படிப்புக் கட்டுரை 32
உங்கள் அன்பு பெருகட்டும்!
“உங்களுடைய அன்பு, . . . அதிகமதிகமாகப் பெருக வேண்டும்.”—பிலி. 1:9.
பாடல் 72 அன்பெனும் பண்பை வளர்த்தல்
இந்தக் கட்டுரையில்...a
1. பிலிப்பி சபையை ஏற்படுத்த யாரெல்லாம் உதவினார்கள்?
அப்போஸ்தலன் பவுலும், சீலாவும், லூக்காவும், தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்துக்குள் நுழைகிறார்கள்! ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த நகரத்தில், நிறைய பேர் நல்ல செய்தியை ஆர்வமாகக் கேட்கிறார்கள். துடிப்போடு செயல்பட்ட இந்த நான்கு பேரும், அங்கே ஒரு கிறிஸ்தவ சபையை ஏற்படுத்த உதவுகிறார்கள். உபசரிப்பதில் பேர்போன லீதியாளும் கிறிஸ்தவராக ஆகிறாள். புதிய சீஷர்கள், அநேகமாக இவளுடைய வீட்டில் ஒன்றுகூடி வருகிறார்கள்.—அப். 16:40.
2. சீக்கிரத்திலேயே பிலிப்பி சபை என்ன பிரச்சினையைச் சந்தித்தது?
2 புதிதாகப் பிறந்த அந்தச் சபை சீக்கிரத்திலேயே ஒரு பிரச்சினையை சந்திக்கிறது. சகோதரர்கள் செய்த பிரசங்க வேலை சாத்தானுக்குப் பொறுக்கவில்லை. அதனால், அந்த வேலையை முடக்குவதற்கு எதிரிகளைத் தூண்டிவிடுகிறான். பவுலையும் சீலாவையும் எதிரிகள் கைது செய்கிறார்கள், தடிகளால் அடிக்கிறார்கள், கடைசியில் சிறையில் தள்ளுகிறார்கள். விடுதலையான பிறகு, புதிய சீஷர்களைப் போய்ப் பார்த்து அவர்களைப் பலப்படுத்துகிறார்கள். பிறகு, பவுலும் சீலாவும் தீமோத்தேயுவும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். லூக்கா அநேகமாக அங்கேயே தங்குகிறார். இப்போது, அந்தப் புதிய சீஷர்கள் என்ன செய்வார்கள்? தன்னுடைய சக்தியைக் கொடுத்து யெகோவா அவர்களுக்கு உதவுகிறார். அதனால், அவர்கள் ஆர்வத்தோடு யெகோவாவின் சேவையைத் தொடருகிறார்கள். (பிலி. 2:12) அவர்களை நினைத்து பவுல் ரொம்பவே பெருமைப்பட்டிருப்பார்!
3. பிலிப்பியர் 1:9-11 காட்டுகிறபடி, பவுல் எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்தார்?
3 சுமார் பத்து வருஷங்கள் ஓடிவிடுகின்றன. இப்போது, அந்தச் சபைக்கு பவுல் கடிதம் எழுதுகிறார். இன்று நாம் அதைப் படிக்கும்போது, அவர்கள்மேல் பவுல் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். “கிறிஸ்து இயேசு காட்டுகிற அதே கனிவான பாசத்தோடு உங்கள் எல்லாரையும் வந்து பார்க்க நான் மிகவும் ஏங்குகிறேன்” என்று அவர் எழுதினார். (பிலி. 1:8) அவர்களுக்காக ஜெபம் செய்ததாகவும் அவர் எழுதினார். அன்பில் பெருகவும், மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளவும், குற்றமற்றவர்களாக நிலைத்திருக்கவும், மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காமல் இருக்கவும், தொடர்ந்து நீதியான செயல்களைச் செய்யவும் அவர்களுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். பவுலுடைய இதயங்கனிந்த அந்த வார்த்தைகள், இன்று நமக்கும் ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். (பிலிப்பியர் 1:9-11-ஐ வாசியுங்கள்.) அவர் எழுதிய ஒவ்வொரு விஷயத்தையும் நம் வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றலாம் என்பதை இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அன்பில் பெருகுங்கள்
4. (அ) 1 யோவான் 4:9, 10-ஐப் படிக்கும்போது, யெகோவாவுடைய அன்பைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) கடவுள்மீது நாம் காட்டுகிற அன்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
4 நம்முடைய பாவங்களுக்காக மரணமடையும்படி யெகோவா தன்னுடைய மகனைப் பூமிக்கு அனுப்பினார். இப்படி, நம்மேல் வைத்திருக்கிற அளவற்ற அன்பைக் காட்டினார். (1 யோவான் 4:9, 10-ஐ வாசியுங்கள்.) அவர் காட்டுகிற சுயநலமற்ற அன்பை நினைக்கும்போது, அவர்மீது அன்பைப் பொழிய வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. (ரோ. 5:8) அப்படியென்றால், அந்த அன்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? பரிசேயர்களுக்கு இயேசு கொடுத்த பதிலிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். “உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று அவர் சொன்னார். (மத். 22:36, 37) அரைமனதோடு கடவுள்மீது அன்பு காட்ட நாம் விரும்புவதில்லை. அவர்மீது இருக்கிற அன்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே போக வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். பிலிப்பியர்களுடைய அன்பு “அதிகமதிகமாகப் பெருக வேண்டும்” என்று பவுல் சொன்னார். அப்படியென்றால், கடவுள்மீது இருக்கிற அன்பை நாம் எப்படி அதிகமாக்கலாம்?
5. யெகோவாமீது நமக்கு இருக்கிற அன்பு எப்படி அதிகமாகும்?
5 கடவுள்மீது அன்பு காட்டுவதற்கு, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். “அன்பு காட்டாதவன் கடவுளைப் பற்றித் தெரியாதவனாக இருக்கிறான். ஏனென்றால், கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 4:8) கடவுளைப் பற்றிய ‘திருத்தமான அறிவையும் முழுமையான பகுத்தறிவையும்’ பெற்றுக்கொள்ளும்போது, அவர்மீது இருக்கிற அன்பு அதிகமாகும் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (பிலி. 1:9) பைபிளைப் படிக்க ஆரம்பித்த புதிதில், யெகோவாவைப் பற்றி நமக்கு ஓரளவு மட்டுமே தெரிந்திருந்தது. இருந்தாலும், நாம் அவரை நேசிக்க ஆரம்பித்தோம். பிறகு, அவரைப் பற்றி அதிகமாகத் தெரிய தெரிய, அவர்மீது இருக்கிற அன்பு அதிகமானது. தினமும் பைபிளைப் படிப்பதும், படித்தவற்றை ஆழமாக யோசிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து தெரிகிறது, இல்லையா?—பிலி. 2:16.
6. அன்பில் பெருகுவது சம்பந்தமாக 1 யோவான் 4:11, 20, 21-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
6 கடவுள் நம்மீது காட்டிய அளவற்ற அன்பை நினைக்கும்போது, சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது. (1 யோவான் 4:11, 20, 21-ஐ வாசியுங்கள்.) நாம் யெகோவாவை வணங்குவதாலும், அவரைப் போலவே நடந்துகொள்ள விரும்புவதாலும், நமக்காக உயிரையே கொடுத்த இயேசுவைப் போல் நடந்துகொள்ள ஆசைப்படுவதாலும், அன்பு தானாகவே நமக்குள் சுரக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது உண்மை இல்லை! ஏனென்றால், ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். பிலிப்பி சபையில் என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம்.
7. எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் பவுல் கொடுத்த அறிவுரையிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 ஆர்வத்துடிப்போடு செயல்பட்ட எயோதியாளும் சிந்திகேயாளும் அப்போஸ்தலன் பவுலோடு “தோளோடு தோள் சேர்ந்து” உழைத்தார்கள். ஆனாலும், கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் உரசல்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், அவர்கள் இருந்த சபைக்குக் கடிதம் எழுதியபோது, அவர்களுடைய பெயரைச் சொல்லி பவுல் அவர்களுக்கு அறிவுரை கொடுத்தார். அவர்கள் “ஒரே மனதோடு இருக்க வேண்டும்” என்று சொன்னார். (பிலி. 4:2, 3) அதோடு, முழு சபைக்கும் அறிவுரை தேவை என்று பவுல் நினைத்தார். அதனால், “எல்லாவற்றையும் முணுமுணுக்காமலும் வாதாடாமலும் செய்துகொண்டிருங்கள்” என்று எழுதினார். (பிலி. 2:14) இந்த நேரடியான அறிவுரை, உண்மையுள்ள அந்தச் சகோதரிகளுக்கு மட்டுமல்ல, முழு சபைக்குமே உதவியாக இருந்திருக்கும். ஒருவர்மேல் ஒருவர் வைத்திருந்த அன்பில் பெருகுவதற்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்திருக்கும்.
8. மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதைக் கஷ்டமாக்குகிற மிகப் பெரிய தடைக்கல் எது, அதைத் தூக்கியெறிய நாம் என்ன செய்யலாம்?
8 எயோதியாள் மற்றும் சிந்திகேயாளைப் போலவே, நமக்கும் மிகப் பெரிய ஒரு தடைக்கல் இருக்கலாம். அதனால், மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கலாம். அவர்களுக்கு இருந்த அந்தத் தடைக்கல் என்ன? மற்றவர்களுடைய குறைகளையே பார்த்துக்கொண்டிருக்கும் குணம்தான்! அந்தத் தடைக்கல்லைத் தூக்கியெறிய நாம் என்ன செய்யலாம்? நாம் எல்லாருமே தினமும் தவறுகள் செய்கிறோம். மற்றவர்களுடைய தவறுகளையே நாம் பார்த்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கும் நமக்கும் இடையில் இருக்கிற பந்தம் பலவீனமாகலாம். உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு சகோதரரோ சகோதரியோ நமக்கு உதவவில்லை என்று வைத்துக்கொள்வோம். இப்போது என்ன நடக்கலாம்? அவர்மீது நமக்கு எரிச்சல் வரலாம். பிறகு, அவருடைய மற்ற குறைகளெல்லாம் நம் கண்முன் வந்துபோகலாம். இப்போது நம்முடைய எரிச்சல் அதிகமாகலாம். நமக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கிற பந்தத்தில் விரிசல் ஏற்படலாம். இப்படியொரு நிலைமை உங்களுக்கு வந்தால், ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்! யெகோவாவுக்கு நம்முடைய குறைகளும் தெரியும், அந்தச் சகோதரர் அல்லது சகோதரியின் குறைகளும் தெரியும். இருந்தாலும், அவர்களையும் யெகோவா நேசிக்கிறார்; நம்மையும் நேசிக்கிறார். அதனால், யெகோவாவைப் போலவே நாம் அன்பு காட்ட வேண்டும்; நம் சகோதர சகோதரிகளுடைய நல்ல குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும். அவர்கள்மீது அன்பைப் பொழிய நாம் கடினமாக முயற்சி எடுத்தால், நமக்குள் இருக்கிற ஒற்றுமை பலப்படும்.—பிலி. 2:1, 2.
“மிக முக்கியமான காரியங்கள்”
9. பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன ‘மிக முக்கியமான காரியங்களில்’ சிலவற்றைச் சொல்லுங்கள்.
9 “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்ற அறிவுரையை பிலிப்பி கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்தார். (பிலி. 1:10) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரை நமக்கும் பொருந்துகிறது. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவது... அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவது... சபைகளில் சமாதானமும் ஒற்றுமையும் பெருகுவது... இவையெல்லாம் மிக முக்கியமான காரியங்களில் சில! (மத். 6:9, 10; யோவா. 13:35) இவற்றைச் சுற்றியே நம் வாழ்க்கை சுழன்றால், நாம் யெகோவாவை நேசிக்கிறோம் என்று அர்த்தம்.
10. குற்றமற்றவர்களாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
10 நாம் “குற்றமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்றும் பவுல் சொன்னார். அப்படியென்றால், நாம் பரிபூரணமானவர்களாக இருக்க வேண்டுமா? இல்லை! யெகோவா எந்தளவு குற்றமற்றவராக இருக்கிறாரோ, அதேபோல் நம்மால் இருக்க முடியாது என்பது உண்மைதான்! ஆனால், அன்பில் பெருகவும் மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளவும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது, நம்மைக் குற்றமற்றவர்களாக யெகோவா பார்க்கிறார். மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காமல் இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது, அன்பு காட்டுவதற்கான ஒரு வழி!
11. மற்றவர்களுடைய விசுவாசத்தை நாம் ஏன் குலைக்கக் கூடாது?
11 மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காதவர்களாக இருங்கள் என்ற அறிவுரை மிக மிக முக்கியமான அறிவுரை! நாம் எப்படி மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைத்துவிடலாம்? நாம் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு, ஆடைகள், வேலை ஆகியவற்றின் மூலம் நாம் அப்படிச் செய்துவிடலாம். ஒருவேளை, நாம் தேர்ந்தெடுக்கிற விஷயங்களில் எந்தத் தவறும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுடைய மனசாட்சியை அவை பாதித்தால்... அவர்களுடைய விசுவாசத்தைக் குலைத்தால்... அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைக் குலைப்பவர்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை அவர்களுடைய கழுத்தில் கட்டி, ஆழமான கடலில் தள்ளிவிடுவதே நல்லது என்று சொன்னார்.—மத். 18:6.
12. ஒரு பயனியர் தம்பதியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 இயேசுவின் இந்த அறிவுரையை ஒரு பயனியர் தம்பதி ரொம்ப முக்கியமானதாக நினைத்தார்கள். எப்படி? அவர்களுடைய சபையில் புதிதாக ஞானஸ்நானம் எடுத்த ஒரு தம்பதி இருந்தார்கள். இந்தத் தம்பதி, நிறைய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வந்திருந்தார்கள். அதனால், கிறிஸ்தவர்கள் சினிமா பார்க்கப் போவது தவறு என்று நினைத்தார்கள். அது நல்ல சினிமாவாக இருந்தால்கூட, அதைப் பார்க்கப் போவது தவறு என்பதுதான் இவர்களுடைய அபிப்பிராயம். இந்தச் சூழ்நிலையில், பயனியர் செய்துவந்த தம்பதி சினிமாவுக்குப் போன விஷயம் இவர்களுடைய காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் இவர்களுக்குப் பயங்கர அதிர்ச்சி! அப்போது அந்தப் பயனியர் தம்பதி என்ன செய்தார்கள்? புதிதாக ஞானஸ்நானம் எடுத்த இந்தத் தம்பதி, எது சரி எது தவறு என்பதைப் பிரித்துப் பார்க்கும் அளவுக்குத் தங்களுடைய மனசாட்சிக்குப் பயிற்சி கொடுக்கும்வரை, அவர்கள் சினிமாவுக்குப் போகவே இல்லை. (எபி. 5:14) இப்படி சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டதன் மூலம், புதிதாக ஞானஸ்நானம் எடுத்த தம்பதிமேல் தங்களுக்கு அன்பு இருக்கிறது என்பதை சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்டினார்கள்.—ரோ. 14:19-21; 1 யோ. 3:18.
13. நாம் எப்படி மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டிவிடலாம்?
13 மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுவதன் மூலமும் நாம் அவர்களுடைய விசுவாசத்தைக் குலைத்துவிடலாம். எப்படி? இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: நம்மோடு சேர்ந்து பைபிள் படிக்கிற ஒருவருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது. ரொம்ப நாள் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, அதிலிருந்து அவர் மீண்டுவருகிறார். இனிமேல் பாட்டில் பக்கமே போகக் கூடாது என்று முடிவெடுக்கிறார். நிறைய மாற்றங்களைச் செய்கிறார், கடைசியில் ஞானஸ்நானமும் எடுக்கிறார். ஒருநாள், ஒரு சகோதரர் அவரை விருந்துக்கு அழைக்கிறார். அப்போது அந்தச் சகோதரர் அவரிடம் மதுபானத்தைக் கொடுத்து, “நீங்க இப்ப ஒரு கிறிஸ்தவர். யெகோவாவோட சக்தி உங்ககிட்ட இருக்கு. சுயக்கட்டுப்பாடோட இருக்குறதுக்கு அந்த சக்தி உங்களுக்கு உதவும். நீங்க அப்படி சுயக்கட்டுப்பாடோட இருந்தீங்கனா, உங்களால அளவோட நிறுத்திக்க முடியும்” என்று சொல்லி அவரைக் கட்டாயப்படுத்துகிறார். இவர் சொல்வதைக் கேட்டு, புதிதாக ஞானஸ்நானம் எடுத்த அந்தச் சகோதரர் மறுபடியும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், நிலைமை ரொம்பவே மோசமாகிவிடும், இல்லையா?
14. பிலிப்பியர் 1:10-லிருக்கிற அறிவுரையின்படி செய்ய, கூட்டங்கள் எப்படி உதவுகின்றன?
14 பிலிப்பியர் 1:10-ல் சொல்லப்பட்ட அறிவுரைகளின்படி நடக்க, சபைக் கூட்டங்கள் நிறைய விதங்களில் உதவுகின்றன. முதலாவதாக, அங்கே கிடைக்கிற செழுமையான ஆன்மீக உணவு, யெகோவா எதை மிக முக்கியமானதாக நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இரண்டாவதாக, கற்றுக்கொள்கிற விஷயங்களை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதை அங்கே தெரிந்துகொள்வதால், குற்றமற்றவர்களாக நம்மால் நிலைத்திருக்க முடிகிறது. மூன்றாவதாக, “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” தேவையான உற்சாகம் அங்கே கிடைக்கிறது. (எபி. 10:24, 25) சகோதர சகோதரிகள் நம்மை எந்தளவு உற்சாகப்படுத்துகிறார்களோ, அந்தளவு யெகோவாமீதும் அவர்கள்மீதும் நமக்கு இருக்கிற அன்பு அதிகமாகும். இப்படி நம் மனதில் அன்பு நிறைந்திருக்கும்போது, மற்றவர்களின் விசுவாசத்தைக் குலைக்காமல் இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.
“நீதியான செயல்களை ஏராளமாக” செய்துகொண்டே இருங்கள்
15. “நீதியான செயல்களை ஏராளமாக” செய்வதில் எவையெல்லாம் அடங்குகின்றன?
15 பிலிப்பியர்கள், “நீதியான செயல்களை ஏராளமாக” செய்ய வேண்டும் என்று பவுல் உருக்கமாக ஜெபம் செய்தார். (பிலி. 1:11) யெகோவாமீதும் அவருடைய மக்கள்மீதும் அன்பு காட்டுவது இந்த ‘நீதியான செயல்களில்’ அடங்குகிறது. அதோடு, இயேசுமீது இருக்கிற விசுவாசத்தைப் பற்றியும் அருமையான எதிர்காலத்தைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்வது இவற்றில் அடங்குகிறது. பிலிப்பியர் 2:15-ல் இன்னொரு விஷயமும் சொல்லப்பட்டிருக்கிறது. “இந்த உலகத்தில் விளக்குகளாக ஒளிவீசிக்கொண்டு” இருங்கள் என்று அது சொல்கிறது. அப்படிச் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், “உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்” என்று இயேசுவும் தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 5:14-16) மற்றவர்களை ‘சீஷர்களாக்குங்கள்’ என்ற கட்டளையையும் அவர்களுக்குக் கொடுத்தார். அதோடு, “பூமியின் எல்லைகள் வரையிலும் . . . சாட்சிகளாக இருப்பீர்கள்” என்றும் சொன்னார். (மத். 28:18-20; அப். 1:8) இந்த முக்கியமான வேலையில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலம், நாம் “நீதியான செயல்களை” செய்கிறோம்.
16. சாதகமற்ற சூழ்நிலைகளில்கூட நம்மால் விளக்குகளாக ஒளிவீச முடியும் என்பதை பிலிப்பியர் 1:12-14 எப்படிக் காட்டுகிறது? (அட்டைப் படம்)
16 நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, நம்மால் விளக்குகளாக ஒளிவீச முடியும். சிலசமயங்களில், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தடைக்கற்களாகத் தோன்றிய விஷயங்களே பிற்பாடு படிக்கற்களாக ஆகியிருக்கின்றன. உதாரணத்துக்கு, பிலிப்பியர்களுக்குக் கடிதம் எழுதிய சமயத்தில், பவுல் ரோமில் வீட்டுக்காவலில் இருந்தார். அவருடைய கைகளைக் கட்டிப்போட்ட சங்கிலிகளால் அவருடைய வாயைக் கட்டிப்போட முடியவில்லை. அங்கிருந்த காவலர்களிடமும் தன்னைப் பார்க்க வந்தவர்களிடமும் அவர் பிரசங்கித்தார்! சூழ்நிலைகள் சாதகமாக இல்லாதபோதும், அவர் ஆர்வத்துடிப்போடு பிரசங்கித்தார். சகோதரர்களுக்கு இது உறுதியான நம்பிக்கையைக் கொடுத்தது. “கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல்” பிரசங்கிப்பதற்கான தைரியத்தைக் கொடுத்தது.—பிலிப்பியர் 1:12-14-ஐ வாசியுங்கள்; 4:22.
17. கஷ்டமான சூழ்நிலைகளிலும் பலன் தரும் விதத்தில் ஊழியம் செய்ய முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
17 சகோதர சகோதரிகள் நிறைய பேர், கஷ்டமான சூழ்நிலைகளிலும் பவுலைப் போலவே தைரியத்தைக் காட்டியிருக்கிறார்கள். பிரசங்க வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிற நாடுகளில் அவர்கள் வாழ்கிறார்கள். இருந்தாலும், ஏதோவொரு விதத்தில் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். (மத். 10:16-20) அப்படியொரு நாட்டில், சொந்தக்காரர்களிடமும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் கூடப்படிக்கிறவர்களிடமும் கூடவேலை செய்பவர்களிடமும் தெரிந்த நபர்களிடமும் நல்ல செய்தியைச் சொல்லும்படி பிரஸ்தாபிகளை ஒரு வட்டாரக் கண்காணி கேட்டுக்கொண்டார். இரண்டு வருஷங்களுக்குள் என்ன நடந்தது தெரியுமா? சபைகளின் எண்ணிக்கை அதிகமாயின! ஒருவேளை, நம்முடைய நாட்டில் பிரசங்க வேலைக்குக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், எல்லா சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பிரசங்கிக்கிற இந்தச் சகோதர சகோதரிகளிடமிருந்து நாம் அருமையான பாடம் கற்றுக்கொள்ளலாம். அதாவது, பிரசங்கிப்பதற்கு புதுப் புது வழிகளைத் தேடினால், எந்தத் தடையையும் சமாளிக்க யெகோவா நமக்குப் பலம் கொடுப்பார்.—பிலி. 2:13.
18. என்ன செய்ய நாம் உறுதியாக இருக்க வேண்டும்?
18 நாம் வாழும் இந்த மிக முக்கியமான காலகட்டத்தில், பிலிப்பியர்களுக்கு பவுல் எழுதிய அறிவுரைகளின்படி செய்ய உறுதியாக இருக்கலாம். மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளவும், குற்றமற்றவர்களாக நிலைத்திருக்கவும், மற்றவர்களின் விசுவாசத்தைக் குலைக்காமல் இருக்கவும், நீதியான செயல்களைச் செய்யவும் உறுதியாக இருக்கலாம். அப்போது, நாம் அன்பில் பெருகுவோம்; நம்முடைய அன்பான அப்பா யெகோவாவுக்குப் பெருமை சேர்ப்போம்.
பாட்டு 84 ‘எனக்கு மனமுண்டு’
a நம் சகோதர சகோதரிகள்மீது இருக்கிற அன்பைப் பலப்படுத்துவது முன்பைவிட இப்போது ரொம்பவே முக்கியம்! அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கும் சூழ்நிலைகளில்கூட நாம் எப்படி அன்பில் பெருகலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, பிலிப்பியர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் உதவும்.
b படங்களின் விளக்கம்: ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, சகோதரர் ஜோ வேலை செய்வதை நிறுத்திவிட்டு, இன்னொரு சகோதரரிடமும் அவருடைய பையனிடமும் பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் சகோதரர் மைக்குக்கு எரிச்சல் வருகிறது. ‘வேல செய்யாம இப்படி பேசிட்டிருக்காரே’ என்று மனதுக்குள் நினைக்கிறார். பிறகு, வயதான ஒரு சகோதரிக்கு ஜோ அன்போடு உதவுவதைப் பார்க்கிறார். மனதைத் தொடும் அந்தக் காட்சி, சகோதரர்களுடைய நல்ல குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விஷயத்தை மைக்குக்கு ஞாபகப்படுத்துகிறது.
c படங்களின் விளக்கம்: பிரசங்க வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிற நாட்டில், மற்றவர்கள் கவனிக்காத விதத்தில், ஒரு சகோதரர் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் நல்ல செய்தியைச் சொல்கிறார். பிறகு, கூடவேலை செய்பவரிடம், இடைவேளையின்போது நல்ல செய்தியைச் சொல்கிறார்.