யெகோவாவுக்குச் சாட்சிகொடுத்துச் சோர்ந்துபோகாதிருங்கள்
“நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்.”—எபிரெயர் 12:3.
1, 2. இயேசு தாம் உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார் என்பதை நிரூபிக்க தம்முடைய சீஷர்களுக்கு என்ன நம்பத்தக்க அத்தாட்சியைக் கொடுத்தார்?
“நான் கர்த்தரைக் கண்டேன்!” எதிர்பாராத வியப்பை ஏற்படுத்திய இந்த வார்த்தைகளினாலே மகதலேனா மரியாள் இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்தினாள். (யோவான் 20:18) முன்னதாக இயேசுவின் மரணத்தைக் குறித்து வியாகுலப்பட்டுக் கொண்டிருந்த கிறிஸ்துவின் சீஷர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிறைந்த 40 நாட்களின் ஆரம்பத்தை இது குறிப்பிட்டுக் காண்பித்தது.
2 இயேசு தாம் உண்மையில் உயிரோடிருப்பதைப் பற்றியதில் தம்முடைய சீஷர்களின் மனங்களில் எந்தச் சந்தேகத்தையும் விட்டு வைக்க விரும்பவில்லை. இதன் காரணமாக லூக்கா சொல்லுகிறபடியே “அவர் [இயேசு] பாடுபட்ட பின்பு . . . அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.” (அப்போஸ்தலர் 1:3) உண்மையில் ஒரு சமயம், “ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 15:6) நிச்சயமாகவே சந்தேகத்துக்கு இப்பொழுது இடமிருக்கவில்லை. இயேசு உயிரோடிருந்தார்!
3. ராஜ்யத்தைப் பற்றிய என்ன கேள்வியை இயேசுவின் சீஷர்கள் அவரைக் கேட்டார்கள்? அவருடைய பதில் ஏன் அவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது?
3 இயேசுவின் சீஷர்கள் அப்போது பூமிக்குரிய “தேவனுடைய ராஜ்யத்தை,” இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பதை மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். (லூக்கா 19:11; 24:21) ஆகவே அவர்கள் இயேசுவைப் பின்வருமாறு கேட்கிறார்கள்: “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” இதற்கு அவர் அளித்த பதில் அவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர் சொன்னதாவது: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:6–8) இப்பொழுது சீஷர்களுக்கு முன்னால் என்னே ஒரு சவால் வைக்கப்பட்டது! என்னே ஒரு பொறுப்பு! இப்படிப்பட்ட ஒரு வேலையை அவர்களால் எவ்விதமாக செய்து முடித்திட முடியும்? இதற்கான பதில் சீக்கிரத்தில் ஆச்சரியமூட்டும் வகையில் கிடைத்தது.
சவாலை ஏற்றுக்கொள்ளுதல்
4. பெந்தெகொஸ்தே நாளன்று என்ன நடந்தது என்பதை விவரிக்கவும்.
4 லூக்கா எழுதுகிறான்: “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்த போது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவி . . . தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” சத்தம் அத்தனை பெரியதாக இருந்ததால், பண்டிகைக்காக எருசலேமில் தங்கியிருந்த திரளான யூதர்களின் கவனத்தை அது கவர்ந்திழுத்தது. அவர்கள் ‘தேவனுடைய மகத்துவங்களைப் பற்றி தங்கள் சொந்த பாஷைகளிலே’ கேட்டு பிரமித்துப் போனார்கள்.—அப்போஸ்தலர் 2:1–11.
5. அப்போஸ்தலர் 1:8-லுள்ள இயேசுவின் முன்னறிவிப்பு எந்த அளவுக்கு வெகு சீக்கிரத்தில் நிறைவேறியது?
5 உடனடியாக பேதுரு, “கர்த்தர் [யெகோவா, NW] என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்,” என்பதாக தாவீதால் முன்னுரைக்கப்பட்ட “ஆண்டவரே”, அவர்கள் கழுமரத்தில் அறைந்த “நசரேனாகிய இயேசு” என்பதாக எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாத வகையில் நிரூபித்து ஆற்றல்மிக்க ஒரு சொற்பொழிவாற்றினான். பேதுரு பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். பேதுரு இதற்குப் பதிலளிக்கையில், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று அவர்களைத் துரிதப்படுத்தினான். விளைவு? மூவாயிரம் பேர் [முழுக்காட்டுதல்] பெற்றார்கள்! (அப்போஸ்தலர் 2:14–41) ஏற்கெனவே எருசலேமில் சாட்சிக் கொடுக்கப்பட்டாகிவிட்டது. பின்னால் அது யூதேயா முழுவதுக்கும், பின்னர் சமாரியாவுக்கும், கடைசியாக “பூமியின் கடைசிபரியந்தமும்” விரிவாகியது. ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் விஸ்தரிப்பு அத்தனை வேகமாக இருந்ததால், சுமார் பொ.ச. 60-ல், அப்போஸ்தலனாகிய பவுலால் நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது” என்பதாகச் சொல்ல முடிந்தது.—கொலோசெயர் 1:23.
ராஜ்ய விஸ்தரிப்பும் துன்புறுத்தலும்
6, 7. (எ) முதல் நூற்றாண்டில் ராஜ்ய விஸ்தரிப்பும், கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலும் எவ்விதமாக ஒன்றாக சேர்ந்து வந்தன? (பி) எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் என்ன அவசர தேவை ஏற்பட்டது? இந்தத் தேவை எவ்விதமாகப் பூர்த்திசெய்யப்பட்டது?
6 பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவுக்குப் பின்பு வெகு சீக்கிரத்திலேயே, இயேசுவின் சீஷர்களுக்கு அவருடைய வார்த்தைகளை நினைவுகூருவதற்குக் காரணமிருந்தது: “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) “வேதவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.” அப்போது யூதர்களின் தலைவர்கள் மூர்க்கமடைந்தார்கள். பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சீஷனாகிய ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டான். அநேகர் இந்தச் சம்பவத்துக்காக காத்துக் கொண்டிருந்தது போல இருந்தது. ஏனென்றால், “அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர் தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப் போனார்கள்.”—அப்போஸ்தலர் 6:7; 7:58–60; 8:1.
7 துன்புறுத்தல் தற்காலிகமாக சற்றே தணிந்தது. ஆனால் விரைவிலேயே, ஏரோது அகிரிப்பா I, அப்போஸ்தலனாகிய யாக்கோபைக் கொலை செய்தான். பேதுரு கைது செய்யப்பட்டான், ஆனால் ஒரு தேவதூதனால் விடுவிக்கப்பட்டான். பின்னால், எருசலேமிலுள்ள சகோதரர்கள் பொருளாதாரத்தில் குறைவுபட, மற்ற இடங்களிலிருந்த உடன்விசுவாசிகள் அவர்களுக்கு உதவியைக் கொடுக்க வேண்டியவர்களானார்கள். (அப்போஸ்தலர் 9:31; 12:1–11; 1 கொரிந்தியர் 16:1–3) எருசலேமுக்கு அப்போஸ்தலனாகியப் பவுல் ஒரு முறை சென்றிருந்தபோது, ஜனங்கள் “இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்ற வேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று” மிகுந்த சத்தமிட்டுச் சொன்னதிலிருந்து மதவெறி அங்கிருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 22:22) நிச்சயமாகவே எருசலேமிலும் யூதேயாவிலும் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்கள் ராஜ்யத்தைப் பற்றி தொடர்ந்து உண்மையுடன் சாட்சி கொடுத்துக் கொண்டிருப்பதற்கு மிகுதியான ஊக்குவிப்புத் தேவைப்பட்டது. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு, “என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவி” “தேற்றரவாளனாக” செயல்புரியும் என்பதாக வாக்களித்திருந்தார். (யோவான் 14:26) ஆனால் பிதா எவ்விதமாக இப்பொழுது இவ்விதமாகத் தேவைப்பட்ட உதவியை அல்லது ஆறுதலை அளிப்பார்? பதில், பகுதியளவில் அப்போஸ்தலனாகிய பவுலின் மூலமாக இருக்கும்.
எபிரெயருக்குப் பவுலின் கடிதம்
8. (எ) எபிரெயருக்குக் கடிதமெழுத பவுலை தூண்டியது என்ன? (பி) அவனுடைய கடிதத்தின் எந்த அம்சத்தின் பேரில் நாம் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்தப் போகிறோம்? ஏன்?
8 பொ.ச. 61-ல் பவுல் ரோமில் சிறைப்படுத்தப்பட்டிருந்தான், ஆனால் எருசலேமில் அவனுடைய சகோதரர்களுக்கு என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதை அறிந்தவனாக இருந்தான். ஆகவே யெகோவாவினுடைய ஆவியின் வழிநடத்துதலின் கீழ் எபிரெயருக்குக் காலத்துக்கு ஏற்ற தன்னுடைய கடிதத்தை எழுதினான். அது அவனுடைய எபிரெய சகோதர சகோதரிகளுக்கு அன்பான அக்கறை நிறைந்ததாய் இருக்கிறது. தங்களுடைய சகாயராக யெகோவாவில் அவர்களுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு என்ன தேவைப்பட்டது என்பதைப் பவுல் அறிந்திருந்தான். அப்பொழுது அவர்கள் ‘அவர்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடே ஓடி’ தைரியமாக “யெகோவா எனக்குச் சகாயர், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” என்பதாகச் சொல்லக்கூடும். (எபிரெயர் 12:1; 13:6) எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட பவுலினுடைய கடிதத்தின் (அதிகாரங்கள் 11–13) இந்த அம்சத்தின் பேரில்தானே நாம் இப்பொழுது நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த விரும்புகிறோம். ஏன்? ஏனென்றால், அந்தப் பூர்வ கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்ட நிலைமை, இன்று யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படும் அதே நிலைமையாக இருந்தது.
9. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்ட எந்தப் பிரச்னையை இன்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்படுகிறார்கள்? அதை எவ்விதமாக மட்டுமே சந்திக்க முடியும்?
9 நம்முடைய சந்ததிக்குள்ளாகவே, பெருந் திரளான மக்கள், யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய சாட்சிகளாக முழுக்காட்டப்படுவதன் மூலம் ராஜ்ய செய்திக்குச் சாதகமாக பிரதிபலித்திருக்கிறார்கள். என்றபோதிலும் மெய் வணக்கத்தின் இந்த விஸ்தரிப்போடுகூட, உக்கிரமான துன்புறுத்தலும் வந்திருக்கிறது. அநேக கிறிஸ்தவர்கள், ஸ்தேவானையும் யாக்கோபையும் மற்ற உண்மையுள்ள முதல் நூற்றாண்டு சாட்சிகளையும் போலவே தங்களுடைய உயிர்களையும் இழந்திருக்கிறார்கள். ஆகவே, இப்பொழுது பிரச்னையானது, அப்போதிருந்த அதே பிரச்னையாக இருக்கிறது: ராஜ்ய செய்திக்கு அதிகரித்துவரும் எதிர்ப்பின் மத்தியில் யார் தங்களுடைய உத்தமத்தின் பரீட்சையில் நிலைநிற்கக்கூடியவராக இருப்பார்? மேலுமாக, ஈடிணையற்ற “மிகுந்த உபத்திரவம்” விரைவில் இந்தத் தற்போதைய சந்ததியின் மீது இறங்குகையில் நிகழுவிருக்கும் திகிலூட்டும் சம்பவங்களை யார் எதிர்த்து நிற்கக்கூடியவராக இருப்பார்? (மத்தேயு 24:21) “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு”கிறவர்களும் “விசுவாசத்தில் உறுதியாயிரு”க்கிறவர்களுமே என்பதே பதிலாக இருக்கிறது. இவர்களே கடைசியாகப் பின்வருமாறு சொல்லக்கூடியவர்களாக இருப்பர்: “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.”—1 தீமோத்தேயு 6:12; 1 பேதுரு 5:9; 1 யோவான் 5:4.
உண்மையுள்ள முன்மாதிரிகளிலிருந்து நன்மையடைதல்
10. (எ) விசுவாசம் என்பது என்ன? (பி) பூர்வ காலங்களிலிருந்த விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி தேவன் எவ்விதமாக உணர்ந்தார்?
10 விசுவாசம் என்பது என்ன? பவுல் பதிலளிக்கிறான்: “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் [உறுதியளிக்கப்பட்ட எதிர்பார்ப்பும், NW] காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது [காணப்படாத உண்மைகளின் சான்றுவிளக்கம், NW]. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.” (எபிரெயர் 11:1, 2) பவுல் அடுத்து, விசுவாசத்தைக் கிரியையில் காண்பிப்பதன் மூலம் விசுவாசத்தின் தன்னுடைய விளக்கத்தை ஆதரித்து எழுதுகிறான். சில “முன்னோர்களின்” மற்றும் சாராள், ராகாப் போன்ற பெண்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை அவன் குறிப்பிடுகிறான். “தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை” என்பதைக் காண்பது எத்தனை உற்சாகமளிப்பதாக இருக்கிறது! (எபிரெயர் 11:16) நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நம்மைப் பற்றி தேவன் இதையே சொல்ல முடியுமா? ஒவ்வொரு நாளும் முடியும் போது, அவர் நம்மைக் குறித்து வெட்கப்படுவதற்கு நாம் அவருக்கு எந்தக் காரணத்தையும் கொடாதிருப்போமாக.
11. “நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் மேகம் போன்ற திரளான சாட்சி”களிடமிருந்து நாம் இன்று எவ்விதமாக பயனடையலாம்?
11 உண்மையுள்ள இந்த ஆண்களையும் பெண்களையும் பற்றிய பதிவைத் தொடர்ந்து பவுல் சொல்வதாவது: “ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) பிரேதக் குழியில் இப்பொழுது நித்திரையிலிருந்த போதிலும், முன்மாதிரியாக இருக்கும் இந்த உண்மையுள்ள சாட்சிகள் நம்முடைய மனதில் உயிரோடிருக்கிறார்களா? ஆம் என்று பதிலளிக்க அவர்களையும் அவர்களுடைய அனுபவங்களையும் பற்றி நீங்கள் போதிய அளவு நன்றாக அறிந்தவர்களாயிருக்கிறீர்களா? “மேகம் போன்ற திரளான சாட்சிகளின்” கிளர்ச்சியூட்டும் இந்த அனுபவங்களை மீண்டும் கற்பனைச் செய்து பார்ப்பதற்கு நம்முடைய உணர்ச்சிகள் அனைத்தையும் பயன்படுத்துவது ஒழுங்கான பைபிள் படிப்பினால் கிடைக்கும் அநேக வெகுமதிகளில் ஒன்றாக இருக்கிறது. உண்மையாகவே, அவர்களுடைய உண்மையுள்ள முன்மாதிரியை ஆழ்ந்து சிந்திப்பது, விசுவாசக் குறைவை மேற்கொள்ள நமக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதன் பலனாக இது, எல்லாச் சூழ்நிலைமைகளின் கீழும் சத்தியத்துக்கு தைரியமான பயமில்லாத சாட்சியைக் கொடுக்க நமக்கு உதவி செய்யும்—ரோமர் 15:4.
சோர்ந்துபோகாதிருத்தல்
12. (எ) ‘இளைப்புள்ளவர்களாய் நம்முடைய ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதிருக்க’ இயேசுவின் முன்மாதிரி நமக்கு எவ்விதமாக உதவி செய்யக்கூடும்? (பி) சோர்ந்துபோகாதிருப்பதில் தற்காலத்திய முன்மாதிரிகளில் சில யாவை?
12 நம்முடைய விசுவாசத்துக்கு மிகச் சிறந்த முன்மாதிரி இயேசுவே. பவுல் துரிதப்படுத்துவதாவது: “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை [கருத்தாய், NW] நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். . . . நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்குத் தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே [கவனமாக, NW] நினைத்துக் கொள்ளுங்கள்.” (எபிரெயர் 12:1–3) இயேசுவின் முன்மாதிரியை எவ்வளவு “கவனமாக” நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள்? எத்தனை “கருத்தாக” நீங்கள் அவரை நோக்கியிருக்கிறீர்கள்? (1 பேதுரு 2:21) நாம் ‘இளைப்புள்ளவர்களாய் நம்முடைய ஆத்துமாக்களில் சோர்ந்து போகவேண்டும்’ என்று சாத்தான் விரும்புகிறான். சாட்சிக் கொடுக்கும் வேலையை நாம் நிறுத்திவிட வேண்டும் என்று அவன் விரும்புகிறான். இதை அவன் எவ்விதம் செய்கிறான்? சில சமயங்களில் முதல் நூற்றாண்டில் இருந்தது போல மதசம்பந்தமான மற்றும் உலகப் பிரகாரமான அதிகாரிகளின் நேரடி எதிர்ப்பின் மூலம். கடந்த ஆண்டில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலை சுமார் 40 தேசங்களில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது நம்முடைய சகோதரர்களை சோர்வடைய செய்துவிட்டதா? இல்லை! 1988-ல் இந்தத் தேசங்களில் அவர்களுடைய உண்மையுள்ள ஊழியம் 17,000-க்கும் அதிகமான ஆட்கள் முழுக்காட்டப்படுவதில் விளைவடைந்தது. இதோடு ஒப்பிடுகையில் சுதந்திரம் இருக்கும் தேசங்களில் வாழும் அனைவருக்கும் இது எத்தனை தூண்டுதலளிப்பதாக இருக்க வேண்டும்! ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நாம் ஒருபோதும் சோர்ந்துபோகாமல் இருப்போமாக!
13. (எ) நம்முடைய பிரசங்க வேலையில் நம்மை சோர்வடையச் செய்யக்கூடிய தந்திரமான சில காரியங்கள் யாவை? (பி) ‘இயேசுவுக்கு முன் வைத்திருந்த’ அந்தச் சந்தோஷம் என்ன? அதுபோன்ற மகிழ்ச்சியான மனநிலையை நாம் எவ்விதமாகப் பெறக்கூடும்?
13 என்றபோதிலும் நம்மைச் சோர்ந்துபோகச் செய்யக்கூடிய அதிக தந்திரமான மற்றக் காரியங்கள் இருக்கின்றன. இவைகளில் பிளவுப்பட்ட ஒரு குடும்பத்தில் எதிர்ப்பு, மனச்சோர்வு, உடல்நலப் பிரச்னைகள், தோழர்களிடமிருந்து வரும் அழுத்தம், நம்முடைய பிரசங்க வேலையில் நல்ல பலன்கள் கிட்டாமல் போவதால் சோர்வு அல்லது ஒருவேளை இந்தக் காரிய ஒழுங்கு இன்னும் முடிவுக்கு வராததன் காரணமாக ஏற்படும் பொறுமையின்மை ஆகியவை அடங்கும். சரி, மனதிலும் சரீரத்திலும் ஏற்பட்ட உபாதைகளைச் சகிப்பதற்கு இயேசுவுக்கு எது உதவியது? அவருக்கு “முன் வைத்திருந்த சந்தோஷமே.” (எபிரெயர் 12:2) தம்முடைய பிதாவின் பெயரை நிலைநாட்டுவதன் மூலம் அவருடைய இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும் மகிழ்ச்சியும் மேசியானிய ராஜ்யத்தின் மகத்தான ஆசீர்வாதங்களை செயல்படுத்துகையில் அவர் பின்னால் அனுபவிக்க இருந்த சந்தோஷத்தின் எதிர்பார்ப்புமே இயேசுவைத் தளர்ந்துபோகாதபடி நடத்திச் சென்றது. (சங்கீதம் 2:6–8; 40:9, 10; நீதிமொழிகள் 27:11) இயேசுவின் இந்த மகிழ்ச்சியான மனநிலையை அதிக “கருத்தாக” நாம் பின்பற்றக்கூடுமா? மேலுமாக 1 பேதுரு 5:9-லுள்ள பவுலின் உறுதிமொழியை நினைவுகூருங்கள்: “உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.” யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதை அறிந்திருப்பது, உலகளாவிய சகோதரத்துவத்தின் பாச உணர்ச்சிகளை உணருவது, ராஜ்ய ஆட்சியின் கீழ் நமக்கு முன்னால் இருக்கும் சந்தோஷங்களின் மீது நம்முடைய கண்களை வைத்திருப்பது—இவை அனைத்துமே முடிவு இத்தனை சமீபமாயிருக்கையில் விசுவாசத்தில் யெகோவாவைச் சேவிப்பதிலும் பிரசங்கிப்பதிலும் சோர்ந்துபோகாதிருக்க நமக்கு உதவி செய்யும்.
ஏன் யெகோவா சிட்சிக்கிறார்
14. நாம் சகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும் சோதனைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் என்ன பயன்கள் விளைவடையக்கூடும்?
14 பவுல், இப்பொழுது, நாம் ஏன் ஒருவேளை சோதனைகளையும் துன்பங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்குகிறான். இவைகளை சிட்சையின் ஒரு வடிவாக கருதும்படியாக அவன் யோசனை சொல்கிறான். பவுல் இவ்விதமாக காரணத்தோடு விளக்குகிறான்: “அன்றியும், என் மகனே, யெகோவாவுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்து கொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே; யெகோவா எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” (எபிரெயர் 12:5, 6) இயேசுவுங்கூட, “பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்” கொண்டார். (எபிரெயர் 5:8) நிச்சயமாகவே நாமும்கூட கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். சிட்சை நம்மை உருபடுத்த அனுமதிப்பதனால் வரும் பயனுள்ள விளைவுகளைக் கவனியுங்கள். பவுல் சொன்னான்: “பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” அது எத்தனை உற்சாகமளிப்பதாக இருக்கிறது!—எபிரெயர் 12:11.
15. ‘நம்முடைய பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்திக்’ கொண்டிருக்கும்படியான பவுலின் புத்திமதியை நாம் எவ்விதமாக பின்பற்றலாம்?
15 இந்த வெளிச்சத்தில் “யெகோவாவுடைய சிட்சையை” நாம் ஏற்றுக் கொள்வோமேயானால் பவுலின் நேர்நிலையான புத்திமதியை நாம் ஆழ்ந்து சிந்திக்கிறவர்களாக இருப்போம்: “ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.” (எபிரெயர் 12:12, 13) சில சமயங்களில் ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வழி’யிலிருந்து விலகிவிடுவது மிகவும் சுலபமாக இருக்கிறது. (மத்தேயு 7:14) அப்போஸ்தலனாகிய பேதுருவும் அந்தியோகியாவிலிருந்த மற்றவர்களும் ஒரு சமயம் இதைச் செய்த குற்றமுள்ளவர்களாக இருந்தனர். ஏன்? ஏனென்றால், “அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாம”லிருந்தார்கள். (கலாத்தியர் 2:14) இன்று நாம் நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா தேவனுக்குத் தொடர்ந்து செவி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலமாக கொடுக்கப்பட்டுவரும் உதவிகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும். இது நம்முடைய பாதங்களுக்கு ‘வழியை செவ்வைப்படுத்துவதை’ உறுதி செய்யும்.—மத்தேயு 24:45–47; ஏசாயா 30:20, 21.
16. (எ) “கசப்பான வேர்” எவ்விதமாக ஒரு சபையில் முளைத்தெழும்பக்கூடும்? (பி) பவுல் ஏன் ஒழுக்கக்கேட்டையும் பரிசுத்தக் காரியங்களுக்குப் போற்றுதலில் குறைவுபடுவதையும் இணைத்துப் பேசுகிறான்? இப்படிப்பட்ட ஆபத்துக்களுக்கு எதிராக எவ்விதமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்?
16 பவுல் அடுத்ததாக, “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிப் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்” எச்சரிப்பாயிருக்கும்படியாக சொல்கிறான். (எபிரெயர் 12:15) மனக்குறைவுள்ளவர்களாகி, அதிருப்தியுள்ளவர்களாக, சபையில் காரியங்கள் செய்யப்படும் விதத்தில் குற்றங்கண்டுபிடிப்பது, ஒரு “கசப்பான வேர்” போல இருந்து, வேகமாகப் பரவி, சபையிலுள்ள மற்றவர்களின் ஆரோக்கியமான சிந்தனைகளை நச்சுப்படுத்திவிடக்கூடும். சத்தியம் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவந்திருக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களை தடை செய்யலாம். (சங்கீதம் 40:5) மற்றொரு ஆபத்து, ஒழுக்கமற்ற விருப்பங்களைக் கொண்டிருப்பதாக அல்லது ‘ஏசாவைப் போல பரிசுத்த காரியங்களுக்குப் போற்றுதலில் குறைவு’படுவதாக இருக்கலாம். (எபிரெயர் 12:16) பவுல் இந்த இரண்டு ஆபத்துக்களை இணைத்துப் பேசுகிறான், ஏனென்றால் ஒன்று மற்றொன்றுக்கு எளிதில் வழிநடத்தக்கூடும். எந்த ஒரு கிறிஸ்தவனும் பேதுருவின் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பிரயோகிப்பானேயானால் இப்படிப்பட்ட சுயநலமான ஆசைகளுக்குப் பணிந்துவிட வேண்டிய அவசியமில்லை: “விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு [பிசாசுக்கு] எதிர்த்து நில்லுங்கள்.”—1 பேதுரு 5:9.
“காணப்படாத உண்மைகள்”
17. சீனாய் மலையில் நடந்த பயபக்தியை ஏற்படுத்தும் சம்பவங்களை இன்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்படும் காரியங்களோடு ஒப்பிடவும்.
17 நம்முடைய விசுவாசம் “காணப்படாத உண்மைகளின்” மேல் வெகுவாக சார்ந்திருக்கிறது. (எபிரெயர் 11:1) இந்தக் காணப்படாத சில உண்மைகளைக் குறித்துப் பவுல் தொடர்ந்து எபிரெயர் 12:18–27-ல் பேசுகிறான். கடவுள் சீனாய் மலையிலிருந்து இஸ்ரவேலிடமாக நேரடியாகப் பேச, மோசே “நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்” என்பதாகச் சொன்ன போது நடந்த பிரமிக்க வைத்த சம்பவங்களைக் குறித்து அவன் விவரிக்கிறான். பின்பு அப்போஸ்தலன் சொல்வதாவது: “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும் ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.” சீனாய் மலையில், பூர்வ இஸ்ரவேலருடைய விஷயத்தில் கடவுளுடைய சத்தம் பூமியை அசையப்பண்ணிற்று என்று பவுல் சொன்னான். ஆனால் இப்பொழுதோ அவர் வாக்களித்திருப்பதானது: “இன்னும் ஒரு தரம் நாம் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப் பண்ணுவேன்.” இந்த வார்த்தைகள் முக்கியமாக அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களிடமே சொல்லப்பட்ட போதிலும், மற்ற செம்மறியாடுகளைப் போன்ற “திரள் கூட்டத்தாரும்” இதைக்குறித்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கலாம். (வெளிப்படுத்துதல் 7:9) பவுல் சொல்லும் காரியத்தை நீங்கள் முழுமையாகப் போற்றுகிறீர்களா? நாம் ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களின் கூட்டத்துக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறோம். நிச்சயமாகவே நாம் யெகோவாவுக்கு முன்பாகவும்கூட நின்று கொண்டிருக்கிறோம். அவருடைய வலது பாரிசத்திலிருப்பது இயேசு கிறிஸ்து. ஆம், நாம் சீனாய் மலையில், பூர்வ எபிரெயர்களைக் காட்டிலும் அதிக பயபக்தியான நிலையிலும் அதிகமான உத்தரவாதத்தின் கீழும் இருக்கிறோம்! வரப்போகும் அர்மகெதோன் யுத்தத்தில் அசைக்கப்படுகையில் தற்போதைய வானமும் பூமியும் இல்லாமல் போகும்படிச் செய்யப்படும். இன்று கடவுளுடைய வார்த்தைக்குச் செவி கொடுத்து அதற்குக் கீழ்ப்படியாமல் “சாக்குப் போக்குச் சொல்லி விலகிச் செல்வதற்கு” நிச்சயமாக நேரமில்லை!
18. எவ்விதமாக மாத்திரமே, நாம் தொடர்ந்து யெகோவாவுக்குச் சாட்சிகொடுத்துக் கொண்டு சோர்ந்து போகாதிருக்கமுடியும்?
18 அப்படியென்றால் உண்மையாகவே நாம் மனித சரித்திரத்தில் மிகவும் பயங்கரமான காலத்தில் வாழ்ந்துவருகிறோம். யெகோவாவின் சாட்சிகளாக நாம் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தியைப் பூமியின் கடைசிபரியந்தமும் பிரசங்கிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிறோம். அவ்விதமாகச் செய்வதற்கு நாம் அசைக்கமுடியாத ஒரு விசுவாசத்தை, சோர்ந்துபோகாத ஒரு விசுவாசத்தை, யெகோவாவின் சிட்சையை ஏற்றுக்கொள்ள நமக்கு உதவி செய்யும் விசுவாசத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விசுவாசம் நமக்கிருக்குமேயானால், “பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்” கொண்டிருக்கும் ஆட்களின் மத்தியில் காணப்படுவோம். (எபிரெயர் 12:28) ஆம், நாம் தொடர்ந்து யெகோவாவுக்குச் சாட்சிக் கொடுத்து சோர்ந்துபோகாதிருப்போம். (w89 12⁄15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ எபிரெயருக்கு எழுதப்பட்ட பவுலின் கடிதம் நமக்கு ஏன் பிரயோஜனமாயிருக்கிறது?
◻ கிறிஸ்தவர்கள் இன்று என்ன பிரச்னையை எதிர்ப்பட வேண்டும்?
◻ பூர்வ காலங்களிலிருந்த உண்மையுள்ள சாட்சிகளிடமிருந்து நாம் எவ்விதமாகப் பயனடையலாம்?
◻ யெகோவா ஏன் தாம் அன்புகூருகிறவர்களை சிட்சிக்கிறார்?
◻சோர்ந்துபோகாமல் சாட்சிகொடுப்பதற்கு திறவுகோல் எது?