பேய்கள்—நாம் எப்படி எதிர்க்க முடியும்?
“தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் [கடவுள்] அடைத்து வைத்திருக்கிறார்.”—யூதா 6.
1, 2. பிசாசாகிய சாத்தானையும் பேய்களையும்பற்றி என்ன கேள்விகள் எழுகின்றன?
“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என அப்போஸ்தலன் பேதுரு எச்சரிக்கிறார். (1 பேதுரு 5:8) பேய்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக் கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே.”—1 கொரிந்தியர் 10:20, 21.
2 அப்படியானால், பிசாசாகிய சாத்தானும் பேய்களும் யார்? அவர்கள் எப்பொழுது தோன்றினார்கள், எப்படித் தோன்றினார்கள்? அவர்களை கடவுள் படைத்தாரா? மனிதர்கள்மீது அவர்களின் செல்வாக்கு எந்தளவுக்கு பலமானதாய் இருக்கிறது? அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க ஏதேனும் வழி இருக்கிறதா?
சாத்தானும் பேய்களும் எப்படித் தோன்றினார்கள்?
3. கடவுளுடைய தூதனாயிருந்த ஒருவன் பிசாசாகிய சாத்தானாக மாறியது எவ்வாறு?
3 மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், ஏதேன் தோட்டத்தில் மனிதர் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியபோது, கடவுளுடைய தூதனாயிருந்த ஒருவன் கலகக்காரனாக ஆனான். ஏன்? ஏனெனில் யெகோவாவின் பரலோக அமைப்பில் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஸ்தானத்தில் அவன் திருப்தி அடையவில்லை. அதனால், ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டபோது, அவர்களை உண்மைக் கடவுளிடமிருந்து விலக்கி கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் தான் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக அதை எண்ணினான். இவ்வாறு, கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்ததன் மூலமும் முதல் மனித தம்பதியரை பாவம் செய்யத் தூண்டியதன் மூலமும் இந்தத் தூதன் தன்னை பிசாசாசிய சாத்தானாக மாற்றிக்கொண்டான். காலப்போக்கில், இந்தக் கலகத்தனத்தில் அவனோடு மற்ற தூதர்களும் சேர்ந்துகொண்டார்கள். எப்படி?—ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12; வெளிப்படுத்துதல் 12:9.
4. நோவா காலத்தில் ஜலப்பிரளயத்திற்கு முன் கலகக்கார தூதர்கள் சிலர் என்ன செய்தார்கள்?
4 நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்குச் சிலகாலம் முன்பு, தூதர்கள் சிலர் பூமியிலுள்ள பெண்கள்மேல் விபரீத ஆசை கொண்டார்கள் என்பதாக தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் சொல்கிறது. தங்களது ஆசையைத் தீர்த்துக்கொள்வதற்காக, பரலோகத்திலுள்ள இந்த “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்” என பைபிள் குறிப்பிடுகிறது. இயற்கைக்கு மாறான இந்த உறவினால், நெஃபிலிம் என்ற இராட்சத கலப்பின பிள்ளைகளை அவர்கள் பெற்றெடுத்தார்கள். (ஆதியாகமம் 6:2-4) இவ்வாறு யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமற்போன இந்த ஆவி சிருஷ்டிகள் சாத்தானோடு சேர்ந்து கலகத்தனத்தில் ஈடுபட்டார்கள்.
5. ஜலப்பிரளயத்தின் மூலமாக யெகோவா அழிவை ஏற்படுத்தியபோது இந்தக் கலகக்கார தூதர்களுக்கு என்ன ஆனது?
5 மனிதகுலத்தின் மேல் ஜலப்பிரளயத்தை யெகோவா வருவித்தபோது, இந்த நெஃபிலிம்களும் அவர்களுடைய தாய்மார்களும் அழிந்து போனார்கள். கலகம் செய்த தூதர்களோ தங்கள் மாம்ச உடலைக் களைந்து பரலோகத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. என்றாலும், கடவுள் கொடுத்திருந்த “ஆதி மேன்மையை” அவர்கள் திரும்பப் பெற முடியவில்லை. மாறாக, டார்டரஸ் எனப்படும் “[ஆன்மீக] அந்தகாரத்தில்” அடைத்து வைக்கப்பட்டார்கள்.—யூதா 6; 2 பேதுரு 2:4.
6. ஜனங்களை பேய்கள் எப்படி வஞ்சிக்கின்றன?
6 “தங்களுடைய ஆதி மேன்மையை” இழந்தது முதற்கொண்டு, இந்தப் பேய்கள் சாத்தானுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு அவனுடைய தீய காரியங்களுக்கு ஆதரவளித்து வந்திருக்கின்றன. அந்தச் சமயம் முதற்கொண்டு, மனித உருவெடுக்கும் சக்தியை அவை இழந்துவிட்டன. என்றாலும், பல விதமான தகாத பாலியல் காரியங்களில் ஆண்களையும் பெண்களையும் சிக்கவைக்க அவற்றால் முடியும். ஆவியுலகத் தொடர்பு மூலமாகவும் அவை மனிதகுலத்தை தீவிரமாய் வஞ்சித்து வருகின்றன; மந்திர வசியங்கள், சூனியம், ஆவி மத்தியஸ்தர்கள் இவையாவும் ஆவியுலகத் தொடர்பில் உட்பட்டுள்ளன. (உபாகமம் 18:10-13; 2 நாளாகமம் 33:6) பிசாசுக்கு வரவிருக்கும் முடிவையே இந்தப் பொல்லாத தூதர்களும் சந்திப்பார்கள், ஆம் நித்திய அழிவைச் சந்திப்பார்கள். (மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:10) இருந்தாலும், அவர்கள் அழிக்கப்படும் வரையில் நாம் உறுதியாய் இருந்து அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படியானால், சாத்தான் எந்தளவு சக்திவாய்ந்தவன், அவனையும் அவனுடைய பேய்களையும் நாம் எப்படித் திறமையாக எதிர்க்கலாம் என்பதைப்பற்றி சிந்திப்பது சிறந்தது.
சாத்தான் எந்தளவு சக்திவாய்ந்தவன்?
7. உலகத்தின் மீது சாத்தானுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது?
7 மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே யெகோவாவை சாத்தான் பழித்துப் பேசி வந்திருக்கிறான். (நீதிமொழிகள் 27:11) மனிதகுலத்தில் பெரும்பாலோரை தன் வசம் இழுத்திருக்கிறான். அதனால்தான், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” 1 யோவான் 5:19 குறிப்பிடுகிறது. அதன் காரணமாகவே அதிகாரத்தையும் உலகத்தின் சகல ராஜ்யங்களின் மகிமையையும் இயேசுவுக்குக் கொடுப்பதாகச் சொல்லி பிசாசினால் அவரைச் சோதிக்க முடிந்தது. (லூக்கா 4:5-7) சாத்தானைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:3, 4) சாத்தான், ‘பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்,’ அதே சமயத்தில் ‘ஒளியின் தூதனுடைய வேஷத்தையும் தரித்துக்கொள்கிறான்.’ (யோவான் 8:44; 2 கொரிந்தியர் 11:14) இவ்வுலகின் ஆட்சியாளர்கள் மற்றும் குடிமக்களின் மனங்களைக் குருடாக்கிப் போடுவதற்கான சக்தியும் சூழ்ச்சி முறைகளும் அவன் வசம் உள்ளன. பொய்ப் பிரச்சாரங்கள், மதக் கட்டுக்கதைகள், பொய்கள் இவற்றின் மூலமாக மனிதரை அவன் வஞ்சித்திருக்கிறான்.
8. சாத்தானுடைய செல்வாக்கைப்பற்றி பைபிள் என்ன குறிப்பிடுகிறது?
8 சாத்தான் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் உடையவன் என்பது தானியேல் தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்திலேயே, அதாவது பொது சகாப்தத்திற்கு சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஊக்குவிக்கும் செய்தியை தானியேலிடம் அறிவிப்பதற்காக ஒரு தூதனை யெகோவா அனுப்பியபோது, “பெர்சியா ராஜ்யத்தின் [ஆவி ஆளான] அதிபதி” அவரை எதிர்த்து நின்றான். “பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல்” உதவிக்கு வருமட்டும் 21 நாட்களுக்கு போகவிடாமல் உண்மையுள்ள அந்தத் தேவதூதன் தடைபண்ணப்பட்டார். அதே பதிவு ‘கிரேக்கு தேசத்தின் [பேய்] அதிபதி’பற்றியும் பேசுகிறது. (தானியேல் 10:12, 13, 20) சாத்தானை ‘வலுசர்ப்பம்’ என வெளிப்படுத்துதல் 13:1, 2 வசனங்கள் சித்தரிக்கின்றன; இது “தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும்” அரசியலெனும் மூர்க்க மிருகத்திற்குக் கொடுக்கிறது.
9. கிறிஸ்தவர்கள் யாருக்கு எதிராகப் போரிடுகிறார்கள்?
9 ஆக, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதியதில் ஆச்சரியமில்லை: ‘மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.’ (எபேசியர் 6:12) இன்றும்கூட, பிசாசாகிய சாத்தானுடைய அதிகாரத்தில் இந்தப் பேய்களின் சேனைகள் திரைக்குப் பின்னாலிருந்து செயல்படுகின்றன; மனித ஆட்சியாளர்கள் மீதும் மனிதகுலத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தி, சொல்லமுடியாத இனப் படுகொலையையும் தீவிரவாதத்தையும் கொலையையும் தூண்டிவிடுகின்றன. சக்திமிக்க இந்த ஆவி சேனைகளை நாம் எப்படி வெற்றிகரமாக எதிர்த்து நிற்கலாம் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்?
10, 11. சாத்தானையும் அவனுடைய பொல்லாத தூதர்களையும் நாம் எப்படி எதிர்க்கலாம்?
10 சாத்தானையும் அவனுடைய பொல்லாத தூதர்களையும் நம்முடைய சரீர பலத்தாலோ மன பலத்தாலோ எதிர்க்க முடியாது. பவுல் நமக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறார்: “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.” பாதுகாப்புக்காக நாம் கடவுளுடைய உதவியை நாட வேண்டும். இதையே பவுல் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். . . தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும் சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 6:10, 11, 13.
11 “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை” தரித்துக்கொள்ளுங்கள் என சக கிறிஸ்தவர்களுக்கு இருமுறை பவுல் அறிவுறுத்துகிறார். “சர்வ” எனும் வார்த்தை ஏனோதானோ என்ற மனதுடன் பேய்களை எதிர்க்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஆகவே, பேய்களை எதிர்க்க கிறிஸ்தவர்களுக்கு இன்று அவசரமாகத் தேவைப்படுகிற ஆன்மீக ஆயுதத்தின் முக்கிய பாகங்கள் யாவை?
“உறுதியாய் நில்லுங்கள்”—எப்படி?
12. கிறிஸ்தவர்கள் எவ்வாறு சத்தியத்தால் தங்களுடைய அரையைக் கட்டிக்கொள்ளலாம்?
12 “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும் . . . [“உறுதியாய்,” NW] நில்லுங்கள்.” (எபேசியர் 6:14, 16) இங்கு ஆயுதத்தின் இரண்டு பாகங்களான கச்சையையும் மார்க்கவசத்தையும்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு போர்வீரன் தன் அரையை (இடுப்பு, முன் தொடைப் பகுதி, அடிவயிறு) பாதுகாப்பதற்கும் கனத்த பட்டயத்தைத் தொங்கவிடுவதற்கும் ஏற்றாற்போல் கச்சையை இறுக்கமாகக் கட்ட வேண்டியிருந்தது. அவ்வாறே, பைபிள் சத்தியத்தின்படி நாம் வாழ்வதற்கு ஏற்றாற்போல் நம்மைச் சுற்றி அதை இறுக்கமாகக் கட்டுவது அவசியம். தினமும் பைபிளை வாசிப்பதற்கு நாம் அட்டவணை போட்டிருக்கிறோமா? குடும்பமாகச் சேர்ந்து படிக்கிறோமா? குடும்பமாக தினவசனத்தை ஆராயும் பழக்கம் நமக்கு இருக்கிறதா? அதோடு, ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்’ மூலம் கிடைக்கிற எல்லா பிரசுரங்களிலும் உள்ள தகவல்களைப் படிக்கிறோமா? (மத்தேயு 24:45) அப்படியானால், பவுலின் ஆலோசனையைக் கடைப்பிடிக்க நாம் முயலுகிறோம் என்று அர்த்தம். ஆன்மீக வழிநடத்துதலை அளிக்கிற வீடியோக்கள், டிவிடி-கள் ஆகியவையும் நம்மிடம் உள்ளன. சத்தியத்தை இறுக்கமாய்ப் பற்றிக்கொள்வது, ஞானமான தீர்மானங்கள் எடுக்கவும் தவறான வழியில் செல்லாமல் இருக்கவும் நமக்கு உதவும்.
13. நம் அடையாளப்பூர்வ இருதயத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?
13 போர்வீரனின் மார்பையும் இருதயத்தையும் பிற முக்கிய உறுப்புகளையும் பாதுகாப்பதற்கே மார்க்கவசம் அணியப்பட்டது. ஒரு கிறிஸ்தவர், யெகோவாவுடைய நீதியை நேசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலமும் அவருடைய நீதியான நெறிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தன்னுடைய அடையாளப்பூர்வ இருதயத்தை, அதாவது உள்ளான நபரைப் பாதுகாக்க முடியும். அடையாளப்பூர்வ மார்க்கவசம், கடவுளுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை நாம் குறைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்கிறது. நாம் ‘தீமையை வெறுத்து, நன்மையை விரும்ப’ ஆரம்பிக்கும்போது “சகல பொல்லாத வழிகளுக்கும்” நம் கால்களை விலக்குகிறோம்.—ஆமோஸ் 5:15; சங்கீதம் 119:101.
14. ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்திருப்பதன்’ அர்த்தம் என்ன?
14 ரோமப் போர்வீரர்கள் தங்களுடைய சாம்ராஜ்யத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைந்திருந்த நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் அணிவகுத்துச் செல்வதற்கு ஏற்ற காலணிகளை அணிந்திருந்தார்கள். அப்படியானால், ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாய்’ என்ற வார்த்தைகள் கிறிஸ்தவர்களுக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன? (எபேசியர் 6:15) நாம் செயல்படத் தயாராய் இருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துகின்றன. பொருத்தமான எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்க நாம் தயாராய் இருக்கிறோம். (ரோமர் 10:13-15) கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் சுறுசுறுப்பாய் ஈடுபடுவது, பிசாசின் ‘தந்திரங்களிலிருந்து’ நம்மைப் பாதுகாக்கிறது.—எபேசியர் 6:11.
15. (அ) விசுவாசமெனும் பெரிய கேடகம் மிக முக்கியம் என்பதை எது காட்டுகிறது? (ஆ) என்னென்ன ‘அக்கினியாஸ்திரங்கள்’ நம் விசுவாசத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்?
15 “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத் தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் [“பெரிய,” NW] கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என பவுல் தொடர்ந்து கூறுகிறார். (எபேசியர் 6:16) “எல்லாவற்றிற்கும் மேலாக” எனக் குறிப்பிட்ட பிறகு, விசுவாசமென்னும் பெரிய கேடகத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லப்பட்டிருப்பது, ஆயுதத்தின் அந்தப் பாகம் எந்தளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. நம்முடைய விசுவாசத்தில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. ஒரு பெரிய கேடகம் உடலைப் பாதுகாப்பதுபோலவே, நம் விசுவாசம் சாத்தான் எய்யும் ‘அக்கினியாஸ்திரங்களிலிருந்து’ நம்மைப் பாதுகாக்கலாம். இந்த அக்கினியாஸ்திரங்கள் இன்று எதைக் குறிக்கின்றன? இவை நம்மேல் அம்பாகப் பாய்ந்து வேதனை தருகிற அவச்சொற்களாகவும் பொய்களாகவும் இருக்கலாம்; நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவதற்காக எதிரிகளும் விசுவாசதுரோகிகளும் பரப்பும் அரைகுறை உண்மைகளாகவும் இருக்கலாம். இந்த ‘அக்கினியாஸ்திரங்கள்’ பணக்காரராவதற்கான தூண்டுதல்களாகவும் இருக்கலாம். இது பொருள்களை வாங்கிக் குவிப்பதைப்பற்றி நம்மை சதா சிந்திக்க வைக்கிறது; அதோடு, மற்றவர்களுடைய ஆடம்பரமான வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றவும் நம்மைத் தூண்டுகிறது. ஒருவேளை, அவர்கள் பெரிய வசதியான வீடுகளையும் வாகனங்களையும் வாங்கியிருக்கலாம் அல்லது விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அதிநவீன ஆடைகளாலும் தங்களை அலங்கரித்துப் பகட்டாகக் காட்டலாம். மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, இத்தகைய “அக்கினியாஸ்திரங்களை” தவிர்க்குமளவுக்கு நம் விசுவாசம் பலமுள்ளதாய் இருக்க வேண்டும். பலமான விசுவாசத்தை வளர்த்து அதைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி?—1 பேதுரு 3:3-5; 1 யோவான் 2:15-17.
16. பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு எது நமக்கு உதவும்?
16 தனிப்பட்ட விதமாய் தவறாமல் பைபிளைப் படித்து, ஊக்கமாய் ஜெபம் செய்வதன் மூலம் நாம் கடவுளிடம் நெருங்கிவர முடியும். நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்படி யெகோவாவிடம் மன்றாடலாம்; நாம் செய்த ஜெபத்திற்கு இசைய செயல்படுவதும் அவசியம். உதாரணமாக, வாராந்தர காவற்கோபுர படிப்பில் கலந்துகொண்டு பதில்சொல்ல வேண்டுமென்ற நோக்குடன் நாம் அதைக் கவனமாய்த் தயாரிக்கிறோமா? ஆகவே, பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் ஆழ்ந்து படித்தால் நம் விசுவாசம் பலப்படும்.—எபிரெயர் 10:38, 39; 11:6.
17. நாம் எப்படி ‘இரட்சணியமென்னும் தலைச்சீராவை எடுத்துக்கொள்ளலாம்’?
17 ஆன்மீகப் போராயுதத்தைப்பற்றிய விவரிப்பில் முடிவாக பவுல் இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:17) தலைச்சீரா, ஒரு போர்வீரனின் தலையையும் தீர்மானங்களின் பிறப்பிடமான மூளையையும் பாதுகாத்தது. அவ்வாறே, நமது கிறிஸ்தவ நம்பிக்கை நம் சிந்தைகளைப் பாதுகாக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:8) உலக இலட்சியங்களாலும் பொருளாசையாலும் நம் மனதை நிரப்புவதற்குப் பதிலாக, கடவுள் தந்துள்ள நம்பிக்கையால் அதை நிரப்ப வேண்டும்; இயேசு அதையே செய்தார்.—எபிரெயர் 12:2.
18. அன்றாட பைபிள் வாசிப்பை நாம் ஏன் தவறவிடக் கூடாது?
18 கடைசியாக, சாத்தானின் செல்வாக்கிற்கும் அவனது பேய்களின் செல்வாக்கிற்கும் எதிராக நம்மைப் பாதுகாப்பது, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய செய்தியாகும். இதன் காரணமாகவும் அன்றாட பைபிள் வாசிப்பை நாம் தவறவிடக் கூடாது. கடவுளுடைய வார்த்தையைப்பற்றிய தெள்ளத்தெளிவான அறிவைப் பெற்றிருப்பது, சாத்தானுடைய பொய்கள், பேய்களின் பிரச்சாரங்கள், விசுவாசதுரோகிகளின் காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
‘எந்தச் சமயத்திலும் ஜெபம்பண்ணுங்கள்’
19, 20. (அ) சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் என்ன நடக்கப்போகிறது? (ஆ) எது நம்மை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தும்?
19 சாத்தானும் அவனுடைய பேய்களும் இந்தப் பொல்லாத உலகமும் விரைவில் நீக்கப்படும். தனக்குக் ‘கொஞ்சக்கால மாத்திரமே’ இருக்கிறது என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான். அவன் கோபங்கொண்டு, ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமான’ ஜனங்களிடம் யுத்தம் செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) ஆகவே, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் நாம் எதிர்த்து நிற்பது மிகவும் அவசியம்.
20 கடவுளுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொள்ளும்படி கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! ஆன்மீகப் போராயுதத்தைப்பற்றி விவரித்தபின், முடிவாக பவுல் இவ்வாறு ஆலோசனை தருகிறார்: “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.” (எபேசியர் 6:18) ஜெபம், ஆன்மீக ரீதியில் நம்மைப் பலப்படுத்தும், ஜாக்கிரதையாய் இருக்கவும் உதவும். பவுலின் வார்த்தைகளை மனதில்வைத்து நாம் எப்போதும் ஜெபம் செய்வோமாக; சாத்தானையும் அவனுடைய பேய்களையும் எதிர்த்து நிற்க அது நமக்கு உதவும்.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• சாத்தானும் அவனுடைய பேய்களும் எப்படித் தோன்றினார்கள்?
• பிசாசு எந்தளவு சக்திவாய்ந்தவன்?
• சாத்தானிடமிருந்தும் அவனுடைய பேய்களிடமிருந்தும் நம்மை எவ்வாறு தற்காத்துக்கொள்ளலாம்?
• கடவுளுடைய சர்வாயுதவர்க்கத்தை நாம் எப்படி அணிந்துகொள்ளலாம்?
[பக்கம் 26-ன் படங்கள்]
‘தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள்’
[பக்கம் 28-ன் படம்]
நம் ஆன்மீகப் போராயுதத்தின் ஆறு பாகங்களை விளக்க முடியுமா?
[பக்கம் 29-ன் படங்கள்]
இந்தக் காரியங்களில் ஈடுபடுவது சாத்தானிடமிருந்தும் அவனுடைய பேய்களிடமிருந்தும் எப்படி தற்காப்பு அளிக்கிறது?