பாவத்தின் கடினப்படுத்தும் விளைவுகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
அவளுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எல்லோருக்கும் பிரியமானவளாக இருந்தாள். சிநேகபான்மையாகவும் மற்றவர்களுக்கு உதவும் தன்மைபடைத்தவளாகவும் இருந்தாள். அவளும் அவளுடைய புத்திசாலியான மகளும் வெளி ஊழியத்திலும் கூட்டங்களிலும் எப்போதுமே துணைவர்களாக இருந்தனர். ஆனால் தான் வேலை செய்யும் இடத்தில்—தன்னுடைய உடன் சாட்சிகளுக்கு முன்பாகவே ஆணவத்துடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்ததாக சபை மூப்பர்கள் அறிக்கையைப் பெற்றனர்! இந்தக் குற்றச்சாட்டை எதிர்ப்பட்டவளாக, அவள் புகைப்பிடித்தல் மற்றும் வேசித்தனத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டு, “நான் இப்பொழுது சத்தியத்தில் இருக்க விரும்பவில்லை” என்று நிதானமாகக் கூறினாள். பாவம் அவளைக் கடினப்படுத்தியது.
எபிரெயர் 2:13-ல் அப்போஸ்தலனாகிய பவுல் “உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப்” போகாமல் இருக்கும்படி எச்சரித்தான். இது நம்முடைய முதல் பெற்றோர்களாகிய ஆதாம் ஏவாளைக் குறித்து உண்மையாயிருந்தது. தன்னுடைய கீழ்ப்படியாமையைக் குறித்து கேட்கப்பட்டபோது ஆதாம், இந்த உணர்ச்சியற்ற சாக்குப் போக்கைச் சொன்னான்: “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.” அழகிய மணமகளைப் பார்த்து: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள் என்று முதன் முதலில் சொன்னதற்கு ஆதாம் எவ்வளவு வித்தியாசமாகிவிட்டான். இப்பொழுதோ ஏவாள் “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரி”யாக இருந்தாள். ஏவாளோ சர்ப்பத்தின் மீது பழியைப் போட்டாள்.—ஆதியாகமம் 2:23; 3:1-13.
சரிசெய்ய முடியாதளவுக்குப் பாவத்தினால் இருதயம் கடினமடைந்த மற்றொரு மனிதன் யூதாஸ் காரியோத் ஆகும். அவன் தொடக்கத்தில் நல்ல இருதயத்தையுடையவனாக இருந்திருக்க வேண்டும், இல்லாவிடில் இயேசு அவனை அப்போஸ்தலரில் ஒருவனாக இருக்க தேர்ந்தெடுத்திருக்கமாட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவினால் கண்டிக்கப்பட்ட பிறகு, யூதாஸ் சீற்றங்கொண்டு தன்னுடைய எஜமானரைக் காட்டிக்கொடுக்க சதி செய்தான். (மத்தேயு 26:6-16) 12 பேரில் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு வெளிப்படுத்திய போது, யூதாஸ் ஒன்றும் அறியாதவனைப் போன்று: “ரபீ நானோ?” என்று கேட்டான். (மத்தேயு 26:25) வேண்டுமென்றே பாவம் செய்யும் ஒருவன் மட்டுமே அவ்விதமாக தைரியமாகப் பாசாங்கு செய்து நடிக்க முடியும். இயேசுவைக் கைது செய்ய காவலர்கள் வந்தபோது, அவரைக் காட்டிக்கொடுக்க, இருந்ததிலேயே அதிக அனலும் சிநேகத்தையும் காட்டும் ஒரு அறிகுறியை—முத்தம் கொடுத்தலை—அவன் தேர்ந்தெடுத்தான். இயேசு, “யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷ குமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?” என்று கேட்டார்.—லூக்கா 22:48.
பாவம் எவ்வாறு கடினப்படுத்துகிறது
பாவம் ஒரு ஆளின் மீது எவ்வாறு அதிகாரம் செலுத்துகிறது? எபிரெயர் 3:7-11-ல் விசுவாச குறைவினால் பாவம் எவ்வாறு இஸ்ரவேல் தேசத்தைப் பாதித்தது என்று பவுல் எடுத்துக் காட்டுகிறான். சங்கீதம் 95:7-11-ஐ மேற்கோள் காட்டி பவுல் பின்வருமாறு கூறுகிறான்: “ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே, இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைகளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைப்பார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, ‘என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்றும்’ என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.”
“கோபம் மூட்டின” அந்தச் சந்தர்ப்பம் மெரிபா என்றும் மாசாவென்றும் அழைக்கப்பட்ட ஒரு இடத்தில் நடந்தேறியது. (சங்கீதம் 95:8) அங்கே அவர்கள் சீக்கிரத்தில் அற்புத விதமாக எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தர வேண்டும் என்றார்கள்.” (யாத்திராகமம் 17:2) எகிப்தின் மீது பாழாக்கும் பத்து வாதைகள், கொந்தளிக்கும் அலைகளைக் கொண்ட சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை இரண்டாக பிரித்தல், வானத்திலிருந்து மன்னா அளித்தல் போன்றவற்றை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஆகிலும் அவர்கள் “தங்களுடைய இருதயத்தில் விலகிச் சென்றார்கள்.” யெகோவாவின் வேலைகளின் மீது பிரதிபலிப்பதற்கு, அவர்கள் தங்களுடைய சொந்த தன்னலமான ஆசைகளின் மீது வேறூன்றினவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் ‘கடவுளுடைய வழிகளை அறியவில்லை.’ மேலும் யெகோவா எவ்விதமான சந்தர்ப்பங்களின் கீழும் அவர்களுக்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை வளர்க்க தவறினர். சமுத்திரத்தையே பிளந்த கடவுள் வல்லமையற்றவர் போல, “எங்களுக்குத் தண்ணீர் தர வேண்டும்!” என்று கோஷம் எழுப்பினர். எனவே பின்னால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்த்துத் திரும்பிய பத்து பயந்த வேவுகாரர்களின் கெட்ட அறிக்கையை அவர்கள் நம்பினதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. (எண்ணாகமம் 13:32 -14:4) இவ்விதமான விசுவாசமின்மையின் காரணமாக யெகோவா பின்வருமாறு தெரிவித்தார்: “என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லை.”—சங்கீதம் 95:11.
இதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும் விதமாக, பவுல் எச்சரித்தான்: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.” (எபிரெயர் 3:12, 13) இஸ்ரவேலரின் “பாவம்” விசுவாசக்குறைவு. (எபிரெயர் 3:19-ஐ பாருங்கள்; 12:1-னுடன் ஒத்துப்பாருங்கள்.) ‘ஜீவனுள்ள கடவுளிடமிருந்து விலகிச் செல்லவும்,’ அவர் பல அற்புதங்களை நடப்பித்த போதிலும் யெகோவாவின் பேரில் இருக்கும் நம்பிக்கையை இழக்கும்படி செய்தது. ஒழுக்கக்கேடான தவற்றில் ஈடுபடுவதை அவர்கள் தவிர்க்க முடியவில்லை.
அதேவிதமாகவே இன்றைக்கு ஒரு கிறிஸ்தவனின் விசுவாச குறைவு அவன் ‘இருதயத்தில் விலகிச் செல்லவும்,’ இருதயத்தின் இயற்கையான ஏவுதல்களுக்கு இணங்கும்படியும் செய்யும். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9, 10) தவறான எண்ணங்களும் ஆசைகளும் இருதயத்தை நிரப்பி, சங்கிலி போன்ற ஒரு ஆபத்தான பிரதிபலிப்பை தூண்டிவிடும். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15.
பாவம் ஒருவரைக் கடினமாக்கும்போது
ஒருவன் தான் செய்த வேசித்தன குற்றத்தைத் தந்திரமாக மறைத்து வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் மூப்பனாக சபையில் எல்லா சிலாக்கியங்களையும் அனுபவித்து வந்தான். விவாகம் செய்த பிறகுங்கூட, அவன் ஒழுக்கங்கெட்ட காரியங்களில் தொடர்ந்தான். என்றாலும் மனச்சாட்சி உறுத்தல் காணப்படாத வகையில், மற்றவர்களை நியாயந்தீர்க்கும் அளவிற்கு நியாய விசாரணைக் குழுக்களிலும் இருந்தான். பாவம் செய்வதானது அவனைக் கடினப்படுத்தியது. வெகு சீக்கிரமே அவன் பைபிளின் அடிப்படைப் போதனைகளைச் சந்தேகிக்க ஆரம்பித்தான். முடிவில், அவன் தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளும்படி செய்யப்பட்டபோது, தோள்களைக் குலுக்கியவாறு, “இதில் இப்பொழுது என்ன வித்தியாசம்?” என்று மட்டுமே சொல்லக்கூடியவனாய் இருந்தான்.
ஒரு மாய்மாலமான போக்கு, சூடான இரும்பால் சூடு போடப்பட்டது போல், ஒருவனை மனச்சாட்சியில் “சூடுண்ட”வனாக்குகிறது. (1 தீமோத்தேயு 4:1) நீதிமொழிகள் இவ்வாறு சொல்வதன் மூலம் விவரிக்கிறது: “அப்படியே விபசார ஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்னு, தன் வாயைத் துடைத்து: ‘நான் ஒரு பாவமும் செய்யவில்லை’ என்பாள்.” (நீதிமொழிகள் 30:20) மனசாட்சியின் உறுத்தலை உணராத கடின இருதயமுள்ள ஒரு பாவி, “தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்தார்,” என்றுங்கூட கற்பனை செய்து கொள்கிறான். (சங்கீதம் 10:11) ஒருவன் பாவத்தைத் தொடர்ந்து செய்யும்போது, அவனுடைய இருதயம் அதிகமாக “நிணந்துன்னிக் கொழுத்திருக்கும்.” அபாயம் ஏற்படுகிறது. (சங்கீதம் 119:70) இளைஞன் ஒருவன் இப்படியாக ஒப்புக்கொண்டான்: “முதல் முறையாக நான் வேசித்தனம் செய்தபோது, எனக்குள்ளே ஏதோவொன்று என்னை உறுத்தியது. ஆனால் அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும், அது சுலபமாக இருந்தது, அது என்னை அதிகமாக உறுத்தாமல் இருக்கும் நிலைக்கு என்னைக் கொண்டு வந்தது.”
ஆம், தான் செய்யும் தவற்றை இருதயம் நியாநிரூபணம் செய்வதற்கு வழிதேடுகிறது. தனது காதலியுடன் வேசித்தனம் செய்த ஒரு இளம் மனிதன், உதவிக்காக மூப்பர்களிடம் செல்வதைத் தடுத்தான். அவன் சொன்னதாவது: “நாம்தான் விவாகம் செய்யப்போகிறோமே! உனக்கு நான், எனக்கு நீ என்று இருவர் தீர்மானித்துவிட்டால், யெகோவாவின் பார்வையில் அவர்கள் அநேகமாய் விவாகமானது போலிருக்கிறது என்று பைபிள் சொல்வதை நீ அறிவாய்.” தன்னலமான, வஞ்சனையான விவாதம்! வருத்தத்திற்குரிய காரியம், பாவச் செயல்கள் தொடர்ந்தன, அது கொலைக் குற்றத்திற்கு—கருச்சிதைவுக்கு—வழிநடத்தியது! அந்த இளம் பெண் பின்னால் ஒப்புக்கொண்டதாவது: “உங்கள் குற்ற உணர்வை இழக்க ஆரம்பிக்கிறீர்கள், உங்களை நீங்களே கடிந்துகொள்ள முடியும் என்று நினைக்க ஆரம்பிக்கிறீர்கள்.” வேசித்தன பழக்கத்தில் விழுந்த ஓர் இளம் மனிதன் அறிக்கைச் செய்ததாவது: “குடிகாரன் ஒருவன், ‘நான் எப்பொழுது நிறுத்த விரும்பினாலும் என்னால் நிறுத்த முடியும். கூடுதலாக ஒரு கோப்பை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்,’ என்று சொல்வது போலிருக்கிறது. எனவே மூப்பர்களிடம் செல்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.” மற்றவர்களை ஏமாற்றும் பழக்கத்திற்குள்ளாக்கிவிடும் அந்தப் பாவி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறான். “அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.”—சங்கீதம் 36:2.
பாவ கண்ணியைத் தவிர்த்தல்
“இருதயத்திலே விசுவாசிக்கப்படுவதால்” ஒரு கிறிஸ்தவன் அதைப் பாதுகாக்க தன்னாலானவற்றையெல்லாம் செய்ய வேண்டும். (ரோமர் 10:10; நீதிமொழிகள் 4:23) நம்முடைய இருதயங்கள் பக்திவிருத்திக்கேதுவான சிந்தனைகளால் நிறைந்திருக்க ஜெபமும், கூட்டங்களும், தனிப்பட்ட படிப்பும் நமக்கு உதவுகின்றன. அவ்வப்போது நம்முடைய மனதில் கெட்ட சிந்தனைகள் நுழைந்திடும் என்பது உண்மைதான். ஆனால் அப்படி அவை நுழையும்போது அவற்றின்பேரிலே சிந்தனையை ஆழ்த்திவிட நாம் மறுத்துவிடலாம். கெட்டதைச் செய்ய நாம் தூண்டப்படுவோமானால், நாம் உடனடியாக யெகோவாவிடம் ஜெபத்தில் அணுகவேண்டும். (சங்கீதம் 55:22) ‘பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும் பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் நமக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.’ (எபேசியர் 5:3) இப்படியாக பாவத்தையும் மரணத்தையும் பிறப்பிக்கும் சங்கிலித்தொடர் பிரதிபலிப்புகள் ஏற்படும் முன்பே அவற்றிற்குப் புள்ளி வைக்கப்படுகின்றன.
பாவச் செயலின் மகிழ்ச்சி “தற்காலிகமானது” என்பதை மறக்க வேண்டாம். (எபிரெயர் 11:25) உடனடியாகவோ அல்லது பின்பாகவோ, “உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும்,” மோசமான பலன்களை எதிர்ப்பட வேண்டியிருக்கும். (எண்ணாகமம் 32:23) உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் பாவத்தால் கடினமாகுதலை, உண்மையிலேயே விரும்புகிறேனா? அது இப்பொழுது எனக்கு இன்பமாயிருந்தாலும் காலப்போக்கில் அது எந்த விதத்தில் என்னைப் பாதிக்கும்?
தவறான காரியத்தைச் செய்யும் கண்ணியில் தான் சிக்கிவிட்டிருப்பதை ஒருவர் காண்பாராகில், அப்போது என்ன? கிறிஸ்தவ ஊழியத்தை அதிகரிப்பதுதானே செய்த பாவத்திற்குப் பரிகாரம் அல்லது “நிவாரணம்” என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்,” என்றான் மனந்திரும்பிய தாவீது அரசன். (சங்கீதம் 51:17) ஆவிக்குரிய விதத்தில் நோய்ப்பட்டிருப்பவர்களுக்கு பைபிள் ஆலோசனை: மூப்பர்களிடம் போங்கள்! (யாக்கோபு 5:14, 15) இந்த முதிர்ச்சியுள்ள மனிதர்கள் நோய்ப்பட்டிருப்பவர் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைப் பெற்றிடுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்வார்கள். பைபிள் சொல்வதற்கு இசைவாக இது இருக்கிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள் 28:13) ஒருவர் தனது பாவத்தை மூப்பர்களிடம் அறிக்கை செய்துவிட்டு சொன்னதாவது: “ஒரு பெரிய பாரம் என்னை விட்டு இறங்கியதுபோன்று இருக்கிறது.”—சங்கீதம் 32:1-5-ஐ ஒப்பிடவும்.
இந்த உலகம் எவ்வளவுக்கெவ்வளவு மோசமாகிக்கொண்டு போகிறதோ அவ்வளவுக்கவ்வளவு தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதும் ஒரு பெரும் சவாலாக இருக்கும். ஒரு காரியம் ஞாபகம் இருக்கட்டும்: “பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் . . . தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள். (பிரசங்கி 8:12) எனவே யெகோவாவுக்குப் பயந்திருங்கள்! பாவத்தின் கடினப்படுத்தும் விளைவுகளிலிருந்து அவர் உங்களைத் தப்புவிப்பார். (w86 4/1)
[பக்கம் 24-ன் படம்]
மோசேயிடம் தண்ணீர் கோரிய இஸ்ரவேலர் கடினப்பட்ட ஒரு மனநிலையைக் காண்பித்தனர்