எகிப்தின் பொக்கிஷங்களைவிட மேலானது
மோசே—தலைசிறந்த சரித்திர புருஷர்களில் ஒருவர். நான்கு பைபிள் புத்தகங்களில்—யாத்திராகமம் முதல் உபாகமம் வரை—மோசேயின் தலைமையில் இஸ்ரவேலரிடம் கடவுள் கொண்ட செயல் தொடர்புகளே பிரத்தியேகமாக சொல்லப்படுகின்றன. எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரவேலரை மோசே தலைமைதாங்கி வழிநடத்தினார், நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக விளங்கினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லை வரை இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றார். பார்வோனின் வீட்டில் மோசே வளர்க்கப்பட்டாலும், கடவுளுடைய ஜனங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிபதியானார். அதோடு தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் கடவுளால் ஏவப்பட்ட எழுத்தாளராகவும் ஆனார். ஆனாலும், அவர் “சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவ”ராக விளங்கினார்.—எண்ணாகமம் 12:3.
மோசேயைப் பற்றி பைபிள் தரும் விவரங்களில் பெரும்பாலானவை அவருடைய வாழ்க்கையின் கடைசி 40 வருடங்களைப் பற்றியவை; அதாவது இஸ்ரவேலர் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்பட்டது முதல் 120-ம் வயதில் அவருடைய இறப்பு வரையானவை. 40 வயது முதல் 80 வயது வரை அவர் மீதியான் தேசத்தில் மேய்ப்பராக காலத்தைக் கழித்தார். ஆனால் அவருடைய பிறப்பு முதல் எகிப்திலிருந்து அவர் ஓடிப்போனது வரையான அந்த முதல் 40 வருடங்கள் “ஒருவேளை அவருடைய வாழ்க்கையில் அதிக ஆர்வத்திற்குரிய, அதேசமயத்தில் அதிக தெளிவற்ற காலக்கட்டமாக இருக்கலாம்” என ஓர் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. அப்படியானால் இந்தக் காலப்பகுதியைப் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ளலாம்? மோசே வளர்க்கப்பட்ட சூழ்நிலைகள் எப்படி அவருடைய பிற்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின? எப்படிப்பட்ட காரியங்கள் அவரை செல்வாக்கு செலுத்தின? என்னென்ன கஷ்டங்களை சந்தித்தார்? இவை யாவும் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன?
எகிப்தில் அடிமைத்தனம்
எகிப்தில் இஸ்ரவேலர் பெருகத் தொடங்கியதால் அப்போதிருந்த பார்வோனுக்கு பயம் ஏற்பட்டது என யாத்திராகமம் புத்தகம் கூறுகிறது. தான் ‘புத்திசாலித்தனமாக’ (NW) நடப்பதாய் நினைத்து, விசாரணைக்காரர்களை வைத்து சாட்டை அடி கொடுத்து கொத்தடிமைகளாக வேலைவாங்குவதன் மூலம்—சுமைகள் சுமப்பது, சாந்து பூசுவது, அன்றன்றைக்குரிய செங்கல்களை செய்து முடிப்பது போன்ற வேலைகளைக் கொடுப்பதன் மூலம்—அவர்களுடைய எண்ணிக்கையை அவன் குறைக்க முயன்றான்.—யாத்திராகமம் 1:8-14; 5:6-18.
மோசே பிறந்த சமயத்தில் எகிப்தில் நிலவிய இப்படிப்பட்ட சூழ்நிலை சரித்திர ஆதாரத்தோடு ஒத்திருக்கிறது. பொ.ச.மு. இரண்டாயிரத்தை அல்லது அதற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த அடிமைகளால் மண் செங்கல்கள் தயாரிக்கப்பட்டதைப் பற்றி பூர்வ கால நாணற் புல் தாள்களும் குறைந்தபட்சம் ஒரு கல்லறையிலுள்ள சித்திரமும் வர்ணிக்கின்றன. செங்கல்களை வினியோகிக்கும் பொறுப்புள்ளவர்கள் நூற்றுக்கணக்கான அடிமைகளை ஒரு மேற்பார்வையாளர் அல்லது தலைவரின் கீழ் 6 முதல் 18 பேர் அடங்கிய குழுக்களாக அமைத்தனர். செங்கல் செய்ய களிமண்ணை தோண்டி எடுக்கவும் வைக்கோலை செங்கல் அறுக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லவும் வேண்டியிருந்தது. பற்பல தேசத்தைச் சேர்ந்த பணியாளர்களும் தண்ணீர் இறைத்து, களிமண் மற்றும் வைக்கோலில் ஊற்றி மண்வெட்டியால் குழப்பினார்கள். செவ்வக அச்சுகளைப் பயன்படுத்தி வரிசை வரிசையாக செங்கல்களை தயாரித்தார்கள். பின்பு வெயிலில் நன்கு காய்ந்த செங்கல்களை நுகத்தடியில் சுமந்தும், சிலசமயங்களில் சாய்தளத்தை பயன்படுத்தியும் கட்டடம் கட்டும் இடத்திற்கு தொழிலாளிகள் கொண்டு சேர்த்தார்கள். எகிப்திய மேற்பார்வையாளர்கள் கையில் தடிகளை வைத்துக்கொண்டு, அமர்ந்தவாறோ சுற்றி சுற்றி வந்தவாறோ பணியாளர்களை மேற்பார்வையிட்டார்கள்.
ஒரு பழங்கால பதிவேடு குறிப்பிடுகிறபடி, 602 பணியாளர்கள் 39,118 செங்கல்களை தயாரித்தார்கள், அதாவது ஒரு நபர் தன்னுடைய வேலை நேரத்தில் சராசரியாக 65 செங்கல்கள் வீதம் தயாரித்தார். பொ.ச.மு. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஆவணம் இவ்வாறு கூறுகிறது: “ஆண்கள் . . . தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை செங்கல்களை தயாரிக்கிறார்கள்.” இவை யாவும், யாத்திராகமம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இஸ்ரவேலர் கடுமையாக வேலை வாங்கப்பட்டதை அப்படியே நினைவுக்குக் கொண்டுவருகிறது.
இப்படி ஒடுக்கியும் எபிரெயர்கள் எண்ணிக்கையில் பெருகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக, “அவர்களை [எகிப்தியர்கள்] எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எரிச்சல் [“திகில்,” NW] அடைந்தார்கள்.” (யாத்திராகமம் 1:10, 12) எனவே, இஸ்ரவேலில் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்வதற்கு பார்வோன் முதலாவது எபிரெய மருத்துவச்சிகளுக்கும் பிற்பாடு தன்னுடைய எல்லா ஜனங்களுக்கும் கட்டளையிட்டார். இத்தகைய கலக்கமடைந்த சூழ்நிலையில்தான் யோகெபேத்துக்கும் அம்ராமுக்கும் மோசே என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது.—யாத்திராகமம் 1:15-22; 6:20; அப்போஸ்தலர் 7:20.
ஒளித்து வைக்கப்பட்டார், கண்டெடுக்கப்பட்டார், தத்தெடுக்கப்பட்டார்
மோசேயின் பெற்றோர் பார்வோன் இட்ட கொலைபாதக கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் மகனை ஒளித்து வைத்தார்கள். வேவுகாரர்களும் சோதனையாளர்களும் சுற்றி சுற்றி வந்து குழந்தைகளை தேடிய சமயத்திலும் அவ்வாறு ஒளித்து வைத்தார்களா? நம்மால் அதைத் திட்டமாக சொல்ல முடியாது. எப்படியிருந்தாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகு மோசேயின் பெற்றோரால் குழந்தையை மறைத்து வைக்க முடியவில்லை. ஆகவே, கவலையுற்ற தாய், நாணற் புல்லினால் ஒரு கூடை செய்து, தண்ணீர் உட்புகாமலிருக்க அதில் கீல் பூசி தன் குழந்தையை அதற்குள் கிடத்தினார். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் நைல் நதியில் போட்டுவிட வேண்டும் என்ற பார்வோனின் கட்டளைக்கு யோகெபேத் உண்மையான அர்த்தத்தில் கீழ்ப்படியாவிட்டாலும், ஒரு விதத்தில், மேலோட்டமாக அதற்கு கீழ்ப்படிந்தார் எனலாம். பிறகு, மோசேயின் தமக்கை மிரியாம் கண்ணில்படும் தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள்.—யாத்திராகமம் 1:22–2:4.
பார்வோனின் குமாரத்தி குளிப்பதற்காக நதிக்கு வரும்போது மோசேயை பார்க்க வேண்டும் என்றுதான் யோகெபேத் நினைத்தாரா என்பது நமக்குத் தெரியாது; ஆனால் நடந்தது அதுவே. இது எபிரெய குழந்தை என்பது இளவரசிக்குப் புரிந்துவிட்டது. இப்போது அவர் என்ன செய்வார்? தன் தகப்பனின் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு குழந்தையை கொல்வதற்கு ஆணையிடுவாரா? இல்லை, இயல்பாக பெண்கள் எப்படி பிரதிபலிப்பார்களோ அப்படியே அவரும் பிரதிபலித்தார். அவர் இரக்கத்தோடு நடந்துகொண்டார்.
மிரியாம் உடனடியாக அவரிடத்திற்குச் சென்றாள். ‘பிள்ளைக்கு பால்கொடுக்கிற ஓர் எபிரெய ஸ்திரீயை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா?’ என அவள் கேட்டாள். பார்வோன் எபிரெயருக்கு விரோதமாக “புத்திசாலித்தனமாக” (NW) நடந்துகொள்ள தன் ஆலோசகரோடு திட்டமிட்டதையும், மோசேயின் தமக்கையோ உண்மையில் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டதையும் பற்றி இப்பகுதியில் முரணாக காட்டப்பட்டிருப்பது சிலருக்கு வினோதமாக தெரிகிறது. ஆனால் தமக்கை சொன்னதை அந்த இளவரசி ஏற்றுக்கொண்ட போதுதான் உண்மையில் மோசே பாதுகாக்கப்பட்டது உறுதியானது. “அழைத்துக்கொண்டு வா” என பார்வோனின் குமாரத்தி சொன்னதும் மிரியாம் தன் தாயை அழைத்துக்கொண்டு வந்தாள். அவர்கள் பேசி முடிவு செய்த பிறகு, ராஜாவின் பாதுகாப்புடன் யோகெபேத் தன் குழந்தையையே வளர்ப்பதற்கு சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டார்.—யாத்திராகமம் 2:5-9.
அந்த இளவரசி காண்பித்த பரிவு உண்மையில் அவரது தகப்பனின் மூர்க்கத்தனத்திற்கு முரணாக இருந்தது. அவர் குழந்தையைக் குறித்த விஷயத்தை அறியாமலும் இல்லை, ஏமாற்றப்படவுமில்லை. அவரது அன்பார்ந்த இரக்கமே குழந்தையை தத்தெடுக்க தூண்டியது; பால்கொடுப்பதற்கு ஓர் எபிரெய ஸ்திரீயை நியமிப்பதைக் குறித்த யோசனையை அவர் ஏற்றுக்கொண்டதும்கூட அவர் தன் தகப்பனின் பொல்லாத காரியங்களுக்கு உடந்தையாக இருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
வளர்ப்பும் கல்வியும்
யோகெபேத் “குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள். . . . குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள்.” (யாத்திராகமம் 2:9, 10, பொ.மொ.) மோசே தன் சொந்த பெற்றோருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என பைபிள் சொல்வதில்லை. குறைந்தபட்சம் பால்மறக்கும் பருவம் வரை—இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை—பெற்றோருடன் இருந்திருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். ஒருவேளை அது நீண்ட காலப்பகுதியாகவும் இருந்திருக்கலாம். அவர் தன் பெற்றோருடன் ‘வளர்ந்து’ வந்ததாக மட்டுமே யாத்திராகமம் குறிப்பிடுகிறது; அது எந்த வயதை வேண்டுமானாலும் குறிக்கலாம். எப்படியாயினும், அம்ராமும் யோகெபேத்தும் தங்கள் மகனுக்கு தான் ஒரு எபிரெயன் என்பதை புரிய வைப்பதற்கும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்கும் அந்தக் காலத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமில்லை. விசுவாசத்தையும் நீதியை நேசிப்பதையும் மோசேயின் இருதயத்தில் பதிய வைப்பதில் அவர்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்பது பிற்பாடே தெரியவரும்.
பார்வோனின் குமாரத்தியினிடத்தில் ஒப்படைத்த பின்பு மோசேக்கு “எகிப்தியரின் எல்லா ஞானமும்” கற்பிக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 7:22, தி.மொ.) மோசே அரசாங்க சேவைக்கு தகுதிபெற பயிற்சி அளிப்பதை அது அர்த்தப்படுத்தும். அந்த மிகப் பரந்த அளவிலான எகிப்திய கல்வியில் கணிதம், வடிவியல், சிற்பக்கலை, கட்டடக் கலை மற்றும் பல கலைகளும் விஞ்ஞானங்களும் இருந்தன. ஒருவேளை எகிப்திய மதப் போதனையையும் அளிக்க அந்த அரச குடும்பம் நினைத்திருக்கலாம்.
அரசகுலத்தைச் சேர்ந்த மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து மோசேயும் தனிச்சிறப்புமிக்க கல்வியை பெற்றிருக்கலாம். இப்படிப்பட்ட மிகச் சிறந்த கல்வியிலிருந்து பயனடைந்தவர்களில், “பிற நாட்டு ஆட்சியாளர்களின் பிள்ளைகளும் [உட்படுவர்]. இவர்கள் ‘கல்வி’ கற்பதற்காக எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள் அல்லது பிணையாளிகளாக கைவசப்படுத்தப்பட்டவர்கள். கல்வி கற்ற பின்பு [பார்வோனுக்கு உண்மையான] சிற்றரசர்களாக ஆட்சி செய்வதற்கு திரும்பிச் சென்றார்கள்.” (நான்காம் தூட்மோஸாவின் ஆட்சி (ஆங்கிலம்), பெட்ஸி எம். ப்ரையன் எழுதியது) அரச மாளிகைகளுடன் தொடர்புடைய பாலர் பள்ளிகள், அரண்மனை அதிகாரிகளாக சேவை புரிவதற்கு இளம் பிள்ளைகளை தயார்படுத்தியதாக தெரிகிறது.a பார்வோனுக்கே உரிய வேலைக்காரர் பலரும் உயர் பதவி வகித்த அரசாங்க அதிகாரிகளும் பெரியவர்களாக ஆன பிறகும் “பாலர் பள்ளியின் பாலகன்” (“Child of the Nursery”) என்ற கெளரவ பட்டத்தைப் பெற்றிருந்தனர் என்பதை எகிப்தின் இடை ராஜ்யத்தையும் புதிய ராஜ்யத்தையும் சேர்ந்த காலப்பகுதியை குறிப்பிடும் கல்வெட்டுகள் தெரியப்படுத்துகின்றன.
அரண்மனை வாழ்க்கை மோசேயை சோதனைக்குட்படுத்தும். அது அவருக்கு செல்வத்தையும் சொகுசான வாழ்க்கையையும் அதிகாரத்தையும் அளித்தது. ஒழுக்கரீதியிலான ஆபத்துக்களையும் முன்வைத்தது. இவற்றிற்கெல்லாம் மோசே எப்படி பிரதிபலிப்பார்? அவர் எதற்கு உண்மைப் பற்றுறுதியைக் காட்டுவார்? அவர் உண்மையிலேயே யெகோவாவை வணங்குபவராக, ஒடுக்கப்படும் எபிரெயர்களின் சகோதரனாக இருந்தாரா, அல்லது புறமத எகிப்து அளித்த அனைத்தையும் விரும்பினாரா?
ஒரு முக்கிய தீர்மானம்
40-ம் வயதில்—இச்சமயத்திற்குள் அவர் ஒரு எகிப்தியனாகவே மாறியிருக்கலாம்—மோசே ‘தன் சகோதரர்கள் சுமைசுமக்கிறதைப் பார்ப்பதற்கு சென்றார்.’ அதைத் தொடர்ந்த அவரது நடவடிக்கைகள், அவர் வெறுமனே அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் செல்லவில்லை என்பதை காண்பித்தன; அவர்களுக்கு உதவ விரும்பினார். எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டபோது அவர் குறுக்கிட்டு அந்தக் கொடியவனை கொன்றார். இச்செயல் மோசேயின் இருதயம் அவருடைய சகோதரர்கள் சார்பாகவே இருந்தது என்பதை காட்டியது. இறந்துபோன அந்த மனிதன் ஓர் அதிகாரியாகவே இருந்திருக்க வேண்டும்; அவர் தனது பணியில் இருக்கும்போதே கொல்லப்பட்டார். எகிப்தியரின் பார்வையில் பார்வோனுக்கு மோசே உண்மைப் பற்றுதியாய் இருப்பதற்கு எல்லா காரணமும் இருந்தது. ஆனாலும், நியாயத்தை நேசித்ததே அவ்வாறு செய்யும்படி மோசேயைத் தூண்டியது; மறுநாளில் எபிரெயன் ஒருவன் தன் தோழனை அநியாயமாக அடித்ததை எச்சரித்தபோது அவருடைய இப்பண்பு மேலும் வெளிப்பட்டது. மோசே அந்தக் கொடூரமான அடிமைத்தனத்திலிருந்து எபிரெயர்களை விடுவிக்க விரும்பினார்; ஆனால், தனக்கெதிராக மோசே செயல்பட்டதை பார்வோன் அறிந்து கொலை செய்ய முயன்றபோது, அவர் மீதியானுக்கு ஓடிப்போக வேண்டியதாயிற்று.—யாத்திராகமம் 2:11-15; அப்போஸ்தலர் 7:23-29.b
கடவுளுடைய மக்களை விடுவிப்பதற்கு மோசே தேர்ந்தெடுத்த சமயம் யெகோவா நிச்சயித்திருந்த சமயத்திற்கு ஒத்ததாக இருக்கவில்லை. இருந்தாலும், அவருடைய செயல்கள் அவருடைய விசுவாசத்தை வெளிப்படுத்தின. எபிரெயர் 11:24-26 இவ்வாறு கூறுகிறது: “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்”டார். ஏன்? ஏனெனில் அவர், “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று [“மேலானதென்று,” NW] எண்ணினா[ர்].” இங்கு “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என பொருள்படும் “கிறிஸ்து” என்ற பதம் வழக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்பட்டிருப்பது மோசேக்கு பொருத்தமாக இருக்கிறது; ஏனெனில் பிற்பாடு அவர் யெகோவாவிடமிருந்து நேரடியாக விசேஷித்த நியமிப்பை பெற்றார்.
சற்று கற்பனை செய்து பாருங்கள்! எகிப்திய அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பயிற்றுவிப்பை மோசே பெற்றிருந்தார். அவருடைய ஸ்தானத்திற்கு ஏற்றாற்போல் சிறந்த பணியும் அருமையான சுகபோக வாழ்க்கையும் இருந்தது; ஆனாலும் அவை அனைத்தையும் அவர் உதறித் தள்ளினார். கொடியவனான பார்வோனின் அரண்மனையில் வாழ்வதை யெகோவா பேரிலுள்ள அன்புக்கும் நியாயத்திற்கும் ஒத்துப்போகாத ஒன்றாக கருதினார். தன்னுடைய முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றவர்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி அறிந்து அவற்றை தியானித்தது கடவுளுடைய ஆதரவை நாடுவதற்கு அவரை வழிநடத்தியது. அதன் விளைவாக, யெகோவா தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பதற்கு மோசேயை பயன்படுத்த முடிந்தது.
எது முக்கியம் என்பதை தெரிவு செய்யவேண்டிய சூழ்நிலைகளை நாம் அனைவருமே எதிர்ப்படுகிறோம். ஒருவேளை மோசேயைப் போன்று நீங்கள் ஒரு கடினமான தீர்மானத்தை எதிர்ப்படலாம். எப்படிப்பட்ட இழப்பு வந்தாலும் சில பழக்கவழக்கங்களையோ அனுகூலங்களையோ விட்டுவிட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட தெரிவு உங்களுக்கு முன் இருந்தால், எகிப்தின் எல்லா பொக்கிஷங்களைக் காட்டிலும் யெகோவாவின் நட்பையே மிகவும் மதிப்புள்ளதாக கருதிய—அதற்காக வருத்தப்படாத—மோசேயை நினைவுகூருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இது, பாபிலோனில் அரசாங்க அதிகாரிகளாக சேவை செய்வதற்கு தானியேலும் அவருடைய கூட்டாளிகளும் பெற்ற கல்விக்கு ஒப்பாக இருந்திருக்கலாம். (தானியேல் 1:3-7) யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தை ஒப்பிட்டுப்பாருங்கள்.
b மோசே தான் ஓடிப்போயிருந்த மீதியான் தேசத்தில், ஆடுகளை மேய்க்கும் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டு உதவியற்ற சூழ்நிலையில் இருந்தபோது அவர்களுக்கு ஆதரவு காட்டினார்; அதன் மூலமும் நியாயத்தின் பேரில் தனக்கிருந்த வைராக்கியத்தை மேலுமாக காட்டினார்.—யாத்திராகமம் 2:16, 17.
[பக்கம் 11-ன் பெட்டி]
பாலூட்டும் தாய்மார் ஒப்பந்தங்கள்
தாய்மார் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுப்பர். என்றாலும், ஜர்னல் ஆஃப் பிப்ளிக்கல் லிட்ரேச்சர் என்ற புத்தகத்தில் ப்ரீவர்ட் சைல்ட்ஸ் என்ற அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “சில சந்தர்ப்பங்களில், [மத்திய கிழக்கு] அரச குடும்பத்தினர் தாய்ப்பால் கொடுப்பதற்கு தாய்மாரை சம்பளத்திற்கு அமர்த்தினர். சொந்த தாயால் குழந்தைக்கு பாலூட்ட முடியாத போது அல்லது தாய் யார் என்று தெரியாத போது இவ்வாறு சம்பளத்திற்கு அமர்த்தும் பழக்கம் இருந்தது. ஒப்பந்தம் செய்த குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதோடு அதை வளர்க்கும் பொறுப்பையும் அந்தத் தாய் ஏற்றுக்கொண்டாள்.” தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கான பல நாணற்புல் தாள் ஒப்பந்தங்கள் பண்டைக் கால மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. எகிப்தில் சுமேரியரின் காலப்பகுதியிலிருந்து கிரேக்கர்களின் பிந்திய காலம் வரை இந்தப் பழக்கம் இருந்ததற்கு இந்த ஆவணங்கள் ஆதாரம் அளிக்கின்றன. இந்த ஆவணங்களிலுள்ள பொதுவான அம்சங்கள் அதில் உட்பட்டுள்ள நபர்களைப் பற்றிய அறிக்கைகள், ஒப்பந்த காலம், வேலையைப் பற்றிய விதிமுறைகள், உணவூட்டுவது பற்றிய விவரங்கள், ஒப்பந்தத்தை மீறினால் செலுத்த வேண்டிய அபராதம், சம்பளம், சம்பளத்தை எப்படி கொடுப்பது போன்றவை. சாதாரணமாக, “இந்தக் குழந்தை வளர்ப்பு இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை நீடித்தது” என கூறுகிறார் சைல்ட்ஸ். “பாலூட்டும் தாய் குழந்தையை தன் வீட்டிலேயே வளர்த்தார், ஆனால், அவ்வப்போது குழந்தையை பார்வையிடுவதற்காக அதன் உரிமையாளரிடம் காண்பிக்க வேண்டியிருந்தது.”
[பக்கம் 9-ன் படங்கள்]
பழங்கால சித்திரம் காட்டுகிறபடி, மோசேயின் காலம் முதல் இதுவரை எகிப்தில் செங்கல் செய்வதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை
[படங்களுக்கான நன்றி]
மேலே: Pictorial Archive (Near Eastern History) Est.; கீழே: Erich Lessing/Art Resource, NY