சாந்தத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருங்கள்!
“நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:12.
1–3. கொலோசெயர் 3:12–14-ல் சாந்தத்தையும் மற்ற தெய்வீக குணாதிசயங்களையும் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொன்னார்?
யெகோவா தம்முடைய மக்களுக்கு மிகச் சிறந்த அடையாள அர்த்தமுள்ள உடையைத் தருகிறார். உண்மையில், அவருடைய தயவைப் பெற விரும்பும் அனைவரும், சாந்தம் என்னும் பலமான நூலிழைகளைக் கொண்ட ஆடையை உடுத்தியிருக்க வேண்டும். இந்தக் குணாதிசயம் ஆறுதலளிப்பதாக இருக்கிறது. ஏனென்றால் அது அழுத்தமான நிலைமைகளில் பதற்றத்தைக் குறைக்கிறது. அது பாதுகாப்பாகவும்கூட இருக்கிறது, ஏனென்றால் அது சச்சரவுகளைத் தடுத்து விலக்கிடுகிறது.
2 பவுல் அப்போஸ்தலன் அபிஷேகம் பண்ணப்பட்ட உடன் கிறிஸ்தவர்களை இவ்வாறு துரிதப்படுத்தினார்: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும், பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்”கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:12) “தரித்துக் கொள்ளுங்கள்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் வினைவடிவம், அவசர உணர்வோடு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை குறிக்கிறது. தெரிந்து கொள்ளப்பட்டவரும், பரிசுத்தரும், பிரியருமாகிய அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் சாந்தம் போன்ற குணாதிசயங்களைத் தரித்துக் கொள்வதில் தாமதிக்கக்கூடாதவர்களாக இருந்தனர்.
3 பவுல் மேலுமாக சொன்னார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், யெகோவா உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஆனால் இவை எல்லாவற்றிற்கு மேலும் அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அது ஐக்கியத்தின் பரிபூரண கட்டு.” (கொலோசெயர் 3:13, 14, NW) அன்பும் சாந்தமும் மற்ற தெய்வீக குணாதிசயங்களும் “ஒருமித்து வாசம்பண்ணு”வதை யெகோவாவின் சாட்சிகளுக்கு சாத்தியமாக்கியிருக்கிறது.—சங்கீதம் 133:1–3.
சாந்தகுணமுள்ள மேய்ப்பர்கள் தேவை
4. மெய்க் கிறிஸ்தவர்கள் என்ன குணாதிசயங்களால் நெசவு செய்யப்பட்ட அடையாள அர்த்தமுள்ள உடையை அணிந்து கொள்கிறார்கள்?
4 மெய்க் கிறிஸ்தவர்கள் ‘விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை மற்றும் பொருளாசையின் சம்பந்தமாக தங்கள் அவயவங்களை அழித்துப்போட பாடுபட்டு’ கோபம், மூர்க்கம், பொறாமை, தூஷணம், வம்பு வார்த்தை ஆகிய நூலிழைகளைக் கொண்ட எந்த ஒரு பழைய உடையையும் களைந்து போட வேலை செய்கிறார்கள். (கொலோசெயர் 3:5–11) அவர்கள் ‘பழைய ஆள்தன்மையை’ (சொல்லர்த்தமாக “பழைய மனுஷனை”) களைந்து போட்டு, தகுதியான வஸ்திரமாகிய “புதிய ஆள்தன்மையை” (அல்லது “புதிய மனுஷனை”) தரித்துக் கொள்கிறார்கள். (எபேசியர் 4:22–24, கிங்டம் இன்டர்லீனியர்) இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும் நீடிய பொறுமையினால் நெசவு செய்யப்பட்ட அவர்களுடைய புதிய உடை, பிரச்னைகளைத் தீர்க்கவும் தேவபக்தியான வாழ்க்கை நடத்தவும் அவர்களுக்கு உதவி செய்கிறது.—மத்தேயு 5:9; 18:33; லூக்கா 6:36; பிலிப்பியர் 4:2, 3.
5. கிறிஸ்தவ சபையின் பாகமாக இருப்பதைச் சந்தோஷமுள்ளதாகச் செய்யும் அதன் இயக்கத்தில் என்ன இருக்கிறது?
5 இந்த உலகில் வெற்றிபெற்றவர்களாக கருதப்படுகிறவர்கள், அநேகமாக கொடியவர்களாக, கொடூரமானவர்களாகவும்கூட இருக்கின்றனர். (நீதிமொழிகள் 29:22) யெகோவாவின் மக்கள் மத்தியில் எத்தனை புத்துயிரளிக்கும் வித்தியாசம்! கிறிஸ்தவ சபை சில ஆட்கள் ஒரு வியாபாரத்தை நடத்துவது போல—திறமையாக ஆனால் மக்களை மகிழ்ச்சியற்றவர்களாக்கும் கடுமையான முறையில் இயங்குவதில்லை. மாறாக சபையின் பாகமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு காரணம், பொதுவாக கிறிஸ்தவர்களும், விசேஷமாக உடன்விசுவாசிகளுக்கு போதிக்க தகுதி பெற்ற மனிதர்களும் வெளிப்படுத்தும் சாந்தகுணம் ஞானத்தின் ஓர் அம்சமாக இருக்கிறது. ஆம், “ஞானத்திற்குரிய சாந்தத்தோடே” போதிக்கிற நியமிக்கப்பட்ட மூப்பர்கள் கொடுக்கும் போதனைகள் மற்றும் புத்திமதியிலிருந்து சந்தோஷம் கிடைக்கிறது.—யாக்கோபு 3:13.
6. கிறிஸ்தவ மூப்பர்கள் ஏன் சாந்தகுணமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
6 சபை கண்காணிப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆண்கள், சாந்தகுணமுள்ளவர்களாக, நியாயமானவர்களாக, புரிந்துகொள்கிறவர்களாக இருப்பதை கடவுளுடைய மக்களின் ஆவி அல்லது மேலோங்கிய மனநிலை தேவைப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 3:1–3) யெகோவாவின் ஊழியர்கள் கனிவுள்ள செம்மறியாடுகளைப் போல இருக்கிறார்கள், அவர்கள் பிடிவாதமுள்ள வெள்ளாடுகளோ, அடங்காத கழுதைகளோ அல்லது பேராசையுள்ள ஓநாய்களோ இல்லை. (சங்கீதம் 32:9; லூக்கா 10:3) செம்மறியாடுகளைப் போன்றிருப்பதால் அவர்கள் சாந்தமாகவும் கனிவாகவும் நடத்தப்பட வேண்டும். (அப்போஸ்தலர் 20:28, 29) ஆம், மூப்பர்கள் அவருடைய ஆடுகளிடமாக சாந்தமாயும், தயவாயும், அன்பாயும், பொறுமையாயும் இருக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார்.—எசேக்கியேல் 34:17–24.
7. மூப்பர்கள் எவ்வாறு மற்றவர்களுக்குப் போதிக்க அல்லது ஆவிக்குரிய நோயுற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்?
7 “கர்த்தருடைய ஊழியக்காரனாக” ஒரு மூப்பர் “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாக உபதேசிக்க வேண்டும்.” (2 தீமோத்தேயு 2:24, 25) ஆடுகள் கடவுளுக்கு சொந்தமானவையாக இருப்பதால் ஆவிக்குரிய நோயுற்றவர்களுக்கு உதவி செய்ய முற்படுகையில், கிறிஸ்தவ மேய்ப்பர்கள் கனிவான கரிசனையைக் காண்பிக்க வேண்டும். மூப்பர்கள், அவர்களைக் கூலிக்கு உழைப்பவர்களை நடத்துவது போல நடத்தாமல், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல சாந்தகுணமுள்ளவர்களாக இருப்பது அவசியமாகும்.—யோவான் 10:11–13.
8. சாந்தகுணமுள்ள மோசேக்கு என்ன சம்பவித்தது?
8 சில சமயங்களில் ஒரு மூப்பர் சாந்தமான ஆவியைக் காத்துக்கொள்வதை கடினமாகக் காணலாம். “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) என்றபோதிலும், இஸ்ரவேலர் காதேசில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்பட்டபோது, அவர்கள் மோசேக்கு விரோதமாக கூட்டங்கூடி எகிப்திலிருந்து வறண்ட வனாந்தரத்துக்குள் அவர்களை அழைத்து வந்தமைக்காக அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். மோசே எல்லாவற்றையும் சாந்தத்தோடு சகித்து வந்திருந்த போதிலும், அவர் துடுக்காக, கடுமையாக பேசி விட்டார். அவரும் ஆரோனும் ஜனங்களுக்கு முன்பாக வந்து நின்று, இவ்விதமாகச் சொல்லி தங்களிடமாக கவனத்தைத் திருப்பிக்கொண்டார்கள். “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா?” மோசே தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தார். உடனே கடவுள் மக்களுக்கும் மிருகங்களுக்கும் “தண்ணீர் ஏராளமாய்ப்” புறப்பட்டுவரும்படிச் செய்தார். மோசேயும் ஆரோனும் அவரை மகிமைப்படுத்தாதிருந்தபடியால், யெகோவா விசனப்பட்டார். ஆகவே மோசே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல சிலாக்கியம் பெறவில்லை.—எண்ணாகமம் 20:1–13; உபாகமம் 32:50–52; சங்கீதம் 106:32, 33.
9. ஒரு மூப்பரின் சாந்தம் எவ்வாறு சோதிக்கப்படலாம்?
9 ஒரு கிறிஸ்தவ மூப்பரின் சாந்தமும்கூட பல்வேறு வழிகளில் சோதிக்கப்படலாம். உதாரணமாக “தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்ட” “இறுமாப்புள்ள ஒருவன்” எழும்பக்கூடும் என்பதாக பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார். மேலுமாக பவுல் சொன்னார்: “அவைகளாலே பொறாமையும் சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்.” கண்காணியான தீமோத்தேயு கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது, ஆனால் அவர் “இவைகளைவிட்டோடி” “நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் அடையும்படி” நாட வேண்டும்.—1 தீமோத்தேயு 6:4, 5, 11.
10. தீத்து சபைகளுக்கு எதை நினைப்பூட்ட வேண்டியவராக இருந்தார்?
10 மூப்பர்கள் சாந்தமாயிருப்பது அவசியமாக இருந்தபோதிலும், சரியான காரியங்களில் உறுதியாக இருக்க வேண்டும். தீத்து அவ்விதமாக இருந்தார். கிரேத்தா சபையோடு கூட்டுறவு கொண்டிருந்தவர்களை, “ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய், எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு” நினைப்பூட்டினார். (தீத்து 3:1, 2) கிறிஸ்தவர்கள் ஏன் எல்லாரிடமும் சாந்தகுணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதைக் காண்பிப்பவராய், யெகோவா எவ்வளவு தயவாயும் அன்பாயும் இருந்திருக்கிறார் என்பதற்கு தீத்து கவனத்தைத் திருப்ப வேண்டியவராக இருந்தார். கடவுள் விசுவாசிகளை இரட்சிப்பதற்குக் காரணம் எந்த நீதியான கிரியைகளையும் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதால் அல்ல, ஆனால், இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவருடைய இரக்கத்தின்படியே அதைச் செய்கிறார். யெகோவாவின் சாந்தமும் பொறுமையும் நமக்கும்கூட இரட்சிப்பை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே தீத்துவைப் போல, இன்றைய–நாளைய மூப்பர்களும் மற்றவர்களைச் சாந்தமாக நடத்துவதன் மூலம் அவரைப் பின்பற்றி கடவுளுக்கு கீழ்ப்படிந்திருக்க சபையாருக்கு நினைப்பூட்ட வேண்டும்.—தீத்து 3:3–7; 2 பேதுரு 3:9, 15.
ஞானமுள்ள ஆலோசனைக்காரரைச் சாந்தம் வழிநடத்துகிறது
11. கலாத்தியர் 6:1, 2-ன் பிரகாரம் ஆலோசனை எவ்விதமாக கொடுக்கப்பட வேண்டும்?
11 அடையாள அர்த்தமுள்ள செம்மறியாடு தவறிழைத்துவிட்டால் அப்போது என்ன? பவுல் சொன்னார்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.” (கலாத்தியர் 6:1, 2) சாந்தமான ஆவியில் கொடுக்கப்படுமானால் ஆலோசனை அதிக பயனுள்ளதாக இருக்கிறது. மூப்பர்கள் கோபங்கொண்ட ஒரு நபருக்கு ஆலோசனை கொடுக்க முயற்சி செய்கையிலும்கூட அவர்கள் “சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும்!” என்பதை உணர்ந்தவர்களாய் தன்னடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (நீதிமொழிகள் 25:15) எலும்பைப் போன்று கடினமான ஒருவரும்கூட சாந்தமுள்ள சொற்களால் இளகிவிடக்கூடும். அவருடைய இறுக்கம் தளர்ந்துவிடக்கூடும்.
12. சாந்தமான ஆவி ஓர் ஆலோசனைக்காரருக்கு எவ்விதமாக உதவி செய்கிறது?
12 யெகோவா சாந்தகுணமுள்ள ஒரு போதகராவார். சாந்தமான அவருடைய கற்பிக்கும் முறை சபையில் பயனுள்ளதாக இருக்கிறது. ஆவிக்குரிய உதவி தேவைப்படுகிறவர்களுக்கு ஆலோசனை கொடுப்பது அவசியமாயிருப்பதை மூப்பர்கள் காண்கையில் இது விசேஷமாக இப்படி இருக்கிறது. சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.” சாந்தம், “பரத்திலிருந்து வருகிற ஞானத்”துக்கான மரியாதை மற்றும் நன்றியுணர்விலிருந்தும் அது ஒருவரின் சொந்த வரையறைகளை அடக்கத்தோடு ஒப்புக்கொள்வதோடு இணைவதாலும் வருகிறது. சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள ஆவி ஆலோசனைக்காரரை தீங்கிழைக்கும் குறிப்புகளையும் தவறுகளையும் செய்வதிலிருந்து பாதுகாத்து அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது.—யாக்கோபு 3:13, 17.
13. “ஞானத்துக்குரிய சாந்தம்” ஆலோசனை கொடுக்கப்படும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?
13 “ஞானத்திற்குரிய சாந்தம்” ஓர் ஆலோசனைக்காரர் யோசனையின்றி அறிவு மழுங்கிய விதத்தில் அல்லது கடுமையாக பேசுவதைத் தடைசெய்கிறது. என்றபோதிலும் நட்பைப் பற்றிய அல்லது எவராவது ஒருவருடைய அங்கீகாரத்தைக் கொண்டிருப்பது பற்றிய அக்கறை கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்ட ஒளிவுமறைவில்லாத புத்திமதியை சாந்தமாக கொடுப்பதற்கு பதிலாக, பிரியப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காரியங்களைச் சொல்லும்படியாக ஒரு மூப்பரை செய்விக்கக்கூடாது. (நீதிமொழிகள் 24:24–26; 28:23) அம்னோனுக்கு அவன் இனத்தார் கொடுத்த ஆலோசனை அவனுடைய ஆசையைத் திருப்தி செய்வதாக இருந்தது, ஆனால் அது அவனுடைய உயிர் இழக்கப்படுவதை அர்த்தப்படுத்தியது. (2 சாமுவேல் 13:1–19, 28, 29) ஆகவே நவீன–நாளைய மூப்பர்கள், எவராவது ஒருவரை மனச்சாட்சி தொந்தரவிலிருந்து விடுவிப்பதற்காக, பைபிள் நியமங்களின் வலிமையைக் குறைத்துவிடக் கூடாது, அவ்விதமாகச் செய்வது அவருடைய உயிரை ஆபத்துக்குள்ளாக்கக்கூடும். பவுலைப் போன்று, மூப்பர்கள், “தேவனுடைய ஆலோசனையில்” ஒன்றையும் மறைக்காமல் அறிவிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 20:26, 27; 2 தீமோத்தேயு 4:1–4) முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவ ஆலோசனைக்காரர் தேவபயத்தைக் காண்பித்து ஞானத்துக்குரிய சாந்தத்தோடு சரியான புத்திமதியைக் கொடுக்கிறார்.
14. மற்றவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய தீர்மானங்களை ஒரு மூப்பர் செய்யாதபடி ஏன் கவனமுள்ளவராக இருக்க வேண்டும்?
14 பரம ஞானத்தோடு இணைந்த சாந்தம், கடுமையாக வற்புறுத்திக் கேட்பதிலிருந்து ஒரு மூப்பரைத் தடைசெய்யும். மற்றொரு நபர் தனக்காக செய்ய வேண்டிய ஒரு தீர்மானத்தை அவர் செய்வது ஞானமற்றதும் பொருத்தமற்றதுமாக இருப்பதையும்கூட மூப்பர் உணர வேண்டும். ஒரு மூப்பர் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதற்கு கவனத்தைத் திருப்பலாம், ஆனால் ஒரு விஷயத்தின் பேரில் வேதப்பூர்வமான ஒரு சட்டம் இல்லையென்றால், ஒரு தனி நபரின் சொந்த நிதானிப்பும் மனச்சாட்சியுமே அவர் என்ன செய்வார் அல்லது செய்யமாட்டார் என்பதை தீர்மானிக்க வேண்டும். பவுல் சொன்னவிதமாகவே: “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5; ரோமர் 14:12) மற்றவர்களுக்காக ஒரு மூப்பர் தீர்மானம் செய்வாரேயானால், அதன் விளைவுகளுக்கு அவர் பொறுப்புள்ளவராகவும், வரக்கூடிய ஏதேனும் மோசமான விளைவுகளுக்கான பழியில் பங்குள்ளவராகவும் இருப்பார். என்றபோதிலும், மூப்பர் அவரிடம் விசாரிக்கிறவருக்கு அவர் தெரிவு செய்து கொள்ள அவருக்குத் திறந்திருக்கக்கூடிய வழிமுறைகளோடு சம்பந்தப்பட்ட வேதவசனங்களின் மீது காரணகாரிய முறையில் ஆராய உதவும் கேள்விகளைக் கேட்பதின் மூலம் அவர் சரியான தீர்மானத்தை எடுக்கும்படி உதவலாம்.
15 ஒரு கேள்விக்கு விடையை ஒரு மூப்பர் அறியாதிருக்கும் பட்சத்தில், வெறுமென மரியாதையைக் காத்துக்கொள்வதற்காக அவர் விடையளிக்கக்கூடாது. ஞானத்துக்குரிய சாந்தம் ஊகிப்பதிலிருந்தும் ஒருவேளை பின்னால் வேதனையளிக்கக்கூடிய தவறான பதிலைக் கொடுப்பதிலிருந்தும் அவரை விலகியிருக்கச் செய்யும். “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:7; நீதிமொழிகள் 21:23-ஐ ஒப்பிடவும்.) ஒரு கேள்விக்குப் பதிலை அறிந்திருந்தால் மட்டுமே அலது திருத்தமான ஒரு பதிலைக் கொடுக்க போதுமான ஆராய்ச்சியைச் செய்திருந்தால் மட்டுமே ஒரு மூப்பர் “பேச” வேண்டும். ஊகித்து பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் விட்டுவிடுவதே ஞானமான காரியமாகும்.—நீதிமொழிகள் 12:8; 17:27; 1 தீமோத்தேயு 1:3–7; 2 தீமோத்தேயு 2:14.
திரளான ஆலேசனைக்காரர்களின் மதிப்பு
16, 17. மூப்பர்கள் ஒருவரோடொருவர் கலந்து பேசுவது ஏன் பொருத்தமானதாய் இருக்கிறது?
16 கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் கடினமான பிரச்னைகளைக் கையாளவும் மூப்பர்களுக்கு ஜெபமும், படிப்பும் உதவிசெய்யும், ஆனால் “ஆலோசனைக்காரர் அனேகர் இருந்தால் சாதனையுண்டு” என்பது நினைவில் வைக்கப்பட வேண்டும். (நீதிமொழிகள் 15:22, NW) மற்ற மூப்பர்களோடு கலந்து பேசுவது மதிப்பு வாய்ந்த ஞானம் குவிக்கப்படுவதில் விளைவடைகிறது. (நீதிமொழிகள் 13:20) எல்லா மூப்பர்களுக்கும் சமமான அனுபவமோ அல்லது பைபிள் அறிவோ கிடையாது. ஆகவே ஞானத்திற்குரிய சாந்தம் விசேஷமாக வினைமையான ஒரு விஷயம் கையாளப்பட வேண்டியிருக்கையில் குறைந்த அனுபவமுள்ள மூப்பரை அதிகமான அறிவும் கூடுதலான அனுபவமுமுடைய மூப்பர்களிடம் கலந்து பேச தூண்ட வேண்டும்.
17 வினைமையான ஒரு விஷயத்தைக் கையாள மூப்பர்கள் தெரிந்துகொள்ளப்படும் போது, இன்னும் அவர்கள் உதவியை நம்பகமான வகையில் நாடலாம். இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்க மோசேக்கு உதவி செய்ய அவர், “தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத்” தெரிந்து கொண்டார். ஆகவே “வருத்தமான காரியங்களை மாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.” (யாத்திராகமம் 18:13–27) அப்படியானால், அவசியமிருந்தால், கடினமான வழக்குகளைக் கையாளும் மூப்பர்கள், தாங்கள்தாமே முடிவான தீர்மானத்தைச் செய்த போதிலும் அனுபவமுள்ள கண்காணிகளின் உதவியைச் சரியாகவே நாடலாம்.
18. நியாயவிசாரணை வழக்குகளைக் கையாளும்போது, சரியான தீர்மானங்களை உறுதிசெய்யும் முடிவான காரியங்கள் யாவை?
18 இஸ்ரவேலில் கிராம வழக்கு மன்றத்தை உண்டுபண்ணுபவர்கள் வழக்கின் முக்கியத்துவத்தைப் பொறுத்து எண்ணிக்கையில் வித்தியாசப்பட்டனர் என்பதாக யூத வேதக் கட்டளைத் தொகுப்பு சொல்கிறது. திரளான ஆலோசனைக்காரர்களில் மெய்யான பயன் இருக்கிறது, ஆனால் எண்ணிக்கை மாத்திரமே பிழையற்றதன்மைக்கு உத்தரவாதமளிப்பதில்லை, ஏனென்றால் பெரும்பான்மையர் தவறாக இருக்கக்கூடும். (யாத்திராகமம் 23:2) சரியான தீர்மானங்கள் செய்யப்படும் என்பதை உறுதிசெய்யும் முடியவான காரியங்கள், வேதவசனங்களும் கடவுளுடைய ஆவியுமே. ஞானமும் சாந்தமும் இவைகளுக்குக் கீழ்ப்படிய கிறிஸ்தவர்களை உந்துவிக்கும்.
சாந்தத்தோடு சாட்சி கொடுத்தல்
19. சாந்தம் எவ்விதமாக மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க யெகோவாவின் மக்களுக்கு உதவிசெய்கிறது?
19 சாந்தம், பல்வேறு மனநிலைகளையுடைய ஆட்களுக்குச் சாட்சி கொடுக்கவும்கூட யெகோவாவின் ஊழியர்களுக்கு உதவி செய்கிறது. (1 கொரிந்தியர் 9:22, 23) இயேசு சாந்தத்தோடு கற்பித்ததன் காரணமாக, தாழ்மையான ஆட்கள், கடுமையான மதத்தலைவர்களுக்குப் பயந்தது போல அவருக்குப் பயப்படவில்லை. (மத்தேயு 9:36) நிச்சயமாகவே அவருடைய சாந்தமான முறைகள் பொல்லாத “வெள்ளாடு”களை அல்ல, “செம்மறியாடு”களையே கவர்ந்திழுத்தது. (மத்தேயு 25:31–46; யோவான் 3:16–21) வெள்ளாடுகளைப் போன்ற மாய்மாலக்காரரை கையாளும்போது இயேசு கடுஞ்சொற்களைப் பயன்படுத்திய போதிலும், யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகளை இன்று அறிவிக்கையில் அதை சாந்தமாகச் செய்யவேண்டும், ஏனென்றால் இயேசுவுக்கு இருந்தது போன்ற அதே உட்பார்வையையும் அதிகாரத்தையும் அவர்கள் உடையவர்களாய் இல்லை. (மத்தேயு 23:13–36) ராஜ்யத்தின் செய்தி சாந்தத்தோடு பிரசங்கிக்கப்படுவதை அவர்கள் கேட்கையில் இயேசு பிரசங்கித்ததைக் கேட்ட செம்மறியாடுகளைப் போல, ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் விசுவாசிகளாகிறார்கள்.’—அப்போஸ்தலர் 13:48.
20. சாந்தத்தோடு கற்பிக்கப்படுகையில் ஒரு பைபிள் மாணாக்கர் எவ்விதமாக பயனடைகிறார்?
20 சாந்தத்தோடு சாட்சி கொடுத்து போதிப்பதன் மூலமும் காரண காரிய முறையிலும் பைபிள் நியமங்கள் மற்றும் சத்தியத்தின் அடிப்படையிலும் அவர்களுக்கு அக்கறையூட்டுவதன் மூலமும் நல்ல பலன்கள் பெறப்படுகின்றன. “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்” என்று பேதுரு எழுதினார். “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) கடுமையான, தர்க்கம் செய்யும் முறையில் கற்பிக்கப்படும் ஒரு மாணாக்கர் கவனம் சிதறவோ அல்லது ஒருவேளை இடறலடைந்துவிடவோக் கூடும், அதற்குப் பதிலாக சாந்தமான முறையில் கற்பிக்கப்படும் அவர் பொருளின் பேரில் கவனத்தை ஊன்ற வைக்க முடிகிறது. பவுலைப் போன்று சாந்தத்தோடு போதிக்கும் ஊழியர்கள், “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்” இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 6:3) சாந்தத்தோடு போதிக்கிறவர்களுக்குச் சில சமயங்களில் விரோதிகளும்கூட செவிசாய்க்கிறார்கள்.
சாந்தம் அனைவருக்கும் தேவைப்படுகிறது
21, 22. சாந்தம் எவ்விதமாக யெகோவாவின் மக்கள் அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கிறது?
21 யெகோவாவின் அமைப்புக்கு வெளியே இருப்பவர்களை வெறுமென கவருவதற்காக கிறிஸ்தவ சாந்தம் அணிந்து கொள்ளப்படக் கூடாது. கடவுளுடைய மக்கள் மத்தியில் கொள்ளும் உறவுகளிலும்கூட இந்தக் குணாதிசயம் அத்தியாவசியமாகும். (கொலோசெயர் 3:12–14; 1 பேதுரு 4:8) சாந்தகுணமுள்ள மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒத்திசைவோடு வேலை செய்கையில், சபைகள் ஆவிக்குரிய பிரகாரமாய்க் கட்டி எழுப்பப்படுகின்றன. சாந்தத்தையும் மற்ற தெய்வீக பண்புகளையும் வெளிப்படுத்துவது யெகோவாவின் மக்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியமாக இருக்கிறது, ஏனென்றால் அனைவருக்கும் “ஒரே பிரமாணம்” இருக்கிறது.—யாத்திராகமம் 12:49; லேவியராகமம் 24:22.
22 சாந்தம் கடவுளுடைய மக்களின் சமாதானத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உதவி செய்கிறது. ஆகவே வீட்டிலும், சபையிலும் மற்ற இடங்களிலும் எல்லாக் கிறிஸ்தவர்களாலும் அணிந்து கொள்ளப்படும் உடையை உண்டுபண்ணும் குணங்களாகிய நூலிழைகளின் ஒரு பாகமாக அது இருக்க வேண்டும். ஆம், யெகோவாவின் எல்லா ஊழியர்களும் சாந்தகுணத்தை தரித்துக் கொண்டவர்களாய் இருப்பது அவசியமாகும். (w91 10/15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻கிறிஸ்தவ மூப்பர்கள் ஏன் சாந்தகுணமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
◻ஞானமுள்ள ஆலோசனைக்காரரைச் சாந்தம் எவ்விதமாக வழிநடத்துகிறது?
◻திரளான ஆலோசனைக்காரர்களின் மதிப்பு என்ன?
◻சாந்தத்தோடு சாட்சி கொடுப்பது ஏன் பிரயோஜனமாயிருக்கிறது?
15. ஒரு கேள்விக்குரிய விடையை ஒரு மூப்பர் அறியாதிருந்தால் என்ன செய்யப்பட வேண்டும்?
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் மக்கள் செம்மறியாடுகளைப் போன்றவர்கள், அவர்கள் சாந்தத்தோடு நடத்தப்படுவது அவசியமாகும்
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 19-ன் படம்]
சாந்தம் பல்வேறு மனநிலைகளை உடைய மக்களுக்கு சாட்சி கொடுக்க யெகோவாவின் ஜனங்களுக்கு உதவிசெய்கிறது