யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்
ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாகும்.”—மத்தேயு 19:23.
“நீங்கள் ஐசுவரியவானாகிவிட்டீர்கள்” என்பதாக எவராவது உங்களுக்குத் தெரியப்படுத்தினால், எப்படி இருக்கும்? பணம், நிலம் அல்லது ஆடம்பரமான உடைமைகளைப் பெற்று அவர்கள் ஐசுவரியவான்களாவதை இது அர்த்தப்படுத்துமானால், இவ்விதமாகச் சொல்லப்படும்போது அநேகர் கிளர்ச்சியடைவார்கள். ஆனால் பின்வரும் நோக்குநிலையிலிருந்து ஐசுவரியத்தைப் பற்றிய காரியத்தைச் சிந்தித்துப் பாருங்கள்: “யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதிமொழிகள் 10:22.
2 பூர்வ நாட்களில் கடவுள் முற்பிதாக்களோடும் இஸ்ரவேல் ஜனத்தாரோடும் செயல் தொடர்பு கொண்டபோது, அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்ததற்குச் செழுமையினால் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 13:2; உபாகமம் 28:11, 12; யோபு 42:10-12) சாலொமோன் ராஜா இவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான். அவன் மிகுதியாக செல்வச் சிறப்புள்ளவனாக ஆனான். என்றபோதிலும் பொருள் சம்பந்தமான ஐசுவரியங்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை “மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாய்”யிருப்பதை அனுபவத்தின் மூலமாக அவன் கற்றறிந்தான். (பிரசங்கி 2:4-11; 1 இராஜாக்கள் 3:11-13; 9:14, 28; 10:10) ஆகவே “யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்” என்பதாக சாலொமோன் எழுதியபோது, அவன் பொருள் சம்பந்தமான ஐசுவரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கிருக்குமானால் அவரைச் சேவிக்காத ஆட்களினுடையதைவிட உங்களுடைய வாழ்க்கை ஒப்பற்றவிதமாக ஐசுவரியமுள்ளதாக இருக்கிறது என்ற உண்மையை அவன் உறுதியாக கூறினான். எவ்விதமாக?
3 நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருப்பீர்களேயானால், நீங்கள் யெகோவாவின் அங்கீகாரத்தை இப்பொழுது அனுபவித்துக் களித்து, தெய்வீக ஞானம் போன்ற ஆசீர்வாதங்களை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நம்பத்தக்கவர்களாகவும் உங்களில் அக்கறையுள்ளவர்களாகவும் இருக்கும் ஒரு குடும்பம் போன்ற கிறிஸ்தவர்களின் சபையில் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள். கடவுளுடைய கட்டளைகள் அநேக நோய்களிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முன்னாலிருக்கும் “மகா உபத்திரவத்தில்” நீங்கள் கடவுளால் பாதுகாக்கப்பட்டு—பின்னர் அதைத் தொடர்ந்து பூமியின் மீது முடிவில்லா பரதீஸில் வாழ்ந்திருப்பதை நம்புவதற்கும் உங்களுக்குக் காரணமிருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்களும் எதிர்பார்ப்புகளும் இருப்பதன் காரணமாக, நீங்கள் உண்மையாகவே “நான் ஐசுவரியவானாயிருக்கிறேன்” என்பதாகச் சொல்ல முடியும்.—மத்தேயு 24:21, 22.
4 யெகோவாவின் ஆசீர்வாதங்களால் நீங்கள் ஐசுவரியவானாயிருக்கும்போது, மற்ற செல்வங்களால்—பணம் அல்லது பொருள் வளத்தினால்—உங்களுக்கு ஆபத்து வரக்கூடும். நம்மில் சிலர், (பண விஷயத்தில் பாதுகாப்பான நிலையில் இருந்தாலும் அல்லது ஓரளவு மட்டுமே வருவாயுள்ளவர்களாக இருந்தாலும்) ‘பண ஆசையினால் நான் வழித்தவறிப் போகும் உண்மையான ஆபத்தை எதிர்படுகிறேன்’ என்பதை உடனடியாக ஒப்புக்கொள்வோம். என்றபோதிலும் பின்வரும் எச்சரிப்பை நினைவுபடுத்திப் பாருங்கள்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:10) அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளுடைய ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட சமயத்தில் இது எழுதப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவோடு பரலோக அரசர்களாக ஆக முடியும் என்பதற்கு இது உறுதிச் சின்னமாக இருந்தது. பெரும்பாலும் அநேகர் அப்போஸ்தலர்களையும் இயேசுவோடு இருந்த மற்றவர்களையும் நேரடியாக சந்தித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களில் சிலரைப் பணம் “வழுவிச்” செல்லும்படியாக செய்ததேயானால் நமக்கு ஆபத்து எவ்வளவு பெரியதாக இருக்கிறது!—2 கொரிந்தியர் 5:5; ரோமர் 8:17, 23.
ஐசுவரியவானும் ஒட்டகமும்
5 இயேசு அடிக்கடி ஐசுவரியத்தின் ஆபத்தைக் குறித்து தம்முடைய பேச்சில் கொண்டு வந்தார். ஏனென்றால் பணக்காரர்களாக இருப்பவர்களும் அவ்விதமாக இல்லாதவர்களுமாகிய ஒவ்வொருவரும் எதிர்படும் ஆபத்தாக இது இருக்கிறது. (மத்தேயு 6:24-32; லூக்கா 6:24; 12:15-21) சுய பரிசோதனைச் செய்வதற்கு ஆதாரமாக, மத்தேயு 19:16-24; மாற்கு 10:17-30; மற்றும் லூக்கா 18:18-30-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இயேசு ஒரு சமயம் என்ன சொன்னார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உண்மையாகவே, இப்பொழுது ஏன் இடையே சற்று நின்று ஒன்று அல்லது அந்தப் பதிவுகள் அனைத்தையும் வாசிக்கக்கூடாது?
6 ஒரு இளம் அதிபதி இயேசுவிடம் வந்து, “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். இயேசு கற்பனைகளிடமாக அவனுடைய கவனத்தைத் திருப்பி, இவ்விதமாக தேவையானது என்ன என்பதை யெகோவா தெரிவிக்காமல் இல்லை என்பதைக் காண்பித்தார். அதற்கு அவன் கடவுளுடைய கற்பனைகளைத் தான் “சிறு வயது முதல்” கைக்கொண்டு வந்திருப்பதாக பதிலளித்தான். அவன் ஜீவனின் வாசற்படியில் இருப்பது போலவும், ஆனால் இன்னும் ஏதோ ஒன்றில் அவன் குறைவுபடுவதையும் உணர்ந்தான். ஒருவேளை நித்திய ஜீவனுக்கு வாசலைக் கடந்துசெல்ல கடைசி படியாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு கூடுதலான புண்ணியம், எதோ ஒரு வீரச்செயல் இருந்ததாக அவன் நினைத்தான். இயேசுவின் பதிலில் விரிவான கருத்து இருக்கிறது: “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா.” என்ன நடந்தது? “அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால் [அல்லது அவனுக்கு அநேக உடைமைகள் இருந்தபடியால்] இதைக் கேட்டபொழுது மிகுந்த துக்கமடைந்தான்.” ஆகவே அந்த மனிதன் போய்விட்டான்.—லூக்கா 18:18, 21-23; மாற்கு 10:22.
7 அதற்குப் பின்பு இயேசு சொன்னார்: “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.” (லூக்கா 18:24, 25) அந்தப் புத்திமதி ஐசுவரியவானாக இருந்த அதிபதிக்கு மட்டும்தானா? அல்லது பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, நீங்களுங்கூட அதில் உட்பட்டிருக்கிறீர்களா? நாம் பார்க்கலாம்.
8 நவீன காலத்தில் இவனுக்கு இணையான ஒருவனை—பணக்கார குடும்பத்திலிருந்து வரும் நல்ல பைபிள் அறிவும், நல்ல ஒழுக்கங்களும் உடைய ஒரு சுத்தமான வாலிப கிறிஸ்தவனை—நீங்கள் கற்பனைச் செய்துகொள்வீர்களானால், அந்த இளம் அதிபதியின் நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள அது உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு நபரைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படக்கூடும். ஆனால் இயேசு இந்த யூத மனிதனில் பெரிய ஒரு குறைபாடு இருந்ததைக் கண்டார். அவனுடைய செல்வம் அல்லது உடைமைகள் அவனுடைய வாழ்க்கையில் அதிமுக்கியமானவையாக இருந்தன. அதன் காரணமாகவே இயேசு அவனுக்குப் புத்திமதியைக் கொடுத்தார். நாம் பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், பைபிளின் இந்தப் பதிவு ஏன் நம் எல்லோருக்காகவும் என்பதை நீங்கள் காணமுடியும். பணமும் உடைமைகளும் ஏற்கெனவே நம்மிடம் அது இருந்தாலும் சரி அல்லது நாம் அவைகளை கொண்டிருக்க ஆவலுள்ளவர்களாக இருந்தாலும் சரி, அவை நம்மில் எவருக்குமே அதிமுக்கியமானவையாக ஆகிவிடக்கூடும்.
9 பொருள் சம்பந்தமான ஐசுவரியங்களை உடைய ஒரு நபர் கடவுளைச் சேவிக்க முடியாது என்பதாக இயேசு சொல்லிக் கொண்டில்லை. அந்த யூத வாலிபன் அவ்விதமாக ஓரளவு செய்து கொண்டிருந்தான். “ஐசுவரியவானுமாயிருந்த” ஆயக்காரனான சகேயு இருந்தான். (லூக்கா 19:2-10) முதல் நூற்றாண்டிலிருந்த சில அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆகவே “தாராளமாய்க் கொடுக்கிறவர்களும் உதாரகுணமுள்ளவர்களுமாய்” இருக்க வேண்டிய விசேஷமான சவால் அவர்களுக்கிருந்தது. (1 தீமோத்தேயு 6:17, 18; யாக்கோபு 1:9, 10) இன்றுங்கூட செல்வந்தராக இருக்கும் சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அநேகமாக ராஜ்ய சேவையை ஆதரிக்க தாராளமாக உதவி செய்து, கூட்டங்கள் நடத்தப்படுவதற்குத் தங்களுடைய வீடுகளைத் திறந்து வைத்து, ஊழியத்துக்காக தங்களுடைய வாகனங்களைப் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அப்படியென்றால் இயேசு ஏன் ஐசுவரியவானையும் ஒட்டகத்தையும் பற்றிய காரியத்தைச் சொன்னார்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
10 நீங்கள் காணக்கூடிய விதமாகவே, கடவுளை வணங்க ஆரம்பிப்பது என்பது ஒரு காரியமாகும்; முடிவு பரியந்தம் உண்மையுள்ளவர்களாய் நிரூபிப்பது என்பது மற்றொரு காரியமாகும். (மத்தேயு 24:13; பிலிப்பியர் 3:12-14) இயேசு இதையே மனதில் கொண்டு, “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்பதாக சொல்லியிருக்கக்கூடும். (மாற்கு 10:25) தைக்கும் ஊசியின் காதிலே எந்த ஒட்டகமும் திணித்துக்கொண்டு உள்ளே செல்ல முடியாது. ஆகவே இயேசு இங்கே, ஒரு உயர்வு நவிற்சியை, சொல்லர்த்தமாக எடுத்துக் கொள்வதற்கில்லாத மிகையுரையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் ஐசுவரியவானுக்கு ஏதோ ஒன்றைச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை இது காண்பிக்கிறது. என்ன? வெறுமென கடவுளைச் சேவிக்க ஆரம்பிப்பது இல்லை. ஆனால் உண்மையில் நித்திய ஜீவனையடைவது, “தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதாக” அது இருக்கிறது. பொருளாதாரத்தில் உங்கள் நிலை என்னவாக இருப்பினும், இயேசுவின் புத்திமதி உங்கள் சிந்தனைக்கும், உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கும் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியாக இருக்க முடியும்.
ஐசுவரியவானுக்கு ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?
11 இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் செய்த பிரசங்கிப்பின் மூலமாக, ‘தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. (மத்தேயு 11:5) செல்வந்தரும் வேறுபடுத்திப் பார்க்கப்படவில்லை. என்றபோதிலும் அதிமாக தரித்திரரே அவர்களுடைய ஆவிக்குரிய தேவை உணர்ந்து நம்பிக்கையின் செய்திக்குப் பிரதிபலித்தது போலத் தெரிகிறது. (மத்தேயு 5:3, 6; 9:35, 36) செல்வந்தராக இருந்த யூதர்கள், அதிக திருப்தியுள்ளவர்களாக இருந்தனர். (லூக்கா 6:20, 24, 25 ஒப்பிடவும்) என்றாலுங்கூட இதற்கு விதிவிலக்காக சிலர் இருந்தார்கள். இன்றும் இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள். செல்வந்தராக இருக்கும் சிலர் பைபிளின் செய்தியை ஏற்றுக்கொண்டு கடவுளைச் சேவிக்கிறார்கள். அதனால் வரும் பலன்கள் இவர்களுக்கு மகத்தானவையாக இருக்கக்கூடும். வாழ்க்கையில் தன்னுடைய சமுதாய அந்தஸ்து தன்னை தடை செய்ய அனுமதிக்காத பவுலின் விஷயத்தில் இவ்விதமாக இருந்தது. (பிலிப்பியர் 3:4-8) என்றபோதிலும் ஐசுவரியவான்களுக்கு அதிக கடினமாக இருக்கும் என்பதாக இயேசு சொன்னார்.
“ஐசுவரியத்தின் மயக்கம்”
12 பல்வேறு நிலங்களில் விழுந்த விதைகளைப் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு, “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது என்பதாகச் சொன்னார். அவர் அதை இவ்விதமாக விளக்கினார்: “முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக் கவலையும் ஐசுவரியவத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.” (மத்தேயு 13:7, 22) பெரும்பாலும் எல்லா ஆட்களுமே, “உலக கவலைகளில்” சிலவற்றை அனுபவிக்கிறார்கள். வறுமையில், வேலையில்லாமல், ஊனமுற்றிருக்கும் ஒரு நபருக்கு இது ஏன் இவ்விதமாக இருக்கிறது என்பதைக் காண்பது எளிதாக இருக்கிறது. பொருளாதாரத்தில் ஒரு பாதுகாப்பான நிலையில் இருக்கும் நபருக்கு இதே கவலைகள் இல்லாமலிருக்கலாம். என்றபோதிலும் அவனோ அல்லது அவளோ பணவீக்கம், வரியில் மாற்றங்கள் அல்லது கொள்ளையிடப்படும் ஆபத்து போன்றவற்றைக் குறித்துக் கவலையுள்ளவராக இருக்கலாம். ஆகவே செல்வந்தருக்கும் ஏழைக்கும் ஆகிய இருவருக்குமே கவலைகள் இருக்கக்கூடும்.—மத்தேயு 6:19-21.
13 சிலருக்கு “ஐசுவரியத்தின் மயக்க”முங்கூட தடையாக இருக்கக்கூடும் என்பதாக இயேசு காண்பித்தார். பொருளாதாரத்தில் வெற்றியானது, அனைத்தையும் பயன்படுத்துவதைத் தேவைப்படுத்தக்கூடும். லட்சாதிபதியான அரிஸ்டாட்டில் ஓனேஸிஸ் ஒரு சமயம் பின்வருமாறு சொன்னார்: “ஒரு கட்டத்தை நீங்கள் அடைந்த பின்பு பணம் முக்கியமில்லாததாக ஆகிவிடுகிறது. முக்கியமாக இருப்பது வெற்றியாகும். இப்பொழுது இதோடு நிறுத்திக்கொள்வது எனக்கு அறிவுள்ள காரியமாக இருக்கும். ஆனால் அவ்விதமாகச் செய்ய முடியாது. அதில் கிடைக்கும் கிளர்ச்சிக்காக மட்டுமே நான் மேலே மேலே போக முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” அதே விதமாகவே கூட்டுச் சேர்ந்து ஏணியில் போட்டிப் போட்டுக்கொண்டு மேலே செல்வது ஒரு கிறிஸ்தவனுக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கலாம். முன்னொரு காலத்தில் “போதும்” என்பதாக அவன் கருதியிருக்கக்கூடிய ஒரு கட்டத்தை எட்டியப் பிறகும் தன்னுடைய வியாபாரத்தை விஸ்தரிக்க அவன் தூண்டப்படலாம். முழு நேர ஊழியனாகும் பொருட்டு தன்னுடைய வேலையைக் குறைத்துக் கொள்வதற்குப் (அல்லது ஓய்வு பெறுவதற்குப்) பதிலாக அவன் “தன் களஞ்சியங்களை (அல்லது வீடுகளை) இடித்து பெரிதாகக் கட்டக்”கூடும். (லூக்கா 12:15-21 பார்க்கவும்) அது உங்களுக்குச் சம்பவிக்கக்கூடுமா? அந்த ஒரு நிலையிலுள்ள எவரையாவது, தம்மை முழு ஆத்துமாவோடு சேவிப்பதாக கடவுள் நியாயந்தீர்ப்பாரா?—மத்தேயு 22:37.
14 ஒரு கிறிஸ்தவனை நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதிலிருந்து, ஐசுவரியங்கள் [அல்லது அடைவதற்கான ஆசை] மற்ற விதங்களில் தடை செய்யக்கூடும். ஐசுவரியங்களுக்கான ஆசை லாபத்தைக் குறைத்துச் சொல்லுதல் அல்லது மற்ற சாதாரணமான ஆனால் நேர்மையற்ற சூழ்ச்சி முறைகளை உபயோகிப்பது போன்ற உலகப் பிரகாரமான சூழ்ச்சிமுறைகளை மேற்கொள்ள ஒருவரைத் தூண்டக்கூடும். அல்லது நேர்மையுள்ளவர்களாகவும் கடினமாக வேலை செய்பவர்களாகவும் இருக்கும் உடன் கிறிஸ்தவர்களை அவன் வேலைக்கு அமர்த்துவானேயானால், தன்னுடைய சொந்த தனிப்பட்ட ஆதாயத்தை அவர்களுடைய ஆவிக்குரிய தன்மைக்கு முன்னால் வைக்கக்கூடும். தனக்கு வேலை செய்வதை விட்டுவிட்டு வேறொரு உத்தியோகத்தை தேடிக்கொள்ளாதபடி, அவன் அதிக ஊதாரித்தனமான வாழ்க்கைப் பாணியை வளர்த்துக் கொள்ளுமாறு (அல்லது ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் வாங்கும்படியாகவுங்கூட) அவர்களை உற்சாகப்படுத்தக்கூடும். அவன் அவர்களுடைய முதலாளியாக இருப்பதால், அவர்களின் இந்த உறவு சபை சம்பந்தமான விஷயங்களில் தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
15 முதல் நுற்றாண்டில் செல்வந்தர்களாக இருந்த சில கிறிஸ்தவர்கள், “ஐசுவரியங்களின் மயக்கத்துக்குப்” பலியாகியிருக்கக்கூடும். யாக்கோபு ‘அவர்கள் மேல் வரும் நிர்பந்தங்களைக்’ குறித்து எழுதினான். அவர்கள் வேலைக்காரருக்குக் குறைவாக சம்பளம் கொடுப்பதன் மூலம், விலையுயர்ந்த உடைகளை வாங்கி பொன்னையும் வெள்ளியையும் சேர்த்து சம்பிரமமாய் கொழுத்து வாழ்ந்தார்கள். (யாக்கோபு 5:1-5) இன்றும் அதே விதமாகவே இருக்கிறது. ஐசுவரியமானது அநேகமாக ஒரு நபரின் உடலைக் கெடுக்கக்கூடிய கொழுமையான உணவையும் பானத்தையும் கொண்டிருக்க அனுமதிக்கிறது. செல்வந்தனால் எப்பொழுதும் பிரயாணம் செய்து கொண்டிருக்க முடிகிறது. இது உள்ளுர் சபையிலிருந்து அவனைப் பிரித்து வைக்கிறது. நல்ல உடைகளும், நகைகளும், உணவும் பிரயாணமும் தங்களில்தானே தீங்கானவை என்று சொல்வதற்கில்லை. என்றபோதிலும் யாக்கோபு குறிப்பிட்ட ஐசுவரியவான்கள் இவைகளால் நன்மையடையவில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையும் கடவுளுக்கு முன்பாக இவர்களுடைய நிலைநிற்கையும் தாழ்வான நிலையில் இருந்ததன் காரணமாக, ‘அவர்கள் மேல் வரும் நிர்பந்தங்களினிமித்தம் அலறி அழுவதற்கு’ அவர்களுக்குக் காரணமிருந்தது.
16 செல்வந்தர்கள் அநேகமாக அனுபவிக்கும், அவர்களுடைய ஆவிக்குரியத் தன்மைக்கு எற்படக்கூடிய வேதனையையும் தடைகளையும் குறித்து நிச்சயமாகவே இயேசு அறிந்தார். விலைமதிப்புள்ள பொருட்கள் சொல்லர்த்தமாகவே, அழிந்துவிடக்கூடும் அல்லது மதிப்பை இழந்துவிடக்கூடும் என்பதையும் இது கிறிஸ்தவ ஐசுவரியங்களுக்கு ஒருபோதும் நேரிடாது என்பதையுங்கூட அவர் அறிந்திருந்தார். (நீதிமொழிகள் 11:28; மாற்கு 10:29, 30) ஆகவே பின்வருமாறு எச்சரிப்பதன் மூலம் இயேசு நம் அனைவருக்கும் உண்மையான சேவையைச் செய்து கொண்டிருந்தார்: “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.” (லூக்கா 18:24) நமக்கு மிகக் குறைவான வருவாய் மட்டுமே இருந்தாலுங்கூட அவருடைய எச்சரிப்பு நமக்குப் பிரயோஜனமாக இருக்கக்கூடும். எவ்விதமாக? இப்பொழுதே செல்வந்தராக வேண்டும் என்ற ஏதாவது ஆசை நமக்கு இருக்குமானால், அதை நாம் அடக்கிவிட வேண்டும். இயேசு சத்தியத்தைப் பேசினார் என்பதாக கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறார்கள். இயேசு அவருடைய தகப்பனைப் பற்றியும், இந்த ஒழுங்கின் முடிவைப் பற்றியும் அன்பை வளர்ப்பதைப் பற்றியும் சொன்ன காரியங்களை நாம் விசுவாசித்து அதன்படி ஜீவித்து வருகிறோம். சத்தியம் பேசும் இவர் பின்வருமாறுங்கூட சொன்னார்: “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.” (மத்தேயு 19:24) இதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா? நீங்கள் இதை நம்புவதை உங்களுடைய செயல்களும் வாழ்க்கை முறையும் மனநிலைகளும் நிரூபிக்கின்றனவா?
தொடர்ந்து ஐசுவரியமுள்ளவர்களாயிருங்கள்—கடவுளுடைய வழியில்
17 கடவுளுடைய ஊழியர்களில் பெரும்பாலானோர் மத்தேயு 19:16-24-ல் காணப்படும் இதுபோன்ற புத்திமதிகளை இருதயத்தில் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கான அத்தாட்சி உலகம் முழுவதிலுமிருந்து வந்து கொண்டிருக்கிறது. சாதாரண அளவு பள்ளி படிப்பை முடித்துவிட்ட உடன் முழு நேர ஊழியத்தை மேற்கொள்ளப் போவதாக அநேக இளம் கிறிஸ்தவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். குடும்பத்தின் வருவாயை அதிகரிக்க உலகப் பிரகாரமான ஒரு வேலையைச் செய்யக்கூடிய மனைவிமார்கள் அதற்கு மாறாக கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு அதிகமான நேரத்தைச் செலவழித்து தங்களையும் மற்றவர்களையும் ஆவிக்குரிய விதத்தில் ஐசுவரியமுள்ளவர்களாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் பொருள் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய வேதபூர்வமான பொறுப்புள்ள சில ஆண்களுங்கூட ஊழியத்தில் அதிகமான பங்கைக் கொண்டிருப்பதற்கு வழிமுறைகளைக் காண்கிறார்கள்.
18 30 வயதுகளின் மத்திபத்திலிருக்கும் ஒரு மூப்பர் “முழு நேர ஊழியனாக இருப்பது என்பது எப்பொழுதும் என்னுடைய உதடுகளிலிருந்து நழுவிச் செல்லும் வெறும் வார்த்தைகளாக இருந்தன” என்பதாக ஒப்புக் கொள்கிறார். அவருடைய ஆண்டு வருமானம் 4,55,000 ரூபாய்க்கும் மேலாக இருந்தது. இதைத் தவிர மற்ற சலுகைகளும், கம்பெனி தந்த வாகனமும் இவருக்கு இருந்தது. பின்பு “சரியான இலக்குகளை வைப்பதும் அடைவதும்” என்ற பேச்சை 1983 மாநாட்டில் கொடுக்கும்படியாக அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் பின்வருமாறு சொல்கிறார்: “நான் ஆவலோடு அந்தப் பேச்சுக் குறிப்புத்தாளை வாசித்தபோது, எனக்கு தடுமாற்மாகவும் வெட்கமாகவும் இருந்தது. என்னுடைய மனசாட்சி என்னை உறுத்தியது.” மாநாடு வருவதற்கு முன்பாக அவரும் அவருடைய மனைவியும் இந்த நிலைமையைக் கலந்து பேசினார்கள். விரைவிலேயே அவர் ஒரு பகுதி நேர வேலையை எடுத்துக்கொண்டு, ஒரு பயனியராக தன்னுடைய மனைவியைச் சேர்ந்து கொண்டார். அவர்கள் இன்னும் பயனியர் ஊழியஞ்செய்து கொண்டிருக்கிறார்கள். அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அவர்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்து களித்து வருகிறார்கள்.
19 மற்றவர்கள் பணம் சேர்க்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தங்களுடைய ஆவிக்குரிய நடவடிக்கைகளை விரிவாக்கக்கூடிய இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்காவில் தங்களுடைய பயனியர் ஊழியத்தைக் குறித்து கனாடா தேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி பின்வருமாறு எழுதினார்கள்: “இங்குள்ள சகோதரர்கள் வறுமையில் வாழ்ந்தபோதிலும் சத்தியத்தினிடமாக அவர்களுக்கு மகத்தான வைராக்கியம் இருக்கிறது. உலகப் பிரகாரமாக பார்க்கும்போது அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் ஆவிக்குரிய வகையில் அவர்கள் லட்சாதிபதிகள். இங்கு 38 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். இவர்களில் 10 பேர் ஒழுங்கான பயனியர்கள். சராசரியாக 110-140 பேர் கூட்டங்களுக்கு வருவதால் இரண்டு கூட்டங்கள் நடத்தப்படுவது அவசியமாக இருக்கிறது. 2 மூப்பர்களும் 3 உதவி ஊழியர்களும் இந்த எல்லா கூட்டங்களையும் நடத்த வேண்டும். நம்முடைய வாழ்க்கையில், யெகோவாவுக்கு முதலிடத்தைத் தருவது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை இங்கிருக்கும் மனத்தாழ்மையுள்ள நம்முடைய சகோதரர்களிடமிருந்து நாங்கள் மீண்டுமாக கற்று வருகிறோம். நம்முடைய சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தபோதிலும் யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிக்க முடியும் என்பதை அவர்கள் நமக்குக் காண்பிக்கிறார்கள்.
20 இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் சபைக்கு வெளியேவோ அல்லது உள்ளேயோ, செல்வந்தராக இருக்கும் ஒரு நபரைப் பார்த்து பொறாமைப்படவோ அல்லது பொருளாசையில் உள்ளத்தை முழுவதுமாக ஈடுபடுத்தவோ எந்த நியாயமான காரணமும் இல்லை. ஆனால் சராசரி வாழ்க்கைக்கு கொஞ்சம் பணம் தேவை என்பதை அவர்கள் உணருகிறார்கள். (பிரசங்கி 5:3; 7:12) ஆனால் இயேசு செல்வந்தர்கள், அநேக ஆவிக்குரிய தடைகளையும் சவால்களையும் ஆபத்துகளையும் எதிர்படுகிறார்கள் என்று சொன்னபோது, அவர் உண்மையைப் பேசினார் என்பதையுங்கூட அவர்கள் மதித்துணருகிறார்கள். “இவ்வுலக்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலயற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், தேவன் மேல் நம்பிக்கை வைப்பதும்” அவர்களுக்கு ஒரு கடினமான சவாலாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 6:17.
21 இயேசுவோடு பேசிய இளம் அதிபதி, அந்தச் சவாலை எதிர்பட தவறியது வருந்தத்தக்க காரியமாகும். மற்றவர்கள் அவனைப் போலவே சில காலமாக கடவுளைச் சேவித்துவிட்டு ஆனால் பின்னால் அவர்களுடைய செல்வந்தத்தின் சம்பந்தமாக வேதனையையும் ஆவிக்குரிய தோல்வியையும் அனுபவித்திருக்கிறார்கள். மறுபட்சத்தில் உண்மையுள்ள லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் தொடர்ந்து, “யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்பதை நிரூபித்து வருகிறார்கள். (நீதிமொழிகள் 10:22) அவர்களுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது; அவர்களுக்கு மதிப்புள்ள இலக்குகளும் ஒரு சாதனை உணர்வும் இருக்கிறது. அவர்களுடைய நற்கிரியைகள் என்றுமாக நிலைத்திருந்து இப்பொழுதும் எதிர்காலத்திலும் அவர்களுக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொடுக்கும். நாம் ஒவ்வொருவரும் அந்த விதத்தில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க முயற்சிப்போமாக.—பிலிப்பியர் 4:1; 1 தெசலோனிக்கேயர் 2:19, 20. (w86 6/15)
சிந்திப்பதற்குச் சில கருத்துகள்
◻ நீதிமொழிகள் 10:22 என்ன விதமான ஐசுவரியத்தைப் பற்றிப் பேசுகிறது?
◻ ஐசுவரியவானையும் ஒட்டகத்தையும் பற்றிய இயேசுவின் குறிப்பில் செய்தி என்னவாக இருந்தது?
◻ அநேகமாக செல்வந்தருக்கு வாழ்க்கை அதிக கடினமாக இருப்பதற்குக் காரணமென்ன?
◻ கடவுளுடைய வழியில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க நாம் எவ்விதமாக முயற்சிக்கலாம்?
[கேள்விகள்]
1, 2. ஐசுவரியங்களுக்கிடையே என்ன வேறுபாடுகளைக் காணமுடியும்?
3. உங்களுக்குக் கடவுளுடைய ஆசீர்வாதங்கள் இருக்குமானால் நீங்கள் என்ன விதங்களில் உண்மையாகவே ஐசுவரியமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
4. ஆவிக்குரிய வகையில் நீங்கள் ஐசுவரியவானாயிருப்பதை எவ்விதமாக நீங்கள் ஆபத்துக்குள்ளாக்கக்கூடும்?
5. ஐசுவரியங்களைப் பற்றிய இயேசுவின் கருத்து என்னவாக இருந்தது?
6, 7. (எ) இயேசுவுக்கும் ஒரு வாலிபனுக்குமிடையே என்ன சம்பாஷணை நடந்தது? (பி) அதற்குப் பின்பு இயேசு என்ன புத்திமதியைக் கொடுத்தார்?
8. (எ) இளம் யூத அதிபதி யாரைப் போல இருந்தான்? (பி) அவனிடமிருந்த குறை என்ன? அதைக் குறித்து நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
9. இயேசு, செல்வமுள்ளவர்களாயிருப்பதைக் கண்டனம் செய்து கொண்டில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
10. அந்தச் சமயத்தில் இயேசு கொடுத்த புத்திமதியிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
11. இயேசு பிரசங்கித்தபோது, ஏழைகளும் பணக்காரரும் எவ்விதமாக பாதிக்கப்பட்டனர்?
12, 13. ஒரு உவமையில், கவலைகளைக் குறித்து இயேசு என்ன குறிப்பைக் கொடுத்தார்? செல்வந்தர் ஏன் கூடுதலான தடையை எதிர்படுகிறார்கள்?
14. ஐசுவரியம் ஒரு கிறிஸ்தவனுக்குத் தடையாக இருக்கக்கூடும் என்பது எவ்விதமாக விளக்கப்படலாம்? (நீதிமொழிகள் 28:20)
15. ஐசுவரியத்தின் தீங்கான பாதிப்புகளைப் பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர் எவ்விதமாக உணர்ந்திருக்கலாம்? (சங்கீதம் 73:3-8, 12, 27, 28)
16. ஐசுவரியங்களைப் பற்றி இயேசு ஏன் இப்படிப்பட்ட தெளிவான புத்திமதியைக் கொடுத்தார்? நீங்கள் உங்களையே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?
17. அநேக கிறிஸ்தவர்கள் எவ்விதமாக யெகோவாவால் ஐசுவரியவான்களாக்கப்படுவதற்குரிய வழியில் தங்களை வைத்து வருகிறார்கள்?
18, 19. யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாடியிருக்கும் சிலர் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்?
20. பொருள் சம்பந்தமாக ஐசுவரியமுள்ளவர்களாயிருப்பதைக் குறித்து நாம் நம்முடைய இருதயங்களில் எவ்விதமாக உணர வேண்டும்?
21. ஆவிக்குரிய ஐசுவரியங்களை நாடுகிறவர்களின் பங்கு என்னவாக இருக்கிறது?
[பக்கம் 12-ன் பெட்டி]
செல்வமும் குடும்பமும்
செல்வத்தினால் வரக்கூடிய பாதிப்புகளைக் குறித்து சிந்திக்கையில், உங்களுடைய குடும்பத்துக்கு வரக்கூடியவைகளைக் கவனிக்க தவறிவிடாதீர்கள். இவைகளைப் பாருங்கள்:
கனாடாவிலிருந்து, மிக அதிகமான செல்வமுள்ளவர்களின் பிள்ளைகளை ஆராய்ந்த மனநோய் வல்லுநர்களிடமிருந்து ஒரு அறிக்கை வருகிறது: “வாழ்க்கை அவர்களுக்குச் சலிப்பாக இருக்கிறது. தங்களைத் தாங்களே பிரியப்படுத்திக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு இலக்குகள் இல்லை. சிறிய ஏமாற்றத்தையுங்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வளவாக எந்த விதமான உணர்ச்சிகளும் அவர்களுக்கு இல்லை. பொருட்களை வாங்குவதும், பிரயாணம் செய்வதும் கிளர்ச்சியடைய புதியவைகளைத் தேடுவதுமே அவர்களுடைய முக்கிய நாட்டமாக இருக்கிறது.”
முன்னால் லட்சாதிபதி ஒருவரைக் குறித்து நியு யார்க் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது: “அவன் வியாபாரம் வெற்றியடைந்து அவனுக்குச் செல்வம் சேர்ந்தபோது, அவன் குடும்பம் மாறியதை அவன் கவனித்தான். ‘என் மனைவியும் மகளும் ஆட்களை அவர்களுடைய பணத்தை வைத்து எடை போட்டார்கள். ஒரு மகளுக்கு நான் 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கொடுத்தால் இன்னொரு மகளுக்கு நான் 39 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுக்க வேண்டும்.’” மாரடைப்பு ஒருமுறை வந்த பிறகும், “செல்வம் அவனுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்ன செய்துவிட்டது என்பதைப் பார்த்த பிறகும்” அவன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டான்.
மத்திய கிழக்கில் எண்ணெய் வளமுள்ள ஒரு தேசத்தைப் பற்றி அர்னால்ட் ஹாட்டிங்கர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “அதிகமாக பணம் சம்பாதிப்பதற்காக இங்கு வரும் அநேக அயல் நாட்டு மருத்துவர்களுக்கு நோய்குண நூலைப்போலவே செல்வமுங்கூட அத்துப்படியாக இருக்கிறது. உடல் உறுப்புகளில் எந்தவிதமான விளக்கப்படக்கூடிய குறையினாலும் வராத ஆனால் உண்மையாகவே நோவை உண்டு பண்ணும் நோய்கள்—கவலையினால் உண்டாகும் நோய்கள்—அத்தனைச் சாதராணமாக இங்கிருப்பது போல வேறு எங்கும் இல்லை என்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கே இளைஞர்கள், வயதானவர்கள் போலவும், வயதானவர்கள், இளைஞர்கள் போலவும் நடந்து கொள்கிறார்கள்.