அதிகாரம் 4
நீங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தை நிர்வகிக்கமுடியும்?
1. ஒரு குடும்பத்தை நிர்வகிப்பது இன்று ஏன் அவ்வளவு கடினமானதாய் இருக்கக்கூடும்?
“இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:31) அந்த வார்த்தைகள் 1,900 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டன, இருப்பினும் அவை இன்று எவ்வளவு உண்மையாய் உள்ளன! நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன, விசேஷமாக குடும்ப வாழ்க்கையை குறித்த விஷயத்தில் அவ்விதம் மாறிக்கொண்டிருக்கின்றன. 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு சாதாரணமானவையாக அல்லது வழக்கமானவையாக கருதப்பட்டவை இன்று பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவையாய் இருக்கின்றன. இதன் காரணமாக, ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது பெரும் சவால்களை அளிக்கக்கூடும். இருப்பினும், வேதப்பூர்வமான புத்திமதியை கவனத்தில் எடுத்துக்கொண்டால், இந்த சவால்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
உங்கள் வருவாய்க்கு ஏற்றபடி வாழுங்கள்
2. என்ன பொருளாதார சூழ்நிலைகள் குடும்பத்தில் அழுத்தத்தை உண்டாக்கும்?
2 இன்று அநேக மக்கள் ஒரு எளிய குடும்பப்பாங்கான வாழ்க்கையில் திருப்தியுள்ளவர்களாய் இல்லை. வியாபார உலகம் அதிகமதிகமான பொருட்களை உற்பத்திசெய்து, அதன் விளம்பரப்படுத்தும் திறமைகளை உபயோகித்து பொதுமக்களை ஆசைகாட்டி வசீகரித்து வருவதால், இந்தப் பொருட்களை வாங்குவதற்கென லட்சக்கணக்கான தந்தைகளும் தாய்களும் வேலை செய்யுமிடத்தில் அநேக மணிநேரங்களை செலவழிக்கின்றனர். மற்ற லட்சக்கணக்கானோர் சாப்பாட்டுக்கே ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். முன்பெல்லாம் இருந்ததைவிட அவர்கள் வேலை செய்யுமிடத்தில் கூடுதலான நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது, வெறுமனே அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கே அவர்கள் இரண்டு வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பரவலான பிரச்சினையாக இருப்பதன் காரணமாக, இன்னும் சிலர், ஒரு வேலை கிடைத்தாலே மகிழ்ச்சியடைவர். ஆம், நவீன நாளைய குடும்பத்துக்கு வாழ்க்கை எப்போதும் சுலபமானதாய் இருப்பதில்லை, ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி மிகச் சிறந்தமுறையில் வாழ பைபிள் நியமங்கள் குடும்பங்களுக்கு உதவிசெய்யக்கூடும்.
3. என்ன நியமத்தை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார், அதைப் பொருத்துவது ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதில் வெற்றிகரமாயிருப்பதற்கு ஒருவருக்கு எவ்வாறு உதவியாயிருக்கும்?
3 அப்போஸ்தலனாகிய பவுல் பொருளாதார அழுத்தங்களை அனுபவித்தார். அவற்றைக் கையாளுகையில் அவர் ஒரு பெருமதிப்புவாய்ந்த பாடத்தை கற்றுக்கொண்டார், அதை தன் நண்பராயிருந்த தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் விளக்குகிறார். பவுல் எழுதுகிறார்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1 தீமோத்தேயு 6:7, 8) ஒரு குடும்பத்துக்கு வெறும் உணவும் உடையும் தவிர அதிகம் தேவை என்பது உண்மைதான். வாழ்வதற்கு குடும்பத்துக்கு ஒரு இடமும் தேவை. பிள்ளைகளுக்கு கல்வி தேவை. மேலும் மருத்துவ செலவுகளும் இதர செலவுகளும் உள்ளன. இருப்பினும், பவுலின் வார்த்தைகளுடைய நியமம் பொருந்துகிறது. நமக்கு விருப்பமானவற்றை பெற்றுக்கொள்ளும் ஆசையை நிறைவுபடுத்துவதற்கு பதிலாக நம்முடைய தேவைகளை திருப்திசெய்துகொள்வதில் மனநிறைவுள்ளவர்களாய் இருந்தால் வாழ்க்கை சுலபமானதாய் இருக்கும்.
4, 5. முன்யோசனையும் திட்டமிடுதலும் குடும்பத்தை நிர்வகிப்பதில் எவ்வாறு உதவக்கூடும்?
4 மற்றொரு உதவியளிக்கும் நியமம் இயேசுவின் உதாரணங்கள் ஒன்றில் காணப்படுகிறது. அவர் சொன்னார்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, . . . அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?” (லூக்கா 14:28) இயேசு இங்கே முன்யோசனையோடு நடந்துகொள்ளுதல், முன்னமே திட்டமிடுதல் ஆகியவற்றைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். இளம் தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்காக சிந்தித்துக்கொண்டிருக்கையில் இது எவ்வாறு உதவும் என்பதை நாம் முந்தின அதிகாரம் ஒன்றில் பார்த்தோம். திருமணத்திற்குப் பிறகு, ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கும்கூட இது உதவியளிக்கிறது. இந்த அம்சத்தில் முன்யோசனை, ஒரு வரவுசெலவுத் திட்டத்தை கொண்டிருந்து, கிடைக்கக்கூடிய பணத்தை மிகவும் ஞானமாய் பயன்படுத்துவதற்கு முன்னமே திட்டமிடுவதை உட்படுத்துகிறது. இந்த விதத்தில் ஒரு குடும்பம் செலவுகளை கட்டுப்படுத்தலாம், ஒவ்வொரு நாளுக்கும் அல்லது ஒவ்வொரு வாரத்திற்கும் தேவையான பொருட்களை வாங்குவதற்கென பணத்தை ஒதுக்கி வைக்கலாம்—அந்த வரம்பைமீறி செலவு செய்யக்கூடாது.
5 சில தேசங்களில், தேவையற்ற பொருட்களை வாங்குவதற்காக உயர் வட்டி வீதத்தில் கடன்வாங்க தூண்டும் ஆசையைத் தவிர்ப்பதை அப்படிப்பட்ட வரவுசெலவு பட்டியல் அர்த்தப்படுத்தக்கூடும். இன்னும் சில தேசங்களில், கடன் அட்டைகளை பயன்படுத்துவதன் பேரில் கண்டிப்பான கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். (நீதிமொழிகள் 22:7) திடீர் உணர்ச்சியினால் தூண்டப்பட்டு வாங்கும் பழக்கத்தை—தேவைகளையும் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்து முன்னமே யோசிக்காமல் உடனடியாக ஏதோவொன்றை வாங்குவதை—தவிர்ப்பதையும்கூட அது அர்த்தப்படுத்தக்கூடும். மேலும், சூதாட்டம், புகைத்தல், அளவுக்குமீறி மதுபானம் அருந்துவது போன்றவற்றில் சுயநலமாக பணத்தை வீணாக்குவது குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதையும், அதோடு அப்பழக்கங்கள் பைபிள் நியமங்களுக்கு முரணாக செல்கின்றன என்பதையும் ஒரு வரவுசெலவு பட்டியல் வெளிப்படையாக காண்பிக்கும்.—நீதிமொழிகள் 23:20, 21, 29-35; ரோமர் 6:19; எபேசியர் 5:3-5.
6. ஏழ்மையில் வாழ வேண்டியிருப்பவர்களுக்கு என்ன வேதப்பூர்வமான சத்தியங்கள் உதவுகின்றன?
6 எனினும், ஏழ்மையில் வாழ வேண்டிய நிலையிலுள்ள நபர்களைப் பற்றியென்ன? ஒரு விஷயம், இந்த உலகளாவிய பிரச்சினை தற்காலிகமானது மட்டுமே என்பதை அறிந்துகொள்வதில் அவர்கள் ஆறுதலடையலாம். விரைவாக அணுகி வந்துகொண்டிருக்கும் புதிய உலகில், யெகோவா ஏழ்மையையும் மனிதவர்க்கத்துக்கு துயர்மிகுந்த நிலையை ஏற்படுத்தும் மற்ற எல்லா தீங்குகளையும் நீக்கிப்போடுவார். (சங்கீதம் 72:1, 12-16) இதற்கிடையில், மெய்க் கிறிஸ்தவர்கள் பரம ஏழைகளாக இருந்தாலும், முழுவதுமாக நம்பிக்கையிழந்து விடுவதில்லை, ஏனென்றால் அவர்கள் யெகோவா தேவனுடைய கீழ்க்கண்ட வாக்குறுதியின் பேரில் விசுவாசம் வைத்திருக்கின்றனர்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.” எனவே, “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்,” என்று ஒரு விசுவாசி நம்பிக்கையோடு சொல்லலாம். (எபிரெயர் 13:5, 6) இந்தக் கடினமான நாட்களில், தம்முடைய நியமங்களின்படி வாழ்ந்து, தம்முடைய ராஜ்யத்தை தங்கள் வாழ்க்கையில் முதலாவது வைக்கும் தம் வணக்கத்தாரை யெகோவா பல வழிகளில் ஆதரித்து வந்திருக்கிறார். (மத்தேயு 6:33) அப்படிப்பட்ட நபர்கள் பெரும் எண்ணிக்கையாக அதற்கு சான்றளிக்கிறார்கள், அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதைப் போல் சொல்கின்றனர்: “எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”—பிலிப்பியர் 4:12, 13.
பாரத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்
7. இயேசுவின் எந்த வார்த்தைகளை பொருத்துவது, வெற்றிகரமான குடும்ப நிர்வகிப்புக்கு உதவும்?
7 இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தின் முடிவின் சமயத்தில் இவ்வாறு சொன்னார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:39) குடும்பத்தில் இந்தப் புத்திமதியைப் பொருத்துவது, வீட்டை நிர்வகிப்பதற்கு பெருமளவில் உதவி செய்கிறது. நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள்—கணவர்களும் மனைவிகளும், பெற்றோரும் பிள்ளைகளும்—அல்லவா நம்முடைய மிக நெருங்கிய, மிக அருமையான அயலவர்? குடும்ப அங்கத்தினர்கள் எவ்வாறு ஒருவர் பேரில் ஒருவர் அன்பு காண்பிக்கலாம்?
8. குடும்பத்துக்குள் எவ்வாறு அன்பு வெளிப்படுத்தப்படலாம்?
8 ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் வீட்டு வேலைகளை செய்வதில் தனக்குரிய பங்கை செய்வது ஒரு வழியாகும். உடைகளாகயிருந்தாலும்சரி விளையாட்டு பொருட்களாகயிருந்தாலும்சரி உபயோகித்த பிறகு பொருட்களை அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலையும் படுக்கையை ஒழுங்காக வைப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படலாம், ஆனால் வீட்டை நிர்வகிப்பதற்கு அது ஒரு பெரிய உதவியாய் இருக்கிறது. நிச்சயமாகவே, சில சிறு அளவிலான தற்காலிகமான அலங்கோலம் தவிர்க்கமுடியாததுதான், ஆனால் வீட்டை ஓரளவு நேர்த்தியாக வைப்பதிலும் சாப்பிட்டு முடித்த பிறகு சுத்தம் செய்வதிலும் எல்லாரும் ஒன்றுசேர்ந்து வேலை செய்யலாம். சோம்பேறித்தனம், கட்டுப்பாடற்ற சுயவிருப்ப நுகர்வு, வன்மம், அரைமனதுடன் வேலை செய்வது போன்றவை எல்லார் மீதும் எதிர்மறையான பாதிப்பை கொண்டிருக்கும். (நீதிமொழிகள் 26:14-16) மறுபட்சத்தில், மனமகிழ்வோடுகூடிய மனமுவந்த மனப்பான்மை ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை பேணிக் காக்கிறது. “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 9:7.
9, 10. (அ) வீட்டில் உள்ள பெண்ணின்மீது என்ன பாரம் பெரும்பாலும் சுமருகிறது, இதை எவ்வாறு இலகுவாக்கலாம்? (ஆ) வீட்டு வேலையைப் பற்றி என்ன சமநிலையான கருத்து அளிக்கப்படுகிறது?
9 சில வீடுகளில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையாய் இருக்கும் ஒரு சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு கரிசனையும் அன்பும் உதவிசெய்யும். பாரம்பரியமாக குடும்ப வாழ்க்கையின் பிரதான ஆதரவாளர்களாய் தாய்மார்கள் இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பிள்ளைகளை கவனித்து வந்தனர், வீட்டை சுத்தம் செய்தனர், குடும்ப அங்கத்தினர்களின் உடைகளை சலவை செய்தனர், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி சமையல் செய்தனர். சில தேசங்களில் பெண்கள் வழக்கமாக வயல்களிலும்கூட வேலை செய்தனர், விளைந்த பொருட்களை சந்தைகளில் விற்பனை செய்தனர், அல்லது குடும்ப செலவுகளுக்கு பிற வழிகளில் உதவி செய்தனர். முன்பு இந்தப் பழக்கம் இல்லாத இடங்களிலும்கூட, திருமணமான லட்சக்கணக்கான பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்யும்படி தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் கட்டாயப்படுத்தியிருக்கின்றன. இப்படிப்பட்ட வித்தியாசமான சூழ்நிலைகளில் கடினமாக உழைக்கும் மனைவியும் தாயுமாயிருப்பவள் பாராட்டுதலை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவள். பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் “திறமைசாலியான மனைவி” போல், அவள் ஊக்கம் தளராமல் கடுமையாய் உழைக்கிறாள். ‘அவள் சோம்பலின் அப்பத்தைப் புசிப்பதில்லை.’ (நீதிமொழிகள் 31:10, NW, 27) எனினும், வீட்டில் வேலை செய்யக்கூடியவள் பெண் மட்டுமே என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியேசென்று நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, கணவனும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கையில் மனைவி மட்டும் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டுமா? நிச்சயமாகவே அப்படி இல்லை. (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 8:13, 14.) ஆகையால், உதாரணமாக, தாயார் சாப்பாடு தயார் செய்யப் போகிறார்கள் என்றால், மேஜை அமைத்தல், கடைக்கு சென்று வருதல், அல்லது வீட்டில் ஆங்காங்கே சுத்தம் செய்தல் போன்றவற்றின் மூலம் மற்ற குடும்ப அங்கத்தினர்கள் தயாரிப்பில் உதவிசெய்தால் அவர் நன்றியுள்ளவராய் இருக்கக்கூடும். ஆம், எல்லாரும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளலாம்.—கலாத்தியர் 6:2-ஐ ஒப்பிடுக.
10 “நான் வசிக்கும் இடத்தில் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வது ஒரு ஆணின் கடமை அல்ல,” என்று சிலர் சொல்லலாம். இது உண்மையாய் இருக்கலாம், ஆனால் இவ்விஷயத்தைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பது நன்றாக இருக்குமல்லவா? யெகோவா தேவன் குடும்பத்தை ஆரம்பித்து வைத்தபோது, சில வேலைகளை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று அவர் கட்டளையிடவில்லை. ஒரு சமயம், யெகோவாவிடமிருந்து வந்த விசேஷ தூதர்கள் விசுவாசமுள்ள மனிதனாயிருந்த ஆபிரகாமைச் சந்தித்தபோது, விருந்தாளிகளுக்கு சமையல் செய்து சாப்பாடு பரிமாறுவதில் ஆபிரகாமும் பங்குகொண்டார். (ஆதியாகமம் 18:1-8) பைபிள் புத்திமதி அளிக்கிறது: ‘புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவிக்க வேண்டும்.’ (எபேசியர் 5:28) ஒரு நாளின் முடிவில் கணவன் களைப்படைந்து ஓய்வெடுக்க விரும்புகிறானென்றால், மனைவியும் அவ்வாறே உணருவது, ஒருவேளை அவனைக் காட்டிலும் அதிகமாக ஓய்வெடுக்க விரும்புவது சாத்தியமல்லவா? (1 பேதுரு 3:7) அப்படியென்றால், கணவன் வீட்டில் உதவிசெய்வது பொருத்தமானதும் அன்பானதுமாய் இருக்குமல்லவா?—பிலிப்பியர் 2:3, 4.
11. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் இயேசு எந்தவிதத்தில் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார்?
11 கடவுளைப் பிரியப்படுத்தி தம் கூட்டாளிகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்ததில் இயேசு ஒரு தலைசிறந்த முன்மாதிரியாய் இருக்கிறார். அவர் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும், கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாய் இருக்கிறார். அவர் தம்மைக் குறித்து சொன்னார்: ‘மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய வந்தார்,’ அதாவது, மற்றவர்களுக்கு சேவை செய்ய வந்தார். (மத்தேயு 20:28) அப்படிப்பட்ட மனநிலையை எல்லா அங்கத்தினர்களும் விருத்திசெய்துகொண்ட குடும்பங்கள் எவ்வளவு மகிழ்ச்சி நிரம்பியவையாய் இருக்கும்!
சுத்தம்—ஏன் அவ்வளவு முக்கியமானது?
12. யெகோவா தம்மை சேவிப்பவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?
12 ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கு உதவியாயிருக்கக்கூடிய மற்றொரு பைபிள் நியமம் 2 கொரிந்தியர் 7:1-ல் காணப்படுகிறது. அங்கு நாம் வாசிக்கிறோம்: ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளக்கடவோம்.’ ‘மாசில்லாத சுத்தமான பக்தியை’ கட்டளையிடும் யெகோவா, இந்த ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும் நபர்களை ஏற்றுக்கொள்கிறார். (யாக்கோபு 1:27) அவர்களுடைய குடும்பம் இதோடு சம்பந்தப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்கிறது.
13. குடும்ப நிர்வகிப்பில் சுத்தம் ஏன் முக்கியமானது?
13 உதாரணமாக, நோயும் உடல்நலக்குறைவும் இல்லாத காலம் வரும் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. அச்சமயத்தில், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:4, 5) இருப்பினும், அந்தக் காலம் வரும்வரை, ஒவ்வொரு குடும்பமும் அவ்வப்போது உடல்நலக்குறைவை சமாளிக்க வேண்டியிருக்கிறது. பவுலும் தீமோத்தேயுவும்கூட நோயுற்றனர். (கலாத்தியர் 4:13; 1 தீமோத்தேயு 5:23) இருப்பினும், பெரும்பாலான வியாதிகள் தடுக்கப்படக்கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஞானமான குடும்பங்கள் உடல்சம்பந்தமான அசுத்தத்தையும் ஆவிக்குரியப்பிரகாரமான அசுத்தத்தையும் தவிர்த்தால், சில தடுக்கப்படக்கூடிய வியாதிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அது எவ்வாறு என்பதை நாம் சிந்திப்போம்.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 22:3.
14. ஒழுக்க சுத்தம் எவ்வாறு ஒரு குடும்பத்தை நோயிலிருந்து பாதுகாக்கக்கூடும்?
14 ஆவிக்குரிய சுத்தம் ஒழுக்க சுத்தத்தையும் உட்படுத்துகிறது. நன்றாக அறியப்பட்டுள்ளபடி, பைபிள் உயர்வான ஒழுக்கதராதரங்களை முன்னேற்றுவிக்கிறது, திருமணத்திற்குப் புறம்பே செய்யப்படும் எல்லாவிதமான பாலின நெருக்கத்தையும் கண்டனம் செய்கிறது. “வேசிமார்க்கத்தாரும் . . . விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) இந்தக் கண்டிப்பான தராதரங்களைக் கடைப்பிடிப்பது இன்றைய சீர்கெட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அதிமுக்கியமானது. அவ்வாறு கடைப்பிடிப்பது கடவுளைப் பிரியப்படுத்துகிறது, மேலும், பாலின உறவால் கடத்தப்படும் எய்ட்ஸ், சிபிலிஸ், கொனரியா, க்லமீடியா போன்ற நோய்களிலிருந்தும் குடும்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது.—நீதிமொழிகள் 7:10-23.
15. சரீர சுத்தம் குறைவுபடுகையில் தேவையில்லாத நோய் உண்டாகும் என்பதற்கு ஒரு உதாரணத்தை கொடுங்கள்.
15 ‘மாம்சத்தில் உண்டான எல்லா அசுசியும் நீங்க ஒருவரை சுத்திகரித்துக்கொள்வது,’ மற்ற நோய்களிலிருந்து குடும்பத்தை பாதுகாக்க உதவிசெய்கிறது. அநேக நோய்கள் உடல்சம்பந்தமான சுத்தம் குறைவுபடுவதால் உண்டாகின்றன. ஒரு முக்கியமான உதாரணம், புகைபிடிக்கும் பழக்கம். புகைபிடித்தல் நுரையீரல்களையும் உடைகளையும் காற்றையும்கூட அசுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களை நோய்வாய்ப்படவும் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் புகையிலை புகைத்ததன் காரணமாக இறந்து போகின்றனர். அதை சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் அந்த ‘மாம்ச அசுசியை’ தவிர்த்திருந்தால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் நோயுற்று உரியகாலத்திற்கு முன்பே இறந்து போயிருக்கமாட்டார்களே!
16, 17. (அ) யெகோவா கொடுத்த எந்தச் சட்டம் இஸ்ரவேலர்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்தது? (ஆ) உபாகமம் 23:12, 13-ற்குப் பின்னால் காணப்படும் நியமம் எவ்வாறு எல்லா குடும்பங்களிலும் பொருத்தப்படலாம்?
16 மற்றொரு உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பு, இஸ்ரவேல் தேசத்தார் தங்கள் வணக்கத்தையும், ஓரளவு தங்கள் அன்றாடக வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்துவதற்கென்று கடவுள் அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். அந்த நியாயப்பிரமாணம் உடல்நலம் பற்றிய சில அடிப்படையான சட்டங்களை நிலைநாட்டுவதன் மூலம் அத்தேசத்தை நோயிலிருந்து பாதுகாக்க உதவியது. அந்தச் சட்டங்களில் ஒன்று, மனிதருடைய கழிவை அகற்றுவதைப் பற்றிய சட்டம். ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த இடம் அசுத்தமாக்கப்படாமல் இருப்பதற்கு அக்கழிவை பாளயத்திற்குப் புறம்பே மண்ணைத் தோண்டி மூடிப்போட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. (உபாகமம் 23:12, 13) அந்தப் பண்டையகால சட்டம் இன்றும் நல்ல புத்திமதியாக உள்ளது. இன்றும்கூட ஜனங்கள் அச்சட்டத்தைப் பின்பற்றாததன் காரணமாக நோயுற்று இறக்கின்றனர்.a
17 அந்த இஸ்ரவேல சட்டத்துக்கு பின்னால் இருக்கும் நியமத்துக்கு இசைவாக, குடும்பத்தின் குளியலறையும் கழிப்பறையும்—உள்ளேயிருந்தாலும் அல்லது வசிப்பிடத்திற்கு வெளியே இருந்தாலும்—சுத்தமாகவும் வியாதிக்கிருமிகளை நீக்கித் துப்புரவாகவும் வைக்க வேண்டும். கழிப்பறையை அசுத்தமாகவும் மூடாமலும் வைத்திருந்தால், ஈக்கள் அங்கு மொய்த்து பின்னர் வீட்டிலுள்ள மற்ற இடங்களுக்கும் நாம் உண்ணும் உணவின் மீதும்கூட நோய்க்கிருமிகளை பரப்பும்! மேலும், பிள்ளைகளும் வயதுவந்தோரும் கழிப்பறைக்கு சென்ற பின்பு தங்கள் கைகளை கழுவ வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தங்கள் தோலின் மீது நோய்க்கிருமிகளை கொண்டு வருவர். ஒரு பிரெஞ்சு மருத்துவரின்படி, கைகளைக் கழுவுதல் “சில ஜீரணக் கோளாறுகள், சுவாச சம்பந்தமான கோளாறுகள் அல்லது தோல் தொற்றுநோய்கள் போன்ற வியாதிகளை தடுப்பதற்கு இன்றும்கூட சிறந்த உத்தரவாதங்களில் ஒன்றாக உள்ளது.”
18, 19. ஏழ்மையான சுற்றுவட்டாரத்திலும்கூட ஒரு சுத்தமான வீட்டை காத்துவருவதற்கு என்ன ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன?
18 ஒரு ஏழ்மையான சுற்றுவட்டாரத்தில் சுத்தம் ஒரு சவாலாக உள்ளது என்பது உண்மைதான். அப்படிப்பட்ட வட்டாரங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் ஒருவர் விளக்கினார்: “மிகவும் தாங்கமுடியாத வெப்பமான சீதோஷ்ணநிலை சுத்தம் செய்யும் வேலையை இரண்டு மடங்கு கடினமானதாக ஆக்குகிறது. தூசி புயல்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு சிறு இடைவெளியையும் பழுப்புநிற துகள்களால் மூடிவிடுகின்றன . . . நகரங்களிலும் சில கிராமப் பகுதிகளிலும் பெருகிக்கொண்டே போகும் ஜனத்தொகைகளும்கூட ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. மூடப்படாத சாக்கடைகள், திரட்டப்படாத குப்பைக் குவியல்கள், அருவருப்பான பொதுக் கழிப்பறைகள், நோய் பரப்பும் எலிகள், கரப்பான்பூச்சிகள், ஈக்கள் ஆகியவை வழக்கமாக காணும் காட்சிகளாக ஆகிவிட்டிருக்கின்றன.”
19 இப்படிப்பட்ட நிலைமைகளின்கீழ் சுத்தத்தை காத்துவருவது கடினம். இருப்பினும், முயற்சி எடுப்பது பலன்களைக் கொண்டுவரும். மருந்துகள், மருத்துவமனை ஆகியவற்றுக்கான செலவுகளைக் காட்டிலும் சோப்பு, தண்ணீர், சிறிது கூடுதலான வேலை போன்றவற்றுக்கான செலவு குறைவு. நீங்கள் அப்படிப்பட்ட சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களால் முடிந்த அளவு, உங்கள் சொந்த வீட்டையும் கொல்லைப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், விலங்குகளின் சாணத்தை நீக்கி சுத்தமாக வையுங்கள். உங்கள் வீட்டுக்குச் செல்லும் பாதை மழை காலங்களில் சேற்றினால் மூடப்பட்டிருந்தால், வீட்டுக்குள் சேற்றைக் கொண்டு வராமலிருக்க நீங்கள் கப்பியையாவது அல்லது கற்களையாவது அப்பாதையில் போடமுடியுமா? ஷூக்கள் அல்லது செருப்புகளை பயன்படுத்தினால், அவற்றை அணிந்துகொண்டிருப்போர் வீட்டுக்குள் நுழையுமுன் அவற்றைக் கழற்றிவிட முடியுமா? மேலும், நீங்கள் உபயோகிக்கும் தண்ணீர் தூய்மைகெடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அசுத்தமான தண்ணீர், மோசமான கழிவுநீக்க ஏற்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்ச ஜனங்களாவது இறந்துபோவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
20. வீடு சுத்தமாய் இருக்க வேண்டுமென்றால் யார் அந்தப் பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும்?
20 ஒரு சுத்தமான வீடு குடும்பத்திலுள்ள—தாய், தந்தை, பிள்ளைகள், விருந்தினர்—ஒவ்வொருவர் பேரிலும் சார்ந்துள்ளது. கென்யாவில் வசிக்கும், எட்டு பிள்ளைகளையுடைய ஒரு தாய் இவ்வாறு சொன்னாள்: “எல்லாரும் தங்கள் பங்கை செய்வதற்கு கற்றுக்கொண்டிருக்கின்றனர்.” சுத்தமாயும் ஒழுங்காயும் இருக்கும் வீடு முழுக்குடும்பத்தைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஸ்பானிய பழமொழி சொல்கிறது: “ஏழ்மைக்கும் சுத்தத்துக்கும் இடையே முரண்பாடு கிடையாது.” ஒரு நபர் ஒரு மாளிகையிலோ, ஒரு அடுக்ககத்திலோ, ஒரு ஏழ்மையான வீட்டிலோ, அல்லது ஒரு குடிசையிலோ வாழ்ந்தாலும்கூட, சுத்தம் ஆரோக்கியமான குடும்பத்துக்கு ஒரு திறவுகோலாக உள்ளது.
உற்சாகம் நம்மை செழித்தோங்கச் செய்கிறது
21. நீதிமொழிகள் 31:28-க்கு இசைவாக ஒரு குடும்பத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர எது உதவும்?
21 திறமைசாலியான மனைவியைப் பற்றி கலந்து பேசுகையில் நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது: “அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் புகழுகிறான்.” (நீதிமொழிகள் 31:28) உங்கள் குடும்ப அங்கத்தினரில் ஒருவரை நீங்கள் எப்போது கடைசியாக பாராட்டினீர்கள்? உண்மையில், சிறிது வெது வெதுப்பும் ஈரமும் பெற்றுக்கொண்டவுடனேயே மலருவதற்குத் தயாராயிருக்கும் இளவேனிற் காலத்தில் உள்ள செடிகளைப் போன்று நாம் இருக்கிறோம். நம்முடைய விஷயத்தில், அனலான பாராட்டுதல் தேவைப்படுகிறது. தன் கணவன் தன்னுடைய கடின உழைப்பையும் அன்பான கவனிப்பையும் போற்றுகிறான் என்பதையும் அவளை அற்பமாக எண்ணுவதில்லை என்பதையும் அறிந்திருப்பது மனைவிக்கு உதவிசெய்யும். (நீதிமொழிகள் 15:23; 25:11) தன் கணவன் வெளியே சென்று செய்யும் வேலைக்காகவும் வீட்டில் செய்யும் வேலைக்காகவும் மனைவி அவனை புகழுகையில் அது மகிழ்வளிக்கிறதாய் இருக்கிறது. வீட்டில், பள்ளியில், அல்லது கிறிஸ்தவ சபையில் எடுக்கும் முயற்சிகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை புகழுகையில் அவர்கள் தழைக்கின்றனர். சிறிது நன்றியுணர்ச்சி எவ்வளவு சாதிக்கிறது! “உங்களுக்கு நன்றி” என்று சொல்வதற்கு என்ன செலவாகிறது? மிகவும் குறைவே, இருப்பினும், அது குடும்பத்தின் பண்புமிக்க மனோநிலையில் உற்சாகத்தை மிகுதியாய் விளைவிக்கும்.
22. ஒரு குடும்பத்தை “உறுதியாக நிலைநிறுத்த வேண்டுமென்றால்” என்ன தேவைப்படுகிறது, இதை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
22 பல காரணங்கள் நிமித்தமாக, குடும்பத்தை நிர்வகிப்பது சுலபமானதாக இருப்பதில்லை. இருப்பினும், அதை வெற்றிகரமாக நிர்வகிக்கலாம். பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது: “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, பகுத்துணர்வினாலே நிலைநிறுத்தப்படும்.” (நீதிமொழிகள் 24:3, NW) குடும்பத்தில் உள்ள அனைவரும் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு, அதை தங்கள் வாழ்க்கையில் பொருத்த முயற்சியெடுக்கும்போது ஞானத்தையும் பகுத்துணர்வையும் சம்பாதித்துக்கொள்ளலாம். ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தைப் பெற நிச்சயமாகவே இத்தனை முயற்சிகளையும் எடுப்பது தகுதியாய் உள்ளது!
a அநேக சிசுக்கள் இறப்பதற்கு காரணமாயிருக்கும் ஒரு சாதாரணமான நோயான வயிற்றுப்போக்கை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றி கூறும் சிறிய புத்தகம் ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கழிப்பறை இல்லையென்றால்: வீட்டிலிருந்தும், பிள்ளைகள் விளையாடும் இடத்திலிருந்தும், தண்ணீர் வைக்கும் இடத்திலிருந்தும் குறைந்தபட்சம் 10 மீட்டர் தள்ளி மலம் கழியுங்கள்; அக்கழிவை மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள்.”