அதிகாரம் 3
நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு இரண்டு திறவுகோல்கள்
1, 2. (அ) திருமணம் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும்படி ஏற்படுத்தப்பட்டது? (ஆ) இது எவ்வாறு சாத்தியமாகும்?
கடவுள் முதல் ஆணையும் பெண்ணையும் திருமணத்தில் இணைத்தபோது, அந்த இணைப்பு தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. ஆதாமும் ஏவாளும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. (ஆதியாகமம் 2:24) ஒரு ஆணையும் பெண்ணையும் இணைப்பதே மதிப்புக்குரிய திருமணத்திற்கான கடவுளுடைய தராதரமாக உள்ளது. துணைவரில் ஒருவரோ அல்லது இருவருமோ படுமோசமான பாலின ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவது மட்டுமே மணவிலக்கு செய்துவிட்டு பின்பு மறுமணம் செய்துகொள்ளும் சாத்தியத்திற்கு வேதப்பூர்வ அடிப்படையை அளிக்கிறது.—மத்தேயு 5:32.
2 இரண்டு நபர்கள் ஒன்றாக சேர்ந்து வரையறையற்ற காலம் மகிழ்ச்சியோடு வாழ்வது சாத்தியமா? ஆம், இதைச் சாத்தியமாக்குவதற்கு உதவக்கூடிய இரண்டு முக்கியமான காரணக்கூறுகளை அல்லது திறவுகோல்களைப் பைபிள் அடையாளம் காண்பிக்கிறது. கணவன், மனைவி ஆகிய இருவருமே இந்தத் திறவுகோல்களைப் பயன்படுத்தினால், அவர்கள் மகிழ்ச்சியையும் அநேக ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வதற்கான வழியைத் திறந்து வைப்பர். இந்தத் திறவுகோல்கள் யாவை?
முதலாவது திறவுகோல்
3. என்ன மூன்று வகையான அன்பை திருமணமான தம்பதிகள் வளர்க்க வேண்டும்?
3 முதலாவது திறவுகோல் அன்பு. அக்கறைக்குரியவிதமாக, பைபிளில் வெவ்வேறு வகையான அன்பு அடையாளம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று, ஒருவர் பேரில் ஒருவர் வைத்திருக்கும் அனலான, தனிப்பட்ட நட்பு. அது நெருக்கமான நண்பர்களுக்கிடையே நிலவும் அன்பு. (யோவான் 11:3) மற்றொன்று, குடும்ப அங்கத்தினர்களுக்கிடையே வளரும் பாச அன்பு. (ரோமர் 12:10) மூன்றாவது, எதிர்பாலாரைச் சேர்ந்த நபர் ஒருவரிடமாக வைத்திருக்கும் காதல் அன்பு. (நீதிமொழிகள் 5:15-20) நிச்சயமாகவே, இந்த எல்லாவகையான அன்பையும் கணவனும் மனைவியும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் நான்காவது வகையான அன்பு ஒன்று இருக்கிறது, அது மற்றவற்றைக் காட்டிலும் அதிமுக்கியமானது.
4. நான்காவது வகையான அன்பு என்ன?
4 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூல மொழியில், இந்த நான்காவது வகையான அன்புக்கு அகாப்பே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சொல் 1 யோவான் 4:8-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதில் “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது. உண்மையில், “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” (1 யோவான் 4:19) ஒரு கிறிஸ்தவர் அப்படிப்பட்ட அன்பை முதலாவது யெகோவா தேவன் பேரிலும் பின்பு உடன் மானிடர்கள் பேரிலும் வளர்த்துக்கொள்கிறார். (மாற்கு 12:29-31) அகாப்பே என்ற சொல் எபேசியர் 5:2-லும்கூட பயன்படுத்தப்பட்டுள்ளது, அது சொல்கிறது: ‘கிறிஸ்து நமக்காகத் தம்மை . . . பலியாக ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.’ இந்த வகையான அன்பு தம்மை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களை அடையாளம் காண்பிக்கும் என்று இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், [அகாப்பே] அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) 1 கொரிந்தியர் 13:13-லும் அகாப்பே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே [அகாப்பே] பெரியது.”
5, 6. (அ) அன்பு ஏன் விசுவாசத்தைக் காட்டிலும் நம்பிக்கையைக் காட்டிலும் பெரியது? (ஆ) திருமணம் நிலைத்து நிற்பதற்கு ஏன் அன்பு உதவும் என்பதற்கான சில காரணங்கள் யாவை?
5 விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டிலும் எது இந்த அகாப்பே அன்பை மிகப் பெரியதாக ஆக்குகிறது? கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நியமங்களால்—சரியான நியமங்களால்—அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 119:105) அது கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து சரியானதையும் நலமானதையும் மற்றவர்களுக்குச் செய்வதில் காண்பிக்கப்படும் சுயநலமற்ற அக்கறை. அந்த அன்பைப் பெற்றுக்கொள்பவர் அதற்கு தகுதியுள்ளவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது காண்பிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட அன்பு திருமணமான துணைவர்கள் கீழ்க்கண்ட பைபிளின் புத்திமதியைப் பின்பற்றும்படி செய்விக்கிறது: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், யெகோவா உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13, NW) அன்புள்ள திருமணமான தம்பதிகள் ‘ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாய் [அகாப்பே] இருக்கின்றனர்; ஏனென்றால் அன்பு திரளான பாவங்களை மூடுகிறது.’ அந்த அன்பை அவர்கள் வளர்த்தும்கொள்கின்றனர். (1 பேதுரு 4:8) அன்பு தவறுகளை மூடிப்போடுகிறது என்பதைக் கவனியுங்கள். அது தவறுகளை அகற்றிவிடுவதில்லை, ஏனென்றால் எந்த அபூரண மனிதரும் தவறுசெய்வதிலிருந்து விடுபட்டவராய் இருக்கமுடியாது.—சங்கீதம் 130:3, 4; யாக்கோபு 3:2.
6 கடவுள் பேரிலுள்ள அன்பையும் ஒருவர் பேரில் ஒருவர் வைத்துள்ள அன்பையும் திருமணமான தம்பதிகள் வளர்த்துக்கொள்கையில், அவர்களுடைய திருமணம் நிலைத்து நிற்கும், மகிழ்ச்சியும் இருக்கும். ஏனென்றால் “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:8) அன்பு ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ உள்ளது. (கொலோசெயர் 3:14) நீங்கள் திருமணமானவராய் இருந்தால், நீங்களும் உங்களுடைய துணைவரும் இந்த வகையான அன்பை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்? கடவுளுடைய வார்த்தையை ஒன்றாக சேர்ந்து வாசியுங்கள், அதைக் குறித்து பேசுங்கள். இயேசு காண்பித்த அன்பின் முன்மாதிரியைப் படித்து அவரைப் பின்பற்றவும் அவரைப் போல் சிந்திக்கவும் செயல்படவும் முயற்சிசெய்யுங்கள். மேலும், கடவுளுடைய வார்த்தை கற்பிக்கப்படும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகுங்கள். கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனியாகிய இந்த உயர்ந்த வகையான அன்பை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய உதவிக்காக ஜெபியுங்கள்.—நீதிமொழிகள் 3:5, 6; யோவான் 17:3; கலாத்தியர் 5:22; எபிரெயர் 10:24, 25.
இரண்டாவது திறவுகோல்
7. மரியாதை என்றால் என்ன, திருமணத்தில் யார் மரியாதை காண்பிக்க வேண்டும்?
7 திருமணமான இரண்டு நபர்கள் ஒருவரையொருவர் உண்மையிலேயே நேசித்தார்களென்றால், அவர்கள் ஒருவர் பேரில் ஒருவர் மரியாதையையும்கூட வைத்திருப்பர். ஆகவே ஒரு மகிழ்ச்சியான திருமணத்திற்கு மரியாதை இரண்டாவது திறவுகோலாக உள்ளது. மரியாதை என்பது “பிறர் நலத்தை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு மதிப்பு கொடுப்பது” என்று விளக்கப்பட்டிருக்கிறது. கணவர்கள் மனைவிகள் உட்பட எல்லா கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுடைய வார்த்தை பின்வரும் புத்திமதியைக் கொடுக்கிறது: “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்: “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) மனைவி “புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கும்படி” புத்திமதி கொடுக்கப்படுகிறது. (எபேசியர் 5:33, NW) நீங்கள் யாரையாவது கனப்படுத்த விரும்பினால், அந்த நபரிடம் நீங்கள் தயவாய் இருக்கிறீர்கள், அந்த நபரின் கண்ணியத்துக்கும் அவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் மரியாதை காண்பிக்கிறீர்கள், நீங்கள் செய்யும்படி அவர் எதிர்பார்க்கும் நியாயமான எந்த வேண்டுகோளையும் நிறைவேற்ற தயாராயிருக்கிறீர்கள்.
8-10. திருமண இணைப்பை நிலையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்குவதற்கு மரியாதை உதவும் சில வழிகள் யாவை?
8 மகிழ்ச்சியான திருமணத்தை அனுபவிக்க விரும்புவோர் ‘தங்கள் சொந்த விஷயங்களில் மட்டும் தனிப்பட்ட அக்கறை காண்பிக்காமல், [தங்கள் துணைவர்களின்] தனிப்பட்ட அக்கறைகளையும் நோக்குவதன் மூலம்’ தங்கள் துணைவர்கள் பேரில் மரியாதை காண்பிக்கின்றனர். (பிலிப்பியர் 2:4, NW) அவர்கள் தங்களுக்கு நன்மையாய் இருப்பவற்றை மட்டுமே சிந்தித்துப் பார்ப்பதில்லை, அப்படி இருந்தால் அது சுயநலமானதாய் இருக்கும். மாறாக, அவர்கள் தங்கள் துணைவர்களுக்கும்கூட சிறந்ததாய் இருப்பவற்றை சிந்தித்துப் பார்க்கிறார்கள். உண்மையில், அவர்கள் தங்கள் துணைவர்களின் அக்கறைகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.
9 நோக்குநிலைகளில் உள்ள வித்தியாசத்தை ஒப்புக்கொள்வதற்கு மரியாதை திருமணமான தம்பதிகளுக்கு உதவிசெய்யும். இரண்டு நபர்கள் எல்லா காரியங்களிலும் ஒரேவிதமான எண்ணங்களை வைத்திருக்கும்படி எதிர்பார்ப்பது நியாயமானதல்ல. கணவனுக்கு முக்கியமானவையாய் இருப்பவை மனைவிக்கு அந்த அளவுக்கு முக்கியமானவையாய் இல்லாமல் இருக்கலாம். மனைவிக்கு விருப்பமாயிருப்பவை கணவனுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரின் கருத்துக்களும் தெரிவுகளும் யெகோவாவின் சட்டங்கள் மற்றும் நியமங்களின் வரம்புக்குள் இருக்கும் வரை, மற்றவர் அவற்றை மதிக்க வேண்டும். (1 பேதுரு 2:16; பிலேமோன் 14-ஐ ஒப்பிடுக.) மேலும், வெளிப்படையாக எல்லாருக்கும் முன்பாகவோ அல்லது தனிமையிலோ ஒருவரைப் பற்றி மதிப்புக் குறைவான குறிப்புகளையோ அல்லது கேலிப் பேச்சுகளையோ பேசக்கூடாது. இவ்வாறு ஒருவர் மற்றொருவருடைய கண்ணியத்திற்கு மதிப்புக்கொடுக்க வேண்டும்.
10 ஆம், கடவுள் பேரிலுள்ள அன்பும் ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள அன்பும் பரஸ்பர மரியாதையும் வெற்றிகரமான திருமணத்திற்கு இரண்டு முக்கியமான திறவுகோல்களாக உள்ளன. திருமண வாழ்க்கையின் அதிமுக்கியமான அம்சங்கள் சிலவற்றில் அவற்றை எவ்வாறு பொருத்தலாம்?
கிறிஸ்துவைப் போன்ற தலைமை வகிப்பு
11. வேதப்பூர்வமாக, திருமணத்தில் யார் தலைவர்?
11 ஒரு வெற்றிகரமான குடும்பத் தலைவனாவதற்குரிய பண்புகளோடு மனிதன் படைக்கப்பட்டான் என்று பைபிள் நமக்கு சொல்கிறது. அதன் காரணமாக, மனிதன் தன் மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் ஆவிக்குரிய மற்றும் உடல்சம்பந்தமான நலனின் பேரில் யெகோவாவுக்கு முன்பாக பொறுப்புள்ளவனாக இருப்பான். அவன் யெகோவாவின் சித்தத்தைப் பிரதிபலிக்கும் சமநிலையான தீர்மானங்களை எடுத்து, தெய்வீக நடத்தைக்கு ஒரு நல்ல முன்மாதிரியாய் இருக்க வேண்டும். “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” (எபேசியர் 5:22, 23) இருப்பினும், கணவனுக்கும் அவன்மீது அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு தலைவர் இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) ஞானமுள்ள ஒரு கணவன் தன் சொந்த தலைவராகிய கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம் தலைமை வகிப்பை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறான்.
12. கீழ்ப்படிதலைக் காண்பிப்பதிலும் தலைமை வகிப்பை பிரயோகிப்பதிலும் இயேசு என்ன சிறந்த முன்மாதிரியை வைத்தார்?
12 இயேசுவுக்கும்கூட தலைவர் ஒருவர் இருக்கிறார், அவர் யெகோவா, இயேசு அவருக்கு சரியானமுறையில் கீழ்ப்பட்டிருக்கிறார். இயேசு சொன்னார்: ‘எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறேன்.’ (யோவான் 5:30) என்னே ஒரு மிகச் சிறந்த உதாரணம்! இயேசு ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவராய்’ இருக்கிறார். (கொலோசெயர் 1:15) அவர் மேசியாவாக ஆனார். அவர் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சபைக்கு தலைவராகவும் கடவுளுடைய ராஜ்யத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவாகவும் எல்லா தேவதூதர்களுக்கு மேலாகவும் இருக்கிறார். (பிலிப்பியர் 2:9-11; எபிரெயர் 1:4) அப்படிப்பட்ட மிக உயர்வான ஸ்தானமும் மேன்மையான வாய்ப்புகளும் அவருக்கு இருந்தபோதிலும், மனிதராயிருந்தபோது இயேசு கொடூரமானவராகவோ, விட்டுக்கொடுக்காதவராகவோ அல்லது அளவுக்குமீறி அதிகாரத்தோடு கேட்பவராகவோ இருக்கவில்லை. அவர் கொடுங்கோலராக இருந்து, தம் சீஷர்கள் தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எப்போதும் அவர்களுக்கு நினைப்பூட்டிக் கொண்டேயிருக்கவில்லை. இயேசு அன்பானவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார், விசேஷமாக கொடுமையாய் நடத்தப்பட்டவர்களிடமாக அவர் அவ்வாறு இருந்தார். அவர் சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) அவருடன் கூட்டுறவு கொண்டிருந்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
13, 14. அன்பான கணவன் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றி தன் தலைமை வகிப்பை பிரயோகிப்பான்?
13 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை விரும்பும் கணவன் இயேசுவின் சிறப்பான பண்புகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஒரு நல்ல கணவன் கொடூரமாகவும் சர்வாதிகாரி போலவும் இருந்து, தன் மனைவியை அடக்கியாளுவதற்கு தலைமை வகிப்பை ஒரு லத்தியைப் போல் தவறாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவளை நேசித்து அவளை உயர்வாக மதிக்கிறான். இயேசு ‘மனத்தாழ்மையுள்ளவராய்’ இருந்தார் என்றால், கணவன் அவ்வாறு இருப்பதற்கு இன்னும் கூடுதலான காரணங்கள் உள்ளன. ஏனென்றால் அவன் இயேசுவைப் போல் இல்லாமல் தவறுகள் செய்கிறான். அவன் அவ்வாறு தவறு செய்கையில் தன் மனைவி அதைப் புரிந்துகொள்ளும்படி விரும்புகிறான். எனவே, “நான் செய்த தப்புக்காக வருந்துகிறேன்; நீ செய்தது சரி,” போன்ற சொற்கள் சொல்வதற்கு ஒருவேளை கடினமாய் இருந்தாலும், மனத்தாழ்மையுள்ள கணவன் தன் தவறுகளை ஒப்புக்கொள்கிறான். பெருமையும் பிடிவாதமுமுள்ள தலைமை வகிப்புக்கு பதிலாக அடக்கமும் மனத்தாழ்மையுமுள்ள தலைமை வகிப்புக்கு மரியாதை காண்பிப்பது மனைவிக்கு அதிக சுலபமானதாக இருக்கும். அதே போல், மரியாதையுள்ள மனைவியும் தான் தவறு செய்யும்போது கணவனிடம் மன்னிப்பு கேட்கிறாள்.
14 கடவுள் சிறப்பான பண்புகளோடு பெண்ணைப் படைத்தார். அவள் அப்பண்புகளை மகிழ்ச்சியான திருமணத்திற்கு உடனுதவி அளிப்பதற்கென்று பயன்படுத்தலாம். ஒரு ஞானமான கணவன் இதை மதித்துணர்ந்து, அவளை அடக்கி வைக்கமாட்டான். அநேக பெண்கள் மிகுதியான இரக்கம், மென்மையான உணர்வு போன்ற பண்புகளை இயல்பாகவே கொண்டிருக்கின்றனர். இப்பண்புகள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்கும் மானிட உறவுகளை அன்போடு வளர்ப்பதற்கும் தேவைப்படும் பண்புகளாய் இருக்கின்றன. பொதுவாக, வாழ்வதற்கு ஒரு இனிய இடமாக வீட்டை ஆக்குவதில் பெண் திறமைபெற்றவளாய் இருக்கிறாள். நீதிமொழிகள் அதிகாரம் 31-ல் விவரிக்கப்பட்டிருக்கும் ‘திறமைசாலியான மனைவி’ அநேக அருமையான பண்புகளையும் சிறப்பான திறமைகளையும் பெற்றிருந்தாள். அவளுடைய குடும்பம் அவற்றிலிருந்து முழுமையாக பயனடைந்தது. ஏன்? ஏனென்றால் அவளுடைய கணவனின் இருதயம் ‘அவள் பேரில் நம்பிக்கை’ வைத்திருக்கிறது.—நீதிமொழிகள் 31:10, 11, NW.
15. கணவன் எவ்வாறு கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் மரியாதையையும் தன் மனைவியிடம் காண்பிக்கலாம்?
15 சில கலாச்சாரங்களில், கணவனை ஒரு கேள்வி கேட்பதும்கூட அவமரியாதையானதாக கருதப்படுமளவிற்கு அவனுடைய அதிகாரத்துக்கு அளவுக்குமீறி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவன் தன் மனைவியை ஏறக்குறைய ஒரு அடிமையைப் போல் நடத்தக்கூடும். தலைமை வகிப்பை அப்படி தவறானமுறையில் கையாளுவது, தன் மனைவியோடு மட்டுமல்லாமல் கடவுளோடும்கூட ஒரு பலவீனமான உறவை விளைவிக்கிறது. (ஒப்பிடுக: 1 யோவான் 4:20, 21.) மறுபட்சத்தில், சில கணவர்கள் முன்நின்று வழிநடத்துவதை அசட்டை செய்துவிட்டு தங்கள் மனைவிகள் வீட்டில் ஆதிக்கம் செலுத்தும்படி அனுமதிக்கின்றனர். கிறிஸ்துவுக்கு சரியான விதத்தில் கீழ்ப்பட்டிருக்கும் கணவன் தன் மனைவியைச் சுயநலத்துக்காக பயன்படுத்துவதுமில்லை, அவளுடைய கண்ணியத்தைப் பறித்துப் போடுவதுமில்லை. மாறாக, அவன் இயேசுவின் சுய-தியாகமுள்ள அன்பைப் பின்பற்றி பவுல் கொடுத்த புத்திமதிக்கு ஏற்றபடி செயல்படுகிறான்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25, 27) கிறிஸ்து இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்கள் பேரில் அவ்வளவாக அன்பு காட்டியதால் அவர்களுக்காக மரித்தார். ஒரு நல்ல கணவன் அந்தச் சுயநலமற்ற மனநிலையைப் பார்த்து பின்பற்ற முயற்சி செய்து, அதிகாரத்துடன் வற்புறுத்திக் கேட்பதற்கு பதிலாக மனைவியின் நலனின் பேரில் அக்கறை காண்பிப்பான். கணவன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருந்து கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் மரியாதையையும் காண்பிக்கும்போது, அவனுடைய மனைவி அவனுக்கு தன்னைக் கீழ்ப்படுத்த உந்துவிக்கப்படுவாள்.—எபேசியர் 5:28, 29, 33.
மனைவிக்குரிய கீழ்ப்படிதல்
16. மனைவி தன் கணவனோடு கொண்டுள்ள உறவில் என்ன பண்புகளை வெளிக்காட்ட வேண்டும்?
16 ஆதாம் படைக்கப்பட்டு சில காலத்துக்குப் பின்பு, “தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.” (ஆதியாகமம் 2:18) கடவுள் ஏவாளை ‘நிறைவுசெய்பவளாக’ படைத்தார், போட்டியிடுபவளாக அல்ல. இரண்டு போட்டியிடும் கேப்டன்களை உடைய ஒரு கப்பலைப் போன்று இருப்பதற்கு திருமணம் ஏற்படுத்தப்படவில்லை. கணவன் அன்பான முறையில் தலைமை வகிப்பை கையாள வேண்டியவனாய் இருந்தான். மனைவியோ அன்பு, மரியாதை, மனமுவந்த கீழ்ப்படிதல் ஆகியவற்றை வெளிக்காட்ட வேண்டியவளாய் இருந்தாள்.
17, 18. மனைவி தன் கணவனுக்கு உண்மையிலேயே உதவியாளாக இருப்பதற்கு சில வழிகள் யாவை?
17 இருப்பினும், ஒரு நல்ல மனைவி வெறுமனே கீழ்ப்படிந்திருப்பதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்கிறாள். அவள் உண்மையிலேயே உதவிசெய்பவளாக இருக்க முயற்சிசெய்து, கணவன் எடுக்கும் தீர்மானங்கள் பேரில் அவனுக்கு ஆதரவாக இருக்கிறாள். அவனுடைய தீர்மானங்களை ஏற்றுக்கொள்கையில் இதைச் செய்வது நிச்சயமாகவே அவளுக்கு சுலபம். ஆனால் கணவனுடைய தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, அவள் அவனோடு ஒத்துழைத்து அவனுக்கு தரும் ஆதரவு, அவனுடைய தீர்மானம் வெற்றிகரமான விளைவை ஏற்படுத்துவதற்கு கூடுதலாக உதவக்கூடும்.
18 கணவன் ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருப்பதற்கு மனைவி மற்ற வழிகளில் உதவி செய்யலாம். அவனைக் குறைகூறுவதற்கு பதிலாக அல்லது அவன் அவளை ஒருபோதும் திருப்திசெய்யவே முடியாது என்று உணரவைப்பதற்கு பதிலாக, அவன் குடும்பத்தை முன்நின்று நடத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை அவள் போற்றலாம். தன் கணவனோடு நம்பிக்கையுள்ள விதத்தில் செயல்தொடர்பு கொள்வதில், ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி’ வெறும் அவளுடைய கணவனின் கண்களில் மட்டுமல்லாமல் ‘தேவனுடைய பார்வையிலும் விலையேறப்பெற்றது’ என்பதை அவள் நினைவில் வைக்க வேண்டும். (1 பேதுரு 3:3, 4; கொலோசெயர் 3:12) கணவன் விசுவாசியாக இல்லையென்றால் அப்போது என்ன? கணவன் விசுவாசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், “தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி” பைபிள் மனைவிகளை உற்சாகப்படுத்துகிறது. (தீத்து 2:4, 5) மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வருகையில், மனைவி ‘சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்’ அதை எடுத்துக்கூறினால், விசுவாசியாக இல்லாத புருஷன் தன் மனைவியின் நோக்குநிலைக்கு மரியாதை காண்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சில அவிசுவாசியான கணவர்கள் ‘தங்கள் மனைவிகளின் பயபக்தியோடுகூடிய கற்புள்ள நடக்கையை பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.’—1 பேதுரு 3:1, 2, 15, NW; 1 கொரிந்தியர் 7:13-16.
19. கடவுளுடைய சட்டத்தை மீறும்படி கணவன் மனைவியைக் கேட்டுக்கொண்டால் அப்போது என்ன செய்வது?
19 கடவுளால் தடைசெய்யப்பட்டிருக்கும் ஏதோவொன்றை செய்யும்படி கணவன் தன் மனைவியிடம் சொன்னால் என்ன செய்வது? அப்படி சொன்னால், கடவுளே அவளுடைய மிக உன்னதமான ஆட்சியாளர் என்பதை அவள் மனதில் வைக்க வேண்டும். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி அதிகாரிகள் அப்போஸ்தலரிடம் சொன்னபோது அப்போஸ்தலர் செய்த காரியத்தை அவள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறாள். அப்போஸ்தலர் 5:29 சொல்கிறது: “அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,” என்று சொன்னார்கள்.
நல்ல உரையாடல்
20. அன்பும் மரியாதையும் இன்றியமையாதவையாக இருக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்ன?
20 திருமணத்தின் மற்றொரு அம்சத்தில்—உரையாடலில்—அன்பும் மரியாதையும் இன்றியமையாதவை. அன்பான கணவன் தன் மனைவியின் வேலைகளைப் பற்றியும், அவளுடைய பிரச்சினைகளைப் பற்றியும், பல்வேறு விஷயங்களில் அவளுடைய எண்ணங்களைப் பற்றியும் அவளோடு கலந்து பேசுவான். இது அவளுக்குத் தேவை. தன் மனைவியோடு பேசுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டு அவள் சொல்வதை உண்மையிலேயே கவனித்துக் கேட்கும் ஒரு கணவன் அவள் பேரில் அன்பும் மரியாதையும் காட்டுகிறான். (யாக்கோபு 1:19) கணவர்கள் தங்களோடு பேசுவதற்கு வெகு குறைவான நேரத்தையே செலவழிக்கின்றனர் என்று சில மனைவிகள் குறைகூறுகின்றனர். அது வருந்தத்தக்கது. உண்மைதான், வேலைகள் நிறைந்த இந்தக் காலங்களில், கணவர்கள் வீட்டுக்கு வெளியே அநேக மணிநேரங்கள் வேலை செய்யக்கூடும், பொருளாதார நிலைமைகளின் காரணமாக சில மனைவிகள் வெளியே வேலை செய்யும் நிலைமையும் ஏற்படக்கூடும். ஆனால் திருமணமான தம்பதிகள் ஒருவர் மற்றவருக்கென நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அவர்கள் ஒருவர் மீதொருவர் சாராமல் வாழ்பவர்களாக ஆகிவிடுவார்கள். இந்நிலையில் அவர்கள் திருமண ஏற்பாட்டுக்கு வெளியே பரிவுகாட்டும் தோழமையை நாட ஆரம்பித்தால் அது வினைமையான பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடும்.
21. சரியான பேச்சு எவ்வாறு ஒரு திருமணத்தை மகிழ்ச்சியானதாக வைக்கும்?
21 மனைவிகளும் கணவர்களும் உரையாடும் விதம் முக்கியமானது. “இனிய சொற்கள் . . . ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளெஷதமுமாகும்.” (நீதிமொழிகள் 16:24) துணைவர் விசுவாசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பைபிள் புத்திமதி பொருந்துகிறது: “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக,” அதாவது நல்ல சுவையுள்ளதாக இருக்க வேண்டும். (கொலோசெயர் 4:6) ஒருவர் நாள்முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு திரும்புகையில் ஒருசில தயவான, பரிவிரக்கமுள்ள வார்த்தைகளை தன்னுடைய துணைவரிடமிருந்து கேட்பது மிகவும் விரும்பத்தக்கதாய் இருக்கும். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.” (நீதிமொழிகள் 25:11) குரலின் தொனியும் வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதும் அதிமுக்கியமானவை. உதாரணமாக, ஒருவர் எரிச்சலடைந்து அதிகார தோரணையில் துணைவரிடம், “கதவை மூடு!” என்று கத்தலாம். ஆனால், அமைதியாக புரிந்துகொள்ளும் தன்மையோடுகூடிய குரலில், “தயவுசெய்து கதவை மூடமுடியுமா?” போன்ற சொற்கள் எவ்வளவு ‘உப்பால் சாரமேறினவையாய்’ இருக்கும்.
22. நல்ல உரையாடலை காத்துவருவதற்கு என்ன மனநிலைகள் தம்பதிகளுக்கு தேவை?
22 கனிவோடு சொல்லும் வார்த்தைகளும், கருணை நிறைந்த பார்வைகளும் சைகைகளும், தயவு, புரிந்துகொள்ளுதல், மென்மை ஆகியவையும் இருக்கும்போது நல்ல உரையாடல் செழித்தோங்கும். நல்ல உரையாடலை காத்துவருவதற்கு கடுமையாக உழைப்பதன் மூலம், கணவன், மனைவி ஆகிய இருவருமே தங்கள் தேவைகளை தாராளமாக தெரியப்படுத்துவர். மேலுமாக, ஏமாற்றம் அல்லது மனவேதனை உண்டாகும் சமயங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும் உதவியும் அளிக்கும் ஊற்றுமூலங்களாக இருக்கலாம். “மனச்சோர்வுற்றிருப்பவர்களைத் தேற்றுங்கள்,” என்று கடவுளுடைய வார்த்தை ஊக்குவிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14, NW) கணவன் மனச்சோர்வுற்றிருக்கும் சமயங்களும் இருக்கும், மனைவி மனச்சோர்வுற்றிருக்கும் சமயங்களும் இருக்கும். அவர்கள் ‘ஆறுதலளிக்கும்விதத்தில் பேசி,’ ஒருவரையொருவர் கட்டியெழுப்பலாம்.—ரோமர் 15:2, NW.
23, 24. கருத்து வேறுபாடுகள் இருக்கையில் அன்பும் மரியாதையும் எவ்வாறு உதவும்? ஒரு உதாரணம் கொடுங்கள்.
23 அன்பையும் மரியாதையையும் வெளிக்காட்டும் திருமணமான தம்பதிகள் ஒவ்வொரு கருத்து வேறுபாட்டையும் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் ‘கசந்து கொள்ளாமல்’ இருப்பதற்கு கடுமையாக உழைப்பர். (கொலோசெயர் 3:19) “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” என்பதை இருவரும் மனதில் வைத்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 15:1) இதயத்திலிருந்து உணர்ச்சிகளைக் கொட்டும் துணைவரை சிறுமைப்படுத்தவோ அல்லது கண்டனம் செய்யாமலிருக்கவோ கவனமாயிருங்கள். மாறாக, அவருடைய நோக்குநிலையைக் குறித்து உட்பார்வை பெற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அப்படிப்பட்ட உணர்ச்சிக்குமுறல்களைக் கருதுங்கள். இரண்டு பேருமாக சேர்ந்து, கருத்து வேறுபாடுகளை சரிசெய்துகொண்டு முரண்பாடில்லாத முடிவுக்கு வாருங்கள்.
24 சாராள் ஒரு சமயம் தன் கணவனாகிய ஆபிரகாமிடம் ஒரு பிரச்சினைக்கான தீர்வை சிபாரிசு செய்த சமயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள், அது அவருடைய உணர்ச்சிகளோடு ஒத்திருக்கவில்லை. இருப்பினும், கடவுள் ஆபிரகாமிடம் சொன்னார்: “சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.” (ஆதியாகமம் 21:9-12) சாராள் சொன்னதை ஆபிரகாம் செய்தார், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். அதே போல், கணவன் தன் மனதில் வைத்திருப்பதற்கு வித்தியாசமான வேறு யோசனை ஒன்றை மனைவி எடுத்துக்கூறினால், அவன் குறைந்தபட்சம் அதைக் கவனித்துக் கேட்கவாவது வேண்டும். அதே சமயத்தில், மனைவியும் உரையாடலில் ஆதிக்கம் செலுத்தாமல் அவளுடைய கணவன் சொல்வதைக் கேட்க வேண்டும். (நீதிமொழிகள் 25:24) கணவனோ அல்லது மனைவியோ எல்லா சமயங்களிலும் தங்கள் சொந்த விருப்பத்தை எப்போதும் வற்புறுத்துவது அன்பற்றதும் மரியாதையற்றதுமாக இருக்கும்.
25. திருமண வாழ்க்கையின் மிக நெருக்கமான அம்சங்களில் நல்ல உரையாடல் எவ்வாறு மகிழ்ச்சிக்கு பங்களிக்கும்?
25 ஒரு தம்பதியின் பாலின உறவில்கூட நல்ல உரையாடல் முக்கியமானது. சுயநலமும் தன்னடக்கக்குறைவும் திருமணத்தில் உள்ள இந்த மிக நெருக்கமான உறவை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடும். பொறுமையோடு மனம் விட்டு தாராளமாகப் பேசுவது இன்றியமையாதது. ஒருவர் மற்றொருவரின் நலனை சுயநலமற்றவிதத்தில் நாடும்போது, பாலுறவு ஒரு வினைமையானப் பிரச்சினையாக இருப்பது அரிது. மற்ற விஷயங்களில் இருப்பதுபோல இதிலும், “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 7:3-5; 10:24.
26. ஒவ்வொரு திருமணத்திலும் இன்பங்களும் துன்பங்களும் இருந்தாலும், கடவுளுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பது எவ்வாறு திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியைக் கண்டடைய உதவும்?
26 கடவுளுடைய வார்த்தை என்னே ஒரு சிறந்த புத்திமதியை அளிக்கிறது! ஒவ்வொரு திருமணத்திலும் இன்பமும் துன்பமும் இருக்கும் என்பது உண்மைதான். பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் யெகோவாவின் சிந்தனைக்கு துணைவர்கள் தங்களை கீழ்ப்படுத்தி, நியமங்கள் பேரில் சார்ந்த அன்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் உறவை வைத்துக்கொண்டால், அவர்களுடைய திருமணம் நிலைத்துநிற்பதாயும் மகிழ்ச்சியாயும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். இவ்வாறு அவர்கள் ஒருவரையொருவர் கனப்படுத்துவது மட்டுமல்லாமல் திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனுக்கும் கனத்தைக் கொண்டுவருவார்கள்.