இரட்சிப்புக்காக தொடர்ந்து உழையுங்கள்!
“பிரியமானவர்களே, . . . உங்கள் இரட்சிப்புக்காக நடுக்கத்தோடும் பயத்தோடும் தொடர்ந்து உழையுங்கள்.”—பிலிப்பியர் 2:12, NW.
1, 2. தங்கள் வாழ்க்கை போக்கை கட்டுப்படுத்தவே முடியாது என்று நினைக்கும்படி அநேகரை வழிநடத்திய பிரபலமான கருத்துக்கள் யாவை?
“பிறப்பிலேயே நீங்கள் இப்படித்தானா?” சமீபத்தில் வெளிவந்த பிரபல பத்திரிகையின் அட்டையில் இக்கேள்வி மின்னியது. “குணநலன்கள், மனோபாவம், வாழ்க்கையில் நீங்கள் செய்யும் தெரிவுகள். இவை உங்கள் இரத்தத்திலேயே ஊறியிருக்கின்றன—புதிய கண்டுபிடிப்பு” என்ற வார்த்தைகள் அத்தலைப்பின் கீழே பளிச்சிட்டன. இத்தகைய செய்திகள் தங்கள் வாழ்க்கையை தங்களால் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும் என நினைக்கும்படி சிலரை தூண்டலாம்.
2 ஏதோவொரு வகையில் தங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருப்பதற்கு பெற்றோரின் வளர்ப்புமுறையும் ஆசிரியர்களின் கற்பிக்கும்முறையும் சரியாக இல்லாததே காரணமென சிலர் நினைக்கின்றனர். பெற்றோர் செய்த தவறுகளையே தாங்களும் செய்வதையும், மோசமான மனப்போக்கின்படி நடப்பதையும், யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாக ஆகிவிடுவதையும் தவிர்க்க முடியாது என எண்ணுகின்றனர். சுருங்கச் சொன்னால், தங்கள் வாழ்க்கையில் கெட்டதை தெரிந்தெடுத்துவிடுவதை தவிர்க்க முடியாது என எண்ணுகின்றனர். இப்படித்தான் பைபிள் கற்பிக்கிறதா? மதசார்புள்ள சிலர் பைபிள் விதியை கற்பிக்கிறதென அடித்துச் சொல்வதென்னவோ உண்மைதான். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் கடவுள் முன்பே தீர்மானித்துவிட்டார் என இந்தக் கோட்பாடு கற்பிக்கிறது.
3. நம் எதிர்காலத்திற்கு நாம்தான் உழைக்கவேண்டுமென்று பைபிள் எவ்வாறு உற்சாகப்படுத்துகிறது?
3 இந்த எல்லா கருத்துக்களிலும் இழையோடும் ஒரே செய்தி: நடப்பது எதுவும் உங்கள் கையில் இல்லை. இது மனச்சோர்வூட்டும் செய்தி அல்லவா? மனச்சோர்வு ஏற்பட்டாலே தொல்லைகள்தான். நீதிமொழிகள் 24:10 சொல்கிறது: “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.” ‘நம் இரட்சிப்புக்காக உழைக்க’ முடியும் என்பதை பைபிளிலிருந்து அறிவது உற்சாகமூட்டுகிறது. (பிலிப்பியர் 2:12, NW) நம்பிக்கையூட்டுகிற இந்த பைபிள் போதனையில் நம் நம்பிக்கையை எவ்வாறு வலுப்படுத்தலாம்?
நமக்குள் நாம் செய்யும் “கட்டும்” வேலை
4. தீக்கிரையாகாத பொருட்களால் கட்டும்படி 1 கொரிந்தியர் 3:10-15 கற்பிக்கிறபோதிலும், அது எதை அர்த்தப்படுத்துகிறதில்லை?
4 அப்போஸ்தலன் பவுல் 1 கொரிந்தியர் 3:10-15-ல் சொல்லும் உதாரணத்தைக் கவனியுங்கள். கிறிஸ்தவ கட்டும் வேலையைப் பற்றி அவர் சொல்கிறார்; அதில் உள்ள நியமம் ஊழியத்தில் மற்றவர்களை கட்டுவதற்கும், நம்மைநாமே கட்டுவதற்கும் பொருந்துகிறது. ஒருவர் யெகோவாவை சேவிப்பதற்கான தீர்மானமெடுத்து, கடைசி வரை உண்மையாக நிலைத்திருப்பாரா என்பதற்கு அவருக்கு கற்பித்தவர்தான் முழு பொறுப்பாளியா? இல்லை. கற்பிப்பவர் தன்னாலான மிகச்சிறந்த கட்டும் வேலையை செய்ய வேண்டுமென பவுல் வலியுறுத்தினார். ஆனால் முந்தைய கட்டுரையில் படித்தபடி, மாணவரால் அல்லது சீஷரால் இவ்விஷயத்தில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது என பவுல் சொல்லவில்லை. பவுலின் உதாரணம் மற்றவர்களை நாம் கட்டுவதில்தான் முக்கியத்துவம் வைக்கிறது. நம்மை கட்டுவதில் அல்ல. ஏனோதானோவென்ற கட்டட வேலை அழிந்தாலும்கூட கட்டுபவர் இரட்சிக்கப்படுகிறார் என்று பவுல் சொல்வதிலிருந்து இது தெளிவாகிறது. இருந்தாலும், பைபிள் சில சமயங்களில் இதே உருவக அணியை நம்மை கட்டுவதற்கும் பொருத்துகிறது.
5. கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ளே ‘கட்டும்’ வேலையைச் செய்யவேண்டுமென வேதவசனங்கள் எவ்வாறு காட்டுகின்றன?
5 உதாரணமாக, யூதா 20, 21-ஐ (NW) கவனியுங்கள்: “நீங்களோ, பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தின்மேல் உங்களைக் கட்டுங்கள், பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணுங்கள், கடவுளது அன்பில் நிலைத்திருங்கள்.” ‘கட்டுதல்’ என்பதற்கு பவுல் 1 கொரிந்தியர் 3-ம் அதிகாரத்தில் பயன்படுத்திய அதே கிரேக்க வார்த்தையைத்தான் யூதாவும் இங்கே பயன்படுத்துகிறார்; விசுவாசமெனும் அஸ்திவாரத்தின்மேல் நம்மை கட்டவேண்டும் என்பது அவருடைய குறிப்பு. தன் வீட்டை கன்மலையின்மேல் கட்டிய மனிதனைப் பற்றி இயேசு சொன்ன உவமையை லூக்கா பதிவு செய்தார்; கிறிஸ்தவ கட்டடத்தைப் பற்றிய உதாரணத்தில் ‘அஸ்திவாரம்’ என்பதற்கு பவுல் பயன்படுத்திய அதே கிரேக்க வார்த்தையை இவரும் பயன்படுத்துகிறார். (லூக்கா 6:48, 49) ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யுமாறு உடன் கிறிஸ்தவர்களுக்கு பவுல் புத்திமதி கொடுத்தபோது ‘அஸ்திவாரத்தின்மேல்’ உறுதியாக கட்டப்படுதல் என்ற உருவக அணியை பயன்படுத்துகிறார். ஆம், நாம் நமக்குள்ளே ‘கட்டும்’ வேலையைச் செய்கிறோம் என கடவுளுடைய வார்த்தை கற்பிக்கிறது.—எபேசியர் 3:15-19; கொலோசெயர் 1:23; 2:7, NW.
6. (அ) ஒவ்வொரு கிறிஸ்தவ சீஷரும் எவ்வாறு ஒருங்கிணைந்த கட்டடத் திட்டத்தால் உருவாக்கப்படுகிறார் என்பதை விளக்குங்கள். (ஆ) ஒவ்வொரு சீஷருக்கும் உள்ள பொறுப்பு என்ன?
6 ஒரு கிறிஸ்தவரைக் கட்டுவதென்பது தனி மனிதன் செய்யக்கூடிய ஒரு வேலையா? இப்போது ஒரு வீட்டைக் கட்ட நீங்கள் தீர்மானித்தீர்கள் என வைத்துக் கொள்வோம். பிளானுக்காக கட்டட கலைஞரிடம் செல்வீர்கள். நிறைய வேலையை நீங்களே செய்யலாமென நினைக்கிறீர்கள். என்றபோதிலும், உங்களுடன் வேலை செய்வதற்காக ஒரு கான்ட்ராக்டரை ஒப்பந்தம் செய்வீர்கள்; சிறந்த முறையில் கட்டுவதற்கு ஆலோசனையைக் கேட்பீர்கள். அவர் உறுதியான அஸ்திவாரம் போடுகிறார்; பிளானை புரிந்துகொள்வதற்கும், சிறந்த பொருட்களை வாங்குவதற்கும் என, கட்டடத்தைப் பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். அப்போது அவர் நல்ல கான்ட்ராக்டர் என நீங்களே பாராட்டுவீர்கள். ஆனால், அவருடைய ஆலோசனையை அசட்டைசெய்து, விலை குறைந்த அல்லது மட்டமான பொருட்களை வாங்கி, கட்டட கலைஞரின் பிளானுக்கு மாறாக உங்கள் இஷ்டப்படி கட்டுவீர்கள் என்றால் அப்போது என்ன ஆகும்? அது உங்களுக்கே தெரியும், வீடு இடிந்துவிழும். அதற்கு கான்ட்ராக்டரையோ கட்டட கலைஞரையோ குறைகூற முடியாது! அதைப்போலவே, ஒவ்வொரு கிறிஸ்தவ சீஷரும் ஒருங்கிணைந்த கட்டடத் திட்டத்தால் உருவானவரே. யெகோவாவே கைதேர்ந்த கட்டடக்கலைஞர். ‘தேவனுக்கு உடன்வேலையாளாய்’ இருந்து தன்னோடு பைபிளைப் படிப்பவருக்கு கற்பித்து அவரைக் கட்டுகிற உண்மையுள்ள கிறிஸ்தவரை அவர் ஆதரிக்கிறார். (1 கொரிந்தியர் 3:9) இருந்தாலும், இதில் பைபிளைப் படிப்பவரும் உட்பட்டிருக்கிறார். முடிவாக சொல்லவேண்டுமென்றால், தன் வாழ்க்கையை எப்படி நடத்துகிறார் என்பதற்கு அவரே பொறுப்பாளியாகிறார். (ரோமர் 14:12) சிறந்த கிறிஸ்தவ குணங்களை வளர்க்க விரும்பினால், அவற்றைப் பெறவும் தனக்குள் கட்டவும் அவர் கடினமாக உழைக்க வேண்டும்.—2 பேதுரு 1:5-8.
7. சில கிறிஸ்தவர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர், எது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்?
7 அப்படியென்றால், நம் மரபணுக்கள், சுற்றுச்சூழல், நம் ஆசிரியர்கள் கற்பிக்கும் தரம் ஆகியவை அர்த்தமற்றவை என இது குறிக்கிறதா? கண்டிப்பாக இல்லை. இவை ஒவ்வொன்றும் முக்கியமானவை, நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துபவை என கடவுளுடைய வார்த்தை ஒத்துக்கொள்கிறது. பாவமுள்ள, எதிர்மறையான மனப்பான்மைகள் அநேகம் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவற்றோடு போராடி ஜெயிப்பது மிகக் கடினம். (சங்கீதம் 51:5; ரோமர் 5:12; 7:21-23) பெற்றோரின் பயிற்றுவிப்பும் வீட்டுச் சூழலும் இளைஞரின்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம், அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். (நீதிமொழிகள் 22:6; கொலோசெயர் 3:21) யூத மதத் தலைவர்களின் போதனைகள் மற்றவர்களின்மீது தீய செல்வாக்கு செலுத்தின. அதற்காக இயேசு அவர்களைக் கண்டித்தார். (மத்தேயு 23:13, 15) இன்றும்கூட, இத்தகைய அம்சங்கள் நம் ஒவ்வொருவர்மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக, கடவுளுடைய மக்களில் சிலர் குழந்தைப்பருவத்தில் அனுபவித்த கஷ்டங்களின் காரணமாக பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். இவர்களிடம் கரிசனை காட்டி, புரிந்துகொள்ள வேண்டும். விதியின் காரணமாக பெற்றோரின் தவறுகளை தாங்களும் செய்வர், கடவுளுக்கு உண்மையற்றவராக நிரூபிப்பர் என பைபிள் கற்பிக்கிறதில்லை என்பதை அறிவது இவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தக் கருத்தை புரிந்துகொள்ள பண்டைய யூதாவின் அரசர்களுடைய உதாரணத்தை கவனிக்கலாம்.
யூதாவின் அரசர்கள்—தங்கள் சொந்த தெரிவை செய்தனர்
8. யோதாமுக்கு அவருடைய தகப்பன் வைத்த கெட்ட முன்மாதிரி என்ன, ஆனால் அவர் என்ன தெரிவைச் செய்தார்?
8 உசியா தன் 16-ம் வயதில் யூதாவின் அரசராக அரியணை ஏறினார். 52 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். தன் ஆட்சிகாலத்தின் பெரும் பகுதியில், ‘தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’ (2 இராஜாக்கள் 15:3) பிரமிக்கத்தக்க வகையில் யுத்தத்தில் தொடர்ச்சியான வெற்றிகளைக் கொடுப்பதன்மூலம் யெகோவா அவரை ஆசீர்வதித்தார். இருந்தாலும், வெற்றிகளால் உசியா ஆணவம் அடைந்தது வருத்தகரமானது. ஆசாரியர்கள் மட்டுமே செய்யவேண்டிய வேலையை அகங்காரத்தோடு செய்தார். அதாவது ஆலயத்தில் தூபபீடத்தின்மேல் தூபங்காட்டி யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்தார். கண்டிக்கப்பட்டபோதோ கோபமாக நடந்துகொண்டார். அதனால் அவர் சிறுமைப்படுத்தப்பட்டார்; குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டு தன் வாழ்நாளின் மீதி காலத்தை தனிமையில் கழித்தார். (2 நாளாகமம் 26:16-23) இதை எல்லாவற்றையும் பார்த்து அவருடைய மகன் யோதாம் எப்படி நடந்துகொண்டார்? தன் தகப்பனால் எளிதில் செல்வாக்கு செலுத்தப்பட்டு யெகோவா கொடுத்த புத்திமதிகளுக்கு கோபத்தை காட்டியிருக்கலாம். அங்கிருந்த மக்களும்கூட தீய செல்வாக்கை செலுத்தியிருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தவறான மத பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்கள். (2 இராஜாக்கள் 15:4) ஆனால் யோதாம் தன் சொந்த தெரிவைச் செய்தார். ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’—2 நாளாகமம் 27:2.
9. ஆகாஸ் நல்வழியில் செல்ல அவருக்கு உதவிபுரிந்தோர் யாவர், ஆனால் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது?
9 யோதாம் 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்; தன் ஆட்சிகாலம் முழுவதும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். எனவே அவருடைய மகன் ஆகாஸுக்கு உண்மையுள்ள தகப்பனின் மிகச் சிறந்த முன்மாதிரி இருந்தது. உண்மையுள்ள தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, ஓசியா, மீகா ஆகியோர் தேசத்தில் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களில் வாழ்வது அவருக்கு பெரும் ஆசீர்வாதமாக இருந்தது. இதுவும்கூட நல்வழியில் செல்வதற்கு அவருக்கு வாய்ப்பாக இருந்தது. இருந்தாலும் அவர் கெட்ட வழியை தெரிந்தெடுத்தார். ‘தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவில்லை.’ பாகாலின் சிலைகளை செய்து அவற்றை வணங்கினார். தன் மகன்களில் சிலரை பொய் கடவுட்களுக்கு தீயில் பலியிட்டார். சிறந்த வழிநடத்துதல்களின் மத்தியிலும், அவரால் நல்ல அரசராகவும் யெகோவாவின் ஊழியராகவும் இருக்கமுடியவில்லை.—2 நாளாகமம் 28:1-4.
10. ஆகாஸ் எப்படிப்பட்ட தகப்பன், அவருடைய மகன் எசேக்கியா தெரிந்தெடுத்த வழி என்ன?
10 மெய் வணக்கத்தின் கருத்தில், ஆகாஸைவிட மோசமான ஒரு தகப்பன் இருக்கவே முடியாது. ஆனால், அவர் மகன் எசேக்கியாவால் தன் தகப்பனை தெரிந்தெடுக்க முடியாதே! பாகாலுக்கு ஆகாஸ் பலிகொடுத்த இளம் மகன்கள் எசேக்கியாவின் உடன்பிறந்த சகோதரர்கள். இப்படிப்பட்ட படுமோசமான குடும்பச்சூழலால் பாதிக்கப்பட்டு யெகோவாவுக்கு உண்மையற்றவராக வாழ்வார் என விதிக்கப்பட்டிருந்தாரா? இல்லை. அதற்கு மாறாக எசேக்கியா மிகச்சிறந்த அரசர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவர் உண்மையுள்ளவராகவும், ஞானமானவராகவும் பிரியமானவராகவும் ஆனார். ‘கர்த்தர் அவரோடிருந்தார்.’ (2 இராஜாக்கள் 18:3-7) இளவரசன் எசேக்கியா அந்தச் சிறு வயதிலேயே 119-ம் சங்கீதத்தை எழுதினார் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. இதன்மூலம், “துயரத்தால் என் ஆத்துமா அமைதலற்று இருக்கிறது” என ஏன் எழுதினார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. (சங்கீதம் 119:28, NW) தனக்கு ஏற்பட்ட துயரங்களின் மத்தியிலும், எசேக்கியா கடவுளுடைய வார்த்தையின்படி தன் வாழ்க்கையை நடத்தினார். சங்கீதம் 119:105 சொல்கிறது: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” ஆம், எசேக்கியா தன் சொந்த வழியைத் தெரிந்தெடுத்தார்; அது சரியான வழியாக இருந்தது.
11. (அ) மனாசேக்கு தன் தகப்பனுடைய நல்ல வழிநடத்துதல் இருந்தும், யெகோவாவுக்கு எதிராக எந்தளவுக்கு கலகம் செய்தார்? (ஆ) தன் வாழ்க்கையின் அந்திம காலத்தில் மனாசே என்ன தெரிவைச் செய்தார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
11 யூதாவின் மிகச்சிறந்த அரசருக்கு படுமோசமான ஒரு மகன் பிறந்தார் என்பதை நம்பமுடியாவிட்டாலும், அதுதான் உண்மை. சிலை வணக்கம், ஆவியுலகக் கோட்பாடு, அதுவரை இல்லாத கட்டுக்கடங்கா வன்முறை ஆகியவற்றை எசேக்கியாவின் மகன் மனாசே ஆதரித்தார். தீர்க்கதரிசிகளின்மூலம், ‘கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினார்’ என பதிவு சொல்கிறது. (2 நாளாகமம் 33:10) ஏசாயா தீர்க்கதரிசியை மனாசே பதிலுக்கு கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டார் என யூத பாரம்பரியங்கள் தெரிவிக்கின்றன. (எபிரெயர் 11:37-ஐ ஒப்பிடுக.) அது உண்மையோ பொய்யோ தெய்வீக எச்சரிப்புகள் எதுவாயினும் அதற்கு மனாசே செவிகொடுக்க தவறினார். தன் தாத்தாவாகிய ஆகாஸைப் போலவே, தன் சொந்த குமாரரில் சிலரை பலியாக சுட்டெரித்தான். இருந்தாலும், இந்த கொடிய மனிதன் பிற்காலத்தில் தனக்கு ஏற்பட்ட கடுமையான பிரச்சினைகளால் திருந்தி தன் வழிகளை மாற்றிக் கொண்டான். (2 நாளாகமம் 33:1-6, 11-20) படுமோசமான வழியை தெரிந்தெடுத்த நபர் திருந்த முடியாதளவுக்கு போய்விடவில்லை என்பதை இவருடைய உதாரணம் காட்டுகிறது. அத்தகைய நபராலும் திருந்த முடியும்.
12. ஆமோனும் அவருடைய மகன் யோசியாவும் யெகோவாவுக்கு செய்யும் சேவையைத் தெரிந்தெடுப்பதில் எவ்வாறு முரண்பட்டிருந்தனர்?
12 மனாசேயின் மகன் ஆமோன் தன் தகப்பன் மனந்திரும்பியதிலிருந்து நிறைய படிப்பினையை கற்றிருக்கலாம். ஆனால் தவறான வழியைத் தெரிந்தெடுத்தார். ஆமோன், ‘மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தார்.’ இதனால் கடைசியில் கொலையும் செய்யப்பட்டார். மகிழ்ச்சிகரமாக, அவருடைய மகன் யோசியா அவருக்கு முற்றிலும் மாறானவராயிருந்தார். தன் தாத்தாவுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டார். அதற்கு இசைவாக தெரிவு செய்தார். ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோது அவருக்கு எட்டு வயது. 16 வயதில் யெகோவாவைத் தேடத் துவங்கினார்; அப்போதிருந்து முன்மாதிரியுள்ள, உண்மையுள்ள அரசராக தன்னை நிரூபித்தார். (2 நாளாகமம் 33:20–34:5) அவர் நல்ல வழியைத் தெரிந்தெடுத்தார்.
13. (அ) நாம் சிந்தித்த யூத அரசர்களின் உதாரணங்களிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? (ஆ) பெற்றோரின் பயிற்றுவிப்பு எந்தளவுக்கு முக்கியம்?
13 யூதேயாவின் ஏழு அரசர்களைப் பற்றி சுருக்கமாய் சிந்தித்ததிலிருந்து ஒரு வலிமைமிக்க பாடத்தைக் கற்கிறோம். அது என்ன பாடம்? மோசமான அரசர்களுக்கு சிறந்த மகன்கள் இருந்தனர். மறுபட்சத்தில் சிறந்த அரசர்களுக்கு மோசமான மகன்களும் இருந்தனர். (பிரசங்கி 2:18-21-ஐ ஒப்பிடுக.) இது பெற்றோருடைய பயிற்றுவிப்பே தேவையில்லை என அர்த்தப்படுத்துகிறதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை யெகோவாவுடைய வழியில் பயிற்றுவிக்கும்போது அவருக்கு உண்மையுள்ள ஊழியராக ஆகும் மிகச் சிறந்த வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்கின்றனர். (உபாகமம் 6:6, 7) இருந்தாலும், சில பிள்ளைகள் பெற்றோர் எவ்வளவுதான் முயற்சி எடுத்து பயிற்றுவிக்கிறபோதிலும் தவறான போக்கையே தெரிவுசெய்கின்றனர். வேறுசில பிள்ளைகளோ, பெற்றோரின் படுமோசமான முன்மாதிரியால் பாதிக்கப்படாமல் யெகோவாவை நேசிக்கவும் அவரை சேவிக்கவும் தெரிவு செய்கின்றனர். இத்தகைய பிள்ளைகளின் வாழ்க்கை கடவுளுடைய ஆசீர்வாதத்தால் வெற்றிமயமாகிறது. சில சமயங்களில், இந்த இரண்டில் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என நீங்கள் யோசிக்கிறீர்களா? உங்களாலும் சரியான தெரிவை செய்யமுடியும். இதற்கு யெகோவா தனிப்பட்டவிதமாகவே உறுதியளிக்கிறார். அதை இப்போது கவனியுங்கள்.
யெகோவா உங்களை நம்புகிறார்!
14. நம்மால் எவ்வளவு செய்யமுடியும் என்பதை நம்மைவிட யெகோவா நன்றாக புரிந்திருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்?
14 யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார். “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” என நீதிமொழிகள் 15:3 சொல்கிறது. தாவீது ராஜா யெகோவாவைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” (சங்கீதம் 139:16) நமக்குள்ளும் தப்பான எண்ணங்கள் வரலாம், அவற்றோடு நாம் போராடிக் கொண்டிருக்கலாம். அதுவும்கூட யெகோவாவுக்கு தெரியும். அவற்றை நாம் எப்படி பெற்றோம், பெற்றோரிடமிருந்தா, அல்லது நம்மால் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தாலா என்பதை அவர் அறிவார். அவற்றால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்பதை துல்லியமாக புரிந்துகொள்கிறார். உங்களால் எவ்வளவு செய்யமுடியும் என்பது உங்களைவிட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அவர் கருணை மிக்கவர். அளவுக்குமீறி நம்மிடமிருந்து ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டார்.—சங்கீதம் 103:13, 14.
15. (அ) மற்றவர்களால் படுமோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எது ஆறுதலளிக்கிறது? (ஆ) என்ன உரிமையைக் கொடுப்பதன் மூலம் யெகோவா நம்மை கௌரவப்படுத்துகிறார்?
15 மறுபட்சத்தில், யெகோவா நாம் சந்தர்ப்பவசத்தாலேயே எப்போதும் தவறு செய்கிறோம் என நினைக்கிறதில்லை. மற்றவர்கள் நமக்குக் கெட்டதைச் செய்திருக்கலாம், அத்தகைய வேண்டுமென்றே செய்யப்பட்ட புண்படுத்தும் நடக்கை அனைத்தையும் யெகோவா வெறுக்கிறார் என்பதிலிருந்து நாம் ஆறுதலைப் பெறலாம். (சங்கீதம் 11:5; ரோமர் 12:19) ஆனால் அதற்காக நாம் தவறான வழியைத் தெரிந்தெடுத்து அதில் செல்ல முயன்றால் அதன் கெட்ட பாதிப்புகளிலிருந்து அவர் நமக்கு அடைக்கலம் தருவாரா? நிச்சயமாகவே இல்லை. அவருடைய வார்த்தை சொல்கிறது: “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5) சரியானதைச் செய்வதற்கும் அவரைச் சேவிப்பதற்குமான உரிமையைக் கொடுப்பதன்மூலம் தம் அறிவுள்ள சிருஷ்டிகள் ஒவ்வொருவரையும் கௌரவப்படுத்துகிறார். மோசே இஸ்ரவேல் தேசத்திடம் சொன்னதுக்கு இசைவாக இது உள்ளது: ‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்.’ (உபாகமம் 30:19) நாம் சரியானதைச் செய்வோம் என்ற நம்பிக்கை யெகோவாவுக்கு இருக்கிறது. அது நமக்கு எப்படி தெரியும்?
16. ‘நம் இரட்சிப்பு நிறைவேற உழைப்பதில்’ நாம் எவ்வாறு வெற்றியடைய முடியும்?
16 அப்போஸ்தலன் பவுல் எழுதியதை கவனியுங்கள்: “பிரியமானவர்களே, . . . உங்கள் இரட்சிப்புக்காக நடுக்கத்தோடும் பயத்தோடும் தொடர்ந்து உழையுங்கள். ஏனெனில், கடவுளே உங்களுக்குள் செயலாற்றுகிறார். அவரே தம் திருவுளப்படி உங்களுக்கு விருப்பத்தையும் செயல்படுவதற்கான ஆற்றலையும் தருகிறார்.” (பிலிப்பியர் 2:12, 13, NW) “உழையுங்கள்” என்பதற்கு பயன்படுத்தப்பட்ட மூல கிரேக்க வார்த்தை ஏதோவொன்றை முழுமையடையச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. தவறு செய்யவோ அல்லது விசுவாசத்தை விட்டுவிடவோ கடவுள் யார் தலையிலும் எழுதிவைக்கவில்லை. யெகோவா தேவன் நமக்கு கொடுத்திருக்கும் வேலையை, அதாவது நம் இரட்சிப்புக்கு வழிநடத்தும் வேலையை நம்மால் நிறைவேற்ற முடியும் என்பதில் உறுதியாயிருக்கிறார். இல்லையென்றால் இத்தகைய வாக்கியத்தை எழுதும்படி சொல்லியிருக்க மாட்டார் அல்லவா? ஆனால் நம்மால் எப்படி வெற்றிபெற முடியும்? நம் சொந்த பலத்தால் இல்லை. நாம்தானே பலமுள்ளவர்களாக இருந்தால், “பயத்தோடும் நடுக்கத்தோடும்” செய்யுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக, யெகோவா ‘நமக்குள் செயலாற்றுகிறார்.’ அவருடைய பரிசுத்த ஆவி நம் மனதுக்குள்ளும் இருதயத்துக்குள்ளும் உழைக்கிறது. அது நமக்கு “விருப்பத்தையும் செயல்படுவதற்கான ஆற்றலையும்” தருகிறது. அந்த அன்பான உதவி இருக்கும்போது, வாழ்க்கையில் சரியான தெரிவை செய்து, அதற்கு இசைவாக வாழ முடியாது என்று நினைப்பதற்கு இன்னும் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ன? இல்லவே இல்லை!—லூக்கா 11:13.
17. நாம் என்ன மாற்றங்களை செய்ய முடியும், அதை செய்வதற்கு யெகோவா எவ்வாறு உதவுகிறார்?
17 மேற்கொள்ள வேண்டிய இடையூறுகள் நமக்கு வரலாம். நீண்ட காலமாக செய்துவந்த கெட்ட பழக்கங்களும் தீய செல்வாக்குகளும் நம் சிந்தனையை கெடுக்கலாம். இருந்தாலும், யெகோவாவுடைய ஆவியின் உதவியோடு அவற்றை நாம் வெல்லலாம்! கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியபடி, “அரண்களையும்”கூட தகர்த்தெறியக்கூடிய வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு உண்டு. (2 கொரிந்தியர் 10:4) உண்மையில், நமக்குள் முழுமையான மாற்றங்களை செய்வதற்கு யெகோவா உதவி செய்வார். “பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, . . . மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என அவருடைய வார்த்தை அறிவுறுத்துகிறது. (எபேசியர் 4:22-24) யெகோவாவின் ஆவி இத்தகைய மாற்றங்களைச் செய்ய நமக்கு உதவ முடியுமா? கண்டிப்பாக உதவு முடியும்! கடவுளுடைய ஆவி நமக்குள் கனிகளை பிறப்பிக்க முடியும்—நாம் அனைவருமே வளர்த்துக்கொள்ள விரும்புகிற நல்ல, விலைமதிக்க முடியாத குணங்களை வளர்க்க உதவும். இவற்றில் முதலாவதாக வருவது அன்பு.—கலாத்தியர் 5:22, 23.
18. புரிந்துகொள்ளக்கூடிய திறமையுள்ள ஒவ்வொரு மனிதனும் என்ன தெரிவைச் செய்யமுடியும், என்ன தீர்மானம் செய்ய இது நமக்கு உதவும்?
18 கடவுளுடைய ஆவி நமக்குள் அன்பு எனும் கனியைப் பிறப்பிக்க முடியும். இந்த உண்மை நமக்கு மிகப்பெரிய விடுதலை தருகிறது. யெகோவா தேவனின் அன்புக்கு வரையறையே இல்லை. நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26; 1 யோவான் 4:8) யெகோவாவுக்கான அன்பே எதிர்காலத்திற்கான திறவுகோலாக இருக்கிறது, நம் கடந்தகால வாழ்க்கைமுறையோ, படிப்படியாக வளர்த்துக்கொண்ட கெட்ட பழக்கங்களோ, தவறுசெய்வதற்கான சுதந்தரிக்கப்பட்ட மனப்பான்மையோ அல்ல. எனவே நாம் யெகோவாவை நேசிக்க தெரிவு செய்யலாம். அந்த அன்பே ஏதேனில் உண்மையுடன் இருப்பதற்கு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவைப்பட்டது. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பதற்கும் கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்கீழ் கடைசி சோதனையை ஜெயிப்பதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் இதே அன்பு தேவைப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 7:14; 20:5, 7-10) நம் சூழ்நிலைமைகள் எப்படியிருந்தாலும் இத்தகைய அன்பை நம் ஒவ்வொருவராலும் வளர்க்க முடியும். (மத்தேயு 22:37; 1 கொரிந்தியர் 13:13) யெகோவாவை அன்புகூரவும் நித்தியகாலத்துக்கும் அந்த அன்பில் கட்டவும் நாம் ஒவ்வொருவரும் தீர்மானமாயிருப்போமாக.
உங்கள் கருத்தென்ன?
◻ என்ன பிரபலமான கருத்துக்கள் தனிப்பட்ட பொறுப்பைக் குறித்த பைபிளின் நம்பிக்கையூட்டும் போதனையிலிருந்து முரண்படுகின்றன?
◻ தனக்குள் என்ன கட்டட வேலையை ஒவ்வொரு கிறிஸ்தவனும் செய்ய வேண்டும்?
◻ ஒவ்வொரு தனி நபரும் சொந்த வழியைத் தெரிந்தெடுக்க வேண்டுமென யூத அரசர்களின் உதாரணங்கள் எவ்வாறு காட்டுகின்றன?
◻ நம்மைச் சுற்றியுள்ள கெட்ட சூழ்நிலையின் மத்தியிலும் சரியான வழியை தெரிவு செய்யமுடியுமென்று யெகோவா நமக்கு எவ்வாறு உறுதியளிக்கிறார்?
[பக்கம் 15-ன் படம்]
உங்கள் எதிர்காலம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறதா?
[பக்கம் 17-ன் படம்]
தகப்பன் கெட்டவராக இருந்தபோதிலும் அரசனாகிய யோசியா கடவுளைச் சேவிக்கும் வழியை தெரிந்தெடுத்தார்