கணவர்களே, கிறிஸ்துவைப் போல் அன்பு காட்டுங்கள்!
இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த கடைசி இரவின்போது உண்மையுள்ள தம் அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்; நான் உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவா. 13:34, 35) ஆகவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிற கணவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” (எபே. 5:25) கணவன்மார்கள் எப்படி இந்த பைபிள் அறிவுரையை தங்கள் மணவாழ்வில் கடைப்பிடிக்கலாம்? அதுவும், மனைவி யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியராக இருக்கும்போது இதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்?
கிறிஸ்து சபையை நெஞ்சார நேசித்தார்
‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது. “தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன் மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான்; ஆனால், அதைப் போஷித்து நெஞ்சார நேசிக்கிறான்; கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார்” என்றும் அது சொல்கிறது. (எபே. 5:28, 29) இயேசு தம் சீடர்கள்மீது பாசமாக இருந்தார், அவர்களை உயிருக்கு உயிராக நேசித்தார். ஆம், அவர்களை நெஞ்சார நேசித்தார். அவர்கள் குற்றங்குறையுள்ள அபூரணர்களாக இருந்தபோதிலும் அவர்களிடம் மென்மையோடும் பரிவோடும் நடந்துகொண்டார். ‘சபை தமக்குமுன் பிரகாசிக்க வேண்டும்’ என்ற விருப்பத்தோடு தம் சீடர்களின் நல்ல குணங்களையே கவனித்தார்.—எபே. 5:27.
கிறிஸ்து சபையின்மீது அன்பு காட்டியது போலவே கணவர்கள் சொல்லிலும் செயலிலும் தங்கள் மனைவிமீது அன்பு காட்ட வேண்டும். கணவனுடைய பாச மழையில் தினந்தினம் நனைகிற மனைவி அளவிலா சந்தோஷத்தில் பூரித்துப்போகிறாள். மறுபட்சத்தில், கணவனால் மதிக்கப்படாமல் அலட்சியம் செய்யப்படுகிற மனைவி, சகல வசதிகளும் உள்ள மாளிகை வீட்டில் வசித்தாலும் விரக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறாள்.
மனைவியை நெஞ்சார நேசிக்கிற கணவர் எப்படி நடந்துகொள்வார்? மற்றவர்கள்முன் அவளைக் கண்ணியமான விதத்தில் அறிமுகப்படுத்தி வைப்பார், அவள் தரும் ஆதரவுக்காக வாயாரப் புகழ்வார். குடும்பமாக ஒரு காரியத்தைச் சாதித்ததற்கு மனைவி முக்கிய காரணமாக இருந்திருந்தால் அதை மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளத் தயங்கவே மாட்டார். இருவரும் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவள்மீது பாசத்தைக் கொட்டுவார். அன்பாகத் தொடுவதும், ஆசையாகப் புன்னகைப்பதும், பாசத்தோடு கட்டித்தழுவுவதும், மனதாரப் பாராட்டுவதும் சின்னச் சின்ன விஷயங்களாகத் தெரியலாம்; ஆனால், இவை ஒரு பெண்ணின் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் விஷயங்கள்.
‘சகோதரர்கள் என்று அழைப்பதற்கு வெட்கப்படுவதில்லை’
இயேசு கிறிஸ்து பரலோக நம்பிக்கையுள்ள தம் சீடர்களை ‘“சகோதரர்கள்” என்று அழைப்பதற்கு . . . வெட்கப்படவில்லை.’ (எபி. 2:11, 12, 17) கணவர்களே, நீங்கள் ஒரு கிறிஸ்தவ சகோதரரா? அப்படியென்றால், உங்கள் மனைவி ஒரு கிறிஸ்தவ சகோதரி என்பதை மறந்துவிடாதீர்கள். அவள் யெகோவாவுக்குச் செய்திருக்கும் ஒப்புக்கொடுத்தல் உங்களுக்குக் கொடுத்திருக்கும் திருமண உறுதிமொழியைவிட மிக முக்கியமானது; அவள் உங்களைத் திருமணம் செய்வதற்குமுன் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி அதற்குப்பின் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி, இதுவே உண்மை. சபைக் கூட்டத்தில் ஒரு பகுதியைக் கையாளும் சகோதரர், குறிப்புச் சொல்ல உங்கள் மனைவியை அழைக்கும்போது “சகோதரி—” என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. உங்கள் மனைவி உங்கள் சகோதரியாகவும் இருக்கிறாள்; ராஜ்ய மன்றத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்தான். ஆகவே, ராஜ்ய மன்றத்தில் அவளிடம் எப்படி மென்மையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் வீட்டிலும் நடந்துகொள்ள வேண்டும்.
சபையில் உங்களுக்குக் கூடுதலான பொறுப்புகள் இருந்தால், அவற்றையும் குடும்பப் பொறுப்புகளையும் சேர்த்து கவனித்துக்கொள்வது சிலசமயங்களில் உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். மூப்பர்களும் உதவி ஊழியர்களும் நன்கு ஒத்துழைப்பதும், பொறுப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அச்சமயங்களில் உதவியாக இருக்கலாம்; அப்படிச் செய்கையில், உங்கள் மனைவிக்காக நீங்கள் நேரத்தை ஒதுக்க முடியும்; மற்ற எல்லாரையும்விட உங்கள் மனைவிக்குத்தானே நீங்கள் ரொம்பவும் தேவை. ஏனென்றால், உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற சபைப் பொறுப்புகளைக் கையாள எத்தனையோ சகோதரர்கள் இருக்கிறார்கள், ஆனால் உங்கள் மனைவியைக் கரம்பிடித்திருக்கிற சகோதரர் நீங்கள் மட்டும்தான்; இதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
அதுமட்டுமல்ல, நீங்கள்தான் உங்கள் மனைவிக்குத் தலைவர். “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (1 கொ. 11:3) குடும்பத் தலைவராக இருக்கும் பொறுப்பை நீங்கள் எப்படிக் கையாள வேண்டும்? மேலே குறிப்பிட்ட வசனத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டி மரியாதையைக் கேட்டு வாங்குவதன் மூலம் அல்ல, ஆனால் அன்பாக அப்பொறுப்பைக் கையாள வேண்டும். மனைவியை நடத்தும் விதத்தில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதே அப்பொறுப்பைச் சரிவர கையாளுவதற்கான சிறந்த வழி.—1 பே. 2:21.
‘நீங்கள் என் நண்பர்கள்’
இயேசு தம் சீடர்களை நண்பர்கள் என அழைத்தார். “இனி உங்களை அடிமைகள் என்று நான் சொல்ல மாட்டேன், ஏனென்றால் எஜமான் செய்வது ஓர் அடிமைக்குத் தெரியாது. நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன், ஏனென்றால் என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குத் தெரிவித்திருக்கிறேன்” என்று சொன்னார். (யோவா. 15:14, 15) இயேசுவும் அவருடைய சீடர்களும் எப்போதும் மனம்விட்டுப் பேசினார்கள். எல்லாக் காரியங்களையும் சேர்ந்து செய்தார்கள். கானா ஊரில் நடந்த திருமண விருந்துக்கு “இயேசுவும் அவரது சீடர்களும்கூட” அழைக்கப்பட்டிருந்தார்கள். (யோவா. 2:2) விருப்பமான சில இடங்களுக்கு அவர்கள் வழக்கமாகச் சென்றார்கள். உதாரணமாக, கெத்செமனே தோட்டத்திற்கு ‘இயேசு தமது சீடர்களுடன் அடிக்கடி போயிருந்தார்’ என பைபிள் சொல்கிறது.—யோவா. 18:2.
கணவனுடைய மிக நெருக்கமான நண்பர் யார் என்று கேட்டால், அது ‘நான்தான்’ என மனைவி சொல்லுமளவுக்கு அவர்களிடையே அன்யோன்யம் இருக்க வேண்டும். அப்படியென்றால், கணவனும் மனைவியும் எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செய்வது எவ்வளவு முக்கியம்! இருவரும் சேர்ந்தே கடவுளைச் சேவியுங்கள். இருவரும் சேர்ந்தே பைபிளை வாசித்து மகிழுங்கள். சொல்லப்போனால், நடப்பது, பேசுவது, சாப்பிடுவது என எல்லாவற்றையும் சேர்ந்தே செய்ய நேரமெடுங்கள். இருவரும் கணவன் மனைவியாக மட்டுமல்ல, ஆருயிர் நண்பர்களாக இருங்கள்.
அவர் “முடிவுவரை அன்பு காட்டினார்”
இயேசு ‘தம் சீடர்கள்மீது முடிவுவரை அன்பு காட்டினார்.’ (யோவா. 13:1) இவ்விஷயத்தில் கிறிஸ்துவைப் பின்பற்ற சில கணவர்கள் தவறிவிடுகிறார்கள். சொல்லப்போனால், வேறொரு இளம் பெண்ணின்மேல் ஆசைப்பட்டு தங்களுடைய ‘இளவயதின் மனைவியை’ கைவிட்டுவிடுகிறார்கள்.—மல். 2:14, 15.
ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிற கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார், விலி. அவர் மனைவி, மோசமான உடல்நிலை காரணமாக பல வருடங்கள் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். இதைப் பற்றி விலி என்ன சொல்கிறார்? “என் மனைவியைக் கடவுள் தந்த பரிசாகத்தான் எப்போதும் பார்த்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, சுகத்திலும்சரி துக்கத்திலும்சரி அவளைக் கவனித்துக்கொள்வதாக 60 வருடங்களுக்கு முன்பு நான் உறுதிமொழி செய்தேன். அந்த உறுதிமொழியை ஒருபோதும் மறக்க மாட்டேன்.”
கிறிஸ்தவக் கணவர்களே, கிறிஸ்துவைப் போல் அன்பு காட்டுங்கள். தேவபயமுள்ள உங்கள் மனைவியை, ஆம், உங்கள் சகோதரியாகவும் ஆருயிர் தோழியாகவும் இருக்கிறவளை, நெஞ்சார நேசியுங்கள்.
[பக்கம் 20-ன் படம்]
உங்களுடைய நெருங்கிய நண்பர் உங்கள் மனைவிதானா?
[பக்கம் 20-ன் படம்]
“மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்”