ஏசாயா
25 யெகோவாவே, நீங்கள்தான் என் கடவுள்.
நான் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன், உங்கள் பெயரைப் புகழ்கிறேன்.
நீங்கள் அதிசயங்களைச் செய்திருக்கிறீர்கள்,+
பூர்வ காலத்திலிருந்தே செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.+
நீங்கள் உண்மையானவர்,+ நம்பகமானவர்!
2 வேறு தேசத்து ஜனங்களின் நகரத்தை இடித்துப்போட்டீர்கள்.
மதில் சூழ்ந்த அந்த நகரத்தைக் கற்குவியலாக மாற்றினீர்கள்.
கோட்டையாக இருந்த நகரம் தரைமட்டமானது.
அது ஒருபோதும் கட்டப்படாது.
3 பலம்படைத்த தேசத்தார் நீங்கள் செய்ததைப் பார்த்து உங்களை மகிமைப்படுத்துவார்கள்.
கொடுமை செய்கிற தேசத்தாரின் நகரம் உங்களுக்குப் பயப்படும்.+
4 கஷ்டத்தில் தவிக்கும் ஏழை எளியவர்களுக்கு
நீங்கள் கோட்டையாக இருக்கிறீர்கள்.+
புயலுக்கு ஒதுங்கும் புகலிடமாகவும்,
வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருக்கிறீர்கள்.+
கொடுங்கோலர்களின் கோபம் ஒரு மதிலைத் தாக்குகிற புயலைப் போலவும்,
5 வறண்ட தேசத்தை வாட்டியெடுக்கிற வெயிலைப் போலவும் இருக்கும்போது,
நீங்கள் அவர்களுடைய ஆவேசத்தை அடக்குகிறீர்கள்.
மேகத்தின் நிழலால் வெயிலைத் தணிப்பது போல,
கொடுங்கோலர்களின் ஆட்டம்பாட்டத்தை* அடக்குகிறீர்கள்.
6 பரலோகப் படைகளின் யெகோவா இந்த மலையில்+ எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்.
பிரமாதமான உணவு வகைகளையும்,+
அருமையான திராட்சமதுவையும்,
மஜ்ஜை நிறைந்த ருசியான பதார்த்தங்களையும்,
வடிகட்டிய தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்.
7 எல்லா ஜனங்கள்மேலும் இருக்கிற முக்காட்டையும்,
எல்லா தேசத்தாரையும் மூடியிருக்கிற கம்பளியையும் இந்த மலையிலே அவர் நீக்கிப்போடுவார்.
8 மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்.+
உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.+
தன்னுடைய ஜனங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்த உலகத்திலிருந்தே நீக்கிவிடுவார்.
யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.
9 அந்த நாளில் அவர்கள்,
“இவர்தான் நம் கடவுள்!+
இவர்தான் யெகோவா!
இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம்.
இவர் நம்மை மீட்கப்போவதால் சந்தோஷத்தில் துள்ளலாம்”+ என்று சொல்வார்கள்.
10 ஏனென்றால், யெகோவாவின் கை அந்த மலையின் மேல் தங்கும்.+
எருக்களத்தில் வைக்கோல் மிதிக்கப்படுவது போல
மோவாப் அதன் இடத்தில் மிதிக்கப்படும்.+
11 நீந்துகிறவன் கைகளை ஓங்கி தண்ணீரை அடிப்பது போல
அவர் தன்னுடைய கைகளை ஓங்கி மோவாபை அடிப்பார்.
திறமையாக அடித்து வீழ்த்துவார்.
அதன் ஆணவத்தை அடக்குவார்.+
12 உயரமான மதில்கள் சூழ்ந்த நகரத்தை
அவர் கவிழ்த்துப் போடுவார்.
அதைத் தரைமட்டமாக்குவார், மண்ணோடு மண்ணாக்குவார்.