உடல்நல பராமரிப்பில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுங்கள்
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் . . . உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.”—மாற். 12:30.
1. மனிதர்கள் சம்பந்தமாகக் கடவுளின் நோக்கம் என்னவாக இருந்தது?
மனிதருக்கு நோய்நொடிகளும் மரணமும் வர வேண்டுமென்பது யெகோவா தேவனுடைய நோக்கமாய் இருக்கவில்லை. ஆதாமையும் ஏவாளையும் இன்பப் பூங்காவாகிய ஏதேன் தோட்டத்தில் அவர் குடிவைத்தார்; வெறும் எழுபதோ எண்பதோ ஆண்டுகளுக்கு அல்ல, நித்திய காலத்திற்கும் ‘அத்தோட்டத்தைப் பண்படுத்திப் பராமரிக்கும்’ வேலையை அவர்களுக்குக் கொடுத்தார். (ஆதி. 2:8, 15, NW; சங். 90:10) யெகோவாவுக்கு அவர்கள் உண்மையோடு நிலைத்திருந்து, அவர் மீதுள்ள அன்பின் காரணமாக அவரது பேரரசாட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தால், நோயும் அண்டியிருக்காது, வயோதிகத்தின் உபாதைகளும் வதைத்திருக்காது, மரணமும் தீண்டியிருக்காது.
2, 3. (அ) பிரசங்கி புத்தகம் வயோதிகத்தை எவ்வாறு சித்தரிக்கிறது? (ஆ) ஆதாமிடமிருந்து வந்திருக்கும் மரணத்திற்கு யார் காரணம், அதன் பாதிப்புகள் எவ்வாறு நீக்கப்படும்?
2 அபூரண மனிதருக்கு வயோதிகத்தால் வரும் “தீங்குநாட்கள்” பற்றி பிரசங்கி 12-ஆம் அதிகாரம் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது. (பிரசங்கி 12:1-7-ஐ வாசியுங்கள்.) நரைமயிர், பூப்பூத்து நிற்கும் ‘வாதுமை மரத்திற்கு’ ஒப்பிடப்படுகிறது. ‘பெலசாலிகள்’ போலிருந்த கால்கள், கூனிப்போய்த் தள்ளாடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிச்சத்திற்காகப் பலகணி வழியாய் எட்டிப் பார்க்கிறவர்கள் இருளை மட்டுமே காண்பது, மங்கிப்போன கண்பார்வைக்குப் பொருத்தமான உவமையாக இருக்கிறது. சில பற்கள் விழுந்து போவது, ‘ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்துபோவதற்கு,’ அதாவது, வேலையை நிறுத்திக்கொள்வதற்கு ஒப்பிடப்படுகிறது.
3 கால்கள் தள்ளாடி, கண்பார்வை மங்கி, பற்கள் விழுந்து மனிதர்கள் கஷ்டப்பட வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாகவே இருக்கவில்லை. ஆதாமால் வந்த மரணம், ‘பிசாசினுடைய கிரியைகளில்’ ஒன்று; அதைக் கடவுளுடைய குமாரன், மேசியானிய ராஜ்யத்தின் மூலம் நீக்கிவிடுவார். “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோ. 3:8.
ஓரளவு கவலை இயல்பானதே
4. யெகோவாவின் ஊழியர்கள் தங்களது உடல்நலத்தைக் குறித்து ஏன் ஓரளவு கவலைப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் எதை அறிந்திருக்கிறார்கள்?
4 பொதுவாக அபூரண மனிதருக்கு வருகிற நோயும் வயோதிகமும் தற்போது யெகோவாவின் ஊழியர்கள் சிலருக்கும் வரத்தான் செய்கிறது. உடல்நலம் குறித்து நாம் ஓரளவு கவலைப்படுவது இயல்பானதுதான், அது நல்லதும்கூட. ஏனெனில் நாம் யெகோவாவுக்கு “முழுப் பலத்தோடும்” சேவை செய்ய விரும்புகிறோம், அல்லவா? (மாற். 12:30) நாம் ஓரளவு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தாலும், எதார்த்தமாகவும் இருக்க வேண்டும்; அதாவது, வயோதிகத்தைத் தள்ளிப்போடவோ, அனைத்து நோய்களையும் தடுக்கவோ நம்மால் முடியாது என்ற உண்மையை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
5. உடல்நலப் பிரச்சினைகள் சம்பந்தமாகக் கடவுளின் உண்மை ஊழியர்களிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
5 யெகோவாவின் உண்மை ஊழியர்கள் பலர் உடல்நலப் பிரச்சினைகளால் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எப்பாப்பிரோதீத்து. (பிலி. 2:25-27) பவுலின் உண்மை நண்பன் தீமோத்தேயுவும் வயிற்று உபாதையால் அடிக்கடி கஷ்டப்பட்டார்; அதனால் “கொஞ்சம் திராட்சரசமும்” சேர்த்துக்கொள்ளும்படி பவுல் அவருக்கு ஆலோசனை கூறினார். (1 தீ. 5:23) அப்போஸ்தலன் பவுலுக்கும் “மாம்சத்திலே ஒரு முள்” இருந்தது; அது அவருடைய கண் கோளாறாகவோ வேறு ஏதாவது உடல்நலக் கோளாறாகவோ இருந்திருக்கலாம்; அந்தக் காலத்தில் அதைக் குணப்படுத்த வழியே இருக்கவில்லை. (2 கொ. 12:7; கலா. 4:15; 6:11) ‘மாம்சத்திலிருந்த இந்த முள்’ குறித்து யெகோவாவிடம் பவுல் பலமுறை உருக்கமாக மன்றாடினார். (2 கொரிந்தியர் 12:8-10-ஐ வாசியுங்கள்.) ஆனால் யெகோவா அதை அற்புதமாகக் குணப்படுத்தவில்லை; மாறாக, அதைத் தாங்கிக்கொள்ள சக்தியைத் தந்து உதவினார். பவுலின் பலவீனத்தில் யெகோவாவின் பலம் வெளிப்பட்டது. இந்த உதாரணத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியுமா?
மிதமிஞ்சிக் கவலைப்படாதீர்கள்
6, 7. உடல்நலம் குறித்து நாம் ஏன் மிதமிஞ்சிக் கவலைப்படக் கூடாது?
6 யெகோவாவின் சாட்சிகள் மருத்துவ உதவியை நாடுகிறார்கள் என்றும், பல்வேறு சிகிச்சைமுறைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். விழித்தெழு! பத்திரிகையில் உடல்நலம் குறித்து அடிக்கடி கட்டுரைகள் வெளிவருகின்றன. எந்தவொரு சிகிச்சைமுறையையும் நாங்கள் சிபாரிசு செய்வதில்லை என்றாலும், மருத்துவ நிபுணர்களின் உதவிக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். யாருமே பூரண சுகத்துடன் வாழ முடியாது என்று நமக்குத் தெரியும். எனவே, நம் உடல்நலத்தைக் குறித்தே சதா கவலைப்படுவது ஞானமற்ற செயல் என்பதை அறிந்திருக்கிறோம். இவ்விஷயத்தில் நாம் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாய் இருக்க வேண்டும்; அவர்களுக்கு எதிர்கால ‘நம்பிக்கையில்லாததால்,’ இந்த வாழ்க்கைதான் எல்லாமே என்று கருதுகிறார்கள்; எனவே, தங்கள் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக, எந்தவொரு சிகிச்சைமுறையையும் முயன்று பார்க்கிறார்கள். (எபே. 2:2, 12) நாமோ, தற்போதைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்வதற்காக யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக்கூடாதெனத் தீர்மானமாய் இருக்கிறோம்; நாம் அவருக்கு உண்மையோடு நிலைத்திருந்தால், அவர் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகத்தில் ‘நித்திய ஜீவனை [அதாவது, மெய்யான வாழ்க்கையை] பற்றிக்கொள்வோம்’ என்று நம்புகிறோம்.—1 தீ. 6:12, 19; 2 பே. 3:13.
7 நம் உடல்நலம் குறித்து மிதமிஞ்சிக் கவலைப்படாதிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்படிக் கவலைப்பட்டால் நாளடைவில் தன்னலம்பிடித்தவர்களாய் ஆகிவிடுவோம். இந்த ஆபத்தைக் குறித்தே அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியரை எச்சரித்து இவ்வாறு சொன்னார்: “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” (பிலி. 2:4) நம் உடல்நலத்தைப் பராமரிப்பதற்குப் போதிய கவனம் செலுத்துவது தவறல்ல; அதேசமயத்தில் நம் சகோதரர்களிடமும், ‘ராஜ்யத்தைப் பற்றிய சுவிசேஷத்தை’ அறிவிக்கும் ஜனங்களிடமும் நாம் ஆழ்ந்த அக்கறை காட்டினால், நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதிலேயே மூழ்கிவிட மாட்டோம்.—மத். 24:14.
8. உடல்நலத்துக்கு மிதமிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கும்போது என்ன நடக்கலாம்?
8 ஒரு கிறிஸ்தவர் உடல்நலத்துக்கு மிதமிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கும்போது ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களைப் புறக்கணித்துவிடும் ஆபத்து இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தால், குறிப்பிட்ட உணவு வகைகள், சிகிச்சை முறைகள், சத்து மருந்துகள் சம்பந்தமாக நம்முடைய அபிப்பிராயத்தை மற்றவர்கள்மீது திணித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக, பவுலின் வார்த்தைகளில் பொதிந்துள்ள நியமத்தைக் கவனியுங்கள்: ‘கிறிஸ்துவின் நாள் வரும்வரை நீங்கள் குற்றமற்றவர்களாகவும் மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காதவர்களாகவும் இருப்பதற்கு . . . மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.’—பிலி. 1:10, NW.
மிக முக்கியமான காரியங்கள் எவை?
9. மிக முக்கியமான காரியங்களில் ஒன்றான எதை நாம் புறக்கணிக்கக் கூடாது, ஏன்?
9 மிக முக்கியமான காரியங்களை நாம் நிச்சயப்படுத்துகிறோம் என்றால், ஆன்மீக ரீதியில் சுகப்படுத்தும் வேலையை மும்முரமாகச் செய்வோம். கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலமும் கற்பிப்பதன் மூலமும் இந்த வேலையைச் செய்கிறோம். மகிழ்ச்சிதரும் இந்த வேலை, நமக்கும் பயன் அளிக்கிறது, நம்மிடம் பைபிளைக் கற்றுக்கொள்பவர்களுக்கும் பயன் அளிக்கிறது. (நீதி. 17:22; 1 தீ. 4:15, 16) தீரா வியாதியால் அவதிப்படுகிற நம் சகோதர சகோதரிகளைக் குறித்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அவ்வப்போது கட்டுரைகள் வெளிவருகின்றன. இவர்கள் தங்களுடைய உடல்நலப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று சில சமயம் அந்தக் கட்டுரைகளில் விளக்கப்படுகிறது; யெகோவாவையும் அவருடைய அருமையான வாக்குறுதிகளையும் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினையைத் தற்காலிகமாக மறந்துவிடுகிறார்கள் என்றும்கூட அவற்றில் விளக்கப்படுகிறது.a
10. நாம் சிகிச்சைமுறைகளைக் கவனமாய்த் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?
10 கிறிஸ்தவர்களுக்கு உடல்நலப் பிரச்சினை வரும்போது, எப்படிப்பட்ட சிகிச்சையைப் பெற வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க வேண்டும்; அதாவது, அவரவர் “தன்தன் பாரத்தை” சுமக்க வேண்டும். (கலா. 6:5) அதே சமயத்தில், நாம் எந்தச் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது யெகோவாவுக்கு முக்கியமானது என்பதையும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். பைபிள் நியமங்களுக்கு நாம் காட்டும் மரியாதை, ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ நம்மைத் தூண்டுவதுபோலவே, கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள ஆழ்ந்த மதிப்பு, ஆன்மீக ரீதியில் தீங்கிழைக்கிற அல்லது யெகோவாவுடன் உள்ள உறவைப் பாதிக்கிற சிகிச்சைமுறைகளைத் தவிர்க்கும்படியும் நம்மைத் தூண்ட வேண்டும். (அப். 15:20) நோய்களைக் கண்டறியவும் அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிற சில முறைகள் ஆவியுலகத் தொடர்புடன் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ‘மாய சக்தியோடு’ தொடர்பு கொள்ளும் பழக்கங்களில், அதாவது ஆவியுலகத்துடன் தொடர்புகொள்ளும் பழக்கங்களில் ஈடுபட்ட விசுவாசதுரோக இஸ்ரவேலரை யெகோவா இவ்வாறு கண்டனம் செய்தார்: “இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே [“மாய சக்தியோடே,” NW] ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.” (ஏசா. 1:13) நோயால் கஷ்டப்படும்போது நம் ஜெபங்களுக்குத் தடைவரும் விதத்திலும், கடவுளோடுள்ள நம் பந்தத்திற்கு ஆபத்துவரும் விதத்திலும் எதையாவது செய்துவிடக் கூடாது.—புல. 3:44.
“தெளிந்த புத்தி” அவசியம்
11, 12. சிகிச்சைமுறையைத் தேர்ந்தெடுக்கையில் “தெளிந்த புத்தி” ஏன் அவசியம்?
11 நாம் நோயால் கஷ்டப்படும்போது, யெகோவா அற்புதமாக நம்மைக் குணப்படுத்தும்படி எதிர்பார்க்க முடியாது; ஆனால், தகுந்த சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க ஞானத்தைத் தரும்படி ஜெபிக்கலாம். அதே சமயத்தில், பைபிள் நியமங்களுக்கு இசைவாகவும் தெளிந்த புத்தியோடும் அதை நாம் தேர்ந்தெடுக்க முயல வேண்டும். ஒருவேளை கொடிய நோயாக இருந்தால், நீதிமொழிகள் 15:22-க்கு இசைவாக, ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பது ஞானமான செயலாகும்; “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்” என்று அந்த வசனம் சொல்கிறது. ‘தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ண வேண்டும்’ என சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்தார்.—தீத். 2:12.
12 இயேசுவின் காலத்தில் நோயுற்றிருந்த ஒரு பெண் எதிர்ப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் இன்று அநேகர் இருக்கிறார்கள். இதைக் குறித்து மாற்கு 5:25, 26-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்பட்டாள்.’ இயேசு அந்தப் பெண்ணைக் குணப்படுத்தி, அவளிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டார். (மாற். 5:27–34) கிறிஸ்தவர்கள் சிலர், எப்படியாவது நோயைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற துடிப்பில் பைபிள் நியமங்களுக்கு எதிரான முறைகளைத் தேர்ந்தெடுக்க முயன்றிருக்கிறார்கள்.
13, 14. (அ) சிகிச்சைமுறையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சாத்தான் எப்படி நம் உத்தமத்தன்மையை முறிக்கக்கூடும்? (ஆ) மாயமந்திரத்தோடு ஓரளவு சம்பந்தப்பட்ட காரியத்திலும்கூட நாம் ஏன் ஈடுபடக் கூடாது?
13 சாத்தான் நம்மை மெய் வணக்கத்திலிருந்து திசைதிருப்ப எந்த வழியையும் பயன்படுத்துவான். அவன் பாலியல் ஒழுக்கக்கேடு, பொருளாசை போன்றவற்றின் மூலமாகச் சிலரை விழவைப்பதைப் போலவே கேள்விக்கிடமான சிகிச்சைமுறைகள் மூலமாக இன்னும் சிலரது உத்தமத்தன்மையை முறிக்கப் பார்க்கிறான்; அத்தகைய சிகிச்சைமுறைகள் மாயமந்திரம், பில்லிசூனியம் ஆகியவற்றோடு தொடர்புடையவையாய் இருக்கக்கூடும். ‘தீமையினின்று,’ அதாவது தீயவனிடமிருந்து, நம்மை இரட்சித்துக் கொள்ளும்படியும், ‘சகல அக்கிரமங்களினின்று’ மீட்டுக்கொள்ளும்படியும் நாம் யெகோவாவிடம் ஜெபிக்கிறோம்; ஆகவே, பில்லிசூனியத்தோடும் மாயமந்திரத்தோடும் சம்பந்தப்பட்ட எந்தக் காரியத்திலும் ஈடுபட்டு சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ளக்கூடாது.—மத். 6:13; தீத். 2:14.
14 இஸ்ரவேலர் மத்தியில் குறிசொல்லுதலையும் மாயவித்தையையும் யெகோவா தடைசெய்திருந்தார். (உபா. 18:10-12) பவுல் ‘பில்லிசூனியத்தை’ ‘மாம்சத்தின் கிரியைகளில்’ ஒன்றாகக் குறிப்பிடுகிறார். (கலா. 5:19, 20) அதோடு, யெகோவா கொண்டுவரும் புதிய உலகத்தில் ‘சூனியக்காரர்’ இருக்க மாட்டார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 21:8) ஆக, ஏதாவது ஒரு சிகிச்சைமுறை ஆவியுலகத் தொடர்புடன் துளியளவு சம்பந்தப்பட்டிருந்தால்கூட, அது யெகோவாவின் பார்வையில் அருவருப்பானதே.
‘உங்கள் நியாயத்தன்மை தெரிந்திருக்கட்டும்’
15, 16. உடல்நல பராமரிப்பு சம்பந்தமாக நமக்கு ஏன் ஞானம் தேவை, முதல் நூற்றாண்டு ஆளும் குழுவினர் என்ன ஞானமான அறிவுரை அளித்தார்கள்?
15 இதுவரை சிந்தித்ததை வைத்துப் பார்க்கையில், நோய்களைக் கண்டறியவும் அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிற ஏதாவது ஒரு முறை குறித்து நமக்குச் சந்தேகங்கள் எழுந்தால், உடனே அதைத் தவிர்த்துவிடுவது ஞானமானது. அதே சமயத்தில், ஒரு மருத்துவ முறையின் நுணுக்கங்கள் தெரியாத காரணத்தால் அது பில்லிசூனியத்துடன் தொடர்புடையது என்று நாம் முத்திரை குத்திவிட முடியாது. உடல்நல பராமரிப்பு சம்பந்தமாக பைபிளின் கண்ணோட்டத்தையே நாமும் பெற்றிருப்பதற்கு, பகுத்துணர்வும் தெய்வீக ஞானமும் தேவை. நீதிமொழிகள் 3-ஆம் அதிகாரத்தில் பின்வரும் அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். . . . மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனாய் இருக்கும்.’—நீதி. 3:5, 6, 21, 22.
16 நாம் முடிந்தளவுக்கு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயலுகிற அதே சமயத்தில், நோய்க்கு அல்லது வயோதிகத்தால் வரும் உபாதைக்குச் சிகிச்சையை நாடும்போது கடவுளுடைய தயவை இழக்கச் செய்கிற எந்தக் காரியத்திலும் ஈடுபடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களைப் போலவே, உடல்நல பராமரிப்பு விஷயத்திலும், ‘நம் நியாயத்தன்மை எல்லா மனுஷருக்கும் தெரியும்’ விதத்தில் நாம் பைபிள் நியமங்களைப் பின்பற்ற வேண்டும். (பிலி. 4:5, NW) முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழுவினர் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய மிக முக்கியமான ஒரு கடிதத்தில் விக்கிரகாராதனை, இரத்தம், வேசித்தனம் ஆகியவற்றுக்கு விலகியிருக்கும்படி அறிவுரை கூறியிருந்தார்கள்; அந்த அறிவுரையோடு, “இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்” என்ற உறுதியையும் அளித்திருந்தார்கள். (அப். 15:28, 29) அது எவ்விதத்தில் அவர்களுக்கு நலமாய் இருந்திருக்கும்?
எதிர்கால ஆசீர்வாதங்களைக் கண்முன் நிறுத்தி எதார்த்தமாக இருங்கள்
17. பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதால் உடல் ரீதியில் நாம் எப்படி நன்மை அடைந்திருக்கிறோம்?
17 நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இரத்தத்திற்கும் வேசித்தனத்திற்கும் விலகியிருக்கும்படியான பைபிள் நியமங்களைக் கவனமாகக் கடைப்பிடித்ததால் எந்தளவுக்கு நலமாய் இருக்கிறேன் என்பதை நான் புரிந்திருக்கிறேனா?’ அத்துடன், ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரிப்பதற்கு’ நாம் எடுத்த முயற்சியின் பலன்களையும் சற்று எண்ணிப்பாருங்கள். (2 கொ. 7:1) நாம் பைபிள் நெறிமுறைப்படி உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதால், பல நோய்களைத் தவிர்க்கிறோம். ஆன்மீக மற்றும் உடல் ரீதியில் நம்மை அசுத்தப்படுத்துகிற புகையிலையையும் போதைப் பொருள்களையும் அறவே தவிர்ப்பதால் நாம் நலமாய் இருக்கிறோம். சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் அளவோடு இருப்பதால் வரும் உடல் ரீதியான நன்மைகளையும் சிறிது எண்ணிப் பாருங்கள். (நீதிமொழிகள் 23:20-ஐயும் தீத்து 2:2, 3-ஐயும் வாசியுங்கள்.) ஓய்வும் உடற்பயிற்சியும் நாம் நலமாய் இருக்க உதவினாலும், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதே உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நாம் நலமாய் இருக்க முக்கியமாக உதவுகிறது.
18. நாம் எதற்கு முக்கியக் கவனம் செலுத்த வேண்டும், உடல்நலம் சம்பந்தமாக எந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைக் காண நாம் ஆவலோடு இருக்கலாம்?
18 எல்லாவற்றுக்கும் மேலாக, நம் ஆன்மீக நலனைப் பராமரிக்க வேண்டும்; “இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்” ஊற்றுமூலராய் இருக்கிற பரம தகப்பனுடன் உள்ள விலைமதியா உறவை நாம் வலுப்படுத்த வேண்டும். (1 தீ. 4:8; சங். 36:9) இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதால் கடவுளுடைய புதிய உலகத்தில் ஆன்மீக ரீதியிலும் உடல் ரீதியிலும் பூரண ஆரோக்கியம் கிடைக்கும். தேவ ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து, நம்மை “ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு” நடத்துவார். மேலும், கடவுள் நம் கண்ணீர் யாவையும் துடைப்பார். (வெளி. 7:14-17; 22:1, 2) “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தையும் நாம் காண்போம்.—ஏசா. 33:24.
19. நம் உடல்நல பராமரிப்புக்கு ஓரளவு கவனம் செலுத்துகிற அதே சமயத்தில், நமக்கு என்ன உறுதி அளிக்கப்படுகிறது?
19 மீட்பு விரைவில் வரப்போவதை யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் நன்கு அறிந்திருக்கிறோம்! யெகோவா நோயையும் மரணத்தையும் சுவடு தெரியாமல் மறையச் செய்யும் நாளுக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். அதுவரையில், நோய்களால் வரும் வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக்கொள்ள நம் அன்பான தகப்பன் நமக்கு உதவுவார்; ஏனெனில், ‘அவர் நம்மீது அக்கறை உள்ளவர்’ என்ற உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது. (1 பே. 5:7, NW) ஆகவே, நாம் எப்போதும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள தெளிவான நியமங்களுக்கு இசைய உடல்நலத்தைப் பராமரிப்போமாக!
[அடிக்குறிப்பு]
a அத்தகைய கட்டுரைகளின் பட்டியலை செப்டம்பர் 1, 2003 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கம் 17-ல் உள்ள பெட்டியில் காணலாம்.
என்ன பதில் சொல்வீர்கள்?
• வியாதிக்குக் காரணம் யார், வியாதியின் பாதிப்புகளிலிருந்து நம்மை விடுவிக்கப்போவது யார்?
• உடல்நலத்தைக் குறித்துக் கவலைப்படுவது இயல்பாக இருந்தாலும், நாம் எதைத் தவிர்க்க வேண்டும்?
• நாம் எந்தச் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது யெகோவாவுக்கு ஏன் முக்கியமானது?
• உடல்நலம் சம்பந்தமாக பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
[பக்கம் 23-ன் படம்]
மனிதர்கள் நோயினாலும் வயோதிகத்தினாலும் அவதிப்படும் நோக்கத்தோடு படைக்கப்படவில்லை
[பக்கம் 25-ன் படம்]
யெகோவாவின் மக்கள் உடல்நல பிரச்சினைகளின் மத்தியிலும் ஊழியத்தில் சந்தோஷமாய் ஈடுபடுகிறார்கள்