லூக்கா எழுதியது
2 அந்த நாட்களில், குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும் என்று ரோம அரசனாகிய* அகஸ்து கட்டளையிட்டார். 2 (இந்த முதலாம் பெயர்ப்பதிவு, குரேனியு என்பவர் சீரியாவின் ஆளுநராக இருந்தபோது செய்யப்பட்டது.) 3 அந்தக் கட்டளையின்படி, பெயர்ப்பதிவு செய்வதற்காக எல்லா மக்களும் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போனார்கள். 4 அப்போது யோசேப்பும்கூட,+ கலிலேயாவில் இருக்கிற நாசரேத்திலிருந்து யூதேயாவில் இருக்கிற தாவீதின் ஊரான பெத்லகேமுக்குப்+ போனார். ஏனென்றால், அவர் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர். 5 நிச்சயிக்கப்பட்டபடியே தனக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட மரியாளோடு,+ பெயர்ப்பதிவு செய்வதற்காக அவர் போனார்; அந்தச் சமயத்தில் மரியாள் நிறைமாதக் கர்ப்பிணியாக+ இருந்தாள். 6 அவர்கள் அந்த இடத்தில் இருந்தபோது, அவளுக்குப் பிரசவ நேரம் வந்தது. 7 அவள் தன்னுடைய மூத்த மகனைப் பெற்றெடுத்தாள்;+ அந்தக் குழந்தையைத் துணிகளில் சுற்றி, தீவனத் தொட்டியில் படுக்க வைத்தாள்;+ ஏனென்றால், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
8 அப்போது, அந்தப் பகுதியிலிருந்த மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியில் தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். 9 திடீரென்று யெகோவாவின்* தூதர் அவர்கள் முன்னால் வந்து நின்றார்; யெகோவாவின்* மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். 10 ஆனால் அந்தத் தேவதூதர் அவர்களிடம், “பயப்படாதீர்கள், எல்லா மக்களுக்கும் அதிக சந்தோஷத்தைத் தருகிற நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். 11 இன்று தாவீதின் ஊரில்+ உங்களுக்கு ஒரு மீட்பர்+ பிறந்திருக்கிறார், அவர்தான் எஜமானாகிய கிறிஸ்து.+ 12 அந்தக் குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு, தீவனத் தொட்டியில் படுக்க வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். இதுதான் உங்களுக்கு அடையாளம்” என்று சொன்னார். 13 அந்த நொடியே திரளான தேவதூதர்கள்* அந்தத் தேவதூதரோடு தோன்றி,+ 14 “பரலோகத்தில் இருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியில் அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்குச் சமாதானமும் உண்டாகட்டும்” என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்தார்கள்.
15 தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குப் போன பின்பு, மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “வாருங்கள், நாம் உடனே பெத்லகேமுக்குப் போய், யெகோவா* நமக்குச் சொன்ன இந்தக் காரியத்தைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டார்கள். 16 பின்பு, வேகமாகப் போய் மரியாளையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள். 17 அப்போது, குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18 மேய்ப்பர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்ட எல்லாரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். 19 அந்த விஷயங்களையெல்லாம் மரியாள் தன் இதயத்தில் பதிய வைத்துக்கொண்டு, அவற்றைப் பற்றி ஆழ்ந்து யோசித்தாள்.+ 20 மேய்ப்பர்கள் தாங்கள் பார்த்த விஷயங்களுக்காகவும் கேட்ட விஷயங்களுக்காகவும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே திரும்பிப் போனார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டபடியே அதெல்லாம் நடந்திருந்தது.
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாவது நாள்+ வந்தது; அது தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பு தேவதூதர் சொல்லியிருந்தபடியே அதற்கு இயேசு என்ற பெயர் வைக்கப்பட்டது.+
22 மோசேயின் திருச்சட்டப்படி அவர்கள் தூய்மைச் சடங்கு செய்வதற்கான சமயம் வந்தபோது,+ அந்தக் குழந்தையை யெகோவாவின்* சன்னிதியில் காட்டுவதற்காக அதை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். 23 ஏனென்றால், “மூத்த மகன் ஒவ்வொருவனும் யெகோவாவுக்கு* அர்ப்பணிக்கப்பட்டவனாக* இருக்க வேண்டும்” என்று யெகோவாவின்* திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 24 அதோடு, “ஒரு ஜோடி காட்டுப்புறாவை அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளை”+ பலியாகக் கொடுக்க வேண்டும் என்று யெகோவாவின்* திருச்சட்டத்தில் சொல்லப்பட்டபடியே செய்தார்கள்.
25 அப்போது, எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார்; அவர் நீதிமான், பக்தியுள்ளவர், இஸ்ரவேலுக்கு ஆறுதல் கிடைப்பதற்காகக் காத்திருந்தவர்,+ கடவுளுடைய சக்தியைப் பெற்றிருந்தவர். 26 யெகோவாவுடைய* கிறிஸ்துவைப் பார்ப்பதற்கு முன்பு அவர் இறந்துபோக மாட்டார் என்று கடவுளுடைய சக்தியால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 27 அந்தச் சக்தியின் தூண்டுதலால் ஆலயத்துக்குள் அவர் வந்தார். அதே நேரத்தில், திருச்சட்டத்தின்படி செய்ய வேண்டியவற்றைச் செய்வதற்கு, பிள்ளையாகிய இயேசுவைத் தூக்கிக்கொண்டு அதனுடைய அப்பாவும் அம்மாவும் உள்ளே வந்தார்கள்;+ 28 அவர் அந்தப் பிள்ளையைத் தன் கையில் வாங்கிக்கொண்டு, கடவுளைப் புகழ்ந்து, 29 “உன்னதப் பேரரசரே, உங்களுடைய வார்த்தையின்படியே, உங்கள் ஊழியன் நிம்மதியாகக் கண்மூடுவதற்கு வழிசெய்துவிட்டீர்கள்.+ 30 ஏனென்றால், எல்லா மக்களும் பார்க்கும்படி+ நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பரை+ 31 இப்போது என் கண்களால் பார்த்துவிட்டேன். 32 இவரே மற்ற தேசத்தாரை மூடியிருக்கிற இருளைப் போக்கும்+ ஒளியாகவும்,+ உங்கள் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மகிமையாகவும் இருப்பார்” என்று சொன்னார். 33 பிள்ளையைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்களைக் கேட்டு, அதனுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்பவே ஆச்சரியப்பட்டார்கள். 34 அவர்களை சிமியோன் ஆசீர்வதித்தார்; பின்பு, பிள்ளையின் அம்மாவான மரியாளிடம், “இதோ! இவர் இஸ்ரவேலர்களில் பலருடைய வீழ்ச்சிக்கும்+ எழுச்சிக்கும்+ காரணமாக இருப்பார், அவமதிப்புக்கு ஆளாவார்.*+ 35 இதனால் பலருடைய இதயத்திலிருக்கிற எண்ணங்கள் வெளிப்படுத்தப்படும்; உன் உள்ளத்தையும் நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் செல்லும்”+ என்று சொன்னார்.
36 ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளான அன்னாள் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார்; அவர் வயதானவர்; திருமணமாகி, கணவரோடு ஏழு வருஷங்கள் மட்டுமே வாழ்ந்தவர். 37 அந்த 84 வயது விதவை ஆலயத்துக்கு வராமல் இருந்ததே இல்லை; விரதமிருந்து, மன்றாடி, இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்துவந்தார். 38 அவரும் அந்த நேரத்தில் அங்கே வந்து கடவுளுக்கு நன்றி சொன்னார்; எருசலேமின் விடுதலைக்காகக்+ காத்திருந்த எல்லாரிடமும் அந்தப் பிள்ளையைப் பற்றிப் பேசினார்.
39 யெகோவாவின்* திருச்சட்டத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்து முடித்த பின்பு,+ கலிலேயாவில் இருக்கிற தங்கள் சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.+ 40 பிள்ளை வளர்ந்து, பலம் பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுடைய பிரியத்தைப் பெற்றுவந்தது.+
41 ஒவ்வொரு வருஷமும் இயேசுவின் அப்பாவும் அம்மாவும் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குப் போவது வழக்கம்.+ 42 அவருக்கு 12 வயதானபோது, வழக்கம் போலவே அந்தப் பண்டிகைக்காக அவர்கள் எருசலேமுக்குப் போனார்கள்.+ 43 பண்டிகை முடிந்து அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, இயேசு எருசலேமிலேயே தங்கிவிட்டார்; அதை அவருடைய அப்பாவும் அம்மாவும் கவனிக்கவில்லை. 44 பயணம் செய்கிறவர்களுடைய கூட்டத்தில் இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அதனால், ஒருநாள் முழுவதும் பயணம் செய்த பின்புதான் சொந்தக்காரர்கள் மத்தியிலும் தெரிந்தவர்கள் மத்தியிலும் அவரை மும்முரமாகத் தேட ஆரம்பித்தார்கள். 45 அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், எருசலேமுக்குத் திரும்பிப் போய் அவரைத் தீவிரமாகத் தேடினார்கள். 46 மூன்று நாட்களுக்குப் பின்பு அவரை ஆலயத்தில் கண்டுபிடித்தார்கள்; அவர் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டும் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார். 47 அவருடைய புத்திக்கூர்மையைப் பார்த்தும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த எல்லாருமே பிரமித்துப்போனார்கள்.+ 48 அவருடைய அப்பாவும் அம்மாவும் அவரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்; அவருடைய அம்மா அவரிடம், “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? உன் அப்பாவும் நானும் எவ்வளவு பதற்றத்தோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம், தெரியுமா?” என்றாள். 49 அதற்கு அவர், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தகப்பனுடைய வீட்டில் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?”+ என்று கேட்டார். 50 ஆனால், அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
51 பின்பு, அவர் அவர்களோடு நாசரேத்துக்குப் போய், தொடர்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு* நடந்தார்.+ இந்த விஷயங்களையெல்லாம் அவருடைய அம்மா தன்னுடைய இதயத்தில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டாள்.+ 52 இயேசு வளரவளர ஞானத்தில் பெருகி, கடவுளுடைய பிரியத்தையும் மனிதர்களுடைய பிரியத்தையும் பெற்றுவந்தார்.