துன்மார்க்கருக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வரும்
“உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.”—ஆமோஸ் 4:12.
1, 2. துன்மார்க்கத்துக்கு யெகோவா முடிவு கட்டுவார் என ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
இவ்வுலகில் காணப்படும் துன்மார்க்கத்திற்கும் துயரத்திற்கும் யெகோவா என்றைக்காவது முடிவுகட்டுவாரா? 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பது மிகவும் பொருத்தமானதே. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதைப் போலவே தெரிகிறது. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் ஆகியவை இல்லாத ஓர் உலகம் வேண்டுமென நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்!
2 துன்மார்க்கத்திற்கு யெகோவா முடிவு கட்டுவார் என நாம் முழு நம்பிக்கையோடு இருக்கலாம், இதுவே நமக்கிருக்கும் நற்செய்தி. துன்மார்க்கருக்கு எதிராய் கடவுள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்பதை அவருடைய குணங்களே தெளிவாக்குகின்றன. யெகோவா நீதியும் நியாயமுமான கடவுள். “அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்” என்று பைபிளில் சங்கீதம் 33:5 கூறுகிறது. ‘கொடுமையில் பிரியமுள்ளவனை யெகோவாவுடைய உள்ளம் வெறுக்கிறது’ என்று மற்றொரு சங்கீதம் கூறுகிறது. (சங்கீதம் 11:5) ஆம், நீதியையும் நியாயத்தையும் நேசிக்கிற சர்வவல்லமையுள்ள கடவுள், தாம் வெறுக்கும் காரியங்களை என்றென்றும் பொறுத்துக்கொண்டே இருக்க மாட்டார்.
3. ஆமோஸ் தீர்க்கதரிசனத்தைக் கூடுதலாக ஆராய்ந்தால் எந்தக் காரியங்களை அது சிறப்பித்துக் காட்டுவது தெரியும்?
3 துன்மார்க்கத்தை யெகோவா நீக்குவார் என்று உறுதியாக நம்புவதற்கு மற்றொரு காரணத்தை இப்போது கவனியுங்கள். அவருடைய கடந்தகால செயல்களைப் பற்றிய பதிவு அதற்கு அத்தாட்சி அளிக்கிறது. யெகோவா துன்மார்க்கரை எவ்வாறு நடத்தி வந்திருக்கிறார் என்பதைப் பற்றிய குறிப்பிடத்தக்க உதாரணங்கள் பைபிளிலுள்ள ஆமோஸ் புத்தகத்தில் காணப்படுகின்றன. ஆமோஸ் தீர்க்கதரிசனத்தைக் கூடுதலாக ஆராய்ந்தால், தெய்வீக நியாயத்தீர்ப்பு பற்றி மூன்று காரியங்களை அது வலியுறுத்துவது தெரியும். முதலாவதாக, அது எப்போதும் தகுந்தது. இரண்டாவதாக, அதிலிருந்து தப்ப முடியாது. மூன்றாவதாக, அது கண்மூடித்தனமானதல்ல; ஏனெனில் யெகோவா துன்மார்க்கரைத் தண்டிக்கிறார், ஆனால் மனந்திரும்புகிற நல்மனமுள்ளோருக்கு இரக்கம் காட்டுகிறார்.—ரோமர் 9:17-26.
தெய்வீக நியாயத்தீர்ப்பு எப்போதும் தகுந்தது
4. ஆமோஸை யெகோவா எங்கு அனுப்பினார், எதற்காக அனுப்பினார்?
4 ஆமோஸின் நாட்களில், இஸ்ரவேல் தேசம் ஏற்கெனவே இரண்டு ராஜ்யங்களாக பிரிந்திருந்தன. ஒன்று, தெற்கில் இருந்த இரண்டு கோத்திர ராஜ்யமான யூதா. மற்றொன்று, வடக்கில் இருந்த பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேல். சொந்த ஊரான யூதாவிலிருந்த ஆமோஸை, இஸ்ரவேல் தேசத்துக்குப் போய் தீர்க்கதரிசியாக சேவை செய்யும்படி யெகோவா அனுப்பினார். அங்கு தெய்வீக நியாயத்தீர்ப்பை அறிவிக்க கடவுள் அவரைப் பயன்படுத்தவிருந்தார்.
5. எந்தெந்த தேசங்களுக்கு எதிராக ஆமோஸ் முதலாவதாக தீர்க்கதரிசனம் உரைத்தார், அவற்றின் மீது தெய்வீக ஆக்கினைத் தீர்ப்பு வருவது தகுந்ததென சொல்வதற்கு ஒரு காரணம் என்ன?
5 எடுத்த எடுப்பிலேயே ஆமோஸ் வடக்கு ராஜ்யத்திற்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பை அறிவிக்கவில்லை. அதற்கு மாறாக, இஸ்ரவேலைச் சுற்றிலுமிருந்த ஆறு தேசங்களுக்கு எதிராக ஆக்கினைத் தீர்ப்பை அறிவித்தார். சீரியா, பெலிஸ்தியா, தீரு, ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய தேசங்களே அவை. ஆனால், கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்பு அவற்றின் மீது வருவது தகுந்ததாகத்தான் இருந்ததா? ஆம், நிச்சயமாகவே! அவை யெகோவாவின் ஜனங்களை அடியோடு பகைத்ததே அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
6. சீரியா, பெலிஸ்தியா, தீரு ஆகிய தேசங்களை யெகோவா ஏன் அழிக்கவிருந்தார்?
6 உதாரணமாக, சீரியர்கள் ‘கீலேயாத்தை . . . போரடித்ததால்’ அவர்களை யெகோவா கண்டனம் செய்தார். (ஆமோஸ் 1:3) கீலேயாத் என்பது யோர்தான் நதிக்குக் கிழக்கே அமைந்த இஸ்ரவேல் தேசத்தின் பகுதியாகும். இந்த கீலேயாத்திலிருந்த நிலத்தை சீரியர்கள் அபகரித்துக் கொண்டார்கள், அதோடு, அங்கிருந்த கடவுளுடைய ஜனங்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தார்கள். பெலிஸ்தரும் தீரு பட்டணத்தாரும் என்ன குற்றம் செய்தார்கள்? பெலிஸ்தர் இஸ்ரவேலரைச் சிறைபிடித்து சென்று ஏதோமியரிடம் விற்றார்கள்; அவர்களில் சிலரை தீரு தேசத்து அடிமை வியாபாரிகள் வாங்கினார்கள். (ஆமோஸ் 1:6, 9) என்ன அநியாயம், யெகோவாவின் ஜனங்களை அடிமைகளாக விற்றார்கள்! சீரியா, பெலிஸ்தியா, தீரு ஆகிய தேசங்களை யெகோவா அழிக்கவிருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
7. ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய மூன்று தேசத்தாருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே என்ன ஒற்றுமை இருந்தது, ஆனால் அவர்கள் இஸ்ரவேலரை எப்படி நடத்தினார்கள்?
7 ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய மூன்று தேசத்தாருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது, அவர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையேயும் ஓர் ஒற்றுமை இருந்தது. அந்த மூன்று தேசத்தாருமே இஸ்ரவேலரின் சொந்தக்காரர்கள். ஏதோமியர் யாக்கோபின் சகோதரனான ஏசாவின் வழிவந்த ஆபிரகாமின் சந்ததியினர். ஆகவே, அவர்கள் இஸ்ரவேலருக்கு ஒரு விதத்தில் சகோதரர்கள். அம்மோனியரும், மோவாபியரும் ஆபிரகாமின் சகோதரன் மகனான லோத்துவின் சந்ததியினர். தங்கள் உறவினர்களான இஸ்ரவேலரை ஏதோமியரும், அம்மோனியரும், மோவாபியரும் பந்தபாசத்தோடு நடத்தினார்களா? இல்லவே இல்லை! ஏதோமியர் ‘தங்கள் சகோதரர்களுக்கு’ எதிராக பட்டயத்தை இரக்கமின்றி உபயோகித்தார்கள்; அம்மோனியர் இஸ்ரவேல கைதிகளை மிகவும் கொடூரமாய் நடத்தினார்கள். (ஆமோஸ் 1:11, 13) மோவாபியர் கடவுளுடைய ஜனங்களுக்கு தீங்கு செய்தார்களென ஆமோஸ் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவர்கள் இஸ்ரவேலரை நீண்ட காலமாகவே எதிர்த்து வந்திருந்தார்கள். உறவினர்களான அந்த மூன்று தேசத்தாருக்கும் கிடைக்கப் போகிற தண்டனை மிகவும் பயங்கரமாக இருக்கும். அவர்கள் மீது யெகோவா பேரழிவைக் கொண்டு வரவிருந்தார்.
தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது
8. இஸ்ரவேலைச் சுற்றியிருந்த அந்த ஆறு தேசங்களும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து ஏன் தப்ப முடியவில்லை?
8 ஆம், ஆமோஸின் தீர்க்கதரிசனத்தில் முன்னர் குறிப்பிடப்பட்ட ஆறு தேசங்கள் மீதும் தெய்வீக ஆக்கினைத் தீர்ப்பு வருவது தகுந்ததே. அதிலிருந்து அவற்றால் தப்பிக்கவே முடியாது. ஆமோஸ் 1-ம் அதிகாரம் 3-ம் வசனம் தொடங்கி 2-ம் அதிகாரம் முதல் வசனம் வரை, “நான் அதின் ஆக்கினையைத் திருப்ப மாட்டேன்” என்று யெகோவா ஆறு முறை கூறுகிறார். தாம் சொன்னபடியே அந்தத் தேசங்களுக்கு எதிரான தமது ஆக்கினைத் தீர்ப்பை அவர் நிறைவேற்றினார். அந்தத் தேசங்களில் ஒவ்வொன்றும் பின்னர் துன்பத்தைச் சந்தித்ததற்குச் சரித்திரம் சான்று பகருகிறது. அவற்றில் குறைந்தது நான்கு தேசங்கள், அதாவது பெலிஸ்தியா, மோவாப், அம்மோன், ஏதோம் ஆகிய நான்கு தேசங்கள் கடைசியில் அடியோடு அழிந்து போயின!
9. யூதாவாசிகள் எதைப் பெறுவது தகுந்ததாக இருந்தது, ஏன்?
9 அடுத்து ஏழாவது தேசத்திடம், அதாவது தன் சொந்த தேசமான யூதா தேசத்திடம் நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிக்க ஆமோஸ் கவனத்தைத் திருப்பினார். யூதா ராஜ்யத்திற்கு எதிராக ஆமோஸ் நியாயத்தீர்ப்பை அறிவிப்பதைக் கேட்ட வடக்கு ராஜ்யத்தினர் ஆச்சரியம் அடைந்திருக்கலாம். யூதாவாசிகள் மீது ஆக்கினைத் தீர்ப்பு வருவது ஏன் தகுந்ததாக இருந்தது? “அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்”ததே அதற்குக் காரணம் என்று ஆமோஸ் 2:4 கூறுகிறது. நியாயப்பிரமாணத்தை அவர்கள் வேண்டுமென்றே அசட்டை செய்ததை யெகோவா கண்டும் காணாதது போல் இருந்துவிடவில்லை. “யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும்” என்று அவர் முன்னுரைத்தார்; இதை ஆமோஸ் 2:5-ல் பார்க்கிறோம்.
10. யூதா தேசத்தினர் ஏன் அழிவிலிருந்து தப்பிக்க முடியாது?
10 வரவிருந்த அழிவிலிருந்து உண்மையற்ற யூதா தேசத்தினர் தப்பிக்க முடியாது. “நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்ப மாட்டேன்” என்று ஏழாவது முறையாக யெகோவா கூறினார். (ஆமோஸ் 2:4) பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் யூதா தேசத்தைப் பாழாக்கியபோது முன்னறிவிக்கப்பட்ட தண்டனையை அவர்கள் பெற்றார்கள். துன்மார்க்கர் தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை மறுபடியும் இங்கு கவனிக்கிறோம்.
11-13. முக்கியமாக எந்தத் தேசத்திற்கு எதிராக ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார், அங்கு எத்தகைய ஒடுக்குதலை ஜனங்கள் எதிர்ப்பட்டார்கள்?
11 ஏழு தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை ஆமோஸ் தீர்க்கதரிசி அப்போதுதான் அறிவித்திருந்தார். ஆனால் ஆமோஸின் தீர்க்கதரிசனம் அத்துடன் முடிந்ததென யாராவது நினைத்திருந்தால் அது தவறு; ஏனெனில் ஆமோஸ் இன்னும் அநேக காரியங்களை அறிவிக்கவிருந்தார்! வடக்கு ராஜ்யமான இஸ்ரவேலுக்கு எதிராக கடும் நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவிப்பதற்காகவே ஆமோஸ் முக்கியமாய் நியமிக்கப்பட்டார். இஸ்ரவேல் தேசம் தெய்வீக ஆக்கினைத் தீர்ப்பைப் பெறுவது தகுந்ததாக இருந்தது; ஏனெனில் ஒழுக்க ரீதியிலும், மத ரீதியிலும் அந்தத் தேசம் மிகவும் சீரழிந்து போயிருந்தது.
12 இஸ்ரவேல் ராஜ்யத்தில் சர்வசாதாரணமாகக் காணப்பட்ட ஒடுக்குதலை ஆமோஸின் தீர்க்கதரிசனம் வெட்ட வெளிச்சமாக்கியது. இதைக் குறித்து, ஆமோஸ் 2:6, 7-ல் இவ்வாறு சொல்கிறது: “இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்ப மாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப் போட்டார்களே. அவர்கள் தரித்திரருடைய தலையின் மேல் மண்ணை வாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்.”
13 நீதிமான்கள் “பணத்துக்கு” விற்கப்பட்டார்கள்; அதாவது, நியாயாதிபதிகள் பணத்தை வாங்கிக்கொண்டு குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளென தீர்ப்பு செய்தார்கள். கடன் கொடுத்தவர்கள் மிகச் சிறிய கடன் தொகைக்காக ஏழைகளை “ஒரு ஜோடு பாதரட்சை”யின் விலைக்கு அடிமைகளாக விற்றார்கள். ‘தரித்திரரை’ இன்னுமதிகமாய் ஒடுக்க இரக்கமற்ற ஆட்கள் மும்முரமாய் முயன்றார்கள். அந்நிலையில், வேதனையை, துயரத்தை அல்லது அவமானத்தைக் குறிக்கும் விதத்தில் தரித்திரர் தங்கள் தலைகளிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்கள். எங்கும் ஊழல் நிறைந்திருந்ததால் ‘சிறுமையானவர்களுக்கு’ நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கை துளியும் இருக்கவில்லை.
14. பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலில் யார் தவறாக நடத்தப்பட்டவர்கள்?
14 யார் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதைக் கவனியுங்கள். தேசத்திலிருந்த நீதிமான்கள், எளியவர்கள், தரித்திரர்கள், சிறுமையானவர்கள் ஆகியோர் தவறாக நடத்தப்பட்டார்கள். இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த நியாயப்பிரமாணச் சட்டம், ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கும் ஏழை எளியோருக்கும் பரிவு காட்ட வேண்டுமென கட்டளையிட்டது. அதற்கு நேர்மாறாக, அத்தகையோருடைய நிலை பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலில் படுமோசமாக இருந்தது.
“உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு”
15, 16. (அ) “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு” என இஸ்ரவேலர் ஏன் எச்சரிக்கப்பட்டார்கள்? (ஆ) துன்மார்க்கர் தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை ஆமோஸ் 9:1, 2 எப்படிக் காட்டுகிறது? (இ) பொ.ச.மு. 740-ல் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலுக்கு என்ன நேர்ந்தது?
15 ஒழுக்கக்கேடும் வேறு பாவங்களும் இஸ்ரவேலில் தலைவிரித்தாடின; எனவேதான், “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு” என அந்தக் கீழ்ப்படியாத தேசத்தை ஆமோஸ் தீர்க்கதரிசி எச்சரித்தார். (ஆமோஸ் 4:12) வரப்போகிற தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து உண்மையற்ற இஸ்ரவேலரால் தப்பிக்க முடியாது. ஏனென்றால், “நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்ப மாட்டேன்” என்று எட்டாவது முறையாக யெகோவா அறிவித்தார். (ஆமோஸ் 2:6) ஒளிந்துகொள்ள நினைக்கும் துன்மார்க்கரைப் பற்றி கடவுள் இவ்வாறு சொன்னார்: “அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை. அவர்கள் பாதாள பரியந்தம் தோண்டிப் பதுங்கிக் கொண்டாலும் என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு வரும்; அவர்கள் வான பரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப் பண்ணுவேன்.”—ஆமோஸ் 9:1, 2.
16 துன்மார்க்கர் “பாதாள பரியந்தம் தோண்டிப் பதுங்கிக் கொண்டாலும்,” அதாவது அடையாள அர்த்தத்தில் பூமியின் மிகத் தாழ்வான இடங்களில் ஒளிந்துகொள்ள நினைத்தாலும் அவர்கள் யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. “அவர்கள் வான பரியந்தம் ஏறினாலும்,” அதாவது உயர்ந்த மலைகளில் அடைக்கலம் தேட முயன்றாலும் அவர்களால் தப்ப முடியாது. எந்த மறைவிடமும் யெகோவாவுக்கு மறைவானதல்ல என்ற எச்சரிப்பு மிகவும் தெளிவாக இருந்தது. கடவுளுடைய நீதியான தராதரத்தின்படி, இஸ்ரவேல் ராஜ்யம் அதன் துன்மார்க்க செயல்களுக்காக கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கான வேளையும் வந்தது. ஆமோஸ் தன் தீர்க்கதரிசனத்தைப் பதிவுசெய்து சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேல் ராஜ்யம் அசீரியர்களிடம் தோல்வியுற்றது.
தெய்வீக நியாயத்தீர்ப்பு கண்மூடித்தனமானதல்ல
17, 18. கடவுளுடைய இரக்கத்தைப் பற்றி ஆமோஸ் 9-ம் அதிகாரம் எதை வெளிப்படுத்துகிறது?
17 தெய்வீக நியாயத்தீர்ப்பு எப்போதும் தகுந்தது என்பதையும், அதிலிருந்து தப்ப முடியாது என்பதையும் புரிந்துகொள்ள ஆமோஸ் தீர்க்கதரிசனம் இதுவரை நமக்கு உதவியிருக்கிறது. அதே சமயம், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு கண்மூடித்தனமானதல்ல என்பதையும் ஆமோஸ் புத்தகம் காட்டுகிறது. துன்மார்க்கர் எங்கு ஒளிந்துகொண்டாலும் அவர்களைக் கண்டுபிடித்து, நியாயந்தீர்க்க கடவுளால் முடியும். மனந்திரும்பிய, நீதிமான்களைக் கண்டுபிடித்து அத்தகையவர்களுக்கு இரக்கம் காட்டவும் அவரால் முடியும். இந்த விஷயம், ஆமோஸ் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் மிக அழகாக சித்தரிக்கப்படுகிறது.
18 ஆமோஸ் 9-ம் அதிகாரம், 8-ம் வசனத்தின்படி, “யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்க மாட்டேன்” என்று யெகோவா கூறினார். 13 முதல் 15 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தமது ஜனத்தின் ‘சிறையிருப்பைத் திருப்பப்போவதாக’ யெகோவா வாக்குறுதி அளித்தார். அவர்களுக்கு இரக்கம் காட்டப்படும், எனவே அவர்கள் பாதுகாப்பை அனுபவிப்பார்கள், செழிப்பில் பூரிப்பார்கள். ‘உழுகிறவன் அறுக்கிறவனை . . . தொடர்ந்து பிடிப்பான்’ என யெகோவா வாக்குறுதி அளித்தார். அதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! விளைச்சல் அவ்வளவு அபரிமிதமாக இருப்பதால் உழுது, விதை விதைப்பதற்கான அடுத்த காலம் வந்தும்கூட அறுவடை முடியாமல் இருக்கும்!
19. இஸ்ரவேலையும் யூதாவையும் சேர்ந்த மீதியானோருக்கு என்ன ஏற்பட்டது?
19 இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருந்த துன்மார்க்கர் மீது யெகோவா கொண்டுவந்த நியாயத்தீர்ப்பு கண்மூடித்தனமானதல்ல என்று நாம் சொல்லலாம், ஏனெனில் மனந்திரும்பியவர்களுக்கும் நல்மனமுள்ளவர்களுக்கும் இரக்கம் காட்டப்பட்டது. அவர்கள் தாயகம் திரும்புவது பற்றி ஆமோஸ் 9-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறியது; மனந்திரும்பிய மீதியானோர் பொ.ச.மு. 537-ல் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தார்கள். தங்கள் நேசத்திற்குரிய தாய்நாட்டிற்கு வந்த பிறகு மெய் வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டினார்கள். பாதுகாப்பான சூழலில் வீடுகளையும் திரும்பக் கட்டி, தோட்டங்களையும் திராட்சை தோட்டங்களையும் நாட்டினார்கள்.
யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்பு வரும்!
20. ஆமோஸ் அறிவித்த தெய்வீக நியாயத்தீர்ப்பின் செய்திகளைக் கலந்தாலோசித்தது நமக்கு எதை உறுதிப்படுத்த வேண்டும்?
20 ஆமோஸ் அறிவித்த தெய்வீக நியாயத்தீர்ப்புச் செய்திகளைக் கலந்தாலோசித்ததானது, நம் நாட்களில் யெகோவா துன்மார்க்கத்திற்கு முடிவுகட்டுவார் என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறது. நாம் ஏன் இதை நம்பலாம்? முதலாவதாக, கடந்த காலங்களில் அவர் துன்மார்க்கரை என்ன செய்தார் என்பது பற்றிய உதாரணங்களைக் கவனிப்பது நம் நாட்களில் அவர் என்ன செய்வார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவதாக, விசுவாசதுரோக இஸ்ரவேல் ராஜ்யத்தின் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பை அவர் கொண்டு வந்தது, கிறிஸ்தவமண்டலத்தின் மீது, அதாவது பொய் மத உலகப் பேரரசான ‘மகா பாபிலோனின்’ மீது கடவுள் அழிவைக் கொண்டு வருவார் என்பதை உறுதிப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 18:2.
21. கிறிஸ்தவமண்டலம் கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்பைப் பெறுவது ஏன் தகுந்தது?
21 ஆக, கிறிஸ்தவமண்டலத்தின் மீது தெய்வீக ஆக்கினைத் தீர்ப்பு வருவது தகுந்ததே. மத ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் அது சீர்கெட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கிறிஸ்தவமண்டலத்திற்கும் சாத்தானிய உலகின் மீதமுள்ள பாகத்திற்கும் எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு தகுந்ததே, அதிலிருந்து தப்பவே முடியாது. நியாயத்தீர்ப்புக்கான சமயம் வருகையில், “அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை” என்ற ஆமோஸ் 9:1-லுள்ள வசனம் நிறைவேறும். ஆம், துன்மார்க்கர் எங்கு ஒளிந்து கொண்டாலும் அவர்களை யெகோவா கண்டுபிடித்துவிடுவார்.
22. தெய்வீக நியாயத்தீர்ப்பு பற்றிய என்ன குறிப்புகளை 2 தெசலோனிக்கேயர் 1:6-8 தெளிவுபடுத்துகிறது?
22 எனவே, தெய்வீக நியாயத்தீர்ப்பு எப்போதும் தகுந்தது, அதிலிருந்து தப்ப முடியாது; அது கண்மூடித்தனமானதல்ல. இதை அப்போஸ்தலன் பவுலினுடைய பின்வரும் வார்த்தைகளில் காணலாம்: “உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.” (2 தெசலோனிக்கேயர் 1:6-8) அபிஷேகம் செய்யப்பட்டவர்களை உபத்திரவப்படுத்தியவர்கள் ஆக்கினைத் தீர்ப்பைப் பெறுவது தகுந்ததே, அது ‘தேவனுக்கு நீதியாயிருக்கிறது.’ ‘இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது’ அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து துன்மார்க்கர் தப்பவே முடியாது. தெய்வீக நியாயத்தீர்ப்பு கண்மூடித்தனமாகவும் இருக்காது, ஏனெனில், ‘தேவனை அறியாதவர்கள் மீதும், . . . சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் மீதும்’ இயேசு ஆக்கினைத் தீர்ப்பைக் கொண்டு வருவார். அதோடு, உபத்திரவத்தை அனுபவிக்கிற தேவ பயமுள்ளவர்களுக்கு அந்தத் தெய்வீக நியாயத்தீர்ப்பு ஆறுதலை அளிக்கும்.
நேர்மையானவர்களுக்கு நம்பிக்கை
23. ஆமோஸ் புத்தகத்திலிருந்து என்ன நம்பிக்கையையும் ஆறுதலையும் பெறலாம்?
23 நல்மனமுள்ளோருக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிற அருமையான செய்தி ஆமோஸ் தீர்க்கதரிசனத்தில் உள்ளது. ஆமோஸ் புத்தகத்தில் முன்னுரைக்கப்பட்டபடியே தமது பூர்வகால மக்களை யெகோவா முற்றிலுமாக அழிக்கவில்லை. இஸ்ரவேலிலும் யூதாவிலுமிருந்து சிறைப்பட்டுப் போனவர்களை அவர் கடைசியில் கூட்டிச் சேர்த்தார், அவர்களது தாயகத்திற்கு திரும்பச் செய்தார், அதிக பாதுகாப்பையும் செல்வச் செழிப்பையும் தந்து ஆசீர்வதித்தார். இது நமக்கு எதை உணர்த்துகிறது? தெய்வீக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுகையில், துன்மார்க்கர் எங்கு ஒளிந்துகொண்டாலும் யெகோவாவால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியும், அவருடைய இரக்கத்தைப் பெற தகுதியுள்ளவர்கள் பூமியில் எங்கு வாழ்ந்தாலும் சரி அவர்களையும் அவரால் கண்டுபிடிக்க முடியும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
24. யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் எந்தெந்த வழிகளில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
24 துன்மார்க்கருக்கு எதிராக யெகோவா தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதைக் காண நாம் காத்திருக்கும்போது அவருடைய உண்மையுள்ள ஊழியர்களாக நாம் எதையெல்லாம் அனுபவிக்கிறோம்? ஏன், யெகோவா நம்மை ஆன்மீக செழுமையால் அபரிமிதமாக ஆசீர்வதித்து வருகிறாரே! கிறிஸ்தவமண்டலத்தின் தவறான போதனைகளால் விளைந்த பொய்களும் குழப்பங்களும் இல்லாத ஒரு வணக்க முறையை அனுபவிக்கிறோம். அதோடு, ஆன்மீக உணவையும் யெகோவா நமக்கு அபரிமிதமாக வழங்கியிருக்கிறார். இருந்தாலும், யெகோவா கொடுக்கும் இந்த ஏராளமான ஆசீர்வாதங்களோடு பெரிய உத்தரவாதமும் நமக்கு இருப்பதை நினைவில் வையுங்கள். வரப்போகிற நியாயத்தீர்ப்பைப் பற்றி மற்றவர்களை எச்சரிக்க வேண்டுமென்று யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். எனவே, ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கு ஏற்ற நல்மனமுள்ளோரைக்’ கண்டுபிடிக்க நம்மாலான எல்லாவற்றையும் செய்யவே நாம் விரும்புகிறோம். (அப்போஸ்தலர் 13:48, NW) ஆம், இப்போது நாம் அனுபவித்து வருகிற ஆன்மீக செழுமையிலிருந்து மற்றவர்களும் பயனடைய நம்மால் முடிந்தளவு அநேகருக்கு உதவ விரும்புகிறோம். துன்மார்க்கர் மீது வரவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமென விரும்புகிறோம். அந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டுமென்றால் நமக்குச் சரியான இருதய நிலை தேவை. இதுவும்கூட ஆமோஸ் தீர்க்கதரிசனத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது; அடுத்த கட்டுரையில் இதைப் பற்றி கலந்தாலோசிக்கப் போகிறோம்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்புகள் எப்போதும் தகுந்தவையே என்பதை ஆமோஸின் தீர்க்கதரிசனம் எப்படிக் காட்டுகிறது?
• தெய்வீக நியாயத்தீர்ப்புக்குத் தப்ப முடியாது என்பதற்கு ஆமோஸ் என்ன அத்தாட்சி அளிக்கிறார்?
• கடவுளின் நியாயத்தீர்ப்பு கண்மூடித்தனமாக இருக்காது என்பதை ஆமோஸ் புத்தகம் எப்படிக் காட்டுகிறது?
[பக்கம் 16, 17-ன் படம்]
இஸ்ரவேல் ராஜ்யம் தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பவில்லை
[பக்கம் 18-ன் படம்]
பொ.ச.மு. 537-ல் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலையும் யூதாவையும் சேர்ந்த மீதியானோர் திரும்பி வந்தார்கள்