பணம்—சமநிலையான கருத்து
பண ஆசையும் பொருள் ஆசையும் புதிதல்ல. இவை ஏதோ புதிதாக பிறந்த பிரச்சினைகள் என்பதுபோல் பைபிள் இவற்றைக் குறித்து மௌனமாக இருப்பதில்லை. இவை தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. ஆகவேதான் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தில் இஸ்ரவேலருக்கு கடவுள் இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; . . . பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.”—யாத்திராகமம் 20:17.
பண ஆசையும் பொருள் ஆசையும் இயேசுவின் காலத்தில் சகஜமாக இருந்தன. ஓர் இளம் ‘ஐசுவரியவானுக்கும்’ இயேசுவுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை கவனியுங்கள். அவனிடம் இயேசு, “இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.”—லூக்கா 18:18-23.
பணம்—சரியான கண்ணோட்டம்
அதற்காக, பணத்தையும் பணத்தால் கிடைக்கும் அடிப்படை பயன்களையும் பைபிள் கண்டனம் செய்கிறது என்ற முடிவுக்கு வருவது தவறு. சொல்லப்போனால், ஏழ்மையையும் அதனால் வரும் பிரச்சினைகளையும் தடுத்து வாழ்க்கையில் தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கு பணம் தேவை என பைபிள் காட்டுகிறது. சாலொமோன் அரசன் இவ்வாறு எழுதினார்: “பணம் பாதுகாப்பு தருவதுபோல் ஞானமும் பாதுகாப்பு தரும்.” மேலும், “விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.”—பிரசங்கி 7:12, NW; 10:19.
பணத்தை சரியாக பயன்படுத்துவதை கடவுள் அங்கீகரிக்கிறார். உதாரணமாக, இயேசு இவ்வாறு சொன்னார்: “அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.” (லூக்கா 16:9) மெய் மதத்தை ஆதரிப்பதற்கு பணத்தை நன்கொடையாக அளிப்பதும் இதில் உட்படுகிறது. ஏனெனில் நாம் கடவுளை நமது நண்பராக்கிக்கொள்ள விரும்புகிறோம். சாலொமோன் தன் தகப்பன் தாவீதைப் பின்பற்றி யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கு பணத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் வாரி வழங்கினார். கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மற்றொரு கட்டளை, ஏழை எளியோருக்கு பொருளுதவி அளிப்பதாகும். “வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினார். (ரோமர் 12:13, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே இதற்காக பணத்தை செலவழிக்க வேண்டும். ஆனால், பண ஆசையைப் பற்றி என்ன சொல்லலாம்?
‘வெள்ளியை வாஞ்சிப்பது’
பவுல் தன்னுடைய சக கிறிஸ்தவ இளைஞன் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் ‘பண ஆசையை’—சொல்லர்த்தமாக, ‘வெள்ளியை வாஞ்சிப்பதை’—பற்றி விரிவாக விளக்கினார். பவுல் கொடுத்த இந்த அறிவுரையை 1 தீமோத்தேயு 6:6-19 வசனங்களில் காணலாம். பொருளுடைமைகளைப் பற்றி விரிவாக எழுதியபோது அவர் ‘பண ஆசையை’ பற்றி குறிப்பிட்டார். இன்றைய சமுதாயம் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக பவுலால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த குறிப்புகளை கவனமாக ஆராய்வது நல்லது. இந்த ஆராய்ச்சி, ‘மெய் வாழ்வை உறுதியாக பற்றிக்கொள்வதற்கான’ (NW) இரகசியத்தை வெளிப்படுத்துவதால் நிச்சயம் பயன்தரும்.
பவுல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:10) இந்த வசனமோ மற்றெந்த வசனமோ பணம் தீமையானது என சொல்வதில்லை. எல்லாத் “தீமைக்கும்” பணம்தான் அடிப்படைக் காரணம் அல்லது எல்லாப் பிரச்சினைக்கும் பணம்தான் காரணம் என்று அப்போஸ்தலன் சொல்வதில்லை. மாறாக, பண ஆசையே எல்லா “தீமைக்கும்” காரணமாகிவிடலாம்; அது மட்டுமே காரணமாய் இல்லாவிட்டாலும், அதுவும் ஒரு காரணமாகிவிடலாம்.
பேராசையைத் தவிருங்கள்
பணத்தை பைபிள் அறவே கண்டனம் செய்யவில்லை என்பதற்காக பவுலின் எச்சரிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும் கிறிஸ்தவர்கள் எல்லாவித பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறார்கள். அதில் மிகவும் மோசமானது, விசுவாசத்தைவிட்டு வழிவிலகிப்போகும் அபாயமாகும். இந்த உண்மையை கொலோசெயிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் மேலுமாக வலியுறுத்தினார்: “துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” (கொலோசெயர் 3:5) பொருளாசை, பேராசை அல்லது “பண ஆசை” விக்கிரகாராதனைக்கு ஒத்திருப்பது எப்படி? ஒரு பெரிய வீடு, புதிய கார் அல்லது அதிக வருவாய் தரும் வேலை போன்றவற்றை விரும்புவது தவறு என்றா அர்த்தம்? இவையொன்றும் தீங்கானதல்ல. ஆனால் கேள்வி என்னவெனில், இவற்றையெல்லாம் விரும்புவதற்கு ஒருவருடைய இதயத்தை தூண்டுவது எது, இவையெல்லாம் உண்மையில் அவசியம்தானா?
சாதாரண ஆசைக்கும் பேராசைக்கும் இடையிலான வித்தியாசம், சமைப்பதற்குத் தேவையான நெருப்புக்கும் காட்டையே அழித்துவிடும் நெருப்புக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போன்றது. நியாயமான, நல்ல ஆசை உதவி அளிக்கலாம். இது பலன்தரும் விதத்தில் உழைப்பதற்கு நம்மைத் தூண்டுகிறது. நீதிமொழிகள் 16:26 (தமிழ் கத்தோலிக்க பைபிள்) இவ்வாறு கூறுகிறது: “உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான். ஏனென்றால், அவன் வாயே அவனைக் கட்டாயப்படுத்துகின்றது.” ஆனால் பேராசையோ ஆபத்தானது, கேடுவிளைவிப்பது. இது கட்டுப்படுத்தப்படாத ஆசையாகும்.
இந்த ஆசையைக் கட்டுப்படுத்துவதே முக்கிய பிரச்சினை. நாம் சேர்க்கும் பணமும் பொருளும் நமக்கு அடிமையாகுமா அல்லது நாம் அவற்றிற்கு அடிமையாவோமா? இதன் காரணமாகவே, ‘விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரன்’ என பவுல் கூறுகிறார். (எபேசியர் 5:5) ஏதோ ஒரு பொருள்மீது பேராசை கொள்வது என்பது அதற்கு அடிமையாவதைக் குறிக்கிறது; அதன் விளைவாக அது நமக்கு எஜமானாக, கடவுளாக மாறிவிடுகிறது. ஆனால் கடவுளோ, “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” என வலியுறுத்திக் கூறுகிறார்.—யாத்திராகமம் 20:3.
நமக்கு பேராசை இருந்தால், கடவுள் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப நமக்குத் தேவையானதை தருவார் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றே அர்த்தம். (மத்தேயு 6:33) அப்படியானால் பேராசை என்பது கடவுளிடமிருந்து விலகிச் செல்வதற்கு சமம். இந்தக் கருத்திலும்கூட இது ஒரு ‘விக்கிரகாராதனையாகும்.’ ஆகவே, பவுல் இதைக் குறித்து தெளிவாக எச்சரிப்பதில் வியப்பில்லை!
இயேசுவும் பேராசையைக் குறித்து நேரடியான எச்சரிப்பைக் கொடுத்தார். நம்மிடம் இல்லாத ஒன்றிற்காக ஏங்குவதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கும்படி இவ்வாறு கட்டளையிட்டார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) இந்த வசனத்தின்படியும் அதற்குப்பின் இயேசு கொடுத்த உவமையின்படியும், ஒருவருக்கு எந்தளவுக்கு இருக்கிறதோ அதுதான் வாழ்க்கையில் முக்கியம் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையே பேராசைக்கு அடிப்படை என்பது தெளிவாகிறது. அது ஆஸ்தியாகவோ அந்தஸ்தாகவோ அதிகாரமாகவோ அல்லது அதோடு சம்பந்தப்பட்ட எந்தக் காரியங்களாகவோ இருக்கலாம். நம்மால் பெறக்கூடிய எதன்மீதும் பேராசை ஏற்படலாம். அதைப் பெற்றுவிட்டால் திருப்தியாகிவிடுவோம் என நாம் நினைக்கலாம். ஆனால் பைபிள் கொடுக்கும் அறிவுரையின்படியும் மனித அனுபவத்தின்படியும் பார்த்தால் நம்முடைய உண்மையான தேவைகளை கடவுளால் மட்டுமே நிறைவு செய்ய முடியும், அவரே நிறைவு செய்வார். இதைத்தான் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு விளக்கிக் காட்டினார்.—லூக்கா 12:22-31.
வாங்குவதிலும் விற்பதிலும் ஊறிப்போன இன்றைய சமுதாயம் பேராசையைத் தூண்டிவிடுகிறது. மறைமுகமாக, அதேசமயத்தில் வலிமையாக செல்வாக்கு செலுத்தப்படும் அநேகர், தங்களிடம் இருப்பது போதாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்னும் அதிக, இன்னும் பெரிய, இன்னும் சிறந்த பொருட்கள் வேண்டும் என நினைக்கிறார்கள். நம்மைச் சுற்றிலுமுள்ள ஜனங்களை மாற்ற முடியாவிட்டாலும் இந்தப் போக்கு நம்மை பாதிக்காதபடி எப்படி தடுக்கலாம்?
திருப்தியும் பேராசையும்
பேராசைக்கு பதிலாக நாம் வளர்க்க வேண்டிய பண்பையும் பவுல் கூறுகிறார், அதுதான் திருப்தி. “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என்கிறார். (1 தீமோத்தேயு 6:8) நமக்கு உண்மையிலேயே தேவையானவை ‘உணவும் உடையும்’ மட்டுமே என சொல்வது மட்டுக்குமீறிய எளிமை என தோன்றலாம். ஆடம்பரமான வீடுகளில் வசிக்கும் பிரபல ஆட்களை நேயர்கள் நேரில் சென்று சந்திக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அநேகர் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஆடம்பரங்கள் நிச்சயமாகவே திருப்திக்கான வழியல்ல.
அதற்காக கடவுளுடைய ஊழியர்கள் வறுமையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. (நீதிமொழிகள் 30:8, 9) வறுமை என்பது உண்மையில் என்ன என்பதை பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார்: வாழ்வதற்கு அவசியமான உணவும் உடையும் உறைவிடமும் இல்லாதிருப்பதே. மறுபட்சத்தில் நமக்கு இவையெல்லாம் இருந்தால், திருப்தியுடன் வாழ முடியும்.
பவுல் இதை உண்மையாகத்தான் சொன்னாரா? வாழ்க்கைக்கு அடிப்படையான உணவையும் உடையையும் உறைவிடத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு திருப்தியாக வாழ்வது நிஜமாகவே சாத்தியமா? பவுல் இந்த விஷயத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். உயர் பதவியால் கிடைத்த செல்வச் செழிப்பை யூத சமுதாயத்திலும் ரோம குடிமகனாகவும் பவுல் அனுபவித்தார். (அப்போஸ்தலர் 22:28; 23:6; பிலிப்பியர் 3:5) அதேசமயம் மிஷனரி ஊழியத்தில் அவர் மிகுந்த கஷ்டங்களையும் அனுபவித்தார். (2 கொரிந்தியர் 11:23-28) இவை எல்லாவற்றிலும் திருப்தியாக இருப்பதன் இரகசியத்தைக் கற்றுக் கொண்டார். அது என்ன இரகசியம்?
“இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்”
பவுல் தன்னுடைய கடிதங்கள் ஒன்றில் இவ்வாறு விளக்கினார்: “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எல்லாவற்றிலும் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்தியாயிருப்பதும் பட்டினியாயிருப்பதும் எப்படி, நிறைவுபடுவதும் குறைவுபடுவதும் எப்படி என்பதன் இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.” (பிலிப்பியர் 4:12, NW) பவுல் எவ்வளவு உறுதியோடும் நம்பிக்கையோடும் சொல்கிறார்! அவர் இதை எழுதியபோது கவலையில்லாத வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என நாம் எளிதில் நினைத்துவிடலாம், ஆனால் அது தவறு. அப்போது அவர் ரோம சிறையில் இருந்தார்!—பிலிப்பியர் 1:12-14.
கருத்தாழமிக்க இந்த உண்மையை கவனிக்கையில், பொருளுடைமைகளின் விஷயத்தில் மட்டுமல்லாமல் எந்தச் சூழ்நிலைகளிலும் திருப்தியுடன் இருப்பதற்கான அவசியத்தை இந்த வசனங்கள் வலிமையாக எடுத்துரைக்கின்றன. மிதமிஞ்சிய செல்வமும் மிதமிஞ்சிய பண நெருக்கடியும் நாம் முதலிடம் கொடுக்க வேண்டிய காரியங்களுக்கு தடையாக இருக்கலாம். பொருளாதார சூழ்நிலை எதுவாக இருந்தாலும், ஆவிக்குரிய செல்வங்கள் திருப்தியோடிருப்பதற்கு தனக்கு உதவியதாக பவுல் கூறினார்: “எனக்கு வல்லமை அளிப்பவராலே [கடவுளாலே] எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13, NW) பொருளுடைமைகள்—அதிகமோ குறைவோ—பவுல் அவற்றை சார்ந்திருக்கவில்லை. அதுபோலவே சூழ்நிலைகள்—சாதகமோ பாதகமோ—அவற்றையும் சார்ந்திருக்கவில்லை. மாறாக, தன்னுடைய தேவைகளுக்காக கடவுளையே சார்ந்திருந்தார். அதன் பலன் திருப்தி.
பவுல் வைத்த முன்மாதிரி விசேஷமாக தீமோத்தேயுவுக்கும் பிரயோஜனமாக இருந்தது. செல்வத்துக்கு மேலாக தேவ பக்தியையும் கடவுளுடன் நெருங்கிய கூட்டுறவையுமே நாடும்படி இளம் தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார். அவர் இவ்வாறு கூறினார்: “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.” (1 தீமோத்தேயு 6:11) இவை தீமோத்தேயுவுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும், கடவுளை கனப்படுத்தி உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறவர்களுக்கும் பொருந்துகின்றன.
மற்றெந்த கிறிஸ்தவனைப் போலவே, தீமோத்தேயுவும் பேராசையின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. பவுல் இதை எழுதியபோது தீமோத்தேயு எபேசு சபையில் இருந்தார். அச்சபையில் வசதிபடைத்த விசுவாசிகள் இருந்தனர். (1 தீமோத்தேயு 1:3, 4) செழிப்பான வர்த்தக மையமாக விளங்கிய அந்த இடத்தில் பவுல் நற்செய்தியைப் பிரசங்கித்து அநேகரை மதம் மாற்றியிருந்தார். எபேசுவில் மதம் மாறியவர்களில் அநேகர் வசதிபடைத்தவர்களாக இருந்ததில் சந்தேகமில்லை. இன்றைய கிறிஸ்தவ சபையிலும் வசதிபடைத்த சிலர் இருக்கிறார்கள்.
அப்படியானால், விசேஷமாக 1 தீமோத்தேயு 6:6-10 வசனங்களுடைய போதனையின் அடிப்படையில் எழும் கேள்வி என்னவெனில்: அதிக வசதிபடைத்தவர்கள் கடவுளை கனப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முதலாவது தங்கள் மனப்பான்மையை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என பவுல் சொல்கிறார். திருப்திப்பட்டுக் கொள்ளும் மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்திவிடும் வலிமை பணத்திற்கு உண்டு. பவுல் இவ்வாறு கூறுகிறார்: “இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.” (1 தீமோத்தேயு 6:17, 19, பொ.மொ.) வசதிபடைத்தவர்கள் தங்களுடைய பணத்தை அல்ல, எல்லா செல்வத்துக்கும் மூலகாரணராகிய கடவுளையே நோக்கியிருக்க கற்றுக்கொள்வது அவசியம்.
மனப்பான்மை மட்டுமே வெற்றியைத் தராது. வசதிபடைத்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய பணத்தை ஞானமாக பயன்படுத்த கற்றுக்கொள்வதும் அவசியம். ஆகவேதான் பவுல் இவ்வாறு அறிவுரை கொடுக்கிறார்: ‘நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேர்த்து வையுங்கள்; உங்களுக்குள்ளதை தாராள மனத்தோடு பகிர்ந்தளியுங்கள்.’—1 தீமோத்தேயு 6:18, பொ.மொ.
‘மெய் வாழ்வு’
பொருளாதார காரியங்களுக்கு உள்ள ஓரளவு மதிப்பை நினைவில் வைப்பது அவசியம் என்பதே பவுல் தரும் அறிவுரையின் முக்கிய கருத்து. கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:11) ஆம், எண்ணத்தில் அல்லது கற்பனையில்தான் ஐசுவரியம் பாதுகாப்பு தரும்; உண்மையில் அது நம்மை வஞ்சிக்கும். கடவுளுடைய அங்கீகாரத்தை பெறுவதற்கு முதலிடம் தராமல் ஐசுவரியத்தை நம் வாழ்க்கையில் மையமாக வைப்பது தவறானது.
பொருட்செல்வம் நிலையற்றதாக இருப்பதால் அதன்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உண்மையான நம்பிக்கை உறுதியான, அர்த்தமுள்ள, நிலையான ஒன்றின்மீதே வைக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ நம்பிக்கை நம் படைப்பாளராகிய யெகோவா தேவனிலும் அவர் கொடுக்கும் நித்திய ஜீவன் என்ற வாக்குறுதியிலுமே வைக்கப்படுகிறது. பணத்தால் மகிழ்ச்சியை அடைய முடியாததுபோலவே, இரட்சிப்பையும் அடைய முடியாது. கடவுள் மீதுள்ள நம் விசுவாசம் மட்டுமே அந்த நம்பிக்கையைத் தரும்.
ஆகவே, நாம் வசதிபடைத்தவராக இருந்தாலும்சரி வசதிகுறைந்தவராக இருந்தாலும்சரி, ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாக’ ஆகும் வாழ்க்கை போக்கை நாடுவோமாக. (லூக்கா 12:21) படைப்பாளரின் அங்கீகாரத்தைவிட மதிப்புமிக்கது வேறொன்றும் இல்லை. இதைக் காத்துக்கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ‘நித்திய ஜீவனை [“மெய் வாழ்வை,” NW] பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நமக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்க’ உதவுகிறது.—1 தீமோத்தேயு 6:19.
[பக்கம் 7-ன் படம்]
பவுல் திருப்தியாக இருப்பதன் இரகசியத்தைக் கற்றுக்கொண்டார்
[பக்கம் 8-ன் படங்கள்]
உள்ளதை வைத்து நாமும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கலாம்