பைபிளின் கருத்து
கணவர் குடும்பத்தின் தலைவர்—என்ன கருத்தில்?
அநேக நாடுகளில், திருமண வைபவத்தின்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் உறுதிமொழிகளை சொல்வது வழக்கம்; அச்சமயத்தில், தன் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக மணமகள் உறுதிமொழி கூறுகிறாள். என்றாலும், மணவாழ்வில் ஓர் ஆணுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைப்பற்றி நினைத்தாலே பெண்கள் பலருக்கு எரிச்சலாக இருக்கிறது. மணவாழ்வில் தலைமைவகிப்பைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறதென பாருங்கள். அப்போது, இதைக் குறித்து பைபிள் சொல்கிற விஷயங்கள் நியாயமானவை, நடைமுறையானவை என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
தலைமைவகிப்பு—பைபிள் தரும் விளக்கம்
தலைமைவகிப்பைப்பற்றி பைபிள் தரும் அடிப்படை விளக்கத்தை எபேசியர் 5:22-24-ல் காணலாம். அது இவ்வாறு விவரிக்கிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல், உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; . . . ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.” கணவர் ‘மனைவிக்குத் தலையாய் இருக்கிறார்.’ எனவே, அவர்தான் குடும்பத்தை வழிநடத்த வேண்டும்; மனைவியோ அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய தலைமைவகிப்பை மதிக்க வேண்டும்.—எபேசியர் 5:33.
என்றாலும், ஒரு கணவருடைய அதிகாரம் வரம்புக்குட்பட்டது. ஏனெனில், அவர் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் கட்டுப்பட்டிருக்கிறார். ஆகவே, கடவுளுடைய சட்டங்களை மீறும்படியோ பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை விட்டுக்கொடுக்கும்படியோ தன் மனைவிக்கு கட்டளையிட அவருக்கு அதிகாரம் கிடையாது. என்றாலும், இந்த வரம்புகளுக்கு உட்பட்டு குடும்பத்தின் முக்கிய தீர்மானங்களைச் செய்யும் பொறுப்பை கடவுள் கணவருக்குக் கொடுத்திருக்கிறார்.—ரோமர் 7:2; 1 கொரிந்தியர் 11:3.
ஒரு கணவர் தன்னலமின்றி தலைமைவகிக்க வேண்டும் என்றும், தன்னுடைய நலனைவிட தன் மனைவியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் பைபிள் கட்டளையிடுகிறது. எபேசியர் 5:25, 27 இவ்வாறு கூறுகிறது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” அன்பு காட்டுவதில் கிறிஸ்துவின் தலைசிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுகிற ஒரு கணவர் தன்னலத்தோடு குடும்பத்தில் தலைமைவகிக்க மாட்டார்.
அதுமட்டுமல்ல, “விவேகத்தோடு” தன் மனைவியுடனே வாழும்படியும் கணவருக்கு பைபிள் அறிவுரை வழங்குகிறது. (1 பேதுரு 3:7) ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயுள்ள சரீர மற்றும் உணர்ச்சி ரீதியிலான வேறுபாடுகளை உணர்ந்திருப்பதைக் காட்டிலும் முக்கியமான ஒன்று இந்த அறிவுரையில் உட்பட்டுள்ளது. ஆம், ஒரு கணவர் தன் மனைவியின் தேவைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
‘அவள் உன் தோழி’
ஒரு மனைவி கணவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்பது, மறுபேச்சு பேசாமல் அவருக்கு முற்றிலும் அடங்கிப்போவதை அர்த்தப்படுத்துகிறதா? பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சாராளை எடுத்துக்கொள்ளுங்கள்; அவள் தன்னுடைய கணவரான ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிவதில் உதாரணமாய்த் திகழ்ந்தாள். (1 பேதுரு 3:5, 6) வசதியான வீட்டை விட்டுவிட்டு நாடோடியாக கூடாரங்களில் வாழ்வது போன்ற பெரிய விஷயங்களிலும்சரி, சொன்ன மாத்திரத்தில் சட்டென சாப்பாடு செய்வது போன்ற சிறிய விஷயங்களிலும்சரி அவள் தன் கணவருக்குக் கீழ்ப்பட்டிருந்தாள். (ஆதியாகமம் 12:5-9; 18:6) என்றாலும், ஒரு முக்கியமான விஷயம் சம்பந்தமாக, அவள் தன்னுடைய கருத்தை ஆபிரகாமிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். அவருடைய மறுமனையாட்டியாகிய ஆகாரையும் அவரது முதல் மகனாகிய இஸ்மவேலையும் வீட்டிலிருந்து விரட்டிவிட நினைத்ததுதான் அந்த விஷயம். ஆனால், அது ஆபிரகாமுடைய கருத்துக்கு முரணானதாக இருந்தது. சாராளைக் கண்டிப்பதற்குப் பதிலாக ‘அவள் சொல்வதெல்லாவற்றையும் கேள்’ என ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார். அதே சமயத்தில், சாராளோ ஆகாரையும் இஸ்மவேலையும் தானே விரட்டிவிடுவதற்குப் பதிலாக, ஆபிரகாமே அந்தத் தீர்மானத்தை எடுக்கும் வரையாகக் காத்திருந்தாள்; இவ்விதத்தில் அவருக்குத் தொடர்ந்து கீழ்ப்பட்டிருந்தாள்.—ஆதியாகமம் 21:8-14.
கணவரின் கைப்பாவையாக இருப்பதற்கு மாறாக, ஒரு மனைவி அவருடைய ‘தோழியாக,’ மதிப்புக்குரிய ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்பதையே சாராளின் உதாரணம் காட்டுகிறது. (மல்கியா 2:14) கணவரின் தோழியாக, குடும்ப விஷயங்களில் தீர்மானம் எடுப்பதில் மதிப்புமிக்க ஆலோசனைகளை அவள் கொடுக்கிறாள். அதோடுகூட, குடும்பத்தில் மனைவிக்கும் ஓரளவு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது; பெரும்பாலும், குடும்பக் காரியங்களையும், பண விஷயங்கள் சிலவற்றையும்கூட கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், குடும்பத்தின் தலைவர் என்ற முறையில் முடிவான தீர்மானங்களைச் செய்யும் பொறுப்பு கணவருக்குரியதே.—நீதிமொழிகள் 31:10-31; 1 தீமோத்தேயு 5:14.
படைப்பாளருக்கு மதிப்புக்கொடுத்தல்
ஆணையும் பெண்ணையும் படைத்தவர் யெகோவா தேவனே; அவர்களுக்கிடையே புனிதமான பந்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணத்தை அவர் ஏற்பாடு செய்தார். (ஆதியாகமம் 2:18-24) மிகுந்த சந்தோஷமளிக்கும் விதத்தில் கணவனும் மனைவியும் தங்களுடைய பங்கை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்றும்கூட கடவுள் குறிப்பிட்டுள்ளார்.—உபாகமம் 24:5; நீதிமொழிகள் 5:18.
திருமணத்தை ஆரம்பித்து வைத்தவரான யெகோவாவுக்கு குடும்ப ஏற்பாடு சம்பந்தமான நெறிகளை வகுப்பதற்கு உரிமையும் திறமையும் உள்ளது. கணவனும் மனைவியும் தங்களுடைய பங்கை நிறைவேற்றுவதும் தலைமைவகிப்பு சம்பந்தமான கடவுளுடைய ஏற்பாட்டைப் பின்பற்றுவதும் நடைமுறையானது மட்டுமல்ல, அது கடவுளுடைய அதிகாரத்திற்கு மதிப்புக்கொடுப்பதாயும் இருக்கிறது. ஆகவே, அவ்வாறு செய்பவர்கள் கடவுளுடைய தயவையும் ஆதரவையும் பெறுவார்கள். (g 1/08)
நீங்கள் யோசித்ததுண்டா?
◼ தலைமைவகிப்பிற்கு தலைசிறந்த உதாரணமாய்த் திகழ்பவர் யார்?—எபேசியர் 5:25.
◼ கணவரின் அதிகாரத்தை கடவுள் கட்டுப்படுத்துகிறாரா?—1 கொரிந்தியர் 11:3.
◼ திருமணம் மற்றும் தலைமைவகிப்பின் நோக்கம் என்ன?—நீதிமொழிகள் 5:18.
[பக்கம் 28-ன் படம்]
கிறிஸ்துவின் முன்மாதிரிபடி கணவர் தலைமைவகிக்கையில் மணத்துணைகள் இருவருமே சந்தோஷத்தையும் திருப்தியையும் காண முடியும்