இளைஞர்களே—உங்கள் செயலை யெகோவா மறக்க மாட்டார்!
“உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
1. யெகோவா உங்கள் சேவையை மதித்துணருகிறார் என்பதை பைபிள் புத்தகங்களாகிய எபிரெயரும் மல்கியாவும் எப்படி காட்டுகின்றன?
நண்பர் யாருக்காவது அன்பாக உதவி செய்து, அவரோ பதிலுக்கு நன்றி சொல்லாமல் இருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? மனதார செய்த உதவியை யாராவது அலட்சியப்படுத்தும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கலாம்; அவர்கள் அதை சுத்தமாக மறந்துவிடுவது அதைவிட கொடுமை. ஆனால் யெகோவாவிற்கு நாம் முழு இருதயத்தோடு சேவை செய்யும் விஷயத்திலோ எவ்வளவு வித்தியாசம்! “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 6:10) இதன் அர்த்தத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தம்முடைய சேவையில் நீங்கள் செய்தவற்றையும் தொடர்ந்து செய்து வருபவற்றையும் மறந்துவிடுவது தம் பங்கில் அநீதியான செயல் என்று—பாவம் என்று—யெகோவா கருதுவார். எப்பேர்ப்பட்ட நன்றி மதித்துணர்வுள்ள கடவுள்!—மல்கியா 3:10.
2. யெகோவாவை சேவிப்பது எந்த விதத்தில் அரிய வாய்ப்பு?
2 நன்றி மதித்துணர்வுள்ள இந்தக் கடவுளை வணங்கி அவருக்கு சேவை செய்யும் அரிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் உடன் வணக்கத்தார் சுமார் 60 லட்சம் பேர் மட்டுமே; ஆனால் உலக மக்களோ சுமார் 600 கோடி. ஆகவே உங்களுக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் உண்மையில் அரிதுதான். மேலும், நீங்கள் நற்செய்தியைக் கேட்டு பிரதிபலிப்பதுதானே யெகோவா உங்கள்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதற்கு அத்தாட்சி. “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசுவும் சொன்னார். (யோவான் 6:44) ஆம், கிறிஸ்துவின் பலியினுடைய நன்மைகளைப் பெற யெகோவா தனிப்பட்ட நபர்களுக்கு உதவுகிறார்.
உங்கள் மகத்தான பாக்கியத்திற்காக நன்றி காட்டுவது
3. யெகோவாவை சேவிக்கும் பாக்கியத்திற்காக கோராகுவின் குமாரர்கள் எவ்வாறு நன்றி தெரிவித்தார்கள்?
3 முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் விசேஷ வாய்ப்பு உங்களுக்கு உண்டு. (நீதிமொழிகள் 27:11) இந்த வாய்ப்பை நீங்கள் ஒருபோதும் லேசான விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. யெகோவாவை சேவிக்கும் பாக்கியத்திற்காக கோராகுவின் குமாரர்கள் நன்றி தெரிவித்து பாடினார்கள்; கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அந்தப் பாடலில் இப்படி வாசிக்கிறோம்: “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.”—சங்கீதம் 84:10.
4. (அ) கட்டுப்பாடுகள் நிறைந்ததுதான் யெகோவாவின் வணக்கம் என சிலர் நினைக்கக் காரணம் என்ன? (ஆ) யெகோவா தம் ஊழியர்களைக் கவனித்து பலன் அளிக்க ஆர்வமுள்ளவராக இருப்பதை எவ்விதத்தில் காட்டுகிறார்?
4 பரலோக தந்தையை சேவிக்கும் பாக்கியத்தை நீங்களும் அவ்வாறே கருதுகிறீர்களா? யெகோவாவின் வணக்கம் உங்கள் சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதாக சிலசமயங்களில் தோன்றலாம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். பைபிள் நியமங்களுக்கு ஏற்ப வாழ ஓரளவு சுயதியாகம் அவசியம் என்பதும் உண்மைதான். இருந்தாலும் யெகோவா உங்களிடம் கேட்கும் எதுவும் உங்கள் நன்மைக்கே. (சங்கீதம் 1:1-3) அதோடு, யெகோவா உங்கள் முயற்சிகளைப் பார்க்கிறார், நீங்கள் உண்மையோடு நிலைத்திருப்பதற்கு பாராட்டை செயலில் தெரிவிக்கிறார். உண்மையில் யெகோவா “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்று” பவுல் எழுதினார். (எபிரெயர் 11:6) ஆம், பலன் அளிப்பதற்கான வாய்ப்புகளை யெகோவா தேடுகிறார். பூர்வ இஸ்ரவேலில் இருந்த நீதியுள்ள தீர்க்கதரிசி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”—2 நாளாகமம் 16:9.
5. (அ) உங்கள் இருதயம் யெகோவாவிடம் முழுமையாக இசைந்திருப்பதைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வழி எது? (ஆ) உங்கள் விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?
5 உங்கள் இருதயம் யெகோவாவிடம் முழுமையாக இசைந்திருப்பதைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வழி, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதாகும். உங்கள் பள்ளியில் உள்ள பிள்ளைகளிடம் சாட்சிகொடுக்க எப்போதாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறதா? இதைச் செய்வது முதலில் மலைபோன்ற சவால்போல் தெரியலாம், அதை நினைத்தாலே பயமாகவும் இருக்கலாம். ‘அவர்கள் என்னை கேலி செய்து சிரித்தால் என்ன செய்வேன்?’ அல்லது ‘என்னுடைய மதம் விசித்திரமாக இருப்பதாக நினைத்தால் என்ன செய்வேன்?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். எல்லாருமே ராஜ்ய செய்தியைக் கேட்கப் போவதில்லை என்று இயேசு சொன்னார். (யோவான் 15:20) ஆனால் எப்போதுமே கேலி கிண்டல் செய்யப்பட்டு ஒதுக்கப்படுவீர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, ராஜ்ய செய்தியை ஆர்வமாக கேட்போரை அநேக இளம் சாட்சிகள் சந்தித்திருக்கிறார்கள். அதுமட்டுமா, தங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காததற்காக மற்ற இளைஞர்களிடம் அதிக மதிப்பு மரியாதையையும் இவர்கள் சம்பாதித்திருக்கிறார்கள்.
“யெகோவா உங்களுக்கு உதவுவார்”
6, 7. (அ) பதினேழு வயதான ஜெனிஃபர் எப்படி தன் பள்ளி மாணவிகளிடம் சாட்சி கொடுத்தாள்? (ஆ) அவளுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
6 ஆனால் விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் எப்படி தைரியத்தை ஒன்றுதிரட்டலாம்? உங்கள் மதத்தைப் பற்றி கேட்போரிடம் நேர்மையாகவும் நேரடியாகவும் பதிலளிக்க ஏன் தீர்மானமாயிருக்கக் கூடாது? 17 வயது நிரம்பிய ஜெனிஃபரின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “நான் ஸ்கூலில் மதியான சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் டேபிளில் உட்கார்ந்திருந்த மாணவிகள் மதத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள், அப்போது என் மதம் என்னவென்று ஒருத்தி கேட்டாள்” என ஜெனிஃபர் சொல்கிறாள். அந்த மாணவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அவள் பயந்தாளா? “ஆமாம், அவர்கள் என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோ என்று பயமாக இருந்தது” என அவள் ஒப்புக்கொள்கிறாள். இருந்தாலும் ஜெனிஃபர் என்ன செய்தாள்? “நான் யெகோவாவின் சாட்சி என்று அந்தப் பிள்ளைகளிடம் சொன்னேன். முதலில் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். யெகோவாவின் சாட்சிகள் விசித்திரமானவர்கள் என அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆகவே என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அவர்களுக்கிருந்த சில தப்பபிப்பிராயங்களை என்னால் நீக்க முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகும் சில பிள்ளைகள் அவ்வப்போது என்னிடம் வந்து கேள்விகள் கேட்டார்கள்” என அவள் சொல்கிறாள்.
7 தன் நம்பிக்கைகளைப் பற்றி பேச வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டதற்காக ஜெனிஃபர் பிற்பாடு மனம் வருந்தினாளா? இல்லவே இல்லை! “சாப்பாட்டு நேரம் முடிந்ததும் நான் பேசியதை நினைத்து நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் யார் என இப்போது அந்தப் பிள்ளைகளுக்கு ஓரளவுக்கு தெரிந்துவிட்டது” என்கிறாள். ஜெனிஃபர் இப்போது தரும் அறிவுரை ரொம்ப எளிதானது: “ஸ்கூல் பிள்ளைகளிடம் அல்லது டீச்சர்களிடம் சாட்சி கொடுக்க தயக்கமாக இருந்தால் உடனடியாக சுருக்கமாய் ஜெபம் செய்யுங்கள். யெகோவா உங்களுக்கு உதவுவார். சாட்சிகொடுக்க அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியதற்காக நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.”—1 பேதுரு 3:15.
8. (அ) எதிர்பாராத சூழ்நிலையை சந்தித்தபோது நெகேமியாவிற்கு ஜெபம் எவ்வாறு உதவியது? (ஆ) யெகோவாவிடம் சுருக்கமாகவும் மௌனமாகவும் ஜெபம் செய்ய வேண்டிய என்னென்ன சூழ்நிலைகள் உங்களுக்கு பள்ளியில் வரலாம்?
8 உங்கள் விசுவாசத்தைக் குறித்து சாட்சிகொடுக்க வாய்ப்பு கிடைக்கும்போது யெகோவாவிடம் ‘உடனடியாக சுருக்கமாய் ஜெபம் செய்ய வேண்டும்’ என ஜெனிஃபர் சிபாரிசு செய்வதை கவனியுங்கள். இதைத்தான் நெகேமியா செய்தார். பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் பானபாத்திரக்காரனாக இருந்த அவர், ஒரு எதிர்பாராத சூழ்நிலையை சந்தித்தபோது அப்படி செய்தார். யூதர்களின் நிலைமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் நெகேமியா மிகவும் வருத்தமாக இருந்தார். எருசலேமின் மதிலும் வாசல்களும் பாழாகிக் கிடந்ததைக் கேள்விப்பட்டார். அவரது சோகம் முகத்தில் தெரிந்ததால் அதற்கான காரணத்தை ராஜா கேட்டார். பதில் சொல்வதற்கு முன் நெகேமியா உதவிக்காக ஜெபம் செய்தார். பிறகு, எருசலேமிற்கு திரும்பிச் சென்று, இடிந்து கிடந்த நகரை திரும்பக் கட்ட ராஜாவிடம் தைரியமாக அனுமதி கேட்டார். நெகேமியாவிற்கு அர்தசஷ்டா அனுமதி வழங்கினார். (நெகேமியா 2:1-8) இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்? விசுவாசத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கையில் உங்களுக்கு பயமாக இருந்தால், மௌனமாக ஜெபம் செய்ய தவறாதீர்கள். “[யெகோவாவின்] மேல் உங்கள் கவலைகளையெல்லாம் எறிந்துவிடுங்கள், ஏனெனில் அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்” என பேதுரு எழுதினார்.—1 பேதுரு 5:7, NW; சங்கீதம் 55:22.
‘விடையளிக்க எப்போதும் ஆயத்தமாய் இருத்தல்’
9. இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தின் 23 பிரதிகளை 13 வயது லியா எப்படி அளித்தாள்?
9 மற்றொரு அனுபவத்தைக் கவனியுங்கள். 13 வயது நிரம்பிய லியா, பள்ளியில் மதிய இடைவேளையின்போது இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்a என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். “மற்றவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரத்தில் ஒரு பெரிய கூட்டமே என்னை சூழ்ந்துகொண்டது. அது என்ன புத்தகம் என்று எல்லாரும் கேட்க ஆரம்பித்தார்கள்” என்கிறாள். சாயங்காலத்திற்குள், தங்களுக்கும் இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தைத் தருமாறு நான்கு மாணவிகள் லியாவிடம் கேட்டார்கள். கொஞ்ச நாளில் இந்த மாணவிகள் மற்றவர்களிடம் அந்தப் புத்தகத்தைக் காட்டவே, அவர்களும் தங்களுக்கென்று ஒரு பிரதியைக் கேட்டார்கள். அடுத்த சில வாரங்களில் லியா தன் பள்ளி மாணவர்களிடமும் அவர்களுடைய நண்பர்களிடமும் 23 பிரதிகளை கொடுத்தாள். தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பற்றி மற்றவர்கள் முதலில் கேட்டபோது பதில் சொல்வது லியாவிற்கு சுலபமாக இருந்ததா? நிச்சயமாக இல்லை! “முதலில் மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது, ஆனாலும் ஜெபம் செய்தேன், அப்போது யெகோவா என்னோடு இருப்பதை உணர்ந்தேன்” என அவள் ஒப்புக்கொள்கிறாள்.
10, 11. யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இஸ்ரவேல சிறுமி எவ்வாறு சீரிய படைத் தலைவருக்கு உதவினாள், அதன் பிறகு அவர் என்ன மாற்றங்களைச் செய்தார்?
10 லியாவின் அனுபவம், சீரியாவிற்கு சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்ட இஸ்ரவேல சிறுமியின் சூழ்நிலையை உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம். சீரிய படைத் தலைவரான நாகமான் குஷ்டரோகியாக இருந்தார். அவருடைய மனைவி ஒருவேளை அதைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கலாம்; அதைக் கேட்டு அந்தச் சிறுமி தன் விசுவாசத்தை சொல்லத் தொடங்கியிருக்கலாம். “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.”—2 இராஜாக்கள் 5:1-3.
11 அந்தச் சிறுமியின் தைரியத்தினால், “இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை” என்பதை நாகமான் அறிந்துகொண்டார். “இனிக் கர்த்தருக்கே [“யெகோவாவிற்கே,” NW] அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை” என்றும் நாகமான் தீர்மானித்தார். (2 இராஜாக்கள் 5:15, 17) அந்தச் சிறுமியின் தைரியத்தை யெகோவா நிச்சயமாகவே ஆசீர்வதித்தார். இன்றுள்ள இளைஞர்களையும் அவரால் ஆசீர்வதிக்க முடியும், அவ்வாறே செய்வார். லியா இதை உண்மையென அனுபவத்தில் கண்டாள். காலப்போக்கில் அவளுடைய பள்ளியில் படித்த பிள்ளைகள் சிலர் அவளிடம் வந்து, இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் தங்கள் நடத்தையை நல்ல விதமாக மாற்றிக்கொள்ள உதவுவதாக சொன்னார்கள். “எனக்கு சந்தோஷமாக இருந்தது, ஏனென்றால் யெகோவாவைப் பற்றி அதிகமாக கற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள மற்றவர்களுக்கு நான் உதவியதாக எனக்குப் பட்டது” என்கிறாள் லியா.
12. உங்கள் விசுவாசத்தைக் குறித்து விளக்கமளிக்க நீங்கள் எவ்வாறு பலம் பெறலாம்?
12 ஜெனிஃபரையும் லியாவையும் போல் நீங்களும் நல்ல அனுபவங்களைப் பெறலாம். பேதுருவின் அறிவுரையைப் பின்பற்றுங்கள்; ஒரு கிறிஸ்தவராக, ‘உங்கள் நம்பிக்கையைப் பற்றி யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும், ஆனால் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் விடையளிக்க வேண்டும்’ என அவர் எழுதினார். (1 பேதுரு 3:15, NW) நீங்கள் இதை எப்படி செய்யலாம்? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, “முழு தைரியத்தோடு” பிரசங்கிக்க உதவுமாறு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (அப்போஸ்தலர் 4:30) பிறகு உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் தைரியமாக பேசுங்கள். அதன் பலன்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அதோடு, யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவீர்கள்.
வீடியோக்களும் ஸ்பெஷல் ப்ராஜக்ட்டுகளும்
13. சில இளைஞர்கள் எவ்வாறு சாட்சி கொடுக்க வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்? (பக்கங்கள் 20, 21-ல் உள்ள பெட்டிகளைக் காண்க.)
13 அநேக இளைஞர்கள் வீடியோக்களைப் பயன்படுத்தி தங்கள் பள்ளி மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ சாட்சி கொடுத்திருக்கிறார்கள். சிலசமயம், ஸ்கூல் ப்ராஜக்ட்டுகளும் யெகோவாவை துதிப்பதற்கான வாய்ப்புகளைத் தந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, 15 வயது நிரம்பிய இரு யெகோவாவின் சாட்சிகள், உலக வரலாற்று பாடத்தில் ஒரு அஸைன்மென்ட்டை பெற்றார்கள். உலக மதங்களில் ஒன்றைப் பற்றி அவர்கள் ஒரு ரிப்போர்ட் எழுத வேண்டியிருந்தது. இருவரும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ரிப்போர்ட் எழுத தீர்மானித்தார்கள். இதற்காக யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தை பயன்படுத்தினார்கள்.b ஐந்து நிமிடங்களுக்கு வகுப்பினர் முன்பாக அவர்கள் பேசவும் வேண்டியிருந்தது. டீச்சரும் மாணவர்களும் பல கேள்விகள் கேட்டதால் அவர்கள் கூடுதலாக 20 நிமிடங்களுக்கு வகுப்பினர் முன் நின்று பதில் சொல்ல வேண்டியதாயிற்று. அதன்பின் பல வாரங்களுக்கு மாணவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தொடர்ந்து கேள்விகள் கேட்டார்கள்!
14, 15. (அ) மனித பயம் ஏன் ஒரு கண்ணி? (ஆ) உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் ஏன் நம்பிக்கையோடு சொல்ல வேண்டும்?
14 இந்த அனுபவங்கள் அனைத்தும் காட்டுகிறபடி, யெகோவாவின் சாட்சியாக உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் மற்றவர்களிடம் பேசினால் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். மனித பயத்திற்கு இடம்கொடுத்து, யெகோவாவை அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவும் பாக்கியத்தையும் சந்தோஷத்தையும் இழந்துவிடாதீர்கள். “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—நீதிமொழிகள் 29:25.
15 உங்கள் சகாக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒன்று, கிறிஸ்தவ இளைஞராகிய உங்களிடம் ஏற்கெனவே இருக்கிறது என்பதை மறவாதீர்கள்; அதுதான், இப்போது சிறந்த வாழ்க்கையும் எதிர்காலத்தில் நித்திய ஜீவனை பெறும் வாய்ப்பும் ஆகும். (1 தீமோத்தேயு 4:8) ஒருவேளை, ஐக்கிய மாகாணங்களில் உள்ளவர்கள் பொதுவாக உலக சிந்தையுள்ளவர்கள் அல்லது நம் செய்தியில் ஆர்வம் காட்டாதவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் ஆர்வத்திற்குரிய விதமாக, ஒரு சுற்றாய்வின்படி அங்குள்ள இளைஞர்களில் பாதி பேர் மதத்தை மிக முக்கியமானதாக கருதுகிறார்கள், மேலும் மூன்றில் ஒரு பங்கினர் மத நம்பிக்கை தங்கள் வாழ்க்கையில் “மிக அதிக செல்வாக்கு செலுத்துவதாக” சொல்கிறார்கள். உலகின் மற்ற அநேக பகுதிகளிலும் இதே நிலைமை இருக்கலாம். ஆகவே, உங்கள் பள்ளியில் உள்ள பிள்ளைகளும் பைபிளைப் பற்றி நீங்கள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது.
இளைஞராக யெகோவாவிடம் நெருங்கிச் செல்லுங்கள்
16. யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்த அவரைப் பற்றி பேசுவதோடு வேறு எதுவும் செய்ய வேண்டும்?
16 யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்த அவரைப் பற்றி பேசுவது மட்டுமே போதாது. அவரது தராதரங்களுக்கு ஏற்ப நடத்தையை மாற்றிக்கொள்வதும் அவசியம். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (1 யோவான் 5:3) யெகோவாவிடம் நெருங்கிச் செல்லும்போது இதை நீங்கள் உண்மையென காண்பீர்கள். நீங்கள் எப்படி யெகோவாவிடம் நெருங்கிச் செல்லலாம்?
17. நீங்கள் எவ்வாறு யெகோவாவிடம் நெருங்கிச் செல்லலாம்?
17 பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வாசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவைப் பற்றி அதிகமதிகமாக கற்றுக்கொள்ளும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதும் அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் சுலபமாகும். “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான் . . . இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 6:45) ஆகவே உங்கள் இருதயத்தை நல்ல காரியங்களால் நிரப்புங்கள். இந்த விஷயத்தில் ஏன் சில இலக்குகளை வைக்கக்கூடாது? ஒருவேளை வருகிற வாரத்தில் சபைக் கூட்டங்களுக்கு நீங்கள் இன்னும் நன்றாக தயாரித்துச் செல்லலாம். அடுத்ததாக, சுருக்கமான, அதேசமயத்தில் இருதயப்பூர்வமான பதில் சொல்வதை உங்கள் இலக்காக வைக்கலாம். அதோடு, கற்றுக்கொள்ளும் விஷயங்களை கடைப்பிடிப்பதும் மிக முக்கியம்.—பிலிப்பியர் 4:9.
18. நீங்கள் ஓரளவு எதிர்ப்பை சந்தித்தாலும், எதைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம்?
18 யெகோவாவை சேவிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பவை, சொல்லப்போனால் நித்திய காலம் நிலைத்திருப்பவை. யெகோவாவின் சாட்சியாக இருப்பதற்காக எப்போதாவது நீங்கள் ஓரளவு எதிர்ப்பை அல்லது கேலி கிண்டலை அனுபவிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் மோசேயைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அவர் ‘இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார்’ என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:24-26) யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும் அவரைப் பற்றி பேசுவதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்காக அவர் உங்களுக்கு பலன் அளிப்பார் என்பதில் நீங்களும் நிச்சயமாக இருக்கலாம். உண்மையில் அவர் ஒருபோதும் ‘உங்கள் கிரியையையும், தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறக்க’ மாட்டார்.—எபிரெயர் 6:10.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நினைவிருக்கிறதா?
• யெகோவா உங்கள் சேவையை மதிக்கிறார் என நீங்கள் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
• பள்ளியில் என்ன விதங்களில் சாட்சி கொடுப்பது பலனளிப்பதாக சிலர் கண்டிருக்கிறார்கள்?
• பள்ளி மாணவர்களிடம் சாட்சி கொடுக்க நீங்கள் எப்படி பலம் பெறலாம்?
• நீங்கள் எவ்வாறு யெகோவாவிடம் நெருங்கிச் செல்லலாம்?
[பக்கம் 20-ன் பெட்டி/படங்கள்]
சிறு பிள்ளைகளும் யெகோவாவைத் துதிக்கின்றனர்!
சின்னஞ்சிறு பிள்ளைகள்கூட பள்ளியில் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். இந்த அனுபவங்களை கவனியுங்கள்.
பத்து வயது ஆம்பர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளுடைய வகுப்பில், இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களை நாசிக்கள் துன்புறுத்தியது சம்பந்தமான ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்கள். ஊதாநிற முக்கோணங்கள் என்ற ஆங்கில வீடியோவை டீச்சரிடம் கொடுக்க ஆம்பர் முடிவு செய்தாள். நாசி ஆட்சியின்போது யெகோவாவின் சாட்சிகளும் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அறிந்து அந்த டீச்சர் ஆச்சரியப்பட்டார். அந்த வீடியோவை முழு வகுப்பிற்கும் போட்டுக் காட்டினார்.
எட்டு வயதில் அலெக்ஸா தன் வகுப்பிற்கு ஒரு கடிதம் எழுதினாள். கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தான் ஏன் அவர்களோடு கலந்துகொள்ள மாட்டாள் என்பதை அந்தக் கடிதத்தில் விளக்கினாள். அவளுடைய ஆசிரியருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. ஆகவே தன் வகுப்பிலும் இன்னும் இரண்டு வகுப்புகளிலும் அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டும்படி அலெக்ஸாவை கேட்டுக்கொண்டார்! அவள் கடிதத்தை இவ்வாறு வாசித்து முடித்தாள்: “வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்த வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்மஸ் கொண்டாடாமல் இருக்கும் என் தீர்மானத்தை நீங்கள் மதிப்பதற்காக நன்றி.”
முதல் வகுப்பில் சேர்ந்து கொஞ்ச நாட்களில் எரிக் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை ஸ்கூலுக்கு எடுத்துச் சென்றான். மற்ற மாணவர்களுக்கு அதைக் காட்ட டீச்சரிடம் அனுமதி கேட்டான். “நான் இன்னொரு நல்ல ஐடியா தருகிறேன்” என்று டீச்சர் சொன்னார்கள். “க்ளாஸில் உள்ளவர்களுக்கு நீ ஏன் ஒரு கதையை வாசித்துக் காட்டக்கூடாது?” என்றார்கள். எரிக் அப்படியே செய்தான். பிறகு, அந்தப் புத்தகத்தை பெற்றுக்கொள்ள விரும்பியவர்களை கைதூக்குமாறு சொன்னான். டீச்சர் உட்பட பதினெட்டு பேர் கைதூக்கினார்கள்! இப்போது சாட்சி கொடுப்பதற்காக தனக்கென்று விசேஷ பிராந்தியம் இருப்பதாக எரிக் நினைக்கிறான்.
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும்c என்ற சிற்றேட்டிற்காக ஒன்பது வயது விட்னி நன்றியுள்ளவளாக இருக்கிறாள். “என் அம்மா இந்த புரோஷரை ஒவ்வொரு வருடமும் என் டீச்சர்களுக்கு கொடுப்பாங்க, ஆனால் இந்த வருஷம் நானே கொடுத்துவிட்டேன். இந்த புரோஷரின் உதவியால் டீச்சர் என்னை ‘அந்த வார சிறந்த மாணவி’யாக தேர்ந்தெடுத்தாங்க” என்று கூறுகிறாள்.
[அடிக்குறிப்பு]
c குறிப்பிடப்பட்டுள்ள பிரசுரங்கள் அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டவை.
[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]
சிலர் தங்கள் நம்பிக்கையைப் பற்றி சொல்வதற்கு பயன்படுத்திய சந்தர்ப்பங்கள்
ஸ்கூல் ரிப்போர்ட் அல்லது ப்ராஜக்ட் தயாரிக்க வேண்டியிருக்கும்போது, சாட்சிகொடுக்க உதவியாயிருக்கும் ஒரு தலைப்பை சிலர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
வகுப்பில் சிந்திக்கப்படும் பொருளுக்கு ஏற்ற ஒரு வீடியோவை அல்லது பிரசுரத்தை அநேக இளைஞர்கள் தங்கள் டீச்சருக்குக் கொடுத்திருக்கிறார்கள்
பைபிளை அல்லது பைபிள் சார்ந்த ஒரு புத்தகத்தை இடைவேளையின்போது சில இளைஞர்கள் வாசித்திருக்கிறார்கள்; அதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
அனுபவம் வாய்ந்தவர்கள், யெகோவாவை சேவிப்பதற்கு இளைஞர்களைப் பயிற்றுவிக்கலாம்