படிப்புக் கட்டுரை 33
‘நீங்கள் சொல்வதைக் கேட்கிறவர்கள் மீட்புப் பெறுவார்கள்’
“உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து. இவற்றிலேயே நிலைத்திரு; இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.”—1 தீ. 4:16.
பாட்டு 92 வார்த்தை பிரசங்கி!
இந்தக் கட்டுரையில்...a
1. நம் எல்லாருக்கும் என்ன ஆசை இருக்கிறது?
“நான் சத்தியத்த கத்துக்கிட்ட சமயத்துல இருந்தே, என் குடும்பத்துல இருக்கிற எல்லாரும் என்கூட பூஞ்சோலையில இருக்கணும்னு ஆசப்பட்டேன்” என்று சாரா சொல்கிறாள்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “முக்கியமா என்னோட கணவரும் என்னோட பையனும் யெகோவாவ வணங்கணும்னு ஆசப்பட்டேன்” என்கிறாள் சாரா. யெகோவாவின் சாட்சியாக இல்லாதவர்கள் உங்கள் குடும்பத்திலும் இருக்கிறார்களா? அப்படியென்றால், சாராவைப் போல்தான் நீங்களும் நினைப்பீர்கள்!
2. இந்தக் கட்டுரையில் எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?
2 நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி நம் குடும்பத்தாரை நாம் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், பைபிளில் இருக்கிற விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், அவற்றை ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு உதவ முடியும். (2 தீ. 3:14, 15) நம் குடும்பத்தாருக்குச் சத்தியத்தைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? அவர்களும் யெகோவாவை நேசிப்பதற்கு நாம் எப்படி உதவலாம்? சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் எப்படி நமக்கு உதவலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.
குடும்பத்தாருக்குச் சத்தியத்தைப் பற்றிச் சொல்வது முக்கியம்
3. இரண்டு பேதுரு 3:9-ன்படி, நாம் ஏன் நம் குடும்பத்தாருக்குச் சத்தியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்?
3 இந்த உலகத்துக்கு யெகோவா சீக்கிரத்தில் முடிவுகட்டப்போகிறார். ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்கள்’ மட்டும்தான் காப்பாற்றப்படுவார்கள். (அப். 13:48) முன்பின் தெரியாதவர்களுக்குச் சத்தியத்தைப் பற்றிச் சொல்வதற்கு அதிக நேரத்தையும் சக்தியையும் நாம் செலவு செய்கிறோம். அப்படியிருக்கும்போது, நம் குடும்பத்தாரும் யெகோவாவை வணங்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது நியாயம்தான்! “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும்” என்றுதான் நம் அன்பான அப்பா யெகோவாவும் ஆசைப்படுகிறார்.—2 பேதுரு 3:9-ஐ வாசியுங்கள்.
4. குடும்பத்தாரிடம் நல்ல செய்தியைப் பற்றிச் சொல்லும்போது நாம் என்ன தவறு செய்துவிடலாம்?
4 மீட்பின் செய்தியைச் சொல்வதற்குச் சரியான முறையும் இருக்கிறது, தவறான முறையும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முன்பின் தெரியாதவர்களுக்குச் சத்தியத்தைப் பற்றிச் சொல்லும்போது, நாம் ஒருவேளை சாதுரியமாக நடந்துகொள்ளலாம். ஆனால், குடும்பத்தாரிடம் சொல்லும்போது யோசிக்காமல் பேசிவிடுகிறோமா?
5. குடும்பத்தாரிடம் சத்தியத்தைப் பற்றிச் சொல்லும்போது எதை மனதில் வைக்க வேண்டும்?
5 உங்கள் குடும்பத்தாரிடம் முதன்முதலில் சத்தியத்தைப் பற்றிப் பேசியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ‘இன்னும் நல்லா பேசியிருக்கலாமோ?’ என்று நினைத்து இப்போது வருத்தப்படுகிறீர்களா? “உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். (கொலோ. 4:5, 6) குடும்பத்தாரிடம் சத்தியத்தைப் பற்றிப் பேசும்போது, இந்த ஆலோசனையை ஞாபகம் வைப்பது நல்லது. இல்லையென்றால், அவர்கள் சத்தியத்தைக் கேட்பதற்குப் பதிலாக அதை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
யெகோவாவை வணங்க குடும்பத்தாருக்கு உதவுங்கள்
6-7. யெகோவாவின் சாட்சியாக இல்லாத துணையின் உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்வது ஏன் முக்கியம்? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
6 அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள். “ஆரம்பத்துல, கடவுள பத்தியும் பைபிள பத்தியும் மட்டும்தான் நான் என் கணவர்கிட்ட பேசுவேன். எங்களுக்குள்ள வேற பேச்சே இருக்காது” என்று சாரா சொல்கிறாள். ஆனால், சாராவின் கணவர் ராபினுக்கு பைபிளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாததால், சாரா சொல்வது எதுவுமே அவருக்குப் புரியவில்லை. தன்னுடைய மதத்தைப் பற்றியே சாரா எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பதாக அவர் நினைத்தார். ஆபத்தான ஒரு மதத்தில் அவள் சேர்ந்துவிட்டதாகவும், அவள் ஏமாந்துவிட்டதாகவும் நினைத்து ராபின் கவலைப்பட்டார்.
7 தான் செய்த ஒரு தவறை சாரா ஒத்துக்கொள்கிறாள். கொஞ்சக் காலத்துக்கு, சாயங்கால நேரங்களிலும் சனி ஞாயிறுகளிலும் அவள் வீட்டிலேயே இருக்கவில்லையாம். கூட்டங்களுக்குப் போவது... ஊழியத்துக்குப் போவது... சகோதர சகோதரிகளுடைய வீடுகளுக்குப் போவது... என்றே இருந்துவிட்டாளாம். “சிலசமயத்துல, அவரு வீட்டுக்கு வர்றப்போ நாங்க யாருமே இருக்க மாட்டோம். அப்பெல்லாம் அவரு ரொம்ப தனிமையா உணர்ந்திருக்காரு” என்று அவள் சொல்கிறாள். மனைவியும் மகனும் வீட்டில் இருக்க வேண்டும் என்று ராபின் எதிர்பார்த்தது நியாயம்தானே! அவர்கள் எப்படிப்பட்டவர்களோடு பழகுகிறார்கள் என்றுகூட அவருக்குத் தெரியவில்லையே! அதுமட்டுமல்ல, அவளுடைய புதிய நண்பர்கள்தான் இப்போது அவளுக்கு முக்கியமாக ஆகிவிட்டதுபோல் ராபின் நினைத்தார். அதனால், விவாகரத்து செய்துவிடுவதாகச் சொல்லி சாராவை மிரட்டினார். சாரா எப்படித் தன் கணவரின் உணர்ச்சிகளை இன்னும் நன்றாகப் புரிந்து நடந்திருக்கலாம்?
8. ஒன்று பேதுரு 3:1, 2-ன்படி, நம் குடும்பத்தார் எதை முக்கியமாகக் கவனிப்பார்கள்?
8 உங்கள் நடத்தை பேசட்டும். நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதைத்தான் பெரும்பாலும் நம் குடும்பத்தார் கவனிப்பார்கள். (1 பேதுரு 3:1, 2-ஐ வாசியுங்கள்.) இந்த உண்மையை சாரா காலப்போக்கில் புரிந்துகொண்டாள். “அவரு எங்க மேல உயிரையே வெச்சிருந்தாரு, உண்மையிலேயே விவாகரத்து செய்யணும்னு அவரு நினைக்கல. ஆனா, அவரு மிரட்டுனதுக்கு அப்புறம்தான், யெகோவாவோட ஆலோசனைகள என்னோட குடும்ப வாழ்க்கைல கடைப்பிடிக்க ஆரம்பிக்கணுங்குறத புரிஞ்சிக்கிட்டேன். அதனால, நிறைய பேசுறதுக்கு பதிலா, நல்லபடியா நடந்துக்குறது மூலமா முன்மாதிரி வைக்கணும்னு நினைச்சேன்” என்று சாரா சொல்கிறாள். அதன்பின், எப்போது பார்த்தாலும் பைபிளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்காமல் மற்ற விஷயங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள். ராபின் தன் மனைவியிடமும் மகனிடமும் நல்ல மாற்றத்தைப் பார்த்தார்; அவள் சாந்தமாக நடந்துகொள்வதையும், அவன் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வதையும் கவனித்தார். (நீதி. 31:18, 27, 28) பைபிள் சொல்கிறபடி வாழ்வதால் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்த பிறகு அவருடைய மனம் இளகியது. அதன்பின், பைபிளில் இருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள அவருடைய இதயக் கதவைத் திறந்தார்.—1 கொ. 7:12-14, 16.
9. நாம் ஏன் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது?
9 முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி! மக்கள் நல்ல செய்தியைக் கேட்டு, முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் “திரும்பத் திரும்ப” வாய்ப்புகளைத் தருகிறார். (எரே. 44:4) மற்றவர்களுக்கு உதவுவதை விட்டுவிடாமல் இருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்னார். அப்படிச் செய்தால்தான், தீமோத்தேயுவுக்கும் மீட்பு கிடைக்கும், அவர் சொல்வதைக் கேட்கிறவர்களுக்கும் மீட்பு கிடைக்கும் என்று பவுல் சொன்னார். (1 தீ. 4:16) நம் குடும்பத்தாரை நாம் நேசிப்பதால், பைபிளில் இருக்கிற உண்மைகளை அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சாராவின் சொல்லாலும் செயலாலும் கொஞ்சக் காலத்துக்குப் பின் அவளுடைய குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது, தன் கணவரோடு சேர்ந்து சாரா யெகோவாவை சந்தோஷமாக வணங்குகிறாள். சாராவும் ராபினும் பயனியர்களாக சேவை செய்கிறார்கள். ராபின் ஒரு மூப்பராகவும் சேவை செய்கிறார்.
10. நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்?
10 பொறுமையாக இருங்கள். கடவுளுக்குப் பிடித்த விதத்தில் வாழ ஆரம்பிக்கும்போது, நம்முடைய நம்பிக்கைகளிலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றை ஏற்றுக்கொள்வது நம்முடைய குடும்பத்தாருக்குக் கஷ்டமாக இருக்கலாம். பெரும்பாலும், நாம் பண்டிகைகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதையும், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதையும்தான் அவர்கள் முதலில் கவனிப்பார்கள். அதனால், அவர்களில் சிலர் நம்மீது கோபப்படலாம். (மத். 10:35, 36) அதற்காக, அவர்கள் மாறவே மாட்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. நம்முடைய நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவவில்லை என்றால், முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை என்று நாமே அவர்களை நியாயந்தீர்ப்பது போல் ஆகிவிடும். ஆனால், நியாயந்தீர்க்கும் வேலையை யெகோவா நமக்குக் கொடுக்கவில்லை; இயேசுவுக்குத்தான் கொடுத்திருக்கிறார். (யோவா. 5:22) பொறுமையாக இருந்தால், நாம் சொல்லும் செய்தியை நம் குடும்பத்தார் என்றாவது ஒருநாள் கேட்கலாம்.—“வெப்சைட்டைப் பயன்படுத்தி கற்றுக்கொடுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
11-13. தன்னுடைய அப்பா அம்மாவிடம் ஆலிஸ் நடந்துகொண்ட விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
11 சாதுரியமாகப் பேசுங்கள், உறுதியாகவும் இருங்கள். (நீதி. 15:2) ஆலிஸ் என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அப்பா அம்மாவைவிட்டு வேறொரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, யெகோவாவைப் பற்றி அவள் தெரிந்துகொண்டாள். அவளுடைய அப்பா அம்மா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அரசியலிலும் அவர்களுக்கு ஈடுபாடு இருந்தது. தான் கற்றுக்கொண்டிருந்த நல்ல விஷயங்களைப் பற்றி சீக்கிரமாகவே அவர்களிடம் சொல்வது நல்லது என்று ஆலிஸ் நினைத்தாள். “உங்களோட புது நம்பிக்கைகள பத்தியும், நீங்க புதுசா செய்ற சில விஷயங்கள பத்தியும் சீக்கிரமாவே சொல்லிடுங்க. நிதானமா சொல்லிக்கலாம்னு நினைச்சா, கடைசியில உங்க குடும்பத்துக்கு அது அதிர்ச்சியாதான் இருக்கும்” என்று அவள் சொல்கிறாள். தன்னுடைய அப்பா அம்மாவுக்கு என்னென்ன விஷயங்களில் ஆர்வம் இருக்கிறது என்று ஆலிஸ் யோசித்துப்பார்ப்பாள். பிறகு, அந்த விஷயங்களைப் பற்றி, உதாரணத்துக்கு அன்பைப் பற்றி, பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கடிதங்களில் எழுதி அனுப்புவாள். அவற்றைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கேட்பாள். (1 கொ. 13:1-13) தன்னை நல்லபடியாக வளர்த்ததற்காகவும், நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காகவும் அவர்களுக்கு நன்றி சொல்வாள். அதோடு, அவர்களுக்குப் பரிசுகளையும் அனுப்புவாள். அவர்களைப் பார்க்கப் போகும்போதெல்லாம், வீட்டு வேலைகளைச் செய்வதில் அம்மாவுக்கு ரொம்ப உதவியாக இருப்பாள். தன்னுடைய புதிய நம்பிக்கைகளைப் பற்றித் தன் அப்பா அம்மாவிடம் ஆலிஸ் சொன்னபோது, ஆரம்பத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
12 அப்பா அம்மாவுடைய வீட்டில் இருக்கும்போதும் எப்போதும்போல் தவறாமல் பைபிளைப் படிப்பாள். “இப்படி செஞ்சதுனால, பைபிள நான் எவ்வளவு முக்கியமா நினைக்கிறேனு அம்மாவால புரிஞ்சிக்க முடிஞ்சுது” என்கிறாள் ஆலிஸ். தன்னுடைய மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள் என்பதைத் தெரிந்துகொள்ளவும், பைபிளில் குறை கண்டுபிடிக்கவும் அவளுடைய அப்பா நினைத்தார். அதனால், பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவெடுத்தார். “நான் அவருக்கு ஒரு பைபிள கொடுத்தேன். நான் சொல்ல நினைச்ச சில வார்த்தைகளயும் அதுல எழுதினேன்” என்று அவள் சொல்கிறாள். கடைசியில் என்ன ஆனது? அவளுடைய அப்பாவால் பைபிளில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சொல்லப்போனால், பைபிளில் படித்த விஷயங்கள் அவருடைய மனதைத் தொட்டன.
13 பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்தால் என்ன செய்வது? அந்தச் சமயத்திலும் உறுதியாக இருங்கள். ஆனால், சாதுரியமாகவும் நடந்துகொள்ளுங்கள். (1 கொ. 4:12) உதாரணத்துக்கு, அம்மாவிடமிருந்து வந்த எதிர்ப்பை ஆலிஸ் சமாளிக்க வேண்டியிருந்தது. “நான் ஞானஸ்நானம் எடுத்தப்போ, ‘நீ அடங்கவே மாட்டே’னு அம்மா சொன்னாங்க” என்று ஆலிஸ் சொல்கிறாள். அப்போது அவள் என்ன செய்தாள்? “அவங்க சொன்னா சொல்லிட்டு போகட்டும்னு நான் விட்டுடல. யெகோவாவின் சாட்சியா ஆகணும்னு நான் முடிவு எடுத்திருக்கிறதயும், என்னோட முடிவ மாத்திக்க மாட்டேங்குறதயும் மரியாதயோட அம்மாகிட்ட சொன்னேன். அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்குங்குறதயும் சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் அழுதுட்டோம். அப்புறம், நான் அவங்களுக்கு ஸ்பெஷலா சமைச்சு கொடுத்தேன். பைபிள் என்னை நல்ல பொண்ணா மாத்திட்டு வர்றத அம்மா ஒத்துக்க ஆரம்பிச்சாங்க” என்று சொல்கிறாள் ஆலிஸ்.
14. மற்றவர்கள் கட்டாயப்படுத்தும்போது நீங்கள் ஏன் உங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது?
14 யெகோவாவை வணங்குவதை நாம் எவ்வளவு முக்கியமாக நினைக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள நம்முடைய குடும்பத்தாருக்குக் காலம் எடுக்கலாம். இப்போது ஆலிஸின் விஷயத்துக்கு மறுபடியும் வரலாம். குறிப்பிட்ட ஒரு வேலையில் அவள் சேர வேண்டும் என்று அவளுடைய அப்பா அம்மா ஆசைப்பட்டார்கள். ஆனால், பயனியர் சேவை செய்வதென்று அவள் முடிவெடுத்தாள். இப்போது மறுபடியும் அவளுடைய அம்மா அழுதார். ஆலிஸ் என்ன செய்தாள்? உறுதியாக இருந்தாள்! அவள் இப்படிச் சொல்கிறாள்: “ஒரு விஷயத்த நீங்க விட்டுக்கொடுத்தா, மத்த விஷயங்களயும் விட்டுக்கொடுக்கணும்னு உங்க குடும்பத்துல இருக்குறவங்க கட்டாயப்படுத்த ஆரம்பிச்சிடுவாங்க. நீங்க அன்பாவும் உறுதியாவும் இருந்தீங்கனா, உங்க குடும்பத்துல இருக்கிற சிலர் நீங்க சொல்றத கேட்கலாம்.” இதுதான் ஆலிஸின் விஷயத்தில் நடந்தது. அவளுடைய அப்பா அம்மா, இப்போது பயனியர்களாக இருக்கிறார்கள். அவளுடைய அப்பா, மூப்பராகவும் சேவை செய்கிறார்.
சபையில் இருக்கிறவர்கள் எப்படி உதவலாம்?
15. மத்தேயு 5:14-16-ன்படியும் 1 பேதுரு 2:12-ன்படியும், நாம் செய்கிற ‘நல்ல செயல்கள்’ நம் குடும்பத்தாருக்கு எப்படி உதவியாக இருக்கும்?
15 சபையில் இருக்கிறவர்கள் செய்கிற ‘நல்ல செயல்கள்’ மூலம் மக்களை யெகோவா தன் பக்கமாக இழுத்துக்கொள்கிறார். (மத்தேயு 5:14-16-ஐயும், 1 பேதுரு 2:12-ஐயும் வாசியுங்கள்.) உங்கள் கணவரோ மனைவியோ இன்னும் யெகோவாவின் சாட்சியாக ஆகவில்லையா? அப்படியென்றால், உங்கள் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளை அவர் சந்தித்திருக்கிறாரா? இப்போது சாராவைப் பற்றி மறுபடியும் பார்க்கலாம். தன்னுடைய கணவர் ராபினுக்கு சகோதர சகோதரிகள் அறிமுகம் ஆக வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தன்னுடைய வீட்டுக்கு சாரா கூப்பிட்டாள். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ராபினுக்கு இருந்த தவறான கருத்துகளை மாற்றிக்கொள்ள ஒரு சகோதரர் அவருக்கு உதவினார். அதைப் பற்றி ராபின் இப்படிச் சொல்கிறார்: “என்கூட சேர்ந்து டிவியில ஒரு விளையாட்ட பார்க்குறதுக்காகவே, அவரு ஒருநாள் வேலைக்கு லீவு போட்டுட்டு வந்தாரு. மத்த விஷயத்திலும் இவருக்கு ஆர்வம் இருக்குனு அப்போ புரிஞ்சிக்கிட்டேன்.”
16. நம்முடைய குடும்பத்தாரை ஏன் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும்?
16 நம்முடைய குடும்பத்தாருக்கு உதவுவதற்கு அருமையான ஒரு வழி இருக்கிறது. அதுதான் கூட்டங்களுக்கு அவர்களை அழைப்பது! (1 கொ. 14:24, 25) ராபினும் முதல் தடவையாக கூட்டத்துக்கு வந்தார். அவர் கலந்துகொண்ட முதல் கூட்டமே நினைவுநாள் நிகழ்ச்சிதான். அது வெறுமனே ஒருமணிநேர நிகழ்ச்சி என்பதாலும், அவருடைய வேலை நேரத்துக்குப் பிறகு அது நடந்ததாலும் அதில் கலந்துகொள்வது அவருக்கு வசதியாக இருந்தது. “அங்க கொடுத்த பேச்சு எனக்கு சரியா புரியல. ஆனா, அங்கிருந்த ஜனங்கள எனக்கு பிடிச்சுப்போச்சு. அவங்களாவே என்கிட்ட வந்து பேசுனாங்க. அன்பா கைகுலுக்குனாங்க. அவங்க உண்மையிலயே நல்ல ஜனங்க” என்று ராபின் சொல்கிறார். ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும், சாராவுக்கு ஏற்கெனவே உதவி செய்திருந்தார்கள். குறிப்பாக, கூட்டங்களிலும் ஊழியத்திலும் அவளுடைய மகனைக் கவனித்துக்கொண்டார்கள். அதனால், சாராவுடைய புதிய நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ராபின் விரும்பியபோது, தனக்கு பைபிள் படிப்பு எடுக்கும்படி அந்தச் சகோதரரிடம் கேட்டுக்கொண்டார்.
17. எந்த விஷயத்துக்காக நம்மை நாமே குற்றப்படுத்திக்கொள்ளக் கூடாது, நம்முடைய குடும்பத்தார் மாறவே மாட்டார்கள் என்று ஏன் நினைக்கக் கூடாது?
17 என்றாவது ஒருநாள் நம்முடைய குடும்பத்தார் எல்லாரும் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவார்கள் என்று நாம் நம்புகிறோம். ஆனால், நாம் என்னதான் முயற்சி எடுத்தாலும், நம்முடைய குடும்பத்தார் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். ஒருவேளை உங்களுக்கு அப்படி நடந்தால், தயவுசெய்து உங்களை நீங்களே குற்றப்படுத்திக்கொள்ளாதீர்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி நாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அதேசமயத்தில், யெகோவாவை வணங்குவதால் நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தார் நிச்சயம் பார்ப்பார்கள். அது அவர்கள் மனதைத் தொடலாம். அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். அவர்களிடம் சாதுரியமாகப் பேசுங்கள். அவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். (அப். 20:20) உங்கள் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார். நீங்கள் சொல்கிற பைபிள் சத்தியங்களை உங்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கும் மீட்பு கிடைக்கும்!
பாட்டு 142 எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!
a நம்முடைய குடும்பத்தாரும் சொந்தக்காரர்களும் சத்தியத்துக்கு வர வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் சத்தியத்துக்கு வருவதற்கு நாம் எப்படி உதவலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரையில் வரும் “குடும்பத்தார்” என்ற வார்த்தை, யெகோவாவை வணங்காத சொந்தக்காரர்களையும் குறிக்கிறது.
c படங்களின் விளக்கம்: காரைப் பழுதுபார்க்க, சத்தியத்தில் இல்லாத தன் அப்பாவுக்கு ஓர் இளம் சகோதரர் உதவி செய்கிறார். சரியான சமயம் பார்த்து, நம் வெப்சைட்டில் இருக்கிற ஒரு வீடியோவைக் காட்டுகிறார்.
d படங்களின் விளக்கம்: சத்தியத்தில் இல்லாத தன் கணவர் பேசுவதை ஒரு சகோதரி கவனித்துக் கேட்கிறார். அந்த நாளில் நடந்த விஷயங்களை எல்லாம் அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். பிறகு, குடும்பத்தாரோடு சேர்ந்து அந்தச் சகோதரி சந்தோஷமாக பொழுதுபோக்குகிறார்.
e படங்களின் விளக்கம்: ஒரு சகோதரி, சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளை வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அந்தச் சகோதரியின் கணவரிடம் அவர்கள் சந்தோஷமாகப் பேசுகிறார்கள். பிறகு, அவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.