மிக அதிகமான மதிப்புள்ள ஒரு முத்து எங்களிடம் கொடுக்கப்பட்டது
ரிச்சர்ட் கன்ந்தர் சொன்னபடி
அது செப்டம்பர் 1959-ஆக இருந்தது. நாங்கள் ஜூலியோ சீசர் என்ற இத்தாலிய பயணக்கப்பலில் நியூ யார்க்கிலிருந்து ஸ்பெய்னிலுள்ள காடிஸ்-க்குச் செல்ல அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்துகொண்டிருந்தோம். தி உவாட்ச் டவர் சொஸைட்டி என்னை என்னுடைய மனைவி ரீட்டாவோடும், பால் மற்றும் ஈவ்லன் ஹென்டர்ட்மார்க் என்ற மற்றொரு மிஷனரி தம்பதியோடும், அந்த ஐபீரிய தேசத்துக்கு நியமனம் செய்திருந்தது. நாங்கள் அநேக கஷ்டங்களை எதிர்ப்படவிருந்தோம். ஆனால் நாங்கள் எவ்வாறு மிஷனரி வாழ்க்கைத் தொழிலுக்குள் பிரவேசித்தோம்?
ரீட்டாவும் நானும் அ.ஐ.மா., நியூ ஜெர்ஸியில் 1950-ல் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டோம். அதன்பின், உடனடியாகவே, நாங்கள் செய்த ஒரு தீர்மானத்தால் காலப்போக்கில் மிக அதிகமான மதிப்புள்ள ஒரு முத்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிராந்தியத்தில் சேவிப்பதற்கு போதுமான சகோதரர்களும் சகோதரிகளுமுள்ள ஒரு சபையில் நாங்கள் இருந்தோம். ஆகவே பிரசங்கிமார்கள் அதிகமாக தேவைப்படும் இடத்தில் சேவைசெய்ய முன்வந்து அளிக்க நாங்கள் கடமைப்பட்டவர்களாக உணர்ந்தோம். நியூ யார்க் நகரில் 1958 கோடையில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில், நாங்கள் மிஷனரி சேவைக்காக விண்ணப்பித்தோம்.
அதற்குப்பின் விரைவில், உவாட்ச் டவர் கிலியட் பைபிள் பள்ளிக்கு அழைக்கப்பட்டோம், ஓராண்டுக்குள் ஸ்பெய்னுக்கு மிஷனரிகளாகச் சென்றுகொண்டிருந்தோம். அநேக ஏற்பாடுகளில் அதிகமாக உட்பட்டவர்களாகவும் மிக அதிகமாக கிளர்ச்சியுற்றவர்களாகவும் இருந்தபடியால், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த காரியத்தை அந்தச் சமயத்தில் நாங்கள் உணர்ந்துகொள்ளவில்லை. மிக அதிகமான மதிப்புள்ள ஒரு முத்தைப்பற்றி இயேசு பேசியிருந்தார். (மத்தேயு 13:45, 46) மிஷனரிகளாக சேவிக்கும் எங்களுடைய சிலாக்கியம் இந்த உவமையின் குறிப்பாக இல்லாவிட்டாலும், இப்படிப்பட்ட ஒரு முத்தைப் போல எங்களுக்கு இருந்தது. பின்னோக்கிப் பார்க்கையில், இப்பொழுது நாங்கள் யெகோவாவின் அமைப்பில் விலைமதிப்புள்ள இந்த ஊழிய பரிசை அதிக முழுமையாக மதித்துணருகிறோம்.
நினைவைவிட்டு நீங்காத ஒரு அனுபவம்
அந்தச் சமயத்தில் கிலியட் மிஷனரி பயிற்சி நியூ யார்க் மாநிலத்தில் ஃபிங்கர் லேக்ஸ் பகுதியில் அழகான நாட்டுப்புறச் சூழலில் நடத்தப்பட்டது. அங்கே, நாங்கள் இந்த உலக விவகாரங்களிலிருந்தும் தொந்தரவுகளிலிருந்தும் எங்களைப் பிரித்துக் கொண்டு பைபிள் படிப்பிலும் உண்மையான கிறிஸ்தவ கூட்டுறவிலும் முழுவதுமாக மூழ்கினவர்களாய் அற்புதமான ஆறு மாதங்களைச் செலவிட்டோம். எங்களுடைய சக மாணவர்கள், ஆஸ்திரேலியா, பொலிவியா, பிரிட்டன், கிரீஸ் மற்றும் நியூ ஜீலாந்து உட்பட உலகின் பல பாகங்களிலிருந்து வந்திருந்தார்கள். ஆனால் விரைவில் பட்டமளிப்பு நாள் வந்துவிட்டது. ஆகஸ்ட் 1959-ல், நாங்கள் கண்களில் கண்ணீரோடு பிரியாவிடை பெற்று எங்களுடைய தனிப்பட்ட மிஷனரி நியமிப்பிடத்தை நோக்கிப் பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரு மாதத்திற்குப் பின் நாங்கள் ஸ்பெய்ன் மண்ணில் கால் வைத்தோம்.
புதிய ஒரு கலாச்சாரம்
நாங்கள் அல்ஜசிரஸின் தெற்கு துறைமுகத்தில், மிகப் பெரிய ராக் ஆஃப் ஜிப்ரால்டருக்கு அருகே வந்திறங்கினோம். அன்றிரவு, நாங்கள் நாலு பேரும், ரீட்டாவும் நானும் ஹென்டர்ட்மார்க் தம்பதியினருடன் மாட்ரிடுக்கு ரயிலேறினோம். நாங்கள் ஹோட்டல் மெர்க்காடோருக்குச் சென்று அங்கே சங்கத்தின் இரகசிய கிளைக்காரியாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எங்களோடு தொடர்பு கொள்வதற்காக காத்திருந்தோம். ஸ்பெய்ன் நாடு படைப் பெருந்தலைவர் ஃபிரான்சிஸ்கோவின் ஃபிரான்கோவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்தது. அப்படியென்றால் தேசத்தில் சட்டப்பூர்வமாக ரோமன் கத்தோலிக்க சர்ச் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட மதமாக இருப்பதை இது அர்த்தப்படுத்தியது. வேறு எந்த மதத்தையும் வெளிப்படையாக கடைப்பிடிப்பது சட்டவிரோதமாக இருந்தது, ஆகவே யெகோவாவின் சாட்சிகளுடைய வீட்டுக்கு வீடு பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருந்தது. மதசம்பந்தமான கூட்டங்களுக்கும்கூட தடைவிதிக்கப்பட்டிருந்தது, ஆகவே அந்தச் சமயத்தில் ஸ்பெய்னில் 30 சபைகளிலிருந்த சுமார் 1,200 யெகோவாவின் சாட்சிகள் மற்ற தேசங்களில் செய்வது போல ராஜ்ய மன்றங்களில் கூடிவர முடியாதிருந்தது. நாங்கள் இரகசியமாக தனிப்பட்டவர்களின் வீடுகளில் கூடிவர வேண்டியிருந்தது.
ஸ்பானிய மொழியைக் கற்பதும் வேலையில் இறங்குவதும்
மொழியைக் கற்பது எங்களுக்கு முதல் சவாலாக இருந்தது. முதல் மாதத்தில் நாங்கள் ஒரு நாளுக்கு 11 மணிநேரங்களை ஸ்பானிய மொழி கற்பதில் செலவிட்டோம்—ஒவ்வொரு காலையும் 4 மணிநேரங்கள் வகுப்பிலும், பின்னர் 7 மணிநேரங்கள் சொந்தமாகவும் படித்தோம். இரண்டாவது மாதத்திலும் காலையில் அப்படியே செய்தோம், ஆனால் பிற்பகலை வீட்டுக்கு வீடு பிரசங்க வேலைக்காக ஒதுக்கினோம். உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இன்னும் மொழியை அறியாமலே, ஒரு அட்டையில் எழுதி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்யப்பட்ட அறிமுகத்தோடு ரீட்டாவும் நானும் தனியாக வீட்டுக்கு வீடு வேலையில் சென்றோம்!
மாட்ரிடின் தொழிலாளர் வர்க்கம் வசிக்கும் பகுதியான வாலிக்காஸில் ஒரு கதவைத் தட்டியது எனக்கு நினைவிருக்கிறது. என்ன சொல்வதென்று மறந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக என்னுடைய அட்டையை கையில் வைத்துக்கொண்டு நான் ஸ்பானிய மொழியில் சொன்னேன்: “வணக்கம். நாங்கள் ஒரு கிறிஸ்தவ வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். பைபிள் சொல்கிறது (ஒரு வசனத்தை நாங்கள் வாசிப்போம்). இந்தச் சிறுபுத்தகத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.” ஆம், அந்தப் பெண்மணி வெறுமனே பார்த்தாள், பின்னர் சிறுபுத்தகத்தை எடுத்துக்கொண்டாள். மறு சந்திப்பு செய்கையில், அவள் எங்களை உள்ளே வரவேற்றாள், நாங்கள் பேசினோம், அவள் வெறுமென எங்களைப் பார்த்தாள். எங்களுக்குத் தெரிந்த ஸ்பானிய மொழியில் நாங்கள் ஒரு பைபிள் படிப்பை அவளுக்கு ஆரம்பித்தோம், படிப்புகளின்போது, அவள் வெறுமென கேட்டுக்கொண்டிருந்தாள், பார்த்துக்கொண்டிருந்தாள். கொஞ்ச காலத்துக்குப் பின், முதல் சந்திப்பில் நாங்கள் அவளிடம் பேசியதை அவள் புரிந்துகொள்ளவில்லை என்றும்; ஆனால் அவள் டையாஸ் (கடவுள்) என்ற வார்த்தையைக் கேட்டாள், இது ஏதோ ஒரு நல்ல காரியம் என்பதை அறிந்துகொள்வதற்கு அவளுக்குப் போதுமானதாக இருந்தது என்றும் எங்களிடம் கடைசியாகச் சொன்னாள். காலப்போக்கில், அவள் கணிசமானளவு பைபிள் அறிவைப்பெற்று, முழுக்காட்டப்பட்டு யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக மாறினாள்.
ஸ்பானிய மொழி கற்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நகரத்தில் பயணம் செய்கையில் நான் வினைச்சொல்லின் பல உருவங்களை மனப்பாடம் செய்துகொள்வேன். ஒரு வாரம் நான் மனப்பாடம் செய்ததை அடுத்த வாரத்தில் மறந்துபோனேன்! அது மிகவும் சோர்வூட்டுவதாக இருந்தது. பலமுறை நான் முயற்சியை ஏறக்குறைய கைவிட்டுவிட்டேன். நான் மிகவும் மோசமாக ஸ்பானிய மொழியைப் பேசியதால், ஸ்பானிய மொழி பேசும் சகோதரர்கள் நான் அவர்கள் மத்தியில் முன்நின்று வழிநடத்தியபோது என்னிடம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியதாக இருந்தது. ஒரு மாவட்ட மாநாட்டின்போது, ஒரு சகோதரர் கையால் எழுதப்பட்டிருந்த ஒரு அறிவிப்பை மேடையிலிருந்து வாசிப்பதற்காக என்னிடம் கொடுத்தார். இந்தக் கையெழுத்தை வாசிக்க கஷ்டப்பட்டு நான் இவ்வாறு அறிவித்தேன்: “உங்கள் மூலெட்டாஸை (முடவன் கோல்) நாளை அரங்கத்துக்கு கொண்டுவரவும்.” “உங்கள் மாலெட்டாஸை (சாமான்கள்) நாளை அரங்கத்துக்கு கொண்டுவரவும்,” என்பதாக அது வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். நிச்சயமாகவே, கூட்டத்திலுள்ளவர்கள் சிரித்தனர், எனவே எனக்கு சங்கடமாகிவிட்டது.
மாட்ரிடில் ஆரம்பகால சோதனைகள்
மாட்ரிடில் அந்த முதல் சில ஆண்டுகள் ரீட்டாவுக்கும் எனக்கும் உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் கடினமானவையாக இருந்தன. நாங்கள் எங்கள் வீட்டையும் எங்களுடைய நண்பர்களையும் பார்க்காமல் மிகவும் தவித்தோம். ஐக்கிய மாகாணங்களிலிருந்து நாங்கள் ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு சமயமும், எங்களுக்கு வீட்டு நினைப்பு வந்து ஒரு ஏக்கம் வந்துவிடும். வீட்டு நினைவால் துயரங்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதி சமாளிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் அவை கடந்துபோயின. எப்படியிருந்தாலும், மிக அதிகமான மதிப்புள்ள ஒரு முத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எங்களுடைய வீடு, குடும்பம் மற்றும் நண்பர்களை நாங்கள் விட்டுவந்திருந்தோமே. நாங்கள் தேவைக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக்கொள்வது அவசியமாக இருந்தது.
முதலில் மாட்ரிடுக்கு நாங்கள் வந்தபோது மிகவும் பழைய ஒரு சாப்பாட்டு விடுதியில் தங்கியிருந்தோம். எங்களுக்கு எங்களுடைய அறையும் மூன்று வேளை சாப்பாடும் கிடைத்தது. அது ஒரு சிறிய இருட்டான அறையாக இருந்தது, படுக்கை மெத்தை வைக்கோலினால் செய்யப்பட்டிருந்தது. மாத வாடகையே எங்களுக்குக் கிடைத்த சிறிய உதவித்தொகையை விழுங்கிவிட்டது. மதிய உணவை நாங்கள் பொதுவாக நண்பகலில் அங்கே சாப்பிட்டோம், விடுதியை நடத்திவந்த அந்தப் பெண் எங்களுடைய இரவு உணவு சூடாக இருப்பதற்காக அவனில் (oven) வைத்துவிடுவாள், ஆகவே இரவு எங்களுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது இருந்தது. என்றபோதிலும், பகலிலும் மாலையிலும் தெருக்களில் நடப்பதால் எங்களுக்கு அதிகமாக பசி எடுக்கும். எங்களிடம் பணம் எதுவும் மீதியாக இல்லையென்றால், எங்களுடைய சொந்தப் பணத்தில் மிகவும் மலிவாக கிடைத்த சாக்கலேட் பாரை வாங்கிக்கொள்வோம். என்றபோதிலும் சங்கத்தின் மண்டல கண்காணி விஜயம் செய்தபோது நிலைமை சீக்கிரத்தில் மாறியது. எங்களுடைய நிலைமையை அவர் பார்த்து, மிஷனரி இல்லமாக பயன்படுத்துவதற்கு ஒரு சிறிய வீட்டை நாங்கள் தேடிக்கொள்ளலாம் என்பதாக அவர் சொன்னார். ஆம், சொந்தமாக ஒரு வீட்டைக் கொண்டிருப்பது, சமையலறை தரையில் வட்டமான தொட்டியில் நின்று கொண்டு குளிப்பதைவிட எவ்வளவோ மேலானதாக இருக்கும். இப்பொழுது நாங்கள் ஷவரையும் உணவை வைப்பதற்கு குளிர்ப்பதன பெட்டியையும், சாப்பாடு தயாரிப்பதற்கு மின்சார அடுப்பையும் கொண்டிருப்போம். இந்தக் கரிசனைக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம்.
மாட்ரிடில் மகத்தான அனுபவங்கள்
வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பு மிகவும் கவனமாகச் செய்யப்பட்டது. மாட்ரிட்டில் தினந்தோறும் இருந்த சந்தடி ஒரு அனுகூலமாக இருந்தது, நாங்கள் அளவுக்கு அதிகமாக கவனத்தைக் கவராதபடி எங்களை மறைத்துக்கொள்ள உதவியது. அயல் நாட்டவர் என்பதாக கவனத்தைக் கவராதபடிக்கு நாங்கள் மற்றவர்களைப் போலவே உடுத்திக்கொண்டு நடந்துகொள்ளவும் முயற்சிசெய்தோம். வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பில் எங்களுடைய முறை, குடியிருப்பு கட்டடத்தில் பிரவேசித்து ஒரு வீட்டின் கதவைத் தட்டி, அந்த நபரிடம் பேசிவிட்டு பின்னர் அந்தக் கட்டடத்தையும், தெருவையும், அந்தப் பிராந்தியத்தையும் விட்டு வெளியேறிவிடுவதாக இருந்தது. வீட்டுக்காரர் போலீஸை அழைக்கக்கூடிய வாய்ப்பு எப்போதும் இருந்தது, ஆகவே அந்தச் சுற்றுப்புறத்தில் இருப்பது ஞானமற்ற செயலாக இருந்தது. உண்மையில் இந்த முறையை மிகவும் கவனமாக பயன்படுத்தியபோதிலும் பாலும் ஈவ்லனும் கைதுசெய்யப்பட்டு 1960-ல் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அருகிலிருந்த போர்த்துகலுக்குச் சென்று பல வருடங்கள் அங்கே சேவித்தனர், பால் இரகசியமாக இயங்கிவந்த கிளை அலுவலகத்தின் பொறுப்பேற்றார். இன்று அவர் கலிபோர்னியாவிலுள்ள சான்டியகோவில் நகர கண்காணியாக இருக்கிறார்.
என்றபோதிலும், எங்களுக்கு ஈடுசெலுத்தும் வகையில் ஒன்று நிகழ்ந்தது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், போர்த்துகலுக்கு நியமனம் செய்யப்பட்டிருந்த ஆறு மிஷனரிகள் அந்தத் தேசத்தைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டார்கள்! இது மகிழ்ச்சியான ஒரு சம்பவத்துக்கு வழிநடத்தியது, ஏனென்றால் கிலியட் வகுப்பில் எங்களோடு இருந்த எரிக் மற்றும் ஹேஸல் பெவ்ரிஜ் போர்த்துகலைவிட்டு ஸ்பெய்னுக்கு வரும்படியாக இப்போது சொல்லப்பட்டனர். ஆகவே நாங்கள் மறுபடியுமாக மெர்க்காடோர் ஹோட்டலில் பிப்ரவரி 1962-ல் இருந்தோம்—இந்த முறை எரிக் மற்றும் ஹேஸலை வரவேற்பதற்காக.
மாட்ரிடில் இருந்த இந்த ஆரம்ப நாட்களில்தானே, ரீட்டாவும் நானும் மதசம்பந்தமான மாய்மாலத்தை தனிப்பட்ட வகையில் நேரடியாக கண்டோம். பெர்னார்டோ மற்றும் மாரியா என்ற ஒரு தம்பதியோடு நாங்கள் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தோம், பெர்னார்டோ கண்டெடுத்திருந்த தூக்கியெறியப்பட்ட கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுகுடிலில் வசித்துவந்தனர். நாங்கள் பிந்திய இரவில் அவர்களோடு படித்தோம், படிப்புக்குப் பின், அவர்கள் எங்களுக்கு ரொட்டி, திராட்சமது, கொஞ்சம் சீஸ் அல்லது அவர்களிடமிருக்கும் எதையும் எங்களுக்கு கொடுப்பார்கள். இந்த சீஸ் அமெரிக்காவிலுள்ள சீஸ் போன்றே இருப்பதை நான் கவனித்தேன். ஒரு நாள் இரவு படிப்புக்குப் பின், சீஸ் வைக்கப்பட்டிருந்த அந்த தகர டப்பாவை வெளியே கொண்டுவந்தார்கள். அதில் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில், “அமெரிக்க மக்களிடமிருந்து ஸ்பானிய மக்களுக்கு—விற்பனைக்கு அல்ல,” என்பதாக எழுதப்பட்டிருந்தது. இந்த ஏழைக் குடும்பம் எவ்வாறு சீஸ் பெற்றுக்கொண்டது? ஏழைகளுக்கு விநியோகிப்பதற்கு கத்தோலிக்க அரசாங்கம் சர்ச்சைப் பயன்படுத்தியது. ஆனால் பாதிரியார் அதை விற்றுக்கொண்டிருந்தார்!
இராணுவத்தினரோடு பலன்தரும் ஊழியம்
சீக்கிரத்தில் எங்களுக்கும் மற்ற அநேகருக்கும் மிகுதியான ஆசீர்வாதங்களில் விளைவடைந்த ஆச்சரியமான ஒன்று நிகழ்ந்தது. மாட்ரிடுக்கு ஒரு சில கிலோமீட்டர் வெளியே டாரக்கானில் ஐ.மா. விமானப் படை தளத்தில் தங்கியிருந்த வால்டர் கீடேஷ் என்ற பெயருடைய ஒரு இளம் மனிதனைச் சந்திக்கும்படியாக கிளை அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பினை நாங்கள் பெற்றோம். நாங்கள் அவரையும் அவருடைய மனைவியையும் சந்தித்து, அவர்களோடும் விமானப்படையைச் சேர்ந்த மற்றொரு தம்பதியோடும் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தோம்.
அந்தச் சமயத்தில், ஐ.மா. விமானப் படையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களோடு சுமார் ஐந்து பைபிள் படிப்புகளை நான் ஆங்கிலத்தில் நடத்திக்கொண்டிருந்தேன். அவர்களில் ஏழு பேர் பின்னர் முழுக்காட்டப்பட்டார்கள், ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்பிய பிறகு அந்த ஆண்களில் நான்கு பேர் சபை மூப்பர்களாக ஆனார்கள்.
நம்முடைய வேலைக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தேசத்திற்குள் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பைபிள்களைக் கொண்டுவருவதற்கு மிகச் சில வழிகளே இருந்த சமயமாக இது இருந்தது. என்றபோதிலும், சுற்றுலாப் பயணிகளாலும் எங்கள் அமெரிக்க தொடர்புகளின் மூலமாகவும் கொஞ்சம் பிரசுரங்கள் உள்ளே கொண்டுவரப்பட்டன. இரகசியமாக பிரசுர கிடங்கு ஒன்றை வைத்து செயல்படுத்துவதற்கு நான் நியமிக்கப்பட்டேன். அது வாலிக்காஸில் ஒரு எழுதுபொருள் கடைக்குப் பின்னால் இருந்த ஒரு சரக்கு சேமிப்பிடம். கடை சொந்தக்காரரின் மனைவி ஒரு யெகோவாவின் சாட்சி. சொந்தக்காரர் ஒரு சாட்சியாக இல்லாவிட்டாலும் நம்முடைய வேலையை மதிக்கிறவராக இருந்தார், தனக்கும் தன்னுடைய வியாபாரத்துக்கும் வரக்கூடிய பேராபத்தையும் பொருட்படுத்தாமல், பிரசுரங்களை ஒன்றாக சேர்த்து கட்டுவதற்கும் தேசம் முழுவதிலுமுள்ள நகரங்களுக்கு அனுப்புவதற்கும் பின்புறத்திலிருந்த இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள என்னை அவர் அனுமதித்தார். இந்த அறை எப்போதும் அது இருக்க வேண்டிய விதமாகவே—தூசிப் படிந்து, கார்ட்டன்கள் நிறைந்த ஒரு தாறுமாறான அறையாக—இருக்க வேண்டும் என்பதால் வேகமாக அமைத்து அதே வேகத்தில் மறைத்துவைக்கப்படக்கூடிய ஒரு மேசை மற்றும் புத்தக அடுக்குகளை நான் அமைக்க வேண்டியதாக இருந்தது. நாளின் முடிவில், கடையில் யாரும் இல்லாத சமயம் வரையாக நான் காத்திருந்து, என்னுடைய சாமான்களோடு வேகமாக வெளியேறிச் செல்வேன்.
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! போன்ற பத்திரிகைகள், மற்ற பிரசுரங்கள் போன்ற ஆவிக்குரிய புத்தகங்களை விநியோகிப்பதில் பங்குகொள்வது உண்மையான ஒரு சிலாக்கியமாக இருந்தது. அவை கிளர்ச்சியூட்டும் சமயங்களாக இருந்தன.
ரீட்டாவுக்கு 16 வீட்டு பைபிள் படிப்புகளைக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி கிடைத்தது, இவர்களில் பாதிப்பேர் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளானார்கள். டோலோரஸ் திருமணமான ஒரு இளம் பெண்ணாக இருந்தாள், இருதய நோயின் காரணமாக குளிரான பனிக்காலங்களை அவள் படுக்கையிலேயே கழித்தாள். வசந்தகாலத்தில் அவளால் எழுந்திருந்து ஓரளவு சுறுசுறுப்பாக இருக்க முடிந்தது. டோலோரஸின் விசுவாசம் அத்தனை பலமாக இருந்ததன் காரணமாக, பிரான்ஸிலுள்ள டெளலூஸ்-ல் எங்களுடைய மாவட்ட மாநாடுக்கான சமயம் வந்தபோது அவள் அதற்குச் செல்ல வெகுவாக ஆசைப்பட்டாள். அவளுடைய இருதய நிலையின் காரணமாக அப்படிச் செய்வது ஞானமற்றதாக இருக்கும் என்பதாக அவளுடைய மருத்துவரால் அவள் எச்சரிக்கப்பட்டாள். வீட்டில் அணிந்திருந்த உடையையும் செருப்பையும் அணிந்துகொண்டு பயணமூட்டை எதுவும் இல்லாமல் அவளுடைய கணவன், அவளுடைய அம்மா இன்னும் மற்றவர்களையும் வழியனுப்ப இரயில் நிலையம் வரை வந்தாள். கண்களில் கண்ணீர் ததும்ப, அவளில்லாமல் அவர்கள் செல்வதைப் பார்க்க முடியாமல், இரயிலில் ஏறிக்கொண்டு பிரான்ஸுக்கு வந்துவிட்டாள். இது நடந்தது ரீட்டாவுக்கு தெரியாது. ஆனால் அங்கே மாநாட்டில், டோலோரஸ் பெரியதாக புன்முறுவல் செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அவள் எவ்வளவு ஆச்சரியப்பட்டு போனாள்!
அசாதாரணமான ஒரு பைபிள் படிப்பு
மாட்ரிடில் எங்களுடைய நியமனத்தைப் பற்றிய இந்தப் பதிவை “எல் ப்ரோஃபெஸோர்” டான் பெனிக்னோ ஃபிரான்கோவைப் பற்றி சொல்லாமல் முடித்துவிட முடியாது. உள்ளூர் சாட்சி ஒருவர், மிகவும் ஏழ்மையான ஒரு குடித்தன வீட்டில் தன் மனைவியோடு வசித்துவந்த ஒரு பெரியவரைச் சந்திக்க என்னை அழைத்துச்சென்றார். நான் அவரோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக படித்த பிறகு, அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக தன்னை முழுக்காட்டும்படியாக கேட்டுக்கொண்டார்.
இந்தப் பெரிய மனிதரான டான் பெனிக்னோ ஃபிரான்கோ அந்தச் சமயத்தில் ஸ்பெய்னில் சர்வாதிகாரியாக இருந்த பிரான்சிஸ்கோ ஃபிரான்கோ என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரனாக இருந்தார். டான் பெனிக்னோ எப்போதும் சுதந்திர விரும்பியாக இருந்தார் என்று தெரிகிறது. ஸ்பானிய உள்நாட்டுப்போரின் போது, அவர் ரிப்பப்ளிக்கின் அநுதாபியாக இருந்து, போரில் வெற்றிபெற்று கத்தோலிக்க சர்வாதிகாரத்தை ஸ்தாபித்த படைப் பெருந்தலைவரான அவருடைய உறவினருக்கு எதிராக இருந்தார். 1939 முதற்கொண்டே, டான் பெனிக்னோ வேலை செய்யும் உரிமையை இழந்து மிகவும் வறுமையான ஒரு வாழ்க்கை வாழ கட்டுப்படுத்தப்பட்டவராக இருந்தார். இப்படித்தான் ஸ்பெய்ன் நாட்டுத் தலைவரான முதற்பெரும் படைத் தலைவரான பிரான்சிஸ்கோ ஃபிரான்கோவின் ஒன்றுவிட்ட சகோதரன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆனார்.
எதிர்பாராத அழைப்பு
1965-ல் ஸ்பெய்ன் கிளை அலுவலகம் பார்சிலோனாவில் வட்டார வேலையில் பயணப்பட துவங்கும்படியாக எங்களை அழைத்தது. மாட்ரிட்டில் எங்களுக்கு மிகவும் நெருக்கமாயிருந்த எல்லா அன்பான சகோதரர்களையும் விட்டுவருவதை அது அர்த்தப்படுத்தியது. இப்பொழுது ஒரு புதிய அனுபவம் ஆரம்பமாக இருப்பது மாத்திரமல்லாமல் எனக்கு ஒரு சோதனையாகவும் இது இருந்தது. நான் எப்போதும் என்னுடைய திறமையைக் குறித்து சந்தேகித்தபடியால் இந்த அனுபவம் அச்சமூட்டுவதாக இருந்தது. ஊழியத்தின் இந்த அம்சத்தில் என்னை திறம்பட்டவராக ஆக்கியது யெகோவாவே என்பது எனக்கு நன்றாக தெரிந்திருந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒரு சபையைச் சந்திப்பது சகோதரர்களின் வீடுகளில் வாழ்வதை அர்த்தப்படுத்தியது. நிரந்தரமான வீடு எங்களுக்கு இருக்கவில்லை, பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாங்கள் வேறொரு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தோம். ஒரு பெண்ணுக்கு இது விசேஷமாக கடினமாக இருக்கிறது. ஆனால் விரைவில் பார்சிலோனாவில் வாழ்ந்த ஹோசே மற்றும் ரோசெர் எஸ்கூடே தொடர்ந்து பல நாட்களுக்கு தங்களோடு வந்து தங்கும்படியாக எங்களை அழைத்தனர். இது அவர்களுடைய பங்கில் அன்பான காரியமாக இருந்தது, ஏனென்றால் எங்களுடைய உடைமைகளை வைப்பதற்கு நிரந்தரமான ஒரு இடத்தை நாங்கள் கொண்டிருந்து ஞாயிறு மாலைகளில் வழக்கமாக ஓரிடத்துக்கு வரமுடியும்.
ரீட்டாவும் நானும் அடுத்த நான்கு ஆண்டுகளை மத்திய தரைக்கடலின் கரையில் அமைந்திருந்த கட்டலோனியா மாகாணத்தில் வட்டார வேலையில் செலவழித்தோம். எங்களுடைய எல்லா பைபிள் கூட்டங்களும் இரகசியமாக தனிநபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டன, எங்களுடைய வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பும்கூட நாங்கள் கவனத்தைக் கவராதபடிக்கு விவேகத்தோடு செய்யப்பட்டது. சில சமயங்களில் முழு சபையும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காட்டுப்பகுதியில் “பிக்னிக்”கிற்காக கூடியது, விசேஷமாக ஒரு வட்டார மாநாட்டை நடத்துகையில்.
சபைகளை ஐக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதற்காக தங்கள் வேலைகளையும் சுதந்திரத்தையும் பணயம்வைத்து மும்முரமாக பிரயாசப்பட்ட விசுவாசமுள்ள அநேக ஆவிக்குரிய சகோதரர்களை நாங்கள் எப்போதும் மெச்சுவோம். அவர்களில் அநேகர் நகரத்துக்கு வெளியே பட்டணங்களுக்குள்ளும் வேலையை விரிவுபடுத்துவதில் முன்நின்று வழிநடத்தினர். தடையுத்தரவு நீக்கப்பட்டு 1970-ல் மத சுயாதீனம் வழங்கப்பட்டபோது ஸ்பெய்னில் அதிகமான அதிகரிப்புக்கு இது அடிப்படையாக அமைந்தது.
எங்களுடைய அயல்நாட்டு நியமனத்திலிருந்து விடைபெறுதல்
ஸ்பெய்னில் நாங்கள் தங்கியிருந்த பத்து ஆண்டுகளில், யெகோவாவை சேவிக்கும் இந்த விசேஷ ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழுவது எங்களுடைய பெற்றோரின் நிலைமையினால் கஷ்டத்திற்குள்ளானது. பல சமயங்கள், என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொள்வதற்காக ஏறக்குறைய எங்களுடைய நியமனத்தை விட்டு வீடு திரும்ப வேண்டியதாக இருந்திருக்கிறது. என்றபோதிலும், என்னுடைய பெற்றோர் வாழ்ந்த இடத்திற்கு அருகில் இருந்த சபைகளின் அன்பான சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் உதவியால் நாங்கள் தொடர்ந்து ஸ்பெய்னில் இருக்க முடிந்தது. ஆம், அந்த ஆண்டுகளில் மிஷனரி வேலையில் சேவிக்கும் சிலாக்கியம், கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பதில் எங்களோடு பங்குகொண்ட மற்றவர்களால்தானே ஓரளவு கூடியதாயிருந்தது.
கடைசியாக, 1968 டிசம்பரில், என்னுடைய அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்காக நாங்கள் வீடு திரும்பினோம். அதே மாதத்தில் என்னுடைய அப்பா மரித்துப்போனார், இப்பொழுது அம்மா தனிமையாக இருந்தார்கள். ஒப்பிடுகையில் முழு நேரமாக ஊழியஞ் செய்வதற்கு இன்னும் பொறுப்புகள் அதிகமாக இல்லாத காரணத்தால் நாங்கள் வட்டார வேலையில் சேவிப்பதற்காக, ஆனால் இந்த முறை ஐக்கிய மாகாணங்களில் அதைச் செய்வதற்காக நாங்கள் நியமனத்தைப் பெற்றோம். அடுத்த 20 ஆண்டுகள், நாங்கள் ஸ்பானிய மொழிபேசும் வட்டாரங்களைச் சேவித்தோம். நாங்கள் அதிக விலைமதிப்புள்ள மிஷனரி முத்தை இழந்துவிட்டிருந்தாலும், மற்றொன்று எங்கள் கைகளில் வைக்கப்பட்டது.
போதைப்பொருட்கள் மற்றும் வன்முறையின் மத்தியில் பிரசங்கித்தல்
இப்பொழுது நாங்கள் குற்றச்செயல் அதிகமாயிருந்த நகரங்களின் பகுதிகளில் வாழ்ந்துவந்த அநேக சகோதர சகோதரிகளோடு அருகருகாக வேலைசெய்துகொண்டிருந்தோம். ஏன், நியூ யார்க், புரூக்லினில் வட்டார வேலை செய்யும்போது முதல் வாரத்திலேயே ரீட்டாவின் கைப்பை அவளிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்டது.
மற்றொரு சமயம் ரீட்டாவும் நானும் நியூ யார்க் நகரின் மற்றொரு பகுதியில் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு தொகுதியோடு இருந்தோம். தெரு முனையில் நடந்துசென்ற போது, பாழான ஒரு கட்டடத்தின் சுவரிலுள்ள ஒரு ஓட்டையின் முன்பாக ஒரு சில ஆட்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். தெருவில் முன்னோக்கி சில அடிகள் நாங்கள் எடுத்து வைத்தபோது, நடைபாதையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபன் எங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். மற்றொருவன் அடுத்த முனையில் இருந்துகொண்டு போலீஸ் கார்கள் வருகின்றனவா என்று கவனித்துக்கொண்டிருந்தான். சட்டவிரோதமாக போதைப்பொருள்களை கடத்திச் சென்று விற்கும் இடத்துக்கே வந்துவிட்டோம்! முதல் காவல்காரன் அதிர்ச்சியடைந்தான், ஆனால் அவன் காவற்கோபுர பத்திரிகைகளைப் பார்த்தபோது நிம்மதியடைந்தான். நான் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கலாம்! பின்னர் அவன் ஸ்பானிய மொழியில் “¡லாஸ் ஆட்டாலாயாஸ்! ¡லாஸ் ஆட்டாலாயாஸ்!” (தி உவாட்ச்டவர்ஸ்!, தி உவாட்ச்டவர்ஸ்!) என்பதாக கூவினான். எங்களைப் பத்திரிகையோடு தொடர்புபடுத்தி, நாங்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது, எல்லாம் சரியாக இருந்தது. அவனுக்கு அருகில் நான் சென்றபோது, “¿புவினோஸ் டியாஸ் கோமோ எஸ்டா?” என்பதாக அவனிடம் கேட்டேன். (காலை வணக்கம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) அவனுக்காக ஜெபிக்கும்படியாக என்னைக் கேட்டுக்கொள்வதன் மூலம் அவன் பதிலளித்தான்!
கடினமான ஒரு தீர்மானம்
1990-ல் நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய அம்மாவுடன் இருக்கவேண்டும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் பிரயாண வேலையில் நிலைத்திருக்க கடினமாக முயற்சிசெய்தோம், ஆனால் இரண்டு கடமைகளையும் நிறைவேற்றுவது கூடாத காரியம் என்பதை ஞானம் எங்களுக்கு உணர்த்தியது. அம்மா அன்பாக கவனித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாகவே விரும்பினோம். ஆனால் மறுபடியுமாக எங்களுக்கு மிகவும் அருமையானதாயிருந்த அதிக மதிப்புள்ள ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டியதாய் இருந்தது. உலகிலுள்ள சொல்லர்த்தமான எல்லா இரத்தினங்களும் ஒருவருக்கு அது செய்யக்கூடிய அனைத்தும், ஒரு மிஷனரியாக அல்லது யெகோவாவின் அமைப்பில் ஒரு பிரயாண கண்காணியாக சேவிக்கும் இரத்தினங்களோடு ஒப்பிட மிகவும் குறைவானவையாக இருக்கின்றன.
ரீட்டாவும் நானும் இப்பொழுது எங்கள் 60-களில் இருக்கிறோம். நாங்கள் மிகவும் மனநிறைவோடு உள்ளூர் ஸ்பானிய மொழி பேசும் சபையோடு சேவித்துவருவதை அனுபவித்து மகிழ்கிறோம். யெகோவாவின் சேவையில் நாங்கள் செலவழித்த ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில், மிக அதிக மதிப்புள்ள கொஞ்சம் முத்துக்களை எங்களிடம் ஒப்படைத்தமைக்காக நாங்கள் அவருக்கு நன்றிசெலுத்துகிறோம்.
[பக்கம் 23-ன் படம்]
மாட்ரிட் வட்ட வெளியரங்குக்கு வெளியே ரீட்டா, பால் மற்றும் ஈவ்லன் ஹென்டர்ட்மார்கோடு (வலது)
[பக்கம் 24-ன் படம்]
காட்டுப் பகுதியில் ஒரு “பிக்னிக்”-ல் சபையை சேவித்தல்