கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் அடக்கியாளுவது எவ்வாறு?
“கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் அடக்கியாளுவதாக, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்.”—கொலோசெயர் 3:15, NW.
1, 2. ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் “கிறிஸ்துவின் சமாதானம்” அடக்கியாளுவது எவ்வாறு?
அடக்கியாளுவது என்ற வார்த்தையே அநேகருக்கு பிடிக்காத ஒன்று. ஏனெனில் அது கட்டாயப்படுத்துவதையும் சுய லாபத்திற்காக சூழ்ச்சி செய்வதையுமே நம் மனதிற்கு கொண்டு வருகிறது. ஆகவே, “கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் அடக்கியாளுவதாக” என கொலோசெயிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு பவுல் கூறிய அறிவுரை சிலருக்கு நியாயமற்றதாக தொனிக்கலாம். (கொலோசெயர் 3:15, NW) தெரிவு செய்யும் சுயாதீனம் நமக்கு இருக்கிறதல்லவா? அப்படியிருக்க ஏதாவது ஒன்று அல்லது யாராவது ஒருவர் நம் இருதயங்களில் அடக்கியாள நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?
2 கொலோசெயர்கள் தங்கள் தெரிவு செய்யும் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்கும்படி பவுல் கூறவில்லை. கொலோசெயர் 3:15-ல் (NW) “அடக்கியாளுவதாக” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பதம் ஆட்ட நடுவரைக் குறிக்கும் வார்த்தையோடு சம்பந்தப்பட்டது; இவரே அக்கால போட்டி விளையாட்டுகளில் பரிசுகளை அளித்தார். ஆட்டத்தின் விதிகளுக்கு கட்டுப்படும் வரை போட்டியாளர்களுக்கு ஓரளவு சுயாதீனம் இருந்தது. ஆனாலும் ஆட்டத்தின் முடிவில், அதன் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் மூலம் போட்டியை வென்றவர் யார் என ஆட்ட நடுவரே தீர்மானிப்பார். அதைப் போலவே, நம் வாழ்க்கையிலும் அநேக தீர்மானங்களை செய்ய நமக்கு சுயாதீனம் உள்ளது. ஆனால் அவ்வாறு செய்கையில் கிறிஸ்துவின் சமாதானம் எப்போதும் ‘ஆட்ட நடுவராக’ அல்லது மொழிபெயர்ப்பாளர் எட்கர் ஜெ. குட்ஸ்பீட் மொழிபெயர்ப்பதைப் போல நம் இருதயங்களில் ‘கட்டுப்படுத்தும் சக்தியாக’ இருக்க வேண்டும்.
3. “கிறிஸ்துவின் சமாதானம்” என்றால் என்ன?
3 “கிறிஸ்துவின் சமாதானம்” என்றால் என்ன? நாம் கிறிஸ்துவின் சீஷர்களாகும்போதும் யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் நம்மில் அன்புகூர்ந்து, நம்மை அங்கீகரிக்கின்றனர் என்று அறியும்போதும் உண்டாகும் அமைதியை, உள்ளான சமாதானத்தை அது குறிக்கிறது. இயேசு தம் சீஷர்களைவிட்டு பிரிந்துசெல்லும் தறுவாயில் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் . . . உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” (யோவான் 14:27) கிறிஸ்துவுடைய சரீரத்தின் பாகமான உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்கள் ஏறக்குறைய 2,000 வருடங்களாக அந்த சமாதானத்தை அனுபவித்து வருகிறார்கள்; இன்று அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” அதை அனுபவிக்கிறார்கள். (யோவான் 10:16) அந்த சமாதானமே நம் இருதயங்களில் கட்டுப்படுத்தும் சக்தியாக இருக்க வேண்டும். நாம் பயங்கரமான சோதனையில் அகப்படுகையில், பயத்தினால் செயலிழந்து போகாமல் இருக்கவும் அளவுக்கதிகமாக கவலைப்படாமல் இருக்கவும் அது நமக்கு உதவும். நாம் அநீதியை எதிர்ப்படுகையிலும், கவலையில் சிக்கிக்கொள்கையிலும், பிரயோஜனமற்றவர்களாக உணருகையிலும் இது எவ்வாறு உதவும் என்பதை பார்க்கலாம்.
அநீதியை எதிர்ப்படுகையில்
4. (அ) இயேசு எவ்வாறு அநீதியை எதிர்ப்பட்டார்? (ஆ) அநீதியை எதிர்ப்பட்ட போதிலும் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றனர்?
4 “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறன்” என சாலொமோன் ராஜா கூறினார். (பிரசங்கி 8:9) இந்த வார்த்தைகள் உண்மை என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் பரலோகத்தில் இருக்கையில், மனிதர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் இழைக்கும் படுமோசமான அநீதிகளை பார்த்தார். பூமியில் இருக்கையில், பாவக்கறைபடியாத அவர் தேவதூஷணம் சொன்னதாக பழிதூற்றப்பட்டு, குற்றவாளி போல் கொலை செய்யப்பட்டபோது படுமோசமான அநீதியை நேரடியாக எதிர்ப்பட்டார். (மத்தேயு 26:63-66; மாற்கு 15:27) இன்றும் அநீதி எங்கும் நிறைந்துள்ளது. உண்மை கிறிஸ்தவர்கள் “சகல ஜனங்களாலும் பகைக்கப்படு”வதால் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. (மத்தேயு 24:9) அவர்கள் நாசி சித்திரவதை முகாம்களிலும் சோவியத் கட்டாய உழைப்பு முகாம்களிலும் பயங்கரமான துன்பங்களை அனுபவித்த போதிலும், கும்பல் தாக்குதல்கள், பொய் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை எதிர்ப்பட்ட போதிலும் உறுதியாக நிலைத்திருக்க கிறிஸ்துவின் சமாதானமே அவர்களுக்கு உதவியது. அவர்கள் இயேசுவை பின்பற்றினர்; அவரைப் பற்றி இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”—1 பேதுரு 2:23.
5. சபையில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் அநீதியைக் கேள்விப்படுகையில் நாம் முதலில் எதை சிந்திக்க வேண்டும்?
5 அவற்றோடு ஒப்பிட இது அற்பமானதே என்றாலும், கிறிஸ்தவ சபைக்குள் ஒருவர் தவறாக நடத்தப்பட்டதாக நாம் நினைக்கலாம். அந்த சந்தர்ப்பங்களில், பின்வருமாறு எழுதிய பவுலைப் போல நாமும் உணரலாம்: “ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?” (2 கொரிந்தியர் 11:29) அப்போது நாம் என்ன செய்யலாம்? ‘உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதா?’ என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அநேக சமயங்களில் நமக்கு அனைத்து உண்மைகளும் தெரியாது. எல்லாம் தெரிந்ததாக கூறும் ஒருவரின் பேச்சைக் கேட்டு நாம் கொதித்தெழலாம். “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்” என நல்ல காரணத்தோடுதான் பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 14:15) ஆகவே, நாம் கவனமாயிருக்க வேண்டும்.
6. சபைக்குள் அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தால் நாம் எவ்வாறு பிரதிபலிக்கலாம்?
6 ஆனால் ஒருவேளை நமக்கே அநீதி இழைக்கப்பட்டதாய் உணர்ந்தால்? கிறிஸ்துவின் சமாதானத்தை தன் இருதயத்தில் கொண்டுள்ளவர் எவ்வாறு நடந்துகொள்வார்? நமக்கு எதிராக தவறு செய்ததாக நினைப்பவரிடம் பேச வேண்டிய அவசியத்தை நாம் உணரலாம். அதற்கு பிறகு, அதை அனைவரிடமும் சொல்லிக்கொண்டில்லாமல், யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்லிவிட்டு நீதி செய்யப்படும்படி அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு இருப்பதே சிறந்ததல்லவா? (சங்கீதம் 9:10; நீதிமொழிகள் 3:5) அதன் பிறகு, அந்த விஷயத்தை நம் இருதயத்திலேயே தீர்த்துக்கொண்டு ‘அமர்ந்திருப்பதே’ சிறந்தது என நாம் உணரலாம். (சங்கீதம் 4:4) அநேக சமயங்களில் பின்வருமாறு கூறிய பவுலின் அறிவுரை பொருந்தும்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.
7. சகோதரர்களோடு உள்ள உறவுகளில் நாம் எப்போதுமே எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?
7 என்ன செய்தாலும் சரி நிகழ்ந்ததை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம்முடைய பிரதிபலிப்பை கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அநீதி என நாம் உணரும் காரியத்திற்கு சமநிலை இழந்து செயல்பட்டால், அந்த அநீதியைவிட அதுவே நம் சமாதானத்தை வெகுவாக குலைத்துப் போடலாம். (நீதிமொழிகள் 18:14) நாம் இடறலடைந்து, நியாயம் வழங்கப்பட்டதாக நாம் உணரும் வரை சபையோடுள்ள தொடர்புகளையே துண்டித்துக்கொள்ளலாம். யெகோவாவின் சட்டங்களை நேசிப்பவர்களுக்கு “இடறலில்லை” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 119:165) நாம் அனைவருமே எப்போதாவது அநீதியை எதிர்ப்படுகிறோம் என்பதே உண்மை. ஆனால் அப்படிப்பட்ட வருத்தகரமான அனுபவங்கள் யெகோவாவை சேவிப்பதிலிருந்து நம்மை தடைசெய்ய அனுமதிக்கக்கூடாது. அதற்கு பதிலாக, கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் அடக்கியாளுவதாக.
கவலையில் சிக்கிக்கொள்கையில்
8. கவலை ஏற்படுத்தும் காரியங்களில் சில யாவை, அவை எதில் விளைவடையலாம்?
8 இந்தக் “கடைசி நாட்களில்” கவலை நம் வாழ்க்கையின் நிஜமான ஒரு பாகமாகும். (2 தீமோத்தேயு 3:1) “என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்” என இயேசு கூறியது உண்மையே. (லூக்கா 12:22) ஆனால், பொருள் சம்பந்தமான கவலையே எல்லா கவலைகளுக்கும் காரணமல்ல. சோதோமின் சீர்கெட்ட ஒழுக்கமே லோத்துவின் ‘வருத்தத்திற்கு’ காரணம். (2 பேதுரு 2:7) “எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை” பவுலை நெருக்கியது. (2 கொரிந்தியர் 11:28) இயேசு அந்தளவுக்கு வேதனைப்பட்டதால்தான் அவரது மரணத்திற்கு முந்தின இரவு “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” (லூக்கா 22:44) ஆகவே, எல்லா கவலைகளுமே பலவீனமான விசுவாசத்தின் அத்தாட்சிகள் அல்ல. கவலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது கடுமையாக, நீண்ட காலம் தொடர்ந்தால் நாம் சமாதானத்தை இழந்துவிடுவோம். யெகோவாவை சேவிப்பதில் உட்பட்டுள்ள பொறுப்புகளை கையாள முடியாதென உணரும் அளவிற்கு கவலை சிலரை விழுங்கிவிட்டிருக்கிறது. “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்” என பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 12:25) ஆகவே, கவலை நம்மை ஆட்டிப்படைத்தால் நாம் என்ன செய்யலாம்?
9. கவலையை குறைக்க எடுக்கக்கூடிய நடைமுறையான சில நடவடிக்கைகள் யாவை, ஆனால் கவலைக்கான என்ன காரணங்களை நீக்க முடியாது?
9 சில சந்தர்ப்பங்களில் நாமே நடைமுறையான சில நடவடிக்கைகளை எடுக்கலாம். நம்முடைய கவலைக்கு உடல்நல பிரச்சினைகள் காரணமாக இருந்தால் அதை உடனடியாக கவனிப்பதே ஞானமானது; என்றாலும், இந்த விஷயங்கள் தனிப்பட்டவரின் தீர்மானத்திற்குரியவை.a (மத்தேயு 9:12) அநேக பொறுப்புகள் காரணமாக நாம் கவலை அடைந்தால் அவற்றுள் சிலவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கலாம். (யாத்திராகமம் 18:13-23) ஆனால், பெற்றோர்களைப் போல பகிர்ந்துகொடுக்க முடியாத பெரும் பொறுப்புகளை உடையவர்கள் என்ன செய்யலாம்? எதிர்க்கும் மணத்துணையோடு வாழும் கிறிஸ்தவர் என்ன செய்வது? படுமோசமான பொருளாதார சூழ்நிலையில் அல்லது யுத்தம் நடைபெறும் இடங்களில் வசிக்கும் குடும்பங்கள் எவ்வாறு சமாளிப்பது? இந்த காரிய ஒழுங்குமுறையில் இருக்கும்வரை கவலைக்கான எல்லா காரணங்களையும் நீக்க முடியாது என்பது தெளிவானதே. இருந்தாலும், கிறிஸ்துவின் சமாதானத்தை நம் இருதயங்களில் காத்துக்கொள்ள முடியும். எப்படி?
10. என்ன இரண்டு வழிகளில் ஒரு கிறிஸ்தவன் தன் கவலையை போக்க முடியும்?
10 கடவுளுடைய வார்த்தையில் ஆறுதலை கண்டடைவது ஒரு வழி. “என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது” என தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 94:19) யெகோவா தரும் “ஆறுதல்கள்” பைபிளில் உள்ளன. ஏவப்பட்ட அந்த புத்தகத்தை தவறாமல் படிப்பது கிறிஸ்துவின் சமாதானத்தை நம் இருதயங்களில் காத்துக்கொள்ள உதவும். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 55:22) அதைப் போலவே, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:6, 7) உண்மை மனதோடு தவறாமல் ஜெபம் செய்வது நம் சமாதானத்தைக் காத்துக்கொள்ள உதவும்.
11. (அ) ஜெபம் செய்வதில் இயேசு எவ்வாறு நல்ல முன்மாதிரி வைத்தார்? (ஆ) நாம் ஜெபத்தை எவ்வாறு கருத வேண்டும்?
11 இந்த விஷயத்தில் இயேசு மிகச் சிறந்த முன்மாதிரி. சில சந்தர்ப்பங்களில், தம் பரலோக தகப்பனோடு பல மணிநேரம் ஜெபத்தில் பேசிக் கொண்டிருந்தார். (மத்தேயு 14:23; லூக்கா 6:12) படுமோசமான சோதனையையும் சகித்திருக்க அவருக்கு உதவியது ஜெபமே. அவர் மரிப்பதற்கு முந்தின இரவு அவரது துயரம் உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது என்ன செய்தார்? அவர் “அதிக ஊக்கத்தோடே” ஜெபம் பண்ணினார். (லூக்கா 22:44) ஆம், கடவுளின் பரிபூரண குமாரன் ஜெப சிந்தையுள்ளவராக இருந்தார். அப்படியிருக்க, அவரை பின்பற்றும் அபூரணர்களாகிய நாம் ஜெபிக்கும் பழக்கத்தை எவ்வளவு அதிகமாய் வளர்த்துக்கொள்ள வேண்டும்! “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்” என இயேசு தம் சீஷர்களுக்கு கற்பித்தார். (லூக்கா 18:1) ஜெபம் என்பது நம்மை நாமே அறிந்திருப்பதைவிட நம்மைப் பற்றி நன்றாக அறிந்தவரோடு கொள்ளும் உண்மையான, அத்தியாவசியமான பேச்சுத் தொடர்பாகும். (சங்கீதம் 103:14) கிறிஸ்துவின் சமாதானத்தை நம் இருதயங்களில் காக்க வேண்டுமென்றால், நாம் “இடைவிடாமல் ஜெபம் பண்[ண]” வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:17.
நமது குறைபாடுகள் மீது வெற்றி கொள்ளுதல்
12. என்ன காரணங்கள் நிமித்தமாக தங்கள் சேவை குறைவுபடுவதாக சிலர் நினைக்கலாம்?
12 யெகோவா தமது ஊழியர்கள் ஒவ்வொருவரையும் மதிப்பு மிக்கவர்களாக கருதுகிறார். (ஆகாய் 2:7, NW அடிக்குறிப்பு) ஆனாலும் இதை ஏற்றுக்கொள்வது அநேகருக்கு கடினமாக இருக்கிறது. வயதாகிக்கொண்டே போவது, குடும்ப உத்தரவாதங்கள் அதிகரிப்பது அல்லது உடல்நிலை மோசமாவது போன்றவற்றால் சிலர் உற்சாகமிழந்து போகலாம். மற்றவர்கள் மோசமான வாழ்க்கை சூழலிலிருந்து வருவதால் குறைபாடுகள் இருப்பதாக நினைக்கலாம். இன்னும் சிலர் கடந்த கால பாவங்களை நினைத்து, யெகோவா தங்களை மன்னிக்கவே மாட்டார் என அமைதியிழந்து தவிக்கலாம். (சங்கீதம் 51:3) இப்படிப்பட்ட உணர்ச்சி போராட்டங்களை எப்படி சமாளிப்பது?
13. குறைபாடுள்ளவர்களாக உணருபவர்களுக்கு என்ன வேதப்பூர்வ ஆறுதல் உள்ளது?
13 கிறிஸ்துவின் சமாதானம், யெகோவாவின் அன்பை நமக்கு உறுதியளிக்கும். நாம் செய்வதை மற்றவர்களோடு ஒப்பிட்டுத்தான் நமது மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என இயேசு கூறவேயில்லை என்பதை சிந்தித்து பார்ப்பதன் மூலம் இழந்த சமாதானத்தை நம் இருதயங்களில் மறுபடியும் பெறலாம். (மத்தேயு 25:14, 15; மாற்கு 12:41-44) என்றாலும் அவர் உத்தமத்தன்மையை வலியுறுத்தினார். “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என அவர் சீஷர்களிடம் கூறினார். (மத்தேயு 24:13) மானிடர்கள் இயேசுவை “அசட்டை” செய்தனர் என்றாலும் பிதா தம்மிடம் அன்புகூருகிறார் என்பதில் அவருக்கு துளியும் சந்தேகம் இருக்கவில்லை. (ஏசாயா 53:3; யோவான் 10:17) தம்முடைய சீஷர்களும் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்பதை அவர்களிடம் கூறினார். (யோவான் 14:21) இதை வலியுறுத்த இயேசு இவ்வாறு கூறினார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 10:29-31) யெகோவாவின் அன்புக்கு எப்பேர்ப்பட்ட கனிவான உறுதியளிப்பு!
14. யெகோவா நம் ஒவ்வொருவரையும் மதிப்புள்ளவர்களாக கருதுகிறார் என்பதற்கு என்ன உறுதி நமக்குள்ளது?
14 “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்றும் இயேசு கூறினார். (யோவான் 6:44) இயேசுவைப் பின்பற்ற யெகோவா நம்மை இழுத்திருப்பதால் நாம் இரட்சிப்படைய விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளதல்லவா? இயேசு தம் சீஷர்களிடம், “இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் [“என்,” NW] பிதாவின் சித்தமல்ல” என்று கூறினார். (மத்தேயு 18:14) ஆகவே, நீங்கள் முழு இருதயத்தோடு சேவை செய்தால் உங்கள் நற்கிரியைகளை குறித்து மேன்மைபாராட்டலாம். (கலாத்தியர் 6:4) முன்பு செய்த தவறுகள் உங்களை வாட்டி வதைத்தால், உண்மையில் மனந்திரும்புகிறவர்களை யெகோவா மன்னிக்கிறதற்குத் “தயை பெருத்திருக்கிறார்” என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். (ஏசாயா 43:25; 55:7) வேறு எந்த காரணத்தின் நிமித்தமாவது நீங்கள் உற்சாகமிழந்திருந்தால், “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்பதை நினைவில் வையுங்கள்.—சங்கீதம் 34:18.
15. (அ) சாத்தான் நமது சமாதானத்தை பறிக்க எவ்வாறு முயலுகிறான்? (ஆ) நாம் யெகோவாவின் மீது என்ன நம்பிக்கை வைக்கலாம்?
15 உங்களுடைய சமாதானத்தை பறிக்க வேண்டுமென்று சாத்தானுக்கு கொள்ளை ஆசை. நாம் அனைவரும் எதிர்த்து போராடுகிற சுதந்தரிக்கப்பட்ட பாவத்திற்கு அவனே மூலகாரணன். (ரோமர் 7:21-24) நீங்கள் அபூரணராதலால் கடவுளுக்கு செய்யும் உங்கள் சேவை ஏற்றுக்கொள்ளப்படாது என்ற உணர்வை ஏற்படுத்தவே அவன் முயலுகிறான். உங்களை உற்சாகமிழக்கச் செய்ய சாத்தானை அனுமதிக்காதீர்கள்! அவனுடைய தந்திரங்களை அறிந்திருங்கள், சகித்திருக்க உறுதியாய் இருப்பதற்கு அந்த அறிவே உங்களுக்கு உதவுவதாக. (2 கொரிந்தியர் 2:11; எபேசியர் 6:11-13) அதோடு, “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்பதை மறந்துவிடாதீர்கள். (1 யோவான் 3:20) யெகோவா நம்முடைய குறைகளை மட்டுமே பார்த்துக்கொண்டில்லை. நமது உள்நோக்கங்களையும் தீர்மானங்களையும்கூட அவர் பார்க்கிறார். ஆகவே, சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதலளிப்பதாக: “கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.”—சங்கீதம் 94:14.
கிறிஸ்துவின் சமாதானத்தில் ஐக்கியப்படுதல்
16. சகித்திருக்க கடுமையாக முயலுகையில் என்ன கருத்தில் நாம் தனிமையில் இல்லை?
16 நாம் ‘ஒரே சரீரமாக அழைக்கப்பட்டிருப்பதால்’ கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் அடக்கியாள அனுமதிக்க வேண்டும் என பவுல் எழுதினார். இன்று மீந்திருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் போலவே பவுல் கடிதம் எழுதிய அந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் சரீரத்தின் பாகமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” ‘ஒரே மேய்ப்பனாகிய’ இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தில் அவர்களோடு ‘ஒரே மந்தையாக’ இணைக்கப்பட்டுள்ளனர். (யோவான் 10:16) இந்த “மந்தை”யைச் சேர்ந்த, உலகமுழுவதிலும் உள்ள லட்சக்கணக்கானோர் கிறிஸ்துவின் சமாதானம் தங்கள் இருதயங்களில் அடக்கியாள அனுமதிக்கின்றனர். நாம் தனிமையில் இல்லை என்ற அறிவே சகித்திருக்க நமக்கு உதவும். பேதுரு இவ்வாறு எழுதினார்: “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு [சாத்தானுக்கு] எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.”—1 பேதுரு 5:9.
17. கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் அடக்கியாள அனுமதிக்க நமக்கு என்ன காரணங்கள் உள்ளன?
17 ஆக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் முக்கியமான கனியாகிய சமாதானத்தை அனைவரும் தொடர்ந்து வளர்ப்போமாக. (கலாத்தியர் 5:22, 23) யெகோவாவுக்கு முன்பாக கறையற்றவர்களும், பிழையற்றவர்களும், சமாதானம் பண்ணுகிறவர்களுமாய் காணப்படுகிறவர்கள், நீதி வாசமாயிருக்கும் பூங்காவனமான பூமியில் நித்திய ஜீவன் என்ற ஆசீர்வாதத்தை முடிவில் பெறுவர். (2 பேதுரு 3:13, 14) கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் அடக்கியாள அனுமதிக்க நமக்கு நல்ல காரணங்கள் உள்ளன.
[அடிக்குறிப்பு]
a சில சமயங்களில், மன உளைச்சல் போன்ற மருத்துவ காரணங்களால் கவலை ஏற்படலாம் அல்லது அதிகரிக்கலாம்.
நினைவுகூர முடிகிறதா?
• கிறிஸ்துவின் சமாதானம் என்றால் என்ன?
• அநீதியை எதிர்ப்படுகையில் கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் எவ்வாறு அடக்கியாளும்?
• கவலையை சகித்திருக்க கிறிஸ்துவின் சமாதானம் நமக்கு எவ்வாறு உதவும்?
• பிரயோஜனமற்றவர்களாக உணருகையில் கிறிஸ்துவின் சமாதானம் நமக்கு எவ்வாறு ஆறுதல் அளிக்கும்?
[பக்கம் 15-ன் படம்]
குற்றஞ்சாட்டியவர்களுக்கு முன்பாக இயேசு தம்மை யெகோவாவுக்கு ஒப்புவித்தார்
[பக்கம் 16-ன் படம்]
ஓர் அன்பான தகப்பனின் கனிவான அரவணைப்பைப் போல, யெகோவாவின் ஆறுதல்கள் நம் கவலையின் வேதனையை தணிக்கலாம்
[பக்கம் 18-ன் படம்]
சகிப்புத்தன்மையே கடவுளுக்கு முன்பாக அதிமுக்கியம்