“எல்லா மனிதருக்கும் எல்லா சாந்த குணத்தையும்” காண்பியுங்கள்
“நியாயத்தன்மையுடன் இருந்து எல்லா மனிதருக்கும் எல்லா சாந்த குணத்தையும் காண்பிக்க அவர்களுக்கு எப்போதும் நினைவூட்டு.”—தீத்து 3:2, NW.
1. சாந்த குணத்தைக் காட்டுவது ஏன் எப்போதுமே எளிதல்ல?
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 11:1) கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் இந்த அறிவுரையைப் பின்பற்ற மும்முரமாக பிரயாசப்படுகிறார்கள். உண்மையில் இது சுலபமல்ல, ஏனென்றால் கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு இசைவாக இல்லாத தன்னலமான ஆசைகளையும் இயல்புகளையும் முதல் மனித பெற்றோரிடமிருந்து நாம் சுதந்தரித்திருக்கிறோம். (ரோமர் 3:23; 7:21-25) ஆனாலும், முயற்சி செய்தால் நம் அனைவராலேயும் சாந்த குணத்தைக் காட்ட முடியும். இதற்கு நம்முடைய சொந்த மனவுறுதியை மாத்திரம் நம்பியிருப்பது போதாது. அப்படியானால், அதைவிட இன்னும் அதிகமாக என்ன தேவைப்படுகிறது?
2. நாம் எவ்வாறு “எல்லா மனிதருக்கும் எல்லா சாந்த குணத்தையும்” காண்பிக்க முடியும்?
2 கடவுள் காட்டும் சாந்த குணம், பரிசுத்த ஆவியின் கனியில் ஒரு பாகம். கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியின் வழிநடத்துதலுக்கு எந்தளவுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோமோ அந்தளவுக்கு அதன் கனியும் நம்மில் அதிகமதிகமாக வெளிப்படும். அப்போது மட்டுமே நம்மால் எல்லா மனுஷருக்கும் “எல்லா சாந்த குணத்தையும்” காண்பிக்க முடியும். (தீத்து 3:2, NW) நாம் எவ்வாறு இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நம்மோடு கூட்டுறவு கொள்கிறவர்கள் ‘புத்துணர்ச்சியைக் கண்டடைய’ உதவலாம் என்பதை ஆராய்வோமாக.—மத்தேயு 11:29, NW; கலாத்தியர் 5:22, 23.
குடும்பத்தில்
3. குடும்பத்தில் காணப்படும் என்ன சூழ்நிலை உலக ஆவியை படம்பிடித்துக் காட்டுகிறது?
3 சாந்த குணத்தைக் காண்பிப்பது அத்தியாவசியமாக இருக்கும் ஒரு இடம் குடும்பமாகும். சாலை விபத்துக்கள், மலேரியா ஆகிய இரண்டையும்விட குடும்ப வன்முறையே பெண்களின் ஆரோக்கியத்துக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உதாரணமாக, இங்கிலாந்திலுள்ள லண்டனில் அறிக்கை செய்யப்படும் வன்முறைமிக்க குற்றச்செயல்களில் நான்கில் ஒன்று வீட்டில்தான் நடைபெறுகிறது. ‘கூக்குரலோடும் தூஷணத்தோடும்’ தங்கள் உணர்ச்சிகளை கொட்டித்தீர்க்கும் நபர்களை போலீஸார் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. ‘மனக்கசப்பு’ தங்கள் மணவாழ்க்கையை நாசமாக்க சில தம்பதிகள் அனுமதித்திருப்பது அதைவிட படுமோசம். விசனகரமாக, இந்த எல்லா செயல்களும் ‘உலகத்தின் ஆவியையே’ படம்பிடித்துக் காட்டுகிறது, ஆனால் கிறிஸ்தவ குடும்பங்களில் இத்தகைய நடத்தைக்கு இடம் கிடையாது.—எபேசியர் 4:31; 1 கொரிந்தியர் 2:12.
4. சாந்த குணம் குடும்பத்தின்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்?
4 உலக மனப்பான்மைகளை எதிர்க்க நமக்கு கடவுளுடைய ஆவி தேவை. “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) அன்பு, தயவு, தன்னடக்கம், நீடிய பொறுமை ஆகியவை கணவர்களையும் மனைவிகளையும் ஒற்றுமையுடன் வாழும்படி பலப்படுத்துகின்றன. (எபேசியர் 5:33) சாந்த குணம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கச் செய்கிறது; அநேக குடும்பங்களை சீரழித்துவரும் சண்டை சச்சரவுகளிலிருந்து மாறுபட்ட ஓர் இனிய சூழலை உருவாக்குகிறது. ஒரு நபர் என்ன சொல்கிறார் என்பது முக்கியம் என்றாலும், அவர் அதை எப்படி சொல்கிறார் என்பதே அவருடைய உள்ளான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. கவலைகளும் சஞ்சலங்களும் சாந்தமாக வெளிப்படுத்தப்படும்போது சூழ்நிலையின் இறுக்கம் தளர்கிறது. ஞானவானான சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.”—நீதிமொழிகள் 15:1.
5. மத சம்பந்தமாக பிளவுபட்ட குடும்பத்தில் சாந்த குணம் எவ்வாறு உதவலாம்?
5 மத சம்பந்தமாக பிளவுபட்டிருக்கும் குடும்பங்களில் விசேஷமாக சாந்த குணம் முக்கியம். சாந்த குணமும் தயவான செயல்களும் கைகோர்க்கையில் வெறுப்பை காண்பிப்பவர்களையும் யெகோவாவின் பக்கம் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். பேதுரு கிறிஸ்தவ மனைவிகளுக்கு இந்த ஆலோசனையைக் கொடுத்தார்: “உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.”—1 பேதுரு 3:1-4.
6. சாந்த குணத்தைக் காட்டுவது எவ்வாறு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள பந்தத்தை பலப்படுத்தலாம்?
6 குறிப்பாக யெகோவா மீதுள்ள அன்பு குறைவுபடும்போது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படலாம். ஆனால் கிறிஸ்தவ குடும்ப அங்கத்தினர்கள் சாந்த குணத்தைக் காட்டுவது அத்தியாவசியம். தகப்பன்மார்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) குடும்பத்தில் சாந்தம் தவழும்போது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள பந்தம் மேலும் பலப்படுகிறது. ஐந்து பிள்ளைகளில் ஒருவரான டீன் தன் அப்பாவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “அப்பா ரொம்ப சாந்தமானவர். நான் டீனேஜ் பருவத்தில் இருந்தபோதுகூட அவரோடு சண்டை போட்டதாக எனக்கு நினைவே இல்லை. மன அமைதியிழந்த சமயத்திலும்கூட அப்பா சாந்தத்தின் இலக்கணமாக திகழ்ந்தார். என்னை கண்டிக்க சிலசமயம் என்னை ரூமில் அடைத்து வைத்திருக்கிறார் அல்லது எனக்கு பிடித்த காரியங்களை செய்யவிடாமல் தடுத்திருக்கிறார். ஆனாலும் நாங்கள் ஒருபோதும் வாக்குவாதம் செய்தது கிடையாது. அவர் எங்களுக்கு அப்பாவாக மட்டும் இருக்கவில்லை, நண்பராகவும் இருந்தார். ஆகவே அவருடைய மனம் புண்படும்படி நடக்க நாங்கள் விரும்பவில்லை.” ஆம், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் பந்தத்தை பலப்படுத்த சாந்த குணம் உண்மையாகவே உதவுகிறது.
நம்முடைய ஊழியத்தில்
7, 8. வெளி ஊழியத்தில் சாந்த குணத்தைக் காட்டுவது ஏன் அவசியம்?
7 சாந்த குணம் அதிக முக்கியமாக தேவைப்படும் மற்றொரு இடம் வெளி ஊழியமாகும். மற்றவர்களுக்கு நாம் ராஜ்ய செய்தியை சொல்லிவருகையில், வித்தியாசமான மக்களை சந்திக்கிறோம். நாம் சொல்லும் நம்பிக்கையின் செய்தியை சிலர் சந்தோஷத்தோடு கேட்கிறார்கள். மற்றவர்களோ பல்வேறு காரணங்களுக்காக அதைக் கேட்காமல் சிடுசிடுக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்தான், பூமியின் கடைமுனை மட்டும் சாட்சி கொடுக்க வேண்டும் என்ற கட்டளையை நிறைவேற்றுவதற்கு நமக்கு சாந்த குணம் பெரிதும் கைகொடுக்கிறது.—அப்போஸ்தலர் 1:8; 2 தீமோத்தேயு 4:5.
8 அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கர்த்தராகிய தேவனை [“கிறிஸ்துவை,” NW] உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் [“ஆழ்ந்த மரியாதையோடும்,” NW] உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) கிறிஸ்துவை நம்முடைய முன்மாதிரியாக நாம் பெரிதும் மதிப்பதால், கோபத்தில் பொரிந்து தள்ளுகிறவர்களிடம் சாந்தத்தோடும் மரியாதையோடும் சாட்சி கொடுக்க கவனமாய் இருக்கிறோம். இப்படி நடந்துகொள்வதால் அருமையான பலன்கள் கிடைக்கின்றன.
9, 10. வெளி ஊழியத்தில் சாந்த குணம் எவ்வளவு மதிப்புள்ளது என்பதைக் காட்ட ஓர் அனுபவத்தைக் கூறவும்.
9 கீத் என்பவரின் வீட்டுக் கதவை யாரோ தட்டியபோது அவரது மனைவி கதவை திறந்தாள். கீத் உள்ளேயே இருந்துவிட்டார். வந்திருந்தவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை அறிந்தவுடன், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகளை கொடுமைப்படுத்துவதாக கீத்தின் மனைவி கோபத்தில் கன்னாபின்னாவென்று திட்டினாள். அந்தச் சகோதரரோ அமைதியாக கேட்டார். பிறகு சாந்தமாக, “நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிருக்கீங்க. யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன என்பதை தயவுசெய்து நான் உங்களுக்கு எடுத்துக்காட்டட்டுமா?” என்று கேட்டார். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கீத் உள்ளேயிருந்து வந்து உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
10 சகோதரர் போன பிற்பாடு, வீட்டுக்கு வந்தவரிடம் கோபமாக நடந்துகொண்டதற்காக அவர்கள் இருவருமே வருத்தப்பட்டார்கள். அவருடைய சாந்தம் அவர்களை நெகிழ வைத்தது. அந்தச் சகோதரர் ஒரு வாரம் கழித்து அவர்களைப் பார்க்க வந்தது அவர்களுக்கு ஆச்சரியமாயிருந்தது. கீத்தும் அவரது மனைவியும் அவரை உள்ளே அழைத்து, அவருடைய நம்பிக்கைக்கான வேதப்பூர்வ ஆதாரத்தை விளக்குவதற்கு அனுமதித்தார்கள். “அடுத்த இரண்டு ஆண்டுகளில், மற்ற யெகோவாவின் சாட்சிகள் பேசுவதையும் நிறைய கேட்டோம்” என்று அவர்கள் பின்பு சொன்னார்கள். பைபிளை படிக்க அத்தம்பதியினர் ஒப்புக்கொண்டனர், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதலும் பெற்றனர். கீத்தையும் அவருடைய மனைவியையும் முதலில் சந்தித்த அந்தச் சகோதரருக்கு எப்பேர்ப்பட்ட ஒரு வெகுமதி! அந்தச் சகோதரர் அத்தம்பதியை பல வருடங்களுக்குப் பின் சந்தித்தபோது அவ்விருவரும் அவருடைய ஆவிக்குரிய சகோதரரும் சகோதரியுமாக மாறியிருந்தார்கள். சாந்த குணம் உண்மையில் வெற்றி காணும்.
11. எந்த விதத்தில் சாந்த குணம் ஒருவர் கிறிஸ்தவ சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை எளிதாக்கலாம்?
11 ஒரு போர்வீரனாக இருந்த ஹெரால்ட், வாழ்க்கையின் அனுபவங்களால் விரக்தியடைந்திருந்தார், கடவுள் நம்பிக்கையையும் இழந்தார். போதாததற்கு, குடிவெறியில் வண்டி ஓட்டிய ஒருவரால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஹெரால்ட் நிரந்தரமாக ஊனமடைந்தார். யெகோவாவின் சாட்சிகள் ஹெரால்டின் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் இனி வரவே கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். ஆனால், ஹெரால்டின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி குடியிருந்த ஒருவர் ஆர்வம் காட்டியதால் அவரை சந்திக்க பில் என்ற யெகோவாவின் சாட்சி ஒரு நாள் சென்றார். தவறுதலாக ஹெரால்டின் வீட்டுக் கதவை பில் தட்டிவிட்டார். கைத்தடிகளை ஊன்றிக்கொண்டு வந்து ஹெரால்ட் கதவை திறந்தபோது, தவறுதலாக வீட்டுக் கதவைத் தட்டியதற்காக உடனடியாக அவரிடம் பில் மன்னிப்பு கேட்டார்; தான் அருகிலிருந்த ஒரு வீட்டுக்குத்தான் வந்ததாக விளக்கினார். ஹெரால்ட் என்ன செய்தார்? யெகோவாவின் சாட்சிகள் ஒன்றாக சேர்ந்து மிக குறுகிய காலத்தில் ஒரு புதிய ராஜ்ய மன்றத்தைக் கட்டி முடித்ததை டெலிவிஷன் செய்தியில் ஹெரால்ட் பார்த்திருந்தார்; இத்தனை அநேகர் ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்தது இவரை மிகவும் கவர்ந்தது, இதனால் சாட்சிகளைப் பற்றிய இவருடைய எண்ணம் மாறியது. இதெல்லாம் பில்லுக்கு தெரிந்திருக்கவில்லை. தவறுதலாக கதவைத் தட்டியதற்காக, பில் மிகப் பணிவுடன் மன்னிப்பு கேட்ட விதமும், அவருடைய சாந்தமான இனிய குணமும் ஹெரால்டை ரொம்பவும் நெகிழ வைத்தது, இனிமேல் யெகோவாவின் சாட்சிகள் வரும்போது அவர்களை சந்திக்க தீர்மானித்தார். பைபிளை படித்தார், முன்னேற்றம் செய்தார், யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஊழியனாக ஆனார்.
சபையில்
12. உலகப்பிரகாரமான என்ன குணங்களை கிறிஸ்தவ சபையிலுள்ளோர் எதிர்க்க வேண்டும்?
12 சாந்த குணம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் மூன்றாவது இடம் கிறிஸ்தவ சபையாகும். இன்றைய சமுதாயத்தில் சண்டைகள் நிகழ்வது சகஜம். உலகப்பிரகாரமான நோக்குநிலை உள்ளவர்கள் மத்தியில் வாய்ச் சண்டைகளும் தர்க்கங்களும் விவாதங்களும் வழக்கமாக நடைபெறுகின்றன. அவ்வப்போது, இந்த உலகப்பிரகாரமான குணங்கள் கிறிஸ்தவ சபைக்குள்ளேயும் மெதுவாக நுழைந்துவிடுகின்றன. இதனால் சண்டை சச்சரவுகளும் வாக்குவாதங்களும் எழும்புகின்றன. இவற்றை சரிசெய்ய வேண்டிய நிலை வரும்போது பொறுப்புள்ள சகோதரர்கள் மிகவும் விசனப்படுகிறார்கள். ஆனால் யெகோவா மீதும் அவர்களுடைய சகோதரர்கள் மீதும் அவர்களுக்கிருக்கும் அன்பின் காரணமாக தவறு செய்பவர்கள் திருந்துவதற்கு உதவுகிறார்கள்.—கலாத்தியர் 5:25, 26.
13, 14. ‘எதிர்பேசுகிறவர்களுக்கு சாந்தமாய் உபதேசிப்பதால்’ என்ன பலன் கிடைக்கலாம்?
13 முதல் நூற்றாண்டில் பவுலும் அவருடைய கூட்டாளியாகிய தீமோத்தேயுவும் சபையிலிருந்த சிலரிடமிருந்து பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள். ‘கனவீனமான’ பாத்திரங்களைப் போலிருந்தவர்களுக்கு எதிராக கவனமாயிருக்கும்படி தீமோத்தேயுவை பவுல் எச்சரித்தார். ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், [“கனிவு காட்டுகிறவராகவும்,” பொது மொழிபெயர்ப்பு] போதக சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்களுக்கு சாந்தமாய் உபதேசிக்க வேண்டும்’ என்றும் பவுல் எழுதினார். சிலர் நம்மை சீண்டிப்பார்க்கும் போதுகூட நாம் சாந்தமாய் இருந்தால், குறைகூறுபவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை மீண்டும் பரிசீலித்துப் பார்க்க தூண்டப்படுவார்கள். அப்போது, பவுல் மேலும் எழுதிய பிரகாரம், “சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருள”க்கூடும். (2 தீமோத்தேயு 2:20, 21, 24-26) கனிவு காட்டுவதையும் சகித்திருப்பதையும் பவுல் சாந்தத்தோடு சம்பந்தப்படுத்தி பேசியதை கவனியுங்கள்.
14 பவுல் தான் பிரசங்கித்ததை கடைப்பிடித்தார். கொரிந்து சபையில் ‘மகா பிரதான அப்போஸ்தலர்களை’ கையாண்டபோது, அவர் சகோதரர்களை இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” (2 கொரிந்தியர் 10:1; 11:5) பவுல் உண்மையாகவே கிறிஸ்துவைப் பின்பற்றினார். இந்தச் சகோதரர்களிடம் கிறிஸ்துவின் “சாந்தத்தை” முன்னிட்டு வேண்டிக்கொண்டதை கவனியுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாரத்தோடு அகந்தையாக பேசும் மனநிலையை அவர் தவிர்த்தார். அவருடைய அறிவுரை சபையில் இருந்த நல் இருதயமுள்ளவர்களை கவர்ந்ததில் சந்தேகமில்லை. உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை சரிசெய்து சபையில் சமாதானமும் ஐக்கியமும் நிலவ அவர் உதவினார். இந்த முறையை அல்லவா நாம் அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்? விசேஷமாக மூப்பர்கள், கிறிஸ்துவையும் பவுலையும் பின்பற்ற வேண்டும்.
15. ஆலோசனை கொடுக்கும்போது சாந்த குணம் ஏன் முக்கியம்?
15 சபையின் சமாதானமும் ஒற்றுமையும் குலைக்கப்படுகையில் மாத்திரமே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றில்லை. உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதற்கு வெகு முன்னரே, சகோதரர்களுக்கு அன்புள்ள வழிநடத்துதல் தேவைப்படுகிறது. “சகோதரரே, ஒருவன் ஒரு தவறான படி எடுப்பதை உணர்ந்துகொள்வதற்கு முன்பே, ஆவிக்குரிய தகுதியுள்ளவர்களாகிய நீங்கள் அப்படிப்பட்டவனைச் . . . சீர்பொருந்தப்பண்ணுங்கள்” என்பதாக பவுல் ஊக்கப்படுத்தினார். ஆனால் எப்படி? “நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும்படி,” “சாந்தமுள்ள ஆவியோடே” அதை செய்ய வேண்டும். (கலாத்தியர் 6:1; NW) “சாந்தமுள்ள ஆவி”யைக் காத்துக்கொள்வது எப்போதும் எளிதாக இருப்பதில்லை. இது ஏனென்றால் பொறுப்பான ஸ்தானத்தில் உள்ளவர்கள் உட்பட எல்லா கிறிஸ்தவர்களும் பாவமுள்ள மனச்சாய்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும், தவறு செய்கிறவர் தேவையான மாற்றங்களைச் செய்வதை எளிதாக்குவது சாந்த குணமே.
16, 17. அறிவுரையைப் பின்பற்றுவதில் எவ்வித தயக்கத்தையும் தகர்க்க எது உதவலாம்?
16 “சீர்பொருந்தப்பண்ணு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வேர்சொல், முறிந்துபோன எலும்புகளை மீண்டும் நேராக பொருத்துவதையும்கூட குறிக்கிறது. இது அதிக வலியை ஏற்படுத்தும் ஒரு செயல்முறையே. முறிந்த எலும்பை சரியாக வைத்துக் கட்டுகிற நம்பிக்கையூட்டும் மருத்துவர் இந்தச் செயல்முறையின் நன்மைகளைக் குறித்து உறுதியளிக்கிறார். அவருடைய அமைதியான தோரணை ஆறுதலளிக்கிறது. கட்டுப்போடுவதற்கு முன்னால் அவர் பேசும் ஒரு சில வார்த்தைகள் பயங்கரமான வலியையும் தணிக்க உதவுகிறது. அதுபோலவே ஆவிக்குரிய விதமாக சீர்பொருந்தப்பண்ணுவதும் வேதனையளிப்பதாக இருக்கலாம். ஆனால் சாந்த குணம் அதை ஏற்றுக்கொள்வதை சுலபமாக்குகிறது. இதனால் உறவுகள் மீண்டும் சுமுகமாகின்றன, தவறு செய்கிறவர் தன் போக்கை மாற்றிக்கொள்வதற்கு வழியும் பிறக்கிறது. ஆரம்பத்தில் ஆலோசனையை ஏற்க மறுத்தால்கூட, உதவி அளிப்பவரின் சாந்த குணம், பயனுள்ள பைபிள் அறிவுரையைப் பின்பற்றுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் எந்தவித தயக்கத்தையும் தகர்த்துவிடும்.—நீதிமொழிகள் 25:15.
17 சீர்பொருந்த நாம் மற்றவர்களுக்கு உதவுகையில், கொடுக்கப்படும் ஆலோசனையை அவர்கள் குறைகூறுதலாக எண்ணும் ஆபத்து எப்போதும் இருக்கிறது. ஓர் எழுத்தாளர் இவ்வாறு எழுதுகிறார்: “மற்றவர்களை கடிந்துகொள்ளும்போதுதான் மட்டுக்குமீறி அதிகாரத்தோடு பேசும் அபாயம் இருக்கிறது, எனவே அப்போதுதான் ரொம்பவே சாந்த குணத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.” ஆகவே, ஆலோசனை கூறும் கிறிஸ்தவர், மனத்தாழ்மையிலிருந்து மலரும் சாந்த குணத்தை வளர்த்துக்கொள்ளும்போது மட்டுக்குமீறி அதிகாரத்தோடு பேசும் ஆபத்தை தவிர்ப்பார்.
“எல்லா மனுஷருக்கும்”
18, 19. (அ) உலக அதிகாரிகளிடம் சாந்த குணத்தைக் காட்டுவது கிறிஸ்தவர்களுக்கு ஏன் கடினமாக இருக்கலாம்? (ஆ) அதிகாரிகளிடம் சாந்த குணத்தைக் காட்டுவதற்கு கிறிஸ்தவர்களுக்கு எது உதவும், அதனால் என்ன பலன் கிடைக்கலாம்?
18 உலகப்பிரகாரமான அதிகாரிகளோடு சேர்ந்து காரியங்களை செய்கையில் சாந்த குணத்தை காட்டுவது கடினமாக இருப்பதாக அநேகர் உணருகின்றனர். அதிகாரிகள் சிலர் கடுமையாகவும் சகமனிதரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாமலும் நடந்துகொள்கிறார்கள், இது நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். (பிரசங்கி 4:1; 8:9) ஆனால் யெகோவாவிடம் நமக்கிருக்கும் அன்பு, அவரது உன்னத அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலை அரசாங்க அதிகாரிகளிடம் காட்டவும் நமக்கு உதவும். (ரோமர் 13:1, 4; 1 தீமோத்தேயு 2:1, 2) யெகோவாவின் வணக்கத்தின் பாகமாக நாம் பகிரங்கமாக அவரைப் பற்றி பேசுவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டுப்படுத்த முயன்றாலும், நம்முடைய துதியின் பலிகளைச் செலுத்துவதற்கான மற்ற வழிகளை சந்தோஷமாக தேடிக் கண்டுபிடிப்போம்.—எபிரெயர் 13:15.
19 எந்தச் சூழ்நிலையிலும் நாம் வலுச்சண்டைக்கு நிற்க மாட்டோம். நீதியுள்ள நியமங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல், அதேசமயத்தில் நியாயமானவர்களாக நடந்துகொள்ள நாம் கடினமாக முயலுவோம். இந்த விதமாகத்தான், நம்முடைய சகோதரர்கள், உலகம் முழுவதிலும் 234 நாடுகளில் வெற்றிகரமாக தங்கள் ஊழியத்தை செய்து வருகிறார்கள். “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்கவும்” வேண்டும் என்ற பவுலின் புத்திமதிக்கு நாம் கீழ்ப்படிகிறோம்.—தீத்து 3:1, 2.
20. சாந்த குணம் உள்ளவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?
20 சாந்த குணத்தை காண்பிக்கிறவர்களுக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:5) அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்கள் சாந்த குணத்தைக் காத்துக்கொள்ளும்போது, சந்தோஷத்தையும் ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியை அரசாளும் பாக்கியத்தையும் பெறுவது நிச்சயம். ‘வேறே ஆடு’களாகிய ‘திரள்கூட்டத்தாரோ’ தொடர்ந்து சாந்த குணத்தைக் காட்டுகையில், பூமியில் பரதீஸில் வாழும் எதிர்பார்ப்பை பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16; சங்கீதம் 37:11) நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது! ஆகவே, எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த இந்த நினைப்பூட்டுதலை ஒருபோதும் நாம் அசட்டை செய்யாதிருப்போமாக: ‘ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும் . . . உடையவர்களாய்’ இருங்கள்.—எபேசியர் 4:1, 2.
மறுபார்வை
• சாந்த குணமுள்ளவர்களாய் இருப்பதால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன:
• வீட்டில்?
• வெளி ஊழியத்தில்?
• சபையில்?
• சாந்த குணமுள்ளவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளன?
[பக்கம் 21-ன் படம்]
குறிப்பாக, மத சம்பந்தமாக பிளவுபட்ட குடும்பத்தில் சாந்த குணம் முக்கியமானது
[பக்கம் 21-ன் படம்]
சாந்த குணம் குடும்ப பந்தத்தை பலப்படுத்துகிறது
[பக்கம் 23-ன் படம்]
சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதிலளியுங்கள்
[பக்கம் 24-ன் படம்]
ஆலோசனை கொடுப்பவரின் சாந்தம் தவறு செய்கிறவருக்கு உதவலாம்