நீங்கள் எந்த மேசையில் புசிக்கிறீர்கள்?
“நீங்கள் யெகோவாவின் மேசையிலும் பேய்களின் மேசையிலும் பங்குகொள்ள முடியாதே.”—1 கொரிந்தியர் 10:21, NW.
1. என்ன மேசைகள் நமக்கு முன்பாக ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன, அவற்றைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் என்ன எச்சரிப்பு விடுக்கிறார்?
அப்போஸ்தலன் பவுல் ஏவப்பட்டெழுதிய இந்த வார்த்தைகள், மனிதவர்க்கத்துக்கு முன்பாக இரண்டு அடையாள அர்த்தமுள்ள மேசைகள் ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. ஒவ்வொரு மேசையும் அதன்மீது வைக்கப்பட்டுள்ள அடையாளப்பூர்வமான உணவு வகையினால் அடையாளப்படுத்தப்படுகிறது. நாம் யாவருமே ஏதோவொன்றில் புசித்துக்கொண்டிருக்கிறோம். என்றாலும், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமானால், அவருடைய மேசையில் புசித்துக்கொண்டும் அதே சமயத்தில் பேய்களின் மேசையில் கொறித்துக்கொண்டும் இருக்க முடியாது. அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்: “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; [நீங்கள் யெகோவாவின் மேசையிலும் பேய்களின் மேசையிலும் பங்குகொள்ள முடியாதே, NW].”—1 கொரிந்தியர் 10:20, 21.
2. (அ) பூர்வ இஸ்ரவேலருடைய நாட்களில் யெகோவாவின் எந்த மேசை இருந்தது, சமாதான பலிகளில் பங்குகொண்டவர் யாவர்? (ஆ) யெகோவாவின் மேசையில் பங்குகொள்வது இன்று எதை அர்த்தப்படுத்துகிறது?
2 யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த பூர்வ இஸ்ரவேலர்கள் அளித்த சமாதான பலிகளைப் பவுலின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. கடவுளின் பலிபீடம் ஒரு மேசையாக அழைக்கப்பட்டது. பலியிடுவதற்கு ஒரு விலங்கைக் கொண்டுவருபவன் யெகோவாவோடும் ஆசாரியர்களோடும் நெருங்கிய உறவை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது. எப்படி? முதலில், யெகோவா அந்தப் பலியில் பங்குகொண்டார், ஏனென்றால், அவருடைய பலிபீடத்தின் மீது இரத்தம் தெளிக்கப்பட்டு அதற்கு அடியிலிருந்த தழல்கள் அதிலுள்ள கொழுப்பைப் பட்சித்தன. இரண்டாவதாக, அதில் ஆசாரியன் பங்குகொண்டார், எவ்வாறெனில், அவரும் (அவர் குடும்பமும்) வறுக்கப்பட்டு வைக்கப்பட்ட அந்த மார்க்கண்டத்தையும், பலியிடப்பட்ட விலங்கின் வலது முன்னந்தொடையையும் புசித்தனர். மூன்றாவதாக, அதிலுள்ள மீதியானவற்றை புசிப்பதன் மூலம் பலி செலுத்துபவர் அதில் பங்குகொண்டார். (லேவியராகமம் 7:11-36) இன்று, யெகோவாவின் மேசையில் பங்குகொள்வதானது இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் எடுத்துக்காட்டிய விதமாக, அவர் விரும்பும் வணக்கத்தை செலுத்துவதை அர்த்தப்படுத்துகிறது. இதைச் செய்வதற்கு, யெகோவா அவருடைய வார்த்தையின் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் கொடுப்பவற்றை ஆவிக்குரிய விதத்தில் புசிக்கவேண்டும். யெகோவாவின் மேசையில் அவரோடு விசேஷித்த உறவை அனுபவித்த இஸ்ரவேலர்கள் பேய்களின் மேசையில் அவற்றிற்கு பலிகளை செலுத்துவதிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தனர். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களும் ‘மற்ற செம்மறியாடுகளாகிய’ அவர்களின் தோழர்களும் அதே தெய்வீக தடையுத்தரவில் இருக்கின்றனர்.—யோவான் 10:16, NW.
3. நம்முடைய நாளில் பேய்களின் மேசையில் பங்குகொள்வதன் குற்றத்திற்கு ஒருவர் எவ்வாறு ஆளாகக்கூடும்?
3 நம்முடைய நாளில் பேய்களின் மேசையில் பங்குகொள்வதன் குற்றத்திற்கு ஒருவர் எவ்வாறு ஆளாகக்கூடும்? யெகோவாவுக்கு எதிராக இருக்கக்கூடிய எதையும் முன்னேற்றுவிப்பதன் மூலம் ஒருவர் ஆளாகக்கூடும். நம்மைத் தவறாக வழிநடத்தி, யெகோவாவிடமிருந்து திருப்புவதற்கு திட்டமைக்கப்பட்டிருக்கும் பேய்த்தன பிரச்சாரம் முழுவதையும் பேய்களின் மேசை உள்ளடக்குகிறது. அத்தகைய நஞ்சின்மீது தன் இருதயத்தையும் மனதையும் செலுத்த யார்தான் விரும்புவார்? இன்று போர், செல்வம் ஆகிய தெய்வங்களுக்கு அநேகர் அளிக்கும் பலிகளில் பங்குள்ளவராயிருப்பதற்கு உண்மை கிறிஸ்தவர்கள் மறுக்கின்றனர்.—மத்தேயு 6:24.
“பேய்களின் மேசை”யிலிருந்து விலகியிருப்பது
4. நாம் யாவரும் எதிர்ப்படக்கூடிய கேள்வியென்ன, நாம் ஏன் தெரிந்து வேண்டுமென்றே பேய்களின் மேசையில் பங்குகொள்ள விரும்பமாட்டோம்?
4 நான் எந்த மேசையில் புசிக்கிறேன் என்பதே நாம் யாவரும் எதிர்ப்படக்கூடிய கேள்வியாகும். ஏதாவது ஒரு மேசையில் நாம் புசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை நாம் கவனியாது விட்டுவிட முடியாது. (மத்தேயு 12:30-ஐ ஒத்துப்பாருங்கள்.) தெரிந்து வேண்டுமென்றே பேய்களின் மேசையில் பங்குகொள்ள நாம் விரும்பமாட்டோம். அப்படிச் செய்வது ஒரே உண்மையான, உயிருள்ள கடவுளாகிய யெகோவாவின் தயவை இழப்பதைக் குறிக்கும். மறுபட்சத்தில், யெகோவாவின் மேசையில் மாத்திரம் உணவை உட்கொள்வது சந்தோஷமாக நாம் நித்திய ஜீவனோடு வாழ்வதற்கு வழிநடத்துகிறது! (யோவான் 17:3) உண்பதற்கேற்பவே ஒரு நபர் இருக்கிறார் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அவ்வாறெனில், நல்ல தேக ஆரோக்கியமாகவும் மன ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பும் எவருமே தன் உணவுப்பழக்கத்தைக் குறித்ததில் கவனமாயிருக்கவேண்டும். அதிக கொழுப்புள்ள சத்தற்ற உணவானது இரசாயன சேர்ப்பு வஸ்துக்களோடு ருசியாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், நீடித்திருப்பதற்கான நம்முடைய தேக ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவிசெய்யாதோ, அதேபோல பேய்த்தன கருத்துக்களோடு கட்டப்பட்டிருக்கிற இந்த உலகப் பிரச்சாரமானது கெட்ட, அடையாள அர்த்தமுள்ள சத்தற்ற உணவாக நம் மனங்களைக் கெடுக்கக்கூடியதாக இருக்கிறது.
5. பேய்த்தன போதனைகளை உட்கொள்வதை இன்று நாம் எப்படித் தவிர்க்கலாம்?
5 கடைசி நாட்களில், மக்கள் “பேய்களின் போதனைக”ளால் வழிதவறி செல்வார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் முன்னுரைத்தார். (1 தீமோத்தேயு 4:1, NW) அத்தகைய பேய்த்தன போதனைகள் பொய் மதக் கொள்கைகளில் மாத்திரம் காணப்படாமல், இதர வழிகளிலும் பரவலாக அறிவிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, எத்தகைய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நம்முடைய பிள்ளைகளும் நாமும் வாசிக்கிறோம் என்றும், எத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம் என்றும், எத்தகைய நாடகங்களையும் சினிமாக்களையும் நாம் பார்க்கிறோம் என்றும் பகுத்தாராய்ந்து சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். (நீதிமொழிகள் 14:15) பொழுதுபோவதற்காக நாம் புனைகதையை வாசித்தால், அர்த்தமற்ற வன்முறையையும் கள்ளக் காதலையும் அல்லது மாயமந்திர பழக்கங்களையும் அது முக்கியப்படுத்திக் காட்டுகிறதா? புத்திமதி பெறவேண்டி நாம் புனைகதையில்லாததை வாசித்தோமானால், “கிறிஸ்துவைப் பற்றினதல்”லாத தத்துவத்தையோ அல்லது வாழ்க்கை முறையையோ அது விவரிக்கிறதா? (கொலோசெயர் 2:8) வீணான ஊகங்கள் அளிக்கப்பட்டிருக்கிறதா, அல்லது உலகப்பிரகாரமான சமூக இயக்கங்களில் ஈடுபடுவது ஆதரித்துப் பேசப்படுகிறதா? பெரிய பணக்காரராகவேண்டும் என்ற உறுதிப்பாட்டை அது ஊக்குவிக்கிறதா? (1 தீமோத்தேயு 6:9) கிறிஸ்துவைப்போலல்லாத பிரிவினையான போதனைகளை நயமாக அளிக்கக்கூடிய ஒரு பிரசுரமாக அது இருக்கிறதா? பதிலானது ஆம் என்றிருந்து, அத்தகைய பிரசுரத்தை நாம் தொடர்ந்து வாசித்தோமென்றால் அல்லது பார்த்தோமென்றால், பேய்களின் மேசையில் புசிக்கக்கூடிய ஆபத்து நமக்கு இருக்கிறது. இன்று, அதிக அறிவொளியூட்டும் மற்றும் தற்காலத்துக்குரிய உலகப்பிரகாரமான தத்துவங்களை ஊக்குவிக்கக்கூடிய லட்சக்கணக்கான பிரசுரங்கள் இருக்கின்றன. (பிரசங்கி 12:12) ஆனால் இந்தப் பிரச்சாரம் எதுவும் புதியதாக இல்லை; சாத்தான் ஏவாளிடம் தன் முன்னேற்றத்திற்காக உதவிபுரியும் என்று அவளோடு தந்திரமாக சொன்னதைவிட அதிகமாக எதையும் அது ஒருவரின் நன்மைக்காகவோ முன்னேற்றத்திற்காகவோ உதவிபுரிகிறதில்லை.—2 கொரிந்தியர் 11:3.
6. சாத்தான் தன் பேய்த்தன சத்தற்ற உணவை ருசிபார்க்க அழைக்கையில், செயலளவில் எவ்வாறு நாம் பிரதிபலிக்கவேண்டும்?
6 ஆகையால், சாத்தான் தன் பேய்த்தன சத்தற்ற உணவை ருசிபார்க்க அழைக்கையில், எவ்வாறு நாம் பிரதிபலிக்கவேண்டும்? கல்லுகளை அப்பங்களாக செய்யுமாறு சாத்தான் இயேசுவை சோதித்தபோது, அவர் செய்ததுபோல நாமும் செய்யவேண்டும். இயேசு பதிலளித்தார்: “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” மேலும் சாத்தானை இயேசு சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டால், “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” அவருக்குத் தருவதாக பிசாசு அளித்தபோது, இயேசு இவ்வாறு பிரதிபலித்தார்: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.”—மத்தேயு 4:3, 4, 8-10.
7. யெகோவாவின் மேசையிலும் பேய்களின் மேசையிலும் வெற்றிகரமாக புசிக்க முடியும் என்று நினைத்தால், ஏன் நாம்மைநாமே ஏமாற்றிக்கொள்பவர்களாக இருக்கிறோம்?
7 யெகோவாவின் மேசையையும் அவருடைய பேய்த்தன விரோதிகளால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேசையையும் ஒன்றிணைக்கவே முடியாது! ஆம், உண்மையாகவே கடந்தகாலத்தில் அதை முயன்றிருக்கின்றனர். எலியா தீர்க்கதரிசியின் நாட்களில் இருந்த பூர்வ இஸ்ரவேலர்களை நினைவுபடுத்திப் பாருங்கள். அந்த மக்கள் யெகோவாவை வணங்குவதாக உரிமைபாராட்டினார்கள். ஆனால் பாகால் போன்ற மற்ற தெய்வங்கள் வளமையைத் தருவதாக அவர்கள் நம்பினார்கள். எலியா மக்களை அணுகி சொன்னார்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்.” மறுக்கமுடியாதபடி, இஸ்ரவேலர்கள் “முதலில் ஒரு காலிலும் அடுத்து இன்னொரு காலிலும்” நொண்டுபவர்களாக இருந்தனர். (1 இராஜாக்கள் 18:21; தி ஜெரூசலம் பைபிள்) தங்கள் இறைவனின் தெய்வத்துவத்தை நிரூபிக்குமாறு எலியா பாகால் ஆசாரியர்களிடம் சவால்விட்டார். வானத்திலிருந்து பலியின்மீது அக்கினியை இறங்கப்பண்ணும் கடவுளே மெய்க் கடவுளாக இருப்பார். பெரும் முயற்சி செய்தபோதிலும், பாகாலின் ஆசாரியர்கள் தோல்வியடைந்தனர். பின்னர் எலியா வெறுமனே ஜெபம் செய்தார்: “யெகோவாவே, என்னைக் கேட்டருளும் அப்போது யெகோவாவாகிய நீரே உண்மையான கடவுள் என்று இந்த மக்கள் ஒருவேளை அறிந்துகொள்வார்கள்.” (NW) உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி தண்ணீரில் ஊறவைக்கப்பட்டிருந்த விலங்கு பலியைப் பட்சித்துப்போட்டது. யெகோவாவுடைய தெய்வத்துவத்தின் பகிரங்கமான வெளிக்காட்டால் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாய், அந்த மக்கள் எலியாவுக்குக் கீழ்ப்படிந்து, எல்லா 450 பாகால் தீர்க்கதரிசிகளையுமே கொன்றுபோட்டனர். (1 இராஜாக்கள் 18:24-40) ஆகையால் இன்றும் யெகோவாவை நாம் உண்மையான கடவுளாக ஏற்று, முன்னரே அவருடைய மேசையில் புசிக்கவில்லையென்றால், அவ்வாறு செய்ய மனதிடத்தோடு திரும்புவோமாக.
‘உண்மையுள்ள அடிமை’ யெகோவாவின் மேசைக்கு உணவளிக்கிறது
8. இயேசு தம்முடைய பிரசன்னத்தின்போது தம் சீஷர்கள் ஆவிக்குரிய விதத்தில் புசிப்பதற்கு எந்த அடிமையைப் பயன்படுத்துவதாக முன்னுரைத்தார், இந்த அடிமையின் அடையாளம் என்ன?
8 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ தம் சீஷர்களுக்கு ஆவிக்குரிய உணவை அளிக்கும் என்று அவர் முன்னுரைத்தார்: “எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:45-47) இந்த அடிமை ஒரேவொரு தனிப்பட்ட நபராக இல்லாமல், ஒப்புக்கொடுக்கப்பட்ட, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய வகுப்பாக நிரூபித்திருக்கிறது. இந்த வகுப்பு அருசுவையான ஆவிக்குரிய உணவை யெகோவாவின் மேசையில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருக்கும் ‘திரள் கூட்டத்தாருக்கும்’ வைத்திருக்கிறது. இப்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பெரும் எண்ணிக்கையான ஆட்களாக, யெகோவா தேவனின் சர்வலோக அரசாட்சிக்காகவும் தம் பரிசுத்த பெயரைப் பரிசுத்தப்படுத்தக்கூடிய அவருடைய ராஜ்யத்துக்காகவும் திரள் கூட்டத்தார் தங்கள் நிலைநிற்கையை எடுத்திருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9-17.
9. யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆவிக்குரிய உணவை அளிக்க எந்தக் கருவியை அந்த அடிமை வகுப்பு பயன்படுத்தி வருகிறது, இவர்களுடைய ஆவிக்குரிய விருந்துண்ணுதல் எவ்வாறு தீர்க்கதரிசனமாக விவரிக்கப்பட்டிருக்கிறது?
9 இந்த உண்மையுள்ள அடிமை வகுப்பு யெகோவாவின் சாட்சிகள் யாவருக்கும் ஆவிக்குரிய போஷாக்கை அளிக்க உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியைப் பயன்படுத்தி வருகிறது. கிறிஸ்தவமண்டலமும் மீந்திருக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையும் உயிரளிக்கும் ஆவிக்குரிய உணவு கிட்டாமையால் வாடிக்கொண்டிருக்கும்போது, யெகோவாவின் மக்கள் விருந்துண்கிறவர்களாக இருக்கின்றனர். (ஆமோஸ் 8:11) ஏசாயா 25:6-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இது இருக்கிறது: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும் தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.” 7, 8 வசனங்கள் காட்டுகிறபடி, இந்த விருந்து நித்திய காலத்திற்கு நீடித்திருக்கும். இப்போது யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிலுள்ள யாவருக்கும் இது என்னே ஓர் ஆசீர்வாதமாக இருந்துகொண்டு, எதிர்காலத்திலும் என்னே ஓர் ஆசீர்வாதமாக தொடர்ந்திருக்கும்!
பேய்களின் மேசையிலுள்ள நஞ்சுகலந்த உணவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
10. (அ) பொல்லாத அடிமை வகுப்பின் மூலம் என்ன வகையான உணவு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது, இவர்களுடைய உத்தேசம் என்ன? (ஆ) இந்தப் பொல்லாத அடிமை வகுப்பு தங்களுடைய முந்தைய உடன் அடிமைகளை எப்படி நடத்துகிறது?
10 பேய்களின் மேசையில் உள்ள உணவு நஞ்சுள்ளதாயிருக்கிறது. உதாரணமாக, பொல்லாத அடிமை வகுப்பின் மூலமும் விசுவாசதுரோகிகளின் மூலமும் பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் உணவைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அது போஷாக்கை அளிக்கவோ கட்டியெழுப்பவோ செய்வதில்லை; அது ஆரோக்கியமானதாகவும் இல்லை. அது இருக்கமுடியாது, ஏனென்றால் விசுவாசதுரோகிகள் யெகோவாவின் மேசையில் புசிப்பதை நிறுத்திவிட்டிருக்கின்றனர். இதன் விளைவாக, புதிய ஆளுமை சம்பந்தமாக அவர்கள் விருத்திசெய்திருந்த அனைத்துமே இல்லாமற்போயிருக்கிறது. அவர்களை, பரிசுத்த ஆவியல்ல, கசப்பான நஞ்சு உந்துவிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரே குறிக்கோளில் ஒருமுகப்பட்டிருக்கின்றனர், அதாவது, இயேசு முன்னுரைத்த பிரகாரம், அவர்களின் முந்தைய உடன் அடிமைகளை அடிப்பதாகும்.—மத்தேயு 24:48, 49.
11. ஆவிக்குரிய உணவைப் பொருத்தமட்டில் உள்ள ஒருவருடைய தெரிவைக் குறித்து C. T. ரஸல் என்ன எழுதினார், யெகோவாவின் மேசையை விட்டுவிடுபவர்களை இவர் எவ்வாறு விவரித்தார்?
11 உதாரணமாக, 1909-லேயே, யெகோவாவின் மேசையிலிருந்து விலகி, முன்பு தங்களுடைய உடன் அடிமைகளாக இருந்தவர்களை மோசமாக நடத்தத் தொடங்கிய ஆட்களைக் குறித்து உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவராயிருந்த C. T. ரஸல் எழுதினார். அக்டோபர் 1, 1909 தி உவாட்ச் டவர் சொன்னது: “சங்கத்திலிருந்தும் அதன் சேவையிலிருந்தும் தங்களைப் பிரித்துக்கொள்கிற யாவரும் தங்களைத்தாமே முன்னேற்றுவித்து, அல்லது விசுவாசத்தில் மற்றவர்களைக் கட்டியெழுப்பி ஆவியின் கனிகளை வளர்ப்பதற்கு மாறாக, எதிரானதையே செய்வதாகத் தோன்றுகிறது. இவர்கள் தாங்கள் சேவித்த காரணிக்குத் தீங்கு செய்ய முயன்று, ஓரளவு கவனத்தை ஈர்த்து படிப்படியாகக் காட்சியிலிருந்து மறைந்து, தங்களுக்குத்தாமேயும் மேலும் அப்படிப்பட்ட பிணக்ககரமான ஆவியையுடையவர்களுக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாயிருக்கின்றனர். . . . வேறு மேசைகளில் இதுபோன்ற அல்லது இதற்கும் மேம்பட்ட உணவைப் பெற முடியும் என்று சிலர் நினைத்தால், அல்லது அதுபோன்று நன்றாக அல்லது அதற்கும் மேலாக சிறந்த விதத்தில் உணவைத் தயாரிக்க முடியும் என்று நினைத்தால், இவர்கள் தங்கள் விருப்பப்படி செய்யட்டும். . . . ஆனால் தங்களுடைய திருப்திக்காக உணவைக் கண்டடைய மற்றவர்கள் எந்தவொரு இடத்திற்கோ எல்லா இடத்திற்கோ செல்ல நாங்கள் அனுமதித்தாலும் ஆச்சரியகரமாக, எங்களுடைய எதிரிகளாபவர்கள் மிகவும் வித்தியாசப்பட்ட ஒரு போக்கை மேற்கொள்கின்றனர். ‘நான் எனக்கு பிடித்தமானதைக் கண்டுபிடித்துவிட்டேன், டாட்டா!’ என்று உலகின் வீராப்பான முறையில் சொல்வதற்கு மாறாக, இவர்கள் கோபத்தையும், பொறாமையையும், வெறுப்பையும், பகைமையையும், ‘மாம்சத்தின் கிரியைகளையும் பிசாசின் கிரியைகளையும்’ உலகப்பிரகாரமான ஆட்கள் வெளிப்படுத்தியிராத விதத்தில் காட்டுபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் வெறியில், சாத்தானிய வெறியில் [வெறிநாய்கடியில்] தோய்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. சிலர் நம்மைத் தாக்கிப் பேசிவிட்டு, நாம் அவர்களைத் தாக்கிப்பேசியதாக சாதிக்கின்றனர். அருவருப்பான பொய்க் காரியங்களை சொல்லவும் எழுதவும் தயாராயிருக்கின்றனர், கேவலமான காரியங்களைச் செய்யக்கூடிய ஒழுக்கங்கெட்ட ஆட்களாகவும் இருக்கின்றனர்.”
12. (அ) விசுவாசதுரோகிகள் தங்கள் உடன் அடிமைகளை எவ்வாறு அடித்துத் தாக்குகின்றனர்? (ஆ) ஆர்வத்தின் காரணமாக விசுவாசதுரோகிகளின் புத்தகங்களிலிருந்து புசிப்பது ஏன் ஆபத்தானது?
12 ஆம், விசுவாசதுரோகிகள் காரியங்களைத் திரித்துக்கூறக்கூடிய, பாதி-உண்மைகளடங்கிய, அப்பட்டமான பொய் நிறைந்த பிரசுரங்களை வெளியிடுகின்றனர். இவர்கள் சாட்சிகளுடைய மாநாடுகளில் மறியல்செய்து, அஜாக்கிரதையான ஆட்களுக்குக் கண்ணிவைக்க முயலுகின்றனர். ஆகையால், நம்முடைய ஆர்வத்தை, அத்தகைய புத்தகங்களிலுள்ள காரியங்களை உட்கொள்வதற்கு நம்மை தூண்டவோ அவர்களின் இழிவான பேச்சைக் கேட்கவோ அனுமதிப்பது ஒரு ஆபத்தான காரியமாக இருக்கும்! தனிப்பட்ட விதத்தில் நமக்கு அது ஆபத்தாக இருக்குமென்று நாம் நினைக்காவிட்டாலும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்? ஒரு காரணமானது, சில விசுவாசதுரோக பிரசுரங்கள் “நயவசனிப்”பினாலும் “தந்திரமான வார்த்தைக”ளாலும் பொய்மைகளை அளிக்கின்றன. (ரோமர் 16:17, 18; 2 பேதுரு 2:3) பேய்களின் மேசையிலிருந்து நீங்கள் எதை எதிர்பார்ப்பீர்கள்? விசுவாசதுரோகிகளுங்கூட ஒருசில உண்மைகளை அளித்தாலுங்கூட, இவை சாதாரணமாக சூழமைவுக்கு பொருத்தமாயிராதவற்றிலிருந்து எடுக்கப்பட்டு, யெகோவாவின் மேசையிலிருந்து மற்றவர்களை விலக்கிப்போடும் நோக்கோடு செய்யப்படுகிறது. அவர்களுடைய புத்தகங்கள் யாவுமே குற்றத்தை மாத்திரம் கண்டுபிடித்து, தூஷிக்கிறவையாக இருக்கின்றன! எதுவும் கட்டியெழுப்புவதாக இல்லை.
13, 14. விசுவாசதுரோகிகளின் கனிகளும் அவர்களுடைய பிரச்சாரத்தின் கனிகளும் யாவை?
13 இயேசு சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:16) இப்போது விசுவாசதுரோகிகளின் கனிகளும் அவர்களுடைய பிரசுரங்களின் கனிகளும் யாவை? அவர்களுடைய பிரச்சாரத்தை நான்கு காரியங்கள் குறித்துக் காட்டுகின்றன. (1) சாமர்த்தியம். அவர்கள் “வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திர”முடையவர்களாக இருக்கிறார்கள் என்று எபேசியர் 4:14 சொல்கிறது. (2) பெருமைகலந்த புத்திசாலித்தனம். (3) அன்பின்மை. (4) பல்வேறு விதங்களில் நேர்மையின்மை. இவையே பேய்களின் மேசையில் உள்ள உணவிற்கான அடிப்படை பொருட்கள். இவை யாவுமே யெகோவாவுடைய மக்களின் விசுவாசத்தை குலைத்துப்போட திட்டமிடப்பட்டிருக்கின்றன.
14 மற்றொரு அம்சமும் இருக்கிறது. விசுவாசதுரோகிகள் எதனிடம் திரும்பியிருக்கின்றனர்? அநேகருடைய விஷயத்தில், அவர்கள் கிறிஸ்தவமண்டல இருளுக்குள்ளும் கிறிஸ்தவர்கள் யாவரும் பரலோகத்துக்கு செல்வர் என்ற மதநம்பிக்கையைப் போதிக்கும் அதன் கொள்கைகளிலும் மறுபிரவேசித்திருக்கின்றனர். மேலும், பெரும்பான்மையர் இரத்தம் சம்பந்தமாகவும், நடுநிலை வகிப்பு சம்பந்தமாகவும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து சாட்சிபகரவேண்டியதன் அவசியம் சம்பந்தமாகவும் உறுதியான வேதப்பூர்வமான நிலைநிற்கையை இனிவொருபோதும் எடுப்பது கிடையாது. நாமோ மகா பாபிலோனின் இருளைவிட்டு வெளிவந்துவிட்டதால் ஒருபோதும் அதனிடம் திரும்ப விரும்புவது கிடையாது. (வெளிப்படுத்துதல் 18:2, 4) யெகோவாவின் உண்மைத்தவறா ஊழியர்களாக, ‘ஆரோக்கியமான வசனங்களை’ உட்கொள்ள நமக்கு உதவுபவர்களை வாயினால் இப்போது அடித்துத்தாக்கி, யெகோவாவின் மேசையை அவமதிப்பவர்கள் சொல்லிவரும் பிரச்சாரத்தை நாம் ஏன் பார்வையிடத்தான் வேண்டும்?—2 தீமோத்தேயு 1:13.
15. விசுவாசதுரோகிகள் சொல்லும் புகார்களைக் கேட்கையில், எந்தப் பைபிள் நியமங்கள் ஞானமான போக்கை மேற்கொள்ள நமக்கு உதவும்?
15 சிலர் விசுவாசதுரோகிகள் சொல்லும் புகார்களைக் கேட்க ஆவலுள்ளவராயிருப்பர். நாமோ உபாகமம் 12:30, 31-ல் உள்ள நியமத்தை மனதில் கொள்ள வேண்டும். இங்கு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் புறமத குடியினரை விட்டுவந்தவுடன், எதை அவர்கள் தவிர்க்கவேண்டும் என்பதைக் குறித்து மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா எச்சரித்தார். “அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக்குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக.” ஆம், மனித ஆர்வம் எவ்வாறு வேலைசெய்யும் என்று யெகோவா தேவன் அறிந்திருக்கிறார். ஏவாளையும் மேலும் லோத்தின் மனைவியையும் நினைத்துக்கொள்ளுங்கள்! (லூக்கா 17:32; 1 தீமோத்தேயு 2:14) விசுவாசதுரோகிகள் சொல்லும் அல்லது செய்யும் காரியங்களுக்கு ஒருபோதும் செவிகொடாமல் இருப்போமாக. மாறாக, மக்களைக் கட்டியெழுப்பி, யெகோவாவின் மேசையில் உண்மைதவறாமல் புசிப்பதில் சுறுசுறுப்புள்ளவர்களாக இருப்போமாக!
யெகோவாவின் மேசை மாத்திரம் நிலைத்திருக்கும்
16. (அ) சாத்தானுக்கும் அவனை சேர்ந்த பேய்களுக்கும் உலக நாட்டவர் புசித்துவந்த அடையாள அர்த்தமுள்ள மேசைக்கும் வெகு விரைவில் என்ன நடக்கும்? (ஆ) பேய்களின் மேசையில் புசித்துக்கொண்டிருக்கும் மனிதர் யாவருக்கும் என்ன நடக்கும்?
16 வெகு விரைவில், மிகுந்த உபத்திரவம் எதிர்பாராது மூளும், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்”தில் சீக்கிரத்தில் உச்சநிலையடையும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) யெகோவா இந்தக் காரிய ஒழுங்குமுறையையும் உலக நாட்டவர் புசித்துவந்த அடையாள அர்த்தமுள்ள மேசையையும் நாசமாக்குகையில் அது உச்சக்கட்டமடையும். மேலும் பிசாசான சாத்தானின் முழு காணக்கூடாத அமைப்பையும் அதன் பேய்க் கூட்டத்தையும் யெகோவா கவிழ்த்துப்போடுவார். பேய்களின் மேசையாகிய சாத்தானின் ஆவிக்குரிய மேசையில் புசித்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு சொல்லர்த்தமான விருந்துக்கு ஆஜராகும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள், இல்லை, பங்குகொள்பவர்களாக அல்ல, ஆனால் முக்கிய பதார்த்தமாக தங்களுடைய அழிவை அடைவார்கள்!—எசேக்கியேல் 39:4-ஐயும் வெளிப்படுத்துதல் 19:17, 18-ஐயும் பாருங்கள்.
17. யெகோவாவின் மேசையில் மாத்திரம் புசிப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிட்டும்?
17 யெகோவாவின் மேசை மாத்திரமே நிலைத்திருக்கும். போற்றுதல் மனப்பான்மையோடு அதில் புசிப்பவர்கள், காக்கப்பட்டு, என்றும் அதில் புசிக்கும் சிலாக்கியம் பெற்றவர்களாயிருப்பார்கள். எவ்வகையான உணவு பற்றாக்குறைகளும் அவர்களை இனிவொருபோதும் பயமுறுத்தாது. (சங்கீதம் 67:6; 72:16, NW) பூரண ஆரோக்கியத்துடன் யெகோவா தேவனை பரதீஸில் சேவிப்பார்கள்! கடைசியில் வெளிப்படுத்துதல் 21:4-ல் உள்ள கிளர்ச்சியூட்டும் வார்த்தைகள் சிறப்புவாய்ந்த விதத்தில் நிறைவேறும்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” எதிர்ப்பு கடந்த காலமாகிவிட்டிருக்க, யெகோவா தேவனுடைய சர்வலோக அரசாட்சி எங்கும் என்றென்றுமாக மேலோங்கியிருக்கும், அப்போது பரதீஸிய பூமியில் குடிகொண்டிருக்கும் இரட்சிக்கப்பட்ட மனிதவர்க்கத்தின்மீது முடிவில்லா தெய்வீக தயவு பொழியும். இந்தப் பரிசைப் பெற, மிகச் சிறந்த ஆவிக்குரிய உணவினால் நிறைந்திருக்கும் யெகோவாவின் மேசையில் மாத்திரமே பங்குகொள்ள நாம் யாவருமே திடத்தீர்மானமாயிருப்போமாக!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பேய்த்தன போதனைகளால் வழிதவறிச் செல்வதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
◻ யெகோவாவின் மேசையிலும் பேய்களின் மேசையிலும் நாம் ஏன் வெற்றிகரமாக புசிக்க முடியாது?
◻ விசுவாசதுரோகிகளால் என்ன வகையான உணவு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
◻ விசுவாசதுரோகிகளின் புகார்களைக் குறித்ததில் ஆர்வமுள்ளவராயிருப்பது ஏன் ஆபத்தானது?
◻ விசுவாசதுரோகிகளின் கனிகள் யாவை?
[பக்கம் 10-ன் படம்]
மிகச் சிறந்த ஆவிக்குரிய உணவால் யெகோவாவின் மேசை நிறைந்திருக்கிறது