மத நம்பிக்கையில் பிளவுபட்ட குடும்பத்தில் தெய்வீக கீழ்ப்படிதல்
“சரீரப்பிரகாரமான எந்தத் தாக்குதலையும்விட அது அதிக வேதனைதருவதாய் இருக்கிறது. . . . என் உடல் முழுவதும் காயப்பட்டிருப்பது போல நான் உணருகிறேன், ஆனாலும் யாரும் அதைப் பார்க்க முடியாது.” “சிலசமயங்களில் நான் என்னுடைய வாழ்க்கையைக் குறித்து அத்தனை ஏமாற்றமாக உணருவதால் அதைச் சமாளிக்க முயற்சிசெய்வதை கைவிட்டுவிட அல்லது வீட்டைவிட்டே வெளியேறிவிட விரும்புகிறேன்.” “சிலசமயங்களில் என்னால் சரியாகவே சிந்திக்க முடிவதில்லை.”
உணர்ச்சிகள் நிறைந்த இந்த வார்த்தைகள் மனமுறிவையும் தனிமை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. வாய்ச்சொல்லால் துர்ப்பிரயோகம்—குற்றச்சாட்டுகள், மிரட்டல்கள், இழிவுசெய்யும் பெயர்களால் அழைத்தல், மெளனமாகவே இருந்து அசட்டைசெய்தல் போன்ற வாய்ச்சொல்லால் தாக்கப்பட்ட நபர்களிடமிருந்தும், துணைவர்களாலும் குடும்ப அங்கத்தினர்களாலும் சரீரப்பிரகாரமாய் துர்ப்பிரயோகம் செய்யப்படும் ஆட்களிடமிருந்தும் இவ்வார்த்தைகள் வருகின்றன. இவர்கள் ஏன் இத்தனை மோசமாக நடத்தப்படுகின்றனர்? மத நம்பிக்கைகள் வித்தியாசப்படுகிற காரணத்துக்காகவே. இந்தச் சூழ்நிலைமைகளில், மத சம்பந்தமாக பிளவுபட்ட ஒரு குடும்பத்தில் வாழ்வது யெகோவாவின் வணக்கத்தை உண்மையான ஒரு சவாலாக ஆக்குகிறது. என்றபோதிலும், துன்புறுத்தப்படும் இப்படிப்பட்ட அநேக கிறிஸ்தவர்கள் வெற்றிகரமாக தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட மனவேதனையும் அழுத்தமும் மத சம்பந்தமாக பிளவுபட்ட எல்லா வீடுகளிலும் காணப்படுவதில்லை என்பதைக் குறித்து நன்றியுணர்ச்சி கொள்ளலாம். இருந்தாலும், அது உண்மையிலேயே இருக்கிறது. உங்களுடைய வீட்டின் நிலை இந்த விவரிப்புக்குப் பொருந்துகிறதா? அப்போது, உங்கள் துணைவரிடமாக அல்லது உங்கள் பெற்றோரிடமாக மரியாதையைக் காத்துக்கொள்வதைக் கடினமாக நீங்கள் காணக்கூடும். அப்படிப்பட்ட நிலையிலுள்ள ஒரு மனைவியாக நீங்கள் இருந்தால் அல்லது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைமையிலுள்ள பிள்ளைகளாக இருந்தால், மத சம்பந்தமாக பிளவுப்பட்ட ஒரு வீட்டில் தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிப்பதில் நீங்கள் எவ்வாறு வெற்றிபெறலாம்? மற்றவர்கள் என்ன ஆதரவைத் தரமுடியும்? கடவுள் காரியத்தை எவ்வாறு நோக்குகிறார்?
கீழ்ப்படிதலுள்ளவராக இருப்பது ஏன் அத்தனை கடினமாக உள்ளது?
உலகின் தன்னல அக்கறையும் நன்றிகெட்டத் தன்மையும் உங்களுடைய சொந்த அபூரண மனச்சாய்வுகளோடு சேர்ந்து தெய்வீக கீழ்ப்படிதலை இடைவிடாத ஒரு போராட்டமாக ஆக்கிவிடுகின்றன. சாத்தான் இதை அறிவான், அவனுடைய நோக்கம் ஒரு கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை முறித்துப்போடுவதாகும். அவன் அநேகமாக தெய்வீக தராதரங்களுக்கு மிகக் குறைவான போற்றுதல் கொண்ட அல்லது போற்றுதலே இல்லாத குடும்ப அங்கத்தினர்களை இதற்காகப் பயன்படுத்துகிறான். உங்களுடைய உயர்ந்த ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான மதிப்பீடுகள் அவிசுவாசிகளான உங்கள் குடும்பத்தினருடையதிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டவையாக இருக்கின்றன. இது நடத்தையிலும் நடவடிக்கைகளிலும் ஒன்றோடொன்று முரண்படுகிற கருத்துகள் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. (1 பேதுரு 4:4) நீங்கள் பின்வரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருப்பதால் கிறிஸ்தவ தராதரங்களிலிருந்து உங்களை விலகிப்போகச் செய்வதற்காக கொண்டுவரப்படும் அழுத்தம் கடுமையாக இருக்கலாம்: ‘அவர்களுடைய கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாதிருங்கள்.’ (எபேசியர் 5:11) அவர்களுடைய கருத்தின்படி, நீங்கள் செய்யும் எதுவும் இனிமேல் சரியானதல்ல. அதற்குக் காரணம் உங்கள் மதமாகும். நோயுற்றிருந்த பிள்ளைகளையுடைய ஒரு தாய் தன்னுடைய கணவனிடம் உதவிக்காக கேட்ட போது இந்தக் கேலியான பதிலைப் பெற்றுக்கொண்டாள், “உன்னுடைய மதத்துக்கு உனக்கு நேரமிருக்கிறது; உனக்கு உதவி தேவையில்லை.” இப்படிப்பட்ட பேச்சு கீழ்ப்படிதலுள்ளவராக இருக்கும் சவாலைக் கடினமாக்குகிறது.
வேதவாக்கியங்களை நேரடியாக மீறாத விஷயங்களின் பேரில் நீங்கள் கருத்துவேறுபடும் சமயங்கள் இருக்கின்றன. என்றபோதிலும், நீங்கள் ஒரு குடும்பத்தின் பாகமாக இருப்பதையும் அதன் காரணமாக ஒரு சில கடமைகள் இருப்பதையும் உணருகிறீர்கள். “என்னுடைய அப்பா தனிமையாக உணருவதை நான் உணர்ந்திருப்பதால் அவர் எங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பற்றி யோசிக்கையில் நான் நிலை குலைந்துபோய்விடுகிறேன்,” என்பதாக கேனி சொல்கிறாள். “என்னுடைய அப்பாவின் எதிர்ப்பைக் குறித்து நான் ஆத்திரமடையக் கூடாது என்பதை அடிக்கடி நானே எனக்கு நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். எங்களுடைய நிலைநிற்கைக்கு அவர் ஏன் அவ்விதமாக பிரதிபலிக்கிறார் அல்லது அதை நிராகரிக்கிறார் என்பதற்கு ஒரு பலமான காரணம் இருப்பதை எனக்கு நானே சொல்லிக்கொள்வது அவசியமாக இருக்கிறது. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள் சாத்தானே.” அவிசுவாசியை விவாகத் துணைவராகக் கொண்டிருக்கும் சூசன் சொல்வதாவது: “ஆரம்பத்தில் என்னுடைய கணவரிடமிருந்து நான் பிரிந்துவிட வேண்டும் என்பதாக நினைத்ததுண்டு—ஆனால் இனிமேலும் அப்படி நினைப்பதில்லை. என்னைப் பிடிக்க சாத்தான் அவரைப் பயன்படுத்துகிறான் என்பது எனக்குத் தெரியும்.”
தகுதியற்றவராக உங்களை உணரச்செய்வதற்கு சாத்தான் எடுக்கும் முயற்சிகள் சற்றும் குறையாதிருப்பது போல இருக்கலாம். உங்கள் துணைவரோடு பேச்சுத் தொடர்பில்லாமலேயே நாட்கள் கடந்துசெல்லக் கூடும். வாழ்க்கை மிகவும் தனிமையாக ஆகிவிடலாம். இது நம்பிக்கையையும் தன்மானத்தையும் அழித்து உங்கள் தெய்வீக கீழ்ப்படிதலைச் சோதிக்கிறது. பிள்ளைகளும்கூட உணர்ச்சிப்பூர்வமாகவும் சரீரப்பிரகாரமாயும் ஊக்கம் குன்றியவர்களாக உணரலாம். ஒரு சந்தர்ப்பத்தில், தங்களுடைய பெற்றோர் ஆட்சேபித்தபோதும் கடவுளுடைய மூன்று இளம் ஊழியர்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகிக் கொண்டிருந்தனர். இப்பொழுது முழு நேர ஊழியத்திலிருக்கும் அவர்களில் ஒரு பெண் இவ்விதமாக ஒப்புக்கொண்டாள்: “நாங்கள் உணர்ச்சிகள் மரத்துப்போனவர்களாகவும் சோர்வாகவும் உணருவதுண்டு; எங்களால் தூங்க முடியாது; நாங்கள் மிகவும் வருத்தமாயிருந்தோம்.”
கடவுள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
கடவுளுக்குக் கீழ்ப்படிவது எப்போதும் முதலில் வருகிறது, கணவனின் தலைமைத்துவத்துக்கு சம்பந்தப்பட்டக் கீழ்ப்படிதல் எப்போதும் யெகோவா கற்பிக்கும் விதமாகவே இருக்கவேண்டும். (அப்போஸ்தலர் 5:29) அது ஒருவேளை கடினமாக இருக்கலாம், என்றாலும் அது கூடிய காரியமே. உதவிக்காக தொடர்ந்து கடவுளை நோக்கியிருங்கள். நீங்கள் அவரை “ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள”வேண்டும் என்றும் அவருடைய வழிநடத்துதலுக்கு செவிசாய்த்து அதற்கு கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். (யோவான் 4:24) கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் அறிவு சரியான வகையான இருதயத்தை நிரப்புகையில் அது மனமுவந்து கீழ்ப்படிவதைத் தூண்டுகிறது. உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் மாறக்கூடும் என்றாலும், யெகோவாவோ அவருடைய வார்த்தையோ மாறுவதில்லை. (மல்கியா 3:6; யாக்கோபு 1:17) யெகோவா தலைமைத்துவத்தைக் கணவனுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இது உண்மையாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 11:3) நீங்கள் எப்போதும் ஏச்சையும் புண்படுத்தப்படுதலையும் இழிவுபடுத்தப்படுதலையும் எதிர்ப்பட்டால், அவிசுவாசியான கணவனின் தலைமைத்துவத்தை ஏற்று சகித்திருப்பது கடினமாக இருக்கலாமென்றாலும், சீஷனாகிய யாக்கோபு சொல்கிறார்: “பரம ஞானமோ . . . கீழ்ப்படிய ஆயத்தமாயிருக்கிறது.” (யாக்கோபு 3:17, NW) இந்தத் தலைமைத்துவத்தை சந்தேகத்திற்கிடமில்லாமல் அடையாளம் கண்டுகொண்டு அதை ஏற்றுக்கொள்வதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி, குறிப்பாக அதன் கனியாகிய அன்பு தேவைப்படுகிறது.—கலாத்தியர் 5:22, 23.
நீங்கள் எவரோ ஒருவரை நேசிக்கிறீர்களென்றால், கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்திடமாக தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிப்பது எளிதாக இருக்கிறது. எபேசியர் 5:33 புத்திமதி கூறுகிறது: “அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [“ஆழ்ந்த மரியாதையுள்ளவளாய் இருக்கக்கடவள்,” NW].”
இயேசுவை நினைத்துப்பாருங்கள். அவர் வாய்ச்சொல்லாலும் சரீரப்பிரகாரமாயும் நிந்திக்கப்பட்டார், என்றாலும் அவர் எவரையும் பதில் வையவில்லை. அவர் குற்றமற்ற ஒரு பதிவைக் காத்துக்கொண்டார். (1 பேதுரு 2:22, 23) இப்படிப்பட்ட பெரிய அவமதிப்புகளைச் சகித்திருப்பதற்கு, அவருக்கு பேரளவான தைரியமும் அவருடைய தகப்பனாகிய யெகோவாவிடமாக உறுதியான அன்பும் தேவையாக இருந்தது. ஆனால் அன்பு “சகலத்தையும் சகிக்கும்.”—1 கொரிந்தியர் 13:4-8.
பவுல் தன் உடன் வேலையாளான தீமோத்தேயுவுக்கும் இன்று நமக்கும் நினைப்பூட்டுகிறார்: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” (2 தீமோத்தேயு 1:7) நிலைமை சகித்திருப்பதற்கு கூடாததாகத் தோன்றும்போது, யெகோவாவிடமாகவும் இயேசு கிறிஸ்துவிடமாகவும் உங்களுக்கிருக்கும் ஆழமான அன்பு தெய்வீக கீழ்ப்படிதலில் உங்களை உற்சாகப்படுத்திடக்கூடும். தெளிந்த புத்தி சமநிலையான ஒரு நோக்குநிலையைக் காத்துக்கொள்ள உதவிசெய்து யெகோவாவோடும் இயேசு கிறிஸ்துவோடுமுள்ள உங்களுடைய உறவின்மீது கவனத்தை ஊன்ற வைக்கச் செய்யும்.—பிலிப்பியர் 3:8-11-ஐ ஒப்பிடுக.
தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிப்பதில் வெற்றிபெறும் துணைவர்கள்
சிலசமயங்களில் யெகோவா உங்கள் பிரச்சினைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வார் என்பதைக் காண்பதற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டும். என்றபோதிலும், அவருடைய கரங்கள் ஒருபோதும் குறுகினவை அல்ல. “யெகோவா உங்களுக்கு உரிமையாகவும் சிலாக்கியமாகவும் கொடுக்கும் காரியங்களை—கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் அவரை வணங்குவதை, படிப்பதை, ஊழியத்திற்குச் செல்வதை, மற்றும் ஜெபிப்பதை எப்போதும் செய்துகொண்டிருங்கள்,” என்பதாக தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிப்பதில் வெற்றிபெற்றுவரும் ஒரு பெண் சொல்கிறாள். யெகோவா ஆசீர்வதிப்பது உங்கள் முயற்சிகளையே, வெறுமென உங்கள் சாதனைகளை அல்ல. 2 கொரிந்தியர் 4:17-ல், அப்போஸ்தலன் பவுல், ‘அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது,’ என்று சொன்னார். இதன்பேரில் தியானியுங்கள். அது உங்களை நிலைநிறுத்தும் காரியமாக உங்களுக்கு இருக்கும். ஒரு மனைவி சொல்கிறாள்: “என்னுடைய குடும்பவாழ்க்கை மேம்பட்டதாகிக்கொண்டில்லை, சிலசமயங்களில் யெகோவா என்னில் பிரியமாயிருக்கிறாரா என்பதாக நான் யோசிப்பதுண்டு. ஆனால் அவருடைய ஆசீர்வாதமாக நான் எடுத்துக்கொள்ளும் ஒரு காரியமானது, இந்தக் கடினமான நிலைமைகளிலிருந்து என்னுடைய கணவனைவிட மேம்பட்ட ஒரு மனநிலையோடு நான் வெளியே வருகிறேன். நம்முடைய செயல்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துகின்றன என்பதை அறிந்திருப்பது முழு போராட்டத்தையும் பிரயோஜனமானதாக்குகிறது.”
உங்களால் சகிக்க முடிவதற்கும் மேலான நிலைமைகளை நீங்கள் அனுபவிக்கும்படி அவர் அனுமதிக்கமாட்டார் என்பதாக யெகோவா வாக்களிக்கிறார். அவரை நம்புங்கள். உங்களைவிட அதிகத்தை அவர் அறிவார், உங்களை நீங்கள் அறிந்திருப்பதைக் காட்டிலும் அவர் உங்களை அதிக நன்றாக அறிந்திருக்கிறார். (ரோமர் 8:35-39; 11:33; 1 கொரிந்தியர் 10:13) கடினமான சூழ்நிலைமைகளில் யெகோவாவிடம் ஜெபிப்பது உதவியாக இருக்கிறது. விசேஷமாக எந்த வழியில் செல்வது அல்லது ஒரு சூழ்நிலைமையை எவ்வாறு கையாளுவது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கும் போது அவருடைய ஆவி உங்களை வழிநடத்துவதற்காக ஜெபியுங்கள். (நீதிமொழிகள் 3:5; 1 பேதுரு 3:12) உங்கள் வாழ்க்கையில் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவதற்கு பொறுமை, தன்னடக்கம் மற்றும் மனத்தாழ்மைக்காக எப்போதும் அவரிடமாக வேண்டிக்கொள்ளுங்கள். சங்கீதக்காரன் சொன்னார்: ‘யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமாயிருக்கிறார்.’ (சங்கீதம் 18:2, NW) இதை நினைவில் வைப்பது மத சம்பந்தமாக பிளவுபட்ட குடும்பங்களில் இருப்பவர்களுக்கு பலப்படுத்தும் ஒரு உதவியாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் திருமணத்தை மகிழ்ச்சியுள்ள ஒன்றாக ஆக்குவதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். ஆம், நற்செய்தி பிரிவினைகளை உண்டுபண்ணும் என்பதை இயேசு முன்னறிந்திருந்தார். எந்தப் பிரிவினைக்கும் உங்களுடைய மனநிலையோ நடத்தையோ காரணமாயிருந்துவிடாதபடிக்கு ஜெபியுங்கள். (மத்தேயு 10:35, 36) இதை மனதில் கொண்டவர்களாக, ஒத்துழைக்கையில் திருமண பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும். இந்தச் சரியான மனநிலையை நீங்கள் மாத்திரமே காண்பித்துக் கொண்டிருந்தாலும்கூட, அளவுக்கு மீறிய எதிர்ப்பாகவும் சண்டையாகவும் பிரச்சினை வளருவதைத் தவிர்ப்பதற்கு அதிகத்தைச் செய்யக்கூடும். பொறுமையும் அன்பும் அத்தனை முக்கியமாக இருக்கின்றன. ‘சாந்தமுள்ளவராய் இருங்கள்,’ மற்றும் ‘தீமையைச் சகிக்கிறவராய் இருங்கள்.’—2 தீமோத்தேயு 2:24.
அப்போஸ்தலன் பவுல் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக’ ஆனார். (1 கொரிந்தியர் 9:22) அதேவிதமாகவே, கிறிஸ்தவ கடமைகளை விட்டுக்கொடுக்காதிருக்கும் அதே சமயத்தில் உங்கள் துணைவரோடும் குடும்பத்தோடும் அதிக நேரத்தை செலவிடுவதற்காக சிலசமயங்களில் உங்கள் அட்டவணையை மாற்றியமைப்பது அவசியமாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் தெரிந்துகொண்டவருக்கு முடிந்த அளவு அதிகமான நேரத்தைக் கொடுங்கள். கிறிஸ்தவ கரிசனையைக் காட்டுங்கள். இது தெய்வீக கீழ்ப்படிதலின் ஒரு வெளிக்காட்டாகும்.
வளைந்துகொடுப்பவளாவும் அனுதாபமுள்ளவளாகவும் இருக்கும் கடவுள் பயமுள்ள மற்றும் கீழ்ப்படிதலுள்ள ஒரு மனைவி தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிப்பது எளிதாக இருப்பதைக் காண்கிறாள். (எபேசியர் 5:22, 23) “உப்பால் சாரமேறின” கிருபை பொருந்தின வார்த்தைகள் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவுகின்றன.—கொலோசெயர் 4:6; நீதிமொழிகள் 15:1.
‘கோபத்தோடே’ உறங்கச் செல்வதற்குப் பதிலாக, கருத்து வேறுபாடுகளை வேகமாகத் தீர்த்துக்கொண்டு கட்டியெழுப்பும் நல்ல வார்த்தைகளைக் கொண்டு சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு தெய்வீக ஞானம் அறிவுரை கூறுகிறது. (எபேசியர் 4:26, 29, 31) இதற்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது. பெலத்துக்காக யெகோவாவின்மீது அதிகமாக சார்ந்திருங்கள். ஒரு கிறிஸ்தவ மனைவி மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டாள்: “ஊக்கமான ஜெபத்துக்குப் பிறகு, என்னுடைய துணைவரை அணைத்துக்கொள்வதற்கு என்னுடைய கையை யெகோவாவின் ஆவி உயர்த்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.” கடவுளுடைய வார்த்தை புத்திசொல்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். . . . தீமையை நன்மையினாலே வெல்லு.” (ரோமர் 12:17-21) இது ஞானமான ஆலோசனையாகவும் தெய்வீக கீழ்ப்படிதலின் போக்காகவும் இருக்கிறது.
தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிக்கும் பிள்ளைகள்
மத சம்பந்தமாக பிளவுபட்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகளாகிய உங்களுக்கு யெகோவாவின் புத்திமதி: “உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:20) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த விஷயத்திற்குள் கொண்டுவரப்படுவதைக் கவனியுங்கள். ஆகவே, பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் நிபந்தனையற்றதாக இல்லை. ‘மனிதருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் அரசராக கடவுளுக்கே கீழ்ப்பட்டிருக்கவேண்டும்,’ என்ற அப்போஸ்தலர் 5:29-ல் (NW) உள்ள புத்திமதி ஒரு கருத்தில், கிறிஸ்தவ இளைஞருக்கும்கூட பொருந்துகிறது. வேதவாக்கியங்களின்படி சரியானது என்பதாக நீங்கள் அறிந்திருக்கிறதன் அடிப்படையில் என்ன செய்வது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எழலாம். ஒரு பொய் வணக்கச் செயலில் ஈடுபட மறுப்பதற்காக ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்படலாம். இது மனதிற்கு விருப்பமில்லாத ஒரு எதிர்பார்ப்பாக இருந்தாலும், கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்வதற்காக நீங்கள் துன்பமனுபவிக்கிறீர்கள் என்ற உண்மையினால் நீங்கள் ஆறுதலைக் கண்டடைந்து களிகூரவும் செய்யலாம்.—1 பேதுரு 2:19, 20.
உங்களுடைய எண்ணங்கள் பைபிள் நியமங்களால் வழிநடத்தப்படுவதால், ஒரு சில விஷயங்களில் நீங்கள் உங்களுடைய பெற்றோரோடு கருத்தில் வேறுபடலாம். இது அவர்களை உங்களுடைய விரோதிகளாக்கிவிடுவதில்லை. அவர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் சரியான கனத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுடைவர்கள். (எபேசியர் 6:2) சாலொமோன் சொன்னார்: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தா[யை] . . . அசட்டைபண்ணாதே.” (நீதிமொழிகள் 23:22) அவர்களுக்கு விநோதமாக தோன்றக்கூடிய ஒரு விசுவாசத்தை நீங்கள் பின்தொடருவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய வருத்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். அவர்களோடு பேச்சுத்தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள், ‘உங்கள் நியாயத்தன்மை அவர்களுக்குத் தெரிந்திருப்பதாக.’ (பிலிப்பியர் 4:5, NW) உங்கள் உணர்ச்சிகளையும் கவலைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். தெய்வீக நியமங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருங்கள், என்றாலும், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) பெற்றோரின் கட்டளைக்கு இப்பொழுது நீங்கள் கீழ்ப்படியும் உண்மையானது, ராஜ்யத்தின் பிரஜையாக தொடர்ந்து கீழ்ப்படிந்திருக்க நீங்கள் விரும்புவதை யெகோவாவுக்குக் காண்பிக்கிறது.
மற்றவர்கள் என்ன செய்யலாம்
மத சம்பந்தமாக பிளவுபட்ட குடும்பங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு உடன் வணக்கத்தாரின் ஆதரவும் புரிந்துகொள்ளுதலும் தேவையாக இருக்கிறது. பின்வருமாறு சொன்ன ஒருவரின் வார்த்தைகளிலிருந்து இது தெளிவாக தெரிகிறது: “நான் முற்றிலும் நம்பிக்கையற்றவளாகவும் உதவியற்றவளாகவும் உணருகிறேன், ஏனென்றால் அதை மாற்றுவதற்கு யாராலும் ஒன்றும் செய்யமுடியாது, என்னாலும் ஒன்றும் செய்யமுடியாது. யெகோவாவுடைய சித்தம் எதுவாக இருப்பினும், எங்களுடைய குடும்பத்தில் அது செய்யப்படுவதற்கு நான் அவரை நம்பியிருக்கிறேன்.”
கிறிஸ்தவ கூட்டங்களில் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு கொண்டிருக்கும் கூட்டுறவு புகலிடமாக இருக்கிறது. இதே நபர் தன்னுடைய வாழ்க்கையை “இரண்டு வித்தியாசமான உலகங்களாக” விவரித்தார். “ஒன்று நான் இருக்கவேண்டியது, ஒன்று நான் இருக்க விரும்புவது.” சகோதரத்துவத்தின் அன்புதானே சகித்திருப்பதையும் எல்லா சூழ்நிலைமைகளிலும் சேவிப்பதையும் இந்த துன்பமனுபவிப்போருக்கு கூடியதாக்குகிறது. உங்கள் ஜெபங்களில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 1:16) ஒழுங்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களிடம் உற்சாகமூட்டும், நம்பிக்கையான மற்றும் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14) நடைமுறையில் சாத்தியமாகவும் பொருத்தமாகவும் இருக்கையில், அவர்களை உங்களுடைய தேவராஜ்ய மற்றும் சமூக நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தெய்வீக கீழ்ப்படிதலினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களும் நன்மைகளும்
மத சம்பந்தமாக பிளவுபட்ட ஒரு குடும்பத்தில் தெய்வீக கீழ்ப்படிதலைக் காண்பிப்பதால் வரும் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் குறித்து தினந்தோறும் தியானம் செய்யுங்கள். கீழ்ப்படிதலுள்ளவராய் இருக்க ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். “தளர்ந்துபோகாமல்” இருங்கள். (கலாத்தியர் 6:9) “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம்” சாதகமற்ற சூழ்நிலைமைகளையும் அநீதிகளையும் சகித்திருப்பது கடவுளுக்கு “பிரீதியாயிருக்கும்.” (1 பேதுரு 2:19, 20) யெகோவாவின் நீதியான நியமங்களும் சட்டங்களும் மீறப்படாத வரையில் கீழ்ப்படிந்திருங்கள். இது யெகோவாவின் ஏற்பாட்டுக்கு பற்றுமாறாதிருப்பதைக் காண்பிக்கிறது. உங்களுடைய தேவ பக்தியான நடத்தை உங்களுடைய துணைவரின், பிள்ளைகளின் அல்லது பெற்றோரின் உயிரைக்கூட ஒருவேளை பாதுகாக்கலாம்.—1 கொரிந்தியர் 7:16; 1 பேதுரு 3:1, 2.
மத சம்பந்தமாக பிளவுபட்ட ஒரு குடும்பத்தின் நிர்பந்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நீங்கள் போராடுகையில், யெகோவா தேவனிடமாகவும் இயேசு கிறிஸ்துவிடமாகவும் உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை நினைவில் வையுங்கள். அநேக விஷயங்களில் நீங்கள் விட்டுக்கொடுக்கலாம், ஆனால் உத்தமத்தை விட்டுக்கொடுப்பது உயிர் உட்பட எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பதாக இருக்கும். அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” ‘இவ்வளவு பெரிதான இரட்சிப்பை’ அடையாளம் காண்பது கீழ்ப்படிந்திருக்க உங்களைப் பலப்படுத்தும்.—எபிரெயர் 1:1, 2; 2:4.
சரியான ஒழுக்கங்களுக்காகவும் மதிப்பீடுகளுக்காகவும் உங்களுடைய ஒத்திணங்கிபோகாத கீழ்ப்படிதலும் உறுதியும் உங்களுக்கும் அவிசுவாசியான உங்கள் துணைவருக்கும் ஆரோக்கியமான பாதுகாப்பாகும். கணவன் மனைவி பற்றுமாறா உறுதிப்பாடு பலமான குடும்ப பந்தங்களைக் கட்டியெழுப்புகிறது. நீதிமொழிகள் 31:11 திறமைசாலியும் பற்றுமாறாத்தன்மையும் கொண்ட ஒரு மனைவியைப் பற்றி சொல்கிறது: “அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்.” உங்களுடைய கற்புள்ள நடத்தையும் ஆழ்ந்த மரியாதையும் உங்கள் அவிசுவாசியான கணவரின் கண்களைத் திறக்கலாம். அது அவரை கடவுளுடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வழிநடத்தக்கூடும்.
உண்மையாகவே தெய்வீக கீழ்ப்படிதல் விலைமதிப்புள்ளதாகவும் உயிர்காப்பதாகவும் இருக்கிறது. அது உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருப்பதற்கு யெகோவாவிடம் ஜெபியுங்கள். அது மன சமாதானத்தில் விளைவடைந்து யெகோவாவுக்குத் துதியையும் கொண்டுவரும்.