சத்தியத்தைக் கண்டுபிடிப்போருக்கு சந்தோஷம் காத்திருக்கிறது
தன் உச்ச மேன்மாடி அறையில், பின்லாந்தைச் சேர்ந்த ஒரு மனிதன் யுகங்களின் தெய்வ திட்டம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைக் கண்டுபிடித்தார். உடனே அதை வாசிக்கத் தொடங்கி கொஞ்ச நேரத்தில், ‘இதுவே சத்தியம், இதுவே சத்தியம்,’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டார். உச்ச மேன்மாடி அறையிலிருந்து கீழிறங்கிவந்து, “நான் மெய் மதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்,” என்று தன் மனைவியிடம் சொன்னார்.
இந்த மனிதன் சத்தியத்தைக் கண்டுபிடித்த விதத்தைப் பார்க்கையில், இவ்வனுபவம் அபூர்வமானது; ஆனால் இதுபோன்ற பிரதிபலிப்பை யெகோவாவின் சாட்சிகளில் பலர் சொல்லக்கூடும். சத்தியத்தைக் கண்டுபிடிப்பதில் வரும் மகிழ்ச்சியை அவர்கள் எல்லாராலும் உங்களுக்குச் சொல்லக்கூடும். பின்வரும் அனுபவங்கள் இதைச் சிறப்பித்துக் காட்டுகின்றன.
மெய்யான பைபிள் போதனைகள் சந்தோஷத்தைக் கொண்டு வருகின்றன
இரண்டாம் உலகப் போரின்போது மார்காரீடா கியூனிகர் என்ற பெண் ஜெர்மனியிலுள்ள ம்யூனிச்சில் வளர்க்கப்பட்டார். குண்டுபோடப்பட்ட வீடுகளும் எரிந்து கொண்டிருக்கும் வீடுகளும் சகஜமான காட்சிகளாக இருந்தன. அவருடைய அண்ணன் போரில் மரித்தார். கத்தோலிக்க சர்ச் கூட்டங்களுக்கு ஆஜராகையில் ஜெர்மானிய தளபதிகளுக்கும் ஜெர்மானிய தலைவராகிய ஹிட்லருக்கும் ஜெபங்கள் செய்யப்படுவதை அவர் கேட்டார். போருக்குப் பின்னர், மாணாக்கர்-மாற்ற திட்டத்தில் பங்குகொள்வதற்காக, ஐக்கிய மாகாணங்களிலுள்ள காலேஜுக்குப் போகப் படிப்பு உதவித்தொகையைப் பெற்றார். அங்கு மக்கள் அவரோடு சிநேகப்பான்மையாக இருப்பதைப் பார்த்தார், ஆகவே மக்களின் இயல்பான ஆசையானது சமாதானமாக வாழவேண்டும் என்றிருக்கையில், போர்காலத்தின்போது, அவநம்பிக்கையிடமும் ஒருவரையொருவர் பகைப்பதற்கும் எது மக்களை உந்துவிப்பதுபோல் தோன்றியது என்று அவர் யோசிக்கத் துவங்கினார். ம்யூனிச்சில் இருக்கையிலேயே, யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டு, பைபிளை அவர்களோடு படிப்பதன் மூலம் தன்னுடைய கேள்விகளுக்குப் பதில்களைப் பெற்றார். அந்தப் பெண் சொல்கிறார்: “பொல்லாத ஆவிகளின் சேனைகள் ஈடுபட்டிருப்பதாக எனக்குப் பைபிளிலிருந்து காண்பிக்கப்பட்டது . . . பைபிள் அவர்களை ‘உலக அதிபதிகள்’ என்றழைக்கிறது; மேலும், உண்மையில் சொல்லப்போனால், சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்’ என்று கூறுகிறது. . . . தேசங்கள் மற்றும் மக்களின் தேவபக்தியற்ற, பேய்த்தன நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப்பார்க்கையில், இந்தப் பதில் எவ்வளவு நியாயமாகவும் திருப்தி தருவதாகவும் இருக்கிறது!”—எபேசியர் 6:12, NW; வெளிப்படுத்துதல் 12:9.
மார்காரீடா தொடர்ந்து சொல்கிறார்: “பூமியின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய ஏற்பாட்டைக் குறித்து அறியவருகையில், எனக்குப் பேரானந்தம் உண்டானது. இல்லை, உலக கல்விமான்கள் திட்டமிட்டதுபோல ஏதோ மனித எண்ணத்தாலோ நிர்வாகத்தாலோ அது நடக்காது. மாறாக, பூமியின் விவகாரங்களை ஒரு புதிய பரலோக அரசாங்கம் மேற்பார்வை செலுத்தும் என்று பைபிள் காட்டுகிறது. . . . ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்று ஜெபிக்கும்படி இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கற்பித்தார். . . . இந்த ராஜ்யம் ஓர் உண்மையான அரசாங்கம் என்றும் அதன் மூலமாகத்தானே மெய்யான, உலகளாவிய சமாதானத்தை அடையலாம் என்றும் நான் உணர ஆரம்பித்தேன்.” கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக, மார்காரீடா சுமார் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு மிஷனரியாகச் சேவித்திருக்கிறார், இறுதியான 19 ஆண்டுகளை, பர்கினா ஃபாஸோவிலுள்ள அவாகதோகூ என்ற இடத்திலிருக்கும் தாழ்மையுள்ள மக்களுக்குச் சத்தியத்தைப் பிரசங்கிப்பதில் செலவிட்டார்.
மார்காரீடாவின் அனுபவம் தனித்தன்மை வாய்ந்ததல்ல. கிறிஸ்தவமண்டல குருமார், போரில் இரு பக்கங்களிலும் இருந்துகொண்டு வெற்றிக்காகக் கடவுளிடம் ஜெபித்ததைப் பார்த்தபோது அவ்வாறே சாதகமாக அநேகர் பிரதிபலித்திருக்கின்றனர். கடவுளுக்கும் மனிதப் போர்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை, ஆனால் “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற”தால் இவை உண்டாகின்றன என்று பைபிள் தரும் விளக்கத்திலுள்ள நியாயத்தன்மையை நேர்மை இருதயமுள்ளோர் காண்கின்றனர். மெய்க் கிறிஸ்தவர்கள் “உலகத்தாரல்”லாதவர்களாக, அதன் விவகாரங்களில் நடுநிலை வகிப்பவர்களாகத் தரித்திருக்க வேண்டும் என்று சத்தியத்தை நாடும் இந்த ஆட்கள் கற்றறிகின்றனர். யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய ஒரு நிலைநிற்கையை எடுத்திருக்கின்றனர் என்பதை அறிந்தவர்களாக, தாங்கள் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகப் புதிதாய் அக்கறை காட்டும் இந்த ஆட்கள் முற்றிலும் நம்பிக்கை கொள்கின்றனர். அத்தகைய ஆட்கள், கடவுள் ஏன் பொல்லாப்பை அனுமதித்திருக்கிறார், தம்முடைய ராஜ்யத்தின் மூலம் எவ்வாறு அவர் கூடிய சீக்கிரத்தில் சமாதானமுள்ள, நீதியான நிலைமைகளைக் கொண்டு வருவார் என்பதைக் குறித்து மேலுமான அறிவைப் பெறுகையில் நம்பிக்கையிலும் சந்தோஷத்திலும் வளருகின்றனர்.—1 யோவான் 5:19; யோவான் 17:16; மத்தேயு 6:9, 10.
மெய்யான பைபிள் நியமங்கள் சந்தோஷத்தைக் கொண்டு வருகின்றன
ஈக்வடாரிலுள்ள டானியல் ரொசேரோ என்பவர் வாழ்க்கை அர்த்தமற்றது என்று எண்ணி குடிக்கத் தொடங்கினார். மரணத்தையும் நரகாக்கினையையுந்தான் எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்று அவர் சென்றுகொண்டிருந்த அந்தச் சர்ச் கற்பித்தது. “நான் எரிக்கப்படப்போவதால் குடிக்கப்போகிறேன்!” என்பதாக அவர் சொன்னார். அவருடைய குடும்பத்தில் எட்டு பேர் இருந்தனர், அவர்களை இவர் பராமரிக்கவில்லை, தன் மனைவியாகிய டேலியாவோடு எப்போது பார்த்தாலும் சண்டைபோட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை யெகோவாவின் சாட்சிகள் அவர்களைச் சந்தித்து பைபிளைப் படிக்கத் தொடங்கினபோது திரும்புக்கட்டம் உண்டானது. முதல் முறையாக யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டிற்குச் சென்றதும், தான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக டானியல் உணர்ந்தார். அவர் சொல்கிறார்: “இந்த அமைப்பு என்னைத் திணறடிக்கச் செய்தது. பெரும்பான்மையர் ஒருமித்து சமரசமாயிருந்தனர். அந்தக் கூட்டத்தில் உங்களால் அன்பை உணர முடியும். யாரும் புகைபிடிக்கவில்லை. அசிங்கமான பேச்சு கிடையாது. . . . ‘இதுவே சத்தியம்!’ என்று நினைத்த ஞாபகம் எனக்கு இருக்கிறது. மரண பயமோ உலக முடிவைப் பற்றிய பயமோ என்னை நெகிழ வைக்கவில்லை. அமைப்பின் சுத்தமே என்னை நெகிழ வைத்தது.”
முழு ரொசேரோ குடும்பத்தினரும் யெகோவாவின் சாட்சிகள் ஆனார்கள். பைபிள் நியமங்களைப் பொருத்தியபோது அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் அவர்களுடைய பொருளாதார நிலைமையும் முன்னேறியது. டேலியா ரொசேரோ சொல்கிறார்: “இந்த எல்லா முன்னேற்றத்திற்காகவும் பைபிள் சத்தியத்திற்கே நான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும். கடவுளுடைய வார்த்தையில்லாமல் என் பிள்ளைகள் எங்கிருந்திருப்பார்களோ, யாருக்குத் தெரியும்? ஏழு பேருமே முழுக்காட்டப்பட்டு, சமநிலையுள்ளவர்களாக இருக்கின்றனர். சத்தியம், முற்றிலும் புதுமையான ஒரு வாழ்க்கையை, புதிய சந்தோஷத்தை எனக்கு அர்த்தப்படுத்தியிருக்கிறது.”
ரொசேரோ குடும்பத்தின் அனுபவம் ஒப்பற்ற ஒன்றல்ல. நம்முடைய நாளில் அநேகர் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள ஒழுக்கத் தராதரங்கள் முந்தைய சந்ததியினரால் மதிக்கப்பட்டு வந்ததுபோல பொதுவாக மதிக்கப்படுவதில்லை என்பது ஒரு காரணம். பொறுத்துப்போக வேண்டும் என்ற காரணத்தினால் அல்லது காலங்கள் மாறுவதால் பழைய ஒழுக்கங்கள் காலத்திற்கு ஒவ்வாதவையாகின்றன என்று உணர்வதால் பெரும்பான்மையான மதங்கள் இந்தப் போக்கைப் பின்பற்றியிருக்கின்றன. ஆகவே மற்றவர்களைப்போல ரொசேரோ குடும்பத்தினர் பைபிள் வழிநடத்துதல் இல்லாமல் தேடியலையும்படி செய்யப்பட்டனர். என்றபோதிலும், ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின்பேரில் உள்ள கடவுளுடைய நோக்கை இத்தகைய தாழ்மையான ஆட்கள் அறியவருகையில், அவர்கள் கற்றவற்றை தாமதமின்றி அப்பியாசிக்கின்றனர். அவர்களின் சரிதைகளிலிருந்து, அவ்வாறு செய்வதனால் வரும் நல்விளைவுகளை நம்மால் காண முடிகிறது.
சந்தோஷத்தை வளர்க்கவேண்டும்
என்றபோதிலும், ஒரு கிறிஸ்தவன் பெருமகிழ்ச்சியில் தொடர்ந்து ஆழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது. தெளிவாகவே, மக்கள் பொதுவாக எதிர்ப்படும் கஷ்டங்களாகிய வேலையில்லாமை, வியாதி, மரணம் போன்றவற்றைக் கிறிஸ்தவர்களும் எதிர்ப்படுகின்றனர். தங்கள் சொந்த அபூரணங்களுக்கும் பலவீனங்களுக்கும் எதிராகக் கிறிஸ்தவர்கள் விடாது போராட வேண்டியதாகவும் இருக்கிறது. லோத்து சோதோம் பட்டணத்தில், “அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்[டார்]” என்று பைபிள் பதிவு சொல்கிறது. பொல்லாத நிலைமைகள் நிலவுவதைப் பார்க்கையில், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அத்தகைய உணர்ச்சிகளைத் தவிர்க்க முடியாது.—2 பேதுரு 2:7, 8.
என்றபோதிலும், சத்தியத்தைக் கண்டடைந்தவர்களுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு. உதாரணமாக, மரித்த ஒருவருக்காக வருந்துகிற ஒரு விசுவாசி, ‘நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கிக்க’ வேண்டிய அவசியமில்லை. அவருடைய துயரம் வரம்பற்றதாக இருக்காது. பிற பிரச்சினைகள் சம்பந்தப்பட்டதிலும் இதுவே உண்மையாயிருக்கிறது. சத்தியத்தைக் கண்டுபிடித்த ஒரு நபர், தற்போதைய கஷ்டங்கள் தற்காலிகமானவையே என்பதை அறிந்திருக்கிறார். கஷ்டங்களை எளிதாகத் தாங்க நம்பிக்கையானது உதவுகிறது. ஒரு சமநிலையான வாழ்க்கை பாணியுங்கூட துணைபுரிகிறது.—1 தெசலோனிக்கேயர் 4:13.
கிறிஸ்தவர்களுக்கு இந்த அறிவுரையைப் பவுல் கொடுத்தார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.” (பிலிப்பியர் 4:4) சந்தோஷத்தை நாம் அனைவரும் பெறலாம் என்றாலும், அதைப் பெறாமலிருப்பதுங்கூட சாத்தியமாயிருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையின் கவலைகள் ஓர் இடையூறாக ஆகக்கூடும். கூடுதலாக, நாம் கடவுளுடைய ஆவியின் கனியாகிய சந்தோஷத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (கலாத்தியர் 5:22) சத்தியத்தின் அறிவைத் தொடர்ந்து பெற்று, அது கொண்டு வந்திருக்கும், இன்னும் கொண்டு வரும் ஆவிக்குரிய வளங்களை உங்களுக்குத்தானே நினைப்பூட்டிக் கொண்டால், உங்கள் சந்தோஷம் தணியாது. மக்களின் கண்களிலிருந்து “கண்ணீர் யாவையும் தேவன் துடை”த்து, ‘இனி துக்கமும், அலறுதலும், வருத்தமும்’ இல்லாத காலத்தை நாம் நெருங்குகையில் அது இன்னும் வலுவாகும்.—வெளிப்படுத்துதல் 21:4.
[பக்கம் 8-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில் உள்ள சந்தோஷத்தையும் நல்ல ஒழுங்கமைப்பையும் கண்டு அநேகர் கவரப்படுகின்றனர்