தப்பிப்பிழைப்பதற்காக தூய்மையான மதத்தைக் கடைபிடித்தல்
“பிதாவாகிய தேவனுடைய பார்வையில் தூய்மையும் உண்மையுமான மதம் . . . உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வது போன்றக் காரியங்களில் தன்னை வெளிப்படுத்தும்.”—யாக்கோபு 1:27, பிலிப்ஸ்.
1. மதம் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது? பொய் மற்றும் உண்மை மதத்திற்கிடையிலான வித்தியாசத்தை தீர்மானிப்பதற்கு நியாயமாகவே உரிமை உடையவர் யார்?
மதம் என்பது, “பிரபஞ்சத்தின் சிருஷ்டிகராகவும் அதிபதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மீமானிட வல்லமையில் மனிதனின் நம்பிக்கை மற்றும் பயபக்தியின் வெளிக்காட்டு,” என்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், மெய் மதத்துக்கும் பொய் மதத்துக்குமிடையிலான வித்தியாசத்தைத் தீர்மானிப்பதற்கு யாருக்கு நியாயமாகவே உரிமை இருக்கிறது? நிச்சயமாகவே நம்பப்படுகிறவரும் பயபக்திக் காட்டப்படுகிறவருமான சிருஷ்டிகருக்கே. யெகோவா மெய் மற்றும் பொய் மதத்தின் சம்பந்தமாக தம்முடைய நிலைநிற்கையைத் தம்முடைய வார்த்தையில் தெளிவாகக் காண்பித்திருக்கிறார்.
பைபிளில் “மதம்” என்ற வார்த்தை
2. “வணக்க முறை” அல்லது “மதம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க வார்த்தையை அகராதிகள் எவ்வாறு விளக்குகின்றன? அது என்ன மாதிரியான வணக்க முறைகளுக்குப் பொருத்தப்படலாம்?
2 “வணக்க முறை” அல்லது “மதம்” என்பதாக மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பதற்குரிய கிரேக்க வார்த்தை திரெஸ்கீயா (thre-skeiʹa). புதிய ஏற்பாட்டின் ஒரு கிரேக்க–ஆங்கில அகராதி (A Greek–English Lexicon of the New Testament) இந்த வார்த்தைக்கு “விசேஷமாக மத ஆராதனை அல்லது மதஉட்பிரிவில் வெளிக்காட்டப்படும் வண்ணமாக கடவுள் வணக்கம், மதம், என்பதாக சொற்பொருள் விளக்கமளிக்கிறது. புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (The Theological Dictionary of the New Testament) கூடுதலான விவரங்களை அளித்து, இவ்விதமாகச் சொல்கிறது: “சொல்விளக்கம் குறித்து கருத்து வேறுபாடு உண்டு; . . . நவீன கல்விமான்கள் therap– (‘சேவிப்பதற்கு’) என்பதைச் சேர்க்க விரும்புகின்றனர். . . . பொருளின் தனிச்சிறப்பும்கூட கவனிக்கப்படலாம். சரியான உட்கருத்து ‘மதசம்பந்தமான வைராக்கியம்’ . . . , ‘கடவுள் வணக்கம்,’ ‘மதம்.’ . . . ஆனால் தவறான உட்கருத்தும்கூட இருக்கிறது, அதாவது, ‘மத சம்பந்தமாக வரம்புகடந்தச் செயல்,’ ‘தவறான வணக்கம்.’” இவ்விதமாக திரெஸ்கீயா (thre-skeiʹa) நல்ல அல்லது கெட்ட “மதம்” அல்லது “வணக்க முறை” என்பதாக மொழிபெயர்க்கப்படலாம்.
3. அப்போஸ்தலனாகிய பவுல் “வணக்க முறை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தினார்? கொலோசெயர் 2:19-ன் மொழிபெயர்ப்பில் என்ன அக்கறையூட்டும் குறிப்பு காணப்படுகிறது?
3 இந்த வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் நான்கு தடவைகள் மாத்திரமே தோன்றுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் பொய் மதத்தைக் குறிப்பிட அதை இரண்டு தடவைகள் பயன்படுத்தினார். அப்போஸ்தலர் 26:5-ல் கிறிஸ்தவனாக ஆவதற்கு முன்னால் “மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு [“மதத்துக்கு,” பிலிப்ஸ்] இசைந்தபடி” அவர் ஒரு பரிசேயனாக இருந்ததாகச் சொல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலோசெயருக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் இவ்விதமாக எச்சரித்தார்: “மாயமான தாழ்மையிலும், தேவ தூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று . . . எவனும் உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்.” (கொலோசெயர் 2:19) இப்படிப்பட்ட தேவ தூத வணக்கம் அந்நாட்களில் பிரிகியாவில் இருந்து வந்தது, ஆனால் அது ஒரு பொய் மத முறையாக இருந்தது.a ஒரு சில பைபிள் மொழிபெயர்ப்புகள் திரெஸ்கீயா-வை “மதம்” என்பதாக கொலோசெயர் 2:19-ல் மொழிபெயர்க்கையில், பெரும்பாலானவை “வணக்கம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. புதிய உலக மொழிபெயர்ப்பு, திரெஸ்கீயா-வை எப்போதும் ஒரு “வணக்க முறை” என்பதாக மொழிபெயர்க்கிறது. ஒத்துவாக்கிய பைபிள் அடிக்குறிப்பு, ஒவ்வொரு சமயமும், மாற்று மொழிபெயர்ப்பாகிய “மதம்” லத்தீன் மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறது.
கடவுளுடைய நோக்குநிலையில் “மாசில்லாத சுத்தமான பக்தி”
4, 5. (எ) யாக்கோபின் பிரகாரம், மதத்தின் பேரில் யாருடைய நிலைநிற்கை அதிமுக்கியமாகும்? (பி) எது ஒருவருடைய வணக்க முறையை வீணானதாக்கக்கூடும்? “வீணாக” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையின் பொருள் என்ன?
4 திரெஸ்கீயா என்ற வார்த்தை தோன்றும் மற்ற இரண்டு இடங்கள், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினராக இருந்த சீஷனாகிய யாக்கோபு எழுதிய கடிதத்திலாகும். அவர் எழுதினார்: “ஒருவன் தான் முறையான ஒரு வணக்கத்தான் [‘மதப்பற்றுள்ளவனாக,’ பிலிப்ஸ்] என்று எண்ணியும் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்துக் கொண்டேயிருந்தால், இந்த மனிதன் வணக்க முறை [“மதம்,” பிலிப்ஸ்] வீணாயிருக்கும். நம்முடைய பிதாவாகிய தேவனுடைய நோக்குநிலையில் மாசில்லாத சுத்தமான பக்தியாக இருக்கும் வணக்கமுறை இதுவே: திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்பதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே.”—யாக்கோபு 1:26, 27, NW.
5 ஆம், நாம் யெகோவாவின் அங்கீகாரத்தைக் கொண்டிருந்து அவர் வாக்களித்திருக்கும் புதிய உலகினுள் தப்பிப் பிழைக்க விரும்பினால், மதத்தின் பேரில் யெகோவாவின் நிலைநிற்கையை கவனிப்பது இன்றியமையாததாகும். (2 பேதுரு 3:13) ஒரு நபர் தனக்குத்தானே உண்மையில் மதப்பற்றுள்ளவராகத் தோன்றக்கூடும், ஆனால் அவருடைய வணக்க முறை வீணாக இருக்கக்கூடும் என்பதாக யாக்கோபு காண்பிக்கிறார். “வீணாக” என்பதாக இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை “பயனில்லாமல், வெறுமையாக, கனி கொடுக்காத, பிரயோஜனமற்ற, சிறிதும் உதவி செய்ய முடியாத, உண்மையில்லாத” என்றும்கூட பொருள்படுகிறது. கிறிஸ்தவன் என்று உரிமைப்பாராட்டிக் கொள்ளும் ஒருவர் தன் நாவை அடக்காமலும் கடவுளைத் துதிக்கவும் தன் உடன் கிறிஸ்தவர்களைக் கட்டியெழுப்பவும் அதை பயன்படுத்தாமலிருந்தால், இது இவ்விதமாக இருக்கக்கூடும். அவர் “தன்னுடைய சொந்த இருதயத்தை வஞ்சித்துக் கொண்டு” “கடவுளுடைய பார்வையில் மாசில்லாத சுத்தமான மதத்தைக்” கடைபிடிக்கிறவராக இருக்கமாட்டார். (பிலிப்ஸ்) யெகோவாவின் நோக்குநிலையே முக்கியமாகும்.
6. (எ) யாக்கோபுடைய கடிதத்தின் பொருள் என்ன? (பி) தூய வணக்கத்தின் இன்றியமையாத என்ன தேவையை யாக்கோபு அழுத்திக் கூறினார்? நவீன–நாளைய ஆளும் குழு இந்த விஷயத்தில் என்ன சொல்லியிருக்கின்றனர்?
6 தூய்மையான வணக்கத்தின் சம்பந்தமாக யெகோவா தேவைப்படுத்தும் அனைத்துக் காரியங்களையும் யாக்கோபு குறிப்பிடுவதில்லை. விசுவாசத்தைக் கிரியையினால் நிரூபிப்பதும், சாத்தானிய உலகத்தோடு நட்புக்கொள்ளாதிருப்பதும் என்ற அவருடைய கடிதத்தின் பொதுவான பொருளுக்கு இசைவாக இரண்டு தேவைகளை மட்டுமே அவர் உயர்த்திக் காண்பிக்கிறார். ஒன்று, “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்”பதாக இருக்கிறது. இது உண்மையான கிறிஸ்தவ அன்பை உட்படுத்துகிறது. யெகோவா எப்போதுமே திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் அன்புள்ள அக்கறையை காண்பித்து வந்திருக்கிறார். (உபாகமம் 10:17, 18; மல்கியா 3:5) முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் ஆரம்ப செயல்களில் ஒன்று கிறிஸ்தவ விதவைகளின் சார்பாக இருந்தது. (அப்போஸ்தலர் 6:1–6) பல ஆண்டுகளாக உண்மையுள்ளவர்களாக தங்களை நிரூபித்துக் காட்டியவர்களும் தங்களுக்கு உதவி செய்ய குடும்பத்தைக் கொண்டிராதவர்களுமான துணையற்ற வயதான விதவைகளை அன்புடன் கவனித்துப் பேண ஏற்பாடு செய்ய விவரமான போதனைகளைப் பவுல் அப்போஸ்தலன் கொடுத்தார். (1 தீமோத்தேயு 5:3–16) யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அதேவிதமாகவே “ஏழைகளைக் கவனித்தல்” என்பதன் பேரில் துல்லியமான ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார்கள்: “பொருளுதவி தேவைப்படுகிற உண்மையும் பற்றுறுதியுமுள்ளவர்களைக் கவனித்து வருவதும் உண்மையான வணக்கத்தில் உட்பட்டிருக்கிறது.” (நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கங்கள் 122–3 பார்க்கவும்.) இந்த விஷயத்தில் தங்களைக் கவனக்குறைவாக காண்பிக்கும் மூப்பர்களின் குழுக்களும் அல்லது தனி கிறிஸ்தவர்களும் நம்முடைய தேவனும் பிதாவுமானவரின் நோக்குநிலையில் சுத்தமானதும் மாசற்றதுமான வணக்க முறையின் ஒரு முக்கியமான கடமையைப் புறக்கணிக்கின்றனர்.
“உலகத்தால் கறைபடாமல்”
7, 8. (எ) உண்மை மதத்துக்கு என்ன இரண்டாவது தேவையை யாக்கோபு குறிப்பிட்டார்? (பி) மதகுருக்களும் பாதிரிமார்களும் இந்தத் தேவையை பூர்த்தி செய்கிறார்களா? (சி) யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
7 யாக்கோபு குறிப்பிடும் மெய் மதத்திற்குரிய இரண்டாவது இன்றியமையாத தேவை, “உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்”வதாக இருந்தது. இயேசு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல”; இதற்கு ஒத்தாற்போல், அவரை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள், “உலகத்தின் பாகமாக இருக்க மாட்டார்கள்.” (யோவான் 15:19; 18:36) இவ்வுலகிலுள்ள எந்த மதத்தின் பாதிரிமார் மற்றும் குருமார் பற்றி இவ்விதமாகச் சொல்லப்பட முடியுமா? அவர்கள் ஐக்கிய நாடுகளை ஆதரிக்கிறார்கள். ஐ.மா.-வின் ஏற்பாடாக இருந்த “சர்வ தேசீய சமாதான ஆண்டின்” வெற்றிக்காக தங்கள் ஜெபங்களை ஐக்கியப்படுத்த 1986, அக்டோபரில் இத்தாலியிலுள்ள அசிஸியில் கூடிவரும்படியாக போப் விடுத்திருந்த அழைப்பை அவர்களுடையத் தலைவர்களில் அநேகர் ஏற்றுக்கொண்டனர். என்றபோதிலும் அந்த ஆண்டிலும் அப்போது முதற்கொண்டும் போர்களில் கொல்லப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரை வைத்து தீர்ப்பு செய்கையில் அவர்களுடைய முயற்சிகள் வீணாக இருந்திருக்கின்றன. குருவர்க்கம் அடிக்கடி ஆளும் அரசியல் கட்சியோடு கூடிகுலாவி, அதே சமயத்தில், யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களை அவர்கள் “நண்பர்களாக” கருதும்பொருட்டு எதிர்க்கட்சிகளோடு இரகசியமான தொடர்புகளை வைத்துக் கொள்கின்றனர்.—யாக்கோபு 4:4.
8 யெகோவாவின் சாட்சிகள் அரசியல் விவகாரங்களிலும் இவ்வுலகத்தினுடைய சண்டைகளிலும் நடுநிலைமையைக் காத்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களாக, தங்களுக்கு ஒரு நற்பெயரை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உலகின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து வரும் செய்தி அறிக்கைகளும் நவீன சரித்திர பதிவுகளும் சான்றளிக்கிறபடி அவர்கள் இந்த நிலைநிற்கையைக் காத்துக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே “உலகத்தால் கறைபடாத”வர்களாக இருக்கிறார்கள். அவர்களுடையதே “தேவனுடைய பார்வையில் தூய்மையும் உண்மையுமான மதமாக” இருக்கிறது.—யாக்கோபு 1:27, பிலிப்ஸ்.
உண்மை மதத்தின் மற்ற அடையாளக் குறிகள்
9. மெய் மதத்தின் மூன்றாவது தேவை என்ன? ஏன்?
9 மதம் என்பது “பிரபஞ்சத்தின் சிருஷ்டிகராகவும் அதிபதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு வல்லமையினிடம் பயபக்தியாக” இருக்குமேயானால் நிச்சயமாகவே உண்மை மதம் வணக்கத்தை ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்கு மாத்திரமே செலுத்த வேண்டும். புரியாத ஒரு திருத்துவத்தில் பிதா தன் சர்வவல்லமையை, மகிமையை மற்றும் நித்தியத்துவத்தை வேறு இரு நபர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு திருத்துவ கடவுள் போன்ற ஒரு புறமத கருத்தை போதிப்பதன் மூலம் அது கடவுளைப் பற்றிய மக்களின் புரிந்துகொள்ளுதலை குழப்பிவிடக்கூடாது. (உபாகமம் 6:4; 1 கொரிந்தியர் 8:6) கடவுளுடைய ஈடில்லா பெயராகிய யெகோவாவை அது தெரியப்படுத்த வேண்டும், அந்தப் பெயரைக் கனப்படுத்த வேண்டும், ஆம் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஜனமாக கடவுளுடைய பெயரை தாங்கியிருக்க வேண்டும். (சங்கீதம் 83:17; அப்போஸ்தலர் 15:14) இந்த விஷயத்தில் அதைக் கடைபிடிக்கிறவர்கள் கிறிஸ்து இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும். (யோவான் 17:6) யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளைத் தவிர வேறு யார் இந்தத் தகுதியைப் பூர்த்தி செய்கின்றனர்?
10. ஒரு மதம் கடவுளுடைய புதிய உலகிற்குள் தப்பிப்பிழைத்தலை அளிக்க, அது என்ன செய்ய வேண்டும்? ஏன்?
10 அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார்: “அவராலேயன்றி [இயேசு கிறிஸ்து] வெறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:8–12) ஆகவே கடவுளுடைய புதிய உலகத்துக்குள் தப்பிப்பிழைத்தலை அளிக்கும் தூய்மையான மதம், கிறிஸ்துவிலும் மீட்பின் பலியின் மதிப்பிலும் விசுவாசத்தை ஏவிட வேண்டும். (யோவான் 3:16, 36; 17:3; எபேசியர் 1:7) மேலுமாக யெகோவாவின் ஆளும் அரசராகவும் அபிஷேகம்பண்ணப்பட்ட பிரதான ஆசாரியராகவும் கிறிஸ்துவுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்த உண்மை வணக்கத்தாருக்கு உதவி செய்ய வேண்டும்.—சங்கீதம் 2:6–8; பிலிப்பியர் 2:9–11; எபிரெயர் 4:14, 15.
11. உண்மை மதம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்? இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கை என்ன?
11 தூய்மையான மதம் ஒரே மெய் கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், மனிதன் உண்டுபண்ணிய பாரம்பரியங்கள் அல்லது தத்துவங்களை அல்ல. பைபிள் மட்டும் இல்லையென்றால், நாம் யெகோவாவையும் அவருடைய மகத்தான நோக்கங்களையும் பற்றியோ, இயேசுவையும் மீட்கும் பலியையும் பற்றியோ நாம் எதையும் அறியாதவர்களாக இருப்போம். யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் அசைக்க முடியாத நம்பிகையை மக்களின் மனங்களில் புகட்டுகிறார்கள். அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் மூலமாக பவுல் அப்போஸ்தலனின் கூற்றை ஒப்புக்கொள்வதை நிரூபிக்கின்றனர்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
உண்மை மதம்—ஒரு வாழ்க்கை முறை
12. விசுவாசத்தோடுகூட, வணக்கம் உண்மையானதாக இருக்க எது அவசியமாயிருக்கிறது? என்ன விதங்களில் உண்மை மதம் ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது?
12 இயேசு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:24) ஆகவே, உண்மை வணக்கம் அல்லது வணக்க முறை புற ஆசாரம் பற்றியதாக, சடங்கியல்பாக அல்லது தேவபக்தியான வெளித்தோற்றமாக இல்லை. தூய்மையான வணக்கம் விசுவாசத்தின் மீது சார்ந்ததாக, ஆவிக்குரியதாக இருக்கிறது. (எபிரெயர் 11:6) ஆனால் அந்த விசுவாசம் கிரியைகளினால் ஆதரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். (யாக்கோபு 2:17) உண்மை மதம் பிரபலமான போக்குகளை ஏற்க மறுக்கிறது. அது ஒழுக்கம் மற்றும் சுத்தமான பேச்சின் பைபிள் தராதரங்களை கடைபிடிக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:3–5) அதைக் கடைபிடிக்கிறவர்கள், தங்கள் குடும்ப வாழ்க்கையில், தாங்கள் வேலைசெய்யுமிடங்களில், பள்ளியில், பொழுதுபோக்கிலும்கூட கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பிறப்பிக்க உண்மை மனதுடன் பிரயாசப்படுகின்றனர். (கலாத்தியர் 5:22, 23) யெகோவாவின் சாட்சிகள் பவுல் அப்போஸ்தலனின் புத்திமதியை ஒருபோதும் மறவாதிருக்க முயற்சி செய்கிறார்கள்: “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31) அவர்களுடைய மதம் வெறும் சம்பிரதாயம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது.
13. உண்மை வணக்கம் எதை உட்படுத்துகிறது? யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் மதப்பற்றுள்ள ஆட்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
13 நிச்சயமாகவே உண்மை வணக்கம், ஆவிக்குரிய நடவடிக்கைகளை உட்படுத்துகிறது. இது தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபம், கடவுளுடைய வார்த்தையையும் பைபிள் படிப்பு உதவிகளையும் ஒழுங்காக படிப்பது, உண்மையான கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராயிருப்பது ஆகியவற்றையும் உட்படுத்தும். இந்தக் கிறிஸ்தவக் கூட்டங்கள் யெகோவாவுக்கு துதிப்பாடலோடும் ஜெபத்தோடும் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. (மத்தேயு 26:30; எபேசியர் 5:19) சொற்பொழிவுகள் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அச்சு செய்யப்பட்ட பிரசுரங்களின் கேள்வி–பதில் கலந்தாலோசிப்புகள் மூலமாக கட்டியெழுப்பும் ஆவிக்குரிய விஷயங்கள் ஆராயப்படுகின்றன. இப்படிப்பட்டக் கூட்டங்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ராஜ்ய மன்றங்களில் அல்ல, ஆனால் துப்புரவான ராஜ்ய மன்றங்களில் பொதுவாக நடத்தப்படுகின்றன. இவை பிரத்தியேகமாக மதசம்பந்தமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன: ஒழுங்கான கூட்டங்கள், விவாகங்கள், ஞாபகார்த்த ஆராதனைகள். தங்கள் ராஜ்ய மன்றங்களையும் பெரிய அசெம்ளி மன்றங்களையும் யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் வணக்கத்துக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களாக மதிக்கிறார்கள். அநேக கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைப் போல ராஜ்ய மன்றங்கள், சமூக மனமகிழ் மன்றங்களாக இல்லை.
14. எபிரெயு–பேசும் மக்களுக்கு வணக்கம் எதை அர்த்தப்படுத்தியது? இன்று யெகோவாவின் சாட்சிகளின் எந்தச் செயல் அவர்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறது?
14 “வணக்க முறை” அல்லது “மதம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையை கல்விமான்கள் “சேவிக்க” என்ற வினைச்சொல்லோடு சம்பந்தப்படுத்துவதை நாம் முன்பு பார்த்தோம். இதற்கு ஒத்த எபிரெய வார்த்தையான ‘அவோதா’ (avo–dhah) “ஊழியம்” அல்லது “வணக்கம்” என்பதாக மொழிபெயர்க்கப்படக்கூடும் என்பது அக்கறையூட்டுவதாக உள்ளது. (யாத்திராகமம் 3:12 மற்றும் 10:26-ன் அடிகுறிப்புகளை ஒப்பிடவும்.) எபிரெயருக்கு வணக்கம் என்பது ஊழியத்தை அர்த்தப்படுத்தியது. இது இன்று மெய் வணக்கத்தாருக்கு இதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. உண்மை வணக்கத்தின் அதி முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க அடையாளக்குறியானது, அதைக் கடைபிடிக்கும் அனைவரும் “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி . . . குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல தேசங்களுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கும்” தெய்வீக சேவையில் பங்கு கொள்வதாகும். (மத்தேயு 24:14, NW; அப்போஸ்தலர் 1:8; 5:42) மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாக கடவுளுடைய ராஜ்யத்தை பகிரங்கமாக சாட்சி கொடுப்பதற்கு உலகம் முழுவதிலும் அறியப்பட்டிருக்கும் மதம் எது?
உடன்பாடான, ஐக்கியப்படுத்தும் சக்தி
15. உண்மை மதத்தின் குறிப்பிடத்தக்க ஒரு தனிச்சிறப்புப் பண்பு என்ன?
15 பொய் மதம் பிரிவினைகளை உண்டுபண்ணுகிறது. அது பகைமையையும் இரத்தஞ்சிந்துதலையும் இன்னும் உண்டுபண்ணுகிறது. இதற்கு எதிர்மாறாக உண்மை மதம் ஐக்கியப்படுத்துகிறது. இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) யெகோவாவின் சாட்சிகளை ஐக்கியப்படுத்தும் அன்பு மனிதகுலத்திலுள்ள மீதமுள்ள ஆட்களில் பிரிவினைகளை உண்டுபண்ணும் தேசீய, சமுதாய, பொருளாதார மற்றும் இனம் சம்பந்தமான எல்லைகளைக் கடந்து மேம்பட்டு நிற்கிறது. சாட்சிகள், “ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடு”கிறார்கள்.—பிலிப்பியர் 1:27.
16. (எ) யெகோவாவின் சாட்சிகள் என்ன “சுவிசேஷத்தைப்” பிரசங்கிக்கிறார்கள்? (பி) என்ன தீர்க்கதரிசனங்கள் யெகோவாவின் மக்கள் மீது நிறைவேற்றமடைந்து வருகின்றன? என்ன ஆசீர்வாதங்கள் தொடர்ந்திருக்கின்றன?
16 வெகு சீக்கிரத்தில் கடவுளுடைய மாற்றமுடியாத நோக்கம் நிறைவேற்றமடையும் என்பதே அவர்கள் பிரசங்கிக்கும் “சுவிசேஷம்” ஆகும். அவருடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படப்”போகிறது. (மத்தேயு 6:10) யெகோவாவின் மகிமைப்பொருந்தின நாமம் பரிசுத்தமாக்கப்படும், பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படும். மெய் வணக்கத்தார் அதில் என்றுமாக வாழ்வர். (சங்கீதம் 37:29) சொல்லர்த்தமாகவே, எல்லாத் தேசங்களிலும், இலட்சக்கணக்கான ஆட்கள், யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுக் கொண்டு, பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடே கூடப் போவோம்.” (சகரியா 8:23) யெகோவா தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கிறார். “சிறியவன்” உண்மையிலேயே “பலத்த ஜாதி”யாகியிருக்கிறான், எல்லா அம்சத்திலும்—சிந்தனையிலும், வேலையிலும், வணக்கத்திலும், முழுமையாக ஐக்கியப்பட்ட உலகளாவிய சபையாக ஆகியிருக்கிறார்கள். (ஏசாயா 60:22) இது பொய் மதம் ஒருபோதும் சாதிக்க முடிந்திராத ஒன்றாக இருக்கிறது.
தூய வணக்கத்தின் வெற்றி
17. மகா பாபிலோனுக்கு என்ன காத்திருக்கிறது? இது எவ்விதமாக நடந்தேறும்?
17 கடவுளுடைய வார்த்தை “மகா பாபிலோன்” என்பதாக அடையாள பெயரிடப்பட்டிருக்கும் பொய் மத உலக பேரரசின் அழிவை முன்னறிவித்திருக்கிறது. பைபிள், பூமியின் “இராஜாக்கள்” அல்லது அரசியல் ஆட்சியாளர்களை மூர்க்க மிருகத்தின் கொம்புகளாலும்கூட பிரதிநிதித்துவம் செய்கிறது. கடவுள், பிசாசாகிய சாத்தானின் இந்த வேசி போன்ற நிறுவனத்தைக் கவிழ்த்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தை இந்த ஆட்சியாளர்களின் இருதயங்களில் வைப்பார் என்பதாக அது நமக்குச் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 17:1, 2, 5, 6, 12, 13, 15–18.b
18. மகா பாபிலோனை அழிப்பதற்கு பைபிள் என்ன முக்கியமான காரணத்தைத் தருகிறது? பொய் மதம் அதனுடைய இந்த அதிர்ச்சிதரும் போக்கில் எப்போது செல்ல ஆரம்பித்தது?
18 மகா பாபிலோன் ஏன் அழிவுக்கு பாத்திரமுள்ளதாக இருக்கிறது? பைபிள் பதிலளிக்கிறது: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 18:24) பொய் மதம் தன்மீது வருவித்துக் கொண்டிருக்கும் இந்த இரத்தப்பழி பாபிலோன் தோன்றுவதற்கு அப்பாலும்கூட செல்கிறது என்பதைக் காண்பிப்பவராய், இயேசு மகா பாபிலோனோடு தன்னை இணைத்துக் கொண்டுவிட்டிருந்த யூதேய மதத்தின் மதத் தலைவர்களிடம் பின்வருமாறு சொல்லி அவர்களைக் கண்டனம் செய்தார்: “சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு [கெஹன்னாவுக்கு, NW] எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? . . . நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் . . . பூமியின் மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள் மேல் வரும்.” (மத்தேயு 23:33–35) ஆம், ஏதேனில் கலகம் ஏற்பட்ட சமயம் முதல் பூமியில் ஆரம்பமான பொய் மதம் அதனுடைய அதிர்ச்சிதரும் இரத்தப்பழிக்குப் பதிலளித்தே ஆக வேண்டும்.
19, 20. (எ) மகா பாபிலோனின் மீது நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட பின்பு, மெய் வணக்கத்தார் என்ன செய்வர்? (பி) பிற்பாடு என்ன சம்பவிக்கும்? எல்லா மெய் வணக்கத்தாருக்கும் என்ன எதிர்பார்ப்பு திறந்து வைக்கப்படும்?
19 மகா பாபிலோனின் அழிவுக்குப் பிற்பாடு, பூமியின் மேலுள்ள மெய் வணக்கத்தார், பின்வருமாறு பாடும் பரலோக சேர்ந்திசையோடு கூட இவ்வாறு பாடுவார்கள்: “அல்லேலூயா . . . மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக் கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே . . . அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது.”—வெளிப்படுத்துதல் 19:1–3.
20 பின்னர் சாத்தானுடைய காணக்கூடிய அமைப்பின் உள்ளடங்கிய மற்ற பாகங்கள் அழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 19:17–21) இதற்குப் பிற்பாடு, எல்லா பொய் மதத்தின் ஸ்தாபகரான சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸிற்குள் தள்ளப்படுவர். அவர்கள் இனிமேலும் யெகோவாவின் உண்மை வணக்கத்தாரை துன்புறுத்த தடையில்லாமல் இருக்கமாட்டார்கள். (வெளிப்படுத்துதல் 20:1–3) தூய்மையான மதம் பொய் மதத்தின் மீது வெற்றி சிறந்திருக்கும். மகா பாபிலோனிலிருந்து வெளியே வரும்படியான தெய்வீக எச்சரிப்புக்கு இப்பொழுது செவிகொடுக்கும் உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகிற்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் பெறுவர். அங்கே, அவர்கள் மெய் மதத்தை அப்பியாசிக்கவும் யெகோவாவை என்றுமாக வணக்கத்தோடே சேவிக்கவும் கூடியவர்களாக இருப்பர். (w91 12/1)
[அடிக்குறிப்புகள்]
a கொலோசெயர் 2:19-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவதூதர் வணக்கம் பற்றிய விளக்கத்துக்கு, ஜூலை 15, 1985, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 12–13 பார்க்கவும்.
b இந்தத் தீர்க்கதரிசனத்தின் முழு விளக்கத்துக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகம் அதிகாரங்கள் 33–6-ஐ பார்க்கவும்.
உங்களுடைய நினைவாற்றலை சோதித்துப் பாருங்கள்
◻மதத்தைப் பற்றிய யாருடைய நிலைநிற்கை அதிமுக்கியமாகும்? ஏன்?
◻உண்மை வணக்கத்துக்கு என்ன இரண்டு தேவைகளை யாக்கோபு வலியுறுத்துகிறார்?
◻தூய்மையான வணக்கத்தின் மற்ற தகுதிகள் யாவை?
◻யெகோவாவின் சாட்சிகள் என்ன “சுவிசேஷத்தைப்” பிரசங்கிக்கிறார்கள்?
◻உண்மை மதம் எவ்விதமாக பொய் மதத்தின் மீது வெற்றிசிறக்கும்?r
[பக்கம் 17-ன் படம்]
1986 அக்டோபரில் இத்தாலியிலுள்ள அசிஸியில் குழுமியிருந்த மதத் தலைவர்கள்
[பக்கம் 19-ன் படம்]
உண்மை மதம் வணக்கத்துக்காக ஒன்றுகூடிவருவதை உட்படுத்துகிறது