தும்போது
3. யெகோவாவுடைய மக்களுக்கு என்ன பிரச்சினை வருகிறது?
3 பிரச்சினை. சில சகோதர சகோதரிகள் நடந்துகொள்வது நமக்கு எரிச்சலாக இருக்கலாம். சிலர் யோசிக்காமல் எதையாவது செய்தாலோ சொன்னாலோ நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். சிலசமயம், மூப்பர்கள்கூட தப்பாக எதையாவது செய்துவிடலாம். இப்படியெல்லாம் நடப்பதால், ‘இது உண்மையிலேயே கடவுளுடைய அமைப்புதானா?’ என்ற சந்தேகம்கூட சிலருக்கு வரலாம். சகோதர சகோதரிகளோடு பழகுவதையும் “தோளோடு தோள் சேர்ந்து” சேவை செய்வதையும் அவர்கள் விட்டுவிடலாம்; கூட்டங்களுக்கு வருவதையும் நிறுத்திவிடலாம். (செப். 3:9) ஆனால் இப்படி செய்வது சரியா? இதேமாதிரியான சூழ்நிலையில் இருந்த ஒரு பைபிள் உதாரணத்தைப் பார்க்கலாம்.
4. அப்போஸ்தலன் பவுலுக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன?
4 பைபிள் உதாரணம். சகோதர சகோதரிகள் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை அப்போஸ்தலன் பவுல் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவர் கிறிஸ்தவராக ஆன சமயத்தில், எருசலேமில் இருந்த சகோதர சகோதரிகள் சிலர் அவரைப் பார்த்து பயந்தார்கள்; அவரை ஒரு சீஷராக ஏற்றுக்கொள்ளவில்லை. (அப். 9:26) இன்னொரு சமயம், அவருடைய பெயரை கெடுக்கிற விதத்தில் சிலர் அவருக்குப் பின்னால் தப்புத் தப்பாகப் பேசினார்கள். (2 கொ. 10:10) அதுமட்டுமல்ல, பொறுப்பில் இருந்த ஒரு சகோதரரே மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதை பவுல் பார்த்தார். (கலா. 2:11, 12) பிறகு, அவருக்கு நெருக்கமாக இருந்த மாற்கு நடந்துகொண்ட விதமும் அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. (அப். 15:37, 38) சகோதர சகோதரிகள் இப்படியெல்லாம் நடந்துகொண்டதை பார்த்து அவர்களோடு பழகுவதையே பவுல் நிறுத்தினாரா? இல்லை. மற்றவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களையே அவர் பார்த்தார். யெகோவாவுடைய சேவையை சுறுசுறுப்பாக செய்தார். இப்படி நடந்துகொள்ள அவருக்கு எது உதவியது?
5. சகோதர சகோதரிகள்மேல் இருந்த நம்பிக்கையை இழக்காமல் இருக்க பவுலுக்கு எது உதவியது? (கொலோசெயர் 3:13, 14) (படத்தையும் பாருங்கள்.)
5 சகோதர சகோதரிகள்மேல் பவுல் உயிரையே வைத்திருந்தார். அதனால்தான் அவர்களிடம் இருந்த குறைகளைப் பார்க்காமல் நல்லதைப் பார்த்தார். மற்றவர்கள்மேல் அன்பு இருந்ததால்தான், கொலோசெயர் 3:13, 14-ல் அவர் என்ன எழுதினாரோ அதை அவரே கடைப்பிடித்தார். (வாசியுங்கள்.) மாற்குவிடம் அவர் நடந்துகொண்ட விதத்தை யோசித்துப் பாருங்கள். முதல் மிஷனரி பயணத்தில் மாற்கு பவுலை விட்டுவிட்டு போனார். இருந்தாலும் பவுல் அவர்மேல் கோபமாகவே இருக்கவில்லை. பிறகு கொலோசெ சபைக்கு கடிதம் எழுதியபோது மாற்குவைப் பற்றி அவர் உயர்வாக சொன்னார்; மாற்கு தனக்கு “மிகவும் ஆறுதலாக” இருப்பதாக எழுதினார். (கொலோ. 4:10, 11) ரோமில் கைதியாக இருந்தபோது தனக்கு உதவி செய்ய மாற்குவை வர சொன்னார். (2 தீ. 4:11) சகோதர சகோதரிகள்மேல் இருந்த நம்பிக்கையை பவுல் இழக்கவே இல்லை என்பது எவ்வளவு தெளிவாக தெரிகிறது! பவுலின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6-7. நம் சகோதர சகோதரிகளிடம் குறைகள் இருந்தாலும் தொடர்ந்து அன்பு காட்ட எது உதவும்? (1 யோவான் 4:7)
6 பாடம். சகோதர சகோதரிகள்மேல் நாம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (1 யோவான் 4:7-ஐ வாசியுங்கள்.) நம்மைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் யாராவது நடந்துகொண்டால், இப்படி யோசியுங்கள்: ‘பைபிள் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்றுதான் அவர்களும் ஆசைப்படுவார்கள்; ஏதோ தெரியாமல் இப்படி செய்திருப்பார்கள்!’ (நீதி. 12:18) தன்னுடைய ஊழியர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் யெகோவா அவர்கள்மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறார். நாம் தவறுகள் செய்தாலும் நம்மோடு இருக்கும் பந்தத்தை அவர் முறித்துக்கொள்ள நினைப்பதில்லை; கோபத்தையும் மனதில் வைத்துக்கொண்டே இருப்பதில்லை. (சங். 103:9) மன்னிக்கிற விஷயத்தில் யெகோவா மாதிரியே நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம்!—எபே. 4:32–5:1.
7 இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க சகோதர சகோதரிகளுடன் நாம் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நமக்குத் துன்புறுத்துதல் அதிகமாகலாம். விசுவாசத்துக்காக நாம் ஜெயிலுக்குப் போக வேண்டிய நிலைமைகூட வரலாம். அப்படி நடந்தால், சகோதர சகோதரிகளின் உதவி நமக்குத் தேவைப்படும். (நீதி. 17:17) ஸ்பெயினில் மூப்பராக இருக்கும் ஜோசஃப்a என்ற சகோதரருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். நடுநிலையோடு இருந்ததால் அவரையும் இன்னும் சில சகோதரர்களையும் ஜெயிலில் போட்டார்கள். “ஜெயிலில் நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருந்ததால், ஒருவர் செய்வது இன்னொருவருக்கு சிலசமயம் எரிச்சலாக இருந்தது. அதனால், நாங்கள் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளவும் தாராளமாக மன்னிக்கவும் வேண்டியிருந்தது. இப்படி செய்தது, ஒற்றுமையாக இருக்கவும் ஒருவரை ஒருவர் பாதுகாக்கவும் உதவியது. ஜெயிலில் யெகோவாவை வணங்காத நிறைய கைதிகள் எங்களோடு இருந்தார்கள். ஒருசமயம், எனக்குக் கையில் அடிபட்டதால், கட்டு போட்டிருந்தேன். என்னுடைய வேலைகளைக்கூட என்னால் செய்ய முடியவில்லை. ஒரு சகோதரர் என்னுடைய துணிகளைத் துவைத்துக் கொடுத்தார்; மற்ற உதவிகளையும் செய்தார். எனக்கு உதவி தேவைப்பட்ட சமயத்தில் உண்மையான அன்பை என்னால் ருசிக்க முடிந்தது” என்று சொல்கிறார். சகோதர சகோதரிகளுடன் நமக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், அதை இப்போதே சரிசெய்துகொள்வது எவ்வளவு முக்கியம்!
உங்கள் துணை உங்களைக் கஷ்டப்படுத்தும்போது
8. கல்யாணமானவர்களுக்கு என்ன பிரச்சினை வரலாம்?
8 பிரச்சினை. பிரச்சினை இல்லாத கல்யாண வாழ்க்கையே இல்லை. கல்யாணமானவர்களுக்கு “வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பைபிளும் சொல்கிறது. (1 கொ. 7:28) ஏன்? ஏனென்றால், கணவன் மனைவி இரண்டு பேருமே பாவ இயல்புள்ளவர்கள். அவர்களுடைய குணங்கள், விருப்பங்கள் வித்தியாசப்படலாம். அவர்கள் வெவ்வேறு பின்னணி, கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். கல்யாணத்துக்கு முன்பு தங்களுடைய துணையிடம் கவனிக்காத குணங்கள், நாட்கள் போகப் போக தெரியவரலாம். இந்த மாதிரி விஷயங்களால் உரசல்கள் ஏற்படலாம். ‘பிரச்சினைக்கு இரண்டு பேருமே காரணம், அதை சேர்ந்துதான் சரிசெய்ய வேண்டும்’ என்று யோசிப்பதற்குப் பதிலாக ஒருவர்மேல் ஒருவர் பழி போடலாம். பிரிந்துபோவது அல்லது விவாகரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என்றுகூட அவர்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையிலேயே அதுதான் தீர்வா?b கல்யாண வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்ட ஒருவருடைய உதாரணத்திலிருந்து நாம் இப்போது கற்றுக்கொள்ளலாம்.
9. அபிகாயிலுக்கு என்ன பிரச்சினை இருந்தது?
9 பைபிள் உதாரணம். அபிகாயிலின் கணவர் பெயர் நாபால். அவன் ஒரு முரடன், ரொம்ப மோசமானவன் என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 25:3) அப்படிப்பட்ட ஒரு மனுஷனோடு வாழ்வது அபிகாயிலுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கும். அவனிடமிருந்து தப்பிப்பதற்கு அபிகாயிலுக்கு ஏதாவது வழி இருந்ததா? இருந்தது. ஒருசமயம், இஸ்ரவேலின் வருங்கால ராஜாவான தாவீதையும் அவருடைய ஆட்களையும் நாபால் அவமானப்படுத்தினான். அதனால், நாபாலைக் கொலை செய்ய தாவீது முடிவு பண்ணினார். (1 சா. 25:9-13) அபிகாயில் நினைத்திருந்தால் தான்மட்டும் தப்பித்திருக்கலாம்; தாவீது நாபாலைக் கொல்வதற்கு விட்டிருக்கலாம். ஆனாலும், அவள் தாவீதிடம் கெஞ்சிக் கேட்டு தன்னுடைய கணவரின் உயிரைக் காப்பாற்றினாள். (1 சா. 25:23-27) அவள் ஏன் அப்படி செய்தாள்?
10. கல்யாண வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் அபிகாயில் ஏன் பொறுத்துக்கொண்டு இருந்தாள்?
10 அபிகாயில் யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருந்தாள்; திருமணத்தைப் பற்றி அவர் கொடுத்திருந்த நெறிமுறைகளை மதித்தாள். ஆதாமுக்கு ஏவாளை மனைவியாக கொடுத்தபோது கடவுள் என்ன சொன்னார் என்பது கண்டிப்பாக அபிகாயிலுக்குத் தெரிந்திருக்கும். (ஆதி. 2:24) திருமண ஏற்பாட்டை யெகோவா எந்தளவுக்குப் புனிதமாக நினைக்கிறார் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கும். கடவுளை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். அதனால்தான் தன்னுடைய வீட்டில் இருந்தவர்களையும் தன் கணவரையும் காப்பாற்ற நினைத்தாள். அதற்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாள். தாவீது நாபாலைக் கொலை செய்யாமல் தடுக்க உடனடியாக செயலில் இறங்கினாள். செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கக்கூட அவள் தயாராக இருந்தாள். இப்படி, சுயநலம் இல்லாமல் தைரியமாக நடந்துகொண்ட அபிகாயிலை யெகோவா நேசித்தார். அவளுடைய உதாரணத்திலிருந்து மனைவிகளும் கணவர்களும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11. (அ) கல்யாணமானவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்? (எபேசியர் 5:33) (ஆ) கல்யாண வாழ்க்கையைக் காப்பாற்ற சகோதரி கார்மென் செய்த விஷயத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)
11 பாடம். திருமண ஏற்பாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் அந்த ஏற்பாட்டை கணவனும் மனைவியும் மதிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அவர்களுக்குள் வருகிற பிரச்சினைகளை சரிசெய்து சுயநலம் இல்லாத அன்பையும், மரியாதையையும் காட்டும்போது அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார். (எபேசியர் 5:33-ஐ வாசியுங்கள்.) கார்மென் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். கல்யாணமாகி ஆறு வருஷங்களுக்குப் பிறகு, அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்து ஞானஸ்நானம் எடுத்தார். “நான் யெகோவாவின் சாட்சியாக ஆனது என்னுடைய கணவருக்கு பிடிக்கவில்லை. நான் கூட்டத்துக்கும் ஊழியத்துக்கும் போவது அவருக்கு எரிச்சலாக இருந்தது. அதனால் என்னை அவமானப்படுத்தினார்; என்னை விட்டுவிட்டு போவதாக பயமுறுத்தினார்” என்று சொல்கிறார். இருந்தாலும் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டும் என்று சகோதரி கார்மென் நினைக்கவே இல்லை. 50 வருஷங்களாக தன்னுடைய கல்யாண வாழ்க்கையைக் கட்டிக்காப்பதற்கு அவர் கடினமாக உழைத்து வருகிறார். தன்னுடைய கணவர்மேல் அன்பையும் மரியாதையையும் காட்டுகிறார். “வருஷங்கள் போகப் போக என்னுடைய கணவரை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் அவரிடம் அன்பாகப் பேசுவதற்கும் நான் கற்றுக்கொண்டேன். திருமண ஏற்பாடு யெகோவாவின் பார்வையில் ரொம்ப புனிதமாக இருப்பதால் அதைக் கட்டிக்காக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். என் கணவரை விட்டுப் போவதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. ஏனென்றால், நான் யெகோவாமேல் அந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறேன்” என்று சொல்கிறார்.c ஒருவேளை கல்யாண வாழ்க்கை உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், ஒரு விஷயத்தில் நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம்: யெகோவா உங்கள் கூடவே இருக்கிறார்; சகித்திருப்பதற்கும் உண்மையாக இருப்பதற்கும் உதவி செய்வார்.
நீங்கள் ஏதாவது தப்பு செய்யும்போது
12. ஒரு பெரிய பாவத்தை செய்துவிட்டால் நமக்கு எப்படி இருக்கும்?
12 பிரச்சினை. நாம் ஏதாவது பெரிய பாவம் செய்துவிட்டால் நம்மையே மன்னிப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். உள்ளம் ‘உடைந்துபோன’ மாதிரியும் நெஞ்சம் ‘நொறுங்கிய’ மாதிரியும் இருக்கலாம். (சங். 51:17) ஆல்பர்ட் என்ற சகோதரரின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஒரு உதவி ஊழியராக ஆவதற்கு அவர் பல வருஷங்களாக உழைத்தார். ஆனால், அவர் ஒரு பெரிய பாவத்தை செய்துவிட்டார். யெகோவாவுக்குத் துரோகம் செய்துவிட்டதை உணர்ந்தார். அவர் சொல்கிறார்: “என் மனதில் பெரிய பாறாங்கல்லை வைத்த மாதிரி இருந்தது. அந்தளவுக்கு வலித்தது! நான் அப்படியே நொறுங்கிப் போய்விட்டேன். நான் அழுது யெகோவாவிடம் ஜெபம் பண்ணினேன். அவர் என்னை மன்னிக்கவே மாட்டார், என் ஜெபத்தைக் கேட்க மாட்டார் என்று தோன்றியது. ‘அவர் ஏன் கேட்க வேண்டும்? நான்தான் அவரை ஏமாற்றிவிட்டேனே!’ என்று நினைத்தேன்.” நாமும் ஏதாவது தப்பு செய்துவிட்டால், ‘யெகோவாவுக்கு இனிமேல் என்னைப் பிடிக்காது, அதனால் அவருக்கு சேவை செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை’ என்ற எண்ணம் வந்துவிடலாம். (சங். 38:4) நீங்களும் அந்த மாதிரி நினைக்கிறீர்களா? பெரிய பாவம் செய்திருந்தாலும் தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்த ஒரு பைபிள் உதாரணத்தைப் பற்றி பார்க்கலாம்.
13. பேதுரு செய்த பெரிய பாவம் என்ன, அதற்கு முன்பு என்னென்ன தவறுகளை செய்தார்?
13 பைபிள் உதாரணம். இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி அப்போஸ்தலன் பேதுரு அடுத்தடுத்து நிறைய தவறுகளை செய்தார்; கடைசியில் ஒரு பெரிய பாவத்தையும் செய்துவிட்டார். முதலில், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இருந்ததால், ‘யார் இயேசுவை விட்டுவிட்டு போனாலும் நான் போகவே மாட்டேன்’ என்று சொன்னார். (மாற். 14:27-29) பிறகு, கெத்செமனே தோட்டத்தில் விழித்திருக்க சொல்லி இயேசு திரும்பத் திரும்ப சொல்லியும் அவர் தூங்கிவிட்டார். (மாற். 14:32, 37-41) அப்புறம், ஒரு பெரிய கும்பல் இயேசுவை கைது செய்ய வந்தபோது பேதுரு அவரை விட்டுவிட்டு ஓடி விட்டார். (மாற். 14:50) கடைசியில், ஒரு பெரிய பாவத்தை செய்துவிட்டார்; மூன்று தடவை இயேசுவைத் தெரியாது என்று சத்தியம் பண்ணி சொன்னார். (மாற். 14:66-71) தான் செய்த பாவத்தை நினைத்து, பேதுரு அப்படியே நொறுங்கிப் போய்விட்டார். துக்கம் தாங்க முடியாமல் அழுதார். குற்ற உணர்ச்சியில் தவித்தார். (மாற். 14:72) தன்னுடைய உயிர் நண்பர் இயேசு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு கொல்லப்பட்டதைப் பார்த்தபோது பேதுருவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தன்னையே நினைத்து அவர் கூனிக்குறுகி போயிருப்பார்!
14. யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய பேதுருவுக்கு எது உதவியது? ( படத்தைப் பாருங்கள்.)
14 நம்பிக்கை இழக்காமல் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய பேதுருவுக்கு நிறைய விஷயங்கள் உதவின. அவர் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. மற்ற சீஷர்களின் உதவியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் அவரை கட்டாயம் ஆறுதல்படுத்தி இருப்பார்கள். (லூக். 24:33) அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுந்த பிறகு இயேசு பேதுருவை சந்தித்தார்; அவரை பலப்படுத்துவதற்காகவே இயேசு அப்படி செய்திருக்கலாம். (லூக். 24:34; 1 கொ. 15:5) பேதுரு செய்த தவறைக் குத்திக்காட்டுவதற்குப் பதிலாக, இயேசு அவருக்குப் பெரிய பெரிய பொறுப்புகளைக் கொடுக்கப் போவதாக சொன்னார். (யோவா. 21:15-17) தான் செய்தது ஒரு பெரிய பாவம் என்று பேதுருவுக்குத் தெரிந்திருந்தாலும், அவர் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடவில்லை. ஏனென்றால் தன்னுடைய எஜமான் இயேசு, தன்மேல் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை பேதுரு உறுதியாக நம்பினார். அதுமட்டுமல்ல, மற்ற சீஷர்களும் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். பேதுருவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15. நீங்கள் எதை உறுதியாக நம்ப வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்? (சங்கீதம் 86:5; ரோமர் 8:38, 39) (படத்தையும் பாருங்கள்.)
15 பாடம். யெகோவா நம்மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறார். நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்; இதை நாம் உறுதியாக நம்ப வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (சங்கீதம் 86:5; ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள்.) நாம் ஏதாவது தப்பு செய்துவிட்டால் குற்ற உணர்ச்சியில் தவிப்பது இயல்புதான். அது நல்லதும்கூட! ஆனால் யெகோவா நம்மேல் அன்பே காட்ட மாட்டார், நம்மை மன்னிக்கவே மாட்டார் என்று நினைக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, உடனடியாக நாம் உதவி கேட்க வேண்டும். நாம் ஏற்கெனவே பார்த்த ஆல்பர்ட் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். “சோதனைகளை சமாளிக்க என்னுடைய சொந்த பலத்தை நம்பியதால்தான் பெரிய பாவத்தை செய்துவிட்டேன்” என்கிறார். மூப்பர்களிடம் பேச வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அதைப் பற்றி அவர் இப்படி சொல்கிறார்: “யெகோவா என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மூப்பர்கள் எனக்கு புரிய வைத்தார்கள். என்மேல் இருந்த நம்பிக்கையை அவர்கள் இழக்கவில்லை. யெகோவாவும் என்னைக் கைவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் உதவினார்கள்.” நாமும் ஏதாவது தப்பு செய்துவிட்டால், மனம் திருந்தி உதவி கேட்க வேண்டும். தவறைத் திரும்பவும் செய்யாமல் இருக்க முயற்சி செய்தால் யெகோவா நம்மேல் அன்பு காட்டுவார், நம்மை மன்னிப்பார். இதை நாம் உறுதியாக நம்பலாம். (1 யோ. 1:8, 9) அந்த நம்பிக்கை இருந்தால் நாம் துவண்டுவிட மாட்டோம், தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்வோம்.
16. தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கிறீர்கள்?
16 கஷ்டமான இந்த கடைசி நாட்களில், தனக்கு சேவை செய்ய நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா உயர்வாகப் பார்க்கிறார். வாழ்க்கையில் என்னமாதிரி சூழ்நிலை வந்தாலும் சரி, யெகோவாவின் உதவியோடு நம்மால் தொடர்ந்து அவருக்கு சேவை செய்ய முடியும். சகோதர சகோதரிகள் நம்மைக் காயப்படுத்தினாலும் அவர்கள்மேல் நாம் அன்பு காட்டலாம், அவர்களை மன்னிக்கலாம். கல்யாண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதை சரிசெய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம். யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதையும் திருமண ஏற்பாட்டை மதிப்பதையும் காட்டலாம். நாம் ஏதாவது தப்பு செய்துவிட்டால், யெகோவாவிடம் உதவி கேட்கலாம். அவர் நம்மேல் அன்பு காட்டுவார், நம்மை மன்னிப்பார் என்று உறுதியாக நம்பலாம். ‘நல்லது செய்வதை நாம் விட்டுவிடாமல் இருந்தால்’ நிச்சயம் ஏராளமான ஆசீர்வாதங்களை அள்ளிக்கொள்வோம்.—கலா. 6:9.
இந்த சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்யலாம்?
சபையில் இருக்கிற யாராவது உங்களைக் காயப்படுத்தும்போது...
உங்கள் துணை உங்களைக் கஷ்டப்படுத்தும்போது...
நீங்கள் ஏதாவது தப்பு செய்யும்போது...
பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b பிரிந்துபோவதை பைபிள் எந்த விதத்திலும் ஆதரிப்பதில்லை. ஒருவேளை அப்படி பிரிந்துபோனாலும் அவர்கள் இரண்டு பேருமே வேறு கல்யாணம் பண்ணக்கூடாது என்று அது தெளிவாக சொல்கிறது. ஆனாலும் சில சூழ்நிலைகளில் பிரிந்துபோக கிறிஸ்தவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதைப் பற்றி இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பின்குறிப்பு 4-ல் “தம்பதிகள் பிரிந்துவாழ்வது” என்ற தலைப்பைப் பாருங்கள்.
c இன்னொரு உதாரணத்தைப் பார்க்க, jw.org வெப்சைட்டில் போலியான சமாதானத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!—டேரல் மற்றும் டேபோரா ஃப்ரிசிங்கர் என்ற வீடியோவைப் பாருங்கள்.