சேவை செய்ய நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா?
“எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.”—2 கொரிந்தியர் 3:5.
1. எப்படிப்பட்ட ஜனங்களுக்கு கிறிஸ்தவ சபையில் இடமில்லை?
யெகோவா தேவனும், இயேசு கிறிஸ்துவும் வேலை செய்பவர்கள். இயேசு கூறினார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்.” (யோவான் 5:17) வேலை செய்ய மறுப்பவர்களை தேவன் அங்கீகரிப்பதில்லை; அது மட்டுமல்லாமல் பிறர்மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காக பொறுப்பை நாடுபவர்களையும் அவர் அங்கீகரிப்பதில்லை. செயல் முனைப்பற்றவர்களுக்கும், தன்னலமான இலட்சியமுடையவர்களுக்கும் கிறிஸ்தவ சபையில் இடமில்லை.—மத்தேயு 20:25-27; 2 தெசலோனிக்கேயர் 3:10.
2. கிறிஸ்தவ சபையில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு இப்போது ஏன் அதிக தேவையுள்ளது?
2 “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்” யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்; குறிப்பாக உண்மை வணக்கத்தின் “பர்வதத்திற்கு” பல மக்கள் ஓடி வரும் இந்தக் காலத்தில். (1 கொரிந்தியர் 15:58; ஏசாயா 2:2-4) சபையில் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆவிக்குரிய தகுதிபெற்ற ஆண்களுக்கு அதிக தேவையிருக்கிறது. தன்னல ஆசையால் உந்துவிக்கப்படாததால், அப்படிப்பட்ட மனிதர்கள் தங்களைத் தாங்களே அல்ல, யெகோவாவை உயர்த்திப் பேசுகிறார்கள். (நீதிமொழிகள் 8:13) எப்படி “புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கினாரோ” அப்படியே சபை பொறுப்புகளுக்கு தேவன் தாமே அவர்களுக்குத் தகுதிபெற உதவுகிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 3:4-6.
3. அடிப்படையில், மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் பொறுப்புகள் யாவை?
3 ஆதி கிறிஸ்தவர்கள் மத்தியில் நடந்தது போலவே, மூப்பரும் உதவி ஊழியருமாக சேவை செய்ய இன்று மனிதர்கள் பரிசுத்த ஆவியினாலும், யெகோவாவின் அமைப்பின் ஏற்பாட்டாலும் நியமிக்கப்படுகிறார்கள். (அப்போஸ்தலர் 20:28; பிலிப்பியர் 1:1; தீத்து 1:5) பாதுகாப்பான மேற்பார்வையை அளித்து, மூப்பர்கள் கடவுளுடைய மந்தையை ஆவிக்குரிய வகையில் மேய்க்கிறார்கள். ஆவிக்குரிய கண்காணிப்பை நேரடியாக உட்படுத்தாதக் கடமைகளைக் கொண்ட உதவி ஊழியர்கள் இவர்களுக்கு உதவுகிறார்கள். (1 பேதுரு 5:2; அப்போஸ்தலர் 6:1-6-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) ஊழியம் செய்ய வந்த கடவுளுடையக் குமாரனைப் போல, சகவிசுவாசிகளுக்கு சேவை செய்ய இப்படி நியமிக்கப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். (மாற்கு 10:45) நீங்கள் ஒரு கிறிஸ்தவ மனிதரெனில், அப்படிப்பட்ட ஆவியை கொண்டிருக்கிறீர்களா?
பொதுவாகக் கொண்டிருக்கும் தகுதிகள்
4. சபை பொறுப்பு நம்பி கொடுக்கப்பட்டவர்களுக்கான தகுதிகளின் பட்டியல்கள் குறிப்பாக எங்கு நாம் பார்க்கலாம்?
4 சபை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பற்றி 1 தீமோத்தேயு 3:1-10, 12, 13 மற்றும் தீத்து 1:5-9-ல் அப்போஸ்தலனாகிய பவுலால் விவரிக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கவை. மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும் சிலவற்றையும் உட்படுத்தும் தகுதிகளை நாம் கவனிக்கும்போது, அவற்றை நாம் உலக தராதரங்களுக்கேற்ப நோக்கக்கூடாது. மாறாக, நாம் அவற்றை அவற்றின் முதல் நூற்றாண்டின் சூழமைவிலும், மேலும் யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் பொருந்தக்கூடியவையாகவும் பார்க்க வேண்டும். இந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்வது பூரணத் தன்மையைத் தேவைப்படுத்துவதில்லை. ஏனென்றால் அப்போது ஒரு மனிதனும் தகுதிபெற முடியாது. (1 யோவான் 1:8) நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஆண் ஆக இருந்தால், உங்களுக்குத் தற்போது சபை பொறுப்புகள் இருக்கிறதோ இல்லையோ, உங்கள் தனிப்பட்டத் தகுதிகளை ஆராய்ந்தாலென்ன?
5. குற்றஞ்சாட்டப்படாதவனாயிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
5 குற்றஞ்சாட்டப்படாதவனும், புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனும். (1 தீமோத்தேயு 3:2, 7, 8, 10; தீத்து 1:6, 7) நியமிக்கப்படும்போதும், சேவை செய்து கொண்டிருக்கும்போதும், உதவி ஊழியர்களும் மூப்பர்களும் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்க வேண்டும், அதாவது, குற்றமற்றும், தவறான நடத்தை அல்லது போதனைக்கான நீதியானக் குற்றச்சாட்டின் பேரில் கடிந்துகொள்ளுதலை தேவைப்படுத்தாமலும் இருக்க வேண்டும். “கள்ளச் சகோதரர்கள்” அல்லது மற்றவரால் கொண்டுவரப்படும் உண்மையற்ற குற்றச்சாட்டுகள் ஒரு மனிதனை குற்றஞ்சாட்டப்பட்டவனாக்காது. சபையில் சேவை செய்வதற்கு, ஒரு மனிதனை தகுதியற்றவனாக ஆக்குவதற்கு ஒரு குற்றச்சாட்டு வினையமற்றதாக இருக்கக்கூடாது; மேலும் வேதாகம தராதரத் தேவைக்கு இணங்க அது நிரூபிக்கப்பட வேண்டும். (2 கொரிந்தியர் 11:26; 1 தீமோத்தேயு 5:19) சபையில் நியமிக்கப்படும் ஒருவன் “நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்க வேண்டும்.” கடந்தக் காலத்தில் ஒரு மனிதன் சில வினைமையான பாவம் செய்திருந்தால், அவன் எந்தப் பழியும் இல்லாதபடி வாழ்ந்து, தனக்கென்று ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்டால்தான், அவன் நியமிக்கப்பட முடியும்.
6. ஒரே மனைவியை உடைய புருஷனாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
6 ஒரே மனைவியை உடைய புருஷன். (1 தீமோத்தேயு 3:2, 12; தீத்து 1:6) இது விவாகமான ஆண்கள் மட்டுமே உதவி ஊழியராகவும் மூப்பராகவும் இருக்க முடியுமென்று அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் விவாகமாகி இருந்தால், ஒரு மனிதன் உயிரோடிருக்கும் ஒரு மனைவியையே கொண்டிருக்க வேண்டும், மேலும் அவளிடம் உண்மையுள்ளவனாக இருக்கவேண்டும். (எபிரெயர் 13:4) முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவரற்ற மனிதர்கள் பலரைப் போலில்லாமல், அவன் பல மனைவிகளைக் கொண்டவனாக இருக்க முடியாது.a
7. (எ) ஓர் ஆண் மூப்பராக தகுதி பெறச்செய்வது அவருடைய சரீரப்பிரகாரமான வயதா? (பி) ஒரு குடும்பத்தை நல்ல விதத்தில் நடத்துவதானது எதை உட்படுத்துகிறது?
7 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளை கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 3:4, 5, 12; தீத்து 1:6) மூப்பர்கள் குறைந்தது 30 வயதாவது இருக்க வேண்டுமென்று சிலர் உணரலாம், ஆனால் வேதாகமம் ஒரு குறைந்த பட்ச வயதைக் குறிப்பிடவில்லை. எனினும், ஓர் ஆவிக்குரிய வகையில் அந்த ஆள் ஒரு முதியவரைப் போல் செயல்பட வேண்டும். உதவி ஊழியர்களும் மூப்பர்களும் பிள்ளைகளைக் கொண்டிருக்க போதிய வயதானவர்களாக இருக்க வேண்டும். விவாகமாகி இருந்தால், மற்ற இடங்களில் தெய்வீகத் தன்மைகளுடன் நடந்துகொண்டு, வீட்டில் கொடுங்கோலனாக இருந்தால், அவன் தகுதிபெற முடியாது. தன் சொந்தக் குடும்பத்தை வேதாகம நியமங்களின்படி நடத்துவதில் அவன் பெயர் பெற்றவனாக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் ஒவ்வொரு நபருடனும் ஆவிக்குரிய வெற்றியைப் பெறுவது அவன் குறிக்கோளாக இருக்க வேண்டும். பொதுவான விதிப்படி, தந்தையான ஒரு மூப்பர் “விசுவாசிகளான” நல்ல நடத்தைப் பெற்றச் சிறு பிள்ளைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று அவர்கள் கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அவர்கள் ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். தன் பிள்ளைகளில் விசுவாசத்தை வளர்க்க முடியாத ஒரு மனிதன் அவ்வாறு மற்றவரில் செய்வது சாத்தியமில்லை.
8. ஒரு குடும்பஸ்தன் மூப்பராவதற்கு முன்னால் என்ன செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்?
8 ஒரு சபையில் ஆவிக்குரிய கண்காணிப்பை அளிக்கவல்ல மூப்பராக ஒரு குடும்பஸ்தன் ஆவதற்குமுன், அவன் தன் சொந்த வீட்டாரை வழிநடத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். “ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?” (1 தீமோத்தேயு 3:5) உண்மைதான், சத்தியத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு மனைவியினால் ஒரு மனிதன் எதிர்க்கப்படலாம். (மத்தேயு 10:36; லூக்கா 12:52) அல்லது மற்றவர்கள் ஆவிக்குரிய விதத்தில் நன்கு நடந்து கொண்டிருந்தாலும் அவனுடைய பிள்ளைகளில் ஒருவர் வினைமையான பாவப் பழிக்குள்ளாகலாம். என்றாலும், எதிர்பார்க்கக்கூடிய எல்லாவற்றையும் ஒரு மனிதன் செய்திருந்தால், குறிப்பாக அவன் குடும்பத்திலுள்ள மற்றவர்களோடு ஆவிக்குரிய வெற்றி அடைந்திருந்தால், அவனுடைய அருமையான வழிகாட்டுதலை ஒரு குடும்ப அங்கத்தினர் ஏற்றுகொள்ளாதது அவன் ஓர் உதவி ஊழியராகவோ மூப்பராகவே இருப்பதற்கு அவனைத் தகுதியற்றவராக்காது.
9. ஒரு மூப்பரோ அல்லது உதவி ஊழியரோ மதுபானங்களைக் குறித்து என்ன கவனம் செலுத்த வேண்டும்?
9 மதுபானப்பிரியமில்லாதவனும் [குடிவெறியில், NW] அடியாதவனுமாய். (1 தீமோத்தேயு 3:3, 8; தீத்து 1:7) ஓர் உதவி ஊழியர் அல்லது மூப்பர் மதுபானப் பிரியராக இருக்கக் கூடாது. அவைகளுக்கு அடிமையாயிருப்பது, குடிவெறி சண்டைகளுக்கு அல்லது சச்சரவுகளுக்கு வழிநடத்தும் வகையில், எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுபாட்டிற்குள் வைக்கத் தவறுவதில் முடிவடையலாம். அவன் ‘மதுபானப்பிரியனாக’ இருக்கக்கூடாது, அல்லது வழக்கமாக அல்லது அதிகம் குடிப்பவரென்றப் பெயர் பெற்றிருக்கக்கூடாது. (நீதிமொழிகள் 23:20, 21, 29-35) ஒரு மேய்க்கும் சந்திப்பு வெறித்தன்மையினால் குலைவது எவ்வளவு விசனகரமானது! ஒரு சகோதரர் குடித்தால், அவர் கூட்டங்களில், ஊழியத்தில் அல்லது மற்ற பரிசுத்த சேவையில் பங்கு பெறும்போது அவ்வாறு செய்யக்கூடாது.—லேவியராகமம் 10:8-11; எசேக்கியேல் 44:21.
10. பண ஆசைக்காரரும் இழிவான ஆதாயத்தை இச்சிப்பவர்களும் ஏன் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் ஆக தகுதிபெற மாட்டார்கள்?
10 பண ஆசை இல்லாதவனும் அல்லது இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனுமாய். (1 தீமோத்தேயு 3:3, 8; தீத்து 1:7) பணப்பிரியர்கள் ஆவிக்குரிய ஆபத்தில் இருக்கிறார்கள், “பேராசைக்காரர்கள்” தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டார்கள். எனவே, அப்படிப்பட்ட மனிதர்கள் மூப்பர்களாகவோ உதவி ஊழியர்களாகவோ இருக்க தகுதி பெறுவதில்லை. (1 கொரிந்தியர் 6:9, 10; 1 தீமோத்தேயு 6:9, 10) “இழிவான” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல கிரேக்க வார்த்தையின் அடிப்படையான பொருள் “கேவலமான” என்பதாகும். மேலும் “ஆதாயம்” என்று மொழிபெயர்க்கப்பட்டது எல்லா விதமான இலாபத்தையும் அனுகூலத்தையும் குறிக்கும். (பிலிப்பியர் 1:21; 3:4-8) நிச்சயமாகவே, ஒரு மனிதனின் மனச்சாய்வு அவன் கடவுளுடைய “மந்தையை” உண்மையற்ற விதத்தில் நடத்துவான் என்று காட்டினால், அவன் சபை பொறுப்புகளுக்குத் தகுதியற்றவனாவான். (எசேக்கியேல் 34:7-10; அப்போஸ்தலர் 20:33–35; யூதா 16) ஒரு மனிதன் நியமிக்கப்பட்டப் பிறகு அவனிடம் பணம் நம்பி கொடுக்கப்படலாம், அதில் சிறிதளவை அவன் திருடத் தூண்டப்படலாம் என்பதை நாம் உணரும்போது சிபாரிசுகள் செய்வதில் எச்சரிக்கை தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது.—யோவான் 12:4-6.
11. சபை உத்தரவாதத்திற்கு ஏன் “ஒரு நூதன சீஷனை” சிபாரிசு செய்யக்கூடாது?
11 நூதன சீஷனாயிருக்கக்கூடாது, முன்னதாகச் சோதிக்கப்பட வேண்டும். (1 தீமோத்தேயு 3:6, 10) புதிதாக முழுக்காட்டப்பட்ட ஒருவர், தனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களை உண்மையான அக்கறையுடன் நிறைவேற்றுவார் என்பதை நிரூபிக்க போதிய காலமில்லை. அவருக்கு கஷ்டத்திலுள்ளவர்களைப் பற்றி அவ்வளவு அனுதாபம் இருக்காது அல்லது சக வணக்கத்தாருக்கு உதவ வேண்டிய ஞானமிருக்காது அல்லது ஒருவேளை மற்றவர்களை தாழ்வாகக்கூட நோக்கலாம். ஆகவே, ஓர் உதவி ஊழியராக மேலும் குறிப்பாக ஒரு மூப்பராக சிபாரிசு செய்யப்படுவதற்கு முன் ஒரு மனிதன் “தகுதிகள் குறித்து சோதிக்கப்பட வேண்டும்.” மேலும், நல்ல நியாயம் விசாரிக்கும் மற்றும் நம்பக்கூடிய தன்மைகள் உடையவரென்று சான்றளிக்க வேண்டும். இப்படி சோதிக்கப்படுவதற்கென குறிப்பிட்டக் கால அளவு ஒன்றும் கொடுக்கப்படவில்லை. மேலும் ஆவிக்குரிய வளர்ச்சியின் வேகத்தில் தனி நபர்கள் வேறுபடுகிறார்கள். “அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு” ஒரு புதிய மனிதனை மூப்பர்கள் அவசரப்பட்டு சிபாரிசு செய்யக்கூடாது. முதலில் அந்த மனிதன் கிறிஸ்துவைப் போன்ற தாழ்மையை வெளிப்படுத்தட்டும்.—பிலிப்பியர் 2:5-8.
உதவி ஊழியர்கள் மீது—ஒளி
12. உதவி ஊழியர்களுக்காகப் பட்டியலிடப்பட்டத் தேவைகள் அவர்களால் மட்டுந்தான் நிறைவேற்றப்பட வேண்டுமா?
12 உதவி ஊழியருக்கான சில தேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. என்றபோதிலும், அப்படிப்பட்டத் தேவைகள் மூப்பராலும் நிறைவேற்றப்படாவிட்டால், அவர்கள் சேவை செய்வதற்கு தகுதிபெற மாட்டார்கள். ஒரு கிறிஸ்தவ மனிதனாக, இந்த விஷயத்தில் நீங்கள் தகுதி பெறுகிறீர்களா?
13. நல்லொழுக்கமுள்ளவர்களாயிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
13 நல்லொழுக்கமுள்ளவர்களாயும். (1 தீமோத்தேயு 3:8) உதவி ஊழியனாக சேவை செய்ய தகுதிபெறகிற ஒரு மனிதன் பொறுப்புகளை இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மரியாதையைப் பெறக்கூடிய கனம் பொருந்திய வகையில் அவன் தன்னைத்தானே நடத்திக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் நகைச்சுவை ஏற்றுக்கொள்ளக்கூடியதானாலும், அவன் எப்பொழுதுமே அற்ப கேலியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அவன் தகுதி பெற மாட்டான்.
14. (எ) இருநாக்குள்ளவர்களாயிராமலிருப்பது எதைப் பொருள்படுத்துகிறது? (பி) சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருப்பது எதை தேவைப்படுத்துகிறது?
14 இரு நாக்குள்ளவர்களாயிராமலும், சுத்த மனச்சாட்சியை உடையவர்களாயும். (1 தீமோத்தேயு 3:8, 9) உதவி ஊழியர்களும் (மூப்பர்களும்) உண்மையுள்ளவர்களாய் புறங்கூறாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் இரு நாக்குள்ளவர்களாயிராததால், மாயக்காரர்களைப் போல் ஒருவரிடம் ஒன்று சொல்லிவிட்டு மற்றொருவரிடம் அதற்கு நேர் மாறாக சொல்ல மாட்டார்கள். (நீதிமொழிகள் 3:32; யாக்கோபு 3:17) வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் திடமான ஆதரவாளர்களாயும் “விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும்” இந்த மனிதர்கள் இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக, அப்படிப்பட்ட ஒரு மனிதனின் மனச்சாட்சி தான் நேர்மையாக இருப்பதையும், எந்த அசுத்தமான அல்லது வஞ்சகமானக் காரியமும் செய்யாமல் இருப்பதையுங் குறித்து சாட்சி சொல்ல வேண்டும். (ரோமர் 9:1; 2 கொரிந்தியர் 1:12; 4:2; 7;1) சத்தியத்தையும் தெய்வீக நியமங்களையும் பற்றிக் கொண்டாலன்றி ஒருவனும் கடவுளின் மந்தைக்கு சேவை செய்யத் தகுதி பெறுவதில்லை.
மூப்பர்களின் தகுதிகள் பேரில் ஊன்றிய கவனம்
15. யாருடையத் தகுதிகள் இப்போது ஆராயப்படுகின்றன? மேலும், குறிப்பாக இவை எதை உட்படுத்துகின்றன?
15 மூப்பர்களின் தகுதிகளைக் கூர்ந்து கவனித்தால் சில குறிப்பிட்டத் தகுதிகள் குறிப்பாக மூப்பர்களுக்குப் பொருந்தக்கூடியவை, அவை பெருமளவில் அவர்களின் மேய்க்கும் மற்றும் போதிக்கும் வேலையைச் சார்ந்தவை. ஒரு கிறிஸ்தவ மனிதனாக, இந்தத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா?
16. (எ) ஜாக்கிரதையுள்ளவர்களாக இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது? (பி) ஒரு மூப்பர் எவ்வாறு இச்சை அடக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம்?
16 ஜாக்கிரதையுள்ளவனும், இச்சையடக்கமுள்ளவனுமாய். (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:8) கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ஒரு மூப்பர் மிதமாக இருக்க வேண்டும். சோதனைகளை எதிர்ப்படும்போது சங்கீதக்காரன் ஜெபித்ததுபோல அவன் ஜெபித்தால் சமநிலையை காக்க கடவுள் அவனுக்கு உதவுவார்: “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” (சங்கீதம் 25:17) ஒரு கண்காணி கடவுளுடைய ஆவிக்காக ஜெபிக்கவும் அதன் கனிகளை, இச்சையடக்கம் உள்பட, பிரதிபலிக்கவும் வேண்டும். (லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) எண்ணங்கள், பேச்சு மற்றும் செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சபைக்கு ஆவிக்குரிய வழிநடத்துதலை அளிக்கும்போது ஒரு மூப்பர் தீவிர நிலையைத் தவிர்க்க உதவுகிறது.
17. தெளிந்த புத்தியுள்ளவனாக இருப்பது எதை உட்படுத்துகிறது?
17 தெளிந்த புத்தியுள்ளவனுமாய். (1 தீமோத்தேயு 3:2) ஒரு மூப்பர் நல்லறிவுடையவனாகவும், காலமறிந்து செயலாற்றுகிறவனாகவும், விவேகமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். அவன் பேச்சிலும் செயலிலும் நோக்கம் நிறைந்தவனாகவும் பகுத்தறிவுடையவனாகவும் இருக்க வேண்டும். அவனது தாழ்மையான, சமநிலையான யோசனையானது தெய்வீக ஞானத்தையும் அவன் ஆர்வமாக படித்து வரவேண்டிய, யெகோவாவின் வார்த்தையின் ஆரோக்கியமான போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.—ரோமர் 12:3; தீத்து 2:1.
18. யோக்கியதையுள்ளவனாக (ஒழுங்குள்ளவனாக) இருப்பதற்கு ஒரு மூப்பருக்கு என்ன தேவைப்படுகிறது?
18 யோக்கியதையுள்ளவனுமாய். (1 தீமோத்தேயு 3:2) இங்கு உபயோகப்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை 1 தீமோத்தேயு 2:10-ல் “தகுதியான” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு மூப்பர் கண்ணியமானதும் தகுதியானதுமான ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக அவர் நேரந்தவறாதவராக இருக்க வேண்டும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பதிவுக் குறிப்புகளை பாதுகாப்பதை ஒரு பெரியக் காரியமாக கருதவில்லை போலிருக்கிறது. மேலும் இன்று ஒரு கண்காணி ஒரு மிகச் சிறந்த கணக்கராகவோ குமாஸ்தாவாகவோ இருக்கத் தேவை இல்லை. இது குறித்துத் தேவைப்பட்டக் காரியங்களை உதவி ஊழியர்கள் கவனிக்கலாம். ஆனால் “தகுதியான” என்பதன் கிரேக்க பதம் நன்னடத்தையைக் குறிக்கலாம். மேலும், தகுதியற்றவனாக அல்லது கண்ணியமற்றவனாக ஒருவர் இருந்தால், அவர் நிச்சயமாகவே ஒரு மூப்பராக இருப்பதற்குத் தகுதிபெற மாட்டார்.—1 தெசலோனிக்கேயர் 5:14; 2 தெசலோனிக்கேயர் 3:6-12; தீத்து 1:10.
19. அந்நியரை உபசரிக்கிறவனாக இருப்பதால், ஒரு மூப்பர் என்ன செய்கிறார்?
19 உபசரிக்கிறவனுமாய். (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:8) ஒரு மூப்பர் “அந்நியரை உபசரிக்க நாடுகிறார்.” (ரோமர் 12:13; எபிரெயர் 13:2) “உபசரிக்கும்” என்பதற்கான கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக “அந்நியர் மேல் அதிக அன்புள்ள” என்ற அர்த்தமுள்ளதாகும். ஆகவே உபசரிக்கும் தன்மையுடைய ஒரு மூப்பர் புதியவர்களை, பொருள் வசதி மிகுந்தவர்கள் மீது எப்படி அக்கறை காண்பிக்கிறாரோ அதே விதமாய் ஏழைகள் மீதும் காண்பித்து, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரவேற்கிறார். கிறிஸ்தவத்தின் நலன்களுக்காக பயணம் செய்கிறவர்களை அவர் உபசரிக்கிறார். மேலும், “தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி” அவர்களை அவர் வழியனுப்புகிறார். (3 யோவான் 5-8) உண்மையிலேயே, ஒரு மூப்பர் குறிப்பாக சகவிசுவாசிகளை அவர்கள் தேவைகளுக்கேற்ப அவருடைய சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உபசரிக்கிறார்.—யாக்கோபு 2:14-17.
20. எந்த வழிகளில் ஒரு மூப்பர் போதிக்கத் தகுதிபெற்றிருக்க வேண்டும்?
20 போதக சமர்த்தனுமாய். (1 தீமோத்தேயு 3:2) ஆவிக்குரியப் போதகராக, ஒரு மூப்பரின் திறமை, உலகப்பிரகாரமான ஞானத்தினாலோ அல்லது மனோ இயல்பினாலோ வருவதில்லை. (1 கொரிந்தியர் 2:1-5, 13) “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லவும், எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் . . . உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக் கொள்ளுகிறவனுமாயிருக்கிறப் படியால்” அது வருகிறது. (தீத்து 1:9; அப்போஸ்தலர் 20:18-21, 26, 27-உடன் ஒப்பிட்டு பாருங்கள்.) அவர் ‘எதிர் பேசுகிறவர்களுக்கு சாந்தமாய் உபதேசிக்கக்’ கூடியவராக இருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 2:23-26) ஒரு மூப்பர் சபையிலேயே மிகச் சிறந்தப் பொதுப் பேச்சாளராக இல்லாவிட்டாலும், வேதாகமத்தைப் படிக்கும் விசுவாசிகளுக்குப் போதித்து ஆலோசனை வழங்கும் அளவிற்கு திறனுள்ளவராக அவர் கடவுளுடைய வார்த்தையின் ஒரு சிறந்த மாணவனாக இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 11:6) தெய்வீகமான வாழ்க்கை நடத்த குடும்பங்களுக்கும் தனியாட்களுக்கும் உதவும் “ஆரோக்கியமான உபதேசத்தை” வழங்க அவர் தகுதி பெற வேண்டும்.—தீத்து 2:1-10.
21. (எ) ஏன் ஒரு மூப்பர் அடியாதவராக இருக்கிறார் என்று சொல்லலாம்? (பி) பொறுமையுள்ளவனாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (சி) சண்டைபண்ணாதவனாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
21 அடிக்கிறவனாயிராமல் பொறுமையுள்ளவனாய், சண்டைபண்ணாதவனுமாய். (1 தீமோத்தேயு 3:3; தீத்து 1:7) சமாதானப் பிரியனாதலால், ஒரு மூப்பர் மற்றவரை சரீரப் பிரகாரமாக அடிப்பதில்லை, கடுமையாகப் பேசியோ திட்டியோ அவர்களை அதட்டி அடக்குவதில்லை. (2 கொரிந்தியர் 11:20-உடன் ஒப்பிட்டு பாருங்கள்.) (அவர் குடிவெறியில் அடியாதவர் என்று முன்பு குறிப்பிடப்பட்டது, அடிக்கடி சண்டைகளுக்கு வழிநடத்தும் மதுபான துர்ப்பிரயோகத்தை அவர் தவிர்ப்பாரென்றுக் காட்டுகிறது.) ஆட்சி ஆதிக்கம் செலுத்துபவனும், மற்றும் சந்தோஷப்படுத்த கடினமானவனுமாயிராமல், “பொறுமையுள்ளவனாக” (அல்லது “விட்டுக் கொடுப்பவனாக”) இருப்பதால், சிறிய காரியங்களை பெரிய பிரச்னைகளாக அவர் ஆக்குவதில்லை. (1 கொரிந்தியர் 9:12, பிலிப்பியர் 4:5; 1 பேதுரு 2:18) ஒரு மூப்பர் சண்டை பண்ணாதவனாக அல்லது சச்சரவு செய்யாதவனாக இருப்பதால், அவர் வாக்குவாதங்களைத் தவிர்த்து “கோபத்திற்கு இடங்கொடாமல்” இருப்பார்.—தீத்து 3:2; யாக்கோபு 1:19, 20.
22. ஒரு மூப்பர் தன் இஷ்டப்படி செய்யாதவனாயிருக்க வேண்டியதன் அவசியம் எதை சுட்டிக் காட்டுகிறது?
22 தன் இஷ்டப்படி செய்யாதவனும். (தீத்து 1:7) சொல்லர்த்தமாக, இது “தன்னை சந்தோஷப்படுத்திக் கொள்ளாதவனும்” என்று அர்த்தப்படுகிறது. (2 பேதுரு 2:10-உடன் ஒப்பிட்டு பாருங்கள்.) ஒரு மூப்பர் பிடிவாதமாக இல்லாமல், தன் திறமைகளைக் குறித்து தாழ்மையான மனநிலை கொண்டிருக்க வேண்டும். மற்ற எவரைக் காட்டிலும் காரியங்களை தான் அதிகத் திறம்பட கையாளுகிறோமென்று எண்ணாமல், பணிவுடன் உத்தரவாதங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுகிறார், அநேக ஆலோசனைக்காரரை நன்மையாய் மதிக்கிறார்.—எண்ணாகமம் 11:26-29; நீதிமொழிகள் 11:14; ரோமர் 12:3, 16.
23. (எ) “நல்லது மேல் பிரியமுள்ளவன்” என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்? (பி) நீதிமானாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
23 நல்லது மேல் பிரியமுள்ளவனும், நீதிமானும். (தீத்து 1:8) ஒரு மூப்பராக தகுதிபெற, ஒருவர் நல்லது மேல் பிரியமுள்ளவராயும் நீதிமானாயும் இருக்க வேண்டும். நல்லதை விரும்புகிறவர், யெகோவாவின் பார்வையில் எது நல்லதோ அதை விரும்புகிறார், தயவான அதிக உதவி அளிக்கும் வேலைகளைச் செய்கிறார், மேலும் மற்றவரின் நல்ல தன்மைகளைப் போற்றுகிறார். (லூக்கா 6:35; அப்போஸ்தலர் 9:36, 39-உடன் ஒப்பிட்டு பாருங்கள்; 1 தீமோத்தேயு 5:9, 10) நீதிமானாய் இருப்பது தேவனுடைய சட்டங்களுக்கும் தராதரங்களுக்கும் ஒத்திசைந்திருப்பதாகும். மற்ற காரியங்கள் போக, அப்படிப்பட்ட ஒரு மனிதர் பாரபட்சமற்றவராகவும், மனதில் நீதியான, நெறிமுறையான மற்றும் நன்மையான காரியங்களைக் கொண்டிருப்பார். (லூக்கா 1:6; பிலிப்பியர் 4:8, 9; யாக்கோபு 2:1-9) நல்லதை நாடுவது, நீதி தேவைப்படுத்துவதற்கும் அப்பால் செல்கிறது, இதில் நல்ல தன்மை நீதியிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஆகையால் நல்லதை நாடுபவர் அவரிடமிருந்து (நீதியானபடி) எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் அதிகமாக மற்றவருக்குச் செய்கிறார்.—மத்தேயு 20:4, 13-15; ரோமர் 5:7.
24. உண்மையுள்ளவனாக இருப்பது எதைத் தேவைப்படுத்துகிறது?
24 உண்மையுள்ளவனும். (தீத்து 1:8) மூப்பராக இருக்கத் தகுதிபெற்ற ஒரு மனிதர் தேவனிடமாக முறிக்கப்பட முடியாத பக்தியை காத்துக் கொள்கிறார், மேலும் தன் உத்தமத்தன்மை எவ்வகையில் சோதிக்கப்பட்டாலும் தேவ நீதியைப் பற்றியிருக்கிறார். அவரிடம் யெகோவா என்ன எதிர்பார்க்கிறாரோ அதைச் செய்கிறார், இது ஓர் உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபியாக சேவை செய்வதையும் உட்படுத்துகிறது.—மத்தேயு 24:14; லூக்கா 1:74, 75; அப்போஸ்தலர் 5:29; 1 தெசலோனிக்கேயர் 2:10.
தகுதிகளை பெறுதல்
25. இப்போது கலந்தாலோசிக்கப்பட்டத் தகுதிகள் யாருக்குத் தேவைப்படுகிறது? மேலும், அப்படிப்பட்டத் தகுதிகளை எப்படி அடையலாம்?
25 இதுவரை கலந்தாலோசிக்கப்பட்டத் தகுதிகளில் பெரும்பாலானவை, யெகோவாவின் ஒவ்வொரு சாட்சியும் பெற்றிருக்க வேண்டிய காரியங்களை உட்படுத்துகின்றன. இவை, ஒவ்வொருவரின் படிப்பு, முயற்சி, நல்ல கூட்டுறவு மற்றும் ஜெபத்தின் மீது வரும் கடவுளின் ஆசீர்வாதத்தின் மூலமாக அடையப்படலாம். தனிப்பட்டவர்கள் மற்றவற்றைப் பார்க்கிலும் சில தகுதிகளில் அதிக திறமை வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நியாயமான அளவில், உதவி ஊழியர்களும் மூப்பர்களும் அவர்களுடைய குறிப்பிட்ட சிலாக்கியத்திற்கு எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும்.
26. கிறிஸ்தவ ஆண்கள் ஏன் சபை உத்தரவாதத்திற்குத் தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கிறார்கள்?
26 எல்லா யெகோவாவின் சாட்சிகளும் கடவுளுடைய சேவையில் சாத்தியமான அனைத்தையும் செய்ய விரும்ப வேண்டும். இந்த ஆவி கிறிஸ்தவ ஆண்கள் சபை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கச் செய்கிறது. நீங்கள் ஒப்புகொடுத்து முழுக்காட்டப்பட்ட ஓர் ஆணா? அப்படியானால், கண்காணிப்பை விரும்பி சேவை செய்ய தகுதி பெற எல்லா முயற்சியும் செய்யுங்கள்! (w90 9/1)
[அடிக்குறிப்புகள்]
a மார்ச் 15, 1983 ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 29-ல் “வேதப் பூர்வமான விவாகரத்து” என்ற உபதலைப்பின் கீழ் பாருங்கள்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ சபை பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஏன் முழுக்காட்டப்பட்ட ஆண்களுக்கு இப்போது அதிக தேவை இருக்கிறது?
◻ உதவி ஊழியர்கள் கொண்டிருக்க வேண்டிய சில தகுதிகள் யாவை?
◻ மூப்பர்கள் நிறைவேற்ற வேண்டிய சில தேவைகள் என்ன?
◻ தன் குடும்பத்தை நன்கு நடத்த ஏன் ஒரு மூப்பர் அறிந்திருக்க வேண்டும்?
◻ சபை பொறுப்புகளுக்கு தங்களைத் தாங்களே அர்ப்பணிக்க கிறிஸ்தவ ஆண்களைத் தூண்டுவது என்ன?
[பக்கம் 16, 17-ன் படம்]
மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பைபிள் நியமங்களுக்கு ஏற்ப தங்கள் வீட்டாரின் பேரில் தலைமை வகிக்க வேண்டும்