படிப்புக் கட்டுரை 7
இன்னும் பிரயோஜனம் தரும் விதத்தில் பைபிளைப் படியுங்கள்
“நீ என்ன வாசித்திருக்கிறாய்?”—லூக். 10:26.
பாட்டு 97 பைபிள் நம் உயிர்நாடி
இந்தக் கட்டுரையில்...a
1. பைபிளை இயேசு ரொம்ப முக்கியமாக நினைத்தார் என்று எதை வைத்துச் சொல்லலாம்?
இயேசு சொல்லிக்கொடுத்ததை நேரில் கேட்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் நிறைய தடவை பைபிள் வசனங்களை மனப்பாடமாகச் சொன்னார். சொல்லப்போனால், அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு பேசிய முதல் சில வார்த்தைகளும் சரி, அவர் சாவதற்கு முன்பு பேசிய கடைசி சில வார்த்தைகளும் சரி, பைபிளிலிருந்துதான்!b (உபா. 8:3; சங். 31:5; லூக். 4:4; 23:46) இதற்கு இடையிலிருந்த மூன்றரை வருஷ காலத்தில்கூட, இயேசு அடிக்கடி மக்கள் முன்னால் பைபிளை வாசித்தார், அதிலிருந்து மேற்கோள் காட்டினார், அதை விளக்கியும் சொன்னார்.—மத். 5:17, 18, 21, 22, 27, 28; லூக். 4:16-20.
2. வளர வளர, வசனங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள இயேசுவுக்கு எதுவெல்லாம் உதவி செய்திருக்கும்? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)
2 இயேசு தன் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு ரொம்ப வருஷங்களுக்கு முன்பிருந்தே கடவுளுடைய வார்த்தையை அடிக்கடி படித்தார், கேட்டார். வீட்டில் மரியாளும் யோசேப்பும் பைபிள் வசனங்களைப் பயன்படுத்திப் பேசியதை இயேசு கண்டிப்பாகக் கேட்டிருப்பார்.c (உபா. 6:6, 7) அதோடு, இயேசு ஒவ்வொரு ஓய்வுநாளிலும் குடும்பத்தில் இருப்பவர்களோடு சேர்ந்து ஜெபக்கூடத்துக்குப் போயிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. (லூக். 4:16) அங்கே மற்றவர்கள் வசனங்களை வாசித்தபோது அவர் ரொம்ப கவனமாகக் கேட்டிருப்பார். போகப்போக, அவரே வசனங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டார். அதனால், கடவுளுடைய வார்த்தையை இயேசு நன்றாகத் தெரிந்துவைத்திருந்தது மட்டுமல்லாமல், அதை ரொம்ப நேசித்தார். அதோடு, கடவுளுடைய வார்த்தை சொல்வது போலவே நடந்துகொண்டார். உதாரணத்துக்கு, அவர் 12 வயது பிள்ளையாக இருந்தபோது ஆலயத்தில் நடந்ததை யோசித்துப் பாருங்கள். திருச்சட்டத்தைக் கரைத்துக்குடித்திருந்த போதகர்கள்கூட இயேசுவின் “புத்திக்கூர்மையைப் பார்த்தும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் . . . பிரமித்துப்போனார்கள்.”—லூக். 2:46, 47, 52.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?
3 கடவுளுடைய வார்த்தையை நாமும் தவறாமல் படித்தால் அதிலிருக்கும் விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொள்வோம், கடவுளுடைய வார்த்தையை நேசிக்கவும் ஆரம்பித்துவிடுவோம். ஆனால், இன்னும் நிறைய பிரயோஜனம் அடையும் விதத்தில் நாம் எப்படி பைபிளைப் படிக்கலாம்? திருச்சட்டத்தை நன்றாகத் தெரிந்துவைத்திருந்த வேத அறிஞர்களிடமும், பரிசேயர்களிடமும், சதுசேயர்களிடமும் இயேசு என்ன சொன்னார் என்பதை வைத்து இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ளலாம். அந்த மதத் தலைவர்கள் வேதவசனங்களைத் திரும்பத் திரும்பப் படித்தார்கள். ஆனால், அதிலிருந்து அவர்கள் பிரயோஜனம் அடைந்த மாதிரி தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் மூன்று விஷயங்களைச் செய்யத் தவறிவிட்டார்கள். அதைத்தான் இயேசு சுட்டிக்காட்டினார். அவர்களிடம் இயேசு என்ன சொன்னார் என்று நாம் தெரிந்துகொண்டால் (1) பைபிளிலிருந்து படிப்பதைப் புரிந்துகொள்ள முடியும், (2) அதில் மூழ்கி முத்தெடுக்க முடியும், (3) அது நம்மைச் செதுக்கி சீராக்க நம்மால் அனுமதிக்க முடியும்.
படிப்பதைப் புரிந்துகொள்ளுங்கள்
4. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதைப் பற்றி லூக்கா 10:25-29-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
4 கடவுளுடைய வார்த்தையை நாம் படித்தால் மட்டும் போதாது, படிப்பதைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். இல்லையென்றால், அதிலிருந்து நமக்கு முழு நன்மை கிடைக்காது. அதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒருசமயம் “திருச்சட்ட வல்லுநன் ஒருவன்” இயேசுவிடம் பேசினான். (லூக்கா 10:25-29-ஐ வாசியுங்கள்.) முடிவில்லாத வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று அவன் இயேசுவிடம் கேட்டான். கடவுளுடைய வார்த்தையிலிருந்தே அவன் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக இயேசு அவனிடம், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ என்ன வாசித்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், கடவுளை நேசிக்க வேண்டும் என்றும், மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்றும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சரியாகப் பதில் சொன்னான். (லேவி. 19:18; உபா. 6:5) ஆனால் அதற்குப் பிறகு, “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள் உண்மையில் யார்?” என்று கேட்டான். அப்படியென்றால், படித்த விஷயத்தின் உண்மையான அர்த்தத்தை அவன் புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. அதனால், படித்ததை எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
புரிந்து படிக்கிற திறமையை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்
5. ஜெபம் செய்வதும், நிறுத்தி நிதானமாகப் படிப்பதும் நமக்கு எப்படி உதவி செய்யும்?
5 கடவுளுடைய வார்த்தையை நாம் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நன்றாகப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உதவி செய்கிற சில டிப்ஸை இப்போது பார்க்கலாம். நீங்கள் பைபிளை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு ஜெபம் பண்ணுங்கள். பைபிளைப் புரிந்துகொள்ள நமக்கு யெகோவாவின் உதவி தேவை. கவனம் சிதறாமல் படிப்பதற்கு அவருடைய சக்தியைக் கொடுக்கச் சொல்லி அவரிடம் நாம் ஜெபம் பண்ணலாம். அதன்பின், படிக்கும்போது நிறுத்தி நிதானமாகப் படியுங்கள். படிக்கும் விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவி செய்யும். ஒருவேளை, பைபிளைச் சத்தமாக படிக்கும்போது அல்லது அதனுடைய ஆடியோ பதிவைக் கேட்டுக்கொண்டே படிக்கும்போது அது நம் மனதில் நன்றாகப் பதியும். படிக்கும் விஷயத்தைக் காதால் கேட்கும்போதும் கண்ணால் பார்க்கும்போதும் அதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்... நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்... இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். (யோசு. 1:8) படித்து முடித்த பிறகு யெகோவாவிடம் மறுபடியும் ஜெபம் செய்யுங்கள். பைபிளை அன்பளிப்பாக கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். படித்தபடி நடக்க அவரிடம் உதவி கேளுங்கள்.
6. நீங்கள் ஒரு பைபிள் பதிவை வாசிக்கும்போது உங்களையே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்வதும், சுருக்கமான குறிப்புகளை எழுதிக்கொள்வதும் எப்படி உங்களுக்கு உதவி செய்யும்? (படத்தையும் பாருங்கள்.)
6 பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இன்னும் இரண்டு டிப்ஸைப் பார்க்கலாம். முதலாவதாக, நீங்கள் ஏதாவது பைபிள் பதிவைப் படிக்கும்போது, உங்களையே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, இதில் யாரெல்லாம் முக்கியமான கதாபாத்திரங்கள், யார் பேசுகிறார், யாரிடம் பேசுகிறார், ஏன் பேசுகிறார், இந்த விஷயம் எங்கே நடக்கிறது, எப்போது நடக்கிறது என்றெல்லாம் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தப் பதிவைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்கும், அதில் இருக்கும் முக்கியக் கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கும் இந்தக் கேள்விகள் உதவி செய்யும். இரண்டாவதாக, படிக்கப் படிக்க குறிப்புகளைச் சுருக்கமாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அப்படி எழுதும்போது உங்களுடைய எண்ணங்களை நீங்கள் எழுத்தில் வடிப்பீர்கள். அப்போது, அதைப் பற்றி இன்னும் நன்றாக யோசிப்பீர்கள்... படிப்பதை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்... நன்றாக ஞாபகமும் வைத்துக்கொள்வீர்கள். உங்கள் மனதில் வருகிற கேள்விகளை நீங்கள் எழுதி வைக்கலாம்... நீங்கள் ஆராய்ச்சி செய்த குறிப்புகளை எழுதி வைக்கலாம்... முக்கிய குறிப்புகளைச் சுருக்கமாக எழுதி வைக்கலாம்... படித்ததை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றோ, அதை வைத்து எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்றோ எழுதி வைக்கலாம்... இல்லையென்றால், படிக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது என்றுகூட எழுதி வைக்கலாம். இப்படியெல்லாம் நீங்கள் எழுதி வைக்கும்போது கடவுள் அவருடைய வார்த்தையை உங்களுக்காகவே கொடுத்த மாதிரி ஒரு உணர்வு உங்களுக்கு வரும்.
7. பைபிளை வாசிக்கிற விஷயத்தில் நமக்கு என்ன குணம் தேவை? ஏன்? (மத்தேயு 24:15)
7 கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும்போது, அதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமக்கு ஒரு முக்கியமான குணம் வேண்டும் என்று இயேசு சொன்னார். அதுதான் பகுத்தறிவு. (மத்தேயு 24:15-ஐ வாசியுங்கள்.) பகுத்தறிவு என்றால் என்ன? ஒரு விஷயம் இன்னொரு விஷயத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது, எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறது, அதற்குள் என்ன அர்த்தம் புதைந்திருக்கிறது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் திறன்தான் பகுத்தறிவு. பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட பகுத்தறிவு தேவை என்று இயேசு சுட்டிக்காட்டினார். பைபிளில் நாம் படிக்கிற ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் நாம் முழுமையாக நன்மை அடைய வேண்டுமென்றால் அதற்கும் பகுத்தறிவு தேவை.
8. நாம் எப்படிப் பகுத்தறிவோடு வாசிக்கலாம்?
8 யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்குப் பகுத்தறிவைக் கொடுக்கிறார். அதனால், அவரிடம் ஜெபம் செய்து இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேளுங்கள். (நீதி. 2:6) நீங்கள் செய்யும் ஜெபத்துக்கு ஏற்றபடி எப்படி நடந்துகொள்ளலாம்? படிக்கும் விஷயத்தை நன்றாக அலசிப் பாருங்கள். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களோடு அது எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று யோசியுங்கள். அதற்கு, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு மாதிரியான பிரசுரங்களைப் பயன்படுத்துங்கள். பைபிளைப் படிக்க உதவும் இந்த மாதிரி பிரசுரங்கள் வசனங்களுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்க்கையில் அதை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் உங்களுக்கு உதவி செய்யும். (எபி. 5:14) பகுத்தறிவோடு வாசிக்கும்போது நீங்கள் பைபிளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.
மூழ்கி முத்தெடுங்கள்
9. என்ன முக்கியமான பைபிள் போதனையை சதுசேயர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்?
9 எபிரெய வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை சதுசேயர்கள் ரொம்ப நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்கள். ஆனால், அதிலிருந்த முக்கியமான சில உண்மைகளை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள். ஒருசமயம் அவர்கள் இயேசுவிடம் வந்து, உயிர்த்தெழுதல் சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “மோசேயின் புத்தகத்தில் இருக்கிற முட்புதரைப் பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததில்லையா? கடவுள் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’ என்று சொன்னார், இல்லையா?” என்று கேட்டார். (மாற். 12:18, 26) சதுசேயர்கள் அந்தப் பதிவைக் கண்டிப்பாக நிறைய தடவை படித்திருப்பார்கள். ஆனாலும் இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வியைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது. உயிர்த்தெழுதல் நம்பிக்கை என்ற முக்கியமான பைபிள் போதனையை சதுசேயர்கள் கவனிக்கத் தவறியிருக்கிறார்கள்.—மாற். 12:27; லூக். 20:38.d
10. படிக்கும்போது நாம் எதைக் கவனிக்க வேண்டும்?
10 இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? ஒரு வசனத்தையோ பைபிள் பதிவையோ நாம் படிக்கும்போது அதிலிருந்து என்னவெல்லாம் தெரிந்துகொள்ள முடியுமோ அதையெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அடிப்படையான போதனைகளை மட்டுமல்ல, அதில் ஆழமாகப் புதைந்திருக்கிற உண்மைகளையும் நியமங்களையும்கூடக் கண்டுபிடிக்க வேண்டும்.
11. பைபிளிலிருந்து முத்துக்களை அள்ளி எடுக்க 2 தீமோத்தேயு 3:16, 17 உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?
11 நாம் எப்படி பைபிளில் மூழ்கி, அதில் இருக்கும் முத்துக்களை அள்ளி எடுக்கலாம்? 2 தீமோத்தேயு 3:16, 17 என்ன சொல்கிறது என்று பாருங்கள். (வாசியுங்கள்.) அங்கே சொல்கிறபடி, “வேதவசனங்கள் எல்லாம்” (1) கற்றுக்கொடுப்பதற்கும், (2) கண்டிப்பதற்கும், (3) காரியங்களைச் சரிசெய்வதற்கும், (4) திருத்துவதற்கும் “பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.” ஒரு பதிவைப் படிக்கும்போது, அதிலுள்ள வசனங்கள் யெகோவாவைப் பற்றி... அவருடைய நோக்கத்தைப் பற்றி... இல்லையென்றால் அவர் தந்திருக்கும் நியமங்களைப் பற்றி... என்ன கற்றுக்கொடுக்கின்றன என்று கண்டுபிடியுங்கள். அதேபோல், கண்டிப்பதற்கு அவை எப்படி உதவியாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். இதை எப்படிச் செய்யலாம்? எவையெல்லாம் கெட்ட குணங்கள் அல்லது மனப்பான்மைகள் என்று கண்டுபிடிப்பதற்கும்... அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளுவதற்கும்... யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கும்... அந்த வசனங்கள் உங்களுக்கு எப்படி உதவி செய்கின்றன என்று பாருங்கள். அந்த வசனங்களைப் பயன்படுத்தி காரியங்களை எப்படிச் சரிசெய்யலாம், அதாவது தவறான கருத்துகளை எப்படிச் சரிசெய்யலாம், என்று பாருங்கள். ஒருவேளை, ஊழியத்தில் நீங்கள் சந்தித்த ஒருவருடைய தப்பான கருத்தாகக்கூட அது இருக்கலாம். அந்த வசனங்கள் நீங்கள் யோசிக்கும் விதத்தை திருத்தி, யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்க உங்களுக்கு எப்படி உதவி செய்யும் என்று பாருங்கள். இந்த நான்கு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டால் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத பைபிள் புத்தகங்களிலிருந்துகூட முத்துக்களை உங்களால் அள்ளி எடுக்க முடியும்.
வாசிக்கிற விஷயங்கள் உங்களைச் செதுக்கி சீராக்கட்டும்
12. இயேசு ஏன் பரிசேயர்களிடம் “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்ற கேள்வியைக் கேட்டார்?
12 பரிசேயர்கள் வசனங்களைத் தவறாகப் புரிந்துவைத்திருந்தார்கள் என்பதைக் காட்டுவதற்காகக்கூட இயேசு அவர்களிடம், “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்ற கேள்வியைக் கேட்டார். (மத். 12:1-7)e இயேசுவின் சீஷர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டதாக அந்தச் சமயத்தில் பரிசேயர்கள் குற்றம் சொன்னார்கள். ஓய்வுநாள் சட்டத்தை யெகோவா ஏன் கொடுத்தார் என்பதையே பரிசேயர்கள் புரிந்துகொள்ளாமல் போய்விட்டார்கள். அதனால், இரக்கம் காட்டாமல் போய்விட்டார்கள். இதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்காக இயேசு கிறிஸ்து பைபிளிலிருந்து இரண்டு உதாரணங்களைச் சொன்னார். ஓசியா புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தையும் சொன்னார். ஆனால், ‘பரிசேயர்களும் கடவுளுடைய வார்த்தையை வாசித்தார்களே, பிறகு ஏன் அது அவர்களைச் செதுக்கி சீராக்கவில்லை?’ என்று நீங்கள் யோசிக்கலாம். கடவுளுடைய வார்த்தையை அவர்கள் சரியான மனப்பான்மையோடு படிக்காததுதான் அதற்குக் காரணம். அவர்கள் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்தார்கள், தலைக்கனத்தோடு இருந்தார்கள். அதனால், படித்த விஷயங்களின் அர்த்தம் என்ன என்று அவர்களுக்குப் புரியாமலேயே போய்விட்டது.—மத். 23:23; யோவா. 5:39, 40.
13. எப்படிப்பட்ட மனப்பான்மையோடு நாம் பைபிளைப் படிக்க வேண்டும்? ஏன்?
13 பைபிளைச் சரியான மனப்பான்மையோடு படிக்க வேண்டும் என்பதைத்தான் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். பரிசேயர்கள் மாதிரி நமக்கு எல்லாமே தெரியும் என்ற தலைக்கனத்தோடு இல்லாமல் மனத்தாழ்மையோடும்... கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையோடும்... நாம் இருக்க வேண்டும். ‘கடவுளுடைய வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு அதை நம் மனதில் பதிய வைக்க’ வேண்டும். (யாக். 1:21) சாந்தமான மனப்பான்மையோடு நாம் பைபிளைப் படிக்கும்போதுதான் அது நம்முடைய மனதில் வேலை செய்யும். அதேபோல், குற்றம் சொல்கிற மனப்பான்மையையும் தலைக்கனத்தையும் நாம் தூக்கிப்போட்டால்தான் இரக்கத்தையும் கரிசனையையும் அன்பையும் பற்றி பைபிள் சொல்லித்தரும் பாடங்கள் நம்மைச் செதுக்கி சீராக்கும்.
14. கடவுளுடைய வார்த்தை நம்மைச் செதுக்கி சீராக்க அனுமதிக்கிறோமா இல்லையா என்று நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (படங்களையும் பாருங்கள்.)
14 கடவுளுடைய வார்த்தை நம்மைச் செதுக்கி சீராக்க நாம் அனுமதிக்கிறோமா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம். கடவுளுடைய வார்த்தை பரிசேயர்களுடைய மனதுக்குள் போகவில்லை. அதனால், அவர்கள் ‘குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்தார்கள்.’ (மத். 12:7) அதுபோலவே, மற்றவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் அல்லது எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்து, கடவுளுடைய வார்த்தை நம்மைச் செதுக்கி சீராக்க அனுமதித்திருக்கிறோமா இல்லையா என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி நிறைய பேசுகிறோமா அல்லது எப்போது பார்த்தாலும் அவர்களிடம் இருக்கிற குறைகளைப் பற்றியே பேசுகிறோமா? மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துகொள்கிறோமா, அவர்களைத் தாராளமாக மன்னிக்கிறோமா, அல்லது அவர்களிடம் எப்போதும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டும் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டும் இருக்கிறோமா? இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொள்ளும்போது, நாம் படிக்கிற விஷயங்கள் நம்முடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் செயல்களையும் செதுக்கி சீராக்க நாம் அனுமதிக்கிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.—1 தீ. 4:12, 15; எபி. 4:12.
படிப்பது சந்தோஷத்தைத் தரும்
15. இயேசு கடவுளுடைய வார்த்தையை எந்தளவுக்கு நேசித்தார்?
15 கடவுளுடைய வார்த்தை என்றால் இயேசுவுக்கு ரொம்ப உயிர். அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்வதாக சங்கீதம் 40:8-ல் தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டது: “என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம். உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.” கடவுளுடைய வார்த்தையை நேசித்ததால் இயேசுவுக்கு சந்தோஷம் கிடைத்தது, யெகோவாவின் சேவையில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. நாமும் கடவுளுடைய வார்த்தையை நெஞ்சார நேசித்தால் நமக்கும் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும்.—சங். 1:1-3.
16. இன்னும் பிரயோஜனம் கிடைக்கிற விதத்தில் பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள்? (“படிப்பதைப் புரிந்துகொள்ள இயேசுவின் வார்த்தைகள் உங்களுக்கு உதவி செய்யும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
16 இயேசுவின் வார்த்தைகளிலிருந்தும் அவருடைய உதாரணத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? பைபிளை இன்னும் நன்றாக வாசிக்கும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்கிறோம். பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். அதை நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டும். கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். சுருக்கமான குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பைபிளை நாம் பகுத்தறிவோடு படிக்க வேண்டும். அதற்கு பைபிள் பிரசுரங்களைப் பயன்படுத்தி, படிக்கும் விஷயங்களை நன்றாக அலசிப் பார்க்க வேண்டும். பைபிளை நன்றாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அடிக்கடி பயன்படுத்தாத பைபிள் பதிவுகளில்கூட புதையல்களைத் தோண்டியெடுக்க வேண்டும். அதோடு, கடவுளுடைய வார்த்தை நம்மைச் செதுக்கி சீராக்க நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு, அதைச் சரியான மனப்பான்மையோடு படிக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய நாம் முழு முயற்சி எடுக்கும்போது, இன்னும் பிரயோஜனம் கிடைக்கிற விதத்தில் பைபிளைப் படிக்க முடியும். அதோடு, யெகோவாவிடம் இன்னும் இன்னும் நெருங்கிப் போக முடியும்.—சங். 119:17, 18; யாக். 4:8.
பாட்டு 95 வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
a யெகோவாவை வணங்கும் நாம் எல்லாருமே தினமும் அவருடைய வார்த்தையைப் படிக்க முயற்சி செய்கிறோம். மற்ற நிறைய பேரும் பைபிளைப் படிக்கிறார்கள். ஆனால், என்ன படிக்கிறார்கள் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. இயேசுவின் காலத்திலும் இப்படிச் சிலர் இருந்தார்கள். கடவுளுடைய வார்த்தையை வாசித்தவர்களிடம் இயேசு என்ன சொன்னார் என்று பார்க்கலாம். இன்னும் நிறைய பிரயோஜனம் கிடைக்கிற விதத்தில் பைபிளை எப்படி வாசிக்கலாம் என்பதற்கு அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
b இயேசு ஞானஸ்நானம் எடுத்து கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டபோது, அவர் ஏற்கெனவே பரலோகத்தில் வாழ்ந்தது அவருக்கு அநேகமாக ஞாபகம் வந்திருக்கும்.—மத். 3:16.
c மரியாள் வசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார், அதை அடிக்கடி பயன்படுத்தினார். (லூக். 1:46-55) வேதவசனங்களின் சுருள்களை வாங்கும் அளவுக்கு யோசேப்புக்கும் மரியாளுக்கும் அநேகமாக வசதி இருந்திருக்காது. ஜெபக்கூடத்தில் மற்றவர்கள் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதை அவர்கள் கவனமாகக் கேட்டு தங்கள் மனதில் பதிய வைத்திருப்பார்கள்.
d “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்—‘அவர் . . . உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்’” என்ற கட்டுரையை 2013 ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தில் பாருங்கள்.
e மத்தேயு 19:4-6-ஐயும் பாருங்கள். அங்கேயும் இயேசு பரிசேயர்களிடம், “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்ற கேள்வியைக் கேட்டார். பரிசேயர்கள் படைப்பு சம்பந்தமான பைபிள் பதிவுகளைப் படித்திருந்தாலும், திருமணத்தைக் கடவுள் எப்படிப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே போய்விட்டார்கள்.
f பட விளக்கம்: ராஜ்ய மன்றத்தில் கூட்டம் நடக்கும் சமயத்தில், ஆடியோ வீடியோ டிபார்ட்மென்ட்டில் வேலை செய்யும் ஒரு சகோதரர் நிறைய சொதப்பிவிடுகிறார். ஆனாலும் கூட்டம் முடிந்த பிறகு, அவர் என்னவெல்லாம் சொதப்பிவிட்டார் என்று குத்திக் காட்டுவதற்குப் பதிலாக, அவர் எடுத்த முயற்சியை மற்ற சகோதரர்கள் பாராட்டுகிறார்கள்.