மூப்பர்களே, நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்
“உங்கள் சகோதரருக்கிடையே விசாரணை செய்யும்போது, நீங்கள் நீதியின்படி தீர்ப்புச்செய்ய வேண்டும்.”—உபாகமம் 1:16, NW.
1. நியாயம் விசாரிக்கும் விஷயத்தில், என்ன அதிகார ஒப்படைப்பு நிகழ்ந்திருக்கிறது, மனித நியாயாதிபதிகளுக்கு இது எதை குறிக்கிறது?
உன்னத நியாயாதிபதியாக, யெகோவா நீதிவிசாரணைக்குரிய அதிகாரத்தைத் தம்முடைய குமாரனிடம் ஒப்படைத்திருக்கிறார். (யோவான் 5:27) முறையாக, கிறிஸ்தவ சபையின் தலைவராக, கிறிஸ்து நியாயாதிபதிகளாக சில சமயங்களில் செயல்பட வேண்டியவர்களாயிருக்கும் மூப்பர்களை நியமனம் செய்வதற்கு உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பையும் அதனுடைய ஆளும் குழுவையும் பயன்படுத்துகிறார். (மத்தேயு 24:45-47; 1 கொரிந்தியர் 5:12, 13; தீத்து 1:5, 9) துணை நியாயாதிபதிகளாக, இவர்கள் பரலோக நியாயாதிபதிகளாகிய யெகோவா மற்றும் கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரியை கவனமாக பின்பற்ற வேண்டிய கடமையின் கீழ் இருக்கிறார்கள்.
கிறிஸ்து—முன்மாதிரியான நியாயாதிபதி
2, 3. (எ) என்ன மேசியானிய தீர்க்கதரிசனம் நியாயாதிபதியாக கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்துகிறது? (பி) என்ன குறிப்புகள் தனிப்பட கவனிக்கப்படத் தகுதியுள்ளவை?
2 நியாயாதிபதியாக கிறிஸ்துவைக் குறித்து, தீர்க்கதரிசனமாக இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும் நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்வார்.”—ஏசாயா 11:2-4.
3 அந்தத் தீர்க்கதரிசனத்தில் கிறிஸ்துவை “பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்க்க,” உதவும் பண்புகளை கவனியுங்கள். (அப்போஸ்தலர் 17:31) அவர் யெகோவாவின் ஆவி, தெய்வீக ஞானம், புரிந்துகொள்ளுதல், ஆலோசனை, அறிவு ஆகியவற்றுக்கு பொருந்துமாறு தீர்ப்பு செய்கிறார். யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் அவர் தீர்ப்புசெய்கிறார் என்பதையும்கூட கவனியுங்கள். இதன் காரணமாக, “கிறிஸ்துவின் நியாயாசனம்” என்பது “தேவனுடைய நியாயாசன”த்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. (2 கொரிந்தியர் 5:10; ரோமர் 14:10) அவர் காரியங்களை கடவுள் தீர்ப்பு செய்கிறவிதமாக தீர்ப்பு செய்ய கவனமுள்ளவராக இருக்கிறார். (யோவான் 8:16) அவர் வெறுமென கண் கண்டதையோ அல்லது காது கேட்டதையோ வைத்து தீர்ப்புசெய்வதில்லை. அவர் ஏழைகளையும் சிறுமையானவர்களையும் நீதியாய் நியாயம் விசாரிக்கிறார். என்னே ஓர் அதிசயமான நியாயாதிபதி! இன்று நீதிவிசாரணைக்குரிய தகுதியில் செயல்பட அழைக்கப்படும் அபூரண மனிதர்களுக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
பூமிக்குரிய நியாயாதிபதிகள்
4. (எ) கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருட ஆட்சியின்போது 1,44,000 பேரின் கடமைகளில் ஒன்று என்னவாக இருக்கும்? (பி) பூமியின்மீது இன்னும் இருக்கும்போதே அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் நியாயாதிபதிகளாக நியமிக்கப்படுவர் என்பதை எந்தத் தீர்க்கதரிசனம் காண்பிக்கிறது?
4 பன்னிரண்டு அப்போஸ்தலர்களோடு ஆரம்பித்து, ஒப்பிடுகையில் சிறிய எண்ணிக்கையான அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களே ஆயிர வருட ஆட்சியின்போது கிறிஸ்து இயேசுவுடன்கூட இணை நியாயாதிபதிகளாக இருப்பர் என்று வேதவசனங்கள் சுட்டிக்காண்பிக்கின்றன. (லூக்கா 22:28-30; 1 கொரிந்தியர் 6:2; வெளிப்படுத்துதல் 20:4) பூமியிலுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலின் அபிஷேகம்பண்ணப்பட்ட உறுப்பினர்களில் ஒரு மீதியானோர்தாமே 1918-19-ல் நியாயந்தீர்க்கப்பட்டு திரும்ப நிலைநாட்டப்பட்டனர். (மல்கியா 3:2-4) ஆவிக்குரிய இஸ்ரவேலின் இந்தத் திரும்ப நிலைநாட்டப்படுதலைக் குறித்து, இவ்விதமாக முன்னுரைக்கப்பட்டது: “உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்.” (ஏசாயா 1:26) இவ்விதமாக, மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலில் “ஆதியில்” செய்திருந்தது போல, யெகோவா திரும்ப நிலைநாட்டப்பட்ட மீதியானோருக்கு நீதியுள்ள நியாயாதிபதிகளையும் ஆலோசனைக்காரரையும் கொடுத்திருக்கிறார்.
5 ஆரம்பத்தில், “தீர்ப்புச்செய்கிறதற்கு” நியமிக்கப்பட்ட ‘ஞானிகள்’ அனைவரும் அபிஷேகம்பண்ணப்பட்ட மூப்பர்களாக இருந்தனர். (1 கொரிந்தியர் 6:4, 5) உண்மையுள்ள, மதிப்புக்குரிய அபிஷேகம்பண்ணப்பட்ட கண்காணிகள், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் வலதுகரத்தில் இருப்பவர்களாக, அதாவது அவருடைய கட்டுப்பாட்டின் கீழும் வழிநடத்துதலின் கீழும் இருப்பவர்களாக வருணிக்கப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 1:16, 20; 2:1) 1935 முதற்கொண்டு அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள், அதிகரித்துக்கொண்டேயிருக்கும் “திரள் கூட்டத்தாரின்” உண்மையுள்ள ஆதரவைப் பெற்று வந்திருக்கிறார்கள். “மிகுந்த உபத்திரவ”த்தைத் தப்பிப்பிழைத்து ஒரு பரதீஸிய பூமியில் என்றுமாக வாழ்வதே இவர்களுடைய நம்பிக்கையாகும். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14-17) “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம்,” நெருங்கி வருகையில், பூமி முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 66,000-க்கும் மேற்பட்ட சபைகளில் மூப்பர்களாகவும் நியாயாதிபதிகளாகவும் சேவிக்க இவர்களில் அநேகர் அபிஷேகம்பண்ணப்பட்ட ஆளும் குழுவினரால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.a (வெளிப்படுத்துதல் 19:7-9) விசேஷித்த பள்ளிகளின் மூலமாக, அவர்கள் “புதிய பூமி” சமுதாயத்தில் பொறுப்புகளைக் கையாள பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். (2 பேதுரு 3:13) 1991-ன் முடிவில் அநேக தேசங்களில் நடத்தப்பட்ட இராஜ்ய ஊழியப் பள்ளி, நீதிவிசாரணைக்குரிய வழக்குகளைச் சரியாக கையாளுவதற்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நியாயாதிபதிகளாக சேவிக்கும் மூப்பர்கள், உண்மையாயும் நீதியாயும் தீர்ப்புச்செய்யும் யெகோவாவையும் கிறிஸ்து இயேசுவையும் பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறார்கள்.—யோவான் 5:30; 8:16; வெளிப்படுத்துதல் 19:1, 2.
‘பயத்துடனே தங்களை நடத்திக்கொள்ளும்’ நியாயாதிபதிகள்
6. நீதிவிசாரணைக் குழுக்களில் சேவிக்கும் மூப்பர்கள் ஏன் ‘தங்களைப் பயத்துடனே நடத்திக்கொள்ள’ வேண்டும்?
6 கிறிஸ்துதாமே யெகோவாவுக்குப் பயப்படும் பயத்திலும் அவருடைய ஆவியின் உதவியோடும் நியாயந்தீர்ப்பாரேயானால், அபூரணமான மூப்பர்கள் எவ்வளவு அதிகமாக அப்படிச் செய்ய வேண்டும்! நீதிவிசாரணைக் குழுவில் சேவிக்க நியமிக்கப்படுகையில், அவர்கள் ‘பயத்துடனே தங்களை நடத்திக்கொண்டு,’ நீதியாய் தீர்ப்புச் செய்ய அவர்களுக்கு உதவுவதற்கு “பட்சபாதமில்லாமல் நியாயந்தீர்க்கிற பிதாவை” நோக்கிக் கூப்பிடுவது அவசியமாகும். (1 பேதுரு 1:17) “கணக்கு ஒப்புவிக்கிறவர்களாக,” அவர்கள் மனிதர்களுடைய வாழ்க்கையோடு, அவர்களுடைய “ஆத்துமாக்க”ளோடு செயல்தொடர்பு கொள்வதை நினைவில் வைக்க வேண்டும். (எபிரெயர் 13:17) இதன் காரணமாக, நீதிவிசாரணை சம்பந்தமாக தவிர்க்கப்படக்கூடிய எந்தத் தவறுகளுக்காகவும் அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டியவர்களாக இருப்பார்கள். எபிரெயர் 13:17-ன் பேரில் தன்னுடைய விளக்குவுரையில் J. H. A. ஈப்ரார்டு எழுதினார்: “தன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஆத்துமாக்களைக் குறித்து விழிப்புடன் இருப்பது மேய்ப்பனின் கடமையாகும், மேலும் . . . அவை அனைத்தையும் குறித்து, அவனுடைய தவறின் காரணமாக இழக்கப்பட்டுபோனவைகளைக் குறித்தும்கூட அவன் கணக்குகொடுக்க வேண்டும். இது பயபக்தியான ஒரு வார்த்தை. வசனத்தின் ஒவ்வொரு ஊழியக்காரனும், இந்த மிகவும் [பயத்தைத் தோற்றுவிக்கும்] பொறுப்புள்ள பதவியை தான் மனமுவந்து எடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்.”—யோவான் 17:12; யாக்கோபு 3:1 ஒப்பிடவும்.
7. (எ) நவீன நாளைய நியாயாதிபதிகள் எதை மனதில் வைக்க வேண்டும், அவர்களுடைய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்? (பி) மத்தேயு 18:18-20-லிருந்து மூப்பர்கள் என்ன பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்?
7 நீதிவிசாரணைக்குரிய தகுதியில் செயல்படும் மூப்பர்கள், ஒவ்வொரு வழக்கிலும் மெய்யான நியாயாதிபதிகளாக இருப்பது யெகோவாவும் கிறிஸ்து இயேசுவுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் என்ன சொல்லப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்: “நீங்கள் மனுஷனுக்காக அல்ல, யெகோவாவுக்காகவே நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார். ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது. . . . நீங்கள் பழியை வருவித்துக்கொள்ளாதபடிக்கு இப்படியேச் செய்யக்கடவீர்கள்.” (2 நாளாகமம் 19:6-10, NW) பயபக்தியோடு, ஒரு வழக்கை நியாயம் விசாரிக்கும் மூப்பர்கள், ‘தீர்ப்புச்செய்யும் விஷயத்தில் தங்களோடு’ யெகோவா உண்மையில் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள தங்களால் ஆனதை எல்லாம் செய்ய வேண்டும். அவர்களுடைய தீர்மானம் யெகோவாவும் இயேசுவும் காரியத்தை கருதும் விதத்தை திருத்தமாக பிரதிபலிக்க வேண்டும். அடையாள அர்த்தத்தில் அவர்கள் பூமியின்மீது ‘கட்டுவது’ (குற்றமுள்ளவர்களாக காண்பது) அல்லது ‘கட்டவிழ்ப்பது’ (குற்றமற்றவர்களாக காண்பது) பரலோகத்தில் ஏற்கெனவே—கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி—கட்டப்பட்டதாக அல்லது கட்டவிழ்க்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அவர்கள் யெகோவாவிடம் இயேசுவின் நாமத்தில் ஜெபித்தால், இயேசு அவர்களுக்கு உதவிசெய்ய “அவர்கள் நடுவிலே” இருப்பார். (மத்தேயு 18:18-20, அடிக்குறிப்பு; ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1988, பக்கம் 9) நீதிவிசாரணையின் சமயத்திலிருக்கும் சூழ்நிலைமை கிறிஸ்து உண்மையில் அவர்கள் நடுவில் இருப்பதைக் காண்பிக்க வேண்டும்.
முழு-நேர மேய்ப்பர்கள்
8. யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியால் காண்பிக்கப்பட்டபடி மந்தையினிடமாக மூப்பர்களின் முக்கிய உத்தரவாதம் என்ன? (ஏசாயா 40:10, 11; யோவான் 10:11, 27-29)
8 மூப்பர்கள் முழு-நேரமாக நியாயம் விசாரிப்பதில்லை. அவர்கள் முழு-நேர மேய்ப்பர்கள். அவர்கள் தண்டிப்பவர்கள் அல்ல, ஆனால் குணப்படுத்துகிறவர்கள். (யாக்கோபு 5:13-16) கண்காணி என்பதற்குரிய கிரேக்க வார்த்தைக்குப் பின்னாலிருக்கும் அடிப்படை கருத்து (எபிஸ்கோப்பாஸ்) பாதுகாப்பான அக்கறையாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி குறிப்பிடுவதாவது: “[1 பேதுரு 2:25-ல்] மேய்ப்பனோடு இணைந்து நிறைவுசெய்வதாய் [எபிஸ்கோப்பாஸ்] என்ற பதம் காவல் காக்கும் அல்லது காப்பாற்றும் மேய்க்கும் வேலையை உணர்த்துகிறது.” ஆம், அவர்களுடைய முக்கிய வேலை ஆடுகளை மந்தைக்கு உள்ளே வைத்து அவற்றைக் காவல் காப்பது மற்றும் காப்பாற்றுவது ஆகும்.
9, 10. (எ) மூப்பர்களின் முதல் கடமையை பவுல் எவ்விதமாக அழுத்திக் காண்பித்தார், ஆகவே என்ன கேள்வி சரியாகவே கேட்கப்படலாம்? (பி) அப்போஸ்தலர் 20:29-லுள்ள பவுலின் வார்த்தைகள் தெரிவிப்பது என்ன, ஆகவே மூப்பர்கள் எவ்விதமாக நீதிவிசாரணை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்யக்கூடும்?
9 எபேசு சபையிலுள்ள மூப்பர்களிடம் பேசுகிறவராய், அப்போஸ்தலனாகிய பவுல் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்கிறார்: “உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சொந்த குமாரனுடைய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) பவுல் தண்டிப்பதை அல்ல மேய்ப்பதை உயர்த்திக் காண்பிக்கிறார். சில மூப்பர்களுக்கு பின்வரும் கேள்விகளைச் சிந்திப்பது நல்லதாக இருக்கும்: ‘மேய்க்கும் வேலைக்கு நாம் அதிகமான நேரத்தையும் முயற்சியையும் ஒதுக்கி வைப்போமேயானால் நீதிவிசாரணைக்குரிய வழக்குகளை விசாரிப்பதற்கும் கையாளுவதற்கும் தேவைப்படும் கணிசமான நேரத்தை நாம் மிச்சப்படுத்த முடியுமா?’
10 உண்மைதான், பவுல் “கொடிதான ஓநாய்”களுக்கு எதிராக எச்சரித்தார். ஆனால் ‘மந்தையை கனிவோடு நடத்தாமலிருந்ததற்காக’ இவர்களை அவர் கண்டிக்கவில்லையா? (அப்போஸ்தலர் 20:29) உண்மையுள்ள கண்காணிகள் இந்த ‘ஓநாய்களை’ வெளியேற்றிவிட வேண்டும் என்றபோது, மூப்பர்கள் மந்தையின் மற்ற அங்கத்தினர்களை “கனிவோடு” நடத்தவேண்டும் என்பதை அவருடைய வார்த்தைகள் காண்பிக்கவில்லையா? ஓர் ஆடு ஆவிக்குரிய விதமாக பலவீனமடைந்து கடவுளை சேவிப்பதை நிறுத்திவிடும்போது, அவனுக்கு அல்லது அவளுக்குத் தேவைப்படுவது என்ன—அடியா அல்லது குணப்படுத்தலா, தண்டனையா அல்லது மேய்த்தலா? (யாக்கோபு 5:14, 15) ஆகவே, மூப்பர்கள் மேய்க்கும் வேலைக்காக ஒழுங்காக நேரத்தை திட்டமிட வேண்டும். இது பாவத்தால் மேற்கொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களை உட்படுத்தும் நேரத்தை-எடுத்துக்கொள்ளும் நீதிவிசாரணை வழக்குகளில் குறைவாக நேரத்தைச் செலவிடும் மகிழ்ச்சியான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். நிச்சயமாகவே, உதவியையும் புத்துணர்ச்சியையும் அளித்து, இவ்விதமாக யெகோவாவின் மக்கள் மத்தியில் சமாதானம், அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவிப்பதே மூப்பர்களின் முதல் அக்கறையாக இருக்க வேண்டும்.—ஏசாயா 32:1, 2.
பயனுள்ள மேய்ப்பர்களாகவும் நியாயாதிபதிகளாகவும் சேவித்தல்
11. நீதிவிசாரணைக் குழுக்களில் சேவிக்கும் மூப்பர்களுக்கு ஏன் பாரபட்சமில்லாமையும் “பரத்திலிருந்து வருகிற ஞான”மும் தேவையாக இருக்கிறது?
11 ஒரு கிறிஸ்தவன் தவறான ஒரு படியை எடுப்பதற்கு முன்பாக அதிக தீவிரமான மேய்ப்பு, யெகோவாவின் மக்கள் மத்தியில் நீதிவிசாரணைக்குரிய வழக்குகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட முடியும். (கலாத்தியர் 6:1 ஒப்பிடவும்.) இருப்பினும், மனித பாவம் மற்றும் அபூரணத்தின் காரணமாக, கிறிஸ்தவ கண்காணிகள் அவ்வப்போது தவறுசெய்தவர்களை கையாள வேண்டியிருக்கிறது. அவர்களை வழிநடத்தவேண்டிய நியமங்கள் என்ன? இவை மோசேயின் அல்லது பூர்வ கிறிஸ்தவர்களின் காலம் முதற்கொண்டு மாறிவிடவில்லை. இஸ்ரவேலில் இருந்த நியாயாதிபதிகளிடமாக மோசே சொன்ன வார்த்தைகள் இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறது: “உங்கள் சகோதரருக்கிடையே விசாரணை செய்யும்போது, நீங்கள் நீதியின்படி தீர்ப்புச்செய்ய வேண்டும் . . . தீர்ப்பிலே நீங்கள் பாரபட்சமுள்ளவர்களாயிருக்கக் கூடாது.” (உபாகமம் 1:16, 17, NW) பாரபட்சமில்லாமை, “பரத்திலிருந்து வருகிற ஞான”த்தின் தனிச்சிறப்புப் பண்பாகும். இந்த ஞானம் நீதிவிசாரணைக் குழுக்களில் சேவிக்கும் மூப்பர்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். (யாக்கோபு 3:17; நீதிமொழிகள் 24:23) இப்படிப்பட்ட ஞானம் பலவீனத்துக்கும் பொல்லாப்புக்குமிடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்துணர அவர்களுக்கு உதவிசெய்யும்.
12. என்ன அர்த்தத்தில் மூப்பர்கள் நீதியுள்ளவர்களாக மாத்திரமல்லாமல் நல்ல மனிதர்களாகவும் இருக்க வேண்டும்?
12 மூப்பர்கள் சரி மற்றும் தவறு பற்றியதில் யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக “நீதியின்படி தீர்ப்புச்செய்ய” வேண்டும். (சங்கீதம் 19:9) என்றபோதிலும், நீதியுள்ள மனிதர்களாக இருக்கப் பிரயாசப்படுகையில், அவர்கள் ரோமர் 5:7, 8-ல் பவுல் காண்பிக்கும் வேறுபாட்டின் கருத்தில் நல்ல மனிதர்களாகவும்கூட இருக்க முயற்சி செய்யவேண்டும். “நீதி” என்ற கட்டுரையில் இந்த வசனங்களின் பேரில் குறிப்புசொல்வதாய், வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை புத்தகம் (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “நற்குணத்துக்கு குறிப்பிடத்தக்கவர் அல்லது அதற்கு பேர்பெற்றவர், நற்செயலாற்ற விருப்பமுள்ளவராகவும் (நல்லது செய்ய அல்லது மற்றவர்களுக்கு நன்மையைக் கொண்டுவர விருப்பமுள்ளவராக) நலம் செய்கிறவராகவும் (இப்படிப்பட்ட நற்குணத்தை சுறுசுறுப்பாக வெளிப்படுத்துகிறவராக) இருக்கிறார். அவர் வெறுமென நீதி தேவைப்படுத்துவதைச் செய்வதைக் குறித்து அக்கறையுள்ளவராக இல்லாமல், இதற்கு அப்பாலும் செல்கிறார். மற்றவர்களிடமாக ஆரோக்கியமான கரிசனையும் அவர்களுக்கு நன்மைசெய்து உதவுவதற்கான ஆசையும் அவரை உந்துவிக்கிறது.” (புத்தகம் 2, பக்கம் 809) நீதியுள்ளவர்களாக மாத்திரமல்லாமல் நல்லவர்களாகவும்கூட இருக்கும் மூப்பர்கள் தவறுசெய்கிறவர்களை தயவுள்ள கரிசனையோடு நடத்துவர். (ரோமர் 2:4) அவர்கள் இரக்கத்தையும் பரிவையும் காண்பிக்க விரும்ப வேண்டும். தவறுசெய்தவர் அவர்களுடைய முயற்சிகளுக்கு ஆரம்பத்தில் பிரதிபலிக்காதிருப்பது போல தோன்றினாலும்கூட, மனந்திரும்புவதற்கான தேவையை அவர் காண்பதற்கு உதவிசெய்ய தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.
விசாரணையின்போது சரியான மனநிலை
13. (எ) ஒரு மூப்பர் ஒரு நியாயாதிபதியாக செயல்படும்போது, அவர் என்னவாக இருப்பது நின்றுவிடுவதில்லை? (பி) பவுலின் என்ன புத்திமதி நீதிவிசாரணையின் போதும்கூட பொருந்துகிறது?
13 ஒரு நிலைமை நீதி விசாரணையைத் தேவைப்படுத்தும்போது, கண்காணிகள் தாங்கள் இன்னும் “நல்ல மேய்ப்ப”ரின் கீழ் யெகோவாவின் ஆடுகளோடு செயல்தொடர்பு கொண்டிருக்கும் மேய்ப்பர்களே என்பதை மறந்துவிடக்கூடாது. (யோவான் 10:11) பிரச்னையில் இருக்கும் ஆடுகளுக்கு கொடுக்கப்படும் வழக்கமான உதவிக்காக பவுல் கொடுத்த புத்திமதி நீதிவிசாரணையின் போதும்கூட அதே வலிமையோடு பொருந்துகிறது. அவர் எழுதினார்: “சகோதரரே, ஒருவன் தான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே தவறான ஒரு படியை எடுப்பானேயானால், ஆவிக்குரிய தகுதியுள்ளவர்களாகிய நீங்கள் அப்படிப்பட்டவனை சாந்தமுள்ள ஆவியோடே சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீங்களும் சோதிக்கப்படாதபடி உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.”—கலாத்தியர் 6:1, 2, NW.b
14. நீதிவிசாரணைகளைக் கண்காணிகள் எவ்விதமாக கருதவேண்டும், தவறு செய்தவரிடமாக அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?
14 தண்டனை வழங்குவதற்காக கூடிவந்திருக்கும் மேலான நியாயாதிபதிகளாகத் தங்களைக் கருதுவதற்குப் பதிலாக, நீதிவிசாரணைக் குழுக்களில் சேவிக்கும் மூப்பர்கள் விசாரணையை தங்கள் மேய்க்கும் வேலையின் மற்றொரு அம்சமாக கருதவேண்டும். யெகோவாவின் ஆடுகளில் ஒன்று தொந்தரவில் இருக்கிறது. அவனை அல்லது அவளை காப்பாற்ற அவர்கள் என்ன செய்யலாம்? மந்தையைவிட்டு பிரிந்து போயிருக்கும் இந்த ஆட்டுக்கு உதவிசெய்வதற்கு காலம் பிந்திவிட்டதா? அவ்வாறு இருக்காது என்று நாம் நம்புவோம். மூப்பர்கள் இது சரியாக இருக்குமிடங்களில் இரக்கம் காட்டுவதினிடமாக ஓர் உடன்பாடான கருத்தைக் கொண்டிருக்கவேண்டும். வினைமையான ஒரு பாவம் செய்யப்பட்டிருக்கையில் அவர்கள் யெகோவாவின் தராதரங்களை தாழ்த்திவிட வேண்டும் என்பது இல்லை. ஆனால் ஏதாவது தண்டனையின் கடுமையைக் குறைக்கும் சூழ்நிலைமைகளைக் குறித்து அவர்கள் விழிப்பாயிருப்பது, சாத்தியமாயிருக்கையில் இரக்கத்தைக் காண்பிக்க அவர்களுக்கு உதவி செய்யும். (சங்கீதம் 103:8-10; 130:3) தவறுசெய்யும் சிலர் தங்கள் மனநிலையில் அத்தனை பிடிவாதமாக இருப்பதன் காரணமாக மூப்பர்கள், ஒருபோதும் கடுமையாக இல்லாவிட்டாலும் உறுதியை காண்பிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 5:13.
நீதிவிசாரணையின் நோக்கம்
15. தனிப்பட்டவர்களிடையே வினைமையான பிரச்னை எழும்புகையில், எது முதலில் உறுதிசெய்யப்பட வேண்டும்?
15 தனிப்பட்டவர்களிடையே வினைமையான பிரச்னைகள் எழும்புகையில், மத்தேயு 5:23, 24 அல்லது மத்தேயு 18:15-ன் ஆவியில், இதில் உட்பட்டவர்கள் தனியாக காரியத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்களா என்பதை ஞானமுள்ள மூப்பர்கள் முதலில் உறுதிசெய்து கொள்வார்கள். இது தோல்வியுற்றிருந்தால், ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு மூப்பர்களின் புத்திமதி போதுமானதாக இருக்கும். நீதிவிசாரணை நடவடிக்கை, சபை நீக்கம் செய்யப்படுவதற்கு வழிநடத்தக்கூடிய படுமோசமான பாவம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே தேவையாக இருக்கிறது. (மத்தேயு 18:17; 1 கொரிந்தியர் 5:11) ஒரு நீதிவிசாரணைக் குழுவை அமைப்பதற்கு நல்ல வேதப்பூர்வமான ஓர் ஆதாரம் இருக்க வேண்டும். (ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1989, பக்கம் 18 பார்க்கவும்.) குழு ஒன்று அமைக்கப்படுகையில், அந்தக் குறிப்பிட்ட வழக்குக்கு மிகச் சிறந்த தகுதிபெற்ற மூப்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
16. நீதிவிசாரணைகளின் மூலமாக மூப்பர்கள் எதைச் சாதிக்க முயற்சி செய்கிறார்கள்?
16 நீதிவிசாரணையின் மூலமாக மூப்பர்கள் எதைச் சாதிக்க முயற்சி செய்கிறார்கள்? முதலாவதாக, உண்மையை அறிந்தாலொழிய நீதியின்படி தீர்ப்புச்செய்வது கூடாத காரியமாகும். இஸ்ரவேலில் இருந்தது போல, வினைமையான காரியங்கள் ‘நன்றாய் விசாரிக்கப்பட வேண்டும்.’ (உபாகமம் 13:14; 17:4) ஆகவே விசாரணையின் ஒரு குறிக்கோள் வழக்கின் உண்மைகளைக் கண்டுபிடிப்பதாகும். ஆனால் இது அன்போடு செய்யப்பட முடியும், செய்யப்பட வேண்டும். (1 கொரிந்தியர் 13:4, 6, 7) உண்மைகளை அறியவந்த பின், மூப்பர்கள் சபையை பாதுகாக்கவும், அதற்குள் யெகோவாவின் உயர்ந்த தராதரங்களையும், அவருடைய ஆவி தடைபடாதிருப்பதையும் காத்துக்கொள்ள தேவையானவற்றை மூப்பர்கள் செய்வார்கள். (1 கொரிந்தியர் 5: 7, 8) இருப்பினும், முடிந்தவரை ஆபத்திலிருக்கும் பாவியை காப்பாற்றுவதே விசாரணையின் நோக்கங்களில் ஒன்றாகும்.—லூக்கா 15:8-10 ஒப்பிடவும்.
17 குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கடவுளுடைய ஆடாகவேயன்றி வேறுவிதமாக ஒருபோதும் நடத்தப்படக்கூடாது. அவனோ அவளோ மென்மையாக நடத்தப்பட வேண்டும். பாவம் (அல்லது பாவங்கள்) செய்யப்பட்டிருக்குமேயானால், பாவி மீண்டும் சீர்பொருந்துவதற்கு, தன்னுடைய வழியின் தவறைப் புரிந்துகொள்வதற்கு, மனந்திரும்புவதற்கு உதவிசெய்து, இவ்விதமாக “பிசாசின் கண்ணியிலிருந்து” பறித்துவிடுவதே நீதியுள்ள நியாயாபதிபதிகளின் நோக்கமாக இருக்கும். அது “கற்பிக்கும் கலையை,” “சாந்தத்தோடு உபதேசி”ப்பதைத் தேவைப்படுத்தும். (2 தீமோத்தேயு 2:24-26, NW; 4:2) அப்பொழுது பாவி தான் பாவம் செய்திருப்பதை உணர்ந்து, உண்மையில் இருதயத்தில் குத்தப்பட்டவராக, யெகோவாவிடம் மன்னிப்புக்காகக் கேட்பாரேயானால் அப்பொழுது என்ன? (அப்போஸ்தலர் 2:37 ஒப்பிடவும்.) அவர் உண்மையில் உதவியை விரும்புவதை குழு உறுதியாக நம்பினால், பொதுவாக அவரை சபைநீக்கம் செய்ய அவசியமிராது.—ஆங்கில காவற்கோபுரம், ஜனவரி 1, 1983, பக்கம் 31, பாரா 1 பார்க்கவும்.
18. (எ) தவறுசெய்தவரை சபைநீக்கம் செய்வதில் நீதிவிசாரணைக் குழு எப்பொழுது உறுதியைக் காண்பிக்க வேண்டும்? (பி) மனவேதனையளிக்கும் என்ன நிலைமையின் காரணமாக மூப்பர்கள் பிரிந்துபோகும் ஆட்டின் சார்பாக தங்களைக் கடுமையான முயற்சியில் ஈடுபடுத்தவேண்டும்?
18 மறுபட்சத்தில், நீதிவிசாரணைக் குழுவிலுள்ள உறுப்பினர்கள், சந்தேகத்திற்கிடமில்லாத கொடிய விசுவாசத்துரோகத்தை, யெகோவாவின் சட்டங்களுக்கு எதிராக தன்னிச்சையான கலகத்தை அல்லது தெள்ளத் தெளிவான பொல்லாப்பை எதிர்ப்படுவார்களேயானால் மனந்திரும்பாத குற்றவாளியை சபைநீக்கம் செய்வதன் மூலம் சபையின் மற்ற அங்கத்தினர்களைப் பாதுகாப்பதே அவர்களுடைய கடமையாகும். நீதிவிசாரணைக் குழு, தவறு செய்தவர் தெய்வீக துக்கமில்லாதவராய் இருந்தால் மனந்திரும்புவதற்கு அவரைக் கட்டாயப்படுத்த முயற்சி செய்யும் வகையில் அவருடைய வாயில் வார்த்தைகளைப் போட, அவரோடு திரும்பத் திரும்ப கூடிவர கடமைப்பட்டில்லை.c சமீப ஆண்டுகளில் உலகம் ழுழுவதிலும் சபை நீக்கம் பிரஸ்தாபிகளில் ஏறக்குறைய 1 சதவீதமாக இருந்திருக்கிறது. அப்படியென்றால் மந்தையினுள் இருக்கும் நூறு ஆடுகளில் ஒன்று—குறைந்தபட்சம் தற்காலிகமாக—இழக்கப்படுகிறது என்று அர்த்தமாகிறது. மந்தைக்குள் ஒரு நபரைக் கொண்டுவருவதற்கு எடுக்கும் நேரத்தையும் முயற்சியையும் சிந்திக்கையில், ஆண்டுதோறும் பத்தாயிரக்கணக்கானவர்கள் ‘சாத்தானிடம் ஒப்புக்கொடுக்கப்படுவதை’ அறிவது மனவேதனையை உண்டுபண்ணவில்லையா?—1 கொரிந்தியர் 5:5.
19. நீதிவிசாரணைக் குழுக்களில் சேவிக்கும் மூப்பர்கள் எதை ஒருபோதும் மறக்கக்கூடாது, ஆகவே அவர்களுடைய குறிக்கோள் என்னவாக இருக்கும்?
19 நீதிவிசாரணைக் குழுவில் நடவடிக்கை எடுக்கும் மூப்பர்கள் சபையில் பெரும்பாலான பாவங்கள் பொல்லாப்பை அல்ல, ஆனால் பலவீனத்தை உட்படுத்துவதை நினைவில் கொள்ள வேண்டும். காணாமற்போன ஆட்டைப் பற்றிய இயேசுவின் உவமையை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதை அவர் இந்த வார்த்தைகளோடு முடித்தார்: “மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.” (லூக்கா 15:7) உண்மையிலேயே, “கர்த்தர் . . . ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்”புகிறார். (2 பேதுரு 3:9) யெகோவாவின் உதவியோடு, உலகம் முழுவதிலுமுள்ள நீதிவிசாரணைக் குழுக்கள், தவறுசெய்கிறவர்களுக்கு மனந்திரும்புவதற்கான அவசியத்தைக் காணவும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற குறுகலான பாதையில் திரும்ப நடக்க ஆரம்பிக்கவும் உதவிசெய்வதன் மூலம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகும்படிச் செய்ய தங்களால் இயன்ற அளவு செய்யட்டும்.—மத்தேயு 7:13, 14.
[அடிக்குறிப்புகள்]
a கிறிஸ்துவின் வலதுகரங்களின் சம்பந்தமாக வேறே ஆடுகளின் மத்தியிலிருந்து எடுக்கப்பட்ட மூப்பர்களின் ஸ்தானத்துக்கு, உவாட்ச்டவர் சங்கம் வெளியிட்டுள்ள வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகம், பக்கம் 136, அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
b ஆங்கில காவற்கோபுரம் 1989, செப்டம்பர் 15, பக்கம் 19 பார்க்கவும்.
c ஆங்கில காவற்கோபுரம் 1981, செப்டம்பர் 1, பக்கம் 26, பாரா 24 பார்க்கவும்.
விமர்சனக் கேள்விகள்
◻ பெரிய மேய்ப்பர் மற்றும் நல்ல மேய்ப்பரின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய், மூப்பர்களின் முக்கிய அக்கறை என்னவாக இருக்க வேண்டும்?
◻ என்ன விதத்தில் மூப்பர்கள் நீதிவிசாரணை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க பிரயாசப்படலாம்?
◻ என்ன அர்த்தத்தில் நியாயாதிபதிகள் நீதியுள்ளவர்களாக மட்டுமல்லாமல் நல்லவர்களாகவும்கூட இருக்க வேண்டும்?
◻ விசாரணையின்போது தவறு செய்தவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், என்ன நோக்கத்தோடு?
◻ சபைநீக்கம் ஏன் கடைசி செயல்வகையாக இருக்கிறது?
5. (எ) ஆவிக்குரிய இஸ்ரவேல் நிலைநாட்டப்பட்ட பிறகு, “தீர்ப்புச்செய்கிறதற்கு” யார் நியமிக்கப்பட்டார், அவர்கள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் எவ்விதமாக வருணிக்கப்பட்டிருக்கிறார்கள்? (பி) நீதிவிசாரணைக்குரிய வேலையில் இப்பொழுது யார் அபிஷேகம்பண்ணப்பட்ட கண்காணிகளுக்கு உதவி வருகிறார்கள், இவர்கள் எவ்விதமாக மேம்பட்ட நியாயாதிபதிகளாக ஆவதற்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்?
17. (எ) விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எவ்விதமாக நடத்தப்பட வேண்டும், என்ன நோக்கத்துக்காக? (பி) நீதிவிசாரணைக் குழுவிலுள்ள அங்கத்தினர்களின் பங்கில் இது எதை தேவைப்படுத்தும்?
[பக்கம் 16-ன் படம்]
முன்னதாக மேய்க்கும் வேலை செய்யப்படுகையில், அநேக நீதிவிசாரணைக்குரிய வழக்குகள் தவிர்க்கப்படலாம்
[பக்கம் 18-ன் படம்]
ஒரு நீதிவிசாரணையின்போதும்கூட, மூப்பர்கள் தவறுசெய்தவரை சாந்தமான ஆவியோடே சீர்பொருந்தப்பண்ண முயற்சி செய்ய வேண்டும்