அதிகாரம் 16
பிசாசையும் அவனது சூழ்ச்சிகளையும் எதிர்த்து நில்லுங்கள்
‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் ஓடிப்போவான்.’—யாக்கோபு 4:7.
1, 2. ஞானஸ்நானம் எடுப்பவர்களைப் பார்க்கும்போது யாரெல்லாம் சந்தோஷப்படுகிறார்கள்?
நீங்கள் யெகோவாவுக்குப் பல ஆண்டுகளாகச் சேவை செய்து வருகிறவர் என்றால், மாநாடுகளில் பல தடவை ஞானஸ்நானப் பேச்சைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், நீங்கள் எத்தனை தடவை அதைக் கேட்டிருந்தாலும் சரி, ஞானஸ்நானம் எடுப்பவர்கள் உறுதிமொழி அளிக்க எழுந்து நிற்கும்போதெல்லாம் மனம் நெகிழ்ந்துபோகிறீர்கள், அல்லவா? அந்தச் சமயத்தில், மாநாட்டுக்கு வந்திருப்பவர்கள் மத்தியில் உற்சாகம் அலை மோதும்! அரங்கத்தில் கரகோஷம் எழும்பும்! யெகோவாவின் பக்கம் வந்துள்ள இந்த அருமையான சகோதர சகோதரிகளைப் பார்க்கும்போது உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். எவ்வளவு சந்தோஷமான தருணங்கள்!
2 நம் வட்டாரத்தில் உள்ளவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதை வருடத்தில் சில தடவை மட்டுமே நாம் பார்க்கிறோம்; ஆனால், பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்கள் அதை அடிக்கடி பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் யெகோவாவின் அமைப்பில் சேரும்போது “பரலோகத்தில்” உள்ள தேவதூதர்கள் எவ்வளவு ‘சந்தோஷப்படுவார்கள்’ என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? (லூக்கா 15:7, 10) இந்த அதிகரிப்பை பார்க்கும்போது தூதர்கள் பேரானந்தம் அடைகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!—ஆகாய் 2:7.
பிசாசு ‘கர்ஜிக்கிற சிங்கம்போல் அலைந்து திரிகிறான்’
3. சாத்தான் ஏன் “கர்ஜிக்கிற சிங்கம்போல்” அலைந்து திரிகிறான், அவன் என்ன செய்யப் பார்க்கிறான்?
3 இதற்கு நேர்மாறாக, பொல்லாத தூதர்கள் ஞானஸ்நானம் பெறுகிறவர்களைக் கடுஞ்சீற்றத்துடன் பார்க்கிறார்கள். ஆயிரமாயிரம் பேர் இந்தச் சீர்கெட்ட உலகை உதறி தள்ளிவிட்டுப்போவதைக் கண்டு சாத்தானும் பேய்களும் கொந்தளிக்கிறார்கள். ஏனென்றால், எந்த மனிதனும் உண்மையான அன்போடு யெகோவாவுக்குச் சேவை செய்வது கிடையாது என்றும், கடும்சோதனை வந்தால் யாருமே கடவுளுக்கு விசுவாசமாய் இருக்க மாட்டார்கள் என்றும் சாத்தான் ஆணவத்தோடு சொல்லியிருந்தான். (யோபு 2:4, 5-ஐ வாசியுங்கள்.) மனிதர்கள் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் போதெல்லாம் சாத்தான் பொய்யனாக நிரூபிக்கப்படுகிறான். ஒரு விதத்தில், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான முறை சாத்தான் அறை வாங்குகிறான். அதனால், ‘கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அவன் அலைந்து திரிவதில்’ ஆச்சரியமே இல்லை. (1 பேதுரு 5:8) இந்த “சிங்கம்” நம்மை அடையாள அர்த்தத்தில் விழுங்கப் பார்க்கிறது, ஆம், கடவுளோடு உள்ள நம் பந்தத்தைக் குலைக்கவோ முறிக்கவோ பார்க்கிறது.—சங்கீதம் 7:1, 2; 2 தீமோத்தேயு 3:12.
மனிதர்கள் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போதெல்லாம் சாத்தான் பொய்யனாக நிரூபிக்கப்படுகிறான்
4, 5. (அ) என்ன இரண்டு முக்கியமான வழிகளில் சாத்தானின் செல்வாக்கை யெகோவா கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்? (ஆ) உண்மைக் கிறிஸ்தவர்கள் எதைக் குறித்து உறுதியாயிருக்கலாம்?
4 மூர்க்கவெறி கொண்ட ஓர் எதிரியை எதிர்கொள்கிறபோதிலும், நாம் பயந்து நடுங்க வேண்டியதில்லை. ஏன்? ஏனென்றால், சாத்தானின் செல்வாக்கை இரண்டு முக்கிய வழிகளில் யெகோவா கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். ஒன்று, வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தை’ உண்மைக் கிறிஸ்தவர்கள் அடங்கிய “திரள் கூட்டமான மக்கள்” தப்பிப்பிழைப்பார்கள் என யெகோவா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) கடவுள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் ஒருபோதும் நிறைவேறாமல் போகாது. எனவே, கடவுளுடைய மக்களை கூண்டோடு அழிக்க முடியாது என்பதைச் சாத்தானும் அறிந்திருக்கிறான்.
5 இரண்டாவதாக, சாத்தானின் செல்வாக்கை எப்படி யெகோவா கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதை அவருடைய பூர்வகால ஊழியர் ஒருவர் சொன்ன வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். “நீங்கள் யெகோவாவின் பக்கம் இருக்கும்வரை அவர் உங்களுடன் இருப்பார்” என்ற முக்கியமான உண்மையை அசரியா தீர்க்கதரிசி அரசனாகிய ஆசாவிடம் சொன்னார். (2 நாளாகமம் 15:2; 1 கொரிந்தியர் 10:13) கடவுளிடம் அன்னியோன்னியமாய் இருந்தவரை பூர்வகால ஊழியர்களில் ஒருவரைக்கூட சாத்தானால் விழுங்க முடியவில்லை என்பதற்கு பைபிளில் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. (எபிரெயர் 11:4-40) இன்றும்கூட கடவுளோடு நெருக்கமாக இருக்கும் ஒரு கிறிஸ்தவரால் சாத்தானை எதிர்க்கவும் முடியும், அவனை ஜெயிக்கவும் முடியும். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது.—யாக்கோபு 4:7.
‘பொல்லாத தூதர் கூட்டத்தோடு நாம் போராட வேண்டியிருக்கிறது’
6. சாத்தான் நம்மை எப்படித் தனிநபர்களாகத் தாக்குகிறான்?
6 கடவுளுடைய மக்களுக்கு எதிரான போராட்டத்தில் சாத்தான் வெற்றிபெற முடியாது; ஆனால், நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் தனிநபர்களாக நம்மை அவன் வீழ்த்திவிடுவான். கடவுளோடுள்ள நம் பந்தத்தைக் கெடுத்துவிட்டால் நம்மைச் சுலபமாக வீழ்த்த முடியுமென்று சாத்தானுக்குத் தெரியும். அப்படியானால், சாத்தான் நம்மை எப்படித் தாக்குகிறான்? தீவிரமாகத் தாக்குகிறான், தனிநபர்களாகத் தாக்குகிறான், தந்திரமாகத் தாக்குகிறான். சாத்தான் பயன்படுத்தும் இந்த முக்கிய உத்திகளைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.
7. யெகோவாவின் மக்களை சாத்தான் ஏன் தீவிரமாகத் தாக்குகிறான்?
7 தீவிரமாய் தாக்குகிறான். “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டார். (1 யோவான் 5:19) உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நம் எல்லாருக்கும் இது ஓர் எச்சரிக்கை வாசகம். இந்தப் பொல்லாத உலகத்தை சாத்தான் ஏற்கெனவே தன்வசப்படுத்தியிருப்பதால், இதுவரை அவன் கையிலிருந்து நழுவியவர்கள்மீது—யெகோவாவின் மக்கள்மீது—முழுக் கவனத்தையும் திருப்பி, அவர்களைத் தீவிரமாகத் தாக்கி வருகிறான். (மீகா 4:1; யோவான் 15:19; வெளிப்படுத்துதல் 12:12, 17) தனக்குக் கொஞ்ச காலமே எஞ்சியிருப்பதை அவன் அறிந்திருப்பதால் கடும் கோபத்தோடு இருக்கிறான். அதனால் தன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறான். கடவுளோடுள்ள நம் பந்தத்தை முறிப்பதற்காக அவன் இன்று உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறான். எனவே, ‘[நாம்] வாழ்கிற காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் புரிந்து வைத்திருக்க’ வேண்டும்.—1 நாளாகமம் 12:32.
8. எந்த அர்த்தத்தில் பொல்லாத தூதர் கூட்டத்தோடு நாம் “போராட” வேண்டியிருக்கிறது என்று பவுல் சொன்னார்?
8 தனிநபர்களாய் தாக்குகிறான். ‘பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடு நாம் போராட வேண்டியிருக்கிறது’ என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (எபேசியர் 6:12) ‘போராடுதல்’ என்ற வார்த்தையை பவுல் ஏன் பயன்படுத்தினார்? ஏனென்றால், நேருக்கு நேர் நின்று சண்டையிடும் கருத்தை இது தருகிறது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக பொல்லாத தூதர்களோடு போராட வேண்டியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவே பவுல் இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். நாம் வாழும் பகுதியில், பேய்களைப் பற்றிய நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்த நாளிலேயே அடையாள அர்த்தத்தில் மல்யுத்தக் களத்தில் குதித்துவிட்டோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்த நாள் முதற்கொண்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனவேதான், ‘உறுதியோடு நிற்கும்படி’ எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு மூன்று தடவை பவுல் அறிவுறுத்தினார்.—எபேசியர் 6:11, 13, 15.
9. (அ) சாத்தானும் பேய்களும் ஏன் பல்வேறு “சூழ்ச்சிகளை” பயன்படுத்துகிறார்கள்? (ஆ) நம் மனதைக் கெடுக்க சாத்தான் ஏன் முயற்சி செய்கிறான், அவனுடைய முயற்சிகளை நாம் எப்படி முறியடிக்கலாம்? (பக்கங்கள் 220-221-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (இ) எந்தச் சூழ்ச்சியைப் பற்றி இப்போது நாம் சிந்திக்கப்போகிறோம்?
9 தந்திரமாய் தாக்குகிறான். சாத்தானின் “சூழ்ச்சிகளை” உறுதியாய் எதிர்த்து நிற்கும்படி கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கூறுகிறார். (எபேசியர் 6:11) சூழ்ச்சிகள் என்று பவுல் பன்மையில் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். பொல்லாத தூதர்கள் வெறுமனே ஒரு தந்திரத்தை அல்ல, பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்—அதுவும் காரணத்தோடுதான். ஏனென்றால், ஒரு சோதனையை வெற்றிகரமாகச் சமாளித்த கிறிஸ்தவர்கள் சிலர் வேறொரு சோதனையில் விழுந்திருக்கிறார்கள். எனவே, நம்முடைய பலவீனத்தைக் கண்டுபிடிப்பதற்காக பிசாசும் பேய்களும் நம் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். பின்பு, ஆன்மீக ரீதியில் நம்மிடம் ஏதாவது பலவீனம் தென்பட்டால் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், சாத்தானின் தந்திரங்களைப் பற்றி பைபிள் சொல்வதால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளலாம். (2 கொரிந்தியர் 2:11) பொருளாசை, கெட்ட சகவாசம், பாலியல் முறைகேடு போன்ற சாத்தானின் உத்திகளைப் பற்றி இந்தப் புத்தகத்தில் நாம் ஏற்கெனவே சிந்தித்தோம். சாத்தானின் மற்றொரு சூழ்ச்சியைப் பற்றி இப்போது நாம் சிந்திக்கலாம். அதுவே ஆவியுலகத் தொடர்பு.
ஆவியுலகத் தொடர்பு—கடவுளுக்குத் துரோகம்
10. (அ) ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன? (ஆ) ஆவியுலகத் தொடர்பை யெகோவா எப்படிக் கருதுகிறார், நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?
10 ஆவியுலகத் தொடர்பில் ஈடுபடும் ஒரு நபர் பொல்லாத தூதர்களோடு நேரடியாகத் தொடர்புகொள்கிறார். குறிசொல்வது, செய்வினை செய்வது, வசியம் வைப்பது, செத்தவர்களிடம் குறிகேட்பது போன்றவை ஆவியுலகத் தொடர்பின் சில வகைகள். ஆவியுலகத் தொடர்பை யெகோவா ‘அருவருக்கிறார்’ என்று நமக்கு நன்றாகவே தெரியும். (உபாகமம் 18:10-12; வெளிப்படுத்துதல் 21:8) நாமும் ‘பொல்லாததை அடியோடு வெறுக்க’ வேண்டியிருப்பதால், பொல்லாத தூதர் கூட்டத்தோடு சகவாசம் வைத்துக்கொள்வதை நினைத்துக்கூட பார்க்க மாட்டோம். (ரோமர் 12:9) ஏனென்றால், அது நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கு மாபெரும் துரோகமாக இருக்கும்!
11. நாம் ஆவியுலகத் தொடர்பில் ஈடுபட்டால் சாத்தானுக்கு அது எப்படி மாபெரும் வெற்றியாக இருக்கும்? விளக்கவும்.
11 ஆவியுலகத் தொடர்பில் ஈடுபடுவது கடவுளுக்குச் செய்யும் துரோகமாக இருப்பதால், நம்மை அதில் எப்படியாவது ஈடுபடுத்த வேண்டுமென்று சாத்தான் முனைப்பாக இருக்கிறான். ஒரு கிறிஸ்தவரை ஆவியுலகத் தொடர்பில் ஈடுபடுத்தும்போது அவனுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கிறது. எப்படி? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: படைவீரர் ஒருவர் எதிரி படையில் சேர்ந்துகொண்டு தன் படையினருக்குத் துரோகம் செய்ய தூண்டுவிக்கப்பட்டால், எதிரி படைத் தளபதிக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அந்தப் படைவீரரின் முன்னாள் தளபதியை அவமானப்படுத்துவதற்காக அந்தப் படைவீரரை ஒரு வெற்றிக் கோப்பையைப் போல ஊர்வலமாகத் தூக்கிச் செல்லலாம். அதுபோலவே, கிறிஸ்தவர் ஒருவர் ஆவியுலகத் தொடர்பில் ஈடுபட்டால், அவர் மனப்பூர்வமாக, வேண்டுமென்றே யெகோவாவை விட்டுவிலகி, சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறார். அந்த நபரை தனக்குக் கிடைத்த வெற்றிக் கோப்பையைப் போல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்! பிசாசுக்கு அப்படிப்பட்ட ஒரு வெற்றியைத் தேடித் தர நாம் விரும்புவோமா? கண்டிப்பாக மாட்டோம்! நாம் யாருமே துரோகிகள் அல்ல.
சந்தேகத்தை விதைக்க கேள்விகளைப் பயன்படுத்துகிறான்
12. ஆவியுலகத் தொடர்பு பற்றிய நம் கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக சாத்தான் என்ன வழியைப் பயன்படுத்துகிறான்?
12 நாம் ஆவியுலகத் தொடர்பை வெறுக்கும்வரை, அதைப் பயன்படுத்தி நம்மை வீழ்த்துவதில் சாத்தான் வெற்றிபெற முடியாது. எனவேதான், நம் மனதை மாற்ற வேண்டுமென்று சாத்தான் முயற்சி செய்கிறான். எப்படி? “நல்லதைக் கெட்டது என்றும் கெட்டதை நல்லது என்றும்” நம்ப வைத்து கிறிஸ்தவர்கள் சிலரையாவது குழப்ப அவன் வழிதேடுகிறான். (ஏசாயா 5:20) அதற்காக, காலங்காலமாக அவனுக்குக் கைகொடுத்து வருகிற ஒரு வழியை இப்போதும் பயன்படுத்துகிறான். அதுதான் கேள்விகள் மூலம் மக்கள் மனதில் சந்தேகத்தை விதைப்பது.
13. மக்களுடைய மனதில் சந்தேகத்தை விதைக்க சாத்தான் எப்படிக் கேள்விகளைப் பயன்படுத்தியிருக்கிறான்?
13 கடந்த காலங்களில் இந்த வழியை சாத்தான் எப்படிப் பயன்படுத்தினான் என்பதைக் கவனியுங்கள். “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் அவன் கேட்டான். யோபுவின் காலத்தில், பரலோகத்தில் தேவதூதர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தின்போது, “யோபு சும்மாவா உங்களுக்குப் பயந்து நடக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினான். இயேசு தன் ஊழியத்தைத் தொடங்கியபோது, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்று அவரிடம் சவால் விட்டான். “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று ஆறு வாரங்களுக்கு முன்பு யெகோவா சொன்ன வார்த்தைகளிலேயே சாத்தான் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!—ஆதியாகமம் 3:1; யோபு 1:9; மத்தேயு 3:17; 4:3.
14. (அ) ஆவியுலகத் தொடர்பு பற்றிய சந்தேகத்தை சாத்தான் எப்படி மக்களின் மனதில் விதைத்திருக்கிறான்? (ஆ) இப்போது நாம் எதைப் பற்றி சிந்திப்போம்?
14 அதேபோல், ஆவியுலகத் தொடர்பு உண்மையிலேயே தீங்குள்ளதா என்ற கேள்வியை இன்று மக்களின் மனதில் சாத்தான் விதைத்திருக்கிறான். கிறிஸ்தவர்களில் சிலரும்கூட அவனுடைய சூழ்ச்சியில் சிக்கியிருப்பது வருத்தகரமான விஷயம். ஆவியுலகத்தோடு தொடர்புடைய சில பழக்கங்கள் உண்மையிலேயே தீங்குள்ளதா என்று அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:3) அவர்கள் தங்களுடைய மனதை மாற்றிக்கொள்ள நாம் எப்படி உதவலாம்? சாத்தானின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் நம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண, ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களை சாத்தான் தந்திரமாக நுழைத்திருக்கும் இரண்டு அம்சங்களை இப்போது நாம் சிந்திக்கலாம். அவையே பொழுதுபோக்கு, ஆரோக்கியம்.
நம் ஆசைகளையும் தேவைகளையும் தவறாகப் பயன்படுத்துகிறான்
15. (அ) மேலை நாடுகளில் உள்ள அநேகர் மாயமந்திரத்தை எப்படிக் கருதுகிறார்கள்? (ஆ) மாயமந்திரத்தைப் பற்றிய உலகின் கண்ணோட்டம் கிறிஸ்தவர்கள் சிலரை எப்படிப் பாதித்திருக்கிறது?
15 குறிப்பாக மேலை நாடுகளில், மாயமந்திரங்களில் ஈடுபடுவதும் பில்லிசூனியம் வைப்பதும் ஆவியுலகத்தோடு தொடர்புடைய மற்ற பழக்கங்களில் ஈடுபடுவதும் சாதாரண விஷயமாகக் கருதப்படுகிறது. சினிமாக்கள், புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவை பேய்த்தனமான பழக்கங்களை விளையாட்டான, புத்திசாலித்தனமான, தீங்கற்ற பழக்கங்களாக சித்தரிக்கின்றன. மாயமந்திரங்களைச் சிறப்பித்துக் காட்டும் சில சினிமாக்களும் புத்தகங்களும் அதிக பிரபலமாகியிருப்பதால், அதை ரசித்துப் பார்க்கிறவர்கள் ரசிகர் மன்றங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம், மாயமந்திரம் உண்மையில் ஆபத்தானதல்ல என்ற எண்ணத்தைப் பரப்புவதில் பேய்கள் வெற்றிகண்டிருக்கின்றன. இந்த எண்ணம் கிறிஸ்தவர்களையும் தொற்றியிருக்கிறதா? சிலரைத் தொற்றியிருக்கிறது. எப்படி? உதாரணமாக, மாயமந்திரம் சம்பந்தப்பட்ட ஒரு படத்தைப் பார்த்த பிறகு, “நான் படம்தானே பார்த்தேன், நான் ஒன்றும் மாயமந்திரத்தில் ஈடுபடவில்லையே” என்று ஒரு கிறிஸ்தவர் சொன்னார். இப்படிப்பட்ட எண்ணம் ஏன் ஆபத்தானது?
16. மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது ஏன் ஆபத்தானது?
16 மாயமந்திரத்தைப் பார்ப்பதற்கும் அதில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் இருந்தாலும், அதைப் பார்ப்பதால் எந்த ஆபத்துமில்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஏன்? இதைக் கவனியுங்கள்: சாத்தானாலோ பேய்களாலோ நம் மனதைப் படிக்க முடியாது என்று பைபிள் காட்டுகிறது.a நாம் ஏற்கெனவே பார்த்தபடி, நாம் என்ன யோசிக்கிறோம், ஆன்மீக ரீதியில் நம்மிடம் என்ன பலவீனம் இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் பொல்லாத தூதர் கூட்டம் நம் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறது, ஏன், நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கையும் கூர்ந்து கவனிக்கிறது. ஆவிகளோடு பேசுதல், வசியம் வைத்தல், பேய் பிடித்தல், மற்ற மாயமந்திர பழக்கங்களில் ஈடுபடுதல் போன்றவற்றைச் சிறப்பித்துக் காட்டும் சினிமாக்களையோ புத்தகங்களையோ ஒரு கிறிஸ்தவர் ரசித்துப் பார்க்கிறார் அல்லது படிக்கிறார் என்றால், தன்னுடைய பலவீனத்தைப் பற்றி அவரே பேய்களுக்குத் தெரியப்படுத்துகிறார்! அதனால், அவருடைய பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை வீழ்த்தும்வரை பேய்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்துகின்றன. சொல்லப்போனால், மாயமந்திரத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கில் ஈடுபட்டதால்தான் சிலருக்கு அதன்மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது; அப்படிப்பட்டவர்கள் காலப்போக்கில் மாயமந்திரத்தில் ஈடுபடவே ஆரம்பித்திருக்கிறார்கள்.—கலாத்தியர் 6:7-ஐ வாசியுங்கள்.
17. வியாதிப்பட்டிருக்கும் ஒருவரை வீழ்த்த சாத்தான் எந்தச் சூழ்ச்சியைப் பயன்படுத்தலாம்?
17 பொழுதுபோக்கின் மீது நமக்கிருக்கும் ஆசையை மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் மீது நமக்கிருக்கும் அக்கறையையும் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறான். எப்படி? வியாதியோடு போராடும் ஒரு கிறிஸ்தவர் எக்கச்சக்கமான சிகிச்சைகள் பெற்றும் பலனே கிடைக்காமல் போகும்போது மனமொடிந்து போகலாம். (மாற்கு 5:25, 26) சாத்தானும் பேய்களும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை வீழ்த்தலாம். ‘மாயமந்திரத்தோடு,’ அதாவது ஆவியுலகத்தோடு, சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளும்படி வியாதிப்பட்டிருக்கும் ஒரு கிறிஸ்தவரைப் பேய்கள் தூண்டலாம். (ஏசாயா 1:13) வியாதிப்பட்டிருக்கும் கிறிஸ்தவர் ஒருவேளை பேய்களின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியானால் கடவுளோடுள்ள தன் பந்தத்தைக் கெடுத்துக்கொள்வார். எப்படி?
18. எப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை ஒரு கிறிஸ்தவர் தவிர்த்துவிடுவார், ஏன்?
18 ‘மாயமந்திரத்தின்’ உதவியை நாடிய இஸ்ரவேலரை யெகோவா இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன். நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும் நான் கேட்க மாட்டேன்.” (ஏசாயா 1:15) அதனால், யெகோவா நம் ஜெபத்தைக் கேட்காமலோ நமக்கு உதவி செய்யாமலோ போகிற அளவுக்கு நாம் எதையும் செய்ய விரும்ப மாட்டோம், முக்கியமாக வியாதிப்பட்டிருக்கிற சமயத்தில். (சங்கீதம் 41:3) எனவே, நோய் பரிசோதனை முறைகளோ சிகிச்சை முறைகளோ ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருப்பது தெரிய வந்தால் உண்மைக் கிறிஸ்தவர் அதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.b (மத்தேயு 6:13) இப்படிச் செய்தால் அவர் யெகோவாவின் தயவை இழக்கமாட்டார்.—“இது உண்மையிலேயே ஆவியுலகத்தோடு தொடர்புடையதா?” என்ற பெட்டியைப் பக்கம் 222-ல் காண்க.
பேய்கள் பற்றிய கதைகள் பரவும்போது...
19. (அ) சாத்தான் தனக்கு இருக்கும் சக்தியைக் குறித்து அநேகரை எப்படி ஏமாற்றியிருக்கிறான்? (ஆ) எப்படிப்பட்ட கதைகளைப் பரப்புவதை உண்மைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும்?
19 மேலை நாடுகளில் வசிக்கும் அநேகர் சாத்தானால் உண்டாகும் ஆபத்தைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள்; ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நிலைமை நேர்மாறாக இருக்கிறது. தனக்கு அதிக சக்தி இருப்பதாக சாத்தான் அங்குள்ளவர்களை நம்பவைத்திருக்கிறான். சிலர் பேய்களைப் பற்றிய பயத்திலேயே சாப்பிடுகிறார்கள், வேலை செய்கிறார்கள், தூங்குகிறார்கள். பேய்களின் சக்தியை விவரிக்கும் கதைகளுக்கு அங்கு பஞ்சமே இல்லை! பேய் கதைகளை மக்கள் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்கள். மற்றவர்களும் ரசித்துக் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பேய் கதைகளை நாம் பரப்பலாமா? கூடாது. உண்மைக் கடவுளின் ஊழியர்கள் அப்படிச் செய்யாமலிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
20. ஒருவர் எப்படித் தெரியாத்தனமாக சாத்தானுக்குப் பிரச்சாரம் செய்யலாம்?
20 முதலாவதாக, ஒருவர் பேய்களைப் பற்றிய சுவாரஸ்யமான கதைகளைப் பரப்பும்போது சாத்தானின் செயல்களை ஆதரிக்கிறார். எப்படி? சாத்தானால் வல்லமைமிக்க செயல்கள் செய்ய முடியும் என்று கடவுளுடைய வார்த்தை தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அவன் “பொய்யான அடையாளங்களும் . . . ஏமாற்று வேலைகளும்” செய்கிறான் என்றும் அது சொல்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) ஆவியுலகத் தொடர்பில் ஆர்வமுள்ளவர்களின் மனதை எப்படிக் கவருவது என சாத்தான் நன்றாகவே அறிந்திருக்கிறான். அதோடு, பொய்யைக்கூட உண்மையென அவர்களை நம்ப வைப்பது அவனுக்குக் கைவந்த கலை. எனவே, அப்படிப்பட்டவர்கள் சில காரியங்களை நிஜமாகவே பார்த்ததாகவோ கேட்டதாகவோ நினைத்துக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம். காலப்போக்கில், அந்தக் கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு மிகைப்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட கதைகளை ஒரு கிறிஸ்தவர் பரப்பினால், ‘பொய்க்குத் தகப்பனாகிய’ பிசாசின் விருப்பத்தைச் செய்கிறவராக இருப்பார். அப்படிப்பட்டவர் சாத்தானுக்குப் பிரச்சாரம் செய்கிறவராகவும் இருப்பார்.—யோவான் 8:44; 2 தீமோத்தேயு 2:16.
21. நாம் எதைப் பற்றியே மற்றவர்களிடம் பேச வேண்டும்?
21 இரண்டாவதாக, கடந்த காலங்களில் நிஜமாகவே ஒருவருக்கு பேய்களைப் பார்த்த அனுபவம் இருந்திருந்தாலும்கூட, அதைப் பற்றி சக கிறிஸ்தவர்களிடம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. ஏன்? ‘விசுவாசத்தின் அதிபதியும் நம்முடைய விசுவாசத்தை முழுமையாக்குகிறவருமான இயேசுவின் மீதே கண்களைப் பதிய வைத்து ஓடும்படி’ பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது. (எபிரெயர் 12:2) ஆம், சாத்தானின் மீதல்ல, இயேசுவின் மீதே நம் கண்களை ஒருமுகப்படுத்த வேண்டும். சாத்தானால் என்னவெல்லாம் செய்ய முடியும், என்னவெல்லாம் செய்ய முடியாது என இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அவற்றைப் பற்றிய தகவல்களை தன் சீஷர்களிடம் அவர் சொல்லிக்கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியே அவர்களிடம் இயேசு பேசினார். எனவே, இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் பின்பற்றி, நாமும் “கடவுளுடைய மகத்தான செயல்களை” பற்றியே மற்றவர்களிடம் பேசுவோமாக.—அப்போஸ்தலர் 2:11; லூக்கா 8:1; ரோமர் 1:11, 12.
22. பரலோகத்தில் சந்தோஷம் உண்டாக நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
22 உண்மைதான், யெகோவாவோடுள்ள நம் பந்தத்தை முறிப்பதற்காக ஆவியுலகத் தொடர்பு உட்பட பல்வேறு சூழ்ச்சிகளை சாத்தான் பயன்படுத்துகிறான். என்றாலும், பொல்லாததை அடியோடு வெறுத்து, நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்வதன் மூலம் எல்லா வகையான ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களையும் தவிர்க்க வேண்டுமென்ற தீர்மானத்தில் நாம் உறுதியாய் இருக்கிறோம். (எபேசியர் 4:27-ஐ வாசியுங்கள்.) சாத்தானுக்குச் சாவுமணி அடிக்கப்படும்வரை, நாம் தொடர்ந்து அவனுடைய ‘சூழ்ச்சிகளை உறுதியோடு எதிர்த்து நின்றால்’ “பரலோகத்தில்” எந்தளவு “சந்தோஷம்” உண்டாகும் எனக் கற்பனை செய்துபாருங்கள்!—லூக்கா 15:7; எபேசியர் 6:11.
a சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டப்பெயர்கள் (எதிர்ப்பவன், இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன், வஞ்சிப்பவன், சோதனைக்காரன், பொய்யன்) நம் மனதையும் இதயத்தையும் ஆராயும் திறமை அவனுக்கு இருக்கிறதென சுட்டிக்காட்டுவதில்லை. ஆனால், யெகோவா “இதயத்தை ஆராய்கிறவர்” என்றும், இயேசு “அடிமனதின் யோசனைகளையும் இதயங்களையும் ஆராய்ந்து பார்க்கிறவர்” என்றும் பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:3; வெளிப்படுத்துதல் 2:23.
b கூடுதல் தகவலுக்கு காவற்கோபுரம் டிசம்பர் 15, 1994 இதழில் பக்கங்கள் 19-22-ல் “உங்களுக்கொரு உடல்நலப் பரிசோதனையா?” என்ற கட்டுரையையும் விழித்தெழு! ஜனவரி 8, 2001 இதழில் “பைபிளின் கருத்து—எந்த சிகிச்சையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாமா?” என்ற கட்டுரையையும் காண்க.