சமாதானத்தின் தேவனிடமிருந்து ஆறுதல்
“இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 4:18.
அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்தவ சபை சமாதானத்தை அனுபவித்துக் களிக்க வேண்டும் என்பதை வெகுவாக விரும்பினான். ஆகவே நமக்காக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்திலுள்ள, அவனுடைய 13 கடிதங்களும், யாருக்கு அவை எழுதப்பட்டதோ அவர்கள் தேவனிடத்திலிருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலோடு ஆரம்பமாகின்றன. புதிதாக தெசலோனிக்கேயாவில் தோன்றியிருந்த சபைக்கு எழுதுகையில் பவுல் பின்வருமாறு எழுதினான்: “உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” அதே கடிதத்தின் முடிவில் அவன் பின்வருமாறு வேண்டிக்கொள்கிறான்: “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.”—1 தெசலோனிக்கேயர் 1:1; 5:23.
2 பவுலும் அவனுடைய தோழர்களும் அந்தப் புதிய விசுவாசிகள் மத்தியில், ‘பிரயாசத்தோடும் வருத்தத்தோடும்’ பாடுபட்டிருந்தார்கள். பவுல் பின்வருமாறு சொன்னான்: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல நாங்கள் உங்கள் மேல் வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” இந்த வார்த்தைகளிலிருந்து பவுல் அந்தச் சபையின் மீது கொண்டிருந்த நெருங்கிய அக்கறையையும் உண்மையான, உள்ளார்ந்த அன்பையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறதல்லவா? ஆம், இன்று பூமி முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய சுமார் 50,000 சபைகளில் கிறிஸ்தவ மூப்பர்கள் காண்பிக்கும் அன்புக்கு இது மாதிரியாக இருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 2:7-9; யோவான் 13:34, 35; 15:12-14.
3 சோதனைக்காரனாகிய சாத்தான் தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் மீது உபத்திரவங்களைக் கொண்டு வந்திருந்தான். ஆகவே, அவர்களை ‘திடப்படுத்தவும் விசுவாசத்தின் சம்பந்தமாக அவர்களை தேற்றவும்’ பவுல் அவர்களிடம் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தான். தீமோத்தேயு, அத்தேனேவிலிருந்து பவுலிடம் அவர்களுடைய விசுவாசத்தையும் அன்பையும் குறித்து நற்செய்தியோடே திரும்பி வந்தான். ஒருவர் மற்றவரின் விசுவாசத்தையும் உத்தமத்தையும் அறிந்து கொண்டபோது, அனைவருக்குமே அது அதிக ஆறுதலாக இருந்தது. அவர்கள் குறைகளை நிறைவாக்கும் பொருட்டு அவர்கள் தொடர்ந்து தேவனிடம் வேண்டிக் கொண்டார்கள். (1 தெசலோனிக்கேயர் 3:1; 2, 5-7, 10) இதுவுங்கூட இன்றுள்ள தேவராஜ்ய ஏற்பாட்டுக்கு ஒத்ததாகவே இருக்கிறது. தடையுத்தரவு அல்லது கடுமையான துன்புறுத்தல் இருக்கும் இடங்களில் ஊழியம் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளை பிரயாண கண்காணிகள் சந்தித்து அவற்றைக் கட்டியெழுப்புகிறார்கள்.—ஏசாயா 32:1, 2.
‘அவருடைய பிரசன்னத்தின்போது’
4 அப்போஸ்தலனாகிய பவுல், தன்னுடைய கடிதத்தின் இந்தப் பகுதியை, பின்வரும் வேண்டுதலோடு முடிக்கிறான்: “நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்றவர்களும் பரிசுத்த முள்ளவர்களுமாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.”—1 தெசலோனிக்கேயர் 3:12, 13.
5 பவுல் இங்கே தூர எதிர்காலத்தில் “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வருகிற” காலமாகிய இயேசுவின் “பிரசன்னம் மற்றும் காரிய ஒழுங்கின் முடிவு” காலத்தை மனதில் கொண்டு பேசினான். நம்முடைய பரலோக ராஜா 1914-ல் வந்துவிட்டார். தம்முடைய மகிமையான, காணக்கூடாத சிங்காசனத்திலிருந்து, இயேசு இப்பொழுது பூமியின் ஜாதிகளையும் ஜனங்களையும் நியாயந்தீர்த்துக் கொண்டிருக்கிறார். “மகா உபத்திரவத்தினூடே பாதுகாத்து, பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அளிப்பதற்காக மனத்தாழ்மையுள்ள செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களை அவர் பிரித்துக் கொண்டிருக்கிறார்.—மத்தேயு 24:3-21; 25:31-34, 41, 46.
நம்முடைய நன்மைக்காக கட்டளைகள்
6 நீங்கள் நித்திய ஜீவனின் இலக்கை அடைய முயன்று கொண்டிருக்கும் ஒருவரா? அப்படியானால், பவுல் இங்கே தெலலோனிக்கேயாவிலுள்ளவர்களுக்கு எழுதிய காரியத்துக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்: “அன்றியும் சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக் கொண்டபடியே அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக் கொண்டு புத்தி சொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.” (1 தெசலோனிக்கேயர் 4:1, 2) பவுல் இங்கே அழுத்திக் காண்பிக்கும் சில “கட்டளைகள்” யாவை?
7 முதல் ‘கட்டளை’ நல்லொழுக்கங்களைப் பற்றியதாக இருக்கிறது. ஒளிவு மறைவில்லாமல் பவுல் பின்வருமாறு சொன்னான்: “நீங்கள் பரிசுத்தமுள்வர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து தேவனை அறியாத அஞ்ஞானிகளைப் போல மோக இச்சைக்குட்படாமல் உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்திரு”க்க வேண்டும். நாம் தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் “அறிந்து” நித்திய ஜீவனை அடைய முயன்று கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மறுபடியுமாக, உலகப்பிரகாரமான ஒழுக்கயீன சேற்றினுள் இழுத்துச் செல்லப்பட நம்மை அனுமதிப்போமேயானால் அது எத்தனை வெட்கக்கேடான செயலாக இருக்கும்! கான்சன்ட்ரேஷன் முகாம்களில் பல வருடங்கள் இருந்து உயிர் தப்பிய சிலர் அல்லது வைராக்கியமாக மிஷனரி ஊழியத்தில் வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கும் சிலர், ஒழுக்க விஷயத்தில் விழிப்பின்றி இருக்கையில், சோதனைக்காரன் தங்களை மேற்கொள்ள அனுமதித்திருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். கடவுளுடைய பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்ட பின்னர், பாலின ஒழுக்கக்கேட்டின் மூலமாக அதை ஒருபோதும் “துக்கப்படுத்”தாதிருப்போமாக!—1 தெசலோனிக்கேயர் 4:3-8; யோவான் 17:3; 1 கொரிந்தியர் 10:12, 13; எபேசியர் 4:30.
8 பவுலின் அடுத்தக் கட்டளை “சகோதர சிநேகமாகிய” பிலெடல்பியா-வைப் பற்றியதாக இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:9, 10) இங்கே வசனம் 9-லும் அதிகாரம் 3 வசனங்கள் 6 மற்றும் 12-லும், பவுல் ஆர்வத்துடன் சிபாரிசு செய்யும் அகாப்பே, அதாவது நியமத்திற்குட்பட்ட அன்பின் விசேஷ வெளிக்காட்டாக இது இருக்கிறது. பிலெடல்பியா என்பது, இயேசுவுக்கும் பேதுருவுக்குமிடையேயும், தாவீது மற்றும் யோனதானுக்கிடையேயும் இருந்தது போன்ற அதிக நெருக்கமான ஒரு சிநேகமாக இருக்கிறது. (யோவான் 21:15-17; 1 சாமுவேல் 20:17; 2 சாமுவேல் 1:26) நெருக்கமான ஒரு தோழமையை வளர்ப்பதற்காக, இது ஆகாப்பேயுடன் சேர்த்து இணைக்கப்படலாம். யெகோவாவின் சாட்சிகளில் அநேகர், பயனியர் ஊழியத்திலும் மற்ற தேவராஜ்ய நடவடிக்கைகளிலும் ஒன்றாகச் சேர்ந்து அனுபவிக்கும் கூட்டுறவின் பரஸ்பர சந்தோஷத்தில் இதைக் காண முடிகிறது.
9 பவுல் சொல்லுகிறான்: “அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகுங்கள்.” நாம் நம்முடைய சகோதர சிநேகத்தை எப்பொழுதும் விரிவாக்க முடியும். விசேஷமாக மூப்பர்களும் உதவி ஊழியர்களும் வைராக்கியமாக ராஜ்ய ஊழியத்தில் முன் நின்று வழிநடத்தும்போது, இந்தச் சிறப்பான பண்பு நிறைந்து வழிகிறது. ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுவதில்’ சபையிலுள்ள அனைவரும் சுறுசுறுப்பாக இருக்கும்போது, மனித அபூரணம் மற்றும் ஆளுமை மோதல் ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் மற்ற பிரச்னைகளும் இரண்டாந்தரமானதாக ஆகிவிடுகிறது. நாம் எப்பொழுதும் இலக்கின்மீது நம்முடைய கண்களை வைப்போமாக!—மத்தேயு 6:20, 21, 33; 2 கொரிந்தியர் 4:18.
10 பவுல் இங்கே மற்றொரு ‘கட்டளை’யைச் சேர்த்து இணைக்கிறான்—அமைதலுள்ளவர்களாயிருந்து, சொந்த அலுவல்களைப் பார்த்து, சொந்தக் கைகளினாலே வேலை செய்வதை நம்முடைய குறிக்கோளாக நாம் கொள்ள வேண்டும். நியமத்திற்குட்பட்ட அன்பையும் சகோதர சிநேகத்தையும் காண்பித்து, நாம் அன்றாட வாழ்க்கையில் ‘யோக்கியமாய்’ நடந்து கொள்வோமேயானால், நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.—1 தெசலோனிக்கேயர் 4:11, 12; யோவான் 13:35; ரோமர் 12:10-12.
உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் மூலமாக ஆறுதல்
11 அப்போஸ்தலன், அடுத்ததாக, உயிர்த்தெழுதலின் மகத்தான நம்பிக்கையைக் குறித்துப் பேசுகிறான். ஆனால் பவுல் ஏன் இந்தப் பொருளைப் பற்றி பேச வேண்டும்? பவுல் தன்னுடைய சகோதரர்களுக்கு, வர இருந்த துன்புறுத்தல்களைச் சகிப்பதற்காக அவர்களைப் பலப்படுத்த விரும்பினான். அவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துவிடும் அபாயத்தில் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சிலர் மரித்துவிட்டிருப்பது போல தெரிகிறது. உடன் விசுவாசிகளுக்கு ஆறுதல் தேவையாக இருந்தது. (1 தெசலோனிக்கேயர் 2:14-20) கிறிஸ்துவின் பிரசன்னம் அருகாமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, ஏற்கெனவே மரித்துவிட்டவர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறிய அவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள். பவுல் இப்பொழுது எழுதும் காரியமானது, நேசமான கிறிஸ்தவர்களை இழந்துவிடுகிறவர்களுக்கு ஆறுதலை அளிப்பது மட்டுமல்லாமல், யெகோவாவின் “நாள்” வரும் வரையாக சகித்திருக்கவுங்கூட உற்சாகப்படுத்துகிறது. இந்தக் காரிய ஒழுங்கின் மொத்தமான அழிவை எதிர்நோக்கியவர்களாக நற்செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வருகையில் பவுலின் புத்திமதி, ஆவிக்குரிய ஸ்திரத்தன்மையை காண்பிக்க நம் அனைவருக்கும் உதவ வேண்டும்.—2 தெசலோனிக்கேயர் 1:6-10.
12 பவுல் சொல்கிறான்: “சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 4:13) உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் எவ்வளவு ஆறுதலையும் மனசமாதானத்தையும் காணமுடிகிறது! சுமார் ஐந்து வருடங்களான பின்பு, பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு தன்னுடைய இரண்டாவது கடிதத்தை பின்வருமாறு அறிமுகஞ் செய்தான்: “நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும் இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.”—2 கொரிந்தியர் 1:2-4.
13 மரித்தோரின் நிலைமையைக் குறித்து நாம் அறியாமையிலிருப்பதை அப்போஸ்தலன் விரும்பவில்லை. காலப்போக்கில், கிறிஸ்தவர்களின் மத்தியில் பெரும் விசுவாச துரோகம் ஏற்பட இருந்தது. அவர்கள் பாபிலோனிய மற்றும் கிரேக்க தத்துவங்களுக்கு திரும்பிவிடுவார்கள். இந்த விசுவாச துரோகிகள் ஆத்துமா அழியாமையுள்ளது என்ற பிளேட்டோவின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளுவர். இப்பொழுது இதுவே பொய்மத உலகப் பேரரசு முழுவதிலுமுள்ள அடிப்படையான போதகமாக இருந்து வருகிறது. பரலோகத்திலோ, உத்தரிக்கும் ஸ்தலத்திலோ அல்லது நித்திய வாதனைக்குரிய இடத்திலோ, அது எங்கே இருப்பதாக சொல்லப்பட்டாலும் “மரணத்துக்குப் பின்னான வாழ்க்கை”யைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த இரகசியம் எவ்வித ஆறுதலையும் அளிப்பதில்லை. ஆத்துமா அழியாது என்பது உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு முரணானதாக இருக்கிறது. ஆத்துமா மரிக்கவில்லையென்றால், ஒருவர் எவ்விதமாக ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்பட முடியும்?
14 பவுல் இங்கே “நித்திரையடைந்தவர்களினிமித்தம்” என்பதாக எழுதுகிறான். ஆம், “நித்திரை.” நித்திரையிலிருக்கும் ஒரு நபர் எதைக் குறித்தும் உணர்வில்லாதவராகவும் எந்த கிரியையையும் செய்ய இயலாதவராகவும் இருக்கிறார். (பிரசங்கி 9:5, 10 ஒப்பிடவும்) ஒரு சமயம், இயேசுவின் ஊழிய காலத்தின்போது, அவர் லாசரு “நித்திரையடைந்திருக்கிறான்” என்றும் அவர் அவனை எழுப்பப் போவ”தாகவும் சொன்னார். கிறிஸ்துவின் சீஷர்கள் அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ளாதபோது “இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப் போனான் என்று வெளிப்படையாய்ச் சொன்னார்.” லாசருவின் சகோதரிகளாகிய மார்த்தாளும் மரியாளும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையினால் ஆறுதலடைந்தார்கள். இயேசு அவர்களுக்குக் கூடுதலான ஆறுதலை அளித்தார். ஆனால் நான்கு நாட்கள் மரித்தவனாக இருந்த தம்முடைய சிநேகிதனான லாசருவை மரண நித்திரையிலிருந்து இயேசு எழுப்பியபோது, அவர்களுடைய விசுவாசம் எவ்வளவு பலப்பட்டிருக்க வேண்டும்!—யோவான் 11:11-14, 21-25, 43-45.
15 அந்த அற்புதமும், மரித்தோரை எழுப்புவதில் இயேசுவின் மற்ற கிரியைகளும் இயேசுவைத்தாமே யெகோவா ஒப்புயர்வற்ற வகையில் உயிர்த்தெழுப்பியதும்—நல்ல ஆதாரமுள்ள இந்தச் சம்பவங்களின் பதிவுகள் அனைத்தும், மகத்தான உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன. (லூக்கா 7:11-17; 8:49-56; 1 கொரிந்தியர் 15:3-8) உண்மைத்தான், மரணம் துக்கத்தையும் கண்ணீரையும் கொண்டு வருகிறது. நேசமான ஒருவரின் இழப்புக்குப் பின் சரிபடுத்திக்கொள்ளுதல் கடினமாக இருக்கிறது. ஆனால் கர்த்தராகிய ஆண்டவர் யெகோவா “மரணத்தை ஜெயமாக விழுங்குவார். . . . எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்” என்ற உறுதிமொழியிலிருந்து நாம் எவ்வளவு ஆறுதலையும் பெலத்தையும் பெற்றுக் கொள்கிறோம்! (ஏசாயா 25:8; வெளிப்படுத்தின விசேஷம் 21:4) துக்கத்துக்கு மிகச் சிறந்த பரிகாரம் சமாதானத்தின் தேவனுடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாயிருந்து, நாம்தாமே இத்தனை நன்றியுணர்வோடு பெற்றுக் கொண்டிருக்கும், இருதயத்துக்கு அனலூட்டும் ராஜ்ய நம்பிக்கையை மற்றவர்களுக்கு அறிவிப்பதே ஆகும்.—அப்போஸ்தலர் 20:35 ஒப்பிடவும்.
உயிர்த்தெழுதலின் வரிசை
16 இப்பொழுது பரலோகத்தில் கடவுளுடைய வலது பாரிசத்தில் சிங்காசனத்திலேற்றப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதலின் “முதல் கனி”யாகிய கிறிஸ்து யெகோவாவின் மகிமையுள்ள ராஜ்ய நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றிடுவார் என்ற பலமான விசுவாசம் நமக்கிருக்கிறது. (எபிரேயர் 6:17, 18; 10:12, 13) பவுல் மற்றொரு கடிதத்தில் குறிப்பிடுகிற விதமாகவே: “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப் போடும் வரைக்கும் அவர் [இயேசு கிறிஸ்து] ஆளுகைச் செய்ய வேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” எவ்விதமாக? உயிர்த்தெழுதலின் மூலமாகவும் ஆதாமிய மரணத்தின் பாதிப்புக்களை நீக்கிவிடுவதன் மூலமாகவுமே. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக அதை அப்பொழுதுதானே விளக்கியிருந்தான்: “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:20-26) தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய தன்னுடைய முதல் கடிதத்தில், பவுல் அடுத்ததாக உயிர்த்தெழுதலின் இந்த வரிசையைத்தானே குறிப்பிட்டு, இவ்விதமாகச் சொல்லுகிறான்:
17 “இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் யெகோவா அவரோடேகூடக் கொண்டுவருவார். யெகோவாவுடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: “கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை, ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.—1 தெசலோனிக்கேயர் 4:14-16.
18 1914-க்குப் பின்பு, ராஜ்ய வல்லமையில் இயேசுவின் “பிரசன்னத்தின்”போது, பிரதான தூதனாக அவர், “கிறிஸ்துவுக்குள்” இருப்பவர்களை கூடிவரும்படியாக பரலோக கட்டளையைக் கொடுக்கிறார். “நித்திரையடைந்த” அபிஷேம் பண்ணப்பட்டவர்களின் விஷயத்தில், எக்காள சத்தத்தின் அழைப்பு பரலோகங்களில் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலுக்கு அவர்களை அழைப்பதாக இருக்கிறது. அபிஷேகம் பண்ணப்பட்ட மரித்தோரின் இந்த உயிர்த்தெழுதல் 1918-ம் ஆண்டில் ஆரம்பமானது என்ற கருத்தைக் கவாற்கோபுரம், வெகு காலமாக வெளியிட்டு வந்திருக்கிறது.
19 என்றபோதிலும், இப்பொழுது குறைந்துகொண்டே வரும் 10,000-க்கும் குறைவாயுள்ள, பூமியின் மீதிருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிதவர்களில் மீதியானோரைப் பற்றி என்ன? இவர்களுங்கூட தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை உண்மையுடனிருந்து வாழ்ந்து முடிக்க வேண்டும். கிறிஸ்துவின் பிரசன்னத்தின் சமயத்தில் தான் அவர்களோடு இருப்பதுபோல, பவுல் பின்வருமாறு எழுதுகிறான்: “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” (1 தெசலோனிக்கேயர் 4:17; வெளிப்படுத்தின விசேஷம் 1:10 ஒப்பிடவும்) இவ்விதமாக, உரிய காலத்தில் 1,44,000 பேரும், பரலோக சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவோடே ஆசாரியர்களாகவும் அரசர்களாகவும் சேவிப்பதற்கு எழுப்பப்படுவார்கள். “இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.” (வெளிப்படுத்தின விசேஷம் 14:1, 4; 20:4, 5) ஆனால் இப்பொழுது தங்களுடைய கல்லறைகளிலிருக்கும் கோடிக்கணக்கான மனிதவர்க்கத்துக்கு முன்னால் இருப்பது என்ன?
20 தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய தன்னுடைய முதல் கடிதத்தில் பவுல் இதைக் குறித்து திட்டவட்டமாக குறிப்பிடாவிட்டாலும், வெளிப்படுத்தின விசேஷம் 20:12, “மரித்தோராகிய சிறியோரும், பெரியோரும்,” தேவனுடைய நியாயத்தீர்ப்புச் சிங்காசனத்துக்கு முன்பாக நிற்பதற்காக எழுப்பப்படுவார்கள் என்பதாக உறுதியளிக்கிறது. (யோவான் 5:28, 29-ஐயும் பார்க்கவும்) இன்று லட்சக்கணக்கிலிருக்கும் “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” ஏற்கெனவே அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாக கூட்டிச் சேர்க்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவரால் மேய்க்கப்பட்டு “ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு” வழிநடத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பூமியிலிருந்து ஒருபோதும் மரிக்க வேண்டிய அவசியமிராது. ஆனால் வயது அல்லது எதிர்பாரா சம்பவங்களின் காரணமாக, அவர்களில் சிலர், கர்த்தருடைய பிரசன்னத்தின்போது மரித்துவிடக்கூடும். (வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14, 17: பிரசங்கி 9:11) இவர்களைப் பற்றி என்ன?
21 இப்படிப்பட்ட எல்லா “வேறே ஆடுக”ளுக்கும் முன்னாலிருப்பது பூமிக்குரிய உயிர்த்தெழுதலின் சந்தோஷமான நம்பிக்கையாகும். (யோவான் 10:16) பூர்வ காலத்திலிருந்த ஆபிரகாமைப் போல அவர்களுடைய விசுவாசமும் கிரியைகளும், ஏற்கெனவே அவர்களைக் கடவுளோடு சிநேகமான ஒரு நிலைக்குள் கொண்டு வந்திருக்கிறது. எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் போல, இந்த நவீன நாளைய “வேறே ஆடுகள்” சோதனைகளை சகித்திருக்கின்றனர். நியாயமாகவே அவர்களுங்கூட மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவார்கள். இது அர்மகெதோனுக்குப் பின், முற்பகுதியிலேயே நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை. (எபிரேயர் 11:35; யாக்கோபு 2:23) ஆம், விசுவாசத்தோடே ‘இயேசுவின் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணின’ ஒவ்வொருவரும் அவருடைய பின்வரும் இந்த வாக்கின் நிறைவேற்றத்தில் பங்கு கொள்வார்கள்: “அவனுக்கு . . . நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.”—யோவான் 6:54; ரோமர் 5:18, 21; 6:23.
22 மகிமையான உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைக் கலந்தாலோசித்தப் பின்பு, பவுல் பின்வருமாறு புத்தி சொல்லுகிறான்: “இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 4:18) பின்பு, “நம்முடைய கர்த்தராகிய இயேசுவின்” பிரசன்னத்தின் சம்பந்தமாக இன்றியமையாத விஷயங்களை அவன் கலந்தாலோசிக்கிறான். (1 தெசலோனிக்கேயர் 5:23) இவை யாவை? “தேவனிடத்திலிருந்து சமாதானம்—எப்பொழுது?” என்ற கட்டுரையை பார்க்கவும். (w86 10/1)
சுருக்கம்—
◻ கிறிஸ்தவர்களின் சார்பாக பவுல் என்ன வேண்டிக்கொள்கிறான்?
◻ நம்முடைய நன்மைக்காக அப்போஸ்தலன் கொடுக்கும் கட்டளைகள் யாவை?
◻ மரித்தோரின் சம்பந்தமாக, கடவுளுடைய வார்த்தை நமக்கு எவ்விதமாக ஆறுதலளிக்கிறது?
◻ உயிர்தெழுதலின் என்ன வரிசை முறையை பவுல் விவரிக்கிறான்?
[கேள்விகள்]
1. பவுலின் என்ன வேண்டுதல்கள் சமாதானத்தில் அவனுடைய அக்கறையைக் காண்பிக்கின்றன?
2. (எ) சபையினிடமாக பவுல் என்ன விதமான அக்கறையைக் காண்பித்தான்? (பி) கிறிஸ்தவ மூப்பர்கள் இன்று எவ்விதமாக பவுலின் மாதிரியைப் பின்பற்றலாம்?
3. (எ) தீமோத்தேயு எவ்விதமாக தெசலோனிக்கேயா சபைக்கு நன்மை செய்யக்கூடியவனாக இருந்தான்? (பி) இது இன்று எதற்கு ஒத்திருக்கிறது?
4, 5. (எ) பவுல் இங்கே வேண்டிக்கொள்வது என்ன? இப்பொழுது ஏன் இது விசேஷமாக நமக்கு அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும்?
6. பவுலின் என்ன அறிவுரைகளுக்கு நாம் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும்?
7. என்ன முக்கியமான கட்டளை இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது? (பி) கடவுளுடைய ஆவியைப் பெற்றுக்கொண்ட பின்னர், ஏன் ஒருபோதும் விழிப்பின்றி இருந்துவிடக்கூடாது?
8, 9. “சகோதர சிநேகம்” என்பது என்ன? (பி) நாம் எவ்விதமாக அத்தகைய அன்பை வளர்த்துக் கொள்ளலாம்? என்ன நன்மை கிடைக்கிறது?
10. கிறிஸ்தவர்களாக நாம் எவ்விதமாக யோக்கியமாய் நடந்துகொள்ளலாம்?
11. (எ) பவுல் இப்பொழுது உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசுவதற்குக் காரணமென்ன? (பி) பவுலின் இந்தப் புத்திமதி நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
12. நேசமான ஒருவர் மரிக்கையில், நமக்கு என்ன உண்மையான ஆறுதல் இருக்கிறது? என்ன ஊற்றுமூலத்திலிருந்து?
13, 14. மரணத்தின் அர்த்தமென்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவர்கள் தகவல் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் ஏன் விரும்பினான்? (பி) மரித்தோரின் நிலைமை என்னவாக இருப்பதாக வேத வசனங்கள் காண்பிக்கின்றன?
15. (எ) உயிர்த்தெழுதலில் நம்முடைய நம்பிக்கை எவ்விதமாக பலப்படுத்தப்படுகிறது? (பி) நேசமான ஒருவரை மரணத்தில் இழந்துபோகையில், சரிப்படுத்தல்களைச் செய்ய நாம் எவ்விதமாக உதவப்படலாம்?
16, 17. (எ) கடைசிச் சத்துரு எவ்விதமாக பரிகரிக்கப்படுவான்? (பி) உயித்தெழுதலின் என்ன வரிசையைப் பவுல் இப்பொழுது விளக்குகிறான்?
18. “நித்திரையடைந்த”வர்களாயிருந்த அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் எப்பொழுது உயிர்த்தெழுப்பப்பட்டார்கள்?
19. மீதியானோர் எப்பொழுது எவ்விதமாக “ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவர்”? எதற்காக?
20, 21. (எ) தங்களுடைய கல்லறைகளிலிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு முன்னாலிப்பது என்ன? (பி) யாருக்கு ஒருபோதும் பூமியிலிருந்து மரித்துவிட வேண்டிய அவசியமிராது? ஏன்? (சி) இவர்களில் எவராவது மரிப்பார்களேயானால், அவர்களுக்கு என்ன சந்தோஷமான எதிர்பார்ப்பு இருக்கிறது?
22. நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆறுதலளிக்க முடியும்?