தேவன் இணைத்ததைப் பிரிக்காதீர்கள்
“அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:6.
1, 2. தம்பதியரிடையே அவ்வப்போது பிரச்சினைகள் தலைதூக்குமென எதிர்பார்ப்பது ஏன் வேதப்பூர்வமாகவும் நியாயமாகவும் இருக்கிறது?
காரில் நீண்ட தூரப் பயணத்தைத் துவங்கவிருப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். வழியில் ஏதேனும் பிரச்சினைகள் வருமா? பிரச்சினையே வராது என்று நினைப்பது மடத்தனம், அல்லவா? உதாரணமாக, மோசமான சீதோஷ்ண நிலையை நீங்கள் எதிர்ப்படலாம்; அதனால், காரை நிதானமாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஏதோவொரு கட்டத்தில் உங்களுடைய காரில் இயந்திரக் கோளாறு ஏற்படும்போது அதைச் சரிசெய்ய நீங்கள் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போகலாம்; அப்போது, உங்களுடைய காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு யாரையாவது உதவிக்கு அழைக்க நேரிடலாம். இத்தகைய சூழ்நிலைகளில், இப்படியொரு பயணத்தை ஆரம்பித்ததே தவறு என்றும், இந்தக் காரை இங்கேயே விட்டுவிட்டு போய்விடலாம் என்றும் நீங்கள் நினைப்பீர்கள்? மாட்டீர்கள். நீண்ட தூரப் பயணத்தின்போது, இடையில் பிரச்சினைகள் வருமென்பது நீங்கள் எதிர்பார்த்ததுதான். அதனால், அந்தப் பிரச்சினைகளை எப்படிச் சரிசெய்யலாம் என்பதைக் குறித்து சிந்திப்பீர்கள்.
2 திருமணத்தைப் பொருத்ததிலும் இதுவே உண்மை. மணவாழ்வில் பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, இல்லற வாழ்வில் இணைய எண்ணியிருக்கும் இருவர் பிரச்சினைகளே இல்லாத பேரின்ப வாழ்க்கையை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகத்தான் இருக்கும். 1 கொரிந்தியர் 7:28-ல் கணவர்களும் மனைவிகளும் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்று பைபிள் நேரடியாகத் தெரிவிக்கிறது. இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன? சுருங்கச் சொன்னால், கணவன், மனைவி இருவருமே அபூரணர்களாக இருக்கிறார்கள்; அதோடு, நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1; ரோமர் 3:23) எனவே, பொருத்தமானவர்களாகவும் ஆன்மீக சிந்தையுள்ளவர்களாகவும் இருக்கிற தம்பதியரும்கூட அவ்வப்போது பிரச்சினைகளைச் சந்திப்பார்கள்.
3. (அ) உலகில் சிலர் திருமணத்தை எவ்வாறு கருதுகிறார்கள்? (ஆ) கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடைய மணவாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்?
3 இன்றைய உலகில் பிரச்சினைகள் தலைதூக்கும்போது தம்பதியர் சிலர் உடனடியாகத் திருமண பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நினைக்கிறார்கள். அநேக நாடுகளில், விவாகரத்துக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும், உண்மைக் கிறிஸ்தவர்கள் அவசரப்பட்டு விவாகரத்தில் இறங்குவதற்குப் பதிலாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகிறார்கள். ஏன்? ஏனென்றால், மணவாழ்வை யெகோவா தந்த புனிதமான பரிசாக அவர்கள் கருதுகிறார்கள். மணமானவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” (மத்தேயு 19:6) இந்த நியமத்தின்படி வாழ்வது எப்போதும் எளிதல்ல என்பது உண்மைதான். உதாரணமாக, பைபிள் நியமங்களை ஏற்றுக்கொள்ளாத சொந்தபந்தங்களும் சில திருமண ஆலோசகர்கள் உட்பட மற்றவர்களும் வேதப்பூர்வமற்ற காரணங்களுக்காகப் பிரிந்து செல்லவோ விவாகரத்துச் செய்யவோ தம்பதிகளை ஊக்குவிக்கிறார்கள்.a ஆனால், அவசரப்பட்டு திருமண பந்தத்தை முறித்துவிடுவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைச் சரிசெய்து, மணவாழ்வைத் தக்கவைத்துக்கொள்வதே சிறந்தது என்பதைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், எடுத்த எடுப்பிலேயே மற்றவர்கள் தரும் ஆலோசனையின்படியல்ல, ஆனால், யெகோவாவின் வழியில் காரியங்களைச் செய்ய வேண்டுமென்பதில் நாம் உறுதியாயிருப்பது முக்கியம்.—நீதிமொழிகள் 14:12.
பிரச்சினைகளைச் சமாளித்தல்
4, 5. (அ) மணவாழ்வில் எத்தகைய பிரச்சினைகள் தலைதூக்கலாம்? (ஆ) மணவாழ்வில் பிரச்சினைகள் எழுந்தாலும்கூட கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்கள் ஏன் பயன் அளிக்கின்றன?
4 ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லற வாழ்வில் அவ்வப்போது எழும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். பெரும்பாலான சமயங்களில், சிறுசிறு மனத்தாங்கல்களைத் தீர்ப்பதும் இதில் அடங்கும். இருந்தபோதிலும், மணவாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்யுமளவுக்குப் படுமோசமான பிரச்சினைகள் சிலருடைய வாழ்க்கையில் எழலாம். சில சமயங்களில், மணமான, அனுபவமுள்ள கிறிஸ்தவ மூப்பரின் உதவியை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்படலாம். இருந்தபோதிலும், உங்கள் திருமணம் தோல்வியடைந்துவிட்டதென இத்தகைய சூழ்நிலைகள் அர்த்தப்படுத்துவதில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பைபிள் நியமங்களை அச்சுப் பிசகாமல் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையே இவை எடுத்துக்காட்டுகின்றன.
5 யெகோவா தேவன், மனிதகுலத்தின் படைப்பாளராகவும், திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவராகவும் இருப்பதால் மணவாழ்வு வெற்றியடைவதற்கு நமக்கு என்ன தேவை என்பதை வேறு எவரைக்காட்டிலும் நன்கு அறிந்திருக்கிறார். கேள்வி என்னவென்றால், அவருடைய வார்த்தையிலுள்ள அறிவுரையை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிவோமா? அவ்வாறு செய்தால் நாம் நிச்சயம் பயன் அடைவோம். தம்முடைய பண்டைய மக்களிடம் யெகோவா இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசாயா 48:18) பைபிளிலுள்ள அறிவுரையைப் பின்பற்றுவது மணவாழ்வில் வெற்றி தரும். கணவர்களுக்கு பைபிள் தரும் அறிவுரையை நாம் முதலாவதாகச் சிந்திப்போம்.
‘உங்கள் மனைவிகளில் தொடர்ந்து அன்புகூருங்கள்’
6. கணவர்களுக்கு பைபிள் என்ன அறிவுரை தருகிறது?
6 எபேசியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில் கணவர்களுக்கான தெளிவான அறிவுரை உள்ளது. பவுல் இவ்வாறு எழுதினார்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் [“தொடர்ந்து,” NW] அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான் [“பொக்கிஷமாகவும் போற்றுகிறான்,” NW]. எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.”—எபேசியர் 5:25, 27, 28, 29, 33.
7. (அ) கிறிஸ்தவ திருமணத்தின் அஸ்திவாரத்தில் எது முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்? (ஆ) கணவர்கள் தங்களுடைய மனைவிகளில் எவ்வாறு தொடர்ந்து அன்புகூருகிறார்கள்?
7 கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எழக்கூடிய பிரச்சினைகள் ஒவ்வொன்றைக் குறித்தும் பவுல் அலசி ஆராயவில்லை. மாறாக, ஒவ்வொரு கிறிஸ்தவ திருமணத்தின் அஸ்திவாரத்திலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய ஒன்றைச் சுட்டிக்காட்டுவதன்மூலம் மணவாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கான அடிப்படைத் தீர்வை அவர் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் தீர்வு அன்பே. சொல்லப்போனால், இந்த வசனங்களில் அன்பு ஏழு தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. ‘உங்கள் மனைவிகளில் தொடர்ந்து அன்புகூருங்கள்’ என்றும்கூட கணவர்களுக்கு பவுல் சொல்வதைக் கவனியுங்கள். காதல் வயப்படுவது மிக எளிது, காலமெல்லாம் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்வதோ கடினம் என்பதை பவுல் நிச்சயம் அறிந்திருந்தார். முக்கியமாக இந்தக் “கடைசிநாட்களில்” அது கடினம். ஏனென்றால், அநேகர் “தற்பிரியராயும்,” “இணங்காதவர்களாயும்” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-3) இத்தகைய மோசமான குணங்கள் இன்று அநேகருடைய மணவாழ்வை சீரழித்து சின்னாபின்னமாக்குகின்றன; ஓர் அன்புள்ள கணவரோ, இந்த உலகின் சுயநல பண்புகள் தன்னுடைய சிந்தனைகளையும் செயல்களையும் பாதிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்.—ரோமர் 12:2.
உங்கள் மனைவியின் தேவைகளை எப்படிக் கவனித்துக் கொள்ளலாம்?
8, 9. ஒரு கிறிஸ்தவ கணவர் என்னென்ன வழிகளில் தன் மனைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டும்?
8 நீங்கள் ஒரு கிறிஸ்தவக் கணவரென்றால், தன்னல மனப்பான்மைகளைத் தவிர்த்து உங்கள் மனைவியிடம் எவ்வாறு உண்மையான அன்பைக் காட்ட முடியும்? எபேசியர்களுக்கு பவுல் எழுதிய முன்னர் குறிப்பிடப்பட்ட வார்த்தைகளில் நீங்கள் செய்ய வேண்டிய இரண்டு காரியங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவை: உங்கள் மனைவிகளுடைய தேவைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள், அதோடு, உங்களுடைய சரீரத்தைப்போலவே அவளைப் பொக்கிஷமாய்ப் போற்றுங்கள். உங்கள் துணையின் தேவைகளை எப்படிக் கவனித்துக் கொள்வீர்கள்? பொருள் சம்பந்தமாக, அதாவது உங்கள் மனைவியின் சரீரத் தேவைகளைக் கவனித்துக் கொள்வது ஒரு வழியாகும். தீமோத்தேயுவுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5:8.
9 இருந்தபோதிலும், உங்கள் மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டால் மட்டுமே போதாது. ஏன்? ஏனென்றால், ஒரு கணவர் தன்னுடைய மனைவிக்குத் தேவையான பொருள்களைத் தருவதில் எந்தக் குறையும் வைக்காமல் இருக்கலாம்; ஆனாலும் அவளுடைய உணர்ச்சிப்பூர்வமான, ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்யாதிருக்கலாம். இத்தகைய தேவைகளைக் கவனித்துக் கொள்வது மிக முக்கியம். அநேக கிறிஸ்தவ ஆண்கள் சபை சம்பந்தப்பட்ட காரியங்களில் மிக மும்முரமாக ஈடுபடுவதென்னவோ உண்மைதான். ஆனால், ஒரு கணவருக்கு சபையில் முக்கியமான பொறுப்புகள் இருப்பது, குடும்பத் தலைவராக கடவுள் அவருக்குக் கொடுத்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்க வேண்டுமென அர்த்தப்படுத்தாது. (1 தீமோத்தேயு 3:5, 12) இது சம்பந்தமாக, இந்தப் பத்திரிகை சில வருடங்களுக்கு முன்பு பின்வருமாறு குறிப்பிட்டது: ‘பைபிளின்படி, “மேய்க்கும் வேலை வீட்டில் ஆரம்பிக்கிறது” என்று சொல்லலாம். குடும்பத்தைக் கவனியாமல் போவாரானால், ஒரு மூப்பர் தன்னுடைய பொறுப்பை இழந்துவிடக்கூடும்.’b தெளிவாகவே, உங்களுடைய மனைவியின் உடல்ரீதியான, உணர்ச்சிரீதியான தேவைகளைக் கவனித்துக் கொள்வதோடு, அதி முக்கியமாக, ஆன்மீகத் தேவைகளுக்குக் கவனம் செலுத்துவது இன்றியமையாதது.
உங்கள் மனைவியை எப்படிப் பொக்கிஷமாய்ப் போற்றலாம்?
10. ஒரு கணவர் தன் மனைவியை எப்படிப் பொக்கிஷமாய்ப் போற்றலாம்?
10 உங்கள் மனைவியை நீங்கள் பொக்கிஷமாய்ப் போற்றினால், அவளை நேசிப்பதன் காரணமாக அவளை நன்கு கவனித்துக் கொள்வீர்கள். இதை நீங்கள் பல்வேறு வழிகளில் காட்டலாம். முதலாவதாக, உங்கள் மனைவியுடன் போதுமான நேரத்தைச் செலவிடுங்கள். இந்த விஷயத்தில் மனைவியை நீங்கள் அசட்டை செய்தால், உங்கள்மீது அவள் வைத்திருக்கும் அன்பு தணிந்துபோகலாம். உங்கள் மனைவிக்காக இந்தளவு நேரம் செலவழித்தால் போதும், இந்தளவு கவனிப்பு கொடுத்தால் போதுமென நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அவளுடைய தேவை நீங்கள் நினைப்பதிலிருந்து வேறுபடலாம் என்பதையும் நினைவில் வையுங்கள். உங்கள் துணையைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதாக நீங்கள் சொன்னால் மட்டும் போதாது. அப்படி அவள் உணர வேண்டும். பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:24) அன்புள்ள கணவராக, உங்கள் மனைவிக்கு உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்துகொள்ள விரும்புவீர்கள்.—பிலிப்பியர் 2:4.
11. ஒரு கணவர் தன்னுடைய மனைவியை நடத்தும் விதம் கடவுளோடும் சபையோடும் அவருக்குள்ள உறவை எவ்வாறு பாதிக்கலாம்?
11 உங்களுடைய மனைவியை நீங்கள் பொக்கிஷமாய்ப் போற்றுவதைக் காட்டுவதற்கு மற்றொரு வழி வார்த்தையிலும் செயலிலும் அவளை மென்மையாக நடத்துவதே. (நீதிமொழிகள் 12:18) கொலோசெயர்களுக்கு பவுல் இவ்விதமாக எழுதினார்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” (கொலோசெயர் 3:19) “அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்” என்ற இந்தச் சொற்றொடரை “அவளை வேலைக்காரியைப்போல நடத்தாதீர்கள்” அல்லது “அவளை ஓர் அடிமையைப்போல நடத்தாதீர்கள்” எனவும் மொழிபெயர்க்கலாம் என்பதாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. தனியாக இருக்கும்போதும்சரி, பொதுவிடங்களில் இருக்கும்போதும்சரி, கொடுங்கோலனைப்போல நடந்துகொள்ளும் ஒரு கணவன், தன்னுடைய மனைவியை நிச்சயமாகவே பொக்கிஷமாய்ப் போற்றுவதில்லை. தன்னுடைய மனைவியை மோசமாக நடத்துவதன்மூலம், கடவுளோடுள்ள தன் உறவுக்கு அவர் பங்கம் விளைவிக்கக்கூடும். அப்போஸ்தலன் பேதுரு கணவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.”c—1 பேதுரு 3:7.
12. கிறிஸ்தவ சபையை இயேசு நடத்திய விதத்திலிருந்து ஒரு கிறிஸ்தவ கணவர் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
12 நீங்கள் எப்படி நடந்துகொண்டாலும் உங்கள் மனைவி இயல்பாகவே உங்கள்மீது அன்பு காட்டுவாளென நினைத்துவிடாதீர்கள். எப்போதும் நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிசெய்வது அவசியம். கிறிஸ்தவ சபையை இயேசு நடத்திய விதத்தில் கிறிஸ்தவ கணவர்களுக்கு முன்மாதிரி வைத்தார். தம்முடைய சீஷர்கள் மீண்டும்மீண்டும் விரும்பத்தகாத குணங்களை வெளிக்காட்டியபோதும்கூட அவர் சாந்தமானவராக, தயவானவராக, மன்னிக்கிறவராக இருந்தார். எனவே, இயேசுவால் மற்றவர்களிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது: “என்னிடத்தில் வாருங்கள்; . . . நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; . . . உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28, 29) இயேசுவைப் பின்பற்றுகிற கிறிஸ்தவ கணவர், இயேசு எவ்வாறு சபையை நடத்தினாரோ அதேவிதமாக தன் மனைவியை நடத்துகிறார். தன்னுடைய மனைவியை உண்மையாகவே பொக்கிஷமாய்ப் போற்றுவதை சொல்லிலும் செயலிலும் காட்டுகிற ஒருவர், அவளுக்கு நிஜமாகவே இளைப்பாறுதலாக, அதாவது புத்துணர்ச்சியின் பிறப்பிடமாய் விளங்குவார்.
பைபிள் நியமங்களின்படி வாழுகிற மனைவிகள்
13. மனைவிகளுக்கு உதவுகிற என்ன நியமங்கள் பைபிளில் காணப்படுகின்றன?
13 மனைவிகளுக்கு உதவுகிற நியமங்களும் பைபிளில் உள்ளன. எபேசியர் 5:22-24, 33 இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். . . . மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [அதாவது, ஆழ்ந்த மரியாதை காட்டக்கடவள்].”
14. கீழ்ப்படியும்படியான வேதப்பூர்வ நியமம் ஏன் பெண்களை மதிப்புக் குறைவாக்குவது இல்லை?
14 கீழ்ப்படிதலையும் மரியாதையையும் பவுல் வலியுறுத்திக் காட்டுவதைக் கவனியுங்கள். தன்னுடைய கணவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி ஒரு மனைவிக்கு நினைப்பூட்டப்படுகிறது. இது கடவுளுடைய ஏற்பாட்டுக்கு இசைவானதாக இருக்கிறது. பரலோகத்திலும் பூமியிலும் வாழும் உயிர்கள் அனைத்துமே யாராவது ஒருவருக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றன. இயேசுவும்கூட யெகோவா தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார். (1 கொரிந்தியர் 11:3) ஒரு கணவன் தன்னுடைய தலைமை ஸ்தானத்தை சரியான விதத்தில் கையாளும்போது அவருக்கு அடங்கி நடப்பது மனைவிக்கு எளிதாக இருப்பது உண்மைதான்.
15. மனைவிகளுக்கு பைபிளில் காணப்படுகிற சில அறிவுரைகள் யாவை?
15 மனைவி ‘புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதைக் காட்ட’ வேண்டுமென்றும் பவுல் குறிப்பிட்டார். ஒரு கிறிஸ்தவ மனைவி கணவனை எதிர்த்து ஆணவத்துடன் வாக்குவாதம் செய்யாமல் அல்லது சுதந்திரமாகச் செயல்படும் போக்கை தேர்ந்தெடுக்காமல் ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியை’ அதாவது மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும். (1 பேதுரு 3:4) கடவுள் பக்தியுள்ள மனைவி குடும்பத்தின் நன்மைக்காகக் கடினமாய் உழைப்பதோடு தன் கணவனையும் கௌரவிக்கிறாள். (தீத்து 2:4, 5) தன் கணவனைப்பற்றி பெருமையாகப் பேசவே முயற்சி செய்வாள்; அதோடு, மற்றவர்கள் அவரை மதிப்புக் குறைவாகக் கருதுவதற்கு இடம் அளிக்கிற எதையும் செய்யமாட்டாள். அவருடைய தீர்மானங்கள் வெற்றி அடைவதற்குக் கடினமாக உழைப்பாள்.—நீதிமொழிகள் 14:1.
16. சாராள் மற்றும் ரெபெக்காளின் உதாரணங்களிலிருந்து கிறிஸ்தவ மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 ஒரு கிறிஸ்தவ பெண் சாந்தமும் அமைதலுமான மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமென்பது அவளுக்கென சொந்த அபிப்பிராயங்கள் இருக்கக்கூடாது என்றோ அவளுடைய எண்ணங்கள் முக்கியமற்றவை என்றோ அர்த்தப்படுத்துவதில்லை. பூர்வ காலத்தில் சாராள், ரெபெக்காள் போன்ற கடவுள் பக்தியுள்ள பெண்கள் தங்களுடைய மனதை பாதித்த விஷயங்களைத் தெரிவிக்கத் தயங்கவில்லை; அதோடு, யெகோவா அவர்களுடைய செயல்களை அங்கீகரித்தார் என்றும் பைபிள் பதிவுகள் காட்டுகின்றன. (ஆதியாகமம் 21:8-12; 27:46–28:4) கிறிஸ்தவ மனைவிகளும்கூட தங்களுடைய மனதை வாட்டும் கவலைகளைத் தெரிவிக்கலாம். இருந்தபோதிலும், அதை அவர்கள் இழிவுபடுத்துகிற விதத்தில் அல்ல, ஆனால் அன்பான விதத்தில் தெரிவிக்க வேண்டும். அத்தகைய உரையாடல் அதிக இதமானதாக மட்டுமல்ல, கைமேல் பலன் தருவதாகவும் இருப்பதைப் பெரும்பாலும் மனைவிகள் காண்பார்கள்.
திருமண ஒப்பந்தத்திற்கு இசைய வாழ்வது
17, 18. திருமண பந்தத்தை முறிக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளை கணவர்களும் மனைவிகளும் எந்தெந்த வழிகளில் எதிர்க்கலாம்?
17 திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடித்துநிற்கும் பந்தமாக இருக்கிறது. எனவே, மணவாழ்வு வெற்றி அடைய வேண்டுமென்ற உள்ளப்பூர்வமான ஆசை கணவன், மனைவி இருவருக்குமே இருப்பது அவசியம். மனந்திறந்து பேசாமல் இருப்பது பிரச்சினைகளைப் பெரிதாக்கி நிலைமையை மோசமாக்கிவிடும். பெரும்பாலும், பிரச்சினைகள் தலைதூக்குகையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள், இதுவே மனக்கசப்புக்கு இடம் அளிக்கிறது. மணத்துணைகள் சிலர் திருமண பந்தத்திற்கு வெளியே காதலுறவை வளர்த்துக் கொள்வதன்மூலம் தங்களுடைய திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள வழிதேடுகிறார்கள். இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”—மத்தேயு 5:28.
18 அப்போஸ்தலன் பவுல் தம்பதிகள் உட்பட கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இவ்வாறு ஆலோசனை கூறினார்: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபேசியர் 4:26, 27) நம்முடைய முக்கிய எதிரியாகிய சாத்தான் கிறிஸ்தவர்களுக்கு இடையே எழுகிற கருத்து வேறுபாடுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறான். அவனை வெற்றிபெற விடாதீர்கள்! பிரச்சினைகள் தலைதூக்கும்போது, யெகோவா அவற்றை எவ்வாறு நோக்குகிறார் என்பதைக் கண்டறிய பைபிள் பிரசுரங்களை ஆராய்ச்சி செய்யுங்கள். கருத்து வேறுபாடுகளை அமைதியாகவும் ஒளிவுமறைவில்லாமலும் கலந்து பேசுங்கள். நீங்கள் அறிந்திருக்கிற யெகோவாவின் தராதரங்களை அப்படியே கடைப்பிடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். (யாக்கோபு 1:22-25) உங்கள் மணவாழ்வைப் பொருத்தவரையில், தம்பதியராக யெகோவாவோடு நடக்க தீர்மானமாயிருங்கள்; அவர் இணைத்ததைப் பிரிக்க யாரையும் எதையும் அனுமதிக்காதீர்கள்!—மீகா 6:8.
[அடிக்குறிப்புகள்]
a விவாகரத்து, பிரிந்துசெல்வது சம்பந்தமாகக் கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட கடவுள் நம்மிடமிருந்து எதை தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டில் பக்கம் 17-ல் பாராக்கள் 6, 7-ஐக் காண்க.
b காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1990, பக்கம் 23-ஐக் காண்க.
c கிறிஸ்தவ சபையில் பொறுப்புகளைப் பெற விரும்புகிற ஓர் ஆண் ‘அடிக்கிறவராய்,’ அதாவது, மற்றவர்களை அடித்து விளாசுகிறவராகவோ வார்த்தைகளைச் சாட்டையாகப் பயன்படுத்துகிறவராகவோ இருக்கக்கூடாது. எனவே, மே 1, 1991, காவற்கோபுரம், பக்கம் 17-ல் இவ்வாறு குறிப்பிட்டது: “மற்ற இடங்களில் தெய்வீகத் தன்மைகளுடன் நடந்துகொண்டு, வீட்டில் கொடுங்கோலனாக இருந்தால், அவன் தகுதிபெற முடியாது.”—1 தீமோத்தேயு 3:2-5, 12.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவர்களின் மணவாழ்விலும்கூட ஏன் பிரச்சினைகள் தலைதூக்கலாம்?
• ஒரு கணவர் தன்னுடைய மனைவியின் தேவைகளைக் கவனித்து அவளைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதை எவ்வாறு காட்ட முடியும்?
• ஒரு மனைவி தன்னுடைய கணவர்மீது எவ்வாறு ஆழ்ந்த மரியாதையைக் காட்ட முடியும்?
• கணவனும் மனைவியும் தங்களுடைய திருமண பந்தத்தை எவ்வாறு பலப்படுத்த முடியும்?
[பக்கம் 20-ன் படம்]
கணவர் பொருளாதார ரீதியில் மட்டுமல்ல ஆன்மீக ரீதியிலும் தன் மனைவியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்
[பக்கம் 21-ன் படம்]
தன்னுடைய மனைவியைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிற கணவர், புத்துணர்ச்சியின் பிறப்பிடமாய் விளங்குவார்
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவ மனைவிகள் தங்களுடைய உணர்ச்சிகளை மரியாதையோடு தெரிவிக்கிறார்கள்