அதிகாரம் 15
மெய்க் கடவுளிடம் திரும்புதல்
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:34, 35.
உண்மையான சீஷர்கள் யார் என்பதற்குரிய அடையாளத்தையே இயேசு இந்த வார்த்தைகளில் குறிப்பிட்டார். கிறிஸ்தவ அன்பு என்பது இனம், குலம், தேசம் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது. இயேசு எப்படி அன்றும் இன்றும் இந்த ‘உலகத்தின் பாகமாக இல்லையோ,’ அப்படியே உண்மை கிறிஸ்தவர்களும் இந்த ‘உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது.’—யோவான் 17:14, 16; ரோமர் 12:17-21.
2 தான் இந்த ‘உலகத்தின் பாகமாக இல்லை’ என்பதை ஒரு கிறிஸ்தவர் எப்படி காட்டலாம்? உதாரணமாக, அரசியல் சம்பவங்களும் புரட்சிகளும் போர்களும் கொந்தளிக்கும்போது அவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மேற்கூறப்பட்ட இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைய கிறிஸ்தவ அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.” சீஷர்கள் ஏன் சண்டையில் இறங்கி தம்மை விடுவிக்க முற்படவில்லை என்பதை இயேசு இவ்வாறு விளக்கினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் . . . என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” ஆம், இயேசுவின் உயிர் ஆபத்தில் இருந்தபோதும்கூட அந்த ஊழியர்கள் உலகத்தின் கலகக்கார வழிகளைப் பின்பற்றி சண்டையில் ஈடுபட்டு பிரச்சினையைத் தீர்க்க முற்படவில்லை.—1 யோவான் 3:10-12; யோவான் 18:36.
3 எல்லா தேசத்து மக்களும் யெகோவாவை வழிபட மெய் மதத்திற்கு கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்கள் யுத்தத்தைக் கற்க மாட்டார்கள் என்றும் கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, . . . எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”a—ஏசாயா 2:2-4.
4 உலகிலுள்ள எல்லா மதங்களிலும் எந்த மதம் இக்கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதில் தலைசிறந்து விளங்குகிறது? சிறைவாசம், சித்திரவதை முகாம்கள், மரண தீர்ப்புகள் ஆகியவற்றின் மத்தியிலும் யுத்தத்தைக் கற்றுக்கொள்ள மறுத்திருப்பவர்கள் யார்?
கிறிஸ்தவ அன்பும் நடுநிலைமையும்
5 யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு கிறிஸ்தவ நடுநிலையை காத்துக்கொள்கிறார்கள் என்பது உலகம் அறிந்ததே. 20-ம் நூற்றாண்டு முழுவதுமாக, சிறைவாசம், சித்திரவதை முகாம்கள், வேதனைகள், நாடு கடத்தப்படுதல், துன்புறுத்தல் ஆகியவற்றை அவர்கள் சகித்து வந்திருக்கிறார்கள். கடவுளிடம் ஈர்க்கப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ சபையினராக தங்களுடைய அன்பையும் ஒற்றுமையையும் விட்டுக்கொடுக்க மறுத்ததாலேயே இவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள். நாசி ஜெர்மனியில் 1933-45 வரையான ஆண்டுகளில் ஹிட்லரின் போர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சுமார் ஆயிரம் சாட்சிகள் மாண்டுபோயினர், ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல, முற்காலங்களில் பாசிஸ நாடாக இருந்த ஸ்பெய்னில் ஃபிரான்கோவின் ஆட்சியில் நூற்றுக்கணக்கான இளம் சாட்சிகள் சிறை பிடிக்கப்பட்டனர். போர் பயிற்சி பெற மறுத்ததற்காக அவர்களில் அநேகர் சராசரியாக பத்து ஆண்டுகள் இராணுவ சிறைகளில் கழித்தனர். இன்றும் பல தேசங்களில் யெகோவாவின் இளம் சாட்சிகள் தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலை காரணமாக சிறைச்சாலையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கங்களின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. இவர்கள் 20-ம் நூற்றாண்டில் நடந்த சண்டைகள், போர்கள், அரசியல் விவகாரங்கள் ஆகியவற்றில் கிறிஸ்தவ நடுநிலைமையை இம்மியளவும் விடாது காத்துக்கொண்டனர். இவர்களே உண்மை கிறிஸ்தவர்கள் என இது முத்திரையிடுகிறது, கிறிஸ்தவமண்டல மதங்களிலிருந்து இவர்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறது.—யோவான் 17:16; 2 கொரிந்தியர் 10:3-5.
6 யெகோவாவின் சாட்சிகள் பைபிளையும் கிறிஸ்துவின் முன்மாதிரியையும் பின்பற்றுவதன் மூலம் தாங்கள் மெய்க் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தார் என்பதை பளிச்சென காண்பிக்கிறார்கள். இயேசுவின் வாழ்க்கையிலும் அவரது பலியிலும் கடவுளுடைய அன்பு வெளிப்பட்டிருப்பதை அவர்கள் மதித்துணருகிறார்கள். உண்மையான கிறிஸ்தவ அன்பு என்பது அரசியல், இனம், தேசம் ஆகியவற்றால் பிரிக்கப்பட முடியாத உலகளாவிய சகோதரத்துவம் என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். வேறு வார்த்தையில் சொன்னால், கிறிஸ்தவம் என்பது சர்வதேச அமைப்பு மட்டுமல்ல, ஆனால் சர்வதேசங்களின் எல்லைகளுக்கும் அதிகாரங்களுக்கும் அக்கறைகளுக்கும் அப்பாற்பட்ட அமைப்பாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பொதுவான ஒரே முற்பிதாவையும் யெகோவா தேவன் என்ற ஒரே படைப்பாளரையும் கொண்ட ஒரு குடும்பமாக அது மனித இனத்தைக் கருதுகிறது.—அப்போஸ்தலர் 17:24-28; கொலோசெயர் 3:9-11.
7 கிட்டத்தட்ட எல்லா மதத்தவரும் தங்கள் சொந்த மதத்தவரையும் பிற மதத்தவரையும் கொன்று குவிக்கும் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள், ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ மேலே மேற்கோள் காட்டப்பட்ட ஏசாயா 2:4-ன் தீர்க்கதரிசனத்தை மனப்பூர்வமாக ஏற்றிருப்பதைக் காண்பித்திருக்கிறார்கள். ‘அப்படியானால் யெகோவாவின் சாட்சிகள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?’ என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.
கடவுளுடைய சாட்சிகளின் நீண்ட பட்டியல்
8 பின்வரும் அழைப்பை 2,700-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி விடுத்தார்: ‘யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.’—ஏசாயா 55:6, 7.
9 பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல், ஏதன்ஸ் நகரில் வணங்கப்பட்ட புராணவியல் தெய்வங்கள் மீது “பக்தியுள்ளவர்க”ளாயிருந்த கிரேக்கர்களிடம் இவ்வாறு விளக்கினார்: “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:22-28.
10 தமது மனித படைப்புகளான ஆதாம் ஏவாளிடமிருந்து கடவுள் நிச்சயமாகவே தூரமானவராக இருக்கவில்லை. அவர் தமது கட்டளைகளையும் விருப்பங்களையும் அவர்களிடம் சொன்னார். மேலும் அவர்களுடைய மகன்களான காயீனிடமும் ஆபேலிடமும்கூட அவர் தொடர்புகொண்டார். தன் சகோதரன் செலுத்திய பலியைக் கண்டு காயீன் பொறாமை அடைந்து தனது வெறுப்பை வெளிக்காட்டியபோது கடவுள் அவனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால், காயீன் தன் வழிபாட்டு முறையை மாற்றிக்கொள்வதற்கு பதிலாக பொறாமையால் ஆபேலின் வணக்கத்தை எதிர்த்து அவரை கொலை செய்தான்.—ஆதியாகமம் 2:15-17; 3:8-24; 4:1-16.
11 ஆபேல் தன்னுடைய மரணம்வரை கடவுளுக்கு உண்மையுடன் இருந்ததால், அவரே முதல் உயிர்த்தியாகியானார்.b அதோடு, யெகோவாவுக்கு முதல் சாட்சியாகவும் இருந்தார்; யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்து வந்திருக்கும் சாட்சிகளின் நீண்ட பட்டியலில் முன்னோடியானார். ஆகவே பவுல் இவ்வாறு சொன்னார்: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.”—எபிரெயர் 11:4.
12 எபிரெயருக்கு எழுதிய அதே கடிதத்தில் நோவா, ஆபிரகாம், சாராள், மோசே போன்ற விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும்கூட பவுல் பட்டியலிடுகிறார். உத்தமத்தைக் காத்துக்கொண்டதன் காரணமாக இவர்கள் ‘மேகம்போன்ற திரளான சாட்சிகளாக [கிரேக்கு, மார்டீரியன்]’ ஆயினர். உண்மையான கடவுளை அறிந்துகொண்டு அவரை சேவிக்க விரும்பும் மற்றவர்களுக்கு இவர்கள் முன்மாதிரிகளாக இருக்கின்றனர். இவர்களுடைய முன்மாதிரி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. இவர்கள் யெகோவா தேவனோடு நல்ல உறவை வைத்திருந்த ஆண்களும் பெண்களுமாவர். இவர்கள் அவரைத் தேடி கண்டுபிடித்திருந்தனர்.—எபிரெயர் 11:1–12:1.
13 இந்தச் சாட்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இயேசு கிறிஸ்து. வெளிப்படுத்துதல் புத்தகத்தில், ‘உண்மையுள்ள சாட்சி’ என இவர் விவரிக்கப்பட்டுள்ளார். கடவுளுடைய அன்புக்கு இயேசு மற்றொரு தெளிவான அத்தாட்சியாக திகழ்கிறார். யோவான் இவ்வாறு எழுதினார்: “பிதாவானவர் குமாரனை உலக ரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்.” யூத வம்சத்தில் பிறந்த இயேசு உண்மையுள்ள சாட்சியாக இருந்தார்; அவருடைய பரம தந்தையான யெகோவாவுக்கு விசுவாசமிக்கவராக இருந்து உயிரைத் தியாகம் செய்தார். கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களும், எல்லா காலங்களிலுமே இயேசுவுக்கும் மெய் கடவுளாகிய யெகோவாவுக்கும் சாட்சிகளாக இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 1:5; 3:14; 1 யோவான் 4:14-16; ஏசாயா 43:10-12; மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
14 மெய்க் கடவுளான யெகோவாவை மக்கள் நாடி வருவது ‘கடைசி நாட்களின்’ ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்பதை ஏசாயா தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது.c வித்தியாசமான மதங்களையும் அவற்றால் விளைந்திருக்கும் குழப்பங்களையும் பற்றி இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதை கவனிக்கையில் பின்வரும் கேள்வி எழுகிறது: நாம் வாழும் இக்கடைசி நாட்களில் மெய்க் கடவுளை உண்மையில் தேடிக் கண்டுபிடித்து அவரை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்பவர்கள் யார்? இதற்கான பதிலைப் பெற 19-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு நமது கவனத்தை திருப்ப வேண்டும்.—ஏசாயா 2:2-4: 2 தீமோத்தேயு 3:1-5; யோவான் 4:23, 24.
கடவுளைத் தேடிய ஓர் இளைஞர்
15 சார்ல்ஸ் டேஸ் ரஸல் (1852-1916) என்ற பெயர் கொண்ட மிகுந்த ஆர்வமுள்ள ஓர் இளைஞர் 1870-ல் கிறிஸ்தவமண்டல பாரம்பரிய போதனைகளைக் குறித்து அநேக கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். இவருடைய தந்தை அமெரிக்காவிலுள்ள பென்ஸில்வேனியாவில் தொழிற்சாலைகள் நிறைந்த அலிகெனி நகரில் (தற்போது பிட்ஸ்பர்க்கின் பாகமாக இருக்கிறது) சிறு பொருட்களை விற்பனை செய்யும் கடையை வைத்திருந்தார். இளவயதில் ரஸல் இந்தக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் பிரிஸ்பிட்டேரியன் சபையையும், பிற்பாடு காங்கிரிகேஷனல் சபையையும் சேர்ந்தவராக இருந்தார். ஆனால் நரகத்தில் நித்திய வாதனை, விதி போன்ற போதனைகளை ஏற்க இவருடைய மனம் இடங்கொடுக்கவில்லை. கிறிஸ்தவமண்டல மதங்களின் அடிப்படை கோட்பாடுகளை ரஸல் ஏன் சந்தேகித்தார்? அவர் இவ்வாறு எழுதினார்: “தமது வல்லமையால் மனிதரைப் படைத்து, அவர்கள் செய்யப் போவதை முன்னரே அறிந்து, அவர்களுக்கு நிகழப்போவதை முன்னரே எழுதிவிட்டு, பின்னர் அவர்களை நித்தியமாக வாதிக்கும் ஒரு கடவுள் ஞானமுள்ளவராக, நியாயமுள்ளவராக, அன்புள்ளவராக இருக்கவே முடியாது. அப்படி ஒரு கடவுள் இருந்தால், அவர் மனிதர்களைவிட மிக மட்டமானவராகத்தான் இருக்க வேண்டும்.”—எரேமியா 7:31; 19:5; 32:35; 1 யோவான் 4:8, 9.
16 பருவ வயதின் முடிவிலே ரஸல் மற்ற இளைஞர்களோடு சேர்ந்து வாராந்தர பைபிள் படிப்பு தொகுதி ஒன்றை நடத்த ஆரம்பித்தார். ஆத்துமா அழியாமை, கிறிஸ்துவின் மீட்கும் பலி, அவருடைய இரண்டாம் வருகை போன்ற பைபிள் போதனைகளை இவர்கள் ஆராய ஆரம்பித்தனர். 1877-ம் வருடத்திலே, தன்னுடைய 25-ம் வயதில், அமோகமாக நடந்துகொண்டிருந்த தனது தந்தையின் வியாபாரத்தில் தனக்கிருந்த பங்கை விற்றுவிட்டு முழுநேர பிரசங்க வேலையில் ரஸல் இறங்கினார்.
17 ரஸலுக்கும் இவருடைய பார்ட்னர் ஒருவருக்கும் பெரிய கருத்து வேறுபாடு ஒன்று 1878-ல் ஏற்பட்டது, கிறிஸ்துவின் மரணம் பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதை அந்தப் பார்ட்னர் ஏற்க மறுத்தார். அதைக் கண்டித்து ரஸல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நமக்காக பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர் நமக்காக மரித்தார்; அநியாயக்காரருக்காக நியாயமுள்ளவர் மரித்தார். அனைவரும் அநியாயம் செய்கிறவர்கள். கடவுளின் கிருபையினாலே ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு கிறிஸ்து மரணத்தை ருசிபார்த்தார். . . . தமக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் அவர் நித்திய இரட்சிப்பை அளிப்பார்.” தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “மீட்பு என்றால் திரும்ப வாங்குவதாகும். அப்படியானால், எல்லா மனிதருக்காகவும் கிறிஸ்து எதை திரும்ப வாங்கினார்? ஜீவனை வாங்கினார். முதல் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நாம் அதை இழந்தோம். இரண்டாவது ஆதாம் [கிறிஸ்து] தமது சொந்த உயிரைக் கொடுத்து அதைத் திரும்ப வாங்கினார்.”—மாற்கு 10:45; ரோமர் 5:7, 8; 1 யோவான் 2:2; 4:9, 10.
18 மீட்பு எனும் கோட்பாட்டை ரஸல் எப்போதும் உறுதியாக ஆதரித்து வந்தார், தனது பார்ட்னர் இதை ஏற்க மறுத்ததால் அவரோடிருந்த எல்லா உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். 1879, ஜூலை மாதம் ஜயன்ஸ் உவாட்ச் டவர் அண்டு ஹெரல்டு ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பித்தார். இன்று அது உலகம் முழுவதிலும் காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்ற பெயரில் வெளிவருகிறது. முழு ஈடுபாடு காண்பித்த மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து லாபம் கருதாத பைபிள் சொஸைட்டி ஒன்றை 1881-ல் நிறுவினார். அது ஜயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டி என்றழைக்கப்பட்டது. இன்று அதன் பெயர் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்சில்வேனியா. இதுவே யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக இயங்கும் சட்டப்படியான அமைப்பாகும். சபைக் கூட்டங்களில் காணிக்கைகளை வசூலிக்கக் கூடாது என்பதிலும், உவாட்ச் டவர் பிரசுரங்களின் பேரில் நிதி திரட்டக் கூடாது என்பதிலும் ஆரம்பத்திலிருந்தே ரஸல் மிகவும் உறுதியாக இருந்தார். பைபிளை ஆழமாக ஆராய்வதில் ரஸலுடன் சேர்ந்துகொண்டவர்கள் பைபிள் மாணாக்கர் என்று அறியப்பட்டனர்.
பைபிள் சத்தியத்திடம் திரும்புதல்
19 ரஸலும் அவருடைய நண்பர்களும் பைபிளை ஆராய்ந்து படித்த பின்னர், குழப்பமான “மகா பரிசுத்த திரித்துவம்,” அழியாத மனித ஆத்துமா, நரக அக்கினியில் நித்திய வாதனை போன்ற கிறிஸ்தவமண்டல போதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை புரிந்துகொண்டு அவற்றை ஒதுக்கித் தள்ளினர். இறையியல் கல்லூரியில் விசேஷ பயிற்சி பெற்ற குருவர்க்கம் ஒன்று அவசியமே இல்லை என்றும் அவர்கள் கூறினர். கிறிஸ்தவம் ஆரம்பமான சமயத்தில் அது எப்படிப்பட்ட எளிமையான நிலையில் இருந்ததோ அப்படிப்பட்ட நிலையில் இருக்கவே அவர்கள் விரும்பினர். ஆவிக்குரிய தகுதிபெற்ற மூப்பர்கள் சம்பளத்தை அல்லது ஈட்டுத்தொகையை எதிர்பார்க்காமல் சபைகளை முன்நின்று நடத்த வேண்டுமென்றும் அவர்கள் விரும்பினர்.—1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9.
20 கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்தபோது அந்த பைபிள் மாணாக்கர் “உலகத்தின் முடிவு,” கிறிஸ்துவின் “வருகை” ஆகியவை சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களில் அதிக ஆர்வம் காட்டினர். (மத்தேயு 24:3) கிரேக்க வாசகத்துக்கு கவனத்தைத் திருப்பியபோது கிறிஸ்துவின் “வருகை” என்பது உண்மையில் காணக்கூடாத பிரசன்னம், அதாவது “பரோஸியா” என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். ஆகவே, காணக்கூடிய வருகைக்கான அத்தாட்சியாக அல்ல, ஆனால் முடிவுகாலத்தில் அவருடைய காணக்கூடாத பிரசன்னத்திற்கு அத்தாட்சியாக உள்ள தகவலையே கிறிஸ்து தமது சீஷர்களுக்கு கொடுத்தார் என்பதை புரிந்துகொண்டனர். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் பிரசன்னம் சம்பந்தமாக பைபிள் தரும் காலக்கணக்கை புரிந்துகொள்ளவும் இந்த பைபிள் மாணாக்கர் ஆர்வம் காண்பித்தனர். எல்லா விவரங்களையும் தெளிவாக புரிந்துகொள்ளாவிட்டாலும், 1914 மனித சரித்திரத்தில் முக்கிய ஆண்டாக இருக்கும் என்பதை ரஸலும் அவருடைய நண்பர்களும் உணர்ந்து கொண்டார்கள்.—மத்தேயு 24:3-22; லூக்கா 21:7-33.
21 மிகப் பிரமாண்டமான அளவில் பிரசங்க வேலை செய்யப்பட வேண்டும் என்பதை ரஸல் அறிந்திருந்தார். மத்தேயுவிலுள்ள இயேசுவின் பின்வரும் வார்த்தைகளுடைய முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14; மாற்கு 13:10) 1914-க்கு முன்னான வருடங்களில் பைபிள் மாணாக்கர் அவசரத்தன்மையுடன் அவ்வேலையில் ஈடுபட்டனர். ஏனென்றால் அந்த வருடத்தில் அவர்களுடைய பிரசங்க வேலை முடிவடையுமென்றும், ஆகவே “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷ”த்தை மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் நினைத்தனர். காலப்போக்கில், சி. டி. ரஸலின் பைபிள் பிரசங்கங்கள் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களில் பிரசுரமாயின.
சோதனைகளும் மாற்றங்களும்
22 சார்ல்ஸ் டேஸ் ரஸல் 1916-ல் தனது 64-ம் வயதில் ஐக்கிய மாகாணங்களில் பிரசங்கிப்பதற்காக சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீரென காலமானார். இப்போது பைபிள் மாணாக்கர்களின் கதி என்ன? ஏதோ ஒரு மனிதனைப் பின்பற்றியவர்களாக அவர்கள் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிடுவார்களா? முதல் உலகப் போர் (1914-18) எனும் கொலைக்களத்தில் குதிக்க அமெரிக்காவும் தீவிரம் காட்டிய சமயத்தின்போது ஏற்படவிருந்த சோதனைகளை இவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?
23 உவாட்ச் டவர் சொஸைட்டியைச் சேர்ந்த டபிள்யூ. ஈ. வான் ஆம்பர்க் என்பவரின் வார்த்தைகள் பெரும்பாலான பைபிள் மாணாக்கர்களுடைய மனநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது: “உலகம் முழுவதிலும் செய்யப்பட வேண்டிய இந்தப் பிரமாண்டமான வேலை ஒரு மனிதனுடைய வேலை அல்ல. இது ஒருவரால் மட்டுமே செய்து முடிக்க முடியாத மிகப் பிரமாண்டமான வேலை. இது கடவுளுடைய வேலை, இது மாறுவதே கிடையாது. கடந்த காலங்களில் கடவுள் அநேக ஊழியர்களை பயன்படுத்தியதைப் போல எதிர்காலத்திலும் இன்னும் பலரை பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. நம்மை அர்ப்பணித்திருப்பது ஒரு மனிதனுக்கோ மனிதருடைய வேலைக்கோ அல்ல. ஆனால் கடவுளுடைய சித்தத்தை செய்வதற்காகவே நம்மை அர்ப்பணித்திருக்கிறோம்; அந்த சித்தத்தை கடவுள் தமது வார்த்தையின் மூலமும் தமது வழிநடத்துதலின் மூலமும் நமக்குத் தொடர்ந்து வெளிப்படுத்துவார். இன்னும் கடவுள்தான் இவ்வேலையை தலைமைதாங்கி நடத்தி வருகிறார்.”—1 கொரிந்தியர் 3:3-9.
24 ஜனவரி 1917-ல் வழக்கறிஞராகவும் ஊக்கமுள்ள பைபிள் மாணாக்கராகவும் இருந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு என்பவர் உவாட்ச் டவர் சொஸைட்டியின் இரண்டாவது பிரெஸிடன்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆற்றல்மிக்கவராக, அஞ்சா நெஞ்சுடையவராக இருந்தார். கடவுளுடைய ராஜ்யம் முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தார்.—மாற்கு 13:10.
புதிய வைராக்கியமும் புதிய பெயரும்
25 ஐக்கிய மாகாணங்களில் 1919-ம் வருடத்திலும் 1922-ம் வருடத்திலும் மாநாடுகளை நடத்த உவாட்ச் டவர் சொஸைட்டி ஏற்பாடு செய்தது. முதல் உலகப் போரின் துன்புறுத்தலுக்குப் பின் அமெரிக்காவில் சில ஆயிரங்களாக மட்டுமே இருந்த பைபிள் மாணாக்கர்களுக்கு அது கிட்டத்தட்ட ஒரு பெந்தெகொஸ்தே பண்டிகையைப் போலவே இருந்தது. (அப்போஸ்தலர் 2:1-4) மனிதருக்குப் பயப்படுவதற்கு பதிலாக புறப்பட்டுப் போய் சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கும்படி பைபிள் விடுக்கும் அழைப்பை இவர்கள் அதிக ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர். 1919-ல் காவற்கோபுரம் பத்திரிகைக்கு துணை பத்திரிகையாக த கோல்டன் ஏஜ் என்ற பத்திரிகையை உவாட்ச் டவர் சொஸைட்டி வெளியிட்டது, இது இன்று உலகம் முழுவதிலும் விழித்தெழு! என்ற பெயரில் வெளிவருகிறது. நாம் வாழும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இது மக்களை தட்டியெழுப்புகிறது, சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகம் வரும் என்ற படைப்பாளரின் வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது.
26 கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலங்களில் செய்யப்பட்ட அதே முறையில் பிரசங்கிப்பதற்கு, அதாவது வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதற்கு பைபிள் மாணாக்கர் 1920-களிலும் 1930-களிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். (அப்போஸ்தலர் 20:20) கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியைப் பற்றி எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு சாட்சி கொடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு விசுவாசிக்கும் இருந்தது. மனிதகுலத்துக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய விவாதம் சர்வலோக பேரரசுரிமையைப் பற்றியது என்பதையும்; சாத்தானையும் பூமியில் அவன் செய்திருக்கும் எல்லா நாசவேலைகளையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் யெகோவா தேவன் அந்த விவாதத்தை தீர்த்து வைப்பார் என்பதையும் பைபிளிலிருந்து அவர்கள் தெளிவாக புரிந்துகொண்டனர். (ரோமர் 16:20; வெளிப்படுத்துதல் 11:17, 18) இந்த விவாதத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தபோது, கடவுளுடைய பேரரசுரிமை நிலைநாட்டப்படுவதே மனிதர்களுடைய இரட்சிப்பைவிட அதிமுக்கியம் என்பது புரிந்துகொள்ளப்பட்டது. அப்படியானால், கடவுளுடைய நோக்கங்களுக்கும், அவரது உன்னத பேரரசாட்சிக்கும் சான்றளிக்க விரும்புகிற உண்மையுள்ள சாட்சிகள் பூமியில் இருக்க வேண்டும். இந்தத் தேவை எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டது?—யோபு 1:6-12; யோவான் 8:44; 1 யோவான் 5:19, 20.
27 பைபிள் மாணாக்கர் ஜூலை 1931-ல் கொலம்பஸ், ஒஹாயோவில் ஒரு மாநாடு நடத்தினர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் தீர்மானம் ஒன்றை ஏற்றனர். அதில் “ஆண்டவராகிய கர்த்தரின் வாய் விளம்பின பெயரை” சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டனர். “நாங்கள் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்று அறியப்படவும் அழைக்கப்படவுமே விரும்புகிறோம்” என அவர்கள் கூறினர். அது முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய பிரத்தியேக நம்பிக்கைகளுக்காக மட்டுமல்ல, வைராக்கியத்தோடு செய்யும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்காகவும், தெரு ஊழியத்திற்காகவும்கூட உலகெங்கிலும் பிரபலமாயிருக்கின்றனர். (பக்கங்கள் 356-7-ஐக் காண்க.)—ஏசாயா 43:10-12; மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
28 கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகும் பரலோக வகுப்பாரைப் பற்றியும் பூமியில் இருக்கப்போகும் அவர்களுடைய குடிமக்களைப் பற்றியும் 1935-ல் சாட்சிகள் தெளிவாக புரிந்துகொண்டனர். அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 பேர் மாத்திரமே பரலோகங்களில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யும்படி அழைக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தனர். அப்படியானால் மனிதகுலத்தில் மீதமுள்ளவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அரசாங்கம் என்று ஒன்றிருந்தால் அதற்கு குடிமக்கள் தேவை. எனவே, பரலோக அரசாங்கமான இந்த ராஜ்யத்திற்கும்கூட கீழ்ப்படிதலுள்ள லட்சக்கணக்கான குடிமக்கள் பூமியில் இருப்பார்கள். இவர்களே “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.” இவர்களே “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் [யெகோவாவுக்கும்] ஆட்டுக்குட்டியானவருக்கும் [கிறிஸ்து இயேசுவுக்கும்] உண்டாவதாக” என்று மகா சத்தமாய் ஆர்ப்பரிக்கிறவர்கள்.—வெளிப்படுத்துதல் 7:4, 9, 10; 14:1-3; ரோமர் 8:16, 17.
29 திரள் கூட்டத்தார் சம்பந்தமாக இந்த விளக்கத்தைப் புரிந்துகொண்டபோது தங்களுக்கு முன்னால் மிகப் பெரிய சவால் இருந்ததை யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்தனர். ஆம், மெய்க் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிற, அதாவது ‘திரள் கூட்டத்தாரின்’ பாகமாக ஆகப்போகிற லட்சக்கணக்கானோரை கண்டுபிடித்து அவர்களுக்குப் போதிக்க வேண்டிய சவால் தங்களுக்கு முன் இருந்ததை உணர்ந்தனர். இதற்கு சர்வதேச அளவில் கல்வி புகட்டும் திட்டம் தேவை. பயிற்சி பெற்ற பேச்சாளர்களும் ஊழியர்களும் தேவை. பள்ளிகளும் தேவை. இந்தத் தேவைகளைப் பற்றியெல்லாம் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அடுத்த பிரெஸிடன்ட் ஆழ்ந்து சிந்திக்க தொடங்கினார்.
உலகெங்கும் கடவுளைத் தேடுகிறவர்களைத் தேடி
30 யெகோவாவின் சாட்சிகள் 1931-ல் 50-க்கும் குறைவான நாடுகளில் 50,000-க்கும் குறைவாகவே இருந்தனர். 1930-களிலும் 1940-களிலும் நடந்த சம்பவங்கள் அவர்களுடைய பிரசங்க வேலையை இன்னும் கடினமாக்கின. இந்தக் காலப் பகுதியில்தான் ஃபாசிஸம், நாசிஸம் ஆகியவை தோன்றின, அதோடு இரண்டாம் உலகப் போரும் மூண்டது. 1942-ல் ஜே. எஃப். ரதர்ஃபர்டு மரித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்கு கூடுதலான உத்வேகம் அளிக்க உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு செயல்வீரரான ஒரு பிரெஸிடன்ட் தேவைப்பட்டார்.
31 நேதன் எச். நார் என்பவர் 1942-ல், தன்னுடைய 36-வது வயதில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் மூன்றாவது பிரெஸிடன்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் துடிப்புமிக்க திறமையான ஒழுங்கமைப்பாளராக இருந்தார். தேசங்கள் இரண்டாம் உலகப் போரின் கொந்தளிப்பில் ழூழ்கியிருந்த அந்தச் சமயத்தில்கூட உலகெங்கிலும் இன்னும் தீவிரமாக நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டியிருந்ததை அவர் தெளிவாக புரிந்துகொண்டிருந்தார். ஆகவே மிஷனரிகளைப் பயிற்றுவிக்க உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட் என்றழைக்கப்படும் ஒரு பள்ளியை ஏற்படுத்த திட்டமிட்டார், உடனடியாக அதை செயல்படுத்தினார்.d ஜனவரி 1943-ல், முழுநேர ஊழியர்களாக இருந்த நூறு பைபிள் மாணாக்கர் அந்தப் பள்ளியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர். பைபிளையும் ஊழியம் சம்பந்தப்பட்ட பாடங்களையும் சுமார் ஆறு மாதங்களுக்கு ஊக்கமாக படித்தனர். பின்னர், அவர்கள் மிஷனரிகளாக—முக்கியமாய் அயல் நாடுகளுக்கு—அனுப்பி வைக்கப்பட்டனர். 2004-ம் வருடம் வரை 116 வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. கிலியட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மிஷனரிகள் உலகம் முழுவதிலும் ஊழியம் செய்வதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
32 1943-ல், 54 தேசங்களில் 1,26,329 சாட்சிகள் மாத்திரமே பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாசிஸம், ஃபாசிஸம், கம்யூனிஸம், கத்தோலிக்கர், குடியாட்சி நாடுகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் பயங்கரமான எதிர்ப்புகள் எழுந்தபோதிலும் 1946-க்குள் யெகோவாவின் சாட்சிகள் 1,76,000-க்கும் அதிக ராஜ்ய பிரசங்கிகள் என்ற உச்சநிலையை எட்டிவிட்டிருந்தார்கள். ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின், 235-க்கும் மேலான நாடுகளிலும் தீவுகளிலும் பிராந்தியங்களிலும் 64 லட்சத்திற்கும் அதிகமானோர் சுறுசுறுப்பாக பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பெயராலும் செயலாலும் அவர்கள் தங்களை தெளிவாக அடையாளம் காட்டியிருப்பதால் உலகம் முழுக்க பிரபலமாகியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய திறமைக்குப் பின்னால் மற்ற விஷயங்களும் இருக்கின்றன.—சகரியா 4:6.
பைபிள் கல்வி புகட்டும் அமைப்பு
33 யெகோவாவின் சாட்சிகள், ராஜ்ய மன்றங்களில் வாரந்தோறும் பைபிள் படிப்பு கூட்டங்களை நடத்துகிறார்கள், இதனால் உலகம் முழுவதிலுமுள்ள 95,000-க்கும் மேற்பட்ட சபைகள் நன்மையடைகின்றன. இந்தக் கூட்டங்கள் சடங்குகளை செய்வதற்காகவோ கூடிவந்திருப்போரை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்துவதற்காகவோ நடத்தப்படுவது இல்லை. மாறாக, கடவுளையும் அவருடைய வார்த்தையையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவை அளிப்பதற்காகவே இவை நடத்தப்படுகின்றன. எனவே பைபிளைப் பற்றி அதிகம் புரிந்துகொள்வதற்காகவும் அதன் செய்தியை மற்றவர்களுக்கு எப்படி பிரசங்கிப்பது, எப்படி கற்பிப்பது என்பதை கற்றுக்கொள்வதற்காகவும் யெகோவாவின் சாட்சிகள் வாரத்தில் மூன்று தடவை ஒன்றாக கூடிவருகிறார்கள்.—ரோமர் 12:1, 2; பிலிப்பியர் 1:9-11; எபிரெயர் 10:24, 25.
34 உதாரணமாக, வாரத்தின் மத்திப நாளில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்ற ஒரு கூட்டம் நடைபெறுகிறது, இந்தப் பள்ளியில் சபை அங்கத்தினர்கள் சேர்ந்துகொள்ளலாம். இந்தப் பள்ளியை தகுதிபெற்ற ஒரு கிறிஸ்தவ மூப்பர் நடத்துகிறார். பைபிள் நியமங்களுக்கேற்ப போதிக்கிற கலையிலும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் கலையிலும் ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் இந்தப் பள்ளி பயிற்றுவிக்கிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” ராஜ்ய செய்தியை எவ்வாறு “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” தெரிவிப்பது என்பதையும் சாட்சிகள் அந்தக் கிறிஸ்தவ கூட்டங்களில் கற்றுக்கொள்கிறார்கள்.—கொலோசெயர் 4:6; 1 பேதுரு 3:15, NW.
35 வாரத்தின் மற்றொரு நாளில் சாட்சிகள் 45 நிமிட பைபிள் பேச்சைக் கேட்பதற்காக கூடிவருகிறார்கள், அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ போதனையோடு அல்லது கிறிஸ்தவ நடத்தையோடு சம்பந்தப்பட்ட ஒரு பைபிள் தலைப்பை (கேள்வி பதில் மூலமாக) சபையார் ஒரு மணிநேரம் கலந்தாலோசிக்கிறார்கள். இதில் சபை அங்கத்தினர்கள் தாராளமாக தங்கள் குறிப்புகளை சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் சாட்சிகள் ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை நீடிக்கும் பெரிய கூட்டங்களுக்கு, அதாவது அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றுக்கு செல்கிறார்கள்; இங்கே பைபிள் பேச்சுக்களைக் கேட்க பொதுவாக ஆயிரக்கணக்கானோர் கூடிவருகிறார்கள். எல்லா சாட்சிகளுமே, இந்தப் பூமிக்கும் மனிதகுலத்துக்குமான கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி இந்தக் கூட்டங்களிலிருந்தும் இலவசமாக நடத்தப்படும் மற்ற கூட்டங்களிலிருந்தும் அதிகமதிகமாக தெரிந்துகொள்கிறார்கள், அதோடு கிறிஸ்தவ ஒழுக்கங்களைப் பற்றி மிகச் சிறந்த கல்வியையும் பெற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்து இயேசுவின் போதனைகளையும் முன்மாதிரியையும் பின்பற்றும்போது ஒவ்வொருவரும் மெய்க் கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கி வர கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.—யோவான் 6:44, 65; 17:3; 1 பேதுரு 1:15, 16.
சாட்சிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்?
36 யெகோவாவின் சாட்சிகள் கூட்டங்களை நடத்துவதிலும் பிரசங்க வேலையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களை முன்நின்று வழிநடத்த நிச்சயம் யாராவது இருக்க வேண்டும். ஆனால் சம்பளம் பெற்றுக்கொண்டு ஊழியம் செய்கிற குருவர்க்கம் அவர்களுக்கு இல்லை, எந்தவொரு ‘காரிஸ்மாட்டிக்’ தலைவரும் இல்லை. (மத்தேயு 23:10) “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:8; அப்போஸ்தலர் 8:18-21) ஒவ்வொரு சபையிலும் ஆவிக்குரிய தகுதிபெற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் இருக்கிறார்கள். இவர்களில் அநேகர் வேலைக்குப் போய் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, சபையில் மனமுவந்து போதிக்கிறார்கள், அதை வழிநடத்தவும் செய்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இவ்விதமாகத்தான் செய்தார்கள்.—அப்போஸ்தலர் 20:17; பிலிப்பியர் 1:1; 1 தீமோத்தேயு 3:1-10, 12, 13.
37 இந்த மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? பல்வேறு நாடுகளை சேர்ந்த அபிஷேகம் பெற்ற மூப்பர்களால் ஆன ஓர் ஆளும் குழுவின் மேற்பார்வையில் இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். எருசலேமில், அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஆன ஒரு குழு எப்படி ஆரம்ப கால கிறிஸ்தவ சபையை முன்நின்று வழிநடத்தியதோ அப்படியே இவர்களும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். அதிகாரம் 11-ல் நாம் பார்த்த விதமாகவே எந்தவொரு அப்போஸ்தலனும் மற்றவர்களுக்கு மேலாக உயர்ந்தவராக இருக்கவில்லை. இவர்கள் ஒரு குழுவாக தீர்மானங்களைச் செய்தார்கள், பண்டைய ரோம உலகம் முழுவதிலும் சிதறியிருந்த சபைகள் இவர்களுடைய தீர்மானங்களை மதித்து நடந்தன.—அப்போஸ்தலர் 15:4-6, 22, 23, 30, 31.
38 இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவிலும் இதே ஏற்பாடுதான் இருக்கிறது. நியூ யார்க், புரூக்ளினிலுள்ள அவர்களுடைய தலைமை அலுவலகத்தில் அவர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விஷயங்கள் பிற்பாடு அங்கிருந்து உலகம் முழுவதுமாக, ஒவ்வொரு நாட்டிலும் ஊழிய நடவடிக்கையை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலக குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதால்தான் யெகோவாவின் சாட்சிகளால் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை பூமியிலுள்ள பெரும்பாலான இடங்களில் பிரசங்கிக்க முடிந்திருக்கிறது. இன்னமும் அந்த வேலை உலகளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.—மத்தேயு 10:23; 1 கொரிந்தியர் 15:58.
மெய்க் கடவுளிடம் திரண்டு வருகின்றனர்
39 யெகோவாவின் சாட்சிகள் இன்று உலகம் முழுவதிலும் அதிக வளர்ச்சியைக் கண்டிருக்கின்றனர். இவர்களுடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளிலும்கூட எண்ணிக்கையில் பெருகியிருக்கின்றனர். அரசியல் மற்றும் தேசப்பற்று சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் வகிக்கும் நடுநிலையை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளாததால்தான் சில நாடுகளில் அவர்கள் மீது தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது. (பக்கம் 347-ல் உள்ள பெட்டியைக் காண்க.) ஆனால் இப்படி தடையுத்தரவு போடப்பட்ட நாடுகளிலுள்ள லட்சக்கணக்கானோர், கடவுளுடைய ராஜ்யமே மனிதகுலத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரே உண்மையான நம்பிக்கை என்பதை மனதார ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் மாபெரும் விதத்தில் சாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது; இப்பொழுது, சுறுசுறுப்புடன் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான சாட்சிகள் உலகின் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்.—பக்கம் 361-ல் உள்ள பெட்டியைக் காண்க.
40 ‘புதிய வானமும் புதிய பூமியும்’ வருமென்ற நம்பிக்கையும் கிறிஸ்தவ அன்பும் உடைய யெகோவாவின் சாட்சிகள், வெகு விரைவில் உலகை உலுக்கும் சம்பவங்கள் நடக்கப் போவதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்; இந்தச் சம்பவங்கள் பூமியிலுள்ள சகல அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் ஊழலுக்கும் முடிவு கட்டும். இதனால்தான் நல்மனமுள்ளவர்களை ஒரே மெய்க் கடவுளான யெகோவாவிடம் வழிநடத்துவதற்காக ஆழ்ந்த அக்கறையுடன் அவர்கள் தொடர்ந்து தங்கள் அயலகத்தாரைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 21:1-4; மாற்கு 13:10; ரோமர் 10:11-15.
41 இதற்கிடையே, பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, மனித குலத்துக்கும் மதத்துக்கும் மாசடைந்துள்ள இந்தப் பூமிக்கும் என்ன எதிர்காலம் இருக்கிறது? எமது கடைசி அதிகாரம் இந்த முக்கியமான கேள்விக்கு விடையளிக்கும்.—ஏசாயா 65:17-25; 2 பேதுரு 3:11-14.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களையும் ஐ.நா. கட்டடங்களின் முகப்பிலுள்ள ‘ஏசாயா சுவரிலும்’ ஐ.நா. பூங்காவிலுள்ள ஒரு சிலையிலும் காணலாம்; சொல்லப்போனால் அந்த வாக்கியங்கள் சொல்லும் நிலைமையை நிஜத்தில் உருவாக்குவதே ஐ.நா.-வின் ஒரு குறிக்கோளாகும்.
b marʹtyr என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கும் “உயிர்த்தியாகி” என்பதற்கான ஆங்கில வார்த்தை (martyr) (“தனது மரணத்தின் மூலம் சாட்சி கொடுக்கும் ஒருவர்,” டபிள்யூ. ஈ. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தைகளுக்கு விளக்க அகராதி) “சாட்சி” என்ற அர்த்தத்தையே தருகிறது (“தான் பார்த்ததை அல்லது கேட்டதை அல்லது வேறு வழிகளில் தான் தெரிந்து கொண்டதைப் பற்றி சாட்சி கொடுப்பவரை அல்லது சாட்சி கொடுக்க முடிந்தவரை குறிக்கிறது,” ஜே. எச். தேயர் என்பவரால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் கிரேக்க-ஆங்கில அகராதி [ஆங்கிலம்]).
c ‘கடைசி நாட்களைப்’ பற்றிய விரிவான கலந்தாலோசிப்புக்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 11-வது அதிகாரத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
d கிலியட் என்பது கலீத் (Gal·‛edhʹ) என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்துள்ளது. “சாட்சி குவியல்” என்பது இதன் அர்த்தம். வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கங்கள் 882, 942-ஐயும் காண்க.—ஆதியாகமம் 31:47-49.
[கேள்விகள்]
1, 2. உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் அன்பு என்ன விளைவுகளை ஏற்படுத்த வேண்டும்?
3, 4. (அ) ‘கடைசி நாட்களைப்’ பற்றி ஏசாயா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? (ஆ) என்ன கேள்விகளுக்கு பதில் தேவை?
5. யெகோவாவின் சாட்சிகள் தனிப்பட்டவர்களாக எவ்வாறு கிறிஸ்தவ நடுநிலையை காத்து வந்திருக்கிறார்கள், ஏன்?
6, 7. கிறிஸ்தவத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன புரிந்துகொண்டிருக்கிறார்கள்?
8, 9. மனிதகுலத்துக்கு கடவுள் என்ன அழைப்பை விடுத்திருக்கிறார்?
10. ஆதாம் ஏவாளிடமிருந்தும் அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும் கடவுள் தூரமானவராக இருக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
11. (அ) “உயிர்த்தியாகி” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) ஆபேல் எவ்வாறு முதல் உயிர்த்தியாகி ஆனார்?
12. யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளாக இன்னும் வேறு யாரெல்லாம் முன்மாதிரிகளாக இருக்கின்றனர்?
13. (அ) இயேசு ஏன் கடவுளுடைய அன்புக்கு மகத்தான அத்தாட்சியாக இருக்கிறார்? (ஆ) என்ன விசேஷமான வழியில் இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்?
14. என்ன கேள்விக்கு இப்போது பதில் தேவை?
15. (அ) சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவர் யார்? (ஆ) மதம் சம்பந்தமாக அவருக்கு என்ன சில சந்தேகங்கள் இருந்தன?
16, 17. (அ) ரஸலின் பைபிள் படிப்பு தொகுதிக்கு என்ன போதனைகள் மிகுந்த ஆர்வத்திற்குரியவையாக இருந்தன? (ஆ) என்ன பெரிய கருத்து வேறுபாடு எழுந்தது, ரஸல் எவ்வாறு பதிலளித்தார்?
18. (அ) மீட்பு பற்றிய விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பின் என்ன நடந்தது? (ஆ) நன்கொடைகள் சம்பந்தமாக பைபிள் மாணாக்கர் என்ன முறையைப் பின்பற்றினர்?
19. கிறிஸ்தவமண்டலத்தின் என்ன போதனைகளை பைபிள் மாணாக்கர் ஒதுக்கித் தள்ளினர்?
20. கிறிஸ்துவின் பரோஸியா குறித்தும், 1914-ம் ஆண்டைக் குறித்தும் பைபிள் மாணாக்கர் எதை கண்டுபிடித்தனர்?
21. ரஸலும் அவருடைய சக விசுவாசிகளும் என்ன பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணர்ந்தனர்?
22-24. (அ) சி. டி. ரஸல் இறந்தபோது பெரும்பாலான பைபிள் மாணாக்கர் எப்படி பிரதிபலித்தனர்? (ஆ) ரஸலுக்குப் பின் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடன்டாக ஆனது யார்?
25. முதல் உலகப் போருக்குப் பின்வந்த ஆண்டுகளில் எழுந்த சவாலுக்கு பைபிள் மாணாக்கர் எவ்வாறு பிரதிபலித்தனர்?
26. (அ) பைபிள் மாணாக்கர் எந்த வேலைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்? (ஆ) பைபிளைப் பற்றி என்ன தெளிவான புரிந்துகொள்ளுதலை பைபிள் மாணாக்கர் பெற்றனர்?
27. (அ) 1931-ல் நடந்த முக்கியமான நிகழ்ச்சி என்ன? (ஆ) சாட்சிகளின் பிரத்தியேக நம்பிக்கைகளில் சில யாவை?
28. ராஜ்ய ஆட்சியைப் பற்றி சாட்சிகள் 1935-ல் எதை தெளிவாக புரிந்துகொண்டனர்?
29. சாட்சிகள் என்ன சவாலை உணர்ந்து, ஏற்றுக்கொண்டனர்?
30. 1930-களிலும் 1940-களிலும் நடந்த எந்தச் சம்பவங்கள் யெகோவாவின் சாட்சிகளை பாதித்தன?
31. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை விரிவாக்குவதற்கு 1943-ல் எது ஆரம்பிக்கப்பட்டது?
32. யெகோவாவின் சாட்சிகள் 1943 முதற்கொண்டு என்ன முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள்?
33. யெகோவாவின் சாட்சிகள் ஏன் ராஜ்ய மன்றங்களில் கூடிவருகிறார்கள்?
34. தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் நோக்கம் என்ன?
35. சாட்சிகள் வேறு என்ன கூட்டங்களை நடத்துகிறார்கள், அவற்றின் நன்மைகள் யாவை?
36. (அ) சம்பளம் பெற்றுக்கொண்டு ஊழியம் செய்கிற குருவர்க்கத்தார் சாட்சிகளுக்கு இருக்கின்றனரா? (ஆ) அப்படியென்றால் சபையை முன்நின்று வழிநடத்துவது யார்?
37. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?
38. ஆளும் குழு எவ்வாறு செயல்படுகிறது?
39. (அ) அரசியல் விவகாரங்களில் சாட்சிகள் நடுநிலை வகிப்பதற்கு காரணம் என்ன? (ஆ) தடையுத்தரவின் கீழுள்ள நாடுகளில் சாட்சிகள் எவ்வாறு வெற்றி கண்டிருக்கின்றனர்?
40, 41. (அ) யெகோவாவின் சாட்சிகள் இப்போது எதற்காக காத்திருக்கின்றனர்? (ஆ) என்ன கேள்வி இன்னும் பதிலளிக்கப்பட வேண்டும்?
[பக்கம் 347-ன் பெட்டி]
புறமத ரோமில் கிறிஸ்தவ நடுநிலைமை
அன்பு, சமாதானம் என்ற இயேசுவின் கொள்கைகளின் அடிப்படையிலும், கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்டவர்களாய் படித்து அறிந்ததன் அடிப்படையிலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் போர்களில் பங்குகொள்ளவோ அதற்கான பயிற்சியை பெறவோ துளியும் சம்மதிக்கவில்லை. இயேசு இவ்வாறு சொல்லியிருந்தார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.”—யோவான் 18:36.
பொ.ச. 295-ல் தெவேஸ்டேயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரோம படை வீரர் ஒருவரின் மகனான மாக்ஸிமில்லியானஸ் என்பவர் இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டார். மாகாண ஆளுநர் இவருடைய பெயரைக் கேட்டபோது, “ஏன் என்னுடைய பெயரை கேட்கிறீர்கள்? இராணுவ சேவைக்கு என் மனசாட்சி இடங்கொடுக்காது; நான் ஒரு கிறிஸ்தவன். . . . என்னால் அங்கே வேலை செய்ய முடியாது; என் மனசாட்சிக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டேன்” என்றார். கீழ்ப்படிய மறுத்தால் உயிரிழக்க நேரிடும் என்று ஆளுநர் எச்சரித்தார். “இராணுவத்தில் நான் சேரவே மாட்டேன். என் தலையை வெட்டிப் போட்டாலும் சேர மாட்டேன், இந்த உலக அரசாங்கங்களுக்கு என்னால் சேவை செய்ய முடியாது; ஆனால் என் கடவுளுக்கு மட்டும்தான் சேவை செய்வேன்.”—ஆர்னால்ட் டாயன்பீ எழுதிய அன் ஹிஸ்டாரியன்ஸ் அப்ரோச் டு ரிலிஜன்.
நவீன காலங்களில், உலகெங்கிலும் வாழும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மனசாட்சிப்படி இதே போன்ற நிலைநிற்கையை எடுப்பதற்கு தனிப்பட்ட பைபிள் படிப்பு அவர்களுக்கு உதவியிருக்கிறது. சில தேசங்களில் அநேகர் நடுநிலை வகித்ததற்காக உயிர் துறந்திருக்கிறார்கள். முக்கியமாய், நாசி ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், தூக்கிலிடப்பட்டார்கள், சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவ அன்பின் அடிப்படையிலான அவர்களுடைய உலகளாவிய ஐக்கியத்தை யாராலும் முறிக்க முடியவில்லை. யெகோவாவின் சாட்சி ஒருவரால் இதுவரை யாருமே போரில் உயிரிழந்தது கிடையாது. கிறிஸ்தவரென்று உரிமைபாராட்டும் ஒவ்வொருவரும் கிறிஸ்து கொடுத்த அன்பின் கட்டளைப்படி வாழ்ந்திருந்தால் உலக சரித்திரமே மாறியிருக்கும்!—ரோமர் 13:8-10; 1 பேதுரு 5:8, 9.
[பக்கம் 356, 357-ன் பெட்டி/படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது
கேள்வி: ஆத்துமா என்பது என்ன?
பதில்: பைபிளில் ஆத்துமா (எபிரெயு, நெபெஷ்; கிரேக்கு, சைக்கீ) என்பது ஒரு நபரை அல்லது ஒரு மிருகத்தை குறிக்கிறது; அல்லது ஒரு நபரின் உயிரை அல்லது ஒரு மிருகத்தின் உயிரைக் குறிக்கிறது.
“பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய [“ஆத்துமாக்களாகிய,” NW] நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.”—ஆதியாகமம் 1:24; 2:7.
மிருகங்களும் மனிதர்களும் உயிருள்ள ஆத்துமாக்களே. ஆத்துமா என்பது தனியே பிரிந்து வாழும் ஒன்றல்ல. அது மரிக்கக் கூடியது, மரிக்கவும் செய்கிறது. “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.”—எசேக்கியேல் 18:4.
கேள்வி: கடவுள் ஒரு திரித்துவமா?
பதில்: யெகோவாவே சர்வலோகத்திலும் ஈடிணையற்ற பேரரசராகிய ஆண்டவர் என யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். “இஸ்ரவேலே, கேள்: நமது கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா.” (உபாகமம் 6:4, NW) கிறிஸ்து இயேசு ஓர் ஆவி சிருஷ்டியாக இருந்தார், தமது தந்தையின் விருப்பத்திற்கு இசைந்து பூமிக்கு வந்தார். அவர் எப்போதும் யெகோவாவுக்கு கீழ்ப்பட்டவராகவே இருக்கிறார். “சகலமும் அவருக்குக் [கிறிஸ்துவுக்கு] கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”—1 கொரிந்தியர் 15:28; இவற்றையும் காண்க: மாற்கு 12:29, 13:32; யோவான் 1:1-3, 14-18; கொலோசெயர் 1:15-20.
பரிசுத்த ஆவி என்பது ஓர் ஆள் அல்ல, அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி.—அப்போஸ்தலர் 2:1-4, 17, 18.
கேள்வி: யெகோவாவின் சாட்சிகள் விக்கிரகங்களை வழிபடுவார்களா, அவற்றை பூஜிப்பார்களா?
பதில்: யெகோவாவின் சாட்சிகள் எவ்வித விக்கிரக ஆராதனையிலும் ஈடுபடுவது கிடையாது, அது சிலைகளாக இருந்தாலும்சரி, ஆட்களோ அமைப்புகளோ வேறு எதுவாக இருந்தாலும்சரி.
“உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.”—1 கொரிந்தியர் 8:4-6; இதையும் காண்க: சங்கீதம் 135:15-18.
கேள்வி: யெகோவாவின் சாட்சிகள் பூசையை (மாஸ்), அதாவது இயேசுவின் இராப்போஜனத்தை ஆசரிக்கிறார்களா?
பதில்: அப்பமும் திராட்சரசமும் அப்படியே இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறதென்ற ரோமன் கத்தோலிக்க போதனையை யெகோவாவின் சாட்சிகள் நம்புவதில்லை. யூத நாட்காட்டியில் நிசான் 14-க்கு இணையான தேதியில் (பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்) வருடந்தோறும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருகின்றனர். அப்போது, கிறிஸ்துவின் பாவமில்லாத சரீரத்திற்கும் பலியாக சிந்திய இரத்தத்திற்கும் அடையாளமாக உள்ள புளிப்பில்லாத அப்பமும் சிவப்பு திராட்சரசமும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கையுடையவர்கள் மாத்திரமே இவற்றை புசிக்கின்றனர்.—மாற்கு 14:22-26; லூக்கா 22:29; 1 கொரிந்தியர் 11:23-26; வெளிப்படுத்துதல் 14:1-5.e
[படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பிற்காக தவறாமல் ராஜ்ய மன்றங்களில் கூடிவருகிறார்கள்
ராஜ்ய மன்றங்கள்: இச்சிஹாரா நகரம், ஜப்பான் (முந்தைய பக்கம்), பாய்டுவா, பிரேசில்
[அடிக்குறிப்பு]
e இந்த விஷயத்தின் பேரில் கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 261-9 பக்கங்களைக் காண்க.
[பக்கம் 361-ன் அட்டவணை]
யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கும் நாடுகளில் சில
நாடு யெகோவாவின் சாட்சிகள்
அர்ஜென்டினா 1,27,000
ஆஸ்திரேலியா 61,000
பிரேசில் 6,07,000
பிரிட்டன் 1,25,000
கனடா 1,11,000
கொலம்பியா 1,22,000
எல் சால்வடார் 30,000
பின்லாந்து 19,000
பிரான்சு 1,18,000
ஜெர்மனி 1,65,000
கிரீஸ் 28,000
ஹங்கேரி 22,000
இந்தியா 24,000
இத்தாலி 2,32,000
ஜப்பான் 2,17,000
கொரியா 89,000
லெபனான் 3,500
மெக்சிகோ 5,72,000
நைஜீரியா 2,60,000
பிலிப்பைன்ஸ் 1,44,000
போலந்து 1,27,000
போர்ச்சுகல் 48,000
பியூர்டோ ரிகோ 25,000
தென் ஆப்பிரிக்கா 75,000
ஸ்பெயின் 1,07,000
அ.ஐ.மா. 10,29,000
வெனிசுவேலா 95,000
ஜாம்பியா 1,20,000
தடையுத்தரவின்கீழ் 28 நாடுகள் 11,000
2003 உலக எண்ணிக்கை 95,919 சபைகள் 64,29,000 யெகோவாவின் சாட்சிகள்
[பக்கம் 346-ன் படங்கள்]
“எங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்” என்ற வாசகம் ஐ.நா. சமாதான சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது; ‘ஏசாயா சுவரில்’ இதற்குரிய பைபிள் வசனம் காணப்படுகிறது
[பக்கம் 351-ன் படம்]
கிறிஸ்துவின் மீட்கும் பலி மனிதவர்க்கத்தை பாவங்களிலிருந்து விடுவிக்கும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள்
[பக்கம் 363-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றங்கள்: இங்கிலாந்து, ஈஸ்ட் பென்னினெஸிலுள்ள மன்றத்தின் மேற்புற தோற்றம்
அ.ஐ.மா., ஃப்ளாரிடா, ஃபோர்ட் லௌடர்டேல்-லில் உள்ள அசெம்பிளி மன்றம்; ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு மொழிகளில் அசெம்பிளிகள் நடத்த பயன்படுத்தப்படுகிறது
[பக்கம் 364-ன் படங்கள்]
நியூ யார்க், புரூக்ளினிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் உலக தலைமை அலுவலகம்; (மேலே இடமிருந்து) அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் (கலரில் இருப்பவை)
[பக்கம் 365-ன் படங்கள்]
உவாட்ச் டவர் கிளை அலுவலகங்கள்: (மேலே இடமிருந்து) தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், நியூஜீலாந்து