-
‘வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்துங்கள்’காவற்கோபுரம்—2002 | செப்டம்பர் 15
-
-
‘வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்துங்கள்’
“நாம் ஒருபோதும் வழிவிலகிப் போகாதபடிக்கு, கேட்கும் காரியங்களுக்கு வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.”—எபிரெயர் 2:1, NW.
1. கவனச்சிதறலால் எவ்வாறு விபரீதம் விளையலாம் என்பதற்கு உதாரணம் தருக.
ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 37,000 பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். டிரைவர்கள் சாலைமீது அதிக கவனம் செலுத்தினால் இவ்வளவு பேர் உயிரிழக்க மாட்டார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். படங்களையும் விளம்பர பலகைகளையும் பார்ப்பதால் அல்லது செல் போன் உபயோகிப்பதால் சில டிரைவர்களின் கவனம் சிதறுகிறது. வண்டி ஓட்டும்போதே சாப்பிடுவதில் மூழ்கிவிடும் டிரைவர்களும் உண்டு. இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், கவனச்சிதறலால் விபரீதம் விளையலாம்.
2, 3. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன அறிவுரை வழங்கினார், அது ஏன் பொருத்தமாக இருந்தது?
2 வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, சில எபிரெய கிறிஸ்தவர்களுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திய ஒருவித கவனச்சிதறலைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து கடவுளுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதால் தேவதூதர்கள் அனைவருக்கும் மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறார் என்பதை பவுல் வலியுறுத்தினார். அதன்பின், “இதனால்தான் நாம் ஒருபோதும் வழிவிலகிப் போகாதபடிக்கு, கேட்கும் காரியங்களுக்கு வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்று அவர் குறிப்பிட்டார்.—எபிரெயர் 2:1, NW.
3 எபிரெய கிறிஸ்தவர்கள் இயேசுவைக் குறித்து ‘கேட்ட காரியங்களுக்கு வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்த வேண்டியது’ ஏன் அவசியமாக இருந்தது? ஏனெனில் இயேசு பூமியை விட்டுச்சென்று சுமார் 30 வருடங்கள் ஆகியிருந்தன. எஜமானர் இல்லாததால் சில எபிரெய கிறிஸ்தவர்கள் உண்மையான விசுவாசத்தை விட்டு வழிவிலகிச் செல்ல ஆரம்பித்தனர். தாங்கள் முன்பு கடைப்பிடித்து வந்த யூத வணக்கமுறையின் மீது அவர்களுடைய கவனம் திரும்பியது.
அவர்கள் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டியிருந்தது
4. யூத மதத்திற்கே திரும்பிவிட வேண்டுமென்ற தூண்டுதல் ஏன் சில எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்?
4 யூத மதத்திற்கே திரும்பிவிட வேண்டுமென்ற தூண்டுதல் ஏன் ஒரு கிறிஸ்தவருக்கு ஏற்பட்டிருக்கலாம்? நியாயப்பிரமாண சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வணக்கமுறையில் காணக்கூடிய காரியங்கள் இருந்தன. மக்களால் ஆசாரியர்களைப் பார்க்க முடிந்தது, தகன பலிகளை முகர முடிந்தது. ஆனால் கிறிஸ்தவ மதமோ சில அம்சங்களில் மிகவும் வேறுபட்டிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து இருந்தார், ஆனால் அவர் 30 ஆண்டுகளாக பூமியில் காணப்படவில்லை. (எபிரெயர் 4:14) அவர்களுக்கு ஓர் ஆலயம் இருந்தது, ஆனால் அதன் பரிசுத்த ஸ்தலம் பரலோகமாக இருந்தது. (எபிரெயர் 9:24) நியாயப்பிரமாணத்தின்படி சரீர விருத்தசேதனம் தேவைப்பட்டது, ஆனால் கிறிஸ்தவ விருத்தசேதனமோ “ஆவியின்படி இருதயத்தில்” உண்டானதாக இருந்தது. (ரோமர் 2:29) ஆகவே எபிரெய கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்தவம் உணர்வுக்கு எட்டாததாக தோன்ற ஆரம்பித்திருக்கலாம்.
5. இயேசுவினால் ஏற்படுத்தப்பட்ட வணக்கமுறை நியாயப்பிரமாண வணக்கமுறையைக் காட்டிலும் மேன்மையானது என்பதை பவுல் எப்படி காட்டினார்?
5 கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட வணக்கமுறை சம்பந்தமாக மிக முக்கியமான ஒரு விஷயத்தை எபிரெய கிறிஸ்தவர்கள் உணர வேண்டியிருந்தது. அது பார்க்க முடிந்த காரியங்களைவிட விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இருந்தாலும், தீர்க்கதரிசியாகிய மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைவிட மேலானதாக இருந்தது. “காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” என பவுல் எழுதினார். (எபிரெயர் 9:13, 14) ஆம், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் கிடைக்கும் மன்னிப்பு, நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தப்பட்ட பலிகள் அளித்த மன்னிப்பைக் காட்டிலும் பல விதங்களில் மிக மேன்மையானது.—எபிரெயர் 7:26-28.
6, 7. (அ) என்ன சூழ்நிலையால் எபிரெய கிறிஸ்தவர்கள், தாங்கள் ‘கேட்ட காரியங்களுக்கு வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்த’ வேண்டியது அவசரத் தேவையாக இருந்தது? (ஆ) எபிரெயர்களுக்கு பவுல் கடிதம் எழுதியபோது எருசலேமின் அழிவிற்கு இன்னும் எவ்வளவு காலம் இருந்தது? (அடிக்குறிப்பைக் காண்க.)
6 எபிரெய கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி கேட்ட காரியங்களுக்கு கூர்ந்த கவனம் செலுத்த வேண்டியிருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. எருசலேம் அழிக்கப்படுமென இயேசு முன்னறிவித்திருந்தார். “உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்று கூறினார்.—லூக்கா 19:43, 44.
7 இது எப்போது நடக்கவிருந்தது? அந்த நாளையும் நாழிகையையும் இயேசு வெளிப்படுத்தவில்லை. மாறாக, “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்” என்ற அறிவுரையை வழங்கினார். (லூக்கா 21:20, 21) இயேசு அவ்வார்த்தைகளை சொல்லி 30 ஆண்டுகளுக்குப் பிறகு, எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் அவசர உணர்வை இழந்தனர், அவர்களது கவனம் சிதறியது. அடையாள அர்த்தத்தில், சாலை மீதிருந்த அவர்களது கவனம் திசைதிரும்பிவிட்டதாக சொல்லலாம். அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் விபரீதம் நிச்சயம். அவர்கள் நம்பினார்களோ இல்லையோ எருசலேமின் அழிவு வாசலருகே காத்திருந்தது!a பவுலின் அறிவுரை, எருசலேமில் ஆவிக்குரிய தூக்கத்திலிருந்த கிறிஸ்தவர்களை விழித்துக்கொள்ள வைக்கும் எச்சரிப்பொலியாக அமைந்தது.
இன்று “வழக்கத்திற்கும் அதிகமான கவனம்” செலுத்துதல்
8. நாம் ஏன் கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்களுக்கு “வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்த” வேண்டும்?
8 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல் நாம் கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்களுக்கு “வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்த” வேண்டும். ஏன்? ஏனெனில் நாமும் விரைவில் ஓர் அழிவை சந்திக்கவிருக்கிறோம்; அது ஒரு தேசத்திற்கு மட்டுமல்ல, இந்த முழு காரிய ஒழுங்குமுறைக்கே வரவிருக்கும் ஓர் அழிவு. (வெளிப்படுத்துதல் 11:18; 16:14, 16) யெகோவா குறிப்பாக எந்த நாளில் அல்லது நாழிகையில் இந்த நடவடிக்கையை எடுப்பார் என்பது நமக்கு தெரியாதுதான். (மத்தேயு 24:36) இருந்தாலும் நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை கண்கூடாக காண்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) ஆகவே, நம் கவனத்தை திசைதிருப்பும் எந்த காரியத்தைக் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தைக்கு கவனம் செலுத்தி, மிகுந்த அவசர உணர்வை காத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ‘நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பிப்போம்.’—லூக்கா 21:36, பொ.மொ.
-
-
‘வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்துங்கள்’காவற்கோபுரம்—2002 | செப்டம்பர் 15
-
-
a எபிரெயர்களுக்கான கடிதம் பெரும்பாலும் பொ.ச. 61-ல் எழுதப்பட்டிருக்கலாம். அப்படியென்றால் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிற்பாடுதான் செஸ்டியஸ் காலஸின் சேனைகள் எருசலேமை சூழ்ந்தன. சீக்கிரத்தில் அந்த சேனைகள் பின்வாங்கவே, விழிப்புள்ள கிறிஸ்தவர்களால் தப்பியோட முடிந்தது. அதன்பின் நான்கு வருடங்களுக்குப் பிற்பாடு தளபதி டைட்டஸின் தலைமையில் ரோம சேனைகள் நகரை அழித்தன.
-