அன்பென்னும் பூரண கட்டில் ஒன்றுபட்டிருத்தல்
“அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருங்கள்.”—கொலோசெயர் 2:2, NW.
1, 2. விசேஷமாக இன்று என்ன பிரிவினையுண்டாக்கும் செல்வாக்கு உணரப்பட்டு வருகிறது?
கேளுங்கள்! பரலோகம் முழுவதும் ஒரு பெருஞ்சத்தம் எதிரொலிக்கிறது. அது சொல்வதாவது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) ஒவ்வொரு ஆண்டு கடந்துபோகையிலும், அந்தச் செய்தி பூமியில் குடியிருப்பவர்களுக்கு அதிகப்படியான அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.
2 யெகோவாவின் பெரிய சத்துரு நீண்டகாலமாக எதிர்ப்பவன் (சாத்தான்) என்றும் பழிதூற்றுபவன் (பிசாசு) என்றும் அறியப்பட்டிருக்கிறான். ஆனால் இந்த வஞ்சகன் இப்பொழுது இன்னொரு கேடு விளைவிக்கும் பங்கை ஏற்று செயல்படுகிறான். அவன் கோபாவேசமுள்ள தெய்வமாக ஆகியிருக்கிறான்! ஏன்? ஏனென்றால் பரலோகத்தில், 1914-ல் தொடங்கிய யுத்தத்தில் மிகாவேலும் அவரைச்சேர்ந்த தூதர்களும் அவனைப் பரலோகத்திலிருந்து விலக்கிப்போட்டனர். (வெளிப்படுத்துதல் 12:7-9) கடவுளை வணங்குவதிலிருந்து எல்லா மனிதர்களையும் திசைதிருப்ப முடியும் என்ற தன்னுடைய சவாலை நிரூபிக்க தனக்குக் கொஞ்சக்காலம் மாத்திரமே உண்டென்று பிசாசு அறிந்திருக்கிறான். (யோபு 1:11; 2:4, 5) எங்குமே தப்பமுடியாமல், அவனும் அவனைச்சேர்ந்த பேய்களும் வெறிபிடித்த பூச்சிகளின் கூட்டத்தைப்போல கொந்தளிக்கும் பெருந்திரளான மனிதவர்க்கத்தின்மீது தங்களுடைய ஆத்திரத்தை வெளிக்காட்டுகின்றனர்.—ஏசாயா 57:20.
3. நம் காலத்தில் சாத்தான் தாழத்தள்ளப்பட்டிருப்பதன் பாதிப்பு என்னவாக இருந்திருக்கிறது?
3 மனித கண்களால் காணமுடியாத இந்த நிகழ்ச்சிகள், மனிதவர்க்கத்தின் மத்தியில் ஏன் இப்போது பொதுவாகவே ஒழுக்க சீர்குலைவு இருந்துவருகிறது என்பதை விளக்கிக் காட்டுகின்றன. ஒத்திசைவாக வாழவே முடியாத தேசங்களின் பிரிவினைகளை ஒன்றிணைக்க மனிதன் எடுக்கும் பைத்தியக்காரத்தனமான முயற்சிகளையும் விளக்கிக் காட்டுகின்றன. ஜாதி, இன தொகுதிகள் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி லட்சக்கணக்கான ஆட்கள் வீடிழந்தும் நாடிழந்தும் போகும்படி செய்கின்றன. அக்கிரமம் மிதமிஞ்சிய அளவில் அதிகரிப்பதில் ஆச்சரியமேயில்லை! இயேசு முன்னுரைத்தபடி, ‘அக்கிரமம் மிகுதியாவதினால் மனிதவர்க்கத்திலுள்ள அநேகருடைய அன்பு தணிந்துபோகிறது.’ எங்குப் பார்த்தாலும், இன்றைய கொந்தளிப்பான மானிடத்தை ஒத்திசைவின்மையும் அன்பின்மையும் அடையாளப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.—மத்தேயு 24:12.
4. கடவுளுடைய மக்கள் ஏன் விசேஷ ஆபத்தில் இருக்கின்றனர்?
4 உலக நிலைமையைப் பார்க்கையில், தம்மைப் பின்பற்றுபவர்களுக்காக இயேசு செய்த ஜெபம் ஆழ்ந்த முக்கியத்துவத்தை ஏற்கிறது: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல் நீர் அவர்களைத் [தீயோனிடமிருந்து, NW] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:15, 16) இன்று, அந்த “தீயோன்,” “கடவுளின் கட்டளைகளைக் கைக்கொண்டு, இயேசுவைக்குறித்து சாட்சிபகரும் வேலையைக் கொண்டவர்களுக்கு” எதிராக விசேஷமாய் கோபத்தைக் காட்டிவருகிறான். (வெளிப்படுத்துதல் 12:17, NW) யெகோவாவின் கவனமான, அன்பான பராமரிப்பு இல்லாவிடில் அவருடைய உண்மையுள்ள சாட்சிகள் துடைத்தழிக்கப்படுவார்கள். நம்முடைய ஆவிக்குரிய பாதுகாப்புக்கும் நலனுக்கும் கடவுள் செய்யும் எல்லா ஏற்பாடுகளையும் அனுகூலப்படுத்திக்கொள்வதன் பேரிலேயே நம்முடைய வாழ்க்கை சார்ந்திருக்கிறது. கொலோசெயர் 1:29-ல் அப்போஸ்தலன் உந்துவித்தபடி, கிறிஸ்து மூலம் அவருடைய வல்லமை செயல்படுவதன் பிரகாரம் நாம் பிரயாசப்படுவதை அது உட்படுத்துகிறது.
5, 6. கொலோசெய கிறிஸ்தவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு உணர்ந்தார், 1995-ற்கான தலைப்பு வசனம் ஏன் பொருத்தமாயிருக்கிறது?
5 பவுல் அவர்களை நேரில் பார்த்ததே இல்லையென்றாலும், கொலோசெயில் உள்ள தன் சகோதரர்களை அவர் அன்புகூர்ந்தார். அவர்களிடம் சொன்னார்: “உங்களுக்கான என்னுடைய கவலை எவ்வளவு ஆழமாயிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நலமாயிருக்கும்.” (கொலோசெயர் 2:1, நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு, J. B. ஃபிலிப்ஸ் எழுதினது) இயேசுவைப் பின்பற்றுபவர்கள் உலகின் பாகமாயில்லாததால், அந்தத் “தீயோன்” சகோதரர்களின் மத்தியில் உலக ஆவியை விதைப்பதன் மூலம் அவர்களுடைய ஒருமைப்பாட்டைக் குலைக்க முயற்சி செய்பவனாயிருப்பான். கொலோசெயிலிருந்து எப்பாப்பிரா கொண்டுவந்த செய்தி, ஓரளவு இது நடந்துகொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டியது.
6 தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களிடம் பவுலுக்கிருந்த ஒரு பிரதான அக்கறையை இவ்வார்த்தைகளில் தொகுத்துரைக்கலாம்: “அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருங்கள்.” ஐக்கியமின்மையும் அன்பின்மையும் நிறைந்த உலகில் இன்று அவருடைய வார்த்தைகள் விசேஷ அர்த்தமுடையவையாக இருக்கின்றன. பவுலின் ஆலோசனையை இருதயத்தில் ஏற்றால், யெகோவாவின் பராமரிப்பை நாம் மகிழ்ந்தனுபவிப்போம். நம்முடைய வாழ்க்கையில் அவருடைய ஆவியின் பலத்தையும் அனுபவிப்போம், இது உலக அழுத்தங்களை எதிர்த்துநிற்க உதவிபுரியும். இந்த ஆலோசனை எவ்வளவு ஞானமுள்ளது! எனவே கொலோசெயர் 2:2, 1995-ற்கான நம்முடைய தலைப்பு வசனமாக இருக்கும்.
7. உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் என்ன ஒத்திசைவு இருக்க வேண்டும்?
7 கொரிந்தியருக்கு எழுதின முந்தைய கடிதத்தில் அப்போஸ்தலன் மனித சரீரத்தை உதாரணமாகப் பயன்படுத்தினார். அபிஷேகம்பெற்ற கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய சபையில் “பிரிவினையுண்டாயிராமல்” மாறாக அதன் “அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படி” எழுதினார். (1 கொரிந்தியர் 12:12, 24, 25) என்னே ஓர் அற்புதமான உதாரணம்! நம்முடைய அவயவங்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன, ஒவ்வொன்றும் நம்முடைய மீதி சரீரத்துடன் இணைந்திருக்கின்றன. இதே நியமந்தான் அபிஷேகம்பெற்றவர்களையும் பரதீஸிய பூமியில் வாழும் நம்பிக்கையுடைய லட்சக்கணக்கானவர்களையும் உள்ளடக்கிய நம்முடைய உலகளாவிய சகோதர கூட்டத்தாருடைய விஷயத்திலும் பொருந்துகிறது. சுதந்திரமாக வாழ விரும்பி, உடன் கிறிஸ்தவர்களடங்கிய குழுவிலிருந்து நம்மைநாமே துண்டித்துக் கொள்ளக்கூடாது! கிறிஸ்து இயேசு மூலம் செயல்படுவதாக, கடவுளுடைய ஆவி நம்முடைய சகோதரர்களுடன் கொண்டுள்ள கூட்டுறவின் மூலம் அபரிமிதமான அளவில் பொழிகிறது.
அறிவுக்கேற்ற ஒத்திசைவு
8, 9. (அ) சபையில் ஒத்திசைவை நாம் வளர்க்கவேண்டுமானால், எது அத்தியாவசியமாயிருக்கிறது? (ஆ) கிறிஸ்துவைப் பற்றிய அறிவை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்?
8 கிறிஸ்தவ ஒத்திசைவு அறிவோடு சம்பந்தப்பட்டதாக, விசேஷமாகக் கிறிஸ்துவைப் பற்றியதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது என்பது பவுல் சொன்ன முக்கிய குறிப்புகளில் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள் “[அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருந்து, NW] பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய [பரிசுத்த, NW] இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டும்” என்று பவுல் எழுதினார். (கொலோசெயர் 2:2) கடவுளுடைய வார்த்தையைப் படிக்க ஆரம்பித்ததுமுதல், நாம் அறிவை, உண்மைகளை பெற்றவர்களாக இருக்கிறோம். இந்த உண்மைகளில் எவ்வளவு உண்மைகள் கடவுளுடைய நோக்கத்தில் பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் பாகமாக, இயேசுவின் முக்கிய பங்கை விளங்கிக் கொள்கிறோம். “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் [பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன, NW].”—கொலோசெயர் 2:3.
9 இயேசுவைக் குறித்தும் கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய பங்கைக் குறித்தும் நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களா? கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்களாகவும் இரட்சிக்கப்பட்டவர்களாகவும் உரிமைபாராட்டுபவர்களாக, அவரைப் பற்றி பேசத் துரிதப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களுக்கு அவரைத் தெரியுமா? தெரியவே தெரியாது, எப்படிச் சொல்லலாமென்றால் பெரும்பான்மையர் வேதப்பூர்வமற்றத் திரித்துவ கொள்கையை நம்பிவருகின்றனர். இதைப்பற்றிய சத்தியத்தை அறிந்திருப்பது மாத்திரமல்லாமல், இயேசு என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதைப் பற்றி நீங்கள் பரந்தளவில் அறிந்தவர்களாயும் இருக்கிறீர்கள். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி புகட்டப்படும் அறிவூட்டும் படிப்பின் மூலம் இவ்விஷயத்தில் லட்சக்கணக்கானோர் உதவியளிக்கப்பட்டு இருக்கின்றனர். எனினும், இயேசுவைப் பற்றியதிலும் அவருடைய வழிகளைப் பற்றியதிலுமான அறிவை நாம் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும்.
10. மறைத்துவைக்கப்பட்ட அறிவு எவ்விதத்தில் நமக்கு கிடைக்கக்கூடியதாயிருக்கிறது?
10 “ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம்” இயேசுவில் “பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்ற வாக்கியம், அத்தகைய அறிவு நம்முடைய கிரகிக்கும் திறமைக்கு அப்பாற்பட்டது என்பதை அர்த்தப்படுத்தாது. மாறாக, அது ஓரளவு திறந்தவெளி சுரங்கத்தைப்போல இருக்கிறது. எங்குத் தோண்டுவது என்று எண்ணி, பரந்த பகுதியை ஆய்வுசெய்ய வேண்டியதில்லை. இயேசு கிறிஸ்துவைப் பற்றி பைபிள் எடுத்துக்காட்டுவதோடு மெய்யறிவு ஆரம்பமாகிறது என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசுவின் பங்கை நாம் முழுமையாக மதித்துணரும்போது, மெய் ஞானத்தின் மேலும் திருத்தமான அறிவின் பொக்கிஷங்களைப் பெறுகிறோம். ஆகவே, இன்னும் ஆழமாகத் தோண்டி, ஏற்கெனவே தோண்டிய இந்த மூலத்திலிருந்து கிடைக்கும் அதிகமான ரத்தினங்களையோ விலைமதிப்புள்ள பொருட்களையோ எடுக்க வேண்டும்.—நீதிமொழிகள் 2:1-5.
11. இயேசுவின் பேரில் தியானிப்பதன் மூலம் நம்முடைய அறிவையும் ஞானத்தையும் எவ்வாறு அதிகரிக்கலாம்? (இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவுவது, அல்லது இதர உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்கிக் காட்டுங்கள்.)
11 உதாரணமாக, இயேசு தம்முடைய அப்போஸ்தலரின் கால்களைக் கழுவினார் என்பதை நாம் அறிந்திருக்கலாம். (யோவான் 13:1-20) என்றாலும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த பாடத்தின் மீதோ அவர் காட்டிய மனநிலையின் மீதோ நாம் தியானம் செய்திருக்கிறோமா? அவ்வாறு செய்வதன் மூலம், நம்மை நீண்டகாலமாக எரிச்சலடைய செய்திருக்கிற ஆள்தன்மையுடைய ஒரு சகோதரனையோ சகோதரியையோ எவ்வாறு பாவிப்பது என்பதன் பேரில் மாற்றத்தைச் செய்யவைக்கக்கூடிய, ஆம், உந்துவிக்கக்கூடிய ஞானப் பொக்கிஷத்தை நம்மால் அகழ்ந்து எடுக்க முடியும். அல்லது, நமக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒரு நியமிப்பைப் பெற்றால், யோவான் 13:14, 15-ன் முழு உட்கருத்தைப் பெற்ற பிறகு நாம் வித்தியாசமாகப் பிரதிபலிக்கலாம். அவ்விதமாகத்தான் அறிவும் ஞானமும் நம்மைப் பாதிக்கின்றன. கிறிஸ்துவைப் பற்றிய அதிகப்படியான அறிவுக்கேற்ப நம்மையே அதிக நெருக்கமாக உருவமைத்துக் கொள்ளும்போது பிறர் மீதான பாதிப்பு என்னவாயிருக்கும்? ஒருவேளை மந்தையானது ‘அன்பிலே அதிக ஒத்திசைவாக ஒன்றுபட்டிருக்கும்.’a
கருத்தொருமைக்கேடு ஒத்திசைவை குலைத்துப்போடும்
12. எந்த அறிவைக் குறித்ததில் நாம் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்?
12 திருத்தமான அறிவு ‘அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருப்பதற்கு’ நமக்கு உதவிபுரிந்தால் “போலியறிவு” எனப்படுவதிலிருந்து என்ன விளைவடைகிறது? வாக்குவாதம், சண்டை விசுவாசத்திலிருந்து வழுவுதல் ஆகிய நேரெதிரான காரியங்களே. ஆகவே பவுல் தீமோத்தேயுவுக்கு எச்சரித்ததுபோல அத்தகைய பொய் அறிவுக்கெதிராக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 6:20, 21, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) பவுல் இதையும் எழுதினார்: “ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:4, 8.
13, 14. (அ) அறிவைக் குறித்ததில் கொலோசெய சகோதரர்கள் ஏன் ஆபத்தான நிலையில் இருந்தனர்? (ஆ) இன்று, தாங்கள் அதுபோன்ற ஆபத்தில் இல்லை என்று ஏன் சிலர் உணரலாம்?
13 கொலோசெய கிறிஸ்தவர்கள் போலியறிவு என்னப்பட்டதற்கு ஈடான தந்திரமான செல்வாக்கினால் சூழப்பட்டிருந்தனர். கொலோசெயைச் சுற்றியிருந்த ஆட்கள் கிரேக்க தத்துவங்களை உயர்வாக மதித்தனர். அதே சமயத்தில் யூத ஆட்களும் இருந்தனர், இவர்கள், பண்டிகை நாட்கள், உணவு கட்டுப்பாடுகள் போன்று மோசேய நியாயப்பிரமாணத்தில் சொல்லப்படுபவற்றைக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். (கொலோசெயர் 2:11, 16, 17) தன் சகோதரர்கள் மெய்யறிவைப் பெறுவதற்கு எதிராகப் பவுல் இல்லை. ஆனால் வாழ்க்கையைக் குறித்ததிலும் நடவடிக்கைகளைக் குறித்ததிலும் நயவசனிப்புகளைப் பயன்படுத்தி மனித நோக்குநிலையையே யோசிக்கும்படி அவர்களை நம்பவைத்து, எவரும் கொள்ளை கொண்டு போகாதபடி ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியம். அத்தகைய வேதப்பூர்வமற்ற கருத்துக்களாலும் வாழ்க்கை பற்றிய மனப்போக்குகளாலும் சபையிலுள்ள சிலர் தங்களுடைய எண்ணத்தையும் தீர்மானங்களையும் வழிநடத்தவிட்டால், சபை அங்கத்தினர்களுக்கிடையே இருக்கும் ஒத்திசைவுக்கும் அன்புக்கும் எதிராகவே அது செயல்படும் என்பதை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும்.
14 ‘உண்மைதான், கொலோசெயர் எதிர்ப்பட்ட ஆபத்தை என்னால் காண முடிந்தாலும், ஆத்துமா அழியாமை அல்லது திரித்துவ கடவுள் போன்ற கிரேக்க கொள்கைகளால் செல்வாக்கு செலுத்தப்படும் ஆபத்தில் நான் இல்லை என்றோ அல்லது நான் தப்பிவந்த பொய் மதத்தினுடைய புறமத விடுமுறை நாட்களால் கவர்ந்திழுக்கப்படும் எந்தவொரு ஆபத்தையும் என்னால் காண முடியவில்லை என்றோ’ நீங்கள் யோசிக்கக்கூடும். நல்லது. இயேசுவின் மூலம் வெளிப்பட்டும் வேதாகமங்களில் கிடைக்கக்கூடியதுமான அடிப்படை சத்தியத்தின் மேன்மைத்துவத்தின் பேரில் உறுதிபூண்டிருப்பது சிறந்த ஒரு காரியம். என்றபோதிலும், இன்று நிலவிவரும் மற்ற தத்துவங்களாலோ மனித கருத்துக்களாலோ நாம் ஆபத்தில் இருக்கலாம் அல்லவா?
15, 16. ஒரு கிறிஸ்தவனின் சிந்தனையை, வாழ்க்கையைப் பற்றிய என்ன நோக்குநிலை பாதிக்கலாம்?
15 அத்தகைய ஒரு மனப்பான்மை நீண்ட காலமாக இருந்துவந்திருக்கிறது: “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் இப்போது எங்கே? நம் பிதாக்கள் நித்திரையடைந்தும் சகலமும் எப்போதும் இருந்துவந்ததுபோல அப்படியே தொடர்ந்து இருந்துவருகிறதே.” (2 பேதுரு 3:4, புதிய ஆங்கில பைபிள்) அந்த எண்ணத்தை வேறு வார்த்தைகளில் போடலாம், நோக்குநிலையோ அதேதான். எடுத்துக்காட்டாக, ‘பல பத்தாண்டுகளுக்கு முன்பாக நான் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது முடிவு அருகாமையில் இருந்தது. ஆனால் அது இன்னும் வரவில்லை. அது எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்?’ என்று ஒருவர் விவாதிக்கக்கூடும். முடிவு எப்போது வரும் என்று எந்த மனிதனுக்கும் தெரியாது என்பது உண்மைதான். எனினும், இயேசு ஊக்குவித்த நோக்குநிலையைக் கவனியுங்கள்: “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திரு[ங்கள்].”—மாற்கு 13:32, 33.
16 எப்போது முடிவு வரும் என்பதை அறியாது, முழுநிறைவான “சாதாரண” வாழ்க்கைக்காகத் திட்டமிடும் நோக்கை ஏற்பது எவ்வளவு ஆபத்தானதாயிருக்கும்! அந்த அணுகுமுறையானது, ‘நல்ல வருமானத்தையும் செளகரியமான வாழ்க்கையையும் அனுபவித்துமகிழுவதற்கு என்னை (அல்லது என் பிள்ளைகள்) அனுமதிக்கும் கெளரவமான வேலையைக் கொண்டிருக்கும் படிகளை நான் எடுத்தேனானால் நல்லாயிருக்கும்; கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகி, பிரசங்க வேலையில் சுமாரான பங்கை நிச்சயமாகவே கொண்டிருப்பேன்; ஆனால் பிரயாசப்படவோ பெரிய தியாகங்களைச் செய்யவோ எந்தவொரு காரணமுமில்லை,’ என்று யோசிப்பதில் வெளிக்காட்டப்படக்கூடும்.—மத்தேயு 24:38-42.
17, 18. என்ன கருத்தைக் கொண்டிருக்க இயேசுவும் அப்போஸ்தலரும் நம்மை ஊக்குவித்தனர்?
17 என்றபோதிலும், நற்செய்தி பிரசங்கிப்பதைக் குறித்ததில் அவசரயுணர்வோடு வாழ்ந்து, பிரயாசப்பட்டு, அர்ப்பணிப்புகள் செய்ய மனமுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பரிந்துரைத்தனர் என்பதை மறுக்க முடியாது. பவுல் எழுதினார்: “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும், . . . கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.”—1 கொரிந்தியர் 7:29-31; லூக்கா 13:23, 24; பிலிப்பியர் 3:13-15; கொலோசெயர் 1:29; 1 தீமோத்தேயு 4:10; 2 தீமோத்தேயு 2:4; வெளிப்படுத்துதல் 22:20.
18 செளகரியமான வாழ்க்கையை நம்முடைய இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறவே அறிவுறுத்தாமல், பவுல் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதினார்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். . . . விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.”—1 தீமோத்தேயு 6:7-12.
19. இயேசு உற்சாகப்படுத்திய வாழ்க்கை பற்றிய கருத்தை சபையிலுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டால், சபை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
19 ‘நல்ல அறிக்கை பண்ண’ கடுமையாகப் பிரயாசப்படும் வைராக்கியமுள்ள கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய சபை இருக்கையில், ஒத்திசைவு இயல்பானதே. “உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு” என்ற மனப்பான்மைக்கு அவர்கள் இடமளிப்பது கிடையாது. (லூக்கா 12:19) அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் ஒருமைப்பட்டவர்களாக, ஒருக்காலும் திரும்பவும் செய்யப்படாத இந்த வேலையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முழுமையான பங்கை வகிக்க அர்ப்பணங்கள் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கின்றனர்.—பிலிப்பியர் 1:27, 28-ஐ ஒத்துப்பாருங்கள்.
நயவசனிப்புகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்
20. கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படும் இன்னொரு காரியம் என்ன?
20 நிச்சயமாகவே, ‘அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருப்பதோடு’ குறுக்கிடக்கூடிய ‘நயவசனிப்புகளாலோ’ மாயமான தந்திரத்தினாலோ ‘வஞ்சிக்கப்படுவதற்கு’ கிறிஸ்தவர்களுக்கு வேறு வழிகளும் உண்டு. ஜெர்மனியிலிருக்கும் உவாட்ச் டவர் சொஸையிட்டி அலுவலகம் எழுதியது: “நிகழ்ந்த ஒரு சம்பவம் சர்ச்சைக்கு வழிநடத்தியது. சகோதரர் ஒருவர் உபயோகித்த சிகிச்சைமுறைகள் சம்பந்தப்பட்ட விவாதங்களில் பிரஸ்தாபிகளும் மூப்பர்களுங்கூட வித்தியாசப்பட்ட பக்கங்களில் சேர்ந்துகொண்டு ஆதரவளித்தனர்.” அவர்கள் மேலுமாக சொன்னார்கள்: “வெவ்வேறான சிகிச்சை முறைகள் புழக்கத்தில் இருப்பதாலும் நோயாளிகளும் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாலும், இது சர்ச்சைக்குரிய காரியமாயிருக்கிறது; உபயோகிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆவியுலகத்தோடு சம்பந்தமுடையதாயிருந்தால் ஆபத்தை வரவழைக்கும்.”—எபேசியர் 6:12.
21. கிறிஸ்தவன் எவ்வாறு இன்று சரியான குவியை இழக்கக்கூடும்?
21 கிறிஸ்தவர்கள் கடவுளை வழிபட உயிரோடும் ஆரோக்கியமாகவும் நிலைத்திருக்க விரும்புகின்றனர். என்றாலும், இந்த ஒழுங்குமுறையில் அபூரணத்தின் விளைவாக உண்டாகும் வயோதிபத்திற்கும் நோய்க்கும் நாம் ஆளாகிறோம். சுகநலப் பிரச்சினைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மாறாக, நமக்கும் பிறருக்குமான மெய்யான பரிகாரத்தின் பேரில் கவனம் செலுத்த வேண்டும். (1 தீமோத்தேயு 4:16) கிறிஸ்துவே அந்தப் பரிகாரத்திற்கு குவிமையமாக திகழ்கிறார், கொலோசெயருக்குப் பவுல் எழுதிய அறிவுரைக்கும் அவரே மையமாக திகழ்ந்தார். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், சிலர் “நயவசனிப்”புகளோடு வந்து கிறிஸ்துவிலிருந்து நம்முடைய கவனத்தை விலக்கி, ஒருவேளை நோய் கண்டுபிடிப்பு முறைகளிடமோ சிகிச்சைகளிடமோ அல்லது பத்தியங்களிடமோ கவனத்தைத் திருப்புவர் என்று பவுல் சுட்டிக்காட்டினார்.—கொலோசெயர் 2:2-4.
22. நோய் கண்டுபிடிப்பு முறைகள் மற்றும் சிகிச்சையைப் பற்றியதில் உண்டான பல்வேறு உரிமைபாராட்டுதல்கள் சம்பந்தமாக என்ன சமநிலையான மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும்?
22 உலகெங்கிலுமுள்ள மக்கள் எல்லா விதமான சிகிச்சைகளைப் பற்றியும் நோய் நிர்ணயிப்பு வழிமுறைகளைப் பற்றியுமான விளம்பரங்களாலும் பிரச்சாரங்களாலும் சரமாரியாகத் தாக்கப்படுகின்றனர். அதில் சில பரவலாக உபயோகிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன; மற்றவை பரவலாக விமர்சிக்கப்பட்டு சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.b தன்னுடைய ஆரோக்கியம் சம்பந்தமாக என்ன செய்வார் என்பதை அவரவரே தீர்மானிக்கும் உத்தரவாதமுள்ளவராக இருக்கிறார். ஆனால் கொலோசெயர் 2:4, 8-ல் உள்ள அறிவுரையை ஏற்றுக்கொள்பவர்கள், நிவாரணம் வேண்டியிருக்கிற ராஜ்ய நம்பிக்கையில் குறைவுபட்ட ஆட்களில் அநேகரை வழிவிலகி செல்ல வைக்கும் ‘நயவசனிப்புகளாலோ’ ‘மாயமான தந்திரத்தினாலோ’ வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாக்கப்படுவார்கள். குறிப்பிட்ட ஒரு சிகிச்சையானது நல்லதாக தெரிந்து, அதைக் குறித்து ஒரு கிறிஸ்தவன் நம்பினாலும், கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் இதை அவர் ஊக்குவிக்கக்கூடாது. ஏனென்றால் பரவலான பேச்சுக்கும் விவாதத்துக்குமுரிய விஷயமாகவும் அது மாறிவிடக்கூடும். இப்படிச் செய்வாரானால், சபையில் ஒத்திசைவு நிலவியிருப்பதன் முக்கியத்துவத்தை மிகவும் மதிக்கிறார் என்பதை வெளிக்காட்டலாம்.
23. நாம் ஏன் விசேஷமாகச் சந்தோஷப்பட வேண்டும்?
23 கிறிஸ்தவ ஒத்திசைவு மெய் சந்தோஷத்திற்கான ஆதாரமாயிருக்கிறது என்று பவுல் வலியுறுத்தினார். இன்று இருப்பதைக் காட்டிலும் அவருடைய நாளில் சபைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் கொலோசெயருக்கு அவரால் இவ்வாறு எழுத முடிந்தது: “சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.” (கொலோசெயர் 2:5; இதையும் பாருங்கள்: கொலோசெயர் 3:14) நாம் சந்தோஷப்படுவதற்கு எத்தகைய காரணமிருக்கிறது! நம்முடைய சொந்த சபையில் ஒத்திசைவுக்கும் நல்லொழுங்குக்கும் உறுதியான விசுவாசத்துக்குமான மெய்யான அத்தாட்சியை நம்மால் பார்க்க முடியும். பூமி முழுவதும் உள்ள கடவுளுடைய மக்களின் பொதுவான நிலைமையை இது பிரதிபலிக்கிறது. ஆகவே தற்கால ஒழுங்குமுறையில் மீதமிருக்கும் குறுகிய காலத்தில், நம்மில் ஒவ்வொருவரும் ‘அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருக்க’ திடத்தீர்மானமுள்ளவர்களாக இருப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a கற்றுக்கொள்வதற்கு பல்வேறு பதிவுகள் இருந்தாலும் பின்வரும் உதாரணங்களிலிருந்து, இயேசுவைப் பற்றி நீங்கள்தானே தனிப்பட்ட விதத்தில் என்ன கற்றுக்கொள்ளக்கூடும் என்று பாருங்கள், இது உங்களுடைய சபையில் ஒத்திசைவை வளர்க்க உதவும்: மத்தேயு 12:1-8; லூக்கா 2:51, 52; 9:51-55; 10:20; எபிரெயர் 10:5-9.
b தி உவாட்ச்டவர், ஜூன் 15, 1982, 22-9 பக்கங்களைப் பாருங்கள்.
கவனித்தீர்களா?
◻ யெகோவாவின் சாட்சிகளுக்கு 1995-ன் வருடாந்தர வசனம் என்ன?
◻ கொலோசெய கிறிஸ்தவர்கள் ஏன் அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருக்க வேண்டும், நாமும் இன்று ஏன் அவ்வாறிருக்க வேண்டும்?
◻ வாழ்க்கையைப் பற்றிய என்ன தந்திரமான நோக்குநிலைக்கு எதிராக, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் விசேஷமாய் விழிப்புடனிருக்க வேண்டும்?
◻ ஆரோக்கியம் சம்பந்தமாகவும் நோய் கண்டுபிடிப்பு வழிமுறைகள் சம்பந்தமாகவும் உள்ள நயவசனிப்புகளால் கிறிஸ்தவர்கள் ஏன் வஞ்சிக்கப்படாதபடிக்கு விழிப்புடன் இருக்க வேண்டும்?
[பக்கம் 17-ன் படங்கள்]
உங்களுடைய எதிர்கால திட்டங்கள் இயேசுவின் வந்திருத்தலை மையமாகக் கொண்டிருக்கின்றனவா?