தகப்பனும் மூப்பரும்—இரு பாகங்களையும் நிறைவேற்றுதல்
“ஒருவன் தன் சொந்தக்குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் கடவுளின் சபையை கவனிப்பது எப்படி? —1 தீமோத்தேயு 3:5, NW.
1, 2. (அ) முதல் நூற்றாண்டில், மணமாகாத கண்காணிகளும் மணமாகி பிள்ளைகள் இல்லாத கண்காணிகளும் தங்கள் சகோதரருக்கு எவ்வாறு சேவை செய்ய முடிந்தது? (ஆ) இன்று மணமாகிய தம்பதிகள் பலருக்கு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எவ்வாறு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றனர்?
பூர்வ கிறிஸ்தவ சபையில் கண்காணிகள், மணமாகாத ஆண்களாகவும், அல்லது மணமாகி பிள்ளைகள் இல்லாத ஆண்களாகவும், அல்லது மணமாகி பிள்ளைகளுடையோராகவும் இருக்க முடிந்தது. அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியருக்கு எழுதின தன் முதல் நிருபத்தின் 7-ம் அதிகாரத்தில் மணமாகாதவர்களாய் இருத்தல் சம்பந்தமாக அவர் கொடுத்த அறிவுரையை அந்தக் கிறிஸ்தவர்கள் சிலர் பின்பற்றினர் என்பதில் சந்தேகமில்லை. இயேசு இவ்வாறு சொல்லியிருந்தார்: “பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு.” (மத்தேயு 19:12) பவுலையும், ஒருவேளை அவருடைய பயணத் தோழர்கள் சிலரையும் போன்ற மணமாகாத அத்தகைய ஆண்கள், தங்கள் சகோதரருக்கு உதவி செய்யும்படி பயணம் செய்வதற்குத் தடங்கலற்றவர்களாக இருந்திருப்பார்கள்.
2 பர்னபா, மாற்கு, சீலா, லூக்கா, தீமோத்தேயு, மற்றும் தீத்து, மணமாகாத ஆட்களாக இருந்தார்களாவென்று பைபிள் எதுவும் சொல்லுகிறதில்லை. மணமாகியவர்களாக இருந்திருந்தால், பல்வேறு வேலை நியமிப்புகளின்பேரில் பரவலாகப் பயணம் செய்யக்கூடியோராக இருக்கும்படி, குடும்பப் பொறுப்புகளிலிருந்து போதிய அளவு விடுதலையானவர்களாக இருந்தார்களெனத் தோன்றுகிறது. (அப்போஸ்தலர் 13:2; 15:39-41; 2 கொரிந்தியர் 8:16, 17; 2 தீமோத்தேயு 4:9-11; தீத்து 1:5) இடம் விட்டு இடம் சென்றுகொண்டிருந்தபோது தங்கள் மனைவிகளைத் தங்களோடுகூட அழைத்துச் சென்றதாகத் தோன்றுகிற பேதுருவையும் ‘மற்ற அப்போஸ்தலரையும்’ போல், இவர்களுடைய மனைவிகளும் இவர்களோடு சென்றிருக்கலாம். (1 கொரிந்தியர் 9:5) மணமாகிய தம்பதியின் ஒரு உதாரணமாக ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இருக்கிறார்கள், இவர்கள் இடம்விட்டு இடம் செல்ல மனமுள்ளவர்களாய், பவுலைப் பின்தொடர்ந்து கொரிந்துவிலிருந்து எபேசுவுக்குச் சென்று, பின் ரோமுக்கு இடம் மாறி, மறுபடியும் எபேசுவுக்கு வந்தனர். அவர்களுக்குப் பிள்ளைகள் எவராவது இருந்தார்களா என்பதைப் பற்றி பைபிள் சொல்லுகிறதில்லை. தங்கள் சகோதரருக்குச் செய்த அவர்களுடைய பக்தியுள்ள சேவை, “புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லா”ருடைய நன்றியறிதலையும் அவர்கள் பெறும்படி செய்தது. (ரோமர் 16:3-5; அப்போஸ்தலர் 18:2, 18; 2 தீமோத்தேயு 4:19) இன்று, தேவை அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இடம் மாறி, ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் போல், மற்ற சபைகளுக்குச் சேவை செய்ய முடிகிற, மணமாகிய தம்பதிகள் பலர் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தகப்பனும் மூப்பரும்
3. முதல் நூற்றாண்டு மூப்பர்கள் பலர், மணம் செய்து குடும்பங்களை உடையோராக இருந்தனரென்று எது குறிப்பாகத் தெரிவிக்கிறது?
3 பொ.ச. முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ மூப்பர்கள் பெரும்பான்மையர் மணமாகி பிள்ளைகளையுடைய ஆட்களாக இருந்தனர் என்பதாகத் தெரிகிறது. ‘கண்காணிப்பை விரும்புகிற’ மனிதனுக்கு இருக்கவேண்டிய தகுதிகளைப் பவுல் குறிப்பிட்டபோது, அத்தகைய ஒரு கிறிஸ்தவன், “தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்,” என்று சொன்னார்.—1 தீமோத்தேயு 3:1, 4.
4. மணமாகி பிள்ளைகளை உடையோராக இருந்த கண்காணிகளின் காரியத்தில் என்ன எதிர்பார்க்கப்பட்டது?
4 நாம் பார்த்த பிரகாரம், ஒரு கண்காணி, பிள்ளைகளை உடையவராக இருக்க வேண்டுமென்று அல்லது மணமாகியிருக்க வேண்டுமென்றுங்கூட கேட்கப்படவில்லை. ஆனால், அவர் மணமாகியவராக இருந்தால், மூப்பராக அல்லது உதவி ஊழியராகத் தகுதிபெறுவதற்கு, தன் மனைவியின்மீது சரியான மற்றும் அன்புள்ள தலைமைவகிப்பைச் செலுத்தியிருந்து, தன் பிள்ளைகளைத் தகுந்த கீழ்ப்படிதலில் வைத்துவருவதற்குத் திறமை வாய்ந்தவராகத் தன்னைக் காட்ட வேண்டும். (1 கொரிந்தியர் 11:3; 1 தீமோத்தேயு 3:12, 13) தன் குடும்பத்தாரைக் கையாளுவதில் மோசமான ஏதாவது பலவீனம் இருந்தால், சபையில் தனிப்பட்ட சிலாக்கியங்களுக்கு அந்தச் சகோதரரைத் தகுதியற்றவராக்கும். ஏன்? பவுல் விளக்குகிறார்: “ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி கவனிப்பான்?” (1 தீமோத்தேயு 3:5, NW) தன் சொந்த மாம்சத்தினரே தன் கண்காணிப்புக்குக் கீழ்ப்படிய மனமற்றிருந்தால், மற்றவர்கள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்?
‘விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவன்’
5, 6. (அ) பிள்ளைகளைக் குறித்ததில் என்ன தகுதியைப் பவுல் தீத்துவுக்குக் குறிப்பிட்டார்? (ஆ) பிள்ளைகளையுடைய மூப்பர்களைக் குறித்ததில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
5 கிரேத்தா சபைகளில் கண்காணிகளை நியமிக்கும்படி தீத்துவுக்கு கட்டளையிட்டபோது, பவுல் இவ்வாறு முக்கியமாகக் குறிப்பிட்டார்: “குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம். ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனு”மாக இருக்க வேண்டும். ‘விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனாக’ இருக்க வேண்டும் என்ற இந்தத் தேவை எதைத்தான் குறிக்கிறது?—தீத்து 1:6, 7.
6 ‘விசுவாசமுள்ள பிள்ளைகள்’ என்ற இந்தப் பதம், ஏற்கெனவே தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டிருக்கிற இளைஞரை, அல்லது ஒப்புக்கொடுத்தலையும் முழுக்காட்டுதலையும் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிற இளைஞரைக் குறிக்கிறது. பொதுவாய், மூப்பர்களின் பிள்ளைகள் நல்ல முறையில் நடப்போராகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கும்படி சபை உறுப்பினர் எதிர்பார்க்கிறார்கள். ஒரு மூப்பர், தன் பிள்ளைகளின் விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தன்னால் கூடிய எல்லாவற்றையும் செய்கிறார் என்று தெரியவேண்டும். அரசராகிய சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “நடக்கவேண்டிய வழியில் பிள்ளையைப் பழக்கு, முதிர்வயதிலும் அவன் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6, தி.மொ.) ஆனால், அத்தகைய பயிற்றுவிப்பைப் பெற்றிருக்கிற ஓர் இளைஞன் யெகோவாவைச் சேவிக்க மறுத்தால் அல்லது வினைமையான குற்றமும் செய்தால் என்ன செய்வது?
7. (அ) மாறுபடா கண்டிப்பான ஒரு விதியை நீதிமொழிகள் 22:6 கூறுகிறதில்லையென்பது ஏன் தெளிவாயிருக்கிறது? (ஆ) ஒரு மூப்பரின் பிள்ளை யெகோவாவைச் சேவிக்க தெரிந்துகொள்கிறதில்லை என்றால், அந்த மூப்பர் ஏன் தன் சிலாக்கியங்களை இயல்பாக இழக்கமாட்டார்?
7 மேலே குறிப்பிடப்பட்ட நீதிமொழி கண்டிப்பான ஒரு விதியைக் கூறுகிறதில்லை என்பது தெளிவாயிருக்கிறது. சுய தெரிவுக்குரிய நியமத்தை அது நீக்குகிறதில்லை. (உபாகமம் 30:15, 16, 19) ஒரு மகனாவது மகளாவது பொறுப்பேற்பதற்குரிய வயதையடையும்போது, ஒப்புக்கொடுத்தலையும் முழுக்காட்டப்படுதலையும் பற்றியதில், அவன் அல்லது அவள் தன் சொந்த தீர்மானத்தைச் செய்ய வேண்டும். மூப்பராயிருக்கும் தகப்பன், தேவைப்பட்ட ஆவிக்குரிய உதவியையும், வழிநடத்துதலையும், சிட்சையையும் தெளிவாக அளித்திருந்தும், அந்த இளைஞன் யெகோவாவைச் சேவிக்கத் தெரிந்துகொள்ளுகிறதில்லை என்றால், அந்தத் தகப்பன் மூப்பராகச் சேவிப்பதிலிருந்து இயல்பாகத் தகுதியற்றவராவதில்லை. மாறாக, ஒரு மூப்பரின் பல பிள்ளைகள் வயதுவராதவர்களாக அவருடைய வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்து, ஒருவர்பின் ஒருவராக அவர்கள் ஆவிக்குரியப்பிரகாரம் நோயுற்று தொந்தரவுக்குள் சிக்கினால், அவர், அதற்கு மேலும் ‘தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவராக’ கருதப்படமாட்டார். (1 தீமோத்தேயு 3:4) ‘துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவராயிருப்பதற்கு,’ ஒரு கண்காணி மிகச் சிறந்த முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறாரெனத் தெரிய வேண்டும் என்பதே இந்தக் குறிப்பு.a
‘அவிசுவாசியான மனைவியை’ உடையவராய் இருப்பது
8. அவிசுவாசியாயிருக்கும் தன் மனைவியினிடமாக ஒரு மூப்பர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
8 அவிசுவாசியான மனைவியைக் கொண்ட கிறிஸ்தவ ஆண்களைக் குறித்து, பவுல் இவ்வாறு எழுதினார்: ‘சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். . . . என்னத்தினாலெனில், . . . அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. . . . புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?’ (1 கொரிந்தியர் 7:12-14, 16) இங்கே “அவிசுவாசி” என்ற சொல், எந்த மத நம்பிக்கைகளும் இல்லாத ஒரு மனைவியைக் குறிப்பிடுகிறதில்லை, ஆனால் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்காத ஒருவரையே குறிக்கிறது. அவள் ஒருவேளை யூத மதத்தினளாக, அல்லது புறமத தேவர்களில் நம்பிக்கையுடையவளாக இருந்திருக்கலாம். இன்று, ஒரு மூப்பர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டிருந்திருக்கலாம், அவள் அறியொணாமை அல்லது நாத்திகக் கொள்கை உடையவளாக இருக்கலாம். அவள் அவருடன் வாசமாயிருக்க மனமுள்ளவளாக இருந்தால், வெறுமனே நம்பிக்கைகள் வேறுபடுவதன் நிமித்தமாக அவர் அவளை விட்டுச் செல்லக்கூடாது. அவர் ‘விவேகத்தோடு அவளுடனே வாழ்ந்து, அவளுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்து,’ அவளை இரட்சிக்கும் நம்பிக்கையுடன் வாசம் செய்ய வேண்டும்.—1 பேதுரு 3:7; கொலோசெயர் 3:19.
9. கணவனும் மனைவியுமான இருவருமே, அவரவருக்குரிய மத நம்பிக்கைகளைப் பிள்ளைகளுக்குப் போதிக்க, சட்டம் உரிமை அளிக்கும் நாடுகளில், ஒரு மூப்பர் எவ்வாறு செயல்பட வேண்டும், அவருடைய சிலாக்கியங்களை இது எவ்வாறு பாதிக்கும்?
9 ஒரு கண்காணி பிள்ளைகளை உடையவராக இருந்தால், அவர்களை ‘யெகோவாவின் சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டு ஒழுங்கிலும்’ வளர்த்துவருவதில், கணவருக்கும் தகப்பனுக்குமுரிய தகுந்த தலைமை வகிப்பைச் செலுத்துவார். (எபேசியர் 6:4, NW) பல நாடுகளில், தங்கள் பிள்ளைகளுக்கு மத போதனை அளிக்கும் உரிமையை, மணத்துணைவர்கள் இருவருக்குமே சட்டம் அளிக்கிறது. இவ்வாறிருக்கையில், மனைவி தன் மத நம்பிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பிள்ளைகளை உட்படுத்துவதற்கான தன் உரிமையைச் செலுத்தவிடும்படி வற்புறுத்தலாம், இது அவர்களைச் சர்ச்சுக்கு அழைத்துச் செல்லுதல் உட்பட்டிருக்கலாம்.b நிச்சயமாகவே, பிள்ளைகள், பொய் மத ஆசாரங்களில் பங்குகொள்ளாமல் இருப்பதைக் குறித்ததில் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். குடும்பத் தலைவராக தகப்பன், தன் பிள்ளைகளோடு படிப்பதற்குத் தனக்கிருக்கும் தன் சொந்த உரிமையைப் பிரயோகித்து, கூடியபோதெல்லாம் அவர்களை ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அவர்கள் தங்கள் சொந்த தீர்மானங்களைச் செய்யும் வயதை எட்டுகையில், எந்த வழியைத் தாங்கள் பின்பற்றுவார்கள் என்பதைத் தங்களுக்குத் தாங்களே அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள். (யோசுவா 24:15) சத்தியத்தின் வழியில் தன் பிள்ளைகளைத் தகுந்தபடி போதிப்பதற்கு, நாட்டு சட்டம் தனக்கு அனுமதிப்பதையெல்லாம் அவர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை அவருடைய உடன் மூப்பர்களும் சபை உறுப்பினரும் காணக்கூடியதாக இருந்தால், அவர் கண்காணியாகத் தகுதிபெறாதவரெனக் கருதப்பட மாட்டார்.
‘தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துதல்’
10. குடும்பத்தை உடையவராக ஒரு மூப்பர் இருந்தால், அவருடைய பிரதான கடமை எங்குள்ளது?
10 தகப்பனாகவும், தன் மனைவி உடன் கிறிஸ்தவளாகவும் இருக்கிற ஒரு மூப்பருக்குங்கூட, தன் நேரத்தையும் கவனத்தையும் தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், சபை பொறுப்புகளுக்கும் தகுந்த விதத்தில் பகிர்ந்து அளிப்பது எளிதான காரியமல்ல. ஒரு கிறிஸ்தவ தகப்பனுக்கு தன் மனைவியையும் பிள்ளைகளையும் கவனிக்கும் கடமை இருக்கிறது என்று வேதவாக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் பராமரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவன், அவிசுவாசியிலுங் கெட்டவன்.” (1 தீமோத்தேயு 5:8, தி.மொ.) நல்ல கணவர்களாகவும் தகப்பன்மாராகவும் தங்களை ஏற்கெனவே காண்பித்திருக்கிற மணமாகிய ஆண்கள் மாத்திரமே கண்காணிகளாகச் சேவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட வேண்டுமென்று, இதே நிருபத்தில் பவுல் கூறினார்.—1 தீமோத்தேயு 3:1-5.
11. (அ) என்ன வகைகளில் ஒரு மூப்பர் ‘தன் சொந்தமானோரைப் பராமரிக்க’ வேண்டும்? (ஆ) தன் சபை பொறுப்புகளைக் கவனிக்க ஒரு மூப்பருக்கு இது எவ்வாறு உதவிசெய்யலாம்?
11 ஒரு மூப்பர் தனக்குச் சொந்தமானவர்களை, பொருள் சம்பந்தமாக மட்டுமல்லாமல், ஆவிக்குரியப்பிரகாரமாகவும் உணர்ச்சிவசப் பிரகாரமாகவும் ‘பராமரிக்க’ வேண்டும். ஞானியாகிய அரசன் சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “வெளியில் உன் வேலையை ஆயத்தஞ்செய்து வயலிலே செய்யவேண்டியதை முடித்து பின்பு உன் வீட்டைக் [“வீட்டாரை,” NW] கட்டுவாய்.” (நீதிமொழிகள் 24:27, தி.மொ.) ஆகையால், ஒரு கண்காணி, தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வேண்டிய பொருள் சம்பந்த, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளை அளித்துப் பராமரிக்கையில், ஆவிக்குரியப்பிரகாரமும் அவர்களைக் கட்டியெழுப்ப வேண்டும். இது நேரமெடுக்கிறது—சபைக்குரிய காரியங்களுக்கு அவர் செலவிட முடியாத நேரம். ஆனால் அது, குடும்ப சந்தோஷம் மற்றும் ஆவிக்குரிய நலன் வகையில் நிறைவான பலன்களை அளிக்கக்கூடிய நேரமாக இருக்கிறது. முடிவில், அவருடைய குடும்பம் ஆவிக்குரியப்பிரகாரம் பலப்பட்டிருந்தால், அந்த மூப்பர் குடும்பப் பிரச்சினைகளைக் கையாளுவதில் குறைந்த நேரத்தைச் செலவிடத் தேவைப்படலாம். இது, சபைக்குரிய காரியங்களைக் கவனிக்க அவருக்கு அதிக வாய்ப்பளிக்கும். நல்ல ஒரு கணவராகவும் நல்ல ஒரு தகப்பனாகவும் அவருடைய முன்மாதிரி, சபைக்கு ஆவிக்குரிய பயனுள்ளதாக இருக்கும்.—1 பேதுரு 5:1-3.
12. மூப்பராயிருக்கும் தகப்பன்மார் எந்தக் குடும்பக் காரியத்தில் நல்ல முன்மாதிரியை வைக்க வேண்டும்?
12 குடும்பத்தார்மீது நல்ல முறையில் தலைமைதாங்குவதானது, குடும்பப் படிப்பை தலைமைதாங்கி நடத்துவதற்கு நேரத்தைத் திட்டமிடுவதையும் உட்படுத்துகிறது. இந்தக் காரியத்தில் மூப்பர்கள் நல்ல முன்மாதிரியை வைப்பது தனிப்பட்ட முறையில் முக்கியமானது; ஏனெனில் திடமான குடும்பங்கள் திடமான சபைகளை உண்டாக்குகின்றன. தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் படிப்பதற்கு நேரமில்லாதபடி, ஒரு கண்காணியின் நேரம் மற்ற ஊழிய சிலாக்கியங்களில் முற்றிலுமாக ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு இருக்க நேரிட்டால், அவர் தன் திட்டத்தைத் திரும்ப கவனித்துப் பார்க்க வேண்டும். மற்ற காரியங்களில் தான் செலவிடுகிற நேரத்தை அவர் மாற்றியமைக்க அல்லது குறைக்க வேண்டியிருக்கலாம், சில சந்தர்ப்பத்தில் சிலாக்கியங்கள் சிலவற்றை விட்டுவிட வேண்டியதாகவும் இருக்கலாம்.
சமநிலைப்பட்ட கண்காணிப்பு
13, 14. குடும்பத்தையுடையோராக இருக்கும் மூப்பர்களுக்கு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் என்ன அறிவுரையை அளித்திருக்கின்றனர்?
13 குடும்ப மற்றும் சபை பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தும்படி கூறும் இந்த அறிவுரை புதியதல்ல. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார், இந்தக் காரியங்களைப் பற்றி பல ஆண்டுகளாக மூப்பர்களுக்கு அறிவுரை அளித்து வந்திருக்கின்றனர். (மத்தேயு 24:45, NW) 37-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, தி உவாட்ச்டவர் செப்டம்பர் 15, 1959 வெளியீட்டின் 553-ம் 554-ம் பக்கங்களில் இவ்வாறு அறிவுரை கொடுக்கப்பட்டது: “நம்முடைய நேரத்தைக் கேட்கும் இந்த எல்லாவற்றையும் சமநிலைப்படுத்த வேண்டிய ஒரு காரியமாக இது உண்மையில் இருக்கிறதல்லவா? சமநிலைப்படுத்தும் இதில், உங்கள் சொந்த குடும்பத்தின் அக்கறைகளுக்குத் தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக. ஒருவர், தன் சகோதரரும் அயலாரும் இரட்சிப்படையும்படி உதவிசெய்பவராய், சபைக்குரிய காரியங்களில் தன் எல்லா நேரத்தையும் பயன்படுத்திக்கொண்டு, தன் சொந்தக் குடும்பத்தாரின் இரட்சிப்புக்குரியவற்றைக் கவனியாமல் விடும்படி யெகோவா தேவன் நிச்சயமாகவே எதிர்பார்க்கமாட்டார். ஒருவரின் மனைவியும் பிள்ளைகளுமே அவருடைய முதல் பொறுப்பு.”
14 தி உவாட்ச்டவர் நவம்பர் 1, 1986-ன் வெளியீடு, பக்கம் 22-ல் இந்த அறிவுரை கொடுக்கப்பட்டது: “குடும்பமாக வெளி ஊழியத்தில் ஈடுபடுவது உங்களை நெருங்கிவரச் செய்யும், எனினும், பிள்ளைகளுடைய தனிப்பட்ட தேவையானது, உங்கள் சொந்த நேரத்தையும் உணர்ச்சிப்பூர்வமான ஊக்கத்தையும் தரும்படி கேட்கிறது. ஆகையால், ‘உங்கள் சொந்தமானவர்களின்’ ஆவிக்குரியதும், உணர்ச்சி சம்பந்தமானதும், பொருள் சம்பந்தமானதுமாகிய தேவைகளையும் நீங்கள் கவனித்து திருப்தி செய்யும் அதே சமயத்தில், . . . சபை கடமைகளுக்காக எவ்வளவு நேரத்தை நீங்கள் செலவிடலாம் என்பதைத் தீர்மானிப்பதற்குச் சமநிலை தேவைப்படுகிறது. தன் ‘சொந்த குடும்பத்தில் தேவபக்தியைப் பழக்கமாய் அனுசரிக்க ஒரு கிறிஸ்தவன் முதலாவது கற்றுக்கொள்ள’ வேண்டும். (1 தீமோத்தேயு 5:4, 8, NW)”
15. மனைவியையும் பிள்ளைகளையுமுடைய ஒரு மூப்பருக்கு ஞானமும் விவேகமும் ஏன் தேவை?
15 வேதப்பூர்வ நீதிமொழி ஒன்று இவ்வாறு கூறுகிறது: “ஞானத்தினால் வீடுகட்டப்படும், விவேகத்தினாலே அது நிலைநிறுத்தப்படும்.” (நீதிமொழிகள் 24:3, தி.மொ.) ஆம், ஒரு கண்காணி, தேவராஜ்ய கடமைகளை நிறைவேற்றுவதற்கும், அதேசமயத்தில் தன் வீட்டாரைக் கட்டியெழுப்புவதற்கும், அவருக்கு ஞானமும் விவேகமும் மிக நிச்சயமாகத் தேவை. வேதப்பூர்வமாய், ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு பகுதிகள் அவருக்கு இருக்கின்றன. அவருடைய குடும்பப் பொறுப்புகள் மற்றும் அவருடைய சபை பொறுப்புகள் உட்பட்டிருக்கின்றன. இவற்றிற்கிடையில் அவர் சமநிலையைக் காத்துவர அவருக்கு விவேகம் தேவை. (பிலிப்பியர் 1:9, 10) தன் முதல் கடமை எதுவெனத் தீர்மானிக்க அவருக்கு ஞானம் தேவை. (நீதிமொழிகள் 2:10, 11) எனினும், தன் சபை சிலாக்கியங்களைக் கவனிக்க எவ்வளவு பொறுப்புள்ளவராக அவர் உணர்ந்தாலும் கணவரும் தகப்பனுமாகத் தனக்கு, கடவுளால் கொடுக்கப்பட்ட முதல் பொறுப்பு, தன் குடும்பத்தைக் கவனிப்பதும் காப்பதுமே என்பதை அவர் உணரவேண்டும்.
நல்ல தகப்பன்மார்களாயும் நல்ல மூப்பர்களாயும்
16. ஒரு மூப்பர், தகப்பனாகவும் இருந்தால், என்ன அனுகூலம் அவருக்கு உள்ளது?
16 நல்நடத்தையுள்ள பிள்ளைகளையுடைய ஒரு மூப்பர் உண்மையில் ஒரு சம்பத்தாக இருக்க முடியும். தன் குடும்பத்தை நன்றாய்ப் பராமரிக்க அவர் கற்றுக்கொண்டால், சபையிலுள்ள மற்ற குடும்பங்களுக்கு உதவிசெய்யத் திறமையுடையவராக இருப்பார். அவர்களுடைய பிரச்சினைகளை அவர் நன்றாய்ப் புரிந்துகொண்டு, தன் சொந்த அனுபவத்தைக் கொண்டே அறிவுரை கொடுக்கலாம். மகிழ்ச்சிக்கேதுவாக, உலகமெங்கும் ஆயிரக்கணக்கான மூப்பர்கள், கணவர்களாகவும் தகப்பன்மாராகவும், கண்காணிகளாகவும் நல்ல முறையில் செயல்படுகிறார்கள்.
17. (அ) தகப்பனும் மூப்பருமாக இருக்கிற ஒருவர் எதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது? (ஆ) சபையின் மற்ற உறுப்பினர் எவ்வாறு அனுதாபம் காண்பிக்க வேண்டும்?
17 குடும்பத்தையுடைய ஒருவர் மூப்பராயிருப்பதற்கு, அவர், தன் மனைவியையும் பிள்ளைகளையும் கவனித்து வருகையில், சபையிலுள்ள மற்றவர்களுக்கு நேரத்தையும் கவனத்தையும் செலுத்த இயலும்படி, தன் விவகாரங்களை ஒழுங்குபடுத்தி அமைக்கக்கூடிய முதிர்ச்சியடைந்த ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும். தன் மேய்ப்பு வேலை, தன் வீட்டில் தொடங்குகிறது என்பதை அவர் ஒருபோதும் மறக்கக்கூடாது. மனைவியையும் பிள்ளைகளையும் உடைய மூப்பர்களுக்கு, தங்கள் குடும்பக் கடமைகள், தங்கள் சபை கடமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த பொறுப்பு இருப்பதை அறிகிறவர்களாய், சபை உறுப்பினர், அவர்களுடைய நேரத்தை மட்டுக்குமீறி கேட்க முயற்சி செய்ய மாட்டார்கள். உதாரணமாக, அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டியவர்களாக இருக்கும் பிள்ளைகளையுடைய ஒரு மூப்பர், மாலைநேர கூட்டங்களுக்குப் பின்பு, எல்லா நாட்களிலும் சிறிது நேரம் இருக்க இயலாதிருக்கலாம். சபையின் மற்ற உறுப்பினர், இதைப் புரிந்துகொண்டு அனுதாபம் காட்ட வேண்டும்.—பிலிப்பியர் 4:5.
நம் மூப்பர்கள் நமக்கு அருமையானவர்களாக இருக்க வேண்டும்
18, 19. (அ) 1 கொரிந்தியர் 7-ம் அதிகாரத்தை நாம் கூர்ந்தாராய்ந்தது, எதை உணரும்படி நம்மைச் செய்வித்திருக்கிறது? (ஆ) அத்தகைய கிறிஸ்தவ ஆண்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
18 கொரிந்தியருக்கு எழுதின பவுலின் முதல் நிருபத்தில் 7-ம் அதிகாரத்தை நாம் கூர்ந்தாராய்ந்ததானது, மணமாகாத ஆட்கள் பலர், அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையைப் பின்பற்றி, ராஜ்ய அக்கறைகளைச் சேவிப்பதற்குத் தங்கள் சுயாதீனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் காணும்படி செய்திருக்கிறது. மணமாகி, பிள்ளைகளில்லாத ஆயிரக்கணக்கான சகோதரருங்கூட, தங்கள் மனைவிகளுக்குக் கடமைப்பட்ட கவனத்தை அளித்துக்கொண்டு, அதேசமயத்தில் சிறந்த கண்காணிகளாக மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும், சபைகளிலும், காவற்கோபுர கிளை அலுவலகங்களிலும் சேவை செய்கின்றனர்; போற்றத்தக்க முறையில் அவர்களுடைய மனைவிமார் அவர்களோடு ஒத்துழைக்கின்றனர். முடிவாக, யெகோவாவுடைய ஜனங்களின் ஏறக்குறைய 80,000 சபைகளில், அநேக தகப்பன்மார், தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் அன்புடன் கவனித்து வருவதுமட்டுமல்லாமல், அக்கறையுள்ள மேய்ப்பர்களாகத் தங்கள் சகோதரருக்கும் சேவை செய்வதற்கு நேரத்தைச் செலவிடுகிறார்கள்.—அப்போஸ்தலர் 20:28.
19 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் உழைக்கிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.” (1 தீமோத்தேயு 5:17, தி.மொ.) ஆம், தங்கள் குடும்பங்களிலும் சபையிலும் நல்ல முறையில் விசாரணைசெய்கிற மூப்பர்கள் நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் தகுந்தவர்கள். நிச்சயமாகவே நாம், ‘இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ண’ வேண்டும்.—பிலிப்பியர் 2:29.
[அடிக்குறிப்புகள்]
a தி உவாட்ச்டவர், டிசம்பர் 1, 1960, பக்கங்கள் 735-6 ஐக் காண்க.
b தி உவாட்ச்டவர், பிப்ரவரி 1, 1978, பக்கங்கள் 31-2-ஐக் காண்க.
மறுபார்வையிடுதல்
◻ பொ.ச. முதல் நூற்றாண்டில் மூப்பர்கள் பலர், குடும்பத்தையுடையோராக இருந்தனரென்று நாம் எப்படி அறிகிறோம்?
◻ மணமாகி பிள்ளைகளையுடையோராக இருக்கும் மூப்பர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது, ஏன்?
◻ ‘விசுவாசமுள்ள பிள்ளைகளை’ உடையவராக இருப்பது என்பது குறிப்பதென்ன, ஆனால் ஒரு மூப்பரின் பிள்ளை யெகோவாவைச் சேவிக்கத் தெரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்வது?
◻ என்ன வகைகளில் ஒரு மூப்பர் ‘தனக்குச் சொந்தமானவர்களைப் பராமரிக்க’ வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
திடமான குடும்பங்கள் திடமான சபைகளை உண்டாக்குகின்றன