யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
தீத்து, பிலேமோன், மற்றும் எபிரெயருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
ரோமில் முதன்முறையாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்போஸ்தலன் பவுல் விடுதலை செய்யப்படுகிறார். அதன் பிறகு, சில காலம் கழித்து பொ.ச. 61-ல் அவர் கிரேத்தா தீவுக்குச் செல்கிறார். அங்குள்ள சபைகளின் ஆன்மீக நிலவரத்தைப் பார்த்த பவுல், அந்தச் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்காக தீத்துவை அங்கு விட்டுவிட்டுச் செல்கிறார். அதன் பிறகு, மக்கெதோனியாவில் இருக்கையில் அவர் தீத்துவுக்கு இக்கடிதத்தை எழுதியதாகத் தெரிகிறது. தீத்து தன்னுடைய கடமைகளை எப்படிச் செய்ய வேண்டுமென விளக்குவதற்கும் இவற்றைச் செய்யும்படி சொன்னது பவுல்தான் என்பதைத் தெரியப்படுத்துவதற்குமே இக்கடிதத்தை அவர் எழுதுகிறார்.
இதற்கு முன், அதாவது பொ.ச. 61-ல் அவர் சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்குச் சற்று முன்பாக பிலேமோனுக்குக் கடிதம் எழுதுகிறார். இவர் கொலோசெயில் வாழ்ந்துவந்த ஒரு கிறிஸ்தவர் ஆவார். இது, ஒரு நண்பரிடம் பரிந்து பேசி தன் கைப்பட பவுல் எழுதிய கடிதமாகும்.
ஏறக்குறைய பொ.ச. 61-ல், யூதேயாவில் இருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கும் பவுல் கடிதம் எழுதுகிறார். இது, யூத ஒழுங்குமுறையைவிட கிறிஸ்தவம் மேன்மையானது என்பதைக் காட்டுகிறது. இந்த மூன்று கடிதங்களிலும் நமக்குப் பிரயோஜனமான மதிப்புமிக்க ஆலோசனைகள் உள்ளன.—எபி. 4:12.
விசுவாசத்தில் நிலைத்திருங்கள்
‘பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்துவது’ சம்பந்தமாக அறிவுரை வழங்கிய பிறகு, ‘விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி [அடங்காதவர்களை தொடர்ந்து] கண்டிப்பாய்க் கடிந்துகொள்’ என பவுல் தீத்துவுக்கு ஆலோசனை கொடுக்கிறார். ‘அவபக்தியை வெறுத்து தெளிந்தபுத்தி உள்ளவர்களாய் ஜீவனம் பண்ணும்படி’ கிரேத்தாவில் உள்ள அனைத்து சபைகளுக்கும் புத்திமதி கூறுகிறார்.—தீத். 1:5, 10–14; 2:12.
கிரேத்தாவில் இருந்த சகோதரர்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கு பவுல் இன்னும் சில ஆலோசனைகளைக் கொடுக்கிறார். ‘புத்தியீனமான தர்க்கங்களையும் . . . நியாயப்பிரமாணத்தைக் குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகும்படி’ தீத்துவுக்கு அறிவுறுத்துகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:15—‘சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயும் அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும்’ சகலமும் அசுத்தமாயும் இருப்பது எப்படி? “சகலமும்” என்று பவுல் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால்தான், இதற்கான பதிலை அறிந்துகொள்ள முடியும். கடவுளுடைய வார்த்தையில் நேரடியாகக் கண்டனம் செய்யப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றி பவுல் இங்கு பேசவில்லை. மாறாக, ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியே பேசினார். ஒருவருடைய சிந்தை கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைவாக இருக்கிறதென்றால், அவருக்கு அந்த விஷயங்கள் சுத்தமானவையாக இருக்கும். ஆனால், ஒருவருடைய சிந்தை மாறுபட்டதாகவும் அவருடைய மனசாட்சி கெட்டதாகவும் இருந்தால் அந்த நபருக்கு அந்த விஷயங்கள் அசுத்தமானவையாக இருக்கும்.a
3:5—பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எவ்வாறு ‘முழுக்கினாலும் [அதாவது ஸ்நானத்தினாலும்] பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் இரட்சிக்கப்படுகிறார்கள்’? இயேசுவின் மீட்புக்குரிய பலியின் இரத்தத்தினாலே கடவுள் அவர்களைச் சுத்தமாக்கியிருப்பதால் அவர்கள் ‘முழுக்கினால் இரட்சிக்கப்படுகிறார்கள்.’ அவர்கள் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்பட்ட குமாரர்களாக ‘புதுச்சிருஷ்டியாய்’ ஆகியிருப்பதால், ‘பரிசுத்த ஆவியினால் புதிதாக்கப்பட்டிருக்கிறார்கள்.’—2 கொ. 5:17.
நமக்குப் பாடம்:
1:10-13; 2:15. கிறிஸ்தவக் கண்காணிகள், சபையில் தவறுசெய்வோரைத் திருத்தத் தயங்கக் கூடாது.
2:3-5. முதல் நூற்றாண்டில் இருந்தவர்களைப் போலவே, இன்றும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ சகோதரிகள் ‘பரிசுத்தத்துக்கேற்ற விதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களும் . . . நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாய்’ இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, சபையிலுள்ள ‘பாலிய ஸ்திரீகளுக்கு’ அவர்களால் தனிப்பட்ட முறையில் புத்திமதி கொடுக்க முடியும்.
3:8, 14. ‘நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாய்’ இருப்பது, அதாவது கவனமாய் இருப்பது, ‘நன்மையும் பிரயோஜனமும்’ அளிக்கும். ஏனெனில், இது கடவுளுடைய சேவையில் பலன் தருபவர்களாய் இருக்க நமக்கு உதவும்; அதோடு, இந்தப் பொல்லாத உலகிலிருந்து பிரிந்திருக்கவும் நமக்கு உதவும்.
‘அன்பினிமித்தம்’ அறிவுரை கூறுங்கள்
பிலேமோன் ‘அன்புக்கும் விசுவாசத்துக்கும்’ மாதிரியாய்த் திகழ்ந்ததால் பாராட்டப்படுகிறார். அவர் சக கிறிஸ்தவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பவராய் இருப்பதால், பவுல் ‘மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும்’ அடைகிறார்.—பிலே. 4, 5, 7.
பவுல், ஒநேசிமுவைப் பற்றிய விஷயத்தைச் சொல்கையில், கட்டளையிடுவதுபோல் பேசாமல், ‘அன்பின் நிமித்தம்’ அறிவுரை கூறுகிறார். இந்த விஷயத்தில், கண்காணிகள் அனைவருக்குமே நல்ல முன்மாதிரி வைக்கிறார். “நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்” என பிலேமோனுக்குச் சொல்கிறார்.—பிலே. 8, 9, 21.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
10, 11, 18—முன்பு ‘பிரயோஜனமில்லாதவராய்’ இருந்த ஒநேசிமு எப்படி ‘பிரயோஜனமுள்ளவராக’ ஆகிறார்? வேலைசெய்ய மனமில்லாத அடிமையாய் இருந்த ஒநேசிமு கொலோசெயில் உள்ள பிலேமோனின் வீட்டிலிருந்து ரோமாபுரிக்கு ஓடிவிட்டார். 1,400 கிலோமீட்டர் தூரப் பயணத்தின்போது வழிச்செலவுக்காகத் தன் எஜமானிடமிருந்து பணத்தையும் அவர் திருடிச் சென்றிருக்கலாம். ஆம், பிலேமோனுக்கு அவர் பிரயோஜனமற்றவராகவே இருந்தார். என்றாலும், அவர் ரோமாபுரிக்குச் சென்ற பின், ஒரு கிறிஸ்தவராக மாறுவதற்கு பவுல் அவருக்கு உதவினார். முன்பு ‘பிரயோஜனமற்றவராக’ இருந்த அவர் இப்போது, ஒரு கிறிஸ்தவராக மாறி ‘பிரயோஜனமுள்ள’ ஒருவராக ஆனார்.
15, 16—ஒநேசிமுவுக்கு விடுதலை கொடுக்கும்படி பிலேமோனிடம் பவுல் ஏன் கேட்கவில்லை? பவுல், ‘தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை உபதேசிப்பதில்’ உறுதியாய் இருக்கவே விரும்பினார். ஆகவே, அடிமைத்தனம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் அவர் தலையிடவில்லை.—அப். 28:31.
நமக்குப் பாடம்:
2. பிலேமோன் தன்னுடைய வீட்டில் கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்த இடமளித்தார். வெளி ஊழியக் கூட்டத்தை நம் வீட்டில் நடத்த அனுமதிப்பது அரும்பெரும் பாக்கியமே.—ரோ. 16:5; கொலோ. 4:15.
4-7. விசுவாசத்திலும் அன்பிலும் சிறந்து விளங்கும் சக கிறிஸ்தவர்களைப் பாராட்டுவதில் நாம் முந்திக்கொள்ள வேண்டும்.
15, 16. வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத ஏதாவது ஒரு காரியம் நடந்துவிட்டதை நினைத்துக் கவலையில் ஆழ்ந்துவிடக் கூடாது. ஒநேசிமுவின் விஷயத்தில் நடந்ததுபோல காரியங்கள் நன்மையில் முடிவடையலாம்.
21. ஒநேசிமுவை பிலேமோன் மன்னிக்க வேண்டுமென பவுல் எதிர்பார்த்தார். அவ்வாறே, நமக்குத் தீங்கு செய்த ஒரு சகோதரனை மன்னிக்கும்படி நம்மிடமும் எதிர்பார்க்கப்படுகிறது.—மத். 6:14.
“பூரணராகும்படி கடந்துபோவோமாக”
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிற காரியங்களைவிட இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பது எவ்வளவு மேலானது என்பதை நிரூபிக்க, கிறிஸ்தவ சபையை ஸ்தாபித்தவரின் மேன்மையையும் அவருடைய ஆசாரியத்துவம், பலி மற்றும் புதிய உடன்படிக்கையின் மேன்மையையும் பவுல் சிறப்பித்துக் காட்டுகிறார். (எபி. 3:1–3; 7:1–3, 21, 22; 8:6; 9:11–14, 25, 26) எபிரெய கிறிஸ்தவர்கள் இக்காரியங்களை அறிந்திருந்ததால், யூதர்களின் துன்புறுத்தலைத் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கும். ‘பூரணராகும்படி கடந்துபோகுமாறு’ சக எபிரெய கிறிஸ்தவர்களை பவுல் அறிவுறுத்துகிறார்.—எபி. 6:2.
ஒரு கிறிஸ்தவருக்கு விசுவாசம் எந்தளவு முக்கியமானது? “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என பவுல் எழுதுகிறார். “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்றும் அதை விசுவாசத்தோடே செய்யும்படியும் எபிரெயர்களை பவுல் ஊக்குவிக்கிறார்.—எபி. 11:6; 12:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:14, 15—சாத்தான் ‘மரணத்துக்கு அதிகாரியாய்’ இருக்கிறான் எனச் சொல்லப்பட்டிருப்பது, யாருக்கு வேண்டுமானாலும் அகால மரணத்தை ஏற்படுத்த அவனால் முடியும் என்று காட்டுகிறதா? இல்லவே இல்லை. என்றாலும், ஏதேனில் சாத்தான் தீய வழியில் அடியெடுத்து வைத்தது முதற்கொண்டு, அவன் சொல்லும் பொய்கள் மனிதருக்கு மரணத்தை விளைவித்திருக்கின்றன. எப்படியெனில், அவனுடைய பேச்சைக் கேட்டு ஆதாம் பாவம் செய்ததால் பாவமும் மரணமும் மனிதகுலத்திற்குக் கடத்தப்பட்டிருக்கின்றன. (ரோ. 5:12) அதுமட்டுமல்ல, பூமியிலுள்ள சாத்தானுடைய ஊழியர்கள், கடவுளுடைய ஊழியர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள்; இயேசுவுக்குச் செய்தது போலவே கொலையும் செய்திருக்கிறார்கள். அதனால், யாரை வேண்டுமானாலும் கொன்றுபோட சாத்தானுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அவனுக்கு அந்தளவு சக்தி இருந்திருந்தால், யெகோவாவை வழிபடுவோரை எந்தக் காலத்திலோ துடைத்தழித்திருப்பான். ஆனால், ஒரு தொகுதியாகத் தம் மக்களை யெகோவா பாதுகாக்கிறார், சாத்தான் அவர்களை ஒட்டுமொத்தமாய் அழித்துப்போட அவர் அனுமதிப்பதில்லை. சாத்தானுடைய தாக்குதலுக்கு ஆளாகிச் சிலர் மரிக்க நேர்ந்தாலும், நமக்கு வரும் எந்தத் தீங்கையும் கடவுள் நீக்குவார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
4:9-11—நாம் எப்படி ‘[கடவுளுடைய] இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்’? ஆறு நாட்கள் படைப்பு வேலையில் ஈடுபட்ட பிறகு, கடவுள் இளைப்பாறினார். பூமியையும் மனிதரையும் குறித்த தம்முடைய நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு அவ்வாறு இளைப்பாறினார். (ஆதி. 1:28; 2:2, 3) சுயநீதியை வெளிக்காட்டும் செயல்களைத் தவிர்ப்பதன் மூலமும் இரட்சிப்புக்காகக் கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதன் மூலமும் நாம் அந்த ‘இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்.’ தன்னலக் காரியங்களைத் தேடுவதற்குப் பதிலாக, யெகோவாமீது விசுவாசம் வைத்து அவருடைய குமாரனைக் கீழ்ப்படிதலோடு பின்பற்றும்போது ஒவ்வொரு நாளும் புத்துணர்வூட்டுகிற, இளைப்பாறுதலுக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வோம்.—மத். 11:28–30.
9:16—புதிய உடன்படிக்கையை “எழுதின” மனிதன் யார்? புதிய உடன்படிக்கையை யெகோவா ஏற்படுத்தியபோதிலும், அதை “எழுதின” மனிதன் இயேசுவே. அந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருக்கிற அவர் தம்முடைய உயிரைப் பலியாக கொடுத்ததன் மூலம் அதைச் செல்லத்தக்கதாக்கினார்.—லூக். 22:20; எபி. 9:15.
11:10, 13-16—ஆபிரகாம் எந்த ‘நகரத்துக்காக’ காத்திருந்தார்? இது நிஜமான ஒரு நகரமல்ல, ஆனால் அடையாள அர்த்தமுள்ள ஒரு நகரமாகும். ஆம், கிறிஸ்து இயேசுவையும் 1,44,000 உடன் அரசர்களையும் கொண்ட ‘பரலோக எருசலேமுக்காக’ ஆபிரகாம் காத்திருந்தார். பரலோக மகிமையில் இருக்கிற இந்த உடன் அரசர்கள் ‘புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். (எபி. 12:22; வெளி. 14:1; 21:2) கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி புரிகையில் அதில் வாழ்வதற்காக ஆபிரகாம் ஆவலோடு காத்திருந்தார்.
12:2—தமக்குமுன் வைத்திருந்த எந்த ‘சந்தோஷத்தின் பொருட்டு [இயேசு] சிலுவையைச் சகித்தார்’? அவருடைய ஊழியம் சாதிக்கவிருந்ததைக் குறித்தே அவர் சந்தோஷப்பட்டார். அதாவது, யெகோவாவின் பெயர் பரிசுத்தமாவது, அவருடைய உன்னத அரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்படுவது, மனித குடும்பத்தை மரணத்திலிருந்து மீட்பது ஆகியவற்றைக் குறித்துச் சந்தோஷப்பட்டார். அரசராகவும் பிரதான ஆசாரியராகவும் இருந்து மனிதகுலத்திற்கு நன்மை செய்யப்போகும் காலத்தையும் எதிர்நோக்கியிருந்தார். அதுவே அவருக்குக் கிடைக்கவிருந்த பரிசு.
13:20—புதிய உடன்படிக்கை ஏன் “நித்திய” உடன்படிக்கை என்று சொல்லப்படுகிறது? மூன்று காரணங்களுக்காக அவ்வாறு சொல்லப்படுகிறது: (1) இதற்கு மாற்றீடாக எந்த உடன்படிக்கையும் செய்யப்படாது, (2) அதன் பலன்கள் நிரந்தரமானவை, (3) ‘வேறே ஆடுகள்,’ அர்மகெதோனுக்குப் பிறகும் இந்தப் புதிய உடன்படிக்கையிலிருந்து தொடர்ந்து பயனடைவார்கள்.—யோவா. 10:16.
நமக்குப் பாடம்:
5:14. நாம் கடவுளுடைய வார்த்தையான பைபிளை ஊக்கமாய்ப் படித்து, அதிலிருந்து கற்றவற்றை வாழ்க்கையில் பின்பற்றுகிறவர்களாய் இருக்க வேண்டும். ‘நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுவதற்கு’ இதுவே மிகச் சிறந்த வழி.—1 கொ. 2:10.
6:17-19. நம்முடைய நம்பிக்கை கடவுளுடைய வாக்குறுதியிலும் அவருடைய உறுதிமொழியிலும் ஆதாரம் கொண்டிருப்பது, சத்தியத்தின் வழியிலிருந்து விலகாமல் நடப்பதற்கு உதவும்.
12:3, 4. நாம் சந்திக்கிற சிறு சிறு சோதனைகள் அல்லது எதிர்ப்பு காரணமாக, ‘இளைப்புள்ளவர்களாய் ஆத்துமாக்களில் சோர்ந்துபோவதற்கு’ பதிலாக, முதிர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும்; அதோடு, சோதனைகளைச் சகிப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். “இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக” அதாவது மரணம் வந்தாலும்கூட எதிர்த்துநிற்க நாம் உறுதிபூண்டிருக்க வேண்டும்.—எபி. 10:36–39.
12:13-15. யாதொரு ‘கசப்பான வேரும்,’ அதாவது சபையில் செய்யப்படுகிற காரியங்களில் குற்றம் கண்டுபிடிக்கிற யாரும் ‘நம் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்தாதபடி’ நம்மைத் தடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது.
12:26-28. கடவுளால் ‘உண்டாக்கப்படாதவை’ அனைத்தும், அதாவது இன்றைய உலகமும் அதன் பொல்லாத ‘வானமும்கூட’ இடம்தெரியாமல் போகுமளவுக்கு அசைக்கப்படும். அப்போது, ‘அசைவில்லாதவை’ மட்டும், அதாவது ராஜ்யமும் அதன் ஆதரவாளர்களும் நிலைத்திருப்பார்கள். ஆகவே, அந்த ராஜ்யத்தைப் பற்றி பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிப்பதும் அதன் நெறிகளின்படி வாழ்வதும் எவ்வளவு முக்கியம்!
13:7, 17. சபைக் கண்காணிகளுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கும்படி இங்கு சொல்லப்பட்டிருக்கிற அறிவுரைக்கு எப்போதும் கவனம் செலுத்துவது, அவர்களோடு சேர்ந்து ஒத்துழைக்க நமக்கு உதவும்.
[அடிக்குறிப்பு]